Advertisement

அத்தியாயம் 11:

எந்தன் ஊனுக்குள்

உயிராய் கலந்தவளே

நீ இல்லாத வாழ்வு நிலவில்லா

வானம் போல் வெறுமையானது!

தனுஷா கடத்தப்பட்டு முழுதாய் மூன்று மணி நேரம் ஆகியிருந்தது. தியா மூலம் விஷயம் தெரியவந்த பின் அடுத்த நொடி தியா கூறிய முகவரிக்கு விரைந்திருந்தான் அருண். அவனும் தியாவும் தங்களால் முடிந்த வரை பக்கத்தில் இருந்த இடங்களில் விசாரிக்க பலன் தான் பூஜ்யமாக இருந்தது.

ஒரு மணி நேரமாய் தேடி கலைத்த பின் தான் தந்தையிடம் இன்னும் விஷயத்தை சொல்லவில்லை என்பது உரைக்க தியாவை அழைத்துக் கொண்டு நேராக வீட்டிற்கு சென்றான்.

அருணும் தியாவும் மட்டும் வருவதை கண்ட தாமோதரன் “தனு எங்க அருண். நீங்க மட்டும் வந்திருக்கீங்க” என்று கேட்க,

என்ன சொல்வது எப்படி சொல்வது சொன்னால் தந்தை தாங்கி கொள்வாரா? என்ற பலவித யோசனை இருவருக்குள்ளும் ஓட ஒருவரை ஒருவர் பார்த்து கையை பிசைந்தபடி நின்றனர்.

அவர்களின் அமைதியை கண்டு துணுக்குற்றவர் “ அருண் தியா உங்ககிட்ட தான் கேட்டுக்கிட்டு இருக்கேன். தனு எங்க? நீங்க அமைதியா பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்”

அதற்க்கும் இருவரும் அமைதியையே தத்தெடுத்துக் கொண்டு நிற்க, இவ்வளவு கேட்டும் பதில் சொல்லாமல் நிற்கும் பிள்ளைகளின் அமைதி ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை உணர்த்த,

“இப்போ சொல்ல போறீங்களா? இல்லையா” என்று சற்றே குரல் உயர்த்த, எப்போதும் குரல் உயர்த்தாமல் சாந்தமாய் பேசும் தந்தை இன்று குரல் உயர்த்தியதில் சற்றே திடுக்கிட்ட தியா,

அதற்கு மேல் தாங்காது ஓடி சென்று தந்தையை கட்டிக் கொண்டு “அப்பா அக்கா அக்கா” என்றபடி தேம்ப, மகளின் இந்த திடீர் செய்கையில் தாமோதரனின் சப்த நாடியும் அடங்கியது போல் மனம் பதைபதைத்தது.

“என்னடா தியா என்ன ஆச்சு அக்கா எங்க? அவளுக்கு ஏதும்?” மகளுக்கு ஒருவேளை விபத்து நடந்திருக்குமோ என ஒரு தந்தையாய் அவர் மனம் துடிக்க,

அவரின் துடிப்பை காண சகிக்காமல் பூட்டியிருந்த மௌனத்தை திறந்த அருண் “அப்பா தனுவை காணவில்லை. எல்லா இடத்திலேயும் தேடிட்டோம். போனும் சுவிட்ச் ஆஃப்னு வருது என்ன பண்றதுனு தெரியவில்லை” என்று முடித்தது தான் தாமதம், தன்னை அணைத்திருந்த மகளோடு பொத்தென்று ஷோபாவில் அமர்ந்துவிட்டார் தாமோதரன்.

அவர் அமர்ந்திருந்த விதத்தை கண்டு பதறிய அருணும் தியாவும் “அப்பா என்னாச்சுப்பா? நீங்க கவலைப்படாதீங்க தனுவை கண்டுபிடிச்சுரலாம். ஒருவேளை வெண்பா வீட்டிற்கு போயிருக்காளோ என்னவோ” என்றான்.

தனுஷா சொல்லாமல் எங்கும் செல்பவள் இல்லை என்று தெரிந்தாலும் தந்தையை சமாதனப்படுத்த சொல்லி வைத்தான். வெண்பாவிடம் மறைமுகமாக ஏற்கனவே கேட்டும் விட்டான் தனு அங்கு இருக்கிறாளா என்று கிடைத்த பதிலும் உவப்பானதாக இல்லை.அருணே எப்போதாவது மொபைலை ஆஃப் செய்து வைத்திருந்தால் கூட “ஏன் அண்ணா மொபைலை ஆஃப் பண்ணி வச்ச. முக்கியமான விஷயம் சொல்லணும்னா எல்லாரும் ப்ர்ஸ்ட் ட்ரை பண்றது மொபைலுக்கு தான். அதையே ஆஃப் பண்ணி வச்சுருந்தா என்ன செய்யுறது ஹம் பேச முடியாத சூழ்நிலைனா அட்லீஸ்ட் வீட்டுல உள்ளவங்களுக்காவது இன்பார்ம் பண்ணனுமா வேண்டாமா? “என்று சண்டை போடுவாள்.

உடன் பிறந்தவனுக்கே இவ்வளவு தெரிந்திருக்கும் போது பெற்றவருக்கு இது தெரியாமல் போகுமா என்ன? அருண் செய்த சமாதானங்களை ஏற்கும் நிலையில் இல்லை. அவர் மனமோ தனுவை காணவில்லை என்பதிலேயே நின்றுவிட்டது.

தந்தையின் நிலையில் மாற்றம் இல்லாமல் இருக்கவே இனி போலி சமாதானம் தேவையில்லாத ஒன்று. அடுத்தது என்ன என்பதை யோசிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவனாய் “அப்பா நீங்களே இப்படி உட்கார்ந்தா எப்படி அடுத்ததை பற்றி யோசிக்க வேண்டாமா?. சஜன் வீட்டுல சொல்லி எதாவது உதவி கேட்கலாம்ப்பா” என்றான்.

மகன் கூறியதும் தான் அவர்களுக்கு தகவல் சொல்ல வேண்டும் என்பதே புரிந்தது.சம்மந்தி வீட்டில் என்ன சொல்வது? திருமண தேதியை அருகில் வைத்துக் கொண்டு மகளை காணவில்லை என்று சொன்னால், என்ன நினைப்பார்கள்? அதை விட மகளுக்கு என்ன ஆனதோ என்ன நிலைமையில் இருக்கிறாளோ என்ற கேள்வி அவர் முன் பூதாகரமாய் தொக்கி நின்றது.

சம்பந்தி வீட்டில் தகவல் சொல்ல வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தவர் அருணை சிவப்பிரகாசத்தின் தொலைப்பேசியை தொடர்பு கொள்ளுமாறு கூற அவர்களது நேரமோ என்னவோ தொடர்பு எல்லைக்கு அப்பால் என்ற தகவல் தான் பதிலாய் கிடைத்தது.

இப்போது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நொடி, அருணின் தொலைப்பேசி ஒலியெழுப்ப சஜன் தான் அழைத்திருந்தான்.

“ஹலோ அருண் உங்ககிட்ட ஒரு விபரம் கேட்கலாம்னு தான் போன் பண்ணேன். நான் இங்க மேரேஜ் ஹால் பக்கத்தில் இருக்க போர்டிங் லாட்ஜ்ல இருந்து பேசுறேன். எங்க ரிலேட்டிவ்ஸ் கொஞ்ச பேருக்கு ரூம் புக் பண்றதுக்காக வந்தேன். அப்படியே உங்க சைடுல வர்றவங்களுக்கு எத்தனை ரூம்னு வேணும்னு சொன்னீங்கன்னா பண்ணிடுவேன்” என்றான்.

எதிர்பக்கம் இருந்து ஒரு பதிலும் வராமல் இருக்கவே “ஹலோ அருண் ஆர் யூ ஆன் தி லைன் ஹலோ” என்று கேட்ட போது,

“சஜன் கொஞ்சம் வீடு வரைக்கும் வந்திட்டு போக முடியுமா?” என்றான்.

அதைக் கேட்ட சஜன், மனம் மகிழ்ச்சியில் கூத்தாடியது பின்னே இருக்காதா? அங்கு போகிற சாக்கில் தனுவை பார்க்கலாம் அல்லவா. ஆனால் அவள் அங்கு இல்லை என்பது தெரிய வரும் போது??????

வீட்டினுள் நுழைந்த சஜனுக்கு அங்கு நிலவிய அமைதி புரியாத புதிராய் இருந்தது. அதற்கு காரணம் தாமோதரன் அமர்ந்திருந்த நிலையும் அவர் மாடியில் படுத்திருந்த தியாவும் அவர்களுக்கு பக்கத்தில் ஏதோ ஒரு யோசனையில் உளன்று கொண்டிருந்த அருணும் தான். அவன் யாரை காண வந்தானோ அவளைத் தவிர அனைவரும் அங்கிருக்க ஆனால் அவர்கள் இருந்த நிலை தான் மனதில் துணுக்கென்று தோன்ற வைத்தது.

தங்கள் முன் ஏதோ நிழல் படரவும் தான் நிமிர்ந்தவர்கள் அங்கு சஜன் நின்றிருப்பதை கண்டனர். “வாங்க மாப்பிள்ளை”என்று அந்த நேரத்திலும் வீட்டின் மருமகனை வரவேற்று உபசரித்த அவரின் கண்களில் தான் ஜீவனில்லை.

அங்கு அமர்ந்து ஐந்து நிமிடமும் மௌனமே நீடிக்க அதை கலைக்கும் எண்ணம் கொண்டவனாய் “என்ன முக்கியமான விஷயம் அருண்”என்றான்.

“உங்க அப்பா மொபைலுக்கு கால் பண்ணோம் பட் ரீச் ஆகலை அந்த நேரம் நீங்க கால் பண்ணுனீங்க அதான் உங்களை வர சொன்னோம்” என்றான் அருண்.

“ஹோ அப்பாவும் அம்மாவும் எங்களோட நேட்டிவ் ப்ளேஸ்ல இருக்க ரிலேஷன்ஸ் இன்வைட் பண்ணிட்டு அப்படியே அவங்களை இங்க கூப்பிட்டு வர்றதுக்காக போயிருக்காங்க. நாளைக்கு ஈவினிங் வந்திடுவாங்க.அங்க கொஞ்சம் சிக்னல் ப்ராப்ளம் இருக்கும்” என்றான்.

“என்ன சொல்லணுமோ என்கிட்ட சொல்லுங்க நான் பார்த்துக்குறேன்” என்று கூற,

நடந்த அனைத்தையும் அருண் விளக்கி கூற அதை கேட்ட சஜன் முகம் அதிர்ச்சியையும் அதே நேரத்தில் இப்படி செய்தவனை இரண்டில் ஒன்று பார்த்துவிடும் அளவிற்கு கோபத்தையும் ஒரு சேர காட்டியது.

முதலில் தனுவை கண்டுபிடிக்க வேண்டும் என்று அதன் பின் மற்றதை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தவன் “அங்கிள் நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க தனுவை உங்க முன்னாடி பத்திரமா கொண்டு வந்து நிறுத்த வேண்டியது என் பொறுப்பு”என்று அருணை அழைத்துக் கொண்டு புறப்பட்டவன் திரும்பி “அப்பாகிட்ட நான் சொல்லிக்குறேன் நீங்க கவலைப்படாம இருங்க” என்று கூறிவிட்டு சென்றான்.

நூலளவு கூட தனுவிற்கு என்ன ஆனது? யார் இதை செய்தார்கள் என்று தெரியாத போது தனியாக அவளை தேடுவது என்பது இயலாத காரியம் என யூகித்த சஜன் தனது நண்பன் விஷ்வாவை தொடர்பு கொண்டான்.

நடந்ததை சொல்லி அவனிடம் யோசனை கேட்க, “ஹய்யோ ஐயம் வெரி சஜன். கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்குடா பட் நவ் ஐயம் ஹெல்ப்லஸ் டா நான் ஒரு கட்சி மீட்டிங் பந்தோபஸ்க்காக திருவண்ணாமலை வந்திருக்கேன். யூ டூ ஒன் த்ங்க். மீட் இளா ஹீ வில் ஹெல்ப் யூ. ஐ வில் இன்பாஃர்ம் ஹிம் த்ரூ போன் ஜஸ்ட் கோ அன்ட் மீட்” என்றான்.

சஜனுக்கும் அதுவே சரி என்றுபட நேராக இளாவை சந்திக்க பெசன்ட் நகர் காவல்நிலையம் நோக்கி விரைந்தான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பி2 பெசன்ட் நகர் காவல் நிலையம்:

காவல் நிலையத்தில் ஒரு பெரியவர் கண்ணீரும் கம்பலையுமாய் புகார் கொடுக்கவென்று வந்திருந்தார். அப்போது தான் உள்ளே வந்த இளாவின் கண்களில் அவர்பட அவரை அவனுடைய அறைக்கு வருமாறு கூறிவிட்டு முன் சென்றான்.

“உட்காருங்க பெரியவரே என்ன பிரச்சனை” என்று கேட்க அவனது அணுகுமுறையில் சற்று நிம்மதி அடைந்தவராய் தனது புகார் பற்றி கூறினார்.

அந்த பெரியவர் தன் மகளின் திருமணத்திற்காக ஒருவரிடம் கடன் வாங்கியதாகாவும் முதலிற்கு மேல் வட்டி கட்டிய பிறகும் மேலும் வட்டி கேட்டு தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் கூறினார்.

அசலை கொடுக்க அவகாசம் கேட்டும் அதை குடுக்காமல் இன்னும் இரண்டு நாட்களில் அசல் வட்டியுடன் சேர்த்து தராவிட்டால் மகளின் புகுந்த வீட்டிற்கு சென்று சத்தம் போடுவேன் என்று அந்த வட்டிக்காரன் அச்சுறுத்துவதாகவும் கூறினார்.

அவர் கூறியதை கேட்டவனின் கண்கள் அவரை அளவெடுக்க, அவர் சொன்னது உண்மையென்று தெரிந்து கொண்டவன், அந்த வட்டிக்காரனை அழைத்து வரும்படி காவலாளியை அனுப்பி வைத்தான்.

நேராக அவனது அறைக்குள் அனுமதியின்றி நுழைந்த அந்த வட்டிக்காரனின் செய்கை இளாவை முகம் சுழிக்க வைத்தது. வந்ததும் வராததுமாக “ஏன் போலீஸு இந்த கிழம் சொன்னதுக்கா என்னை வர சொன்ன? நான் யார் தெரியுமா? ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வோட மச்சான். பார்த்து பதவிசா நடந்துக்கோ என்ன? இல்லை பேஜாராயிடும்” என்று கூறிய அடுத்த நொடி அவனது கன்னம் திகு திகுவென எறியத் தொடங்கியது.ஆம் இளா தான் அவனை அடித்திருந்தான்.

கன்னத்தில் கைவத்தபடி இருந்தவனை “ஒழுங்கா மூடிட்டு உட்காரு ஓவர் சவுண்ட் விட்ட கந்துவட்டி கேஸ்ல உள்ள தூக்கி வச்சுருவேன். அப்புறம் உன் மாமன் மச்சான் எவன் வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. ஜாக்கிரதை” என்று அதட்டல் போட,

அவனது கர்ஜனையை கேட்டவன் கையை கட்டி அமர்ந்து கொள்ள,

“பெரியவரே உங்க கஷ்டம் புரியுது அவனும் வயித்து பிழைப்புக்கு தான இதை நடத்துறான். அசலையாவது குடுத்துருங்க உங்களுக்கு எவ்வளவு நாள் அவகாசம் வேணும்” என்றான்.

“ஐயா எனக்கும் மனசாட்சி இருக்கு. கண்டிப்பா குடுத்துடுறேன் எனக்கு ஒரு மாதம் மட்டும் தவணை வாங்கி குடுங்க. அடுத்த மாதம் குடுத்துடுறென் “ என்றார்.

“என்னயா சொல்ற அடுத்த மாதம் பெரியவர் உன் பணத்தை குடுத்துடுவார் சரியா?” என்று இளா கேட்க,

“சரிங்கய்யா அப்படியே அந்த பாக்கி வட்டி தொகையும் வாங்கி தந்தீங்கன்னா நல்லா இருக்கும்” என்று பவ்வியமாக வினவ,

“யோவ் இது போலீஸ் ஸ்டேஷனா இல்லை உனக்கு வட்டி வாங்கி தர்ற ஏஜென்ஸியா? அமைதியா போனா அசலாவது கிடைக்கும் இல்லை பெரியவர் மட்டும் கந்து வட்டி தொல்லைனு கம்ப்ளைன்ட் குடுத்தார்னு வை மவனே உனக்கு களி தான் “ என்று கூற,

“அய்யோ கிழவன் சும்மா இருந்தாலும் இவன் ஐடியா குடுத்து நம்பளை உள்ள தள்ளிடுவான் போலயே எதுக்கு வம்பு “என்று நினைத்தவன் சரி என்பதாய் தலையை ஆட்ட பெரியவரும் இளாவை நோக்கி கை கூப்பி நன்றி தெரிவித்தவாறு சென்றார்.

அவர் சென்றது ஒரு காவல் அதிகாரி இளாவிடம் “சார் உங்களை பார்க்க சஜன்னு ஒருத்தர் வெயிட் பண்றார்” என்று சொல்ல,

“சஜனா? எதுக்கு வந்திருக்கார்” என்று யோசித்தவன் தன்து பதிலுக்காய் காத்திருந்த காவல் அதிகாரியிடம் வர சொல்லுங்கள் என்று கூறினான்.

“ஹலோ சஜன். வாங்க என்ன இவ்வளவு தூரம்” என்று வரவேற்றவன் சஜன் பின்னால் வந்து கொண்டிருந்த அருணை கண்டு புருவம் உயர்த்தினான்.

அவன்து பார்வையை புரிந்து கொண்ட சஜன் “இளா மீட் மிஸ்டர். அருண் மை ப்ரதர்-இன் –லா ஐ மீன் மை பியான்சி’ஸ் ப்ரதர்” என்று முறையாக அறிமுகம் செய்ய,

“ஹோ இவர் தான் மச்சான் ஆ?” என்று முணு முணுத்துக் கொண்டவன், ‘ப்ளீஸ் பீ சீட்டட்” என்றான்.

“விஷ்வா உனக்கு போன் பண்றதா சொன்னான். பண்ணினானா?” என்று சஜன் கேட்க,

“இல்லையே ஜஸ்ட் அ மினிட்” என்றவாறு தன்து மொபைலை பார்க்க, அது சைலன்டில் இருந்த்து.

“ஹோ காட் சாரி சஜன். ஒரு இன்வெஸ்டிகேஷன் பண்ணிட்டு இருந்ததால மொபைல் சைலன்ட்ல போட்டிருந்தேன். அதான் கவனிக்கலை. நீங்க சொல்லுங்க என்ன விஷ்யம்?” என்றான்.

அவர்கள் வந்த விஷயத்தை தெளிவாக கேட்டுக் கொண்டவன்,”அவங்க ப்ரெண்ட்ஸ்கிட்ட விசாரிச்சிங்களா?”

“கேட்டுட்டேன் சார் என் சிஸ்டர் அங்கேயும் வரலையாம்.” என்று அருண் சொல்ல,

“வந்தாங்களானு கேட்க சொல்லலை. நீங்க சொல்றதெல்லாம் பார்க்கும் போது இது கிட்னாப் மாதிரி தான் தெரியுது. சோ பிளான் பண்ணி தான் யாரோ பண்ணிருக்காங்க. அதான் அவங்க ப்ரெண்ட்கிட்ட உங்க சிஸ்டருக்கு எனிமி யாரவது இருக்காங்களா? இல்லை பர்ஷனல் வென்ஞ்ஜன்ஸ்ல யாராவது பண்ணியிருக்க சான்ஸ் இருக்கு ” என்று தன் தரப்பு வாதத்தை முன் வைத்தவன்,

“வாங்க போய் அவங்களை விசாரிக்கலாம்” என்று அவர்களோடு கிளம்பினான்.

வெண்பாவை சந்தித்து விவரம் கேட்க “அவளோ அந்த மாதிரி யாரும் இல்லை சார். தனு ரொம்ப அமைதியான டைப் அவசியம் இல்லாம கோப்ப்பட மாட்டா. அதிகமா யார்கூடையும் பேச மாட்டா. எனக்கு தெரிஞ்சு விரோதினு யாரும் இல்லை “ என்று சொல்ல,

ஒரு உருப்படியான தகவலும் கிடைக்கவில்லை என்று திரும்பிய நேரம் “சார் இப்போ தான் நியாபகம் வருது. ஒரு நாள் ட்ராபிக் சிக்னல் ஒருத்தன் என்கிட்ட மிஸ்பிகேவ் பண்ணினான் அவனை தனு அடிச்சுட்டா அப்போ அவன் உன்னை சும்மா விட மாட்டேனு சொன்னான். அப்போ நாங்க அதை பெரிசா எடுத்துக்கலை ஒருவேளை அவனுங்க எதுவும் பண்ணிருப்பாங்களோனு சந்தேகமா இருக்கு” என்றாள்.

அதை கேட்ட இளா “அவங்களை இல்லை வண்டி நம்பர் எதாவது உங்களுக்கு நியாபகம் இருக்கா.”

“இல்லை சார் ஆனா அன்னைக்கு தனு அடிக்கும் போது அங்க வந்த ட்ராபிக் போலீஸ் என்ன பிரச்சனைனு விசாரிச்சுட்டு அவங்க அன்னைக்கு ட்ரிங்ஸ் பண்ணிருந்ததால கேஸ் பைல் பண்ணி பைன் போட்டார். அவர்கிட்ட நம்பர் இருக்க சான்ஸ் இருக்கா சார்” என்று புத்திசாலித்தனமாக யோசித்து கூற,

“வெரிகுட் வெண்பா. கண்டிப்பா இருக்கும் அந்த இன்சிடன்ட் நடந்த டேட் அன்ட் ப்ளேஸ் நியாபகம் இருக்கா?” என்று கேட்க, சஜன் ஆபிஸில் இன்டர்வியூ சென்ற தினம் தான் என்பதால் வெண்பாவிற்கு தெளிவாய் நியாபகம் இருந்தது.

அவள் கூறிய தகவலை கொண்டு அந்த இரண்டு பேரையும் அழைத்து விசாரித்தவன் அடித்த அடியில் “சார் அது அந்த பொண்ணு எங்களை அடிச்ச கோபத்துல சொன்னது சார்…. மத்தபடி நீங்க நினைக்குற அளவுக்கு நாங்க வொர்த் கிடையாது சார்…. அன்னைக்கு கூட அந்த பொண்ணும் இன்னொரு பொண்ணும் ஸ்கூட்டியில் போகும் போது கூட பாலோ பண்ணுனோம் சார்…. பின் தொடர்ந்து போகும் போது சிக்னல் மாட்டிகிட்டோம்…. எங்க போனாங்கனு தெரியலை… அதுக்கு பிறகு நாங்க அந்த பொண்ணை பார்க்கவே இல்லை சார் நம்புங்க சார் எங்களை விட்ருங்க” என்று கெஞ்சியவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினான்.

“சஜன் கவலைப்படாதீங்க. அவங்க மொபைல் நம்பரை ட்ரேஸ் பண்ண சொல்ல்லாம். அதுல அவங்க நம்பர் கடைசியா டீஆக்டிவேட் ஆன இடத்தை வைச்சு எதாவது க்ளூ கிடைக்குதானு பார்க்கலாம். அந்த ப்யூட்டி பார்லர்ல செக்யூரிட்டி கேமரா எதாவது இருக்கானு பார்ப்போம். நீங்க கிளம்புங்க எதும் நியூஸ் கிடைச்சா உடனே உங்களுக்கு இன்பார்ம் பண்றேன்” என்று அவர்களை அனுப்பி வைத்தான்.

அப்போதும் சஜன் மற்றும் அருணின் முகம் தெளிவடையாததை கண்ட இளா “சஜன் நாம எல்லாம் ஒண்ணுகுள்ள ஒண்ணு இதை கூட பண்ணமாட்டேனா? “என்று கூற,

அதை கேட்டு அருண் அவனை ஒரு மாதிரி பார்க்க அவனது பார்வையை கண்டு கொண்ட இளா “சஜன் நீயும் நானும் ப்ரெண்ட்ஸ் அதை தான் அப்படி சொல்றேன்” என்று சொல்ல,

அவனது பதிலில் சற்று நம்பிக்கை வர பெற்றவளர்களாய் இருவரும் கிளம்பினர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மயங்கி கிடந்த தனு கொஞ்சம் தெளிந்த நேரம் அந்த இருட்டறை திறக்கும் சத்தத்தில் கண் விழித்தவளின் முன் முகம் தெளிவாய் தெரியாத அந்த நெடிய உருவம் தென்பட தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி “ஹே யார்டா நீ..? எதுக்காக என்னை இப்படி அடைச்சு வச்சிருக்க? “ என்று கேட்க,

அந்த உருவமோ மௌனத்தையே பதிலாக தர கோபம் அடைந்தவள் “ ஹே சொல்லுடா ராஸ்கல்…. உனக்கு என்ன தான் வேணும்…?” என்று கத்தினாள்.

“கோபத்துல கூட அழகா இருக்க குட்டிமா? வேற என்ன கேட்க போறேன் எனக்கு நீ தான் வேணும்… நீ மட்டும் தான் வேணும்..!” என்று கூறினான் அந்த காதல் கிறுக்கன்.

 

செனோரீட்டா வருவாள்.

 

Advertisement