தனது தென்னந்தோப்பில் கயித்துக் கட்டிலில் இரண்டு கைகளையும் தலைக்கு கொடுத்து வானத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான் விக்கிரமன்.
“ சிங்கம் மாதிரி நடமாடிட்டு இருந்த மனுசனை இப்படி சாய்ச்சுப்புட்டாங்களே? நான் எங்கே போய் சொல்லுவேன் இந்த கொடுமையை? என்னன்னு சொல்லுவேன் இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா?” என்று அரைமணி நேரமாக ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தான் நரி.
“ பொண்ணை தூக்கினது மட்டும் இல்லாமா? நியாயம் கேட்கப்போன மனுசனை இப்படி குத்துயிரும் கொலையுயிருமா ஆக்கிப்புட்டானுவலே விளங்குவானுகளா நாசமா போறவனுங்க” என்று சந்திரன் குடும்பத்தை தன்பாட்டிற்கு கரித்துக்கொட்டிக்கொண்டிருந்தான்.
“ பாத்தியாடா கீரி அண்ணனை வாயடைச்சுப்போய் கெடக்கறாரு? அவனுங்களை சும்மா விடக்கூடாதுடா? ஏதாவது பண்ணனும்டா?” என்று கீரி கூற “ அண்ணே இப்ப சொல்லுண்ணே என்ன பண்ணனும்னு சொல்லுண்ணே உனக்காக இந்த தம்பி பண்ணுறேன் அண்ணே” என்று நரி தன் பதிலுக்கு கூற இருவரையும் ஒருமுறை தலையைதூக்கி பார்த்த விக்கிரமன் மீண்டும் விட்டத்தை வெறிக்க ஆரம்பித்துவிட்டான்.
“ பாத்தியாடா வாயைக்கூட திறக்க முடியாத அளவுக்கு வாயிலேயே மிதிச்சு இருக்கானுங்க! அண்ணே என்ன அவனுங்க சொத்தையா கேட்டாரு இப்படி மாட்டை அடிக்கற மாதிரி அடி வெளுத்து இருக்கானுங்க” என்று நரி கூற “ நீ ஒண்ணும் கவலைப்படாதேண்ணே உனக்கு தம்பிங்க நாங்க இருக்கோம்! இப்ப சொல்லு உனக்காக நான் ஆளை இறக்குறேன் இப்பவே அந்த வீட்டு பொண்ணை தூக்குறோம்! தாலியை கட்டுறோம்” என்று ஆவேசமாக கூறிக்கொண்டிருந்தவன் “ ஆத்தே” என்ற அலறலுடன் பல்டி அடித்துக்கொண்டு உருண்டோடி போய் விழுந்தான்.
“ ஏன்டா நாரப்பயலே உள்ளூருக்காரன்கிட்ட அடிவாங்கினது பத்தாதுன்னு வெளியூருக்காரன்கிட்ட மிதி வாங்கச் சொல்லுறியா! ஒழுங்கு மரியாதையாக மூடிட்டு இரு” என்று கட்டில் காலின் அருகே அமர்ந்திருந்த நரிக்கும் ஒரு உதை வைத்தான்.
தூரத்தில் விழுந்துக்கிடந்த கீரி இடுப்பைப்பிடித்துக் கொண்டு தட்டுத்தடுமாறி எழுப்பார்க்க அவனது மேலேயே போய் விழுந்து வைத்தான் நரி.
“ ஏன்டா லூசுப்பயலே வேற இடமே கிடைக்கலயா? இங்கே வந்து விழுவியா தள்ளுடா ” என்று எட்டித்தள்ள “ நீ தள்ளுடா நான் விழப்போற இடத்திலதான் நீ வந்து விழுந்துக்கிடப்பயா” என்று மாறித்தள்ளினான்.
இருவரும் இப்படி மாறிமாறி வம்பிழுத்துக்கொள்ள “ டேய் எவன்டா அது இதே என்வீட்டு பொண்ணை தூக்கியிருந்தா அவனை அங்கேயே வெட்டி பொலிப்போட்டு இருப்பேன் நானெல்லாம் மீசை வைச்ச ஆம்பளைடா அது இதுன்னு வீரவசனம் பேசினது?” என்று கேட்க இருவரும் ஒருவரையொருவர் மாறிமாறி பார்த்துக்கொண்டனர்.
“ கேட்கறேன்ல வாயில என்ன கொழுக்கட்டையா இருக்கு சொல்லுங்கடா” என்று மீண்டும் உதைக்கப்போக அவசரமாக நரி கீரியையும் கீரி நரியையும் நோக்கி கைநீட்டி இருந்தனர்.
“ அப்ப உண்மையை சொல்லமாட்டீங்க ரைட்டு! சரி வுடு அப்பறம் எவன்டா அது? என்முன்னாடியே வந்து அவன் பெரிய ஆளுன்னு காட்ட என் வீட்டு பொண்ணுதான் கிடைச்சதா? என் வீட்டில் மட்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருந்தா அங்கேயே நாண்டுட்டு செத்து இருப்பேன்னு சொன்னது எழுந்திரு” என்று கேட்க மீண்டும் ஒருவரையொருவர் கைகாட்டிக்கொண்டனர்.
“ ஆக ரெண்டு பேரும் வாயைத்திறக்க மாட்டீங்க?” என்று தன்கையில் இருந்த தங்ககாப்பை மேலே ஏற்றியவன் இருவரையும் அடி வெளுக்க ஆரம்பித்துவிட்டான்.
ஒருகட்டத்துககுமேல அடித்தாங்க முடியமாமல் நரி “அண்ணே போதும்ணே இதுக்கு மேலே ஒரு அடி விழுந்தாலும் நல்லா இருக்காது சொல்லிப்புட்டேன்” என்று வீராவேசமாக ஆரம்பிக்க “ என்னடா பண்ணுவ” என்று விக்கிரமன் தலையில் தட்ட “ செத்துருவோம்ணே செத்துருவோம் அப்பறம் கொலைக்கேசு ஆகிரும்” என்று கீரி கதறலுடன் முடித்திருந்தான்.
“ தெரியிதுல்லை அப்பறம் என்ன இதுக்குடா என்கிட்ட வந்து அவங்களை பத்தி சொன்னீங்க? நான் தான் சொந்தம்னு சொல்லிக்க எவனும் வேண்டாம்னு ஒதுங்கி இருக்கேன்ல எதுக்குடா உங்களுக்கு இந்த வேண்டாத வேலை?” என்று கேட்க “ அண்ணே நம்ம தங்கச்சிண்ணே விட்டுற முடியுமா? என்னண்ணே?” என்றான் கீரி
“ அவதான் அந்த வெற்றிப்பயப்பின்னாடியே போயிட்டால்ல அப்பறம் தங்கச்சி தொங்கச்சின்னுக்கிட்டு” என்றான் விக்கிரமன்
“ அண்ணே ஆயிரம்தான் இருந்தாலும் கயலு நம்மப்பிள்ளைண்ணே! நாமத்தானே பாத்துக்கனும்! உங்க ஐயாரும் இப்ப உயிரோட இல்லை! அந்த தைரியத்தில்தானே மண்டபத்துக்குள்ளயே புகுந்து தூக்கி இருக்கான் அந்த வெற்றிப்பய! சொத்துக்காக சொந்த தங்கச்சின்னுக்கூட பார்க்காம உங்க ஆத்தாவையே கொன்ன கொலைக்காரனுங்கண்ணே அவனுங்க! அவனுங்கக்கிட்ட கயலை விடச்சொல்லுறீங்களா?” என்று நரி கேட்க “ நான் வேண்டாம்னு போனவங்க யாரும் எனக்கு வேண்டாம்! அவளையோ அந்தக்குடும்பத்தை பத்தியோ இனி எவனாவது பேசினீங்க?” என்று சுட்டு விரலை நீட்டி மிரட்டியவன் “ இத்தனை வருஷம் பழகினவனுங்கன்னுக்கூட பார்க்காம கொன்னு புதைச்சுடுவேன் பாத்துக்கங்க” என்றவன் கட்டிலில் சென்று படுத்துக்கொண்டான்.
உடலெல்லாம் வீக்கங்களுடன் தட்டுத்தடுமாறி எழுந்தவர்கள் “ அப்பறம் எதுக்குடா கயலுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னவுடனே விருட்டுன்னு கிளம்பினாரு?இப்போ இப்படி போட்டு அடிக்கறாரு” என்று நரிக்கேட்க “ அதானேடா நேத்து பாசமலர் ரேஞ்சுக்கு படம் ஓட்டினாரு இன்னைக்கு ஏதோ பட்டும் படாமல் பேசுறாரு அந்த வீட்டில் இருந்து ஏதும் காத்துக்கருப்பு அடிச்சிருச்சோ? சரக்கும் அடிக்கல நிதானத்துலதானே இருந்தாரு? ஏன் இப்படி மாறிமாறி பேசுறாரு” என்று கீரி புலம்பிக்கொண்டே வந்தான்.
“ அவரு எங்கேடா நிதானத்தில் இருந்தாரு ஒருபாட்டில் சராயத்தை ஒரேமடக்குல கவுத்திட்டு அரைப்போதையில் பினாத்திட்டு இல்ல கெடந்தாரு?” என்று நரி காயத்தை ஆராய்ந்துக்கொண்டே கூற “ எதே ஒருபாட்டிலா? எப்படி நாமதான் ஒன்னும் கொடுக்கலையே?” என்று கேட்க “ ஹிஹிஹி நான் தான்டா! அது கயலுப்பிள்ளை கல்யாணப்பத்திரிக்கையை கைல வச்சிட்டு ஒருமாதிரி பாத்திட்டு இருந்தாரா? அதான் நமக்கு வச்சிருந்த சரக்கை கொடுத்தேனா! கல்ப்பா அடிச்சிட்டாரு! அந்த நேரத்தில்தான் நீ வந்து கயலுக்கு வெற்றிக்கும் கல்யாணம் ஆன விசயத்தை சொல்லி ஏதேதோ பேசினியா அப்பறம் நடந்ததுதான் உனக்கே தெரியுமே?” என்றான் நரி.
“ அட நாரப்பயலே இதை முன்னமே சொல்லக்கூடாது?உன்னை” என்று அடிக்கப்பாய “ எங்கேடா சொல்லவிட்ட? நீ பாட்டுல ரயில்பெட்டி மாதிரி கடகடன்னு ஓடிட்டுல இருந்த?” என்று ரொம்ப லேட்டாக எல்லாவற்றையும் கூறினான்.
அனைத்தையும் கேட்டு முடித்தவன் “ மொத்தத்தில செஞ்சிவுட்டல்ல? வச்சிக்கறேன்டா உன்னை” என்று கருவிக்கொண்டான்.
“ என்னதான் இருந்தாலும் அண்ணே பாவம் இல்லைடா? ஒரே ஊருல இருந்தாலும் சொந்த அப்பன் வீட்டுக்கும் போகமுடியலை! தங்கச்சி கல்யாணத்தையும் பாக்க முடியலை எல்லாத்தையும போட்டு புழுங்கிட்டு கெடந்திருக்கும் இல்லை?” என்றான்.
“ எம்புட்டு தைரியம் இருந்திருந்தா நம்ம அண்ணன் மேலேயே கை வச்சு இருப்பானுங்க! அவனுங்களை ஏதாவது பண்ணனும்டா” என்று கூற “ முதல்ல எனக்கு ஏதாவது பண்ணுடா மேலேல்லாம் ஒரே வலி” என்று வீங்கிக்கிடந்த தன் கண்ணத்தை தடவிக்கொண்டே கூறினான்.
“ இதென்ன நமக்கு புதுசாடா?தினமும் நடக்கறதுதானே?” எனறு கீரிக்கேட்க “ இல்லைதான் ஆனால் வலிக்குதே?” என்று நரி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான்.
“ அட நரிப்பயலே இந்த வலிக்கு சூப்பர் மருந்து நான் வாங்கி தரேன் வாடா” என்று கூற “ நாட்டுசரக்கா நாலுப்பட்டில் வாங்கி குளிச்சாத்தான்டா படம்புல உசுரே வரும் வா விரெசா போவம்! ஊருக்குமுன்னே முனியம்மா கடையை போட்டுறுப்பா” என்று குஷியாக கிளம்பினான்.
கட்டிலில் படுத்திருந்த விக்கிரமனோ அதே இடத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் படுத்துக்கிடந்தான்.
கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து ஸ்ரீ இல்லத்தில் நேற்றுதான் காலடி எடுத்து வைத்திருப்பான். அதுவும் போதையில் நிதானமாக இருந்திருந்தால் அந்தப்பக்கம் தலைவைத்துக்கூட படுத்திருக்கமாட்டான். சந்திரனின் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் அப்படியொரு வெறுப்பு.
அவனது கூடப்பிறந்த தங்கை கயலின் திருமணமே ஊரார் சொல்லித்தான் தெரிந்துக்கொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறான். அப்படியொரு நிலைக்கு அவனை தள்ளியது அவனது சித்தி ரங்கநாயகித்தான்.
விக்கிரமனின் தாய் இறந்தப்பிறகு பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தன் வீட்டில் வேலை செய்துக் கொண்டிருந்த ஏழைப்பெண் ரங்கநாயகியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார் அவனது தந்தை. தனது தாயிடத்தில் வேறொரு பெண்ணை வைத்து பார்க்க முடியாமல் அவனது தந்தையிடம் சண்டையிட தந்தைக்கும் மகனுக்கும் இடையே சிறுவிரிசல்.
அந்த விரிசலை பெரும் பிளவாக மாற்றி பதினெட்டே வயதான விக்கிரமனை வீட்டைவிட்டு அவனது தந்தையே வெளியேற்றும் வேலையை சிறப்பாக செய்துவிடடார் ரங்கநாயகி. அதன்பிறகு தந்தையின் மேலிருந்த கோபத்தில் அவரது இறப்பிற்குக்கூட செல்லாமல் மதுமாதுப்போதையில் சுற்றித்திரிந்தான்.
சிறுவயதிலேயே கூடார் சகவாசம்,ஏகப்பட்ட பணம்,கண்டிக்க யாருமில்லாத சுதந்திரம் என அவனது வாழ்வை தானே சீறழித்துக்கொண்டான். இத்தனை வருடங்களை தனிமையிலேயே கழித்த விக்கிரமனுக்கு உறவாக கிடைத்தவர்கள்தான் நரியும் கீரியும்.
அவர்கள்தான் விக்கிரமனுக்கு வேலையாட்கள் தம்பிகள் சொந்தங்கள் என எப்படி அழைத்தாலும் தகும். அவர்களுக்கும் விக்கிரமன் தான் உலகமே!!
அடித்தாலும் உதைத்தாலும் அடுத்த அரைமணி நேரத்தில் அண்ணே அண்ணே என்று அவனது காலடியையே நாய்க்குட்டி போல சுற்றி சுற்றி வருவார்கள். விக்கிரமனும் வேண்டா வெறுப்பாக வேறேவழியில்லாமல் இவர்களை சகித்துக்கொண்டிருப்பதுப்போல் காட்டிக்கொண்டாலும் இருவரையும் அடித்து வெளுக்காமல் பொழுதுபோகாது.
ஏதாவது முட்டாள் தனமாக செய்துவிட்டு அவர்களுக்கும் இவனிடம் உதைப்படாமல் பொழுதுப்போகாது. நன்றாக அடியும் வாங்கிவிட்டு இதையே சாக்காக வைத்து கழுத்து வரை குடித்தால் தான் அன்றைய நாள் நன்றாக நிறைவடையும்.
என்னதான் விக்கிரமனுக்கு ஏகப்பட்ட தீயப்பழக்கங்கள் இருந்தாலும் வேலை என்று வந்துவிட்டால் வெள்ளைக்காரன் ரகம்தான். யாரிடமும் கைகட்டி நின்று வேலைப்பார்க்க பிடிக்காது.
இந்த சிறு வயதிலேயே மிகப்பெரிய ஜவுளி சம்ராஜத்தையே கட்டியெழுப்பி இருக்கிறான். தொழிலில் எப்போதும் நானே ராஜா நானே மந்திரி என சுற்றி வருபவன்.
மூக்கிற்கு மேல் சட்டென கோபம் வந்துவிடும். போதையில் இருக்கும் சமயங்களில்தான் பிறர் சொல்வதை காதுக்கொடுத்தே கேட்பான். அந்த சமயங்களில் யார் என்ன சொல்கிறார்கள் என்ன செய்கிறோம் என எதுவுமே மண்டையில் ஏறாது. கிளிப்பிள்ளைப்போல் சொன்னதெல்லாம் கேட்பான்.
குடித்துவிட்டு போதையில் கிடக்கும் சமயத்தில்தான் கயலின் திருமணத்தில் நடந்த விசயத்தை கீரி வந்து கூறி தன்பக்கத்திற்கு மேலும் சிலபல ஏக வசனங்களை அள்ளிவீசிவிட புல்லட்டைக்கிளப்பிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
போதையில் எதையாவது செய்துவைத்துவிடுவான் என்பதற்காகவே அநேகமாக இரவு நேரங்களில் மட்டுமே குடிப்பான். பகல்வேளையில் முற்றிலும் குடிப்பதை தவிர்த்துவிடுவான். நரியின் மார்கத்தால் குடித்துவிட்டு தலையில் கட்டுடன் படுத்துக்கிடக்கிறான்.
போதைத்தெளிந்து விக்கிரமன் எழும்போது ஸ்ரீ இல்லத்தில் இருந்தான். எப்படி வந்தான் என்ன ஆனது எதுவும் நினைவில்லை. யாரிடமும் சொல்லிக்கொல்லாமல் விடியற்காலை சமயம் விறுவிறுவென வெளியேறி வந்தவன்தான் வீட்டிற்குக்கூட போகாமல் தோப்பிற்கு வந்தவன் மோட்டுவலையை பார்த்துக்கொண்டு கிடக்கிறான்.
இதேசமயம் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு வெள்ளைப்பனியன் மட்டுமே அணிந்து தான் வளர்க்கும் காங்கேயம் காளைகளுக்கு வைக்கோல் வைத்துக் கொண்டிருந்தான் வெற்றி.
இது எப்போதும் நடப்பதுதான். தினமும் காலையில் உடற்பயிற்சியை முடித்துவிட்டு நேறாக இங்கே வந்துவிடுவான்.
பக்கத்தில் ராமைய்யா கழனித்தண்ணியில் காளைகளுக்கு வைத்தியர் கொடுத்த மருந்தை கலக்கிக்கொண்டு இருந்தார்.
“ ராமையா புண்ணாக்கு,தவிடு எதுவும் கொஞ்சநாளைக்கு சேர்க்க வேண்டாம்! மதியம் போல வைத்தியரை வரச்சொல்லுங்க” என்று வாஞ்சையாக காளைகளை தடவிக்கொடுத்தான் வெற்றி
“ ஐயா நல்லாதானுங்களே இருக்காங்க? அப்பறம் எதுக்கு வைத்தியரெல்லாம்? ” என்று இழுக்க “ ஒழுங்காக சாப்பிட மாட்டிக்கிறானுங்க! ரொம்ப சோர்வாக இருக்கானுங்க! குடல் புண்ணாகியிருக்கும்னு நினைக்கிறேன் அதான் வரச்சொல்லிடுங்க ! அதுவும் சரிப்பட்டு வரலைனா டவுனுக்கு கொண்டு போகலாம்” என்றான்.
“ சரிங்க ஐயா” என்று தலையை ஆட்டிக்கொண்டவர் தனது வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாலும் அடிக்கடி வெற்றியையும் காளைகளையும் மாறிமாறி பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.
அவைகளின் முதுகினை நீவிக்கொண்டே காளைகளிடம் வாஞ்சையுடன் பேசிக்கொண்டிருந்தான். காளைகள் வந்த புதுதில் வாயில்லா ஜீவனிடத்தில் என்னத்தை பேசிக்கிட்டு இருக்காரு ? என்று ஏதோ வினோதமாக பார்த்தவர் நாளாக நாளாக இந்த உரையாடலே அவர்களுக்குள் ஏதோ இனம் புரியாத பிணைப்பை ஏற்படுத்தியதை அறிந்துக்கொண்டார்.
சிறிது நேரத்தில் காளைகளுடன் நேரத்தை கழித்தவன் “ ராமைய்யா என்னையே இப்படி பாத்திட்டு இருந்தா எப்படி ?பசங்களுக்கு தாகமா இருக்கும் சீக்கிரம் தண்ணி காட்டுங்க” என்று வீட்டிற்குள் செல்லப்போக
“ ஐயா ஒரு நிமிடம்! உங்கிட்ட கொஞ்சம் பேசனும்” என்றார்.
“ அது வந்து நேத்து ஊருக்காரங்களுக்கு சமைக்கறதுக்கு மேல் வேலைக்கு நிறையப்பேரு வந்து இருந்தாங்கள்ள? அதுல யாரோதான் பண்ணியிருக்கனும்” என்றார்.