குன்னூரில் ராஜனின் குல தெய்வ கோயிலில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்க கூட்டம் நடைபெற்றது. ராஜனோடு மித்ராவும் வந்திருந்தாள். அவருக்கு முகமே சரியில்லை, மகள் நினைத்தது நடக்குமா, என்ன எதிர்வினை ஆற்ற போகிறார்களோ என்ற சிந்தனையில் உழன்று கொண்டிருந்தார்.
இரண்டு நாட்கள் முன்பே பிறந்த வீடு வந்து விட்ட மித்ரா, கோயிலில் பெட்டியில் இருக்கும் விக்கிரஹத்தை தன் புகுந்த வீட்டுக்கு எடுத்து செல்வது பற்றி தந்தையிடம் பேசி விக்கிரஹம் அங்கு இருப்பதுதான் நியாயம் என அவரை ஒத்துக் கொள்ள செய்திருந்தாள்.
கூட்டம் ஆரம்பித்து திருவிழா குறித்து பேசி முடிவெடுக்க பட்ட பிறகு அனைவருக்கும் பொதுவாக விஷயத்தை சொல்லி விட்டாள் மித்ரா. யார் ஒத்துக் கொள்வார்கள், மறுப்பும் கோவமுமாகத்தான் பேசினார்கள்.
ராஜன் சங்கடத்தோடு அனைவரையும் அமைதி படுத்த முயன்று தோற்றார்.
“இது நீங்களோ நானோ எடுக்கிற முடிவு கிடையாது. அம்மன் சொல்லட்டும் இங்கேருந்து போக மாட்டேன்னு” என சத்தமாக சொன்னாள் மித்ரா.
அனைவரும் குழப்பமாக பார்க்க, “கோயில் பத்தி எடுக்கிற முடிவுகள்ல ரெண்டு வித கருத்து இருக்கும் போது எப்படி முடிவு பண்ணுவீங்களோ அப்படியே இதையும் பண்ணலாம்” என யோசனை சொன்னாள்.
ஆமாம், அப்படி ஒரு விஷயத்தில் இரு வித கருத்துக்கள் வந்து எதை பின்பற்றலாம் என முடிவு எட்டப் படாமல் இருக்கும் போது அம்மனிடமே உத்தரவு கேட்பார்கள். என்ன சீட்டு வருகிறதோ அதற்கு அனைவருமே உடன்படுவார்கள். அதைத்தான் இப்போதும் செய்ய சொன்னாள் மித்ரா.
“அது ரெண்டு விதமா கருத்து இருக்கும் போதுதான், இங்கதான் எல்லாரும் ஒரு மனசா சொல்லிட்டோமே?” என்றார் ஒருவர்.
“இல்லையே…” மித்ரா பேசிக் கொண்டிருக்கையிலேயே, “நீ சொல்றத ஏத்துக்க முடியாதுமா, ஏன்னா இப்போ நீ வேற குடும்பத்து பொண்ணு” என்றார் ஒருவர்.
“நான் சொல்றத எடுத்துக்க வேணாம், என் அப்பா சொன்னா?” என மித்ரா கேட்க, அனைவரும் ராஜனை கோவமாகவும் கண்டனமாகவும் பார்த்தனர்.
“என்னோட பொண்ணுங்கிறதுக்காக சொல்லலை. காலம் காலமா அவங்க வழிபட்டு வந்த தெய்வம். குல தெய்வ அருள் இல்லாம போனா அந்த குடும்பம் நிம்மதியா எப்படி வாழும்? இப்ப அந்த குடும்பம் சந்திக்கிற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கணும்னா அம்மனோட அருள் வேணுமே? அதனாலதான் சொல்றேன்” என்றார் ராஜன்.
மேலும் அரை மணி நேரம் பேச்சு தொடர்ந்தது. இறுதியாக திருவிழா அன்று அம்மனிடமே உத்தரவு கேட்பது என முடிவானது.
வீட்டுக்கு வந்த பின் கணவனிடம் அலைபேசியில் விவரத்தை பகிர்ந்தாள் மித்ரா.
“அடேங்கப்பா அங்க உள்ளவங்க இந்த அளவுக்கு ஒத்துகிட்டதே ஆச்சர்யம்தான். ஆனா சீட்டுல நமக்கு சாதகமா வராம…”
“என்னங்க!” என்ற அவளின் அதட்டலில் சொல்ல வந்ததை முடிக்காமல் விட்டான் சர்வா.
“நல்லது நடக்கும்னு நம்புங்க, நடக்கும், அவ்ளோதான். என்ன உத்தரவு வந்தாலும் ஏத்துக்கிற மனநிலையோட இருங்க” என முடிவாக சொல்லி விட்டாள். அவனும் மறுத்து பேசவில்லை.
“அப்புறம் எப்ப ரிட்டர்ன்?” என ஆவலாக கேட்டான். குரல் சொன்னது அவளின் பிரிவால் வாடும் அவனது மனதை.
“வீக் எண்ட் தான் தம்பி ஊருக்கு வருவான், அவனோட இருந்திட்டு வர்றேனே” என்றாள் மித்ரா.
“ஹ்ம்ம்…” என்றவனின் குரல் உள்ளே சென்றது.
“இப்படி சொன்னா என்னால ஹேப்பியா எப்படி இருக்க முடியும்?” என சிணுங்கினாள்.
“நீ என்னை விட்டுட்டு அங்க இருக்கேன்னு சொல்றது விட என்னை மிஸ் பண்ற அறிகுறியே இல்லாம காஷுவலா சொல்றியேன்னுதான் காண்டாகுது” என்றான்.
“ரொம்ப சிறப்பா என்னை வெறுப்பேத்தின, இத்தோட உன் பேச்சை நீ முடிச்சுக்கலைனா இன்னிக்கே நேர்ல வந்து உன்னை… உன்னை…”
“ஹ்ஹான் என்ன செய்வீங்களாம்?”
“அத நேர்லதான் சொல்ல முடியும்”
“நாம வேற வேற கிரகத்திலேயா இருக்கோம்? வர வேண்டியதுதானே?”
“நல்லா தின்னு தூங்கி ஆட்டம் போட்டுட்டு இருக்கிறவ பக்கத்து தெருல இருந்தா கூட பார்க்க வர மாட்டேன். நீ வை, எனக்கும் உன்னை விட வேற முக்கியமான வேலை இருக்கு” அவனும் தன் பங்குக்கு அவளை வெறுப்பேற்றினான்.
அவனுக்கு முன் அழைப்பை துண்டித்து விட்டாள் அவள்.
அன்றைய இரவு மொட்டை மாடியில் சிவப்பு நிற மழை அல்லி மலர்களை ரசிக்க முடியாமல் மனைவியை நினைத்துக் கொண்டே வானத்தை பார்த்திருந்தான் சர்வா.
அவள் இப்போது தன்னுடன் இல்லை என்ற நிதர்சனத்தை வலிமையாக உணர்ந்த மனம் வித்தியாசமான அவஸ்தையான உணர்வை அவனை அனுபவிக்க வைத்தது.
அனிச்சையாக நெஞ்சை நீவிக் கொண்டவன் அவளுக்கு அழைக்கவே கூடாது என தனக்கு தானே விதித்திருந்த கட்டுப்பாட்டை தளர்த்திக் கொண்டு அவளுக்கு அழைத்தான்.
ஏற்றவள், “என்னங்க, முக்கியமான விஷயமா?” கொட்டாவி விட்டுக் கொண்டே கேட்டாள்.
“போடி!” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான்.
அவள் இல்லாத அறைக்கு திரும்ப மனம் இல்லாமல் அங்கேயேதான் நின்றான், நடந்தான், பின் சாய்வு இருக்கையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான். அப்படியே உறங்கியும் விட்டான்.
தன் மீது எடை உணர்ந்தவன் கண்களை திறந்தான். அவனது கழுத்தை கட்டிக் கொண்டு அவன் மீது வாகாக அமர்ந்திருந்த மித்ரா, “உறக்கம் தொலைச்ச கண்ண தேடி வந்தேன், பார்த்திட்டேன் இப்போ” என கிண்டலாக சொன்னாள்.
இரண்டு நொடிகளில் அவள்தான் தன்னை தேடி வந்து விட்டாள் என்பதை புரிந்து கொண்டவன் ஆவேசமாக அவளை அணைத்துக் கொண்டான். சில நொடிகளுக்கு பின் அவளது முகத்தை தன்னிடமிருந்து விலக்கி முத்தங்கள் வைத்துக்கொண்டே இருந்தான்.
போதும் என அவள் சொல்லியும் அவனது வேகம் குறையாமல் இருக்க, அவனிடமிருந்து விடுபட முயன்றாள். அவன் விடாமல் போனதில் இருவரும் தரையில் விழுந்தனர்.
“ஆசையா வந்த என் இடுப்பை உடைக்க பிளான் பண்றீங்களா?” சிணுங்கலாக கேட்டவளை தன் மீது வாகாக போட்டுக் கொண்டான்.
“நீ மட்டும் இன்னிக்கு இங்க வரலை, நான் வந்திருப்பேன் நேர்ல, ஆனா வச்சு செஞ்சிருப்பேன் உன்னை” அவளது முகத்தில் முகத்தால் உரசிக் கொண்டே சொன்னான்.
அவள் அவனை உணர்ந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டாள்.
“என்ன மேடம்க்கு எம்மேல திடீர் கருணை, ம்ம்ம்?”
“ரொம்ப நாளா இருந்த டவுட் கிளியர் ஆகியிருக்கே”
“என்ன சொல்ற?”
“கல்யாணம் முன்னால உங்களுக்கு எம்மேல லவ்’லாம் இல்லை, ஏதோ ஒரு கட்டாயத்துக்காக மேரேஜ் பண்ணிக்கிட்டீங்க, வைஃப் கூட வாழவும் ஆரம்பிச்சிட்டீங்க. அந்த லவ் இருக்கே லவ்… அது உங்களுக்கு இருக்கா இல்லயான்னு பெரிய குவஸ்டின் மார்க் குவஸ்டின் மார்க்காவே என் மண்டைக்குள்ள இருந்தது. இன்னிக்குத்தான் கிளியரான பதில் கிடைச்சது” என்றாள்.
“அடிப்பாவி! இத்தனை நாளா என்னையா சந்தேக பட்ட, என் லவ் மேல டவுட் பட்டியா? கொடுமை மித்ரா!”
“ஆமாம்! இவர் உருகி உருகி லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்ட விதத்துக்கு சந்தேகமே வரக்கூடாதுதான்” அவனது கன்னத்தில் இடித்து சொன்னாள்.
அவளது கையை பிடித்து அதில் முத்தமிட்டவன், “பழச எல்லாம் நீ மறந்து போயிடணும்னு ஆசை படுறேன் மித்ரா” என்றான்.
“அப்படிலாம் யாருக்கும் எதுவும் மறக்காது, ஆனா அதிகமா நினைக்காம இருப்பேன்” என்றாள்.
“எப்படி வந்த?” என விசாரித்தான்.
“காலைல நாம பேசினதுக்கு அப்புறமே பரவசத்துல சென்னை கிளம்பறதுன்னு முடிவு பண்ணிட்டேன். கோவைக்கு போயி அங்கேருந்து ஃபிளைட் பிடிச்சு பறந்து வந்திட்டேன். நான் வர்றது உங்களுக்கு மட்டும்தான் தெரியாது, வீட்ல எல்லாருக்கும் தெரியும். அனிருத்தான் ஏர்போர்ட் வந்து என்னை பிக் அப் பண்ணினது” என்றாள்.
“அச்சோ! என் பொண்டாட்டி எனக்கு சர்ப்ரைஸ்லாம் கொடுத்து இம்ப்ரெஸ் பண்றாளே!” நிஜமான குதூகலத்தோடு அவளை கொஞ்சினான். கணவனின் கொண்டாட்டத்தை அவளும் ரசித்தாள்.
அறுவை சிகிச்சைக்கு பின் பிரதீப்பின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம். இன்னும் மருத்துவமனை வாசம்தான், முழுதாக குணமாக்கித்தான் மகனை இந்தியாவுக்கு அழைத்து வருவேன் என அமெரிக்காவிலேயே தங்கியிருக்கின்றனர் சுரேந்தர் தம்பதிகள்.
இடையில் ஒரு முறை சர்வாவும் மித்ராவும் அமெரிக்கா சென்று அவனை பார்த்து வந்தனர்.
நோயின் பிடியிலிருந்து பிரதீப் மீண்டதற்கான காரணம் மித்ரா இங்கு வந்ததுதான், அவளின் வரவு காலம் காலமாக தொடர்ந்த சாபத்தை நீர்த்து போக செய்து விட்டது என உறுதியாக நம்புகிறான் சர்வா.
தன் மனதில் உள்ளதை அப்படியே இப்போது மனைவியிடம் பகிர்ந்தான்.
“நம்பிக்கை இருக்க வேண்டியதுதான், எல்லாம் என்னாலன்னா எப்படி? நமக்கு மேல உள்ள சக்திதான் எல்லாத்தையும் தீர்மானிக்குது. நம்ம குடும்பத்துல எந்த தீங்கும் நடக்க கூடாதுன்னு அந்த சக்தி நினைச்சிட்டா கண்டிப்பா நல்லது மட்டும்தான் நடக்கும்” என்றாள் மித்ரா.
“ம்ம்… அந்த சக்தி மனசு வைக்கத்தான் உன்னை இங்க வரவச்சேன். உனக்கு தெரியாது மித்ரா, என்ன செய்யன்னு தெரியாம சிக்கல்ல மாட்டியிருந்த குடும்பம் இது, நம்பிக்கையா வந்த வெளிச்சம் நீ” என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
“போதும், எல்லார் மாதிரியும் நானும் சாதாரண பொண்ணுதான், இனிமே இப்படி சொல்லி சங்கடம் பண்ணாதீங்க”
“ஆமாம் நிறைய பேசிட்டோம். ரூம் போலாமா?”
“இங்கேயே நல்லாருக்கே. மேல வானம், சுத்தி பூ, காத்துல பூக்களோட வாசம், குளிரா காத்து வீசினாலும் கத கதப்பா உங்க கூட இருக்கேன், இருட்டா இருந்தாலும் கண்ணு கூசாத வெளிச்சத்துல உங்க முகம் தெரியுது. இங்கேயே இருக்கலாம்”
“ம்க்கும்… சரியா போச்சு! விடிய விடிய இங்கேயே இருக்க போறோமா?”
“வாழ்நாள் முழுக்க கூட இருக்கலாம்”
“ஹையையோ மித்ரா நான் பாவம்மா, அரை மணி நேரம் டைம் தர்றேன். நீ சொல்ற பூ பூச்சி இருட்டு காத்து கருப்பு எல்லாத்தையும் ரசிச்சுக்க, அப்புறம் நான் என்ன சொல்றேனோ அதுதான்” என அவன் சொன்னாலும் அங்கிருந்து அவர்கள் கிளம்ப ஒரு மணி நேரமானது.
மித்ரா அந்தக் குடும்பத்தில் ஒன்றி விட்டாள் எனதான் சொல்ல வேண்டும். மிக மிக சௌகர்யமாக அங்கே பொருந்தி விட்டாள்.
இலக்கியாவின் பிறவிக் குணத்தை யாரால் மாற்ற முடியும், மித்ராவிடம் வைத்துக்கொண்டால் ஒன்று நன்றாக திருப்பிக் கொடுப்பாள், அல்லது நீயெல்லாம் ஒரு ஆளா என்பது போல கடந்து சென்று விடுவாள்.