அத்தியாயம் -3

தனது அறையில் கண்ணாடி முன் அமர்ந்து தயாராகி கொண்டிருந்தாள் ஸ்ரீ.  அவளைத்தான் பெண் பார்க்க வருகிறார்கள் என்று அடித்துக்கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.

கிட்டத்தட்ட திருமணமே உறுதியான நிலைதான். பெண்பார்க்கும் வைபவமெல்லாம் சம்பிரதாயத்திற்காக தான் நடக்கப்போகிறது.

ஆனால் அதற்கான பூரிப்பும் உற்சாகமும் சிறிதும் மனதில் இல்லை.

எல்லாமே கைவிட்டு போய்விட்ட உணர்வு.

ஏனிந்த அவசர கல்யாணம் என்று தான் புரியவுமில்லை.

திடீரென்று ஒரு மாதத்தில திருமணம் என்றார்கள். மாப்பிள்ளை இவர்தான் என்று ஒரு  கவரை சந்திரன் வந்து தந்துவிட்டு போனார். இன்னும் அந்த கவரை பிரித்துக்கூட பார்க்கவில்லை. பார்க்க தோன்றவும் இல்லை.

என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் இன்று பெண்பார்க்க வந்துவிடுவார்கள் என்று ஒரு குண்டை தூக்கி போட்டுவிட்டார்கள்.

கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் உணர்ந்தாள்.

சொர்க்கம்  எங்கே  என்றால் எனது வீடுதான் என்று யோசிக்காமல் சொல்வாள் ஆனால் இன்று அதுவே சிறையில் இருப்பது போல்தான் இருந்தது.

ஏனென்றே தெரியவில்லை மூச்சு அடைத்தது.

சரியாக யோசிக்கக்கூட முடியவில்லை.  ஆளுமையான தெளிவான பெண்தான் அவள்.  எதிலுமே ஒரு தெளிவும் நிதானமும் அவளிடத்தில் இருக்கும்

அனைத்துமே வெற்றியிடமிருந்து கற்றுக்கொண்டவை தான்.

இப்போது ஏன் இந்த பதட்டம், சொல்லொன்னா அழுத்தம் என்று அவளுக்கே புரியவில்லை.

அவளது அனைத்து பிரச்சனைகளுககும் அவனிடம் தீர்வு கிடைக்கும்.

 இப்போதுமே அவனிடம் கூறினால் ஒரு நொடியில் அனைத்துமே சரியாகிவிடும்.

ஆனால் எப்படி அவன் முகத்தை பார்த்து சொல்வாள் . செய்தது ஒன்றும் சிறு பிழையில்லையே. அவள் சிறுபிள்ளையும் இல்லையே. தெரியாமல் செய்துவிடடேன் என்று சொல்வதற்கு, அனைத்துமே அவள் சுயநினைவில் இருக்கும் போது நடந்தவை தானே!!

அவளது விளையாட்டு  தனத்தால் இன்று வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டதே

தவறு செய்துவிட்டோமே என்று நூறு முறைக்குமேல் நினைத்திருப்பாள்.

அந்த குற்றவுணர்ச்சியால் தான் ஒரே வீட்டில் இருந்தாலும் வெற்றியின்  முகத்தைக்கூட பாரக்காமல் சுற்றி திரிந்தாள். வெறுமனே சகோதரனாக இருந்து இருந்தால் இந்தளவுக்கு சங்கடங்கள் இருந்து இருக்காதோ என்னவோ??

தாய் தந்தையை விட ஒரு படி மேல் அல்லவா அவன்‌.

அதிலும் சக்திவேலை நினைத்தாள் தான் அவளுக்கு பயமே.

வெற்றியாவது பொறுமையாக காது கொடுத்து கேட்பான்.

சக்திவேல் பொறுமை கிலோ என்ன விலை என்று கேட்கும் ரகம். அவனை வேறு சமாளிக்க வேண்டுமே!!

அதனை நினைத்தாலே தலைசுற்றியது.

எவ்வளவு  யோசித்தாலும் அவளது பிரச்சனைகளுக்கு தீர்வு ஒரு இடத்தில் தான் கிடைக்கும். அது வெற்றியிடம் மட்டுமே.

அவனிடம் கூறினால் போதும். ஆனால் அது தான் அவளால் முடியவில்லையே.

அவளால் ஒரு நிலையில் இருக்கவே முடியவில்லை.

தலையே வெடித்துவிடும் போல இருந்தது.

இப்படியே எத்தனை நாட்களுக்கு மறைக்கமுடியும்.

வெகுநாட்களுக்கு மறைக்கவும் முடியாதே

என்றோ ஒரு நாள் உண்மை தெரிந்து தான் ஆகவேண்டும். அது இன்றைக்கே தெரிந்தால் என்ன??

உண்மை தெரிந்தால் கண்டிப்பாக மன்னிக்கமாட்டார்கள். ஆனால் இந்த குற்றவுணர்ச்சியில் இருந்தாவது தப்பிக்க இயலுமே.

ஒரு முடிவுக்கு வந்தவளாக தயாராகி அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு ஏதோ சலசலப்பான சத்தம் கேட்டது. வீட்டின் வெளியே இருந்துதான் சத்தம் வருகிறது என்று யூகித்தவள் வாசலுக்கு வந்து பார்த்தாள்.

வெளியே வந்தவளுக்கு வேலுவும் விக்கிரமனும் சண்டையிட்டுக்கொண்டிருந்த காட்சிதான் தென்பட்டது. அவர்களுக்கு அருகில் செல்ல போகவும் அதனை பார்த்த கனகாவோ அவசரமாக அவளருகில் சென்றவள் கையை பிடித்து வீட்டினுள் கிட்டத்தட்ட இழுத்து கொண்டு வந்தவள் ஸ்ரீயின் அறையில் வந்து தான் கையை விட்டாள்.

“ அய்யோ அக்கா என்னை ஏன் இப்படி இழுத்துட்டு வறீங்க விடுங்க!!” என்று அறையை விட்டு வெளியேற போனாள். கதவை மறைத்தப்படி நின்றவள் “ முடியாது ஸ்ரீமா!!” என்றாள் அழுத்தமாக

“இப்போ வழிய விடப்போறீங்களா இல்லையா??” என்றாள் சற்று குரல் உயர்ந்து ஒலித்தது. கனகா மௌனமாக நிற்கவும் “ அக்கா நான் சொன்னா விக்கிரமன் மாமா கேட்பாரு வழிய விடுங்க ஏதும் பிரச்சனை ஆகிடப்போகுது!! அண்ணா வேற‌ வீட்டில் இல்லை!!” என்றாள் தவிப்பாக

“ உங்க வீர சாகசங்களை எல்லாம் கொஞ்சம் மூட்டைக்கட்டி வைக்கிறீங்களா!! அதுவும் இப்ப நீங்க இருக்கற நிலைமையில இதெல்லாம் தேவையா?? அய்யாவே எல்லாம் பார்த்துக்குவார் நீங்க உள்ளேயே இருங்க!!”என்றாள்

“ எனக்கு என்ன நான் நல்லாதான் அக்கா இருக்கேன்” என்றாள் குரல் தடுமாறி வந்தது.  “ உண்மைய ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாதுமா, அதுவும் உங்களால சுத்தமா முடியாது!!” என்று அழுத்தமாக கூறினாள்.  அந்த தொனியே கூறியது அவளுக்கு தெரிந்துவிட்டது என்று

“ அப்படியெல்லாம் ஒன்னுமில்லக்கா” என்றாள் தலையை குனிந்தபடி

“ கவலைப்படாதிங்கம்மா எல்லாம் சரியாகிடும்” என்றாள் ஆதரவாக அவள் கைகளை பிடித்துக்கொண்டாள்

அவ்வளவு தான்  அக்கா என்ற கேவளுடன் அவளை கட்டியணைத்து கொண்டாள். குபக்குபுவென்று கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது. எத்தனை நாள் அழுத்தம் இது.

கண்களில் கண்ணீர் வழிந்துக்கொண்டே இருந்தது. அவளும் எத்தனை அதிர்ச்சிகளைதான் தாங்குவாள்.

எத்தனை திடமானவர்களாக இருந்தாலும் இன்பத்துன்பங்களை உள்ளேயே அடக்கி வைத்திருந்தாள் அந்த கனத்தை யாராலும் தாங்க முடியாது அல்லவா?? அதிலும் சுற்றி இத்தனை பேர் இருந்தும் ஆதாரவாக தோல் சாய்ந்து அழக்கூட முடியாத நிலையில் அல்லவா இருக்கிறாள்.

அனைத்தும் அவளது மடத்தனத்தால நிகழ்ந்தது தானே!!

அடக்க நினைக்கிறாள் ஆனால் அழுகை அதிகரித்ததே தவிர குறையவில்லை. கனகாவும் ஆதாரவாக அவள் முதுகை தடவிக்கொண்டிருந்தாள். அழுகை அதிகரித்ததே தவிர குறையவில்லை.

சற்று நேரத்தில் அழுகை சற்று மட்டுப்படவும் ஸ்ரீயை கட்டிலில் அமரச்செய்தவள் குடிப்பதற்கு நீரை கொடுத்தாள்.  நீரை பருகியவள் நிமிர்ந்து

“ அது வந்து அக்கா” என்று தயங்கிக் கொண்டே வாயைத்திறக்க “ முதல்ல இப்படி தயங்கி தயங்கி பேசறத நிறுத்துங்கம்மா! இது எங்க ஸ்ரீ அம்மா இல்லை!! எங்கே போச்சு அவங்களோட தைரியம் ஆளுமையெல்லாம்!! எப்போதிலிருந்து இப்படி அழுமூஞ்சி ஆனாங்க ??” என்று  அவள் கண்ணீரை துடைக்க மௌனமாக தலையை குனிந்துக்கொண்டாள்.

“ அழுதிட்டே இருந்தா எப்படி ஸ்ரீமா?? அழுகை எதுக்குமே தீர்வாகுது!!  அது இன்னுமே நம்மல பலகீனமாக்கிடும்!! முதல்ல கண்ணை தொடைங்க” என்றாள்.

“ எப்படிக்கா அழாம இருக்கறது என்னால யாரு முகத்தையும் நிமிர்ந்து கூட பார்க்க முடியல ஒரே குற்றவுணர்வா இருக்கு!! என் மேலயே வெறுப்பாக இருக்கு”  என்றாள் மீண்டும் அழுகை வெடித்தது.

அவள் தலையை வருடியவளோ “ இப்போ என்ன ஆகிடிச்சுன்னு இப்படியெல்லாம் பேசறீங்க?? எனக்கு நம்பிக்கை இருக்கு நீங்க ஒரு தப்பும் பண்ணியிருக்க மாட்டீங்கன்னு!! ஏன்னா நீங்க சந்திரன் ஐயா வளர்ப்பு!! ” என்றாள். அவள் குரலில் அப்படியொரு உறுதி.

“ இல்லக்கா உங்க நம்பிக்கைக்கு எல்லாம் நான் தகுதி இல்லாதவ!! ரொம்ப பெரிய தப்புப்பண்ணிட்டேன்!!”என்றவள் மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டாள். பேசிக்கொண்டிருந்தவர்கள் வெளியே சந்திரனின்  குரல் கேட்கவும்

“ பெரிய ஐயா வராங்க போலிருக்கு முதல்ல கண்ணை தொடைங்க!! பார்த்தா பிரச்சனை ஆகிடும்!!” என்றாள் வழியை பார்த்தபடி “இப்பவே அப்பாகிட்ட எல்லாத்தையும் சொல்லிடுறேன் அக்கா!! என்ன ஆனாலும் பரவாயில்லை!! இந்த கல்யாணம் நடக்க கூடாது!! இல்லன்னா பெரிய தப்பாகிடும்” என்று வெளியேற முற்பட

“ ஏன்மா இப்படி புரிஞ்சிக்காம் நடந்துக்கறீங்க!! கிட்டத்தட்ட ஊரே இப்ப நம்ம வீட்டில் தான் இருக்கு இப்போ போய் நீங்க உண்மையை சொன்னா பெரிய ஐயாவுக்கு அது எவ்வளவு அவமானம்!! அதுக்கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தீங்களா!!” என்றாள்

“ அதுக்காக கல்யாணம் பண்ணிக்க முடியுமா?? இது நடந்தா பெரிய தப்பாகிடும்கா!!” என்றாள் தவிப்பாக

“முதலில் நான் சொல்லுறத கவனமா கேளுங்க!! பொண்ணு தானே பார்க்க வறாங்க கல்யாணத்துக்கு தான் இன்னும் நாள் இருக்குல்ல !! அதுக்குள்ள ஏதாவது பண்ணலாம்!! கவலைப்படாதிங்க!!”

“என்னக்கா சொல்லுறீங்க !! அந்த மாப்பிள்ளைய பத்தி யோசிச்சீங்களா நீங்க!! ஆசைகாட்டி மோசம் பண்ணுறாப்போல இருக்கும்!! இதுவே லேட்!! இன்னும் இன்னும் தப்பு பண்ணுற போல இருக்கும்கா”

“ இப்ப இருக்கற நிலைமையில் அதெல்லாம் பார்த்திட்டு இருக்க முடியாதும்மா புரிஞ்சிக்கோங்க!! உங்களை பத்தி மட்டுமே இப்போதைத்கு யோசிங்க!! அது போதும்!!” என்று மேலும் ஏதேதோ பேசி ஸ்ரீயை ஒருவழியாக சம்மதிக்க வைத்தாள்.

 “ சரிங்கக்கா ஆனால் இன்னைக்கே அப்பாகிட்ட உண்மையை சொல்லிடுவேன்” என்றாள் “ அதுப்போதும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டுப்போகட்டும் அப்பறம் உங்க இஷ்டம்” என்றாள் முடிவாக  “ சரி முகம் கழுவிட்டு வாங்க!! பாருங்க ரொம்ப சோர்வா தெரியறீங்க!! நான் போய் சாப்பிட ஏதாவது கொண்டு வறேன்” என்றவள்

ஸ்ரீ  குளியலறைக்குள்  நுழையவும் கனகா அறையில் இருந்து வெளியே வந்தாள்.

வெளியே வந்தவள் பார்த்தது என்னவோ விக்கிரமனை வேலு தன் தோள்களில் தூக்கிக்கொண்டு வரும் காட்சியை தான்.

பார்த்தவளுக்கு தூக்கி வாறிபோட்டது. ஓரமாக பார்வதி நிற்பதை கண்டவள் அவசரமாக அவளிடம் சென்று விசாரித்தாள்.

அவள் ஆதிமுதல் அந்தம் வரை கூறி முடித்தவள் “ பாருங்களேன்  ஒரு பெரிய மனுசன் பண்ணுற வேலையா இது??” என்று ஆச்சர்யமாக கூறினாள்.மேலும் தொடர்ந்தவள் “ என்னதான் சொல்லுங்கக்கா வெற்றி ஐயா மாஸ் இல்ல?? அத்தனை பேரு முன்னாடி ஒத்த ஆளா போய் கல்யாண மேடையில வச்சே பொண்ணை தூக்கியிருக்காங்களே!! செம்மல்ல??” என்றாள் கண்ணத்தில் கைவைத்தப்படி.

“ இருந்தாலும் நீங்க இப்படி ஓரவஞ்சனை பண்ணக்கூடாதுக்கா!! எல்லாமே சொன்னீங்க ஆனால் வெற்றி ஐயா லவ்மேட்டரை மட்டும் மறைச்சிட்டீங்க பார்த்தீங்களா?”” என்றாள்.

“ கிழிச்சாங்க!! போடி அங்கிட்டு!!” என்றவள் சமையற்கட்டு பக்கம் போகவும் “ பார்த்தீங்களா நழுவப்பாக்கறீங்க !! அப்போ பெருசா எதுவோ இருக்கு சொல்லுங்க சொல்லுங்க!!” என்றாள் கதை கேட்கும் பாவத்துடன்

“ அடியே தள்ளுடி அங்கிட்டு!! நானே என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு புரியாம குழம்பிப்போய் இருக்கேன் இவ வேற!!”   என்று எரிந்து விழுந்தவளோ குளிர்பானத்தை ஒரு கிளாசில் ஊற்றி எடுத்துக்கொண்டு ஸ்ரீ அறைக்குள் நுழைந்தாள்.

ஸ்ரீ குளியலறைக்குள் நுழைந்தவள் குளிர்ந்த நீரில் முகத்தை அடித்துக் கழுவினாள். ஏதோ ஒரு பாரம் நீங்கிய உணர்வு.

சற்று மனம் லேசானது போல் உணர்ந்தாள்.  கண்ணாடியில் தனது விம்பத்தை பார்த்தாள். அழுதழுது கண்கள் சிவந்து இருந்தது.

“இதுக்கு வேற இப்போது எக்ஸ்ட்ரா மேக்கப் போடனுமா “ என்ற பெருமூச்சுடன்  குளியலறையிருந்து வெளியே வந்தாள்.

கனகாவிடம் பேசியதிலிருந்து அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை பிறந்தது

இப்போது அந்த அழுத்தம் இல்லை. நடப்பது நடக்கட்டும் என்று மனநிலைக்கு வந்துவிட்டாள்.

டவலால் முகத்தை துடைத்தவள். லேசாக ஒப்பனை செய்துக்கொண்டாள்.

கனகா குளிர்பானத்துடன் அறைக்குள் நுழைந்தவள் ஸ்ரீயிடம் கிளாசை கொடுக்க அதனை வாங்கி பருகியவளுக்கு அப்போதுதான் பசியே உரைத்தது. “ இப்போ தான் அக்கா நிம்மதியா இருக்கு! நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க ?? எப்படியோ முதல்ல அண்ணாகிட்ட இந்த விசயத்தை சொல்லிடனும்!!” என்று பேசிக்கொண்டே கனகாவின் முகத்தை ஏறிட்டு பார்க்க  அவள் ஏதோ யோசனையாக  நின்றிருந்தாள்.

“ அக்கா என்னாச்சு நான் பேசறதா கேக்கறீங்களா?? என்ன யோசனை??” என்றாள் ஜுஸை குடித்துக் கொண்டே “ அது வந்துமா வெற்றி ஐயா கயலை கல்யாணம் பண்ணிட்டாகலாம்” என்றதும் அவளுக்கு புறையேறிவிட்டது.

கனகா அருகில் சென்று தலையை தட்டிவிடவும் “பசியில காது அடைச்சிட்டு போலக்கா எல்லாம் தப்பாகவே கேட்கிது” என்றவள் “ என்ன சொன்னீங்க “ என்று மீண்டும் கேட்டாள்.

“ எல்லாம் சரியாத்தான் கேட்டு இருக்கு  உங்க அத்தைமக கயல்விழி கல்யாணத்தை நி றுத்தி வெற்றி  ஐயா கல்யாணம் பண்ணி  தூக்கிட்டு வந்துட்டாகலாம்!! அதுக்கு நியாயம் கேட்டுதேன் அந்த விக்கிரமன் வந்தானாம்” என்றாள்

“பார்த்தீகளா கொடுமையை?? நியாயம் கேட்க யாரு வந்திருக்கான்னு!! எல்லாம் காலககொடுமை” என்று தலையில் அடித்துக் கொண்டாள் கனகா

“ கயலையா அதுவும் வெற்றி அண்ணாவா என்னால நம்பவே முடியலை!!”

“ ரங்கநாயகி அத்தை எப்படி விட்டாங்க??” என்றாள் கேள்வியாக

“ அந்த பொம்பளைக்கு என்னமா மரியாதை!! எப்படி இருந்த குடும்பம், இந்த பொம்பள வந்தப்பறம் தான் எல்லாம் பிரச்சனையுமே!! இந்த மாணிக்கம் ஐயாவுக்கு வேற யாருமே கண்ணுல தெரியலையா??” என்றாள் குரலில் வெறுப்பை அப்பட்டமாக தெரிந்தது.

“ தப்பு அக்கா பெரியவங்கள அப்படி பேசக்கூடாது!” என்றாள் கண்டிப்பான குரலில்

“அதுக்கு மரியாதை ஒன்னுதான் கேடு!! ஏன்மா நீங்க வேற!!” என்றாள் சலிப்புடன் மேலும் தொடர்ந்தவள்”  ஊருல வேற பொண்ணே இல்லையா?? போயும் போயும் அந்த புள்ளைய கட்டியிருக்கார் பாருங்க!!”

“நம்ம ஐயா குணம் என்ன அவங்க எங்க ?? எனக்கு மனசே ஆறலை !!” என்று புலம்பித்தள்ளிவிட்டாள்.

ஸ்ரீக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.

அவசரமாக தன் தொலைபேசியை தேடிஎடுத்தவள் வெற்றியின் எண்களை டயல்செய்தாள்