அத்தியாயம் பதினாறு :
மறுநாள் ஜனனி விழித்ததே ஸ்வாதியின் அழைப்பில் தான். காலையில் ஏழுமணிக்கு வந்தனர். வந்ததும் சிறிது நேரம் உறங்கினர். உடனேயே தான் ஸ்வாதியின் அழைப்பு, எடுத்தவுடனே, “ஜனனி, ஏதாவது உங்களுக்குள்ள ப்ராப்ளமா!” என்ற அவரின் கவலையான குரல் கேட்க,
“ஏன் அத்தே? எங்களுக்குள்ள ப்ராப்ள்மா, அதெல்லாம் ஒன்னுமில்லையே! ஏன் கேட்கறீங்க?” என்றாள் அவரின் குரலின் கவலையை உணர்ந்து.
ஃபோன் அடித்த போதே வாசுவும் விழித்து விட்டான், இப்படி ஒரு பதிலை ஜனனி சொல்லிக் கொண்டு இருக்கவும்.. “என்ன?” என்று அவனும் எழுந்து அமர்ந்தான்.
“இல்லை, உன் கூட இருக்கும் போது எனக்கு போன் பண்றான். நேத்து நைட் வாய்ஸ் மெசேஜ் பண்ணியிருக்கான். அதான் எதுவும் சண்டை போடறீங்களோ?”
“சின்ன வயசுல ஸ்கூல்ல இப்படிதான், ஏதாவது ப்ராப்ளம் வரும்போதோ இல்லை அவனோட அப்பாவை பத்தி யாராவது பேசினாலோ, மா, லவ் யு ன்னு என்னை கட்டிக்குவான். ஆனா என்ன விஷயம்னு சொல்லவே மாட்டான்”
“பாரு, உன்னை லவ் பண்ணினதை என்கிட்ட திரும்ப அஞ்சு வருஷம் பேசவேயில்லை தானே!” என்றவரின் குரலில் இருந்த கவலையில் ஜனனிக்கு பாவமாக இருந்தது.
வாசுவைப் பார்த்து முறைத்துக் கொண்டே “அத்தே, இவர் ஒரு முசுடு அத்தே. பேசவே மாட்டாங்க, எதையும் சொல்லவே மாட்டாங்க, உங்க கிட்ட இல்லை, என் கிட்ட கூட தான் லவ் சொல்லலை, இதுக்கு போய் நீங்க ஃபீல் பண்றீங்களே!”
“அது எதுக்கு உங்களுக்கு அப்போ அப்போ மெசேஜ் போடறாங்க தெரியுமா, உங்களை தனியா விட்டுட்டோம்னு ஒரு கில்டி கான்ஷியஸ்சா இருக்கும்!” என்று ஜனனி சொல்ல.
தன்னை சரியாக உணர்ந்து கொண்ட ஜனனியை வேகமாக போன் பேசிக் கொண்டிருந்த போதும், அவளை அணைத்து அவளின் தோளில் முகம் வைத்துக் கொண்டான்.
“பாருங்க! இப்போ கூட ஃபோன் பேச விடாம என்னை கட்டிப் பிடிக்கறாங்க” என்று ஜனனி சொல்ல,
“அச்சோ!” என்று பதறி விலகியவன், “லூசு!” என்று அவளை திட்டினான்.
“நான் என்ன லூசு? நீங்க தான் லூசு! அத்தையை எவ்வளவு கவலைப் பட வைக்கறீங்க” என்று அவனிடம் கோபத்தைக் காட்டவும்,
“நீ குடு ஃபோனை” என்று அவளிடம் இருந்து வாங்கியவன், ஸ்பீக்கரில் போட்டு “ஏண்ட்டிம்மா நுவ்வு” என,
“நீ எதுக்குடா அந்த நேரத்துக்கு மெசேஜ் போட்ட?”
“அம்மா! நாங்க தாஜ் மஹால் போயிருந்தோம். நேத்து ஃபுல் மூன் டே! அங்க தான் இருந்தோம்! அப்போ உன் ஞாபகம் வந்ததா, மெசேஜ் பண்ணினேன்!” என்று சொல்லி அசடு வழிந்தவனிடம்,
“போடா!” என்று அவனை திட்டியவர், “ஜனனி சொன்ன மாதிரி என்னை தனியா விட்டிருக்கோம்னு ஃபீல் பண்றியா?” என,
“ஆமாம்” என்பது போல தலையசைத்தான்.
“என்னடா பதில் காணோம்?” என்று ஸ்வாதி கேட்க,
“அவர் தலையாட்டுறார் அத்தை!” என்று ஜனனி சொல்ல,
“ரே பாபு, என்னை விடு, உன்னை பாரு! என்னோட இருபத்தஞ்சி வயசு வரைக்கும் ரொம்ப செல்லமா வளர்ந்தேன், சந்தோஷமா இருந்தேன், அதுக்கப்புறமும் உங்கப்பா கூட இருந்த பத்து வருஷமும் அப்படித்தான். நானே இளவரசி! நானே ராணி! அதுக்கப்புறம் சிரமங்களை வேண்டிய மட்டும் பார்த்துட்டோம். இப்போ நல்ல படியா அவரை அனுப்பி விட்டுட்டோம்”
“என்னை மாதிரி நீ எதுவுமே அனுபவிக்கலை கண்ணா, எனக்குள்ள எப்பவுமே அந்த வருத்தம் இருக்கு. சிரமப்பட்ட நாட்கள்ள எல்லா கோபத்தையும் உன்கிட்ட தானே காட்டினேன். நீ உன்னை பாரு, நீ எனக்கு பக்கத்துல வேணும்னு நினைச்சா, நான் வந்துடுவேன், இல்லை உன்னை வரவழைசிக்கிறேன். சரியா! உன்னை பாரு. நீ சந்தோஷமா இருந்தா தானேடா அம்மா நிம்மதியா இருப்பேன்!” என,
“அம்மா நான் ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன்!” என்றான் வாசுவும் நெகிழ்ந்த குரலில்.
“அப்போ அம்மாக்கு நீ லவ் யு சொல்லக் கூடாது, ஜனனிக்கு மட்டும் தான் சொல்லணும் புரிஞ்சதா, போடா! போடா! நைட் எல்லாம் வாய்ஸ் மெசேஜ் போட்டு என்னை பயமுறுத்துற!” என,
“அம்மா! எனக்கு லீவ் இல்லை, நீங்க ஒரு ரெண்டு நாள் இங்கே வாங்களேன்!” என்று கொஞ்சி, கெஞ்சி, அவர் வருகின்றேன் என்று சொல்லும் வரை விட வில்லை.
ஜனனியும் “இன்னைக்கு நைட் குள்ள வந்திடுங்க அத்தை. இல்லை இவர் என்னை ஒரு வழி பண்ணிடுவார்!” என்று சொல்லியவள்,
“அப்படியே எங்க அம்மாவையும் கூட்டிட்டு வர்றிங்களா, இவர் பாட்டுக்கு உங்களை இந்த கொஞ்சு கொஞ்சறார், நான் எங்கம்மாவை பார்க்கலையோன்னு எனக்கு ஒரே கஷ்டமா இருக்கு!” என்று சொல்ல,
“வர்றோம்!” என்று சிரிப்புடன் ஸ்வாதி போனை வைத்தவர், உடனே செல்லம்மாளிற்கு அழைத்தார்.
இங்கே வாசு அவளை பார்த்து முறைத்து நின்றான்.
“என்ன?” என்று புருவம் உயர்தியவளிடம்,
“அம்மாக்கிட்ட கட்டிப் பிடிக்கறேன்னு சொல்றியா?” என்று கடுப்பாகக் கேட்க,
“வேற என்ன சொல்லுவாங்க! அவங்க ரொம்ப கவலையா இருந்தாங்க, வாய்ல சொன்னதோட நின்னேன்னு சந்தோஷப்படுங்க, அப்படியே போட்டோ எடுத்து அனுப்பியிருப்பேன்” என்றவளை,
வாசு முறைத்துப் பார்க்க முயன்றாலும் சிரிப்பு தான் வந்தது.
“சரியான அம்மா பையன்!” என்று திட்டிக் கொண்டே ஜனனி செல்ல, அதை ஒரு புன்னகையோடு கேட்டுக் கொண்டே குளிக்க சென்றான்.
ஆஃபிசிற்கும் நேரமாகிவிட, விரைந்து தயாராகி வந்தவனுக்கு, உணவு கொடுத்து அனுப்பியவள், “பாட்டி! நைட் கார்ல வந்ததுனால நான் சரியாவே தூங்கலை, தூக்கம் வருது! தூங்கட்டுமா!” என்று பாட்டியிடம் அனுமதி கேட்டு நின்றாள்.
“நீ என்ன ராஜாத்தி, இதுக்குப் போய் கேட்பியா! தூங்குடிம்மா!” என்று பாட்டி அனுமதி கொடுத்த பிறகே தூங்கச் சென்றாள்.
அவர்களை கேட்காமல் எதுவும் செய்ய மாட்டாள். கேட்க வேண்டிய அவசியமே இல்லை, வாசுவை நம்பி இருக்கும் பெரியவர்கள் அவர்கள். ஆனாலும் என் கணவன் உங்களை பார்த்துக் கொள்கிறான் என்கிற மாதிரி எந்த செய்கையும் இருக்காது, அவர்களின் வீட்டில் இவர்கள் இருப்பது போன்ற உணர்வை தான் கொடுப்பாள்.
“தாத்தா! என்னோட ஃபோன், யார் ஃபோன் பண்ணினாலும் நீங்களே பேசிடுங்க!” என்று ஃபோனையும் கொடுத்து, காலையில் பத்து மணிக்கு உறங்கியவள் பின்மதியம் மூன்று மணிக்கு எழுந்து வெளியே வந்தாள்.
“ஃபோன் வந்ததா தாத்தா” என்று கேட்க,
“முதல்ல நீ சாப்பிடு! அப்புறம் எதுனாலும் பேசலாம். இவ்வளவு நேரமாகிடுச்சு!” என்று பாட்டி அதட்ட,
உணவு உண்டு, ஃபோனை வாங்கியவளிடம், “உங்க அம்மா, உன் அத்தை, உன் வீட்டுக்காரன், உன் தம்பி, எல்லோரும் ஃபோன் பண்ணினாங்க” என
“எதுக்காம்?” என்றவளிடம்,
“ஸ்வாதி ஊருக்கு வர்றலாம்!” என
“யார்? யார் கூட வர்றாங்க தாத்தா?”
“நாங்க வர்றோம் சொன்னா! யார் யார் சொல்லலையே!”
உடனே வாசுவிற்கு அழைத்தாள், “ஹேய்! கும்பகர்ணி இவ்வளவு நேரமா தூங்குவ?”
“நீ வீட்ல இருந்தா என்னை தூங்க விடறியா, ஆனா நீ மட்டும் எப்படி தூங்காம இருக்க! ஒருவேளை ஆஃபிஸ் போய் தூங்கறியோ!” என சீரியசாக கேட்டாள்.
“மானத்தை வாங்காத ஜனனி!” என்று சிறு சிரிப்போடு சொன்னவனிடம்,
“யாரெல்லாம் வர்றாங்க”
“தெரியலை, அம்மா ஃபோன் பண்ணினப்போ நான் பிசி. சரியா கேட்டுக்கலை, நான் இப்போ ஏர்போர்ட் போறேன், நாலு மணி பிளைட்க்கு வர்றாங்க” என சொல்லவும்,
“நானு… நானும் வர்றேன்!”
“அங்க வந்து போனா டைம் ஆகிடும். நான் மட்டும் போறேன், நீ பாட்டுக்கு தனியா கிளம்பி வர்றேன்னு வந்துடாத, டெல்லில தனியா வர்றது ரொம்ப ரிஸ்க்!” என்று அவளைப் பற்றி தெரிந்தவனாக அதட்டி நிறுத்தி வைத்தான்.
பின்பு அவன் வீடு வந்த போது ஐந்தரை மணி, ஸ்வாதி, செல்லம்மாள், அனுராதா, அவினாஷ், ரகுலன் என்று பெரிய பட்டாளமே வந்திருந்தனர்.
“ஹேய்!” என்று குதித்தவளிடம்,
செல்லம்மாள், “உனக்கு எத்தனை தடவை கூப்பிடறது, பகல்ல உனக்கு என்ன அப்படி ஒரு தூக்கம். இங்க இருந்து என்ன வேணும்னு கேட்க கூப்பிடேன்!” என,
“என்ன சும்மா அதட்டுறீங்க, நீங்களா வந்தீங்க! நான் வர சொல்லி தானே வந்தீங்க!” என்று ஜனனியும் வார்த்தையாட,
“வந்தவுடனேவா..!” என எல்லோரும் பார்க்க,
“எல்லாம் நீங்க குடுக்கற செல்லம் தான் அண்ணி, இவ இன்னும் பொறுப்பில்லாம இருக்கா!” என செல்லம்மாள் ஸ்வாதியிடம் புகார் படித்தார்.
திரும்ப பேச ஆரம்பித்த ஜனனியை வாசு தான் அதட்டினான், “அம்மா ஒரு வார்த்தை சொன்னா திரும்ப பேசணுமா என்ன? போ ஜனனி! முதல்ல வந்தவங்களுக்கு பசிக்கும், காஃபி டீ ஏதாவது தயார் செய்!” என அதட்டினான்.
“தனியா மாட்டுடா மவனே நீ! உன்னை பார்த்துக்கறேன்” என்ற லுக்கோடு ஜனனி உள்ளே செல்ல,
“எதுக்குடா உனக்கு இந்த வீர தீர சாகசம், அடி வாங்கப் போற நீ!” என்று ஸ்வாதி சொல்ல,
“அதெல்லாம் தினமும் வாங்கறதுதான்ம்மா, ஒரு ரெண்டு சேர்த்து வாங்கிக்கறேன்!” என்று வாசுவும் சொல்ல,
அங்கிருந்தவர்கள் எல்லோருக்கும் சிரிப்பு பொங்கினாலும் கூடவே ஒரு மன நிறைவு.
அவினாஷும் ரகுலனும் ஜனனியின் பின்னால் சென்றவர்கள், “ஜனனி!” என்று கத்தி, “உன்னைப் பார்க்க அங்க இருந்து வந்தா, நீ எங்களைக் கவனிக்காம எல்லோர் கிட்டயும் சண்டை போடற!”
அப்படியே திரும்பி நின்றவள், “எப்படிடா உங்களை கவனிக்க!” என்று அடிக்க வருவது போல பாவனை செய்தாள்.
“அதுதான் அத்தானை தினமும் போட்டு மொத்தரையாமே! இப்போ தான் உன் புகழை பரப்பிட்டு இருக்கார்!” என்று கிண்டலாக சொல்ல,
“அப்படியா சொல்றார்! ஒரு வேளை நான் அப்படி கவனிக்கனும்னு ஆசையோ என்னமோ? நான் கவனிச்சிக்கிறேன்!” என்று ஜனனியும் கிண்டல் செய்யவும்,
ரகுலன் வேகமாக சென்று, “வாசுத்தான்..” என்று அப்படியே ஒப்பிக்க, இப்படியாக பொழுதுகள் கேலியும் கிண்டலுமாக செல்ல ஆரம்பித்தது.
“உன் பொண்டாட்டிய மட்டும் தான் தாஜ் மஹால் கூட்டிட்டு போவியா” என்று ஸ்வாதி கிண்டல் செய்ய,
அவரிடம் பதில் சொல்லாமல் “ஜனனி! சீக்கிரம் சாப்பிட எடுத்து வை! நாம இப்போவே போறோம்!” என சொல்லியவன்,
“அச்சோ! சும்மா சொன்னேன்! வேண்டாம்டா! நேத்து தான் நைட் ஃபுல்லா டிரைவ் செஞ்சிருக்க” என்று ஸ்வாதி சொல்லச் சொல்ல,
“அத்தை, நீங்க பேசாம இருங்க! போகலாம்! அவியும் ரகுவும் கூட இருக்காங்க டிரைவ் பண்ணிக்கலாம்” என்று ஜனனியும் சொல்ல,
ஆளுக்கொரு வேலையாக செய்து ஏழு மணியாகும் போதே கிளம்பிவிட்டார்கள்.
இடத்தை அடைத்துக் கொண்டு காரில் இருக்க, “என்ன பெரியம்மா நீங்க, பாருங்க, நீங்களும் அம்மாவும் எவ்வளவு குண்டா இருக்கீங்க, இடமே பத்தலை!” என்று ஜனனி கிண்டல் செய்யவும்.
“நீயும் ஒரு குழந்தை பொறந்தா இப்படி தான் ஆகிடுவ” என்று செல்லம்மாள் சொல்லவும்,
“அதெல்லாம் ஆக மாட்டோம். நான் என் அத்தை கிட்ட இருந்து டிப்ஸ் வாங்கிப்பேன்” என்று ஸ்வாதியை காட்டினாள்.
“அம்மா! அவ வாயை மூடு, திரும்பவும் நீ அழகுன்னு ஆரம்பிச்சிடுவா!” என்று வாசு சொல்ல,
ஸ்வாதி ஜனனியின் வாயை மெலிதாக மூடினார்.
அனுராதா இருவரையும் அவசரமாக திருஷ்டி கழித்தவர், “இங்க எப்படியோ கொஞ்சிக்கங்க, ஆனா ஊருக்கு வரும் போது, பெர்ஃபெக்ட் மாமியார் மருமகளா வரணும்! அப்போ அப்போ சண்டை போடணும்! இல்லைன்னா எல்லோரும் கண்ணு வைப்பாங்க!” என்றார்.
அனைவர் முகத்திலும் சிரிப்பு.
சரியாக பன்னிரண்டு மணிக்கு ஆக்ராவை அடைந்தனர். நேற்று தான் பௌர்ணமி என்றதால், இன்றும் சற்று தேய்ந்திருந்தாலும் முழு நிலவு ஜொலித்தது.
அம்மாவும் மகனும் தெலுங்கில் பேசி அதன் அழகை சிலாகித்து கொண்டனர். நேத்தே நீ கூட இல்லைன்னு நான் மிஸ் பண்ணினேன் மா என்று வாசு சொல்ல,
“உன்னோட காதல் மனைவி கூட காதல் சின்னத்துக்கு வந்து, அம்மாவை நினைச்சியா” என்று ஸ்வாதி கிண்டல் செய்ய,
“நீயில்லாம என்னோட லைஃப் எப்படிம்மா கம்ப்ளீட் ஆகும்! எல்லா நேரமும் நான் உன்னை நினைக்கிறது இல்லை. ஆனா ரொம்ப சந்தோஷமா இருக்கும் போது என் நினைவுல நீ இருப்ப அண்ட் என்னோட அப்பா என்னை எப்படி பார்த்துக்கிட்டார்ன்னு எனக்கு ஞாபகமே இல்லை. ஐ மிஸ் ஹிம் டூ” என்றான்.
“எதுக்கு இப்போ அதையெல்லாம் நினைக்கிற?” என்றார் கவலையாக ஸ்வாதி.
“தெரியலை! ரொம்ப சந்தோஷமா இருக்கும் போது மிஸ் பண்ணினதை நினைக்கத் தோணுது!” என்ற மகனை தோளோடு அணைத்துக் கொண்டார்.
ஜனனி அவர்கள் பக்கத்தில் கூட வரவில்லை, இருவரும் பேச தனிமை கொடுத்து விலகி நின்றாள்.
குடும்பமாக தாஜ் மஹாலின் அழகை ரசித்து இருந்தனர்.
அவினாஷ் மெதுவாக வாசுவிடம், “அத்தான்! உங்க காதல் கதையை சொல்லுங்க பார்ப்போம்!” என்று ரகசியமாகக் கேட்டான்.
வாசு அவனைப் பார்க்கவும், “இவளைப் போய் உங்களுக்கு எப்படி பிடிச்சது?” என்று சொல்லி, அதை ஜனனி கேட்டு, ரெண்டு மொத்தும் வாங்கினான்.
“எனக்கு அவளை பிடிச்சது இருக்கட்டும், அவளுக்கு என்னை பிடிக்கணும்னு எவ்வளவு வேண்டியிருக்கேன் தெரியுமா? ஒரு வேளை பிடிக்காமப் போயிடுமோன்னு பயந்திருக்கேன் தெரியுமா? தேங் காட்! அவளுக்கு என்னை பிடிச்சிடுச்சு!” என்று புன்னகையோடு ஜனனியைப் பார்த்தவாரே சொன்னான்.
“அட ஜனனிக்கா! உனக்கு அப்போவே இப்படி ஒரு ரசிகரா!” என்று சொல்லி, ரகுலன் ரெண்டு மொத்தை பரிசாக பெற்றான்.
“பாருங்க அத்தை! என்னை இவனுங்க ஓட்டுறானுங்க!” என்று ஸ்வாதியிடம் குற்றப் பத்திரிக்கை வாசித்தாள்.
“அவனுங்களுக்கு என்ன தெரியும் உன்னை பத்தி! விடு, விடு, சின்னப் பசங்க!” என்று ஸ்வாதி பரிந்து வந்தார்.
“அதுதானே!” என்று வாசுவும் பாவனையாகச் சொல்ல,
நிஜமாக சொல்கிறார்களா? கிண்டலாக சொல்கிறார்களா? என்று ஜனனி யோசனையாகப் பார்த்திருந்தாள்.
“நிஜம் பொண்ணே! எதுக்கு இப்படிப் பார்க்கிற?” என்றார் கனிவாக ஸ்வாதி.