அத்தியாயம் மூன்று :
“என்னங்க இது? இப்போ தான் பார்த்தோம் மிரட்டுறீங்க!” என்று வாசு பேச்சை வளர்த்தான்.
பொதுவாக வாசு யாரிடமும் பேசப் பிரியப்பட மாட்டான். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பான். அவனாக ஒருவரிடம் பேச விருப்பப்படுவது என்பது அபூர்வம்.
நண்பர்கள் அதிகம் உண்டு! ஆனால் எல்லோரும் அவனைத் தெரிந்தவர்கள்! அவர்களாக வாசுவிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள். அவனின் இந்த குணத்திற்காகவே கூட இருப்பவர்கள்.
“என்ன நான் மிரட்டுறேனா? நல்ல கதையா இருக்கே! இது லைப்ரரி ரூல்ஸ்ங்க..!”
“ஆனாலும் மிரட்டுறீங்க!” என்று அவன் சொன்ன விதத்தில் விளையாட்டுப் பேச்சு என்று புரிய..
“பரவாயில்லை நீங்க பயப்படாதீங்க!” என்று இலகுவாக சொல்லியபடி புத்தகம் விரித்தாள்.
“இதுல பெருசா டிப்ஸ் இருக்காது! நான் வேற எடுத்துக் கொடுக்கறேன்” என்று தேடி எடுத்து வந்து கொடுத்தான்.
“தேங்க் யூ!” என்றவள் வாங்கிப் படிக்க ஆரம்பிக்க…
அதிகம் பேசிப் பழக்கமில்லாத வாசுதேவனுக்கு எப்படித் திரும்ப பேச்சை வளர்க்க என்று தெரியவில்லை. ஆனால் ஜனனியிடம் பேச வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருந்தது.
ஜனனி பின் புத்தகத்தில் ஆழ்ந்து விட்டாள். வாசுதேவன் அவன் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் ஒரு கண் அவளிடம் ஒரு கண் என்று இருந்தான்.
ஒரு மணிநேரம் கழித்து அவள் எழ..
“படிச்சிட்டீங்களா?”
“கொஞ்சம்! கொஞ்சம்! ஆனா இதைத் தானே நம்ம வீட்ல எப்பவும் சொல்றாங்க. ஆனா நம்ம தான் கேட்கறதில்லை.. எங்க பாட்டியும் தாத்தாவும் இதைத் தான் சொல்லுவாங்க, எல்லோரையும் பார்த்ததும் வணக்கம் சொல்லு. அவங்க கண்ணைப் பார்த்து பேசு, அசட்டு சிரிப்பு சிரிக்காத, நீ பேசறதை விட அவங்களைப் பேச விட்டு கேளு, இப்படி நிறைய” என்றவள்.. “அதை நான் கேட்டதேயில்லை! இனிமே கேட்க முயற்சி பண்றேன்!” என்று புன்னகைத்தாள்.
“சரி! கிளம்பறேன்!” என்று ஜனனி எழ,
“நானும் முடிச்சிட்டேன்!” என்று வாசுதேவனும் எழுந்தான், அவளுடன் பேச்சை வளர்க்கத் எழுந்தான் என்பது தான் உண்மை, அவன் இன்னும் படித்து முடிக்கவேயில்லை.
வெளியே வந்தார்கள், அவள் நடக்க நடக்க.. “உங்க பேர் என்ன?” என்று வாசு கேட்க,
“ஜனனி” என்றவள், கூடவே “நான் பைனல் இயர் ஐ டி ஸ்டுடன்ட்” என்றவள், கூடவே காலேஜ் பெயரையும் சொல்லி, “எப்படியும் வரிசையா கேட்பீங்க! அதுதான் சொல்லிட்டேன்” என்று சிரிக்க,
அந்த சிரிப்பு வாசுதேவனை வசீகரித்தது.
வாசு அதை பார்த்திருந்த போதே, “எனக்கு ஒரு ஹெல்ப் வேணுமே!” என்றாள்.
அவள் வரிசையாக பதில் சொன்ன விதத்தில் மலர்ந்த புன்னகையை அடக்கி “சொல்லுங்க!” என,
“என்னை வந்து கூட்டிட்டுப் போறேன்னு சொன்னாங்க.. ஆனா நான் தனியா போகணும். நான் ஏறப் போற பஸ் கரக்டா பார்க்கறீங்களா?”
“ஆட்டோ வேண்டாமா?”
“வேண்டாம்! தனியாப் போறேன் இல்லையா? ஆட்டோல போகும்போது இவன் நம்மை பத்திரமா கொண்டு போய் சேர்ப்பானான்னு என் கற்பனை ஓடும்! எதுக்கு வம்பு!” என ஜனனி சொல்லிய பாவனையில்,
சிரித்தே விட்டான்.. அதனோடே “நீங்க பஸ்லயே போனது இல்லையா?”
“போயிருக்கேன்! ஆனா தனியா போனது இல்லை. யாராவது இருப்பாங்க, எனக்கு போக தெரியும்! ஆனாலும் எங்க வீட்ல எல்லோரும் எப்பவும் பத்திரம் சொல்றாங்களா ஒரு சின்ன டென்ஷன்” என,
“வாங்க!” என்று அவளோடு நடந்தான்…
தன்னைப் பற்றி எதுவும் கேட்பாளா? கேட்பாளா? என்று வாசுதேவன் பார்க்க, ஜனனி அமைதியாக அவனோடு நடந்தாள், கேட்கவேயில்லை.
பஸ் ஸ்டாப் வந்ததும் “இருங்க! நான் சொல்றேன்! அது கரக்டா சொல்லுங்க!”
வரும் பஸ்ஸை தான் ஆராய்ந்து பார்த்திருந்தாள், வாசுதேவனை பார்க்கவில்லை. அவளின் நேரம் பஸ் ஐந்து நிமிடத்தில் வந்தும் விட.. “இது போகும் தானே!”
“போகும்!” என்றவனைப் பார்த்து,
“ஓகே பை!” என்றபடி ஏறிக் கொள்ள, வாசுதேவனுக்கு இவள் சரியாக போவாளா மாட்டாளா என்று தோன்ற அவனும் ஏறிக் கொண்டான்.
“நீங்களும் அந்தப் பக்கம் தானா?” என்றவளைப் பார்த்து,
“ஆம்!” என்பது போல தலையாட்டியவன், பின்பு ஏதாவது பேசுவாளா என்று பார்க்க.. பஸ் செல்லும் வழியை தீவிரமாக பார்த்திருந்தாள்.
“என்ன செய்கிறாய் வாசுதேவா?” என்று அவனின் மனது அவனிடம் பேச, “தெரியவில்லை! வழி தெரியாததால் கூட செல்கிறேன்” என்று அவன் பதில் சொல்ல..
இப்படியாக அவள் இறங்கும் இடம் வர, பேருந்து நிலையத்தில் அவினாஷ் நிற்பதைப் பார்த்தவன், இறங்காமல் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி மீண்டும் பேருந்து ஏறி லைப்ரரி சென்றான்.
ஆனாலும் எண்ண அலைகள் ஜனனியைச் சுற்றியது “என் பெயர் கூடக் கேட்கவில்லை! இறங்கும் போது ஒரு தலையசைப்ப்பு இல்லை! ஏன் என் புறம் திரும்பக் கூட இல்லை!” மனதிற்கு சற்று வருத்தமாய் இருந்தது.
பின் நினைவுகளை ஒதுக்கி படிக்கத் துவங்கினான். அடுத்த வாரம் பரீட்சை நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய், ஒரு பெண்ணின் பின்னால் போகிறாயா என்று.
இது வாசுவின் இயல்பே அல்ல.. ஜனனி பேசிய விதம் மனதிற்கு இதமாய் இருக்க.. சில காலம் கழித்து இப்படி தானாய் ஒரு சிரிப்பும் வர அதன் பொருட்டே சென்றான். அதுவும் தன்னை பற்றி கேட்பாளா என்று பார்க்க கேட்கவேயில்லை.
அங்கே பேருந்து நிறுத்தத்தில் அவினாஷ் ஜனனியை பிடி பிடி என்று பிடிக்க, “எதுக்குக் கத்துற, நான் என்ன சின்ன பொண்ணா, எனக்கு வரத் தெரியும்”
“அப்போ இப்போ எதுக்கு மெசேஜ் பண்ணின ஜனனி?”
“அதுவா! இங்க இருந்து வீடு தூரம்… நடக்கணும்! யாரு நடப்பா! அதுக்கு தான்! வண்டியை விடுடா!!!” என்று இவளும் பதில் பேசி சண்டை போட்டுக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.
நுழையும் போதே “அம்மா பசிக்குது!” என்று கத்தி, உணவு உண்டு முடித்த பிறகு தான், “அச்சோ! அவர் கிட்ட சொல்லாம இறங்கிட்டேனே!” என்று நினைத்தவள்.. “சே! உனக்கு ரொம்ப மறதியாப் போச்சு ஜனனி!” என்று தன்னையேத் திட்டிக் கொண்டாள்.
நாட்கள் விரைந்து செல்ல, ஒரு முன்னணி கன்சர்னின் இன்டர்வியூவில் செலக்ட்டும் ஆகிவிட்டாள். மனது நிறைய சந்தோஷத்தோடு வீடு வந்து “அம்மா! நான் செலக்ட் ஆகிட்டேன்!” என்று ஜனனி சொன்ன நொடி,
“ஆத்தா! நான் பாசாயிட்டேன்!” என்று அவினாஷ் கௌண்டர் கொடுக்க..
சுற்றி இருந்த அம்மாவும் பெரியம்மாவும் ரகுலனும் சிரிக்க,
அப்படி ஒரு கோபம் ஜனனிக்குப் பொங்கியது.
“இந்த இண்டர்வியுக்காக நான் எவ்வளவு சீரியஸா ப்ரிபேர் பண்ணியிருக்கேன்! வொர்க் பண்ணியிருக்கேன்! உனக்குக் கிண்டலா? இவங்க எல்லோரும் சிரிப்பாங்களா?” என்று ஆத்திரம் பொங்க கேட்டவள்,
“அங்க காலேஜ்ல வந்து பாருங்க, எப்படி இதுக்காக எல்லோரும் டென்ஷனா இருக்காங்கன்னு, நாலு பேர் தான் ஆனோம், அதுல நான் ஒருத்தி!”
“ஹேய், அக்கா ஈசி!” என்ற சிரித்த அவினாஷிற்கு ஜனனியின் கோபம் புரியவில்லை.
காலேஜில் எல்லோரும் பாராட்டி இருக்க, அவளின் லெக்சர்கள், சக தோழர்கள் எல்லோரும்.. வீடு வந்ததும் எப்போதும் போலத் தன்னை சிறு பெண் போல நடத்த அவளுக்கு கோபம் பொங்கி விட்டது.
அவினாஷ் சிரிக்க சிரிக்க, ஜனனியின் கோபம் அதிகமாகியது. எதை எடுத்து அவன் மேல் வீசலாம் என்று சுற்றும் முற்றும் பார்க்க..
“டேய் விடுடா! அவ ஏதோ சந்தோஷத்துல செலக்ட் ஆகிட்டேன்னு சொல்றா! யாரு இப்போ அவளை வேலைக்கு அனுப்பப் போறா!” என்று செல்லமாள் சொல்ல,
“இதுவரைக்கும் எனக்குப் போகற ஐடியா இல்லை. ஆனா இப்போ சொல்றேன், நான் போவேன்!” என்று ஜனனி சொல்ல,
“அக்கா கோபப்படாதே!” என்று அவினாஷ் சமாதானத்தில் இறங்க,
செல்லமாள் மீண்டும், “உன்னை யாரும் அனுப்பப் போறதில்லை!” என,
எப்போதும் எதிர்த்துப் பேசும் ஜனனி பேசவேயில்லை…
அமைதியாக அவளின் ரூம் போய் விட, “என்னமா அக்காக்கிட்ட அடி வாங்குவேன்னு நினைச்சா, பேசாமப் போயிட்டா”
“விடுடா! கொஞ்சம் நேரம் சமாதானம் ஆகிடுவா..” என்று அம்மா சொல்ல, அவரவர் அவரவர் வேலையை பார்த்தனர்.
இரவு உணவு உண்ணக் கூட ஜனனி வராததால், செல்லமாள் பார்க்க, ரூமில் அமர்ந்து லேப் டேப்பிள் கேம் விளையாடிக் கொண்டு இருந்தாள்.
“தூங்கறன்னு நினைச்சா, நீ விளையாடுறியா?” என்று செல்லமாள் கேட்க,
“அதுதான் நான் விளையாட்டுப் பொண்ணுன்னு எல்லோர் முன்னாடியும் எப்பவும் என் மானத்தை வாங்கற தானே, போ நீ!” என்று எடுத்த எடுப்பிலேயே மிகவும் அலட்சியமாக எடுத்தெறிந்து பேசினாள்.
“ஜனனி!” என்று அதிர்ந்து செல்லமாள் கூப்பிட,
“என் கண்ணு முன்ன நிக்காத போ! போய்டு! ஏதாவது தூக்கி வீசிடுவேன் போ!” என்று கத்தினாள்..
அவள் கத்தியதை பார்த்து பாட்டி வந்தவர், “என்ன ஜனனி மா?” என,
“முதல்ல இவங்களை இங்க இருந்து போகச் சொல்லுங்க பாட்டி! இவங்களுக்கு இவங்க பையன் தான் உசத்தி, போகச் சொல்லுங்க!” என,
செல்லமாள் பேச்சற்று போனார்.. எப்போதும் பேசும் பேச்சுக்கள் தான் ஆனால் மகளிடம் இப்படி ஒரு நடத்தையை எதிர்பார்க்கவில்லை.
“அம்மாவை இப்படிச் சொல்லக் கூடாது!” என்று கௌரி சொல்ல,
“அவங்க என்னோட அம்மாவே இல்லை, போகச் சொல்லுங்க!” என்று மீண்டும் கத்தினாள்.
எப்போதும் அம்மாவுக்கும் மகளிற்கும் சண்டை வருவது தான், ஆனால் இன்று எல்லைகளைக் கடந்து கொண்டிருந்தது.
“வா செல்லமா! அவ அப்பா வரட்டும்! இன்னைக்கு அடங்காப் பிடாரி மாதிரி கத்துறா” என ஜனனியின் செய்கையைப் பார்த்து கௌரி செல்லமாளை அழைத்துச் செல்ல..
அது இன்னம் ஜனனியின் கோபத்தை தூண்டி விட்டது.