இருள் வனத்தில் விண்மீன் விதை -16

அத்தியாயம் -16

பிரதீப்க்கு அறுவை சிகிச்சையில் அபாயத்தை ஏற்படுத்தும் வண்ணம் சிக்கலான இடத்தில் இருந்த இரத்தக் கட்டு பாதி கரைந்து விட்டதாகவும் இனி ஓரளவு  பயமில்லாமல் அறுவை சிகிச்சை செய்து விடலாம் எனவும் மருத்துவர் கூறினார். 

இந்தியாவில் செய்வதை காட்டிலும் அமெரிக்காவில் தலைசிறந்த நரம்பியல் வல்லுநர் செய்தால் நன்றாக இருக்கும் என பிரதீப்பை கவனிக்கும் மருத்துவர் சொல்ல, மகனை காக்க எங்கு வேண்டுமென்றாலும் செல்லத் தயார் என சொல்லி விட்டான் சுரேந்தர். 

அமெரிக்க மருத்துவரிடம் கலந்தாலோசித்து விட்டு சொல்வதாக சொன்னார் அந்த மருத்துவர்.

சர்வாவும் மித்ராவும் வீட்டுக்கு வந்த போது யாரையும் அவர்களால் பார்க்க முடியவில்லை, அறைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்து காலை உணவுக்காக வரும் போது அவர்களை எதிர்கொண்டார்  ருக்மணி. அவசரத்திற்கு கூட பேச முடியாத அளவுக்கு எங்கு சென்றீர்கள் என கடிந்து கொண்டார். 

மித்ரா தன் கணவனை முறைப்பாக பார்த்தாள். சர்வா தன் பெரியம்மாவிடம் சமாளிப்பாக “நீங்கதான் இவளை நல்லா வச்சுக்கணும் பார்த்துக்கணும்னு வண்டி வண்டியா அட்வைஸ் பண்ணுனீங்க, அதனால சும்மா அப்படியே ஒரு ட்ரிப் போயிட்டோம்” என்றான். 

சலித்துக் கொண்ட ருக்மணி பிரதீப்க்கு முடியாமல் போன விவரத்தை பகிர்ந்தார். 

“இப்ப எப்படி இருக்கான்?” பதறிப் போனவனாக கேட்டான் சர்வா. 

“நல்லாருக்கிறதா சொன்னான் சுரேந்தர். அமெரிக்கா போகணும்னு சொல்லிட்டு இருந்தான், மிச்சத்தை உன் அண்ணன்கிட்டேயே விளக்கமா கேளு” என சொல்லி சென்று விட்டார். 

பிரதீப்பை நினைத்து சர்வா, மித்ரா இருவருக்குமே கவலைதான். “அவனுக்கு உடம்பு முடியாம இருந்திருக்கு, இது தெரியாம நான் வைஃபோட உல்லாச பயணம் போயிருக்கேன்… ச்சே!” என தனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வில் சொல்லி விட்டவன் நெற்றியை தடவிக் கொண்டான். 

மித்ராவுக்கு என்னவோ போலானது. இருப்பினும் இது பற்றி கேளாமல், “சீக்கிரம் சாப்பிட்டு ஹாஸ்பிடல் போலாம்” என்றாள். 

சர்வாவும் அமைதியாக சாப்பிட்டு அவளோடு மருத்துவமனை சென்றான். காரில் செல்லும் போதும் அவளின் பக்கம் திரும்பாமல் இறுகிய முகத்தோடு இருந்தான். கவனித்துக் கொண்டிருந்த மித்ராவுக்கு அதிருப்தியாக இருந்தது. 

சுரேந்தர் நல்ல விஷயமாகவே சொல்ல, அப்போதுதான் சர்வாவின் முகத்தில் நிம்மதி படர்ந்தது. அமெரிக்கா செல்வதுதான் நல்லது, பிரதீப்பை எப்படியும் குணப்படுத்தி விடலாம் என அண்ணனிடம் நம்பிக்கையாக பேசியவன் பிரதீப்பையும்  பார்க்க அறைக்கு சென்றான். 

உறக்கத்தில் இருந்த பிரதீப்பை தொந்தரவு செய்யாமல் பார்த்த சர்வா வெளியில் வந்து விட்டான். மித்ரா மெல்லிய குரலில் பிரகல்யாவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். 

சுரேந்தர் அவர்களை கிளம்ப சொல்லி விட்டான். மித்ராவை வீட்டில் விட்ட சர்வா அலுவலகம் சென்று விட்டான். தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை கூட பேசியிராத கணவன் மீது மனத்தாங்கல் கொண்டாள் மித்ரா. 

மதியம் போலவே பிரதீப் வீடு திரும்பி விட்டான். மாலையில் நல்ல மனநிலையோடு சர்வா வீட்டுக்கு வர, மித்ராவோ அவனை விட்டு தள்ளியே இருந்தாள். 

ஆரம்பத்தில் அவனுக்கு கவனத்தில் பதியவில்லை. போக போக புரிந்து கொண்டவன், “என்ன மித்ரா, யாரும் ஏதும் சொன்னாங்களா?” எனக் கேட்டான். 

“எனக்கு தூக்கம் வருது” என சொல்லி சென்றவளை குழப்பமாக பார்த்தான். 

கோவம் வேறு யாரின் மீதும் இல்லை, தன் மீதுதான் என்பதை சரியாக புரிந்து கொண்டவன் அப்படி என்ன செய்தோம் என தீவிரமாக யோசித்துப் பார்த்தான். ஒன்றும் விளங்காமல், “நான் என்ன தப்பு பண்ணினேன் மித்ரா? சொல்லிட்டு கோவப்பட்டா ஈஸியா இருக்கும் எனக்கு” என்றான். 

அவள் வாய் திறக்க மறுத்து அழுத்தமாக இருந்தாள்.  

“மண்டை வெடிக்குது மித்ரா, என்னன்னு சொல்லித் தொலையேன்!” சத்தம் போட்டான். 

“ஏதோ எனக்கு பிடிச்ச மாதிரி நடக்க முயற்சி பண்றீங்களேன்னு சந்தோஷப் பட்டேன். பிரதீப்க்கு முடியலைன்னா நான் என்ன பண்ணுவேன்? என்னமோ என்னை கடலுக்கு அழைச்சிட்டு போயிட்டு வந்தது பெரிய கொலை பாதகம் மாதிரி நடந்துக்குறீங்க” என்றாள். 

அரை நிமிடம் அவன் நடந்து கொண்ட விதத்தை நினைத்துப் பார்த்தவன், “நானும் சாதாரண மனுஷன்தானே மித்ரா, சொல்லப் போனா அவனுக்காகத்தான் உன்னை கல்யாணம் பண்ணி இங்க அழைச்சிட்டு வந்தேன், நான் பாட்டுக்கும்…” மித்ராவின் குற்றம் சுமத்தும் பார்வையில் தன் மனவோட்டத்தை சரியான விதத்தில் எடுத்துச் சொல்லத் தெரியாமல் விழித்தான். 

அவள் அமைதியாக படுத்துக் கொண்டாள். “நான் என்னதான் செய்யணும் மித்ரா?” இயலாமையோடு கேட்டான். 

“எனக்காகன்னு எதுவும் செய்யாம இருந்தாலே போதும், என்னை நிம்மதியா விடுங்க” என்றவள் முகம் வரை போர்த்திக் கொண்டாள். 

சின்ன பையனுக்கு முடியாத நேரத்தில் தான் சொல்லாமல் கொள்ளாமல் உல்லாசமாக இருந்திருக்கிறேன் என்ற நினைவு குற்ற உணர்வை கொடுக்கத்தானே செய்யும், ஏன் இவளுக்கு இல்லையா அப்படி? இதற்கெல்லாம் கோவம் கொண்டால் என்ன செய்வது என நினைத்தவன் மேலும் அவளை சமாதானம் செய்ய முற்படாமல் படுத்து விட்டான். 

ஆனால் உறக்கம்தான் வருவேனா என்றது. கண் மூடிக் கிடந்தாலும் இன்னும் உறங்கியிருக்க மாட்டாள் என புரிந்து, தன் மனதில் உள்ள நியாயத்தை மீண்டும் சொன்னான். 

அவள் அசையாமல் படுத்திருந்தாள். “நீ இப்படிலாம் நடந்துக்கிறதால என் நிம்மதியே போகுது மித்ரா!” எரிச்சலாக சொன்னான். 

அப்போதும் வாயை மூடிக் கொண்டுதான் இருந்தாள். 

“ஒரு மனுஷனுக்கு கில்ட் ஆகி அதுக்கு ஏதோ ரியாக்ட் பண்ணினா அது அவ்ளோ பெரிய குத்தமா?” எனக் கேட்கவும் அவளின் கோவம் பொங்கி விட்டது. 

ஆங்காரத்தோடு எழுந்து அமர்ந்தவள், “எப்டி எப்டி… கில்ட் ஆகுதா உங்களுக்கு? என்னோடதான வந்தீங்க, ஏன் நான் உங்க வைஃப்தானே?” என சீற்றமாக கேட்டாள். 

“பார்த்தியா நான் சொல்ல வர்றத புரிஞ்சுக்காம வேற மாதிரி பேசுற நீ” என்றான். 

“நீங்க என்ன சொல்றீங்கன்னு நல்லா புரிஞ்சுக்கிட்டுதான் பேசுறேன். உங்க குடும்ப பிரச்சனை சரியாகணும்னு உங்களுக்கு எந்த ஒட்டும் உறவும் இல்லாத என்னோட வாழ்க்கைய நீங்க நினைச்ச படி மாத்துவீங்க. ‘உன்னை விட்டுட்டு நான் ஓடியா போயிட்டேன்? எப்படி வச்சு வாழப் போறேன்னு பாரு’ன்னு வீர வசனம் பேசி செஞ்ச தப்பையும் நியாய படுத்திப்பீங்க. 

நான் பாட்டுக்கும் செவனேன்னு இருந்தா விடாம த்ரில் பண்றேன் இம்ப்ரெஸ் பண்றேன்னு நீங்களே எங்கேயோ கூட்டிட்டு போவீங்க. சரி போகுது இதுதான் வாழ்க்கைனு ஏத்துக்கிட்டு தொலைவோம்னு நான் நினைக்கும் போது… உங்க வீட்ல யாருக்கும் ஏதாச்சும்னா என்னை அழைச்சிட்டு போனதுக்காக… என் கூட சந்தோஷமா இருந்ததுக்காக கில்ட் ஃபீல் வரும் ஸாருக்கு! எல்லாத்தையும் கடனேன்னு ஏத்துக்கிட்டு வாயை மூடிகிட்டு எப்பவும் ஈஈஈ… ன்னு பல்ல காட்டிட்டு திரியனும் நான். இல்லைனா இவரோட நிம்மதி போயிடும்!” பொரிந்து தள்ளியதில் அவளுக்கு மூச்சு வாங்கியது.

சர்வாவுக்கு அவனது தவறு புரிய, அவளை எதிர்கொள்ளும் துணிவில்லாமல் பார்வையை தாழ்த்திக் கொண்டான். 

“எனக்குன்னு ஒரு மனசு இருக்கும், கல்யாணம் பத்தி ஆயிரம் கனவு இருக்கும்னு உங்களுக்கு தோணவே தோணாதாங்க? ஏன் நாம வீட்ல இல்லாம போனதாலதான் பிரதீப்க்கு முடியாம போச்சா? கடலுக்கு போகாம எனக்கோ உங்களுக்கோ முடியாம ஹாஸ்பிடல் போயிருந்தா, இல்லை உங்க பிஸ்னஸ் ரிலேடடா வெளியூர் போயிருந்தா… அப்ப இப்படி தோணியிருக்காதுல உங்களுக்கு? 

உங்க ரெண்டாவது அண்ணன் கூடத்தான் வீட்ல இல்லை, இப்ப வரை இங்க வரலை. அவர் வைஃப் கூட பெங்களூர்ல அவர் பாட்டுக்கும் இருக்கார்தானே? நீங்க மட்டும் ஸ்பெஷல் டிசைன்ல யோசிச்சு என்னை ஹர்ட் பண்றீங்க! 

 உங்க மூட் நல்லாருந்தாதான் என்னை சந்தோசமா வச்சுப்பீங்க, உங்களுக்கு வேற மூட்னா நானும் சோகமா மூலைல உட்கார்ந்துக்கணும்! நானும் என் சந்தோஷமும் பகடைக் காயா, உங்க இஷ்டத்துக்கு எப்படி வேணும்னாலும் உருட்டி உருட்டி விளையாடுவீங்களா?” தன் பேச்சால் அவனை திகைக்க வைத்தாள். 

“இதை சொன்னா நீ கோவப்படுவ…” அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, “ஹ்ம்ம்… இவ்ளோ நேரம் குஷியில பேசிட்டு இருக்கேனா?” எனக் கேட்டாள். 

“ஸாரி சொல்ல வந்தேன் மித்ரா”

“உங்க ஸாரி நடந்த எதையும் மாத்திடாது” என்றாள். 

“கன்ஃபியூஷன்ல… அறிவு மழுங்கிப் போயி… ஹையோ மித்ரா! நிஜமா ஸாரி மித்ரா” மன்றாடுதலாக சொன்னான். 

“தயவுசெஞ்சு எதுவும் பேசாம படுங்க” அதட்டல் போட்டவள் மீண்டும் படுத்து விட்டாள். 

திரும்ப திரும்ப இவளை காயப்படுத்திக் கொண்டே இருக்கிறோமே என அவனுக்கு அவன் மீதே கோவமாக வந்தது. 

“மித்ரா… ப்ளீஸ் நார்மலா ஒரு குட் நைட் சொல்லிட்டாவது படேன். என்னால கண்ண மூடவே முடியாது மித்ரா” என்றான். 

“தப்பு பண்றது மனுஷன் இயல்புதானே மித்ரா, இனிமே இப்படி நடக்க மாட்டேன் மித்ரா” கெஞ்சினான்.