அத்தியாயம் 10:

காற்றை மட்டும் குடித்து

என்னை உயிர் வாழ

சொன்னால் உயிர்த்திடுவேன்

அது உன் மூச்சு காற்றாக இருக்கும் பட்சத்தில்!

சிவப்பிரகாசம்-கயல்விழி கூறியதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைய  தாமோதரனும் “அவ்வளவு அவசரம் என்ன..?” என்ற கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தார்.

தாமோதரனின் அமைதியை கண்ட சிவசங்கர் “எதும் தப்பா நினைக்காதிங்க..? ரொம்ப நாளா என் பையனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொன்னோம்… அவன் பிடி குடுத்தே பேசலை…. ஏன் நேற்று கூட எங்ககிட்ட கோபப்பட்டான்..?” என்று கூற,

சஜனோ “அய்யோ டாடிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை..? சும்மாவே என்னை கண்டுக்க மாட்டேங்குறா… இதுல கோபப்பட்டேனு வேற சொல்லி தொலைக்குறாரே..?” என்று முணுமுணுத்து கொண்டிருந்தான்.

“ஆனா உங்க பொண்ணு போட்டோ பார்த்ததும் பிடிச்சுருக்குனு சொல்லிட்டான்… அதுக்கு பிறகு தான் தெரியும் இவன் கம்பெனியில தான் தனுஷா வேலை பார்க்குறானு… அதான் பையன் பிடிச்சுருக்குனு சொல்லும் போதே அவனை கல்யாண வாழ்க்கையில தள்ளிவிடலாம்னு நானும் என் மனைவியும் முடிவு செய்து இன்னைக்கே நிச்சயம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணினோம்”

“அண்ணா..! நீங்க என்ன சொல்றீங்க..? உங்களுக்கு என் பையனை பிடிச்சுருக்கு தான..? இப்போ நிச்சயம் பண்ணி இது தான் பொண்ணு மாப்பிள்ளைனு முடிவு பண்ணிட்டா கொஞ்சம் நிம்மதியா இருக்கும். அடுத்த மாதம் நல்ல முகூர்த்த நாள் இருக்கு… அன்னைக்கே கல்யாணம் வச்சுக்கலாம் என்ன சொல்றீங்க..?” என கணவன் ஆரம்பித்த பேச்சை தான் முடித்து வைத்தார் கயல்விழி.

ஒரு நிமிஷம் என்றபடி அருண் தன் தந்தையை தனியே அழைத்து பேச “அப்பா! என்ன யோசனையா இருக்கிங்க..? அவங்க முதல்ல சொல்லும் போது எனக்கும் என்னடா இவ்வளோ அவசரப்படுறாங்கனு தோணுச்சு ஆனா அவங்கள பார்த்தா தப்பா எதும் தெரியலைப்பா மாப்பிள்ளையும் நல்ல விதமா தான் தெரியுறார்… கொஞ்ச நாள் கழித்து நடக்க போற நிச்சயம் இன்னைக்கு நடக்க போகுது அவ்வளவு தானே… கல்யாணம் கிரேன்டா வச்சுடலாம்”

தாமோதரனுக்கும் இந்த வரனில் எந்த குறையும் தெரியவில்லை அவருக்குமே சஜனின் குடும்பத்தை பிடித்தே இருந்தது. வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அந்த கர்வம் சிறிதும் இல்லாமல் இயல்பாக அன்போடு நடந்து கொண்டது அவரை கவர்ந்தது தான். தன் மகள்களை அவரது மகள் என்று சொன்னது மனதிற்கு நிறைவாகவே இருந்தது.மறுத்து பேச அவருக்கும் தோன்றவில்லை சரி என்பதாய் முடிவெடுத்தவர் அதை சபையில் சொல்லிவிட சிவப்பிரகாசம் தம்பதியினருக்கு மிக்க மகிழ்ச்சியாகி விட்டது. சஜனுக்கோ கேட்கவே வேண்டாம் துள்ளி குதிக்காத குறையாய் தான் இருந்த்து அவனது மனநிலை.

நிச்சயம் செய்ததன் அறிகுறியாய் தாம்பூலம் மாற்றியவர்கள் தங்கள் குடும்ப நகையாக இருந்த நெக்லஸை கயல்விழி தனுவிற்க்கு அணிவிக்க நிச்சய விழா இனிதே நிறைவுற்றது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நிச்சயம் முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில் , திருமணம் முடியும் வரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்ததால் தனு வீட்டிலேயே இருந்தாள்.

அன்று தியாவின் தோழி லேகாவின் திருமணம் என்பதால் தனுவும் தியாவும் அங்கு சென்றிருந்தனர். லேகாவின் கணவர் வீடு வசதி என்பதால் திருமணம் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.

சாதக பறவைகள் ட்ரூப்ஸ்-ன் மெல்லிசை கச்சேரி வேறு. “அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி” பாடலை பாடிக் கொண்டிருக்க அதை ரசித்துக் கொண்டிருந்த தனுவின் கையை சுரண்டிய தியா “அக்கா போகலாம்கா…” என்றாள்.

அங்கு சென்று ஒரு ஐந்து நிமிடம் தான் ஆகியிருந்த நிலையில் தியா போகலாம் என்றழைத்ததும்“ஹே இப்போ தானடி வந்தோம் அதுகுள்ள போகலாம்னு சொல்ற லேகா என்ன நினைப்பா”

“நான் அவகிட்ட பிறகு போன் பண்ணி சொல்லிக்கிறேன் நாம போகலாம்கா” என்று கூற,

“என்ன தியா போன வாரத்துல இருந்து கல்யாணத்திற்கு போகணும்னு ரொம்ப குஷியா இருந்த ஏன் காலையில கிளம்பும் போது கூட நல்லா தான இருந்த இப்போ என்ன ஆச்சுடி உனக்கு”

“ஒண்ணும் ஆகலை நீ வேணும்னா இருந்துட்டு வா நான் போறேன்” என்றபடி எழ முயன்றவளை தடுத்தவள்

“இருடி அட்லீஸ்ட் இந்த பரிசையாவது குடுத்துட்டு போகலாம்” என்று சொல்லிவிட்டு இருக்கையில் இருந்து எழுந்து நிற்க, தியாவோ அமர்ந்து இடத்திலேயே உட்கார்ந்திருந்தாள்.

அவளது நடவடிக்கையெல்லாம் வித்தியாசமாக இருக்கவே “தியா வா” என்று அவளை இழுக்க,

“நீ போய் குடுத்துட்டு வா நான் வெயிட் பண்றேன்” என்று சொல்ல,

அதுவரை இழுத்து வைத்திருந்த பொறுமை காற்றில் பறக்க “தியா எதுக்கும் ஒரு அளவு இருக்கு ஒழுங்கா இப்போ வர்றியா இல்லையா. உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க” என்று சற்றே குரல் உயர்த்த, தியாவின் கண்களோ கலங்கி விட்டது.

கலங்கிய கண்களுடன் தனுவை பின் தொடர ஒரு வழியாய் பரிசை கொடுத்துவிட்டு சாப்பிட கூட செய்யாமல் வீட்டிற்க்கு கிளம்பினர்.வரும் வழியில் தனு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தியாவும் அமைதியாகவே வந்தாள்.

எப்போதும் வழவழத்துக் கொண்டிருக்கும் தியா இன்று அமைதியாக வர அவளது அமைதி தனுவிற்கு குழப்பமாக இருந்தது. என்ன பிரச்சனை என்று கேட்க நா துடித்தாலும் கேட்டாலும் செல்ல மாட்டாள் என்பது புரிய அவளே சொல்லட்டும் என்று தானும் மௌனம் காத்தாள்.

வீட்டிற்கு வந்ததும் நேராக தன் அறைக்கு சென்று முடங்கி கொண்ட தியா எதற்கு என்று தெரியாமல் கண்கள் கண்ணீரை சுரக்க அப்படியே தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள்.

தலையணையை கட்டி அணைத்திருந்தவளின் கைகளில் ஏதோ நெருட அதை விலக்கி பார்த்தவளின் கண்களில் பட்டது அவளது நாட்குறிப்பு. அதை எடுத்து தன் மனதை எழுதலாம் என நினைத்தவளின் பார்வையில் ஒரு குறிப்பிட்ட பக்கம் தென்பட கண்ணீர் மேலும் பெருகியது. அன்று தான் அவனை  முதன் முதலாய் நேரில் சந்தித்தாள்.

வழிந்தோடிய கண்ணீர் போகிற போக்கில் கன்னத்தில் தடம் பதிக்க அதை துடைக்க கூட த்ராணி அற்றவளாய் எழுத தொடங்கினாள்.

மணமகனாய் நீ இருக்க

உன்னில் பாதியாய்

உன்னருகே நான்!

வெட்கமெனும் திரையிட்டு நான்

எனை மறைக்க கிழித்தெறிந்தாய்

உன் புன்னகை எனும் வாள் கொண்டு!

முகம் குங்குமமாய் சிவக்க உன் பார்வையின்

வீச்சு தாளாமல் உருகிய என் உயிர்

துளிகளாய் உருண்டோடிய நேரம்

உன் கரம் கொண்டு என் கரம் கோர்த்ததோடு

உயிர் துளிகளையும் கோர்த்தெடுத்தாய் மாலையாக!

அதை உரிய இடத்தில் சேர்ப்பித்து உத்தமனாவாயா? இல்லை

உன் நெஞ்சோடு சேர்த்தணைத்து என் உச்சி குளிரச் செய்வாயா?

கடைசி வரி எழுதி முடிக்க சிந்திய கண்ணீர் துளிகள் எழுதியதை கொஞ்சம் அழித்திருக்க,

கண்ணீருக்கு கூட தெரிந்திருக்கிறது நான் நினைப்பது நடக்க போவதில்லை என்று ஏன் உன்னை பார்த்தேன்..? பார்த்த சில நாட்களிலேயே என் மனதை பறிகொடுத்தேன்..? என்று தினமும் என்னை நானே கேள்வி கேட்டுக் கொள்கிறேன் அதற்கான பதில் தான் இன்னும் கிடைத்தபாடில்லை.

பார்த்தவுடன் காதல் கேட்கும் போது கேலியாக தான் இருக்கும் ஆனால் அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அந்த சிலிர்ப்பும் புரியும். தனக்கானவனை கண்டு கொண்ட திருப்தி ஏற்படுவதும் புரியும். நீயும் நானும் சேர்வது என்பது நடக்காது என்று தெரிந்தாலும் மனம் உன்னை நினைப்பதை நிறுத்துவதில்லை. என்று என்னென்னவோ உளறிக் கொண்டிருந்த தியா உறங்கியும் போனாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@

இங்கு சஜனோ தொலைப்பேசியை பார்ப்பதும் வைப்பதுமாய் தத்தளித்துக் கொண்டிருந்தான். நிச்சயம் முடிந்த இந்த நான்கு நாட்களில் ஒரு தடவை கூட தனுவாய் சஜனை அழைத்துது இல்லை. சஜன் பேசினாலும் ஒரு இரு வார்த்தைகளோடு முடித்துக் கொள்வாள்.

அதற்கு மேல் அவனாலும் எந்த பேச்சையும் தொடர முடிவதில்லை. அப்படியே மேற்கோண்டு பேச வாய் எடுத்தாலும் எனக்கு இப்படி போனில் மணிகணக்கா பேசுறது எல்லாம் பிடிக்காது. ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதிங்க என்று முற்றுப்புள்ளி வைத்து விடுவாள்.சஜனுக்கோ என்னடா இது என்று இருக்கும். இன்றைய கால கட்டத்தில் பெண் பார்த்து முடிந்ததுமே பொண்ணும் பையனும் மணிக்கணக்காக பேசி ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகையில் , நிச்சயம் முடிந்து கல்யாணத்திற்க்கு இரண்டு மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் தனுஷாவின் பதில்கள் எல்லாம் அவனுக்கு வித்தியாசமாகவே தோன்றியது.

இயல்பில் சஜன் இவ்வளவு பொறுமை உள்ளவன் அல்லன். ஏனோ தனுவிடம் அவனால் கடுமையையோ அல்லது அவளது பேச்சிற்கு எதிர்ப்போ காட்ட முடிவதில்லை. இப்படி அவன் யோசித்துக் கொண்டிருந்த நேரம் அவனது மொபைலில் குறுந்தகவல் வந்ததற்கான ஓசை எழ அதை பார்க்க தனு தான் அனுப்பியிருந்தாள் குட் நைட் என்று.

அதை கண்டதும் ஏதோ அவள் காதலை சொன்னது போல் உணர்ந்தவன் இவ்வளவு நேரம் அவளைப் பற்றிய ஆராய்ச்சியை ஒதுக்கி வைத்தவன் மொபைலை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு துயில் கொண்டான்.

இப்படி நாட்கள் ஓடிக் கொண்டிருக்க அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் சஜன் வீட்டில் இருந்தான். அப்போது அவனது தொலைப்பேசி அழைக்க அதை எடுத்து காதிற்கு கொடுத்தவன் “ஹலோ விஷ்வா” என்றான்.

“ஹாய் சஜன் ஹவ் ஆர் யூ ட்யூட்”

“ஃபைன் டா வாட் அபௌட் யூ மேன்” என்றான்.

“ஐயம் ஃபைன் டா. ஆர் யூ ப்ரீ நவ்”

“யெஸ் டா எனிதிங் இம்பார்டன்ட்”

“நத்திங் டா ஐ ஹவ் பிளான்டு டு மீட் யூ வித் மை ப்ரெண்ட் தட்ஸ் இட்”

“ஒஹ் ஸ்யூர் கம் டு ஹோம் வீ வில் டாக்” என்று கூற

“ஓகே வீ வில் பீ இன் ஹால்ஃப் அன் ஹவர்” என்றபடி போனை வைத்தான் விஷ்வா.அடுத்த அரை மணி நேரத்தில் விஷ்வாவும், இளாவும் சஜனின் வீட்டில் இருந்தனர்.

“சஜன் மீட் மை ப்ரெண்ட் இளஞ்செழியன் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ். இளா திஸ் இஸ் சஜன் ஒன் ஆப் தி ய்ங் அன்ட் ப்ராமிசிங் இன்டஸ்ட்யலிஸ்ட் மை சைல்ட்குட் ப்ரெண்ட்” என்றபடி ஒருவருக்கொருவரை அறிமுகம் செய்து வைக்க,

“கிளாட் டூ மீட் யூ…!” என்றபடி இருவரும் பரஸ்பரமாக கை குலுக்கி கொண்டனர்.

அதன் பின் நண்பர்கள் மூவரும் தங்களை பற்றியும் தொழில் பற்றியும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் தான் சஜன் தனக்கு நிச்சயமானதை கூறினான்.

தன்னிடம் சொல்லவில்லையே என்று முதலில் கோபப்பட்ட விஷ்வா பின் தீடீரென்று வீட்டில் முடிவு செய்ததை கூறி சஜன் விளக்கம் கொடுத்த பின்பு தான் சமாதானம் அடைந்தான்.

“இளா உங்களை அப்படி கூப்பிடலாம் தானே”என்று சஜன் அனுமதி கேட்க,

“எதுக்கு பெர்மிஷன்லாம் கேட்டுகிட்டு நீங்க தாராளமா கூப்பிடலாம்” என்று சொல்ல,

“சரி நீயும் நீங்க வாங்க அப்படின்றதை கட் பண்ணிடு” என்றான் சஜன்.

“ஓகே சஜன்” என்று இளா கூற,

“நெக்ஸ்ட் மன்த் என்னோட மேரேஜ் இருக்கு இன்விடேஷன் குடுக்குறேன் கண்டிப்பா வரணும் சரியா..? விஷ்வா இளாவை கூப்பிட்டு வா” என்று அழைக்க வருகிறோம் என்பதாய் சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நாட்கள் அதன் போக்கில் உருண்டோட, திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்களே இருந்த நிலையில், அன்று தியாவும் தனுவும் அழகு நிலையம் செல்ல வேண்டும் என முடிவு செய்திருந்தனர்.

தனுவிற்கு அன்று திருமணத்திற்கான உடைகள் வாங்கி வந்ததிலிருந்து ஏனோ மனதில் ஒரு சிறு சஞ்சலமாகவே இருந்தது. எதுவோ ஒன்று தவறாக நடக்க போகிறது என்று உள்மனம் அவ்வப்போது அசரீரியாக ஒலித்து அவளை இம்சித்தது.

சகோதரிகள் இருவரும் தங்களது ஸ்கூட்டி பெப்பில் சென்ற போது சில நாட்களுக்கு முன்பு ட்ராபிக் சிக்னலில் வைத்து வெண்பாவிடம் பிரச்சனை செய்து தனுவிடம் அடி வாங்கியவர்கள் இருவரும் தனுஷாவை அடையாளம் கண்டு கொண்டு பின் தொடர ஆரம்பித்தனர்.

அந்த புகழ் பெற்ற அழகு நிலையம் முதல் மாடியில் இருந்தது.அழகு நிலையத்தில் தியாவிற்கு சீக்கிரமாகவே முடிந்துவிட பக்கத்தில் இருக்கும் பெட்ரோல் பங்க் சென்று வருவதாகவும் தான் வரும் வரை காத்திருக்குமாறும் சொல்லிவிட்டு சென்றாள்.

பத்து நிமிடம் கழித்து வந்த தியா அழகு நிலையத்தில் நுழைய அங்கு தன் அக்காவை காணாதது அங்கிருந்த உதவியாளரிடம் கேட்க அவரோ தனுஷா அப்போதே சென்று விட்டாள் என்று கூறினர்.

“அக்கா எங்க போயிருப்பா? ஒரு வேளை பக்கத்தில் இருக்க ஷாப்பிங் மால்க்கு போயிருப்பாளா?” என்று நினைத்துபடி அவளது மொபைலை தொடர்பு கொள்ள, அதுவோ செயல் இழந்து இருப்பதாக தகவல் சொன்னது.

பத்து நிமிடம் அங்கும் இங்கும் சுற்றி தேடியவளின் பதட்டம் அதிகரிக்க, என்ன ச்ய்வது என்று தெரியாமல் தன் அண்ணன் அருணை தொடர்பு கொண்டாள்.

“ஹலோ அண்ணா” என்று அழைக்க,

தங்கையின் குரலில் இருந்த பதட்டமும், கலங்கிய குரலும் அவனையும் பதட்டமடைய செய்ய “என்ன தியா? எல்லாம் முடிஞ்சுதா கிளம்பிட்டீங்களா?” என்றான்.

“அண்ணா அது அது.. அக்காவை காணோம் “என்று ஒருவழியாக சொல்லிவிட்டு அழத் தொடங்கினாள்.

“என்ன தியா சொல்ற? அங்க தான் எங்கேயாவது போயிருப்பா அவ மொபைலுக்கு கால் பண்ணியா “ரெண்டு பேரும் ஒண்ணா தான போனீங்க உங்கிட்ட சொல்லாம எங்க போயிருக்க போறா?”

“பண்ணிட்டேன் சுவிட்ச் ஆஃப்னு வருது நடந்ததை கூறியவள் எனக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்கு” என்று கேவத் தொடங்க,

“சரி அழாத இப்போ எங்க இருக்கனு சொல்லு நான் வர்றேன்” என்றவன், அவள் அட்ரஸ் கூறிய அடுத்த நொடி தன் பைக்கில் பறந்தான் அருண்.

பத்து நிமிடங்களுக்கு முன்:

எதிர்பார்த்த நேரத்தை விட பதினைந்து நிமிடம் முன்னதாகவே தனுஷாவிற்கு முடிந்துவிட, வெளியில் சென்று தியாவிற்காக காத்திருக்கலாம் அவள் வந்ததும் சென்று விடலாம் என நினைத்து அழகு நிலையத்திலிருந்து வெளி வந்தாள்.

வெளியே வந்ததும் லிப்ட்டிற்காக வெயிட் செய்து கொண்டிருந்த நேரம் பின்னால் இருந்து அவளின் நாசியில் மயக்க மருந்து தடவப்பட்ட கைக்குட்டை வைக்கப்பட மயங்கி சரிந்தாள் தனுஷா.

உடன் பிறந்தவர்கள் இருவரும் தவித்துக் கொண்டிருக்க, தனுஷாவோ அந்த இருட்டறையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு மூலையில் மயங்கி கிடந்தாள். தனுஷா கடத்தப்பட்டதை அறியும் போது சஜனின் நிலை? தனுஷா மீட்கப்படுவாளா?

                                                       செனோரீட்டா வருவாள்.