“என்கிட்ட பேசமாட்டேன்னு சொன்னிங்க..??” அவன் கைகளில் இருந்து இறங்க முயன்றவளை தடுத்தவன்,
“நான் எப்ப சொன்னேன்..??” அவளோடு கட்டிலில் விழுந்து அவளை பேசவிடாமல் செய்யும் வேலைகளை செய்ய,
அவன் இதழில் கைவைத்து மூடியவள்,” ஆமா நைட்டு என்ன மட்டும் தனியா விட்டுட்டு இங்க படுத்திங்க..?அங்க ஊருக்கு போனிங்க..?” அவள் குரலில் ஒரு கலக்கத்தை காணவும்,
அவள் முகத்தை தன்னை நோக்கி பார்க்க செய்தவன் ,”யாருடா இது என்னோட மங்கம்மாதானா.. வார்த்தைக்கு வார்த்தை ங்க போடுற.. அவ்வளவு மரியாதையா பேசுற.. அழுகை வேற வர்ற மாதிரி இருக்கு .. பத்தாததுக்கு நீயா வந்து கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கிற இரு நல்லா செக் பண்றேன் நீதானா இதுன்னு..??” அவளை இறுக்கி அணைத்து முத்தமிட வர,
அவனிடமிருந்து நழுவியவள்,” என்ன பார்த்தா மங்கம்மான்னு சொல்றிங்க..?” சேலையை இடுப்பில் சொருகிக் கொண்டு அவனோடு சண்டைக்கு கிளம்பியவளின் அந்த சேலை மறைக்காத இடையில் தன் கையை வைத்து அவளை தன் உயரத்திற்கு தூக்கியவன் அவள் வயிற்றில் முகம் புதைத்தபடி,
“ காலையில இருந்து இது என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுதுடி..?” அவளோடு கட்டிலில் விழுந்தவன் அடுத்து அவளை பேசவே விடவில்லை.. அந்த வேலையை அவன் இதழும் கையும் எடுத்துக் கொள்ள, நேற்று எவ்வளவுக்கெவ்வளவு கடுமையை காட்டினானோ அதற்கு மேலேயே மென்மையாக இருந்தது.. தன் மனைவி தன்னோடு இவ்வளவு ஒன்றுவாள், தன்னை தேடுவாள் என்பதே அவனுக்கு ஜிவ்வென இருக்க இருவருமே இந்த உலகத்தில் இல்லை.. தன் கைகளில் அவள் உருகிக் கொண்டிருக்க சக்தி தன் காதலை அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தான்..
அடுத்த பத்து நாட்கள் எப்படி ஓடியதென்றே தெரியவில்லை.. நாட்கள் இறக்கை கட்டிப்பறப்பது போல இருந்தது.. இருவருக்கும் இரவுகள் இன்னும் நீளாதா என்ற ஏக்கம் இருக்க எப்படி ஒருவர் மேல் ஒருவர் இப்படி பைத்தியமாக மாறினோம் என்பதே விந்தையாக இருந்தது.. அவனது ஒவ்வொரு செய்கையும் அவளுக்கு பிடித்தது..
அதற்காக தன்னுடைய மற்ற குணங்களை அவள் மாற்றிக் கொள்ளவில்லை.. அவனும் அதை விரும்பவில்லை ரமலியை அவளாகவே ஏற்றுக் கொண்டான்.. அவள் கோபத்தில இவன் தழைவதும் இவன் கோபத்தில் அவள் வளைவதுமாக இருக்க ஊர் திருவிழாவும் வந்தது.. இதற்கிடையில் ரமலி சொன்னதுபோல இவர்கள் பக்கம கேஸ் ஜெயித்து கோர்ட் சொத்துக்களை ஒப்படைக்க சொல்லியிருக்க இதில் அடுத்த வாரம் அவர்கள் மகன்களுக்கு தீர்ப்பு வேறு.. எந்த பக்கமும் செல்ல முடியாத நிலை .. கேஸ் இவர்களுக்கு சாதகமாக இல்லை.. ஜெயில் தண்டனை உறுதி போல தெரிய மேல் கோர்ட்க்கு கூட செலவழிக்க பணம் இல்லை.. நடுத்தரத்திற்கும் கீழாக இறங்கியிருந்தார்கள்..
சக்தியும் ரமலியும் திருவிழாவிற்கு முதல் நாளே வந்திருக்க வீடே களைகட்டியது.. அனைவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.. அங்கு ஏழுர் செவ்வாய் சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஏழு கிராமமும் சேர்ந்து அங்கு ஒரே இடத்தில் பொங்கல் வைக்க அப்படி ஒரு நிகழ்வை பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.. அடுத்தடுத்து அடுப்பு வைத்து இரண்டாயிரம் மூவாயிரம் அடுப்புக்கள் வைக்க கம்பு கட்டியிருக்க அனைவருக்கும் டோக்கன் கொடுக்கப்பட்டு பொங்கல் வைத்து கிடா வெட்டினார்கள்..
அந்த காலங்களில் அங்குதான் பெண் பார்க்கும் வைபவம் நடந்திருக்கும் போல, எல்லாக் குடும்பங்களும் அங்கிருக்க சொந்தங்கள் விசாரிக்கப்பட்டு பெண் பார்க்கும் நிகழ்வுகளும், ஒரு பக்கம் இளைஞர்கள் பட்டு பாவாடை, தாவணியிலும், பட்டுச் சேலையிலும் சுற்றும் வயது பெண்களை பார்வையிடவென அடடா அவ்வளவு கலர்புல்லாக, கலகலப்பாக அந்த இடம் மாறியிருக்க சக்தி குடும்பமும் இதில் கலந்திருந்தது..
பெரிய பெரிய ஓலைப் பெட்டிகளில் அடுப்பு ,பானை ,அரிசி, வெல்லம் என பொங்கல் வைக்க எல்லாப் பொருட்களையும் எடுத்து தலையில் வைத்து அப்பத்தா கொண்டு வந்திருக்க மலருக்கும் ரமலிக்கும் இவை அனைத்தும் புதிதாக இருந்தது.. இருவரும் பட்டுச் சேலைக்கட்டி கழுத்து நிறைய நகைகளோடு புதுமருமகள்களாக சொந்தங்களிடம் அறிமுகப்படுத்தப்பட சக்தியும் வெற்றியும் பட்டு வேட்டிச் சட்டை அணிந்திருந்தனர்,, திருமணத்திற்கு வராத பெரியவர்களிடம் ஆசிர்வாதமும் வாங்கிக் கொண்டனர்..
அப்பத்தாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி சென்ற வருடம் வரை தானும் தன் மகனும் சக்தியோடு வந்திருக்க வெற்றி வரவே மாட்டான்.. வசந்தாவுக்கு வரமுடியாமல் வீசிங் அதிகமாகும் நேரங்களில் வெற்றியோ ராமலிங்கமோ அவருக்கு துணையாக வீட்டிலும் இருந்து கொள்வார்கள்.. ஆனால் இன்று தன் பேரன் மனைவிகளோடு வந்திருக்க அவர்களின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்து இவரும் மகிழ்ந்திருந்தார்.. ரேணுகாவும் அப்பத்தாவும் பொங்கல் வைக்க பெண்கள் இருவரும் உதவியபடி இருந்தனர்..
சக்தியும் வெற்றியும் சில சொந்தங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களோடு பேசிக் கொண்டிருக்க சக்தியின் நண்பர்கள் குழுவும் இணைந்திருந்தது.. இப்போது வெற்றியும் அந்த நண்பர்கள் குழுவில் ஒருவனாக இருந்தான்.. அனைவரும் பொங்கல் வைத்து கிடாய் வெட்டி அம்மனை தரிசித்து வீட்டிற்கு வரவே மணி ஏழாயிற்று.. சமையலுக்கு ஆள் விட்டிருக்க அங்கு வேலை ஜரூராய் நடந்து கொண்டிருந்தது.. சக்தியும் வெற்றியும் தத்தம் மனைவிகளோடு ஊரைச் சுற்றிப்பார்க்க கிளம்பி திருவிழாக்கடைகளை பார்வையிட்டு கொண்டிருந்தனர்..
ரமலிக்கு இதத்தான் இப்ப பெரிய பெரிய ஊர்ல விண்டோ ஷாப்பிங்ன்னு சொல்றாங்களோ என்று தோன்ற, இருவரும் சில பொட்டுக்கள், கிளிப்கள், வளையல்கள், டிசைன் டிசைன் தோடுகள் என பார்த்து வாங்கி கொண்டிருக்க சக்தி அங்கு வந்த தன் உறவு பெண்களிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான்.. ராட்டினத்தை பார்க்கவும் ரமலி ஒவ்வொன்றிலும் கண்டிப்பா ஏற வேண்டும் என அடம்பிடித்து சக்தியோடு எல்லாவற்றிலும் ஏறியிருந்தாள்..
மலருக்கு ராட்டினம் சுற்றுவதை பார்த்தாலே தலை சுற்றுவது போலிருக்க வெற்றியும் மலரும் மெல்ல நடக்க ஆரம்பித்தனர்.. வெற்றி அவள் தோளில் கைப்போட்டு கூட்டமான இடங்களில் இன்னும் நெருக்கமாக அவளை பாதுகாத்து அவள் வயிற்றில் யாரும் இடித்துவிடாத அளவுக்கு மெதுவாக அழைத்து வந்தான்.. ரமலிக்கு சந்தோசம் தாங்கவில்லை.. இது போல அவள் முன்பெதுவும் அனுபவித்ததில்லை.. சிறு சிறு விசயங்கள்கூட அவளுக்கு மகிழ்ச்சியை கொடுக்க சக்தியும் அந்த மகிழ்ச்சியில் பங்கு கொண்டான்..
இரவு மணி பதினொன்றிருக்கும்.. அந்த இடத்தில் அவ்வளவு ஒரு அமைதி கபடி போட்டி நடந்துக் கொண்டிருந்தது.. எப்போதும் போல நண்பர்கள குழுவும் கபிலன் அணியும் மோத அவர்களில் பாதி பேர் சக்தி கம்பெனிகளில்தான் வேலைப்பார்த்தார்கள்.. சென்ற முறை போல இல்லாமல் இந்த முறை இந்த போட்டி ஆரோக்கியமானதாக இருக்க இப்போது சக்தி அங்கு
தன் மூச்சை விடாமல் கபடி பாடிக்கொண்டிருக்க பார்வையாளர்கள் மத்தியில் அப்படி ஒரு நிசப்தம்.. ரமலி தன் கவனத்தை கணவன் மேல்தான் வைத்திருந்தாள்.. அவனை பார்வையால் ரசித்தபடி இருக்க எதிரணியில் மூவர் மட்டுமே இருந்தனர் அவர்களை அவுட் செய்தால் இவர்கள் ஜெயித்துவிடலாம்.. இவளுக்குமே டென்சனாக இருந்தது நகத்தை கடித்தபடி அவனையே கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க,
ஏற்கோட்டை தொட்டவன் மெதுவாக வருவது போல பின்னால் வந்து சட்டென ஓடி ஒருத்தனை அவுட் செய்ய மற்ற இருவரோ அவன் இருபுறமும் வந்து அவனை பிடித்துக் கொண்டனர்.. மற்றவன் அவன் காலை வாரிவிட வர இந்த இருவரையும் தன் பலத்தால் பின்னுக்கு தள்ளியவன் ஒரு காலை அந்த கோட்டில் வைத்திருந்தான்..
பலமான கைதட்டும் ஓசைக் கேட்க எதிரணியில் இருந்தவர்கள் உற்சாகமாகவே அவனிடம் வந்து கைகொடுத்து வாழ்த்துக்களை சொல்லிச் சென்றார்கள்.. தன்னுடைய வேட்டி சட்டையை அணிந்து வந்தவன் மேடையில் கொடுத்த பரிசு கோப்பையை தன் நண்பர்களோடு சென்று வாங்கிக் கொண்டு செல்பி எடுத்து உற்சாகத்தோடு வர ரமலி அவனுக்கு கைகொடுத்து தன் வாழ்த்தை தெரிவித்தாள்..
இரவு வெகுநேரமாகிவிட்டதால் மலரை அப்பத்தா விடவில்லை.. சக்தியும் மலரும் ஒருவரை ஒருவர் கைகோர்த்தபடி பேசிக் கொண்டு வர தங்கள் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த ராமலிங்கத்திற்கு இவர்கள் இருவரின் ஜோடிப் பொருத்தம் கண்ணை நிறைத்தது.. சக்திக்கு இந்த பொண்ணுதான் சரி இவனோட குணத்துக்கும், ஆளுமைக்கும் அந்த பொண்ணோட தைரியத்துக்கும் சரியா வரும்.. வெற்றிக்கும் மலரை தவிர வேற பொண்ண கல்யாணம் பண்ணியிருந்தா அவன் இப்படி மாறியிருப்பானா அது சந்தேகம்தான் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தார்..
தந்தையை பார்க்கவும்,” என்னப்பா இங்க உட்கார்ந்திருக்கிங்க.. உள்ள போய் படுக்கலையா..?”
“இல்ல தம்பி தூக்கம் வரலை.. மைக்கில உங்க விளையாட்டு போட்டிய கேட்டுட்டு இருந்தேன்..”
“வாங்கப்பா பனி கொட்டுது..” அவரை உள்ளே அழைத்து வந்தவன் அவருக்கும் தங்களுக்கும் கொஞ்சம் பாலை காய்ச்சி அவரிடம் ஒரு டம்ளரை கொடுத்தவன் தனக்கும் ரமலிக்கும் அறைக்கே கொண்டு வந்தான்.. அதற்குள் நைட்டிக்கு மாறியிருந்தவள் அவனிடம் பாலை வாங்கிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தபடி,
“செமயா விளையாடுற சக்தி.. ச்சோ.. இல்ல இல்ல மாமா..”
“ஹாஹாஹா வரலைன்னா விடுடி.. தனியா இருக்கும் போது நீ நீயாவே இரு..”
“இல்ல பரவாயில்ல மாமா.. அம்மாச்சியும் அம்மாவும் ரொம்ப ஸ்ரிக்டா சொல்லிட்டாங்க. நான் இப்படியே கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கிறேன்.. இல்லனா இதுவே நாம வெளியில இருக்கும் போதும் வந்திரும்.. அது சரிவராது.. கொஞ்சம் கஷ்டமாயிருந்தாலும் நான் பழகிக்கிறேன்..” அவனை பார்த்து கண்ணடிக்க,
“ஏய் கேடி.. இதோ வரேன்டி ..”அவள் மேல் படர்ந்தவனின் தோள்களை தொட்டு தடவிப் பார்த்தவள்..
“ப்பா செமயா இருக்கிங்க.. அவனுகள தூக்கி அப்படியே போட்டுட்டிங்க.. நான்கூட நீங்க அவுட்டாகிருவிங்களோன்னு நினைச்சேன்.. சூப்பர் சூப்பர் மாமா..”
அவள் கைகளின் வருடல் அவனுக்கு இன்னும் ஆசையை தூண்ட அங்கு இருவருக்குமிடையே ஒரு கபடி விளையாட்டு ஆரம்பமானது..
அடுத்தடுத்த நாட்கள் எப்படி ஓடியதென்றே தெரியாமல் மலரை பிரசவத்திற்காக மதுரைக்கு அழைத்து வந்திருக்க ரமலி இங்கு கிராமத்தில் இருந்தாள்.. இருவரும் ஒரே நேரத்தில் தாய்மை அடைந்திருப்பதால் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளக் கூடாது என்று சொல்லியிருக்க ரமலிக்கு இது ஆறாம் மாதம்.. வளைகாப்பு முடிந்து டாக்டர் கொடுத்த தேதி இரண்டு நாட்கள் இருக்கும் போது மலரோடு வெற்றி ராமலிங்கம் அனைவரும் மதுரைக்கு கிளம்ப சக்தியும் ரமலியும் கிராமத்திற்கு வந்திருந்தனர்..
என்னவோ ரமலிக்கு சக்தி இங்கே இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பது போல தோன்ற வாரத்தில் இரண்டு நாட்களாவது இங்கு வந்துவிடுவார்கள்.. வீட்டையும் இடித்து சற்று பெரிதாக கட்ட பிளான் போட்டிருக்க அப்பத்தா இருவருக்கும் பிள்ளை பிறந்த பிறகுதான் என்று சொல்லிவிட்டார்.. அடுத்த இரண்டு நாட்களில் மலருக்கு ஆண்குழந்தை பிறந்திருக்க அனைவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.. வெற்றியை கையில் பிடிக்க முடியவில்லை.. அப்படியே வெற்றியின் ஜெராக்ஸாக பிறந்திருந்தான்..
கைகாலெல்லாம் அவ்வளவு மென்மையாக டாக்டர் அவன் கையில் கொடுத்த குழந்தையை வாங்கியவனுக்கு அந்த உணர்வை விவரிக்க வார்த்தையில்லை.. கண்ணை மூடியிருந்த அவன் மகன் வெளிச்சம் படவும லேசாக ஒரு கண்ணை திறந்து பார்க்க வெற்றி கண்சிமிட்டாமல் தன் மகனைத்தான் பார்த்திருந்தான்.. ரோஸ் நிறத்தில் பூனை முடிகளோடு குட்டி குட்டி கைகால்களோடு அவன் மகன் .. அந்த சந்தோசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவன் குழந்தைக்கு வலிக்குமோ என்பதுபோல மென்மையாக முத்தமிட்டு மகனை தன் தந்தையிடம் கொடுத்துவிட்டு மனைவியை பார்க்கச் சென்றிருந்தான்..
வாடிய கொடி போல பெட்டில் படுத்திருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டவன் “தேங்க்ஸ்டா அம்மு..”
“அத்தான் பாப்பா நல்லாயிருக்கானா ..யார் மாதிரி இருக்கான்..”
அவள் கலைந்திருந்த முடியை சரி செய்தவன் ,”எப்ப பார்த்தாலும் அத்தானயே சைட் அடிச்சு முத்தம் குடுத்துட்டு இருந்தா யார் மாதிரி பிறப்பான்.. என்னை மாதிரிதாண்டி…” அதில் அவனுக்கு அவ்வளவு பெருமை..
ஏழு வருடங்கள் கழித்து,
சக்தியும் வெற்றியும் வந்தவர்களை கவனித்து சாப்பிட செல்ல சொல்லிக் கொண்டிருக்க ரமலியும் மலரும் தங்கள் பிள்ளைகள் பின்னால் அலைந்து கொண்டிருந்தனர்.. சக்தி ரமலிக்கு ஆறு வயதில் ஒரு மகனும் மூன்று வயதில் ஒரு மகளும் இருக்க வெற்றி மலருக்கு ஏழு. நான்கு வயதில் இரு மகன்கள்.. இவர்களுக்குத்தான் இன்று காதுகுத்து விழா.. மகன்கள் மூவரும் சற்று பெரியவர்களாக இருந்ததால் காது குத்து முடிந்தவுடன் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.. சக்தி மகளுக்குத்தான் காதில் இருந்த தோடு ஏதோ போலிருந்தது போல அதை தொட்டு தொட்டு பார்த்து அழுது கொண்டிருக்கயார் தூக்கினாலும் அழுகையை நிறுத்தவில்லை..
அண்ணன்கள் மூவரும் ஏதேதோ விளையாட்டு காட்டினாலும் முடியாமல் ரமலிக்கு கோபம்,” இப்ப வாய மூடுப்போறியா என்ன..?”
அடிக்கப்போக அவள் கையை பிடித்த சக்தி தன் மகளை தூக்கிக் கொண்டு ரமலியை முறைத்தபடி சற்று தள்ளி கொண்டு போய் விளையாட்டுக் காட்ட சற்று நேரத்தில் அவள் அழுகை நின்றுவிட்டது..