அத்தனை பிரபலங்கள், அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் வந்தாலும் மித்ராவின் பெற்றோரையும் அவர்களது தரப்பு உறவினர்களையும் குறையில்லாமல் கவனித்தனர். அந்த வகையில் எல்லோருக்குமே மிகுந்த திருப்தி. 

மித்ரா இங்கு நன்றாக வாழ்வாள் என்ற நம்பிக்கை அனைவருக்குமே ஏற்பட்டு விட்டது. 

இரண்டு நாட்கள் தங்கிச் செல்லுங்கள் என நம்பியும் ருக்மணியும் சௌந்திரராஜன் குடும்பத்தினரை கேட்டுக் கொண்டனர்தான். காஞ்சனாவும் அவர் பங்குக்கு இருக்க சொல்லி வலியுறுத்தினார். 

“சொந்தக்காரங்கள ஊர்ல பத்திரமா போய் சேர்க்கணும், சஞ்சய் காலேஜ் போகணும், பெரிய மாப்ள நான் எல்லாருமே ஒரு நாள்ல கிளம்பற மாதிரிதான் வந்திருக்கோம். கூடிய சீக்கிரமே ஒரு வாரம் தங்குறது போல கண்டிப்பா வர்றோம்” என சொல்லி விட்டார் ராஜன். 

அவர்கள் குல பெரியவர் வருகிற சித்திரையில் நடக்கவிருக்கும் கோயில் திருவிழாவுக்கு அனைவரும் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்தார். 

நம்பியும் வருவதாக ஒத்துக் கொண்டார். சிலர் பிரதீப்க்கு குணமாகிவிடும் கவலை வேண்டாம் என ஆறுதலும் சொன்னார்கள். 

சதானந்தம் தாத்தா இந்த விழாவில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. அவருக்கு இது போன்ற ஆடம்பர விழாக்களில் அறவே நாட்டம் இருப்பதில்லை. 

அனைவரையும் அனுப்பி வைத்து விட்டு வீடு வந்தடைந்த போது நள்ளிரவாகி விட்டது. சில மாத பிரிவுக்கு பின் கண்ட பெற்றோரை ஒரு நாளிலேயே மீண்டும் பிரிந்து விட்டதில் கவலையில் இருந்த மித்ராவுக்கு அறைக்குள் நுழையவுமே அழுகையாக வந்தது. 

சர்வா அவளின் தோள் தொட்டதுதான் தாமதம், அவன் மீது சாய்ந்து கொண்டவள் தேம்ப ஆரம்பித்து விட்டாள். 

பிரதீப் அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவிருக்கிறான், அதற்கு பின் நாம் இருவரும் குன்னூர் சென்று வரலாம் என எவ்வளவோ சமாதானம் செய்து விட்டான். அவளின் அழுகை நின்ற பாடாக இல்லை. 

“மேரேஜ்க்கு அப்புறம் நினைச்ச உடனே நான் அம்மா வீட்டுக்கு போகணும், அவங்களும் அடிக்கடி என்னை பார்க்க வரணும்னு நிறைய ஆசை பட்டேன். என் ஆசை நடக்கவே நடக்காதுல்ல?” என தேம்பினாள். 

“வேற வேற கண்டத்துலியா இருக்கோம் நாம? நீ நினைச்ச நேரம் அங்க போலாம் வரலாம், எங்க என்னை பாரு பாரு மித்ரா…” அவளின் நாடியை பிடித்து உயர்த்தி தன்னை பார்க்க செய்தான். 

கண்களை துடைத்து விட்டு அவளை ஆடை மாற்றிக் கொள்ள சொன்னான். அவளும் அணிகலன்களை கலைய ஆரம்பிக்க அப்போதுதான் உடலின் சோர்வை உணர்ந்தாள். எதுவும் முடியாது, காலையில் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி அப்படியே படுத்து விட்டாள். 

உறங்கி காலையில் எழுந்தவள் இலகுவான ஆடையில் எந்த தொந்தரவும் இல்லாத வகையில் அனைத்து அணிகலன்களும் நீங்கப் பெற்று சௌகர்யமாக இருந்தாள். 

அருகில் படுத்திருந்த கணவனின் செயல் என்பதை புரிந்து கொண்டவள் அவனை நெருங்கி அவனது கழுத்தை கட்டிக் கொண்டாள். 

“என்ன மித்ரா?” உறக்கம் கலையாமல் கேட்டான். 

“தேங்க்ஸ்!” என்றாள். 

கண்களை திறந்தவன் எதற்கு இந்த நன்றி என யோசித்து, “நமக்குக்குள்ள ஒண்ணும் சரியில்லாதப்பவே நான் உனக்கு இதை பண்ணியிருக்கேன். சொல்லப் போனா நான் ரசிச்சு செய்ற வேலை இது” என குறும்பாக சொன்னான். 

அவனது கன்னங்கள் இரண்டையும் வலிக்க கிள்ளினாள். 

“உனக்கு எப்படில்லாம் சேவை செய்றேன், நீ ஆசையா முத்தா கொடுக்காம… ஹேய் வலிக்குது மித்ரா!” என இறுதியில் வலியில் முகத்தை சுருக்கிக் கொண்டு சொன்னான். அவன் கேட்டதை கொடுத்து விட்டு மீண்டும் அவனோடு ஒன்றிக் கொண்டாள். 

பின் இருவரும் சேர்ந்தே இன்னும் சற்று நேரம் உறங்கினார்கள்.

 இருவருக்குள்ளும் எல்லாம் சுமூகமாக சென்றது. சர்வா சொன்னது படியே அவனுடைய பங்குகள் பாதி மித்ராவின் பெயருக்கு மாற்றப் பட்டு விட்டது. 

சுரேந்தரும் பிரகல்யாவும் பிரதீப்போடு அமெரிக்கா சென்றனர். லக்ஷன் ருக்மணியின் அறையில் அவரோடு தங்கிக் கொண்டான். அம்மாவை மிஸ் செய்யக் கூடாது என மித்ரா அவனை பொறுப்பாக பார்த்துக் கொண்டாள். அவனும் அவளோடு ஒட்டிக் கொண்டான். 

ருக்மணியும் மித்ராவும் மனம் விட்டு ஏதும் பேசிக் கொள்ளவில்லை, ஆனால் தானாக நன்றாக பழக ஆரம்பித்திருந்தனர். இனி மித்ராவிடம் பேசி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டார் ருக்மணி. 

பிரதீப் குணமாகி வரும் வரை அலுவலகம் வரவில்லை என சொல்லி விட்டாள் மித்ரா. சர்வாவும் ஒத்துக் கொண்டான். 

நான்கு நாட்கள் பயணமாக குன்னூர் சென்றனர். சஞ்சயும் மிருதுளாவும் கூட தங்கள் உடன்பிறப்போடு நேரம் செலவிட வந்து விட்டனர். மித்ராவிடமிருந்து அவள் தன் கணவன் மீது கொண்டிருந்த வருத்தங்கள், பிணக்குகள், கோவங்கள் எல்லாமே மாயமாகி விட்டன. 

பிரதீப்க்கு அறுவை சிகிச்சை நடக்கும் அன்று சதானந்தம் தாத்தா, நம்பி தம்பதிகள், காஞ்சனா, லக்ஷன் ஆகிய ஐவரும் கூட குன்னூர் வந்து விட்டனர். நிறைய வழிபாட்டு தளங்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார் நம்பி.

அனைவருமே ராஜனின் குல தெய்வ கோயிலில் இருந்தனர்.  

அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது. செண்பகவள்ளி அம்மாவால் கொண்டு வரப்பட்ட சாமுண்டீஸ்வரி அம்மனின் விக்ரஹத்தை பெட்டியிலிருந்து வெளியில் எடுக்க வைத்து பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்திருந்தார் சௌந்திரராஜன். 

வழக்கம் போல பக்தி பரவசத்தில் திளைத்தார் சதானந்தம் பெரியவர். 

சர்வா அத்தனை தீவிரமாக கடவுள் வழிபாடு செய்பவன் கிடையாது. ஆனாலும் அந்த விக்கிரஹத்தை பார்க்க பார்க்க அவனுக்கு ஏதோ செய்தது. உடலோடு சேர்ந்து உள்ளமும் சிலிர்த்தது. 

பூஜை நல்ல விதமாக  முடிந்து விக்கிரஹத்தை மீண்டும் பெட்டியில் வைக்கப் போகும் தருவாயில், “இந்த தெய்வம் எங்களோடது, எங்ககிட்டயே கொடுத்திடுங்க” என கேட்டு விட்டான். 

சிறப்பு பூஜை என்பதால் ராஜனின் குலத்தினர் சிலரும் வந்திருந்தனர். சில நொடிகள் அந்தக் கூட்டம் அமைதியாகி விட்டது. 

பூசாரிதான், “அதெப்படிங்க உங்க தெய்வம் ஆகும்? செண்பகத்தம்மா அங்க இருக்க கூடாதுன்னுதான் எடுத்திட்டு வந்திட்டாங்க. அதனால இது எங்களோடது” என்றார். 

சர்வா ஏதோ பேசப் போக நம்பி அவனை தடுத்து விட்டார். பார்வையாளராக நின்றிருந்த சதானந்தம் பெரியவர் சலனம் இல்லாமலேயே இருக்க அவரை பார்த்தான் சர்வா. 

“எப்ப எங்க இருக்கணும்னு முடிவு பண்றது நீயோ நானோ இல்லை, இந்த தாய்தான். உங்கிட்ட வரணும்னு அவ முடிவு பண்ணிட்டா யாரால தடுக்க முடியும்? அமைதியா இரு” என்றார். 

“முதல்ல எங்க குல பொண்ணை அழைச்சிட்டு போனீங்க, அங்க சுத்தி இங்க சுத்தி  எங்க சாமியவே அபகரிக்க பார்க்குறீங்களே, நல்ல கதையா இருக்கே!” என்றார் ராஜனின் குல ஆள் ஒருவர். 

“நாங்க அப்படிலாம் ஏதும் செய்யல, எங்க வீட்டு குழந்தை நல்லா ஆகணும்னு வேண்டிக்க வந்த இடத்துல வம்பு பேச்சு ஏதும் வேணாமே, ப்ளீஸ்…” தன்மையாகவே கேட்டுக் கொண்டார் நம்பி. ராஜனும் அவரது ஆட்களை கெஞ்சலாக பார்த்து அமைதி படுத்தினார்.  

ஆகவே அப்போதைக்கு பிரச்சனை வாக்குவாதம் இல்லாமல் அவரவர் அமைதி காத்தனர். 

கணவனையேதான் கவனித்திருந்தாள் மித்ரா. அவன் வெகுவாக அமைதியாகி விட்டான். அன்றே சர்வா குடும்பத்தினர் சென்னை திரும்பி விட்டனர். 

அன்றைய இரவில்தான் பிரதீப்க்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. விடியற்காலையில் அறுவை சிகிச்சை முடிந்து விட்டதாகவும் பிரதீப்பின் நிலை பற்றி நேர்மறையாகவே மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள் எனவும் தெரிவித்தான் சுரேந்தர். அனைவருக்கும் ஆசுவாசமானது.

 சர்வா மட்டும் இயல்பை தொலைத்து சுற்றிக் கொண்டிருந்தான். மித்ரா கேட்டாலும் எதுவுமில்லை என்றான். 

அன்று விடவில்லை மித்ரா, “ஒளிவு மறைவில்லாம இருக்கிறதுதான் நல்ல ஹஸ்பண்ட் வைஃப்க்கு அழகு. என்கிட்ட ஏதாவது மறைச்சா ஒண்ணு என்னால தாங்க முடியாததா இருக்கணும், இல்லைனா நீங்க ஏதாவது பெரிய தப்பு பண்ணியிருக்கணும், என்னன்னு சொல்லப் போறீங்களா இல்லயா?” கிடுக்குப் பிடி போட்டுக் கேட்டாள். 

“ரொம்ப கற்பனை செய்யாத. அப்படிலாம் இல்லை” என்றான். 

“இல்லையில்ல… குன்னூர்ல கோயிலுக்கு போயிட்டு வந்ததிலேருந்துதான் இப்படி இருக்கீங்க, என்னன்னு சொல்ல போறீங்களா இல்லயா?” அதட்டினாள். 

“சாமுண்டீஸ்வரி அம்மன் விக்கிரஹம் இங்க இந்த குடும்பத்தை சேர்ந்தது. என் முன்னோருங்க தப்பு செஞ்சிருந்தாலும் அவங்களுக்கும் அந்த அம்மன்தான் குலதெய்வம். என்ன பண்ணி அம்மனை இங்க கொண்டு வர்றதுன்னு யோசனையா இருக்கேன். எந்த எல்லைக்கும் போய் சாமிய இங்க கொண்டு வர்றதுன்னு முடிவெடுத்திட்டேன். உனக்கு தெரிஞ்சா நீ சண்டை போடுவியோ, மாமா என்ன சொல்வாங்களோ அப்படினு ஒரு கன்ஃப்யூசன்ல இருக்கேன்” என உள்ளதை சொன்னான். 

அவள் முறைத்துக் கொண்டிருக்க, “இதனாலதான் சொல்லலை” என்றான். 

“உங்க நினைப்பு தப்பில்ல, அதுக்கு நேர்வழில யோசிக்கணும். முறையா கேட்டு அங்க எல்லாரோட அனுமதியோடவும் விக்கிரஹத்தை எடுத்திட்டு வர்றதுதான் முறை. குறுக்கு வழில இல்லை” கோவமாக சொன்னாள். 

“நேர்வழிக்கு வாய்ப்பில்லைன்னா எப்படியாவது சாதிக்க வேண்டியதுதானே?” என அவன் கேட்க, அந்தக் கேள்வியில் முகம் கடுக்க அவனை பார்த்திருந்தாள். 

சில நொடிகள் கடந்து அவனாகவே, “செஞ்ச தப்புக்காக அம்மன் இங்கேருந்து போயிருக்கலாம், அதுக்காக எவ்வளவோ பரிகாரங்கள் செய்தாச்சு. உனக்கு தெரியாது மித்ரா, நம்ம பிஸ்னஸ் லாபத்துல நல்ல காரியங்களுக்கு அவ்ளோ செய்றோம். சதானந்தம் தாத்தாவுக்கு உள்ள பங்குகள் எல்லாம் ட்ரஸ்ட் வழியா எத்தனையோ பேரோட கல்விக்கும் மருத்துவத்துக்கும் போகுது. எத்தனை தலைமுறைக்கு சாபம் தொடரும்? நீ வந்ததால மட்டும் சாப விமோசனம் கிடைச்சிடுமா? அந்த அம்மன் இங்க வந்தாதானே விமோசனம் கிடைச்சதா அர்த்தம்?” என தன்மையாக கேட்டான். 

“ஹ்ம்ம்… அவங்கள இங்க வரவைக்க வேண்டியது என்னோட பொறுப்பு, குறுக்கு வழில எதுவும் செய்யக் கூடாது நீங்க” என்றாள் மித்ரா. 

“உன்னால முடியுமா? ஆனா எப்படி?”

“முயற்சி பண்றேன். தாத்தா சொன்னபடி இங்க வரணும்னு அம்மன் முடிவு பண்ணிட்டா நடந்தே ஆகும். நீங்க எதுவும் தலையிட கூடாது” என மித்ரா கேட்க, அவனும் தலையாட்டிக் கொண்டான்.