இணை தேடும் இதயங்கள்
                              அத்தியாயம்  –  14
                                  
சக்தியை அடையாளம் கண்டு அவனிடம் ஓடிவந்து கொண்டிருந்த மலர் அவனை வேகமாக மோத வந்த காரை கண்டதும் இன்னும் வேகமாகி கைக்கெட்டிய அவன் பின் சட்டையை பிடித்து இழுக்க தன்னை திடிரென பின்னால் இழுக்கவும் தன் நிலை தடுமாறிய சக்தி அங்கிருந்த பெரிய மரத்தின் வேர் தட்டி பின்னால் சாய்ந்தவன் பின் தலை வேகமாக  அந்த மரத்தில் மோதவும் மயக்கத்திற்கு சென்றிருந்தான்..
 
மலர் காலையில் இருந்து சாப்பிடாமல் விரதமாக இருந்தவள் கிரிதரன் தன்னை விரட்டியதால் ஏற்கனவே களைத்துபோய் இருந்தாள்.. இருந்தாலும் இருந்த தன் சக்தியையெல்லாம் திரட்டித்தான் சக்தியை இழுத்தாள்.. தன்னால் அவனை இழுக்க முடியுமா என்றெல்லாம் யோசிக்காமல் தன் முழு பலத்தையும் பயன்படுத்தியவள் அவனோடு சேர்ந்து இவளும் கீழே விழுந்ததில்  இவளும் மயக்கத்திற்கு சென்றிருந்தாள்..
 
காரை வேகமாக செலுத்தி வந்த கௌசிக் சரணை மோதபோனவன் அவன் பின்னால் நகரவும் சரணிற்கு நேராக நின்றிருந்த கிரிதரனை மோத அவன் தூக்கி வீசப்பட்டு அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் மிதந்தான்.. அந்த இடத்திலேயே அவன் உயிர் போயிருந்தது.. இப்படி வேறு ஒருவனை இடிப்போம் என நினைக்காதவர்கள் சட்டென அந்த இடத்திலிருந்து காரை வேகப்படுத்த,
 
 கிரிக்கும் சக்திக்கும் சண்டை நடக்கும்போதே ஆங்காங்கே நின்றிருந்த ஒருசிலர் அவர்களை நோக்கி வந்துகொண்டிருக்க  இந்தகார் வேண்டுமென்றே அவர்களை மோதி விபத்தை உண்டாக்கவும் அனைவரும் அப்படியே ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி நின்றிருந்தார்கள்..
 
 அதில் சுதாரித்த இளைஞன் ஒருவன் அங்கு கீழே கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்து கௌசிக்காரின் முன்கண்ணாடியை நோக்கி குறிபார்த்து எறிய அது குறிதவறாமல் அவர்கள் கண்ணாடியை பதம் பார்த்திருந்தது..
 
கண்ணாடி உடையவும் நிலைதடுமாறி ரோட்டிலிருந்து விலகி அந்த கார் பள்ளத்தில் விழுந்திருக்க அங்கிருந்தவர்கள் காரிலிருந்து கௌசிக்கையும் அவன் தம்பியையும் பிடித்துக் கொண்டனர்.. சிலர் போலிஸ்க்கு போன் செய்ய, சிலர் 108க்கு போன் செய்தனர்
 
அதற்குள் அந்த இடத்திற்கு வந்திருந்த வெற்றி அண்ணனை பார்க்கவும் அவனால் நம்பமுடியவில்லை..கண்ணை கசக்கிவிட்டு அண்ணன்தானா என அருகில் சென்று உறுதிசெய்து கொண்டவன் சக்திக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் முழுமையாக கிடைத்தது அப்படி ஒரு நிம்மதி ..சந்தோசம் தாங்கவில்லை..கண்ணீருடன் அவனை கட்டி அணைத்தவன் ,”டேய் அண்ணா.. அண்ணா என்று உலுக்கியவன் அவன் கண்விழிக்காமல் கிடக்கவும் அவன் தலையை மடியில் வைத்தபடியே பக்கத்தில் மயங்கி கிடந்த மலரின் கன்னத்தைதட்டி ,”மலர் மலர் என எழுப்பிக் கொண்டிருக்க அதற்குள் ரேணுகாவும் தன் மருமகனை நெருங்கியிருந்தார்..
 
அவனிடம் வந்தவர் பதறியபடி,” தம்பி என்னாச்சு.. ஐயோ கடவுளே எழுந்திருங்க ..” சரணிண் தோளில் கைவைத்து மெதுவாக அசைக்க வெற்றி அவரை பார்த்தவன் இவங்க யாருன்னு தெரியலயே ஒருவேளை இத்தனநாளு அண்ணன் இவங்களோடத்தான் இருந்திருக்குமோ…
 
ரேணுகாவோ வெற்றியை பார்த்து,” என்ன தம்பி பார்க்கிறிங்க அந்தா எங்க கார் இருக்கு ரெண்டு பேரையும் தூக்குங்க ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்..?” வேகமாக சென்று கார்கதவை திறக்க சக்தியை தூக்கிவந்து பின்சீட்டில் ஏற்றியவன் மலரை முன்புறமாக ஏற்றி அங்கு மயங்கி கிடந்த அப்பத்தாவின் முகத்தில் தண்ணீரை தெளித்தவன் அவர் லேசாக முனங்கி கொண்டிருக்க அவரை பார்க்க நேரமில்லாமல் அப்பத்தாவையும் ரேணுகாவையும் வேறுகார் பிடித்து அதில் வரவழைத்திருந்தபடி இவன் அவர்களின் காரை செலுத்தியிருந்தான்..
 
 அங்கு அருகில் இருந்த ஹாஸ்பிட்டலுக்கு செல்லும் வழியில் தண்ணீரை முகத்தில் தெளித்ததால் அப்பத்தாவிற்கு நினைவு திரும்பியது.. வெற்றி மலர் என கத்தியதால் அவளுக்கு என்னவோ ஏதோவென்று மலர் மலர் என சத்தமாக அழவும் ரேணுகாவோ அந்த பொண்ணடோ சொந்தகாரங்க போலவென நினைத்தவர் ,
 
ஒன்னும் கவலைப்படாதிங்க லேசான மயக்கம்தான் ஒன்னும் பிரச்சனை இருக்காது..?” என அவருக்கு ஆறுதல் சொன்னாலும் இப்படி கோவிலுக்கு வந்த இடத்தில இப்படி ஆயிருச்சே கடவுளே மருமகனுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என கடவுளை வேண்டியபடி வந்தார்..
 
இவர்கள் கார் போவதற்குள் வெற்றி இருவரையும் ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்க வெற்றியை பார்க்கவும் அவனை கட்டிக் கொண்டு அப்பத்தா அழ ஆரம்பித்துவிட்டார்.. என்ர பேத்திக்கு ஒன்னும் ஆகாதே ராசா.. கடவுளே உனக்கு கண் இல்லையா எங்களையே ஏன் இப்படி சோதிக்கிற என் பேரன திருப்பிக் கொடுன்னுதானே வேண்ட வந்தோம் இப்ப என் பேத்திய படுக்க வைச்சிட்டியே..?” கடவுளை திட்டிக் கொண்டு இருக்க.. வெற்றி தன் அப்பத்தாவின் வாயை அடைத்தவன் அவரை இறுக அணைத்தபடி,
 
அப்பத்தா அண்ணனும்தான் மலரோட உள்ள இருக்கு.. 
 
சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவர் தன் நெஞ்சில் கைவைத்து ,”என்னடா சொல்ற நம்ம சக்தியா… என்ர பேரனா.. என்ர ராசாவா.. என்ர தங்கப்பிள்ளையா உள்ள இருக்கு..” சந்தோசம் தாங்கவில்லை…கையை வானத்தை நோக்கி கும்பிட்டு கடவுளை வணங்கியவர் ,”ஐயா பாண்டி ஐயா என்ர பேரன என்கிட்ட கொடுத்திட்ட நான்  வேண்டுனபடி ரெட்டைகிடாயும் என் தலைமுடியையும் உனக்கு காணிக்கையா குடுத்திருறேன்பா..
 வெற்றியின் கையை பிடித்தவர் அவன்தான் கடவுள் போல அவனை பார்த்து ரெண்டுபேருக்கும் ஒன்னும் ஆகாதுதானே..” கண்ணீரும் நிற்கவே இல்லை.. ரேணுகாவிற்கு ஒன்றும் புரியவில்லை.. இவங்க யாரைபத்தி பேசுறாங்க..
 
டாக்டர் வெளியில் வர அனைவரும் அவரை நோக்கி ஓடினர்… வெற்றி,” டாக்டர் ரெண்டுபேருக்கும் ஒன்னும் பிரச்சனையில்லையே..??”
 
நோ நோ ரெண்டுபேரும் கண்விழிச்சிட்டாங்க அந்த பொண்ணுதான் கொஞ்சம் வீக்காயிருக்கு டிரிப்ஸ் ஏறுது அது முடியவும் ரெண்டுபேரையும் கூட்டிட்டு போகலாம்.. இப்ப போய் அவங்கள பாருங்க..” அவர் அடுத்த பேஷன்டை பார்க்கச் செல்ல மூவரும் ஒன்றாக உள்ளே நுழைந்தார்கள்..
 
இருவரும் பக்கத்து பக்கத்து பெட்டில் படுக்க வைக்கப்பட்டிருக்க மலருக்கு கையில டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது.. மூவரும் சக்தி இருந்த பெட்டிற்கு சென்றவர்கள் சரண் மெல்ல கண்விழித்தவன் பழைய சக்தியாக மாறியிருந்தான்.. வெற்றியை பார்க்கவும் வெற்றி..” என கையை நீட்டியவன்  பின்புறம் நின்ற அப்பத்தாவை பார்த்தவுடன் மெதுவாக நிமிர்ந்து உட்கார்ந்து..” அப்பத்தா..” என கையை நீட்ட அவருக்கு சந்தோசத்தில் பேச்சே வரவில்லை.. அவன் கையை தன் கண்ணில் ஒற்றிக் கொண்டவர் சிறுகுழந்தை போல தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்..வெற்றியும் கண்ணீரோடு அவனை இறுகி அணைக்க அண்ணன் தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் தழுவியிருந்தார்கள்..
 
சரண் கண்விழித்துவிட்டான் ஒன்றும் பிரச்சனையில்லை என்றதும் சந்தோசமாக வந்திருந்த ரேணுகாவிற்கு இங்கு நடப்பதை பார்த்து அதிர்ச்சி.. ஒன்றும் புரியாத நிலை..தன்னை நிமிர்ந்துகூட பார்க்காமல் அவர்களை மட்டுமே பார்த்து பேசிக் கொண்டிருந்த மருமகனையே பார்த்தவர் இவர் பேர் சரணில்லையா.. சக்தியா..அப்ப இவருக்கு சொந்தகாரங்க எல்லாரும் இருக்காங்களா.. நாம கேட்டதுக்கு ரமலி இவருக்கு யாருமே இல்லைன்னு சொன்னாளே.. அப்ப நாம நினைச்சமாதிரி ரமலி பொய் சொல்லித்தான் இந்த கல்யாணம் நடந்துச்சா.. அப்ப இவர் இவ்வளவுநாள் நம்ம மருமகனா நடிச்சாரா.. ஒருநிமிடத்தில் இந்த உலகையே சுற்றிவந்த அவர் மனதிற்கு நடப்பதை ஏற்று கொள்ளமுடியாத அப்படியொரு உறைந்தநிலை..
 
அப்பத்தா அழவும் தாங்காத சக்தி வெற்றியை அணைத்தபடியே மறுகையால்  அப்பத்தாவையும் அணைக்க மூவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி… அப்பத்தாவிற்கு இந்த நிமிடத்தை எப்படி கையாளுவது என்றே தெரியவில்லை..
 
 தன் செல்ல பேரன் வந்துவிட்டானா.. இத்தனைநாள் வருத்தத்தை எல்லாம் தன் அழுகையால் கரைத்து கொண்டிருக்க அவர் அழுவதை பொறுக்காதவன் அவரை நிமிர்த்தி கண்ணைத்துடைத்துவிட அவர் தன் கைகளால் அவன் முகம்முழுவதும் வருடினார்.. அவனுக்கு ஒன்னுமில்லை என்று தெரிந்ததும்தான் கொஞ்சம் நிம்மதி.. மூவரிடமும் பேச்சே இல்லை..
 
 இந்த மூவரின் பாசப்போராட்டத்தை பார்த்தபடி கண்ணீல் நீர்வடிய படுத்திருந்த மலர் லேசாக திரும்பிபடுக்க அந்த அசைவில் தன் சுயநினைவிற்கு வந்த வெற்றி அண்ணன் கையை பிடித்தபடியே மலரின் அருகில் சென்றவன்,” உனக்கு ஒன்னுமில்லதான அவள் கலைந்திருந்த தலைமுடியை ஒதுக்கியபடி கேட்க அப்பத்தாவும் இப்போது மலரைத்தான் பார்த்தார்..
 
ஆத்தா தங்கம் உனக்கு ஒன்னுமில்லதானத்தா..?”
 
இல்ல அம்மாச்சி… மலரை யாரென்ற புதிய பார்வை பார்த்த சக்தியை பார்த்தவர் என்ன ராசா இப்படி பார்க்கிற.. இவதான் உன் அத்தை மக மலரு..??”
 
மலரா.. ஆச்சர்யமாக அவளை பார்த்தவன்.. ஏய் குள்ளக்கத்திரிக்கா அப்ப சின்னப்புள்ளைள கத்திரிக்காய்க்கு கைகால் முளைச்சமாதிரி குண்டுகுண்டுன்னு இருப்ப இப்ப என்னாச்சு இப்படி மெலிஞ்சு போயிட்ட..??”
 
போங்கத்தான்.. அவள் அழகாக வெட்கப்பட அவளையே முழுங்குவது போல பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி..
 
இப்போதுதான் அப்பத்தாவுக்கு பின்னால் நின்றிருந்த ரேணுகாவை பார்த்த சக்தி அறியாத பார்வை ஒன்றை அவரை பார்த்தபடி வெற்றியை பார்க்க,” என்னண்ணா இப்படி பார்க்கிற.. இவங்களோடதான் நீ இத்தனநாள் இருந்த போல..?”
 
அப்படியா எனக்கு ஒன்னுமே நியாபகம் இல்லையேடா.. ரொம்ப நன்றிங்க..” கையெடுத்து கும்பிட ரேணுகா தனக்குள் சில்லுசில்லாய் உடைந்திருந்தார்..
 
எல்லாரும் இங்க எப்படிடா அம்மா அப்பாவெல்லாம் நல்லாயிருக்காங்களா…?” சக்தியின் கேள்விக்கு இதுவரை இருந்த மகிழ்ச்சி சட்டென மறைய அனைவரின் முகமும் ஒரு வேதனைக்கு மாறியிருந்தது.. மலருக்கு டிரிப்ஸ் முடிந்திருக்க நர்ஸ் வந்து அவளை சோதித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பலாம் என சொல்லி செல்லவும் ,
 
அப்பத்தா மீண்டும் தன் அழுகையை துவக்க ஆரம்பிக்க சட்டென அவர் கையை பிடித்த வெற்றி அவரை தன்புறம் இழுத்து மெதுவாக அவர் காதிற்குள் ,”அப்பத்தா அண்ணன ஊருக்கு கூட்டிட்டு போயிருவோம் அங்க வைச்சு சொல்லிக்கலாம்.. இப்பத்தான் நம்மகிட்ட வந்திருக்கு மயக்கம் வேற போட்டுவிழுந்திருக்கு.. அதோட உடம்பு சூழ்நிலையை பார்த்துக்கிட்டு சொல்லலாம் .. இப்ப கொஞ்சநேரம் சும்மா இருங்க..
 
அவரை அதட்டவும் சட்டென அழுகையை அடக்கி வேதனையை தனக்குள்  மறைத்து பேரனின் உடல்நிலையை கவனத்தில் கொண்டவர்.. சத்தமாக வெற்றியிடம்,” டேய் என் மகன்கிட்ட சொல்லுடா அண்ணன பார்த்திட்டோம்னு..” பேச்சை மாற்ற அனைவரும் ஹாஸ்பிட்டலை விட்டு வெளியில் வந்திருந்தனர்..
 
அப்பத்தா ரேணுகாவை  தன் வீட்டிற்கு அழைத்தார்.. இம்புட்டுநாளு என் பேரன பத்திரமா பார்த்துக்கிட்டிங்க ஒரு எட்டு எங்க வீட்டுக்கு வந்திட்டு போனா நாங்க ரொம்ப சந்தோசப்படுவோம்..
 
 ரேணுகாவிற்கு தான் இப்போது என்ன செய்யவேண்டும் என்பதே மறந்துவிட்டது.. இவங்க என்னன்னமோ சொல்றாங்களே என்ன நடக்குது கண்டிப்பா சரண் இல்லாமல் அவரால் வீட்டுக்கு போகமுடியாது..தன் மகள் வாழ்க்கையே இவர்கையில்தான் என்ன செய்வது… எப்போது சரண் அவரை கையெடுத்து கும்பிட்டானோ அப்பதே அவருக்கு பாதி உயிர் போனது போல இருந்தது.. இவர்கள் கூப்பிடாட்டாலும் அவர் அங்கே போய்தான் இருப்பார்..