அலங்கார தோரணங்கள், பூமாலைகள் என பிரத்தியேகமாக அலங்கரித்து இருந்தது அந்த மண்டபம் .எங்கு கானினும் ஆடம்பரத்தால் இழைத்திருந்தார்கள்.
மண்டத்தின் வாயிலில் ராஜேஷ் வெட்ஸ் கயல்விழி என்ற எழுத்துக்கள் இதய வடிவில் மிகவும் அழகாக எழுதி இருந்தது.
மணமேடையில் ராஜேஷ் ஐயர் கூறிய மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தான் அவனுக்கான சம்பிரதாயங்கள் முடிந்ததும்
“ நாழியாறது பொண்ணை அழச்சிட்டு வாங்கோ” என குரல் கொடுத்தார் ஐயர்.
மணமகள் அறையிலிருந்து மணமேடைக்கு அழைத்து வரப்பட்டாள் கயல்விழி.
பச்சை வண்ண பட்டுடுத்தி தேவதையாக தலைக்குனிந்து நடந்து வந்தவள் தான் எத்தனை அழகு!!
அதிலும் அவளது பேசும் விழிகள் நொடியில் அனைவரையும் வசியம் செய்துவிடும்
கயல் வந்து மணமேடையில் அமரவும்,
ஐயர் அவளளுக்கான சாம்பிரதாயங்களை செய்ய ஆரம்பித்தார்.
இதேசமயம் மண்டபத்தின் வெளியே அதிவேகமாக வந்து சடன் பிரேக் அடித்து நின்றது ஜீப் ஒன்று. அதன் வேகமே அதனை ஒட்டிவந்தவனின் கோபத்தை எடுத்துக்கூறியது.
தனது நரம்போடிய கைகளால் ஜீப்பின் கதவினை திறந்து இறங்கினான் வெற்றிவேல். ஆறடி உயரம் இருப்பான். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டைதான் எப்போதும் உடுத்துவான். அது அவனது தோற்றத்துக்கு தனியொரு கம்பீரத்தை கொடுத்தது
எப்போதும் கணிவும் அன்பையும் மட்டுமே காட்டும் அவனது விழிகளில் இன்று அந்த நிதானம் இல்லை. விழிகளில் அத்தனை ரௌத்திரம்.
விறுவிறுவென மண்டபத்திற்குள் நுழைந்தவன் விழிகளில் ராஜேஷ் வெட்ஸ் கயல்விழி என்ற வாசகம் கண்ணில் படவும், அவனது கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது.
கை முஷ்டியை இறுக்கி தனது கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டான்.
அவன் மண்டபத்துக்குள் நுழையவும் , அனைவரும் ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டே எழுந்து வணக்கம் தெரிவித்தனர். அதனை சிறு தலையசைப்புடன் ஏற்றுக்கொண்டான். வெற்றிவேலை பற்றி அறியாதவர்கள் இந்த சுற்று வட்டாரத்தில் யாருமில்லை. இந்த வயதிலேயே தனக்கென தனியொரு மரியாதையை சம்பாரித்து இருந்தான்.
நிமிர்ந்த நடையுடன் வந்தவன் விழிகள் மணமேடையில் தலைக்குனிந்து அமர்ந்திருந்த கயலின் மீது படிய ஒருகணம் நடை நின்றது .பின்பு ஒரு முடிவெடுத்தவனாக முன்னே நடந்தான்.
“இதோ மூத்தவரே வந்துட்டாரே!!ஆயிரம் தான் இருந்தாலும் அத்தை மக கல்யாணத்துக்கு வராமலா போயிடுவாரு??”
“ மாமன் சாவுக்குக் கூட வராதவரு இத்தனை நாள் இல்லாம என்ன திடீர்னு வந்துருக்காரு??”
“ என்னதான் இருந்தாலும் அவர் கட்டிக்கவேண்டிய பொண்ணு!! வராமலா இருப்பாரு??”
என பலரும் தங்களுக்குள்ளேயே கிசுகிசித்துக்கொண்டார்கள்.
ஐயர் “ கெட்டிமேளம் கெட்டிமேளம் “ எனக்குரல் கொடுக்க, அனைவரும் அட்சதை தூவ எழுந்து நின்றார்கள்.
ராஜேஷ் தாலியை எடுக்கப்போக அதற்குள் தாலியை தன் கைகளில் எடுத்திருந்த வெற்றி.
கயல்விழி மிரட்சியாக அவனை ஏறிட்டு பார்க்க
அவள் விழிகளை பார்த்துக்கொணடே மூன்று முடிச்சிடடு அவளை தனது சரிபாதியாக்கிக் கொண்டான்
அனைவரும் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றனர்.
ராஜேஷ் அவனை நோக்கி” ஏய். …. உன்னை” என கத்திக் கொண்டே எழுந்து வர அவன் முகத்தில் ஓங்கி குத்தினான். அவன் சுருண்டு விழவும் அவன் நெஞ்சில் தன் காலால் எட்டி உதைத்தான்.
அதற்கே சுருண்டு விட்டான், “ சாவடிச்சுடுவன்!! யாருகிட்ட??” என ஒற்றை விரல் நீட்டி மிரட்டியவன்
கயல்விழியின் கைகளை அழுத்தமாக பற்றி மணமேடையை விட்டு இறங்கப்போனவன், திரும்பி அவனையும் அவன் பிடியில் இருந்த கயலையும் குரோதத்துடன் பார்த்துக்கொண்டிருந்த ரங்கநாயகியிடம் திரும்பி
“ என்ன அத்தை இப்போ ஒத்துக்கறிய உன் மருமகன் வீரன்னு??” என்று எல்லலாக கூறினான்.
ஆவேசத்துடன் அவர் ஏதோ கூறவர
“ ஆஹான் …..ஷ்ஷ்ஷ்ஷ்..!!” என்று தனது வாயில் சுட்டு விரலை வைத்து சைகை செய்தவன்
“ ரொம்ப ஆடிட்ட!! இனிமே பார்ப்ப இந்த வெற்றியோட ஆட்டத்தை!!”
“ வரட்டுமா??” என்றவன் கயலை கூட்டிக்கொண்டு சென்று ஜீப்பில் ஏறியவன் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டான். வெற்றிவேலை தடுப்பதற்கு யாருக்கு தைரியமிருக்கும். என்ன ஏதென்று புரியாமல் அனைவரும் வேடிக்கை மடட்உமே பார்த்திருந்தார்கள்.
ஜீப் அவன் கைகளில் உயர் வேகத்தில் பறந்தது.
செல்லும் அவர்களையே வன்மத்துடன் பார்த்திருந்தார் ரங்கநாயகி.
அனைவரும் மும்முரமாக வேலைசெய்துக்கொண்டிருக்க சந்திரனின் வீட்டிற்குள் நுழைந்தது விக்ரமனின் புல்லட் வண்டி.
வண்டியிலிருநது இறங்கியவன் தன் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டே நடந்து வந்தவன் வாசலில் நின்று
“ யோவ் பெரிய மனுசா!! வெளியே வாயா!!” என ஆவேசமாக குரல்கொடுத்தான்.
அவன் சத்தத்தில வேலை செய்துக் கொண்டிருந்த அனைவரும் திரும்பி அவன்புறம் வந்தனர். வந்தவர்கள் “என்னாச்சு?? ஏன் கத்திகிட்டு இருக்கான்?? இவன் தங்கச்சிக்கு இன்னைக்கு கல்யாணம் ல??” என மாறி மாறி பேசிக்கொண்டார்கள்.
அவர்களை கண்டுக்கொள்ளாதவன்
“ பெத்த புள்ளய ஒழுங்காக வளர்க்க துப்பில்லை!! நீயெல்லாம் என்னய்யா பெரிய மனுசன்!! வெளியே வாயா!!” என ஆத்திரம் அடங்காமல் கத்திக்கொண்டிருந்தான்.
சத்தம் கேட்டு முதலில் வேலு தான் வெளியே வந்தான். விக்கிரமன் ஆவேசமாக கத்திக்கொண்டிருப்பதை பார்த்தவன்” இது மாணிக்கம் ஐயா பையன் ஆச்சே!! இங்கே என்ன பண்ணுறான்??” என
யோசித்துக் கொண்டே அவனருகில் வந்தான்.
மதுவாடை குப்பென அவன் முகத்தில் அடித்தது. கண்கள் இரத்தமென சிவந்திருந்தது.வார்த்தை குளறிபடிதான் வந்தது. அவன் நிதானத்தில் இல்லை எனப் புரிந்தது
வேலுவந்து அருகில் நின்றதை கண்டுக்கொள்ளாத விக்ரமன் இன்னுமே உரக்க கத்திக்கொண்டிருந்தான். என்ன ஏதென்று புரியாவிட்டாலும் சந்திரனை மரியாதையில்லாமல் அழைக்கவும்
“ என்னப்பத்தி என்ன வேணும்னாலும் பேசு!! ஆனால் ஐயாவ தரக்குறைவா பேசுன!!”
“ அப்படித்தான்டா பேசுவேன்!! என்னடா பண்ணுவ??”என்றான் தள்ளாடியபடி, வார்த்தை குழறியது.
“ விக்கிரமா!!” என்று குரலுயர்த்தினான் வேலு.
“ ஏஏ.. அவனுக்கு என்னடா மரியாதை !! முதல்ல அந்த ஆள வெளியே வரச்சொல்லுடா!! என்று வரம்பி மீறி பேச ஆரம்பிக்கவும்
வேலுவிற்கு கோவம் வந்துவிட்டது.
“ சொல்லிகிட்டே இருக்கேன்!!” என்றவன் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டே அவன் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டான்.
கீழே விழுந்தவன் எழுந்து “ என்மேலயே கை வக்கிறியா??” என்று ஆத்திரத்துடன் கேட்டுக்கொண்டே வேலுவை தாக்க ஆரம்பித்துவிட்டான்.
வேலுவும் விக்கிரமனை மாறி அடிக்க ஆரம்பிக்க இருவருக்கும் கைகலப்பாகி விட்டது.
சுற்றி நின்றிருந்தவர்கள் சண்டையிட்டு கொண்டிருந்த இருவரையும்
பிரித்துவிட முயற்சிக்க , அவர்களால் அது முடியவில்லை.
இருவரும் ஆவேசமாக சண்டையிட்டார்கள். கீழே விழுந்து பிரண்டு சண்டையிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றி இருந்தவர்கள் இருவரையும் வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு எதுவும் செய்யமுடியவில்லை.
வேலு சென்று வெகுநேரமாகியதால் வெளியே வந்த சந்திரனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி.
அவசரமாக அவர்களருகில் வந்தவர் “வேலு !!” என்று ஒரு வார்த்தை தான் சொல்லியிருப்பார் விக்ரமனை விட்டு விலகியவன் கையை உதறிக்கொண்டே சந்திரனின் அருகில் வந்து நின்றான்.
“ யோவ் இந்த நடிப்பெல்லாம் வேற யாருகிட்டயாவது வச்சிக்க!! இந்த விக்கிரமன் கிட்ட வேண்டாம்” என்று தள்ளாடினான்
“ ஐயா!! ஒரு வார்த்தை சொல்லுங்க!! முடிச்சு விட்டுறலாம் !! ரொம்ப துள்ளுறான்!!” என்று வேலு சொல்லவும்
“ முடிப்பய்யா? முடிப்ப!! என்ன பார்த்த எப்படி தெரியுது??” என தடுமாறியபடி அருகில் வந்தவன்
“நானெல்லாம் நூறு பேரு வந்தாலும் அடிச்சு ஓட விடுவேன்டா!! பாக்கறியா??” என கையை மடிக்கிக் கொண்டே மீண்டும் சண்டைக்கு வர
“ நிறுத்துங்கடா ரெண்டு பேரும்!!” என்று சந்திரன் தான் வந்து விலக்கிவிட்டார்.
“ வேலு!! நான் சொல்லுற வரைக்கும் அமைதியா இரு!!”
“ இல்லங்கயா அவன்……” என பேச வர
“வேலு…!” என்றார் அழுத்தமான குரலில்.
அந்தக்குரலுக்கு மறுப்பேச்சில்லை அவனிடம், கையைக்கட்டி கொண்டு அமைதியாக நின்றான். ஆனால் சந்திரனை விட்டு விலகவில்லை. அரனாக அவர் அருகிலேயே நின்றான். பெருமையாக அவனை பார்த்தவர் திரும்பி விக்கரமனிடம் என்னவென்று விசாரித்தார்.
சம்பவ இடத்தில் அவனில்லை. எனவே காதின் வழி அவன் கேட்டறிந்த அனைத்தையும் கூறி முடித்தவன் “ என் தங்கச்சியை குடுங்கய்யா!! அவளையும் என்னால பலி கொடுக்க முடியாது!!” என்றான் சினத்துடன். அதனை சொல்லும்போதே அவன்குரலில் ஒரு வலி. அதை அவன் மட்டுமே அறிவான்.
சந்திரனுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. “ என்னப்பா சொல்லுற?? மூத்தவரா??” என்றார் குழப்பத்துடன்
“ என்னைப்பார்த்தா லூசு மாதிரியாய்யா இருக்கு??” என கேட்டுக்கொண்டிருந்தவன் அப்படியே மயங்கி சரிந்தான்.
தலையிலிருந்து இரத்தம் வடிந்துக்கொண்டிருந்தது.
“விக்கிரமா!!” எனக்கதறியபடி சந்திரன் தான் முதலில் அவனை தாங்கியிருந்தார்.
அவன் விலகியே நின்றாலும் அவர் தூக்கி வளர்த்த பிள்ளையல்லவா??
“ வேலு தூக்கு!!” என்றதும் விக்கிரமனை துக்கி தோளில் போட்டவன் வீட்டிற்குள் நுழைந்து ஒரு அறைக்குள் படுக்க வைத்தான்.
அவனுக்கான் முதலுதவிகளை செய்தவன் மருத்துவரை அழைத்தான். மருத்துவர் வந்ததும் அவனுக்கான் சிகிச்சைகளை ஆரம்பித்துவிட்டார். விக்கிடமனுக்கு சிகிச்சையளித்துவிட்டு அறையிலிருந்து வெளியே வந்தவர்
“ ஒன்னும் பயப்படுறதுககு இல்லை மிஸ்டர்.வேலு !! குடிச்சிட்டு எங்கயோ சண்டை போட்டிருப்பார் போல!! தலையில ப்ளீடிங் ஆகுறத கூட கவனிக்காமல். இருந்திருக்கார். போதை, ப்ளட் லாஸ் ரெண்டும் சேர்ந்து மயங்கிட்டார்” என்று அவனுக்கான மருந்துகளை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்
“ ம்ம்ம்” என்று மட்டுமே சொன்னான். வேறென்ன கேட்க முடியும் அடித்ததே அவன் தானே.
வீட்டிற்குள் வந்த சந்திரன் அழைத்தது என்னவோ வெற்றிவேலுக்குத்தான். லைன் பிசியாகவே இருந்தது.
“விக்கிரமன் என்னெவெல்லாமோ சொல்லுறான்” என்று விக்கிரமன் வந்ததிலிருந்து நடந்த அனைத்தையும் கூறி முடித்தவர்
“அவன் சொல்லறதெல்லாம் உண்மையா வெற்றி??” என்று கேட்டார்.
“உண்மைதான்பா” என்றான் தயங்கியபடி, அவன் செய்தது ஒன்றும் சிறு தவறில்லையே?? அத்தை மகளாயினும் ஒரு பெண்ணின் திருமணத்தை நிறுத்தி அவள் கடத்தி வந்திருக்கிறான்.
“ அப்போ கயல் ??”
“ என்கூடத்தான் இருக்கா!!”
“ என்னப்பா ஆச்சு” என்றார் நிதானமாகத்தான் கேட்டார். அவர் குரலில் கோபமோ வருத்தமோ இல்லை
எப்படி சொல்லுவான்?? நடந்தவை தெரிந்தால் மனிதன் உடைந்துவிடுவாரே!! எனவே அமைதியை துணையாக்கிக் கொண்டான்.
“ என்புள்ள தப்பே செஞ்சாலும் தலைநிமிர்ந்து சொல்லுவான்!! அவனே ஒரு விசயத்த சொல்ல தயங்கி நிக்கிறான்னா.. ..அதுக்கு பின்னாடி கண்டிப்பா ஏதாவது ஒரு காரணம் இருக்கும்!!!” என்றார்.
அவன் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது. இதுதான் என் தந்தை என்ற கர்வபுன்னகை அது.
“ உனக்கு எப்ப சொல்லனும்னு தோனுதோ அப்ப சொல்லு!! அப்பா இருக்கேன்!!” என்றார்.
அந்த வார்த்தைகள் அவனுக்குள் புது தெம்பை கொடுத்திருந்தது. மனதால் சோர்ந்திருந்தவனுக்கு ஒரு தெளிவு பிறந்தது. அவனும் எத்தனை அதிர்ச்சிகளைத்தான் தாங்குவான்.
“மாப்ள வீட்டிலிருந்து வந்துடுவாங்க!! நீ வறீயா ?? இல்ல அப்பாவே பாத்துக்கட்டுமா??” என்று கேட்டார்.
“ இல்லப்பா நீங்களே பார்த்துககோங்க! நான் ரொம்ப தூரத்தில இருக்கேன் வரமுடியாது!!
“ சரிப்பா!! பத்திரம்!!” என்றவர் அழைப்பை துண்டித்துவிட்டு வேலைகளை பார்க்க ஆரமாபித்துவிட்டார்.
மருத்துவரை அனுப்பிவிட்டு வந்த வேலு அவர்களது சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டு தான் இருந்தான். என்ன மாதிரியான புரிதல் இது என்று அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அப்படி என்ன வெற்றியின் மீது அப்படியொரு அசைக்க முடியாத நம்பிக்கை!!
சந்திரனிடம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவன் பெருமூச்சுடன் சீட்டில் தலைசாய்த்து உறங்கிக் கொண்டிருந்த கயல்விழியை வலி நிறைந்த விழிகளால் ஏறிட்டு பார்த்தான்.
ஆதரவாக அவள் தலைக்கோதியவன் அடுத்தடுத்து செய்ய வேண்டியதை மனதிற்குள் திட்டமிட்டவன் மணியை பார்த்துவிட்டு நம்பரை டயல் செய்தான்.
அந்தப்பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் சிறிது நேரம் பேசினான்.
பின்பு வண்டியை உயிர்ப்பித்து வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.
ஸ்ரீ இல்லம் முன்பு வந்து நின்றது வேந்தன் வந்த கார்.
“ ஏன்டா இப்படி உயிரை எடுக்கிற??” என புலம்பிக்கொண்டே வண்டியிலிருந்து இறங்கனார் கணேசன்.
“ எல்லாம் ஒரு கிலுகிலுப்புக்குத்தான் மாம்சு!!” என கணேசனிடம் வம்பிழுத்துக்கொண்டே வண்டியிலிருந்து இறங்கினான் வேந்தன்.