அத்தியாயம்-6

அவளது கேள்வி எதிர்பார்த்தது தான் என்றாலும் சற்று தடுமாறித்தான் போனான்.

அவளது மனம் வருந்தக்கூடாது என்றுதான் இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்தான்.

இனியும் பொறுமையாக இருந்து பயனில்லை.

இப்போது கஷ்டப்படுவாள் என்று நினைத்து வாழ்நாள் முழுவதும் துயரத்தை கொடுக்க அவனுக்கு விருப்பமில்லை.

என்றேனும் ஒருநாள் கண்டிப்பாக அவளது இதயத்தை உடைக்கப்போகிறான்.

அது இன்றே நடந்துவிட்டால் வலி அதிகமாக இருக்காது.

அவளும் அதனை கடந்துவிடுவாள் என்று நினைத்தவன் முடிவெடுத்துவிட்டான்.

ஆழ்ந்து ஒரு பெருமூச்செடுத்தவனோ

“ இல்லை கனகம் அது சரியா வராது!! மனசில தேவையில்லாத ஆசையை வளர்த்துக்காதே அப்பறம் உனக்கு தான் கஷ்டம்” என்று எங்கோ பார்த்துக் கொண்டே கூறினான்.

அவளை ஏறிட்டு பார்க்கவே இல்லை.

எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டே பேசினான்.

அவளை பார்க்கும் தைரியமில்லை அவனுக்கு.

“ அதெல்லாம் சரியா வரும்!! எப்படியும் ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்க தானே போறீங்க?? அது ஏன் நானாக இருக்கக்கூடாது” என்றாள்.

“ நான் தான் சரியா இருக்காது என்று சொல்லுறேன் இல்லை?? வளர்ந்தவ தானே நீ புரிஞ்சு கொள்ள மாட்ட?? குழந்தை மாதிரி கேள்விக் கேட்டுட்டு??” என்று எரிச்சல் பட்டுக்கொண்டே கேட்டான்.

“ நீங்கதான் புரிஞ்சுக்காம வேணுமின்னே சொல்லுறீங்க!! எனக்கு தெரியும்!! உங்களுக்கும் என்னை பிடிக்கும் என்று!!” என்று தீர்க்கமாக கூறினாள்.

அவனுக்கு பேச்சே வரவில்லை உண்மையைத்தானே கூறினாள்.

அவள் மேல் அவனுக்குத்தான் கொள்ளைக்காதல் இருக்கிறதே

ஆனால் அது எப்போதுமே கானல் தான்

கைசேற வாய்ப்பே இல்லை

“ என்னத்தெரியும்!! ஹான்” என்று எகிறியவன்

“ எனக்கு உன்மேல ஒரு மண்ணும்  வரல போதுமா?? போ!!” என்றான்.

“ அது தான் ஏன் என்று கேட்கிறேன்??” என்று விடப்பிடியாக கேட்டாள்.

“ உனக்கு ஒரு முறை சொன்னா புரியாதா?? நமக்குள்ள என்னப் பொருத்தம் இருக்கு? ? கல்யாணம் பண்ணிக்க??” என்றான்.

“ஏன் நான் உங்களுக்கு பொருத்தம் இல்லையா??” என்று அவனது விழிகள பார்த்துக்கொண்டே கேட்டாள்.

“ நான் தான் உனக்குப் பொறுத்தம் இல்லம்மா” என்று மனதிற்குள் நினைத்தவன் இறுக்கமாகவே நின்றிருந்தான்.

அவன் மௌனமாகவே நின்றிருக்க

“ ஏன் நான் படிக்கலை என்பதினாலேயா??”

“ நான் அழகா இல்லையா?”

“ இல்லை இல்லை நான் வேலைக்காரி ‌என்பதினாலேயே??” என்று கேட்கும் போதே குரல் கமறியது.

அவள் வேலைக்காரி என்றதும் அவனுக்கு கோபம் வந்துவிட்டது. இப்போது நினைத்தாலும் அவளை மகாராணிப்போல் தாங்க அவனால் முடியும். ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் அல்லவா இருக்கிறான்.

“ பைத்தியம் போல உளறாத கனகா” என்றான்.

“ பின்னே அதுதான் காரணமாக இருக்கனும்!! ஒரு வேலைக்காரியை எப்படி கல்யாணம் பண்ணிக்கறது என்று தானே என்னை தவிர்க்கறீங்க” என்றிட

அவனுக்கு பொறுமை போய்விட்டது.

“ அறைஞ்சேன்னா?? திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கிட்டு??” என்று கையை ஓங்கி விட்டான்.

அவள் பயந்து பின்னால் ரெண்டடி எடுத்து வைக்கவும் தனது கோபத்தை கட்டுப்படுத்தியவன்” பாரு என் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு!! இனிமே என் முன்னாடி அப்படி சொல்லாத !!” என்று ஒற்றை விரல் நீட்டி மிரட்டினான்.

“ அப்போ ஏன்  என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது என்கிற காரணத்தையாவது சொல்லித்தொலைங்களேன்!!

 நானும் எத்தனை நாளைக்குத்தான் வலிக்காதப் போலவே நடிக்கறது!!

 ஒவ்வொரு முறையும் என்னை நீங்க தவிர்க்கும் போது மனசால எப்படி ஒடைஞ்சு போறேன்னு தெரியுமா??

உங்களை காதலிக்கறத தவிர நான் வேறென்னங்க தப்பு பண்ணிட்டேன்” என்று அவனது விழிகளை பாரத்துக்கொண்டே கேட்டாள்.

கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்துக்கொண்டே இருந்தது

இப்போதும் வேலு அவளை பாரக்காமல் எங்கோ பார்த்துக் கொண்டே இருக்க

“ எப்போதாங்க என்னை, என் காதலை புரிஞ்சுக்குவீங்க?? நான் செத்தா தான் உங்களுக்கு புரியுமா??” என்று ஆற்றாமையுடன் கத்தினாள்.

சட்டென அவளை திரும்பி பார்த்தவன் அவளை ஓங்கி அறைந்திருந்தான்.

என்ன வார்த்தை கூறிவிட்டாள்.

அவள் இல்லை என்றால் அவனில்லையே??

அவளுடன் சேர முடியாது என்றாலும் கண்ணால் பார்த்து கருத்தில் நிறைத்தல்லவா வாழ்ந்துக்கொண்டிருக்கிறான்

சாதாரணமாக உயிரை விடுகிறேன் என்கிறாள்.

அவனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை.

அவள் கண்ணத்தை மூடிக்கொண்டு அவனை‌ அதிர்ந்து பார்க்கவும் “ என்னடி சொல்லனும்?? என்ன சொல்லனும்?? காரணம் தானே சொல்லுறேன் நல்லா

கேட்டுக்கோ” என்றவன்

“ எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை!! என் மனசுல நீ ஒரு பர்சன்ட் கூட கிடையாது!! போதுமா?? என்று கர்ஜித்தவன்

“ அதுமட்டுமில்லை நான் வேறோரு பொண்ணை மனசார காதலிக்கிறேன் கூடிய சீக்கிரமே அவளை கல்யாணமும் பண்ணிக்கப்போறேன்!! அதுதான் காரணம்!! புரிந்ததா??” என்றான்.

கண்கள் சிவந்து ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தவன் தோற்றம் அவளுக்கு கிலியை கொடுத்தது.

அதிலும் அவன் கூறியவற்றை கேட்டவளுக்கு இதயமே நின்றுவிடும் உணர்வு

எச்சிலை கூட்டி விழுங்கியவள்

“ இல்லை நீங்க பொய் சொல்லுறீங்க!! நான் நம்ப மாட்டேன்” என்றாள.

 சலிப்பாக கண்களை மூடித்திறந்தவன் “ நீ நம்பனும் என்கிறதுக்காக நான் சொல்லலை!! அது எனக்கு தேவையுமில்லை!!இனிமேலும் என்னை தொந்தறவு பண்ணாதே!! ப்ளீஸ்” என்றான்.

“ தொந்தறவு பண்ணுறேனா” என்று உடைந்துப்போனக் குரலில் கேட்டவள்

“ அப்போ ஏன் இத்தனை நாளா சொல்லலை” என்றாள்

“ தப்புதான்!!நீ மனசு கஷ்டப்படுவியே என்று சொல்லாம இருந்தேன் பாரு?? என் தப்பதான்!! இனிமே காதல் கல்யாணம் என்று என் பின்னால வந்தே அப்பறம் இப்படி சும்மா பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்?? புரியும் என்று நினைக்கிறேன்!!” என்றவன் விறுவிறுவென நடந்து சென்று விட்டான்.

அவனது முதுகையே வெறித்து பார்த்தவள் கண்களில் இருந்து தாரையாக கண்ணீர் வழிந்தது.

அவனது மனதில் அவளுக்கு இடமே இல்லை என்கிறான் வேறோருத்தியை காதலிக்கிறேன் என்று வேறு கூறுகிறான்.

அவளால் அதறை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை

அப்படியே மடங்கி அமரந்தவள் கதறி கதறி அழுதாள். அவளால் அது மட்டுமே முடிந்தது.

அவளது மனம் எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று தான் குமறியது.

அவள் ஆசைப்பட்டது எதுவுமே நடக்காதா?? வாழ்வில் ஒரு நல்லதைக்கூட பாரக்காதவளுக்கு அவன் மட்டுமே உலகமாக தெரிந்தான்.

இருட்டான அவளது வாழ்வில் வண்ணமென அவன் மட்டுமே தெரிந்தான்.

அவளுக்கு மகிழ்ச்சி தருவது அவனது இருப்பு மட்டுமே.

அதுவும் இனி இல்லை என்றானப் பின்பு அனைத்துமே சூனியமாக தெரிந்தது‌.

கிணற்றடிக்கு வந்த வேலுவுக்கு நிலைக்கொள்ளவே முடியவில்லை. என்னவெல்லாம் கூறிவிட்டாள்.

“ படிப்பில்லையாம்!! அழகில்லையாம்!! கடைசியா என்ன அது வேலைக்காரியாமே??  பைத்தியக்காரி பைத்தியக்காரி!! என்று வாய்விட்டுத் திட்டியவன் “ உயிரை விடுவாளாமே?? அப்படி மட்டும் ஏதாவது நடக்கட்டும் நானே அவளை கொன்னுடுறேன்” என்று ஏதேதோ அவளுக்கு வசை பாடியவன் நிதானத்துக்கு வரவே நெடுநேரம் ஆனது.

அவளுக்கு அறைந்த தனது உள்ளங்கையை வெறித்து பார்த்தவன் ஆற்றாமையுடன் கிணற்று சுவரில் மாறி மாறி ஓங்கி குத்தினான்.

அப்போதும் அவனது கோபம் அடங்கவில்லை. அது அவள் மீதில்லை. தன் மீதும் தனது இயலாமை மீதும் வந்த கோபம். சுவற்றில் குற்றியதால் அடிப்பட்டு கையில் இருந்து செங்குறுதி வடிந்துக்கொண்டு இருந்தது.

அதனை எல்லாம் கிரகிக்கும் நிலையிலேயே அவனில்லை.

அப்படியே சுவற்றில் கையை ஊன்றி நின்றவன் மனதினை சமப்படுத்த முயல அவளின் நினைவுகளை மீட்டினான்.

எப்போதும் அவளின் மதிமுகத்தில் அவனுக்கொரு ஈர்ப்பு. அவளை நினைத்தாளே இயல்பாக ஒரு இளநகை அவனிதழ்களில் தோன்றும்.

முதன்முதலில் கனகாவை அவன் பார்த்தது சந்திரனின் வீட்டில்தான்.

 வேலுவுக்கு 21வயது இருக்கும். அவனுக்கு தாய் தந்தை இல்லை. சந்திரன் தான் படிக்க வைத்து பார்த்துக்கொண்டார். சந்திரனின் வீட்டின் பின்னால் இருக்கும் வேலைசெய்பவர்கள் தங்குமிடத்தில் தான் தங்கி இருந்தான். கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றவன் சந்திரன் மேலே படிக்க வைக்கிறேன் என்று கூறியதை எல்லாம் காதிலேயே வாங்கவில்லை. கல்லூரியை முடித்தவுடன் வேலைக்கு வந்துவிட்டான். இலவசமாக எதுவும் வேண்டாம் என்ற  வைக்கியம் அந்த சிறுவயதிலேயே மனதில் வேறூன்றி இருந்தது அவனுக்கு.

இத்தனை நாள் படிக்க வைத்ததே போதும் என்றவன்  தன் காலில் நிற்க வேண்டித்தான்  வேலைக்குச் சேர்ந்தான். அவனின் சுறுசுறுப்பும் புத்திக்கூர்மையும் பார்த்து வியந்த சந்திரனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

தன்னுடனேயே வைத்துக்கொண்டார்.

அன்று காலை நேரத்தில் கரும்பாலை கணக்குவழக்குகள் கூறிக்கொண்டிருக்க பக்கத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார் சந்திரன்.

அப்போது சமையல்கார பெண்மனி மங்களம் யாரோ ஒருப்பெண்ணை அழைத்துக்கொண்டு வந்தார்.

நேறாக சந்திரனிடம் வந்தவர்” ஐயா நான் சொன்னேன் இல்லை சமையலுக்கு ஒத்தாசைக்கு ஒருப்பிள்ளைய கூப்பிட்டுக்கறேன் என்று அது இது தான்” என்று கைகாட்டினார் அவளை கைக்காட்டினார்.

 தாவணி அணிந்து மெலிந்த கொடியென மிரண்ட விழகளுடன் நின்றிருந்தாள்  ஒரு சிறுப்பெண்.

அந்தப் பெண் வணக்கம் தெரிவிக்கவும் “ பேரு கனகாங்க ஐயா நம்ம சண்முகத்தோட மூத்தமக!!” என்றார்.

“ இது நல்லா படிக்கற பிள்ளையாச்சே மங்களம் அவங்க அம்மைய வந்து என்னை பார்க்கச் சொல்லு!! நான் பார்த்துக்கறேன்”  என்றார்.

“ ஐயா உங்க பெரிய மனசு தெரியுமுங்க!! ஆனால் குடும்ப கஷ்டம்!! இந்த பிள்ளை வேலைக்கு வந்தா தான் சரியா இருக்கும்” என்றவர் “ நான் எம்புட்டோ சொல்லிப்புட்டேன் ஐயா அவங்க அம்மை கேட்கவே இல்லைங்க” என்றார். சந்திரன் சம்மதம் தெரிவிக்கவும் முதன்முதலில் ஸ்ரீ இல்லத்தில் நுழைந்தாள் கனகா.

 அப்போதுதான் வேலு முதன்முதலில் கனகாவை பார்த்தான்.

பார்த்த முதல் பார்வையிலேயே ஏதோ ஒன்று அவனை அவளிடம் ஈர்த்தது. தானிருக்கும் நிலையில் இந்த ஈர்ப்பு பருவக்கவர்ச்சியெல்லாம் அவனுக்கு அபத்தமாக தெரிந்தது. எனவே தன் எண்ணங்களையெல்லாம் புறந்தள்ளியவன் தன்வேலைகளில் கவனம் செலுத்தலானான்

ஆனால் அவளை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு எப்படி பார்க்காமல் தவிர்ப்பது.   நாட்கள் செல்ல செல்ல அவனது மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டாள் அவள்.

நாட்கள் வருடங்களாக உருண்டோட அவளது தாவணியும் சேலையாக உருப்பெற்றது.

வேலுவுக்கும் அவள் மீதிருந்த ஈர்ப்பு காதலாக உருப்பெற்றது.

அவனை பொருத்தவரை காதல் என்பது வாழ்நாள் காதல் அர்ப்பணிப்பு அது கல்யாணத்தில் தான் முடிய வேண்டும் என நம்புபவன்.

எனவே இது காதலா இல்லை வயதுக்கோளாறா என தெளிவுப்படுத்த வேண்டியிருந்தது.

என்னதான் குழப்பத்தில் சுற்றிக்கொண்டிருந்தாலும் அவளை தூரத்தில் இருந்து ரசிக்க தவறியதில்லை.

பல துயரங்களுக்கு நடுவே தத்தளிப்பவனுக்கு அவளது இருப்பு மட்டுமே உயிர்ப்புடன் வைத்திருந்திருந்தன.

ஆனால் அவளை ரசிப்பதற்குக்கூட இப்போது தயங்கி நிற்கும் தன் நிலையை நினைத்து அவனது இதழ்கள் வலியுடன் புன்னகைத்தன.

இனி அழுவதற்குக்கூட மனதில் திடமில்லை அவனுக்கு.

நினைவுகளின் பிடியில் உழன்றுக்கொண்டிருந்தவன் “ அய்யோ ரத்தம்” என்ற சத்தத்தில் தான் நிதானத்துக்கே வந்தான்.

“என்ன பண்ணி வச்சிருக்கீங்க??கையை பாருங்க எவ்வளவு ரத்தம்” என்று கொண்டே அருகில் வந்து அவன் கைகளை பிடித்துக்கொண்டாள் பாரு.

அவன் தனது கைகளை அவளது பிடியில் இருந்து விலக்கியவன் அவளது முகத்தை ஏறிட்டு பார்க்க “ பாருடா” என்று ஆச்சர்யமாக கூறியவள் “ என்ன ஃபீலிங்சா” என்று கேட்டாள்.

“அதுக்கெல்லாம் இனி இடமில்லை” என்றவன் “ஆமாம் கேட்கனும என்று நினைச்சேன் நீ ஏன் இங்கே வந்த??என் மேல நம்பிக்கை இல்லையா?? “ என்றான்.

அவனை விரிந்த புன்னகையுடன் பார்த்தவள் “ அதெல்லாம் மலைமையா இருக்கு!! இருந்தாலும் ராமன் இருக்கிற இடம் தானே சீதைக்கு அயோத்தி” என கண்சிமிட்டிக் கூறினாள். அவன் புருவம் இடுங்க அவளை பாரக்கவும் “ க்யூட் பாய்” என்று அவனது கன்னததை கிள்ளபோக தலையை பின்னால் இழுத்துக்கொண்டான்.

“ ரொம்பத்தான்!!” என்று சலித்துக்கொண்டவள் “வாங்க!! கைக்கு மருந்துப்போடனும்” என்று உரிமையாக அவனது கையைப் பிடித்து அவனது வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.

“முதல்ல கையை விடு!! யாராவது பாரத்தால் என்ன ஆகறது?? “ என்றான்‌ சுற்றி கண்களை சுழல விட்டப்படி

“ என்ன நினைப்பாங்க நான் உங்க கையை பிடிச்சி இருக்கேன் என்று நினைப்பாங்க” எனறு சொன்னவள்

 “ மருந்து எங்கே இருக்கு” என்று கேட்டு கட்டுப்போட்டு விட்டப் பிறகுதான் அவனை விட்டாள்.

“ என்னைத் தனியா வந்துப் பார்க்கறது இதுவே கடைசியாக இருக்கட்டும்” என்றவன் அவளை வெளியே விட்டு கதவை பட்டென சாத்தியிருந்தான்.

“ அதையும் தான் பார்க்கலாம்” என்று சத்தமாக அவனுக்கு கேட்குமாறு கத்திவிட்டு

திரும்பி வீட்டிற்குள் செல்ல பார்க்க அங்கே அவள் கண்ட காட்சியில் ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டாள்.

~தொடரும்.