இமை – 1
“கெட்டிமேளம்….. கெட்டிமேளம்…..” ஐயரின் குரலைத் தொடர்ந்து ஒலிக்கத்தொடங்கிய மங்கள வாத்தியங்களின் இசை மண்டபத்தை நிறைக்க, அனைவரின் கைகளும் மணமக்களின் மீது அட்சதையைத் தூவி வாழ்த்துவதற்குத் தயாராக, மணப்பெண் பவித்ராவின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்து தாலிக்காய் காத்திருக்க, மாங்கல்யத்தைக் கையில் பிடித்திருந்த மணமகன் மித்ரனோ ஒரு நொடி தயக்கத்துடன் அவள் முகம் நோக்கினான். அவள் கண்கள் நாணத்தில் நிலம் பார்த்திருக்க அழகிய முகமோ புன்னகைக்கும் செந்தாமரையாய் மலர்ந்திருந்தது.
“மித்ரா…. என்ன யோசிக்கறே…..” அவனது அன்னை மீனலோசனி காதில் கிசுகிசுக்கவும், அடுத்த நொடி அவனது முகத்தில் ஒரு அலட்சிய பாவம் வந்திருக்க, கைகள் அவள் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டு கடமையை முடித்துக் கொண்டன.
 
“குங்குமம் வச்சு விடுங்கோ…..” ஐயர் சொல்லவும் அவளை ஏறிட்டவன், அகண்ட கரிய மையிட்ட விழிகளோ நிலம் பார்க்க, முகமோ சிவந்திருக்க, மணப்பெண்ணின் சர்வ லட்சணத்துடன் நின்றவளைத் திகைப்புடன் பார்த்தவன் மறுநொடியே, உதட்டைச் சுழித்துக் கொண்டு அமைதியாய் சடங்குகளை  செய்து முடித்தான்.
 
அதற்குப் பிறகு ஐயர் சொன்ன சடங்கு சம்பிரதாயம் எல்லாவற்றையும் கடமையே என்று செய்து கொண்டிருந்தவனை அருகில் நின்ற பவித்ராவின் கண்கள் மெல்ல ஏறிட்டு நோக்கியது. அவனது மாங்கல்யம் கழுத்தில் ஏறும்வரை அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்தவள் தனக்கு தாலி தந்த மணாளனைக் காண மெல்ல கண்களை உயர்த்தினாள். அவளது பெரிய கண்கள் ஆச்சர்யத்தில் மேலும் விரிந்தன. மனம் சிறகை விரித்து பழைய நாட்களுக்கு சென்று நினைவடுக்கில் ஒளிந்து கொண்டிருந்த அவன் முகத்தை கண்டெடுத்தது.
 
சின்ன வயதில் மிகவும் மெலிந்து உயரமாய் மீசை முளைக்கத் தொடங்கிய சமயத்தில் கண்டு பதிந்த அவனது முகம் இப்போது வாட்டசாட்ட வாலிபனாய் உயரத்துக்கு தகுந்த உடல்வாகுடன் கட்டி மீசையுடன் கண்ணில் விழவும், விழிகள் வியப்பில் விரிந்தன.
 
அருகில் நிற்பவன் அவன்தானா என்று நம்ப முடியாமல்  அவள் பார்த்துக் கொண்டிருக்க, அவனோ ஐயர் சொல்லும் மந்திரத்திலும் வருபவர்களின் மீதுமே பார்வையைப் பதித்திருந்தான். என்றோ மனதுக்குள் தொலைத்திருந்த எதிர்காலம் பற்றிய ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் அவனைக் கண்டதும் சடசடவென்று அவளுக்குள் உயிர்தெழுந்து ஒரு சந்தோஷத்தைக் கொடுப்பதை உணர்ந்தாள்.
அவனது ஒரு பார்வைப் ஸ்பரிசத்திற்காய் பெண் மனம் சிணுங்கியது. தன் மனதுக்குப் பிடித்த ஆண்மகனே மணவாளனாய் அருகில் நிற்பதை நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தன்னைப் பார்ப்பதை அவன் உணர்ந்தே இருந்தான்.
 
“எதற்கு இப்படிப் பார்க்கிறாள்…” யோசனையுடன் அவள்மீது ஒரு பார்வையை எறிந்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான் மித்ரன். அடுத்து அக்னியை வலம் வந்து அன்னையிடமும், மீனாவின் அண்ணன், மித்ரனின் மாமா சோமசுந்தரம், அத்தை சுந்தரி காலில் விழுந்து வணங்கினர். பவித்ராவின் மாமா குணசேகரன், மித்ரனைக் கண்டதும் தங்கை மகளுக்கு ஒரு வாழ்க்கை அமைந்த சந்தோஷத்துடன் மருமகளை வாழ்த்த அவர் மனைவி கோமதியும் பேருக்கு அவருடன் நின்று வாழ்த்தினார்.
 
அளவான அலங்காரத்தில், அதிகமாய் நகை இல்லாமல், கோமதி பிறந்த வீட்டு சார்பாய் வாங்கிக் கொடுத்த விலை குறைந்த பட்டு சேலையிலும் தேவதையாய் ஜொலித்த பவித்ராவை அசூயையுடன் நோக்கி நின்றனர் கோமதியின் புத்திரிகளான கீதாவும், ராதாவும். “அனாதையா கிடந்த இவளுக்கு வந்த வாழ்க்கையைப் பாரேன்……” பொறாமையை மனதில் தாங்கி, உதட்டில் போலி புன்னகையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.
 
பவித்ரா பெயருக்கு ஏற்ற நல்ல சுபாவங்கள் நிறைந்த பவித்திரமான பெண். அவள் பத்தாவது படிக்கும்போது ஒரு சாலை விபத்தில் தந்தை இறந்துவிட, ஆதரவற்று நின்ற தங்கையையும், அவள் மகளையும், மனைவி கோமதியைக் கெஞ்சி கூத்தாடி சம்மதிக்க வைத்துதான் குணசேகரன் அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
 
பவித்ராவின் அன்னை தனலட்சுமி கண்முன்னே விபத்தில் துடிதுடித்து இறந்த கணவனின் மறைவில் பெரிதும் உடைந்துபோனார். அண்ணனின் வீட்டில் சம்பளமில்லா வேலைக்காரியாய் இருந்தவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போக மகளின் பனிரெண்டாம் வகுப்பு முடியும்போது ஒரு காய்ச்சலில் படுத்தவர் எழுந்திருக்கவே இல்லை. அதற்குப் பிறகு அந்த பொறுப்புக்கு வாரிசு முறையில் அமர்ந்தவள் பவித்ரா.
 
கல்லூரி மோகம் காற்றில் கரைய, வாழ்க்கை தலைகீழாய் மாறிப்போனது. மாமா குணசேகரன் நல்லவர்தான் என்றாலும் மனைவியை எதிர்த்துப் பேசும் பழக்கம் இல்லாதவர். கோமதியின் தந்தை வீட்டில் கொஞ்சம் வசதி என்பதால்தான் சாதாரண வேலையில் இருந்த அவரால் காலம் தள்ள முடிந்தது. வீட்டுக்குத் தேவையான அரிசி, காய்கறிகள் எல்லாம் இப்போதும் அவர்கள் வீட்டில் இருந்து தான் வந்து கொண்டிருந்தது. கோமதியும் சீட்டு நடத்தி, சிறிய அளவில் வட்டிக்குக் கொடுத்து வருமானம் பார்த்துக் கொண்டிருந்தார்.
 
மனைவிக்குத் தெரியாமல் ஏதாவது மருமகளுக்கு வாங்கிக் கொடுப்பதோடு தன்னுடைய பாசத்தை நிறுத்திக் கொள்வார் குணசேகரன். தனது இரு மகள்களையும் தலையில் வைத்துக் கொண்டாடும் கோமதி, பவித்ராவை ஒரு வேலைக்காரியாய் பார்த்தாரே ஒழிய வேறு கொடுமை எதுவும் செய்ததில்லை. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் கொடுத்ததே பெரியதென்று அவரது நினைப்பு. அவர்களின் மகள்கள் கீதா, ராதா இருவருமே பவித்ராவை விட சிறியவர்கள் என்றாலும் அவளிடம் அதிகாரத்துடனே நடந்து கொள்வார்கள்.
 
தன்னுடைய வாழ்க்கை இதுதான் என்று புரிந்து கொண்ட பவித்ராவும் அவர்கள் மனம் கோணும்படி நடக்காமல் எல்லாருக்கும் அனுசரித்தே நடந்து கொள்வாள். தனக்காய் எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவள் வீட்டு வேலை முடிந்தால் தோட்டவேலை என்று தனது நேரத்தை எப்போதும் பிஸியாகவே வைத்துக் கொண்டாள்.
 
எதிர்காலத்தைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லை… எது நடந்தாலும் வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்வது என்று மட்டுமே நினைத்திருந்தாள். அத்தை தனக்கு மாப்பிள்ளை பார்க்க ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோசியரிடம் போனதையே நம்ப முடியாமல் நின்றவள், கல்யாணமே முடிவாகிவிட்டது என்று அவர் வந்து நிற்கவும் திகைத்துப் போனாள்.
 
அவளைப் பக்கத்து ஊரில் உள்ள பெரிய வீட்டுப் பையனுக்கு பெண் கேட்பதாய் வந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சிதான் அவளுக்கு. மாப்பிள்ளைக்கு ஏதேனும் குறை இருக்குமோ, அதுதான் அத்தை தன் மகள்கள் இருக்க, தனக்கு சம்மந்தம் பேசுகிறாரோ என்று நினைத்தவள் மனதிலுள்ள குழப்பத்தை மாமாவிடமே கேட்டு விட்டாள்.
 
“பவிம்மா….. அந்த வீட்டுப் பிள்ளைக்கு கல்யாண யோகம் முடிய ஒருவாரம் தான் இருக்காம்…. அதுக்குப் பிறகு பத்து வருஷம் கழிச்சுதான் யோகம் இருக்காம்…. நம்ம ஜோசியர்கிட்டே அவர் ஜாதகத்துக்குப் பொருத்தமான ஜாதகம் கேட்டிருக்காங்க….. உன் ஜாதகம் பொருந்தி வந்திருக்கு….. உன் போட்டோ பார்த்ததும் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருச்சாம்…. அதான் வசதி கம்மியா இருந்தாலும் சமூகம் ஒத்துப் போனதால, உன்னைக் கேட்டிருக்காங்க… கல்யாணம் முடிஞ்சதும் அந்தத் தம்பி வெளிநாடு கிளம்பிடுமாம்… அங்கே எதோ படிக்கப் போயிருக்கார்… முடிச்சிட்டு தான் வருவாராம்… நல்ல பெரிய இடம்… நீ நல்லா இருக்கலாம்… இந்த வாழ்க்கைல இருந்து உனக்கும் விடுதலை… சம்மதம் சொல்லும்மா…” என்றார் குணசேகரன் நெகிழ்ச்சியுடன்.
 
மாமாவின் சந்தோஷத்தைக் கண்டவள், “சரி… எதுவானாலும் விதி போல நடக்கட்டும்…” என்று விட்டுவிட்டாள். மித்ரனின் புகைப்படத்தை அவர் காட்டிய போதும் கல்யாணத்தில் பார்த்துக் கொள்கிறேன் என்று பார்க்க மறுத்துவிட்டாள். கழுத்தில் தாலி ஏறும்வரை கல்யாணத்தைப் பற்றியோ, வருங்காலக் கணவனைப் பற்றியோ ஆசையை வளர்த்துக் கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. அவளுக்கே அவளுக்காய் உரிமையான பின்தான் அவன் முகத்தையே ஏறிட்டுப் பார்க்கிறாள்.
 
அவள் வாழ்க்கை தந்துவிட்டுப் போன அனுபவங்கள் அப்படி. யாரிடமும் எதையும் எதிர்பார்த்து ஏமாந்து போவதற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைதியாய் இருந்தே பழகிவிட்டாள். தான் இதுவரை இழந்த சந்தோஷங்களை எல்லாம் தனது கல்யாண வாழ்க்கை தனக்கு மீட்டுத் தருமா என்ற ஆவல் எதுவும் இல்லாமல் தான் தாலி வாங்கும் நிமிடம் வரை நின்றிருந்தாள்.
 
எந்த இடத்தில் கொண்டு போய் போட்டாலும் அந்த இடத்தைப் பற்றிக் கொண்டு அவளால் எழுந்து நிற்க முடியும் என்ற நம்பிக்கையே அவளை அமைதியாய் இருக்க வைத்தது. ஆனால் மித்ரனைக் கண்ட நொடி முதல் அவள் மனது சிறகில்லா பட்டாம்பூச்சியாய் சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது.
 
முதன் முதலாய் தன் மனத்தைக் கவர்ந்த ஆண்மகனே தனக்கு மணாளனாய் வந்ததை நம்ப முடியாமல் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவனைக் காணக் காண மனம் பூரித்துப் போனது. வாழ்க்கையில் இழந்த சந்தோசம் அனைத்தும் அந்த நிமிடம் திரும்பக் கிடைத்தது போல் உணர்ந்தாள்.
கல்யாணம் மிகவும் அவசரமாகவும், எளிமையாகவும் நடந்ததால் பெரிய கூட்டமோ, போட்டோ, வீடியோ என்ற தொந்தரவுகள் இன்றி விரைவிலேயே சம்பிரதாயங்கள் முடிந்து மணமக்களை உணவருந்த அழைத்தனர்.
 
மித்ரன் அருகில் ஒருத்தி இருப்பதையே கண்டு கொள்ளாமல் நண்பர்களுடன் பேசிக் கொண்டு சாப்பிட, அவளும் பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் அமைதியாய் சாப்பிட்டு எழுந்தாள். அவளை புகுந்த வீட்டுக்கு வழியனுப்பி கண்கலங்க பெற்றோர் யாரும் இல்லாததால் குணசேகரன் தான் மித்ரனிடம் வந்து பேசினார்.
 
“மாப்பிள்ளை…. அப்பா, அம்மா இல்லாத அவளுக்கு இனி எல்லா சொந்தமுமா இருந்து நீங்க பார்த்துக்குவீங்கன்னு நம்பறேன்….” கலங்கிய கண்ணுடன் அவர் தழுதழுக்கவும் யோசனையுடன் தலையாட்டி கடந்துவிட்டான்.
 
வீட்டுக்கு வந்ததும் ஆரத்தி எடுத்து வலதுகால் வைத்து உள்ளே நுழைந்து விளக்கேற்றி முடித்ததும் மித்ரன் காணாமல் போய்விட்டான். அவனுக்கு நாளை மறுநாள் மீண்டும் வெளிநாடு கிளம்ப வேண்டி இருந்ததால் நிறைய வேலைகள் காத்துக் கிடந்தன. அவன் MBA முடித்துவிட்டு ஒருவருட மேற்படிப்புக்காய் வெளிநாடு சென்றிருந்தான்.
 
இங்கே அவர்களின் பண்ணை வேலைகளையும் அரிசி ஆலை, கரும்பு ஆலைகளையும் மீனலோசனிதான் அண்ணனின் உதவியுடன் பார்த்து வந்தார். மித்திரனின் படிப்பு முடிந்து வந்ததும் அவனது பொறுப்பில் எல்லாத் தொழில்களையும் ஒப்படைப்பதாய் இருந்தார்.
 
சோமசுந்தரத்தின் மனைவியின் வழி வந்த கார்மெண்ட்ஸ் தொழில்கள் சென்னையில் இருந்ததால் அவர் அங்கும் பார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. மித்திரனுக்கு இன்னும் ஒன்பது மாதங்களே படிப்பு முடிய இருந்தது.
 
ஹாலில் சோமசுந்தரமும், மீனலோசனியும் அமர்ந்திருக்க, பால், பழம் எடுத்துக் கொண்டு வந்தார் சுந்தரி.
 
“அண்ணி…. தம்பியை வர சொன்னா, இந்த சடங்கும் பண்ணி முடிச்சுடலாம்….” சொல்லவும், “ஹூம் சரி அண்ணி……” எரிச்சலுடன் மாடிக்கு சென்றார் மீனா.
 
“பவி….. நீ இப்படி வந்து உக்காருமா…..” மனைவியின் பேச்சைக் கேட்டு சோமசுந்தரத்துக்கு எரிச்சலாய் வந்தது.
 
“என்னமோ, இவ பொண்ணு ரோஹிணியைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்த போல ரொம்பதான் உபசரிக்குறா….. அந்த ஒண்ணும் இல்லாத கழுதைக்கு பால், பழம் ஒண்ணுதான் குறைச்சல்…..” முனங்கிக் கொண்டே அவர் அங்கிருந்து எழுந்து செல்ல, ஹாலில் ஒரு ஓரமாய் நாற்காலியில் அமர்ந்திருந்த பவித்ராவின் காதில் அது அரைகுறையாய் விழுந்தது.
 
சுருக்கென்று இதயத்தில் முள்ளொன்று தைக்க யோசனையுடன் நிமிர்ந்தாள். அங்கு அவளைத் தவிர வேறு யாரும் இல்லை. எதுவும் புரியாவிட்டாலும் மனதில் ஒரு அலைப்புறுதல் தொடங்கியது. கணவன் எங்காவது தென்படுகிறானா… என்று பார்வையை சுழற்ற அவனையும் காணவில்லை. சோமசுந்தரத்துக்கு வசதி இல்லாதவர்களைக் கண்டால் இளக்காரம் அதிகம். பணத்தின் கர்வமும், தான் நினைத்தது நடக்கவேண்டுமென்ற பிடிவாதமும் மிக அதிகம்.
 
பழங்காலத்து பெரிய வீட்டை எல்லா வசதிகளுடனும் சற்று மாற்றிக் கட்டியிருந்தனர். வந்தது முதல் அப்படியே அமர்ந்திருக்க பவித்ராவுக்கு ஒருமாதிரி இருக்க சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே சுந்தரி வரவும், அவரிடம் கேட்கலாமா என்று தயங்கினாள்.
 
அவளது முகத்தைப் பார்த்தவர், “என்னம்மா….” என்று கேட்க, “எ….. எனக்கு பாத்ரூம் போகணும்….” என்றாள் தயக்கத்துடன்.
 
“வா…..” என்றவர் அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு வருத்தமாய் இருந்தது. சுந்தரி நல்ல மனம் கொண்டவர். சோமசுந்தரத்துக்கு எதிர்மறையான சுபாவம் உள்ளவர். ஆனால் மகள் ரோஹிணி அப்படியே அப்பாவின் சுபாவத்தோடு இருப்பாள். வெளியே வந்த பவித்ரா அவரை நன்றியுடன் பார்க்க, “என்கிட்டே சொல்லி இருக்கலாமே பவிம்மா…….” என்று ஹாலுக்கு அழைத்து வர அங்கே மித்ரனும், மீனாவும் இருந்தனர்.
 
“அத்தை… என்ன இது… இன்னும் சடங்கு, சம்பிரதாயம்னு டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கீங்க… அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை…. நீங்களே பார்த்து முடிச்சிடுங்க….” சொன்னவனிடம்,
 
“தம்பி…… இதுமட்டும் தான், முடிஞ்சுது…. ரெண்டே நிமிஷம் தான்….” என்றவர், “வாம்மா……” என்று அவனுக்கு அருகில் பவித்ராவை அமர வைத்தார். கோப்பையில் இருந்த பாலையும் பழத்தையும் ஸ்பூனில் அவனுக்கு கொடுத்துவிட்டு அவளுக்கும் கொடுத்தார்.
 
அடுத்து மீனாவும் கொடுக்க, “போதும்…. எனக்கு வேலை இருக்கு…” எழுந்து சென்று விட்டான் அவன். பவித்ரா திகைப்புடன் நோக்க, “சரி போதும் விடுங்க அண்ணி…. அதான், சம்பிரதாயத்துக்கு கொடுத்தாச்சுல்ல…. ஏம்மா…. நீ போயி குளிச்சு டிரஸ் மாத்திக்க….. இந்த ரூமை யூஸ் பண்ணிக்க….” என்று ஒரு அறையைக் காட்டினார்.
 
அவள் மனது கணவனைக் காணவும், அவனது பார்வை ஸ்பரிசத்திற்குமாய் ஏங்குவதை உணர்ந்தவள் தவிப்புடன் அதை அடக்க முயன்றாள்.
 
சில நிமிடம் அப்படியே அமர்ந்திருந்தவள், “நாளை மறுநாள் வெளிநாடு கிளம்பி விடுவார் என்று மாமா சொன்னாரே…” யோசிக்கையில் மனதின் ஏக்கம் இன்னும் பெரிதாக, “ச்சே… இதென்ன புதுப் பழக்கம்… எதற்கு இந்த எதிர்பார்ப்பு, வேண்டாம்… வாழ்க்கை காட்டிய வழியில் பயணிப்பதுதான் எனக்கு பழக்கம்… புதிதாய் எந்த எதிர்பார்ப்பும் இப்போதைக்கு வரவேண்டாம்…” மனதை நிதானப்படுத்திக் கொண்டு மாற்றுத் துணியுடன் குளியலறைக்குள் நுழைந்தாள்.
 
உன் முகம் காண தயங்குகிறேன்…
நிலம் பார்த்து ஏங்குகிறேன்….
செல்லமாய் தானே சிணுங்குகிறேன்….
எனக்குள் நானே மயங்குகிறேன்….
என்றோ விழியில் பதிந்திட்டாய்…
இமை சிப்பிகள் உனை சிறைபிடித்து
இதயத்தில் இருத்திக் கொண்டதோ!!!
உன்னோடான காலங்களெல்லாம்
வசந்தங்கள் என்றானபிறகு
கோடை கூட எனக்கு குளிர்தானடா…
 
இமை தொடரும்