இருள் வனத்தில் விண்மீன் விதை – 18

அத்தியாயம்-18

அன்றைய அதிகாலையிலேயே மித்ராவுக்கு உற்சாகமும் பரபரப்பும் தொற்றிக் கொண்டது. அவளுடைய பிறந்த வீட்டினர் உற்றார் உறவினர்களோடு  இவளது புகுந்த வீட்டை இன்னும் சற்று நேரத்தில் வந்தடைந்து விடுவார்களே. 

குளித்து தயாராகி வந்தவள் இன்னும் உறங்கிக் கொண்டிருந்த சர்வாவை தட்டி எழுப்பி விட்டாள். ஈரத்தை சரியாக துடைக்காமலே அவசரம் அவசரமாக புடவை கட்டியிருந்ததில் இரவிக்கையின் தோள், முதுகு பக்கம் எல்லாம் நனைந்து போயிருந்தது. 

கணவன் அசைந்து கொடுக்காமல் போனதில் அவனை நன்றாக உலுக்கி எழுப்பினாள். அதில் அவளது ஈரக் கூந்தலிலிருந்து நீர்த் துளிகள் எல்லாம் அவனது முகத்தை நனைத்து வைத்தது. 

கண்கள் திறந்தவனோ, “மித்ராவுக்கு எம்மேல கருணை மழை வந்ததுக்கு சாட்சியா இந்த சாரல் மழை?” எனக் கேட்டான். 

“அரை மணி நேரத்துல அப்பாம்மாலாம் வந்திடுவாங்க, நீங்க இன்னும் பெட்டை விட்டு எந்திரிக்கல, மழை புயல்ன்னு உளறல் வேற” என குறையாக சொன்னாள். 

அவளது அந்த உற்சாக முகம் அவனை மிகவும் கவர்ந்தது. அவளது தோற்றம் அவனது கிறக்கத்தை கூட்ட அப்படியே அவளை வாரி தன் மீது போட்டு அணைத்துக் கொண்டான். 

சர்வாவின் எதிர்பாராத இந்த செயலில் ஸ்தம்பித்துப் போயிருந்தாள் அவள். அவனோ இன்னுமே வசமிழந்தவனாக அவளை வாசம் பிடிக்க ஆரம்பித்திருந்தான். அவளும் மயங்க ஆரம்பித்திருக்க சில நிமிடங்கள் தீயில் கரையும் மெழுகாக உருக ஆரம்பித்திருந்தனர். 

இண்டர்காம் சத்தமிட்டதில் சர்வாவின் கவனம் மனைவியிடமிருந்து லேசாக திசை திரும்பியது. அவளோ முற்றிலுமாக அவனிடமிருந்து விலக முற்பட்டாள். 

“அதை அட்டெண்ட் பண்ணலைனா திரும்ப சத்தம் போடாது, நீ எங்க போற?” தாபம் நிறைந்த குரலில் கேட்டான். 

தான் இருந்த நிலையில் வெட்கிப் போனவள் அவனுக்கு முதுகு காண்பித்து திரும்பி படுத்துக் கொண்டாள். முதுகில் கோலமிட்டவன், “மித்ரா…” என ஆசையாக அழைத்தான். 

“இன்னிக்கு ரிசப்ஷன் இருக்கு, நைட்டும் லேட்டாதான் தூங்கினோம்” தயங்கி தயங்கித்தான் அவளது குரல் வெளி வந்தது.

“இப்போ எந்த பிளானும் இல்லாம தானா அதுவாதானே ஸ்டார்ட் ஆச்சு? ஸ்பாயில் பண்ணாத மித்ரா” ஆசையாக கெஞ்சினான். 

“கொஞ்ச நேரத்துல எல்லாரும் வந்திடுவாங்க, யார் எதுக்கு இண்டர்காம்ல கூப்பிட்டாங்கனும் தெரியல, ஏதாவது முக்கியமான விஷயமா இருக்க போகுது” காரணங்கள் சொல்லி மறுத்தாள். 

“அப்போ இதெல்லாம் இல்லாம சாதாரண நாளா இருந்திருந்தா உன் பதில் வேறயா இருந்திருக்குமா?” அவளது இடுப்பில் அழுத்தம் கொடுத்துக் கொண்டே கேட்டான். 

கூச்சத்தில் நெளிந்து இன்னும் தள்ளிச் செல்ல முயன்றவளை அவளின் பின் பக்கமாகவே அணைத்துக் கொண்டவன், “ஹ்ம்ம்… சொல்லு மித்ரா” என்றான். 

“தெரியலை” கிசு கிசுப்பாக சொன்னவளின் முகத்தை காணும் ஆவலோடு அவளை தன் பக்கமாக திருப்பினான். 

மீண்டும் செல்ல சில்மிஷங்களும் சிணுங்கலுமாக நேரம் கரைந்தது. அந்த அதிகாலை நேரத்தில் தங்களுக்குள் இத்தனை அழகாய் தாம்பத்யம் நடந்தேறும் என அவர்கள் நினைத்திருக்கவே இல்லை. 

கண் மூடிக் கிடந்தவளின் முகத்தில் பதித்துக் கொண்டிருந்த முத்தங்களை நிறுத்தவே இல்லை சர்வா. 

“போதும்” என்ற வார்த்தையை உச்சரித்த அவளது உதடுகளை ஸ்பரிசித்து விலகியவன், “இப்போ விட்டதை இரவில் தொடரலாம்” என குறும்பாக சொல்லி விலகினான். 

மித்ரா மீண்டும் குளிக்க செல்ல, படுக்கையில் கிடந்தவனின் மனதெல்லாம் நிறைந்து போயிருந்தது. 

குளித்து வந்தவளை தன் பார்வையாலேயே சிவப்பால் குளிக்க வைத்தான். 

இருவரும் கீழே வந்த போது மித்ராவின் பிறந்த வீட்டினர் வந்திருந்தனர். தனிப் பேருந்து ஒன்றில் வந்திருந்த உறவுகள் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப் பட்டிருந்தனர். 

அப்பாவிடம் ஓடிச் சென்று அவரின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டாள் மித்ரா. அப்பா மகள் நல விசாரிப்புகளுக்கு பின் கொஞ்சம் வீம்பு பார்வையாகத்தான் அம்மாவை பார்த்தாள். 

“இன்னும் கோவமாடி? தம்பி மேல உள்ள நம்பிக்கையிலதான் உன்னை இங்க அனுப்பி வச்சேன், நல்லா வச்சிருக்காரா இல்லயா உன்னை? நான் கொஞ்சம் ஹார்ஷா நடக்கலைனா அசைஞ்சு கொடுத்திருப்பியா நீ?” எனக் கேட்டார் வைஜெயந்தி. 

“அதுக்குன்னு மூச்சு விடக்கூட டைம் கொடுக்காம தொரத்தி விட்ட நீ!” குறையாக சொல்லிக் கொண்டே அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டாள். 

அக்கா, தம்பி, அக்காவின் மகன் என சற்று நேரம் மித்ரா உற்சாகமும் உணர்ச்சி மயமாகவும்தான் இருந்தாள். அவள் பிறந்த வீட்டினரோடு அவளுக்கு தனிமை கொடுத்து தள்ளியே நின்று கொண்டான் சர்வா. 

சௌந்திரராஜனின் உறவுகள் எல்லாம் அவர்களுக்கு கிடைத்த மரியாதையிலும் கவனிப்பிலும் மனம் குளிர்ந்து போய் விட்டனர். சர்வாவின் குடும்பத்தினரை பற்றி நேரிலேயே பார்த்து தெரிந்து கொண்டவர்கள் வேறு வழியில்லாமல் இப்படி செய்து விட்டான் என தங்களுக்குள் பேசி அவன் மீது கொண்டிருந்த வெறுப்புணர்வை வெகுவாக குறைத்துக் கொண்டனர். 

ஒரு சிலருக்கு அனைத்திலும் சந்தேகமும் வெறுப்பும் இருக்கத்தான் செய்தது. ஆனால் எண்ணிக்கையில் மிகவும் குறைவு, பெரும்பாலானவர்கள் சர்வாவுக்கு சாதகமான மன நிலைக்கு வந்து விட்டனர் எனதான் கூறவேண்டும். 

மாலையில் வரவேற்பு மிகச் சிறப்பாக நடந்தேறியது. ராஜன் தன் மகளுக்கு சீரும் சிறப்புமாக எல்லாம் செய்தார். வசதி படைத்தவர் என்றாலும் இப்போது அவர் செய்தது அவரின் வசதிக்கு மீறியது, மூத்த பெண்ணுக்கு செய்ததை காட்டிலும் பல மடங்கு அதிகம். 

இலக்கியாவின் முகத்தில் ஈ ஆடவில்லை. 

மித்ராவுக்கு கவலையாகி விட்டது. அக்காவிடம் தன் பயத்தை சொன்னாள். 

“நீ பயப்படற மாதிரி அப்பா சொத்தை வித்து இதையெல்லாம் செய்யல. எல்லாமே உன் ஹஸ்பண்ட் அண்ட் மாமியார் கைங்கரியம்” என ரகசியமாக சொன்னாள் மிருதுளா. 

“யாரு? அவர் அம்மாவா?”

“இல்லை, உன் வீட்டுக்காரரோட பெரியம்மா. அப்பாவை பேசி பேசியே கன்வின்ஸ் பண்ணிட்டாங்க. நீ அப்பாவை நினைச்சு ஃபீல் பண்ணுவேன்னுதான் நான் சொல்லிட்டேன். நீயும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத” என்றாள் மிருதுளா.

மித்ராவின் பார்வை ருக்மணியிடம் சென்றது. வந்தவர்களையும் கவனித்துக் கொண்டு அவரின் வயதான மாமனாரையும் மெய்யப்பனையும் குழந்தை போல அவ்வப்போது கவனித்துக் கொண்டு வளைய வந்து கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. 

“உன் வீட்ல இத வச்சு பிரச்சனை செய்ய மாட்டாங்களா க்கா?” என அக்காவை பற்றி கவலை கொண்டவளாக கேட்டாள். 

“பின்ன பிரச்சனை ஆக்காம சும்மா இருப்பாங்களா? ‘சர்வா அவர் பணம் கொடுத்து கெத்தா வைஃபுக்கு செய்றார், நான் மட்டும் செய்யாம இருந்தா நல்லாருக்காது’ன்னு அவங்களுக்கு முன்னாடி உன் மாமா முந்திக்கிட்டு பேசினார். அப்புறம் ஏன் பிரச்சனை செய்ய போறாங்க? ‘அவங்க வசதிக்கு அவங்க செய்றாங்க, நம்ம வசதிக்கு நம்ம எப்பவோ செஞ்சாஞ்சு, சர்வாவோட உன்னை கம்பேர் பண்ணிக்காதடா’ன்னு பெருந்தன்மையா சொல்லிட்டாங்க” என மிருதுளா சொல்ல சிரித்து விட்டாள் மித்ரா. 

யாரோ முக்கியஸ்தர் மேடைக்கு வர, விலகி நின்று கொண்டாள் மிருதுளா. அவர் சென்றதும், “என்ன அக்காவும் தங்கையும் டீப் டிஸ்கஷன்ல இருந்தீங்க, என்ன மித்ரா?” என விசாரித்தான் சர்வா. 

விஷயத்தை சொன்னவள், “இப்படிலாம் செய்றது எனக்கு எம்பாரஸ் ஆகுது, இதை வச்சு உங்கண்ணி வாயை அடைக்க பார்க்குறீங்களா? இதெல்லாம் இருந்தாதான் எனக்கு மதிப்பா?” எனக் கேட்டாள். 

அவன் அதிர்ச்சி ஆகாமல் இருப்பதிலிருந்தே தான் இப்படி ஏதாவது கேட்பேன் என்பதை எதிர்பார்த்திருந்தான் என்பதை கணித்தவள் கண்டனமாக பார்த்தாள். 

“உனக்கு நான் செய்றேன் என்ன தப்பு இதுல?” என சிரித்த முகமாக கேட்டான். 

“ஏற்கனவே எல்லாம் வாங்கித் தந்திட்டுத்தான் இருக்கீங்க, இன்னிக்கும் ஏன்? என்ன மத்த மருமகங்களோட என்னை சமன் செய்ய இப்படி செய்ய சொன்னாங்களா உங்க பெரியம்மா?” எனக் கேட்டாள். அவளுக்கு என்னவோ இப்படியெல்லாம் செய்துதான் தனக்குண்டான மரியாதை கிடைக்க வேண்டும் என்றால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

“யாரோடயும் உன்னை கம்பேர் பண்ண இதை செய்யல மித்ரா. பெரியம்மா ஆசை பட்டாங்க. மத்தவங்க இங்க வாழ வந்தவங்க, நீ அப்படியில்லை இங்க இந்த குடும்பத்துக்கு வாழ்க்கை தர வந்தவன்னு நினைக்கிறாங்க. உம்மேல உள்ள அன்பை இப்படி வெளிப்படுத்த நினைச்சாங்க. நீ கம்ஃபர்ட்டபிளா இரு” என்றான். 

சமாதானம் ஆகாமல் நின்றிருந்தவளின் கையை பிடித்துக் கொண்டவன், “உனக்கு அண்ணிகிட்ட மரியாதை வரணும்னு செய்யல, நிஜமா உன்னை இந்த வீட்ல வரவேற்க ஒரு கிராட்டிடியூட்தான் இது. நீ எந்த விதத்திலேயும் ஹர்ட் ஆகக் கூடாது. நார்மலா இரு” என்றான். 

“அதை ஏன் என் அப்பா செய்ற மாதிரி காட்டிக்கணும்?” 

“பெரியம்மாதான் அப்படி செய்ய சொன்னாங்க. யாருக்கும் ஷோ ஆஃப் பண்ண இல்லை இது, உன்னை மனசார உன் பெத்தவங்க இங்க அனுப்பி வச்சாங்க, உன்னை இந்த வீட்ல எந்த இடத்துல வச்சிருக்கோம், எவ்ளோ அன்பு உம்மேல இருக்குன்னு அவங்களுக்கு புரிய வைக்க. நாங்க செஞ்சதுன்னு தெரியக்கூடாதுன்னு பிளான்லாம் இல்லை, தெரிஞ்சாலும் ஒண்ணுமில்ல, யாருக்கும் நாங்களா போய் சொல்லலை, அவ்ளோதான். தப்பான கண்ணோட்டத்துல பார்க்காதேயேன்” அவன் விளக்கமும் கெஞ்சலுமாக சொல்ல அவளும் அதை பற்றி பேசுவதை விட்டு விட்டாள்.