அத்தியாயம் -15

மாலை நேரம்போல் கழுத்தை தடவிக்கொண்டே சோர்ந்த நடையுடன் அறைக்குள் நுழைந்தாள் ஸ்ரீ. மேசையில் அமர்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்த ஜெனியின் முதுகு பக்கம் மட்டுமே தெரிந்தது.

 “ ஜெனி ஒரு காஃபி சொல்லேன் செம்ம டயர்டாக இருக்கு “ என்று கொண்டே கட்டிலில் சரிந்துவிட்டாள்.

எழுதிக்கொண்டிருந்ததை அவசரமாக புத்தகங்களுக்கு நடுவே ஒளித்து வைத்தவள் கண்ணைத்தொடைத்துக்கொண்டாள். பின்பு முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு “சொல்லாம கொல்லாம  காலையிலேயே கிளம்பி போன இப்பதான் திரும்பி வற!!இதுல காஃபி தான் ஒரு குறை  எங்கடி போன??” என்றுகொண்டே திரும்பினாள்.

“ அது சர்ப்ரைஸ் இப்ப சொல்ல முடியாது ” என்றிட “ சர்ப்ரைஸா??  யாருக்குடி கொடுக்கப்போற??” என்று கட்டிலில் வந்து அமர்ந்தாள்.

“ என் செல்ல பப்ளிமாஸ்க்குத்தான் அப்படியே பேச்சு மூச்சில்லாம ஸ்டர்ன் ஆகி நிக்கப்போற பாரு??” என்றவள் அவளது மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டாள்.

ஆதரவாக அவளது தலையை கோதிவிட சுகமாக கண்மூடிக்கொண்டாள். முகத்தில்  சோர்வு அப்பிக்கிடந்தது.  “ ஹெலோ மேடம் இப்படி ப்ளாக் பண்ணிகிட்டா காஃபி என்ன பறந்து வருமா எழுந்திரு” என்று அவளை உசுப்பினாள் ஜெனி.  அவளது கையைப்பிடித்து தலைக்கு கொடுத்தவள் “ இப்படியே இரேன்டி உன்கைப்பட்டாலே இதமா இருக்கு” என்று அவளை அசையவிடாமல் படுத்துக்கொண்டாள்.

“ ஓஓ இருக்கும் இருக்கும் மசாஜ் வேணும்னா கேளேன்டி எதுக்கு சுத்தி வளைச்சு மூக்க தொடுற” என்று மெல்ல அவளது நெற்றியை பிடித்துவிட ஆரம்பித்தாள்.

“உன் கையில் என்னவோ மேஜிக் இருக்கு ஜெனி நீ தொட்டாலே டயர்ட் எல்லாம் இருந்த இடம் தெரியாம ஓடிப்போயிடுது” என்று அவளது முகம் தெரியும்படி திரும்பி படுத்தவள் “ இன்னும் ஆறு மாசம் உன்னை பார்க்காம எப்படி இருக்க போறேனோ தெரியலை? உன்னை, உன் ஓட்ட ரிங்டோனை, இந்த கீச்கீச் தொண்டையை, இந்த மசாஜை  எல்லாத்தையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்று அவளது கண்ணத்தை வருடினாள்.

“ போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போயிகிட்டு இருக்கு” என்று அதனை கேட்டு கலகலவென சிரித்தவள் “இது உனக்கே ஓவரா இல்ல நான் என்ன வாழ்க்கை முழுக்க உன் கூடவேவா இருக்கப்போறேன் இன்னும் ஒரு வருசத்தில் நீ ஏதோ ஒரு மூலையிலையும் நான் ஒரு மூலையிலையும் தனிதனியாக பிரிந்து போகப்போறோம்” என்று சொல்ல “ இல்லை நீ வேணுமின்னா பாரு நான் எப்பவும் உன்கூடவே இருப்பேன் உன்னை விடவேமாட்டேன் “ என்றாள்.

“ ஆசைதான் இன்னும் ஐந்து வருஷம் கழிச்சு கேட்டா ஜெனியா அப்படின்னா யாரு? எப்படி இருப்பா? என்று யோசிச்சுக்கிட்டு நிற்கத்தான் போற”

“ நான் உன்னை மறக்கறதா ஜான்சே இல்லை”

“ படிப்பு முடிஞ்சதும் ஆளாலுக்கு வாழ்க்கையோட ஓட்டத்தில் தட்டுத்தடுமாறி ஓட ஆரம்பிச்சிடுவோம் இதுல  நீ என்னை கட்டிட்டு அழப்போறியா??என் நினைவுகளைக்கூட பாரம்னு தூக்கி எறிஞ்சிட்டு போகிடுவ” என்றாள்.  இதை முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டுத்தான் சொன்னாள். ஆனால் அந்த வார்த்தைகளில் இருந்த வலி ஏராளம். அதனை சொல்லில் வடிக்க இயலாது.

“ நீ வேணுமின்னா பாரு ஜெனி இந்த உலகத்தில் நீ எந்த மூலையில் இருந்தாலும் நான் உன்னை தேடி கண்டுபிடித்து வருவேன் நீயே என்னை மறந்தாலும் நான் மறக்கமாட்டேன் கடைசி வரை உன்கூடவே இருந்து உன்னை டார்ச்சர் பண்ணுவேன்” என்று உறுதியாக கூறினாள்.

ஏன் இதெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. என்னென்னவோ சம்மந்தம் இல்லாமல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இனி பேச முடியாது என்று நினைத்தார்களோ தெரியவில்லை. அவர்களது நட்பு தொடங்கியதில் இருந்து இன்று வரை நடந்த அனைத்து நிகழ்வுகளையும் பேசினார்கள். பேசபேச சலிக்கவில்லை.

நன்றாக இருட்டியும் இருந்தது. ஆனாலும் அவர்கள் பேச்சு முடியவில்லை. முடிக்கவும் தோன்றவில்லை. திரும்பி சுவர் கடிகாரத்தை பார்த்தாள் ஜெனி மணி எட்டை நெருங்கி கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் கேண்டீனை மூடி விடுவார்கள் என்று யோசித்துக்கொண்டே போனை எடுத்தாள்.

“ உனக்கு நியாபகம் இருக்கா ஜெனி அன்னைக்கு மட்டும் நீ இல்லைனா கண்டிப்பாக நான் பரலோகம் போயிருப்பேன் இல்லை?” என்று அவளது முகத்தை நிமிர்ந்து பார்க்க பட்டென அவளது வாயில் அடித்தவள் “ எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன் அப்படி சொல்லாதேன்னு பைத்தியம்” என்று கடிந்தாள்.

“ ப்ச் அதான் காப்பாத்திட்டியே அப்புறம் என்னடி குத்துக்கல்லு மாதிரி உன்முன்னாடி இருக்குறேனே” என்றிட “ இப்ப நினைச்சாலும் எனக்கு பதறுது தெரியுமா அப்படி என்னடி உனக்கு மழை ஃபேன்டசி வேண்டி கிடக்கு” என்று ஃபோனில் ஸ்ரேக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டே கேட்டாள்.

“ ப்ச் மழைடி அதை பார்த்தாலே என்கால் நிக்கமாட்டேங்குது நான் என்னப்பண்ண??” என்று கண்ணை சுருக்கினாள்.

“ அதுக்காக இப்படியா தலைகால் புரியாம குதிப்பாங்க??” என்று அந்த நாள் நினைவில் கடுகடுத்தாள்.

“ எல்லாம் அந்த சோடாப்புட்டியால தான் !!அந்த நாசமா போனவன் மட்டும் என் கையில் கிடைக்கட்டும் இப்படியா கண்ணுமண்ணு தெரியாம வண்டிய ஓட்டிட்டு வருவான் முட்டாயப்பய” என்று ஸ்ரீ பல்லைக்கடித்தாள்.

“ ஆமான்டி நடுரோட்டுல நின்னு பைத்தியம் மாதிரி தையத்தக்கான்னு ஆடிட்டு இருப்ப அவன் வண்டியை தலை மேல தூக்கி  வச்சிட்டு போவான் பாரு” என்று செல்லி சிரிக்க கதவை படாரென திறந்துக்கொண்டே ஸ்ரே உள்ளே நுழைந்தாள். கையில் காஃபி கப் இருந்தது.  அதனை கொண்டு வந்து ஜெனி கையை பிடித்து திணித்தவள் “ இந்தா புட்டியில் போட்டு தாலாட்டு பாடி தூங்க வை ராட்சசி படுத்து இருக்காப்பாரு நல்ல மலைப்பாம்பு மாதிரி” என்று சிடிசிடுத்தவள் பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்.

கையில் இருந்த கப்பையும் பாத்ரூம் கதவையும் மாறிமாறி பார்த்தவள் “ என்னடி பண்ண?” என்று சரியாக யூகித்து கேட்டாள்.

“ சொன்னேன் இல்லை சர்ப்ரைஸ்” என்று அவளது கண்ணத்தை பிடித்து கொஞ்சியவள் காஃபியை எடுத்து ஆர அமர சூடு பரக்க குடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவள் தனது உடைமைகளை எடுத்து அழுதுக்கொண்டே அடுக்க ஆரம்பித்துவிட ஒன்றும் புரியாமல் முழித்துக்கொண்டு அமர்ந்திருந்தது என்னவோ ஜெனி தான்.

பின் சுதாரித்துக்கொண்டு “ ஸ்ரே என்ன பண்ணுற நீ!!இந்த நேரத்தில் எதுக்கு பேக் பண்ணிட்டு இருக்கற?? எங்கே போற” என்று அவளது கையை பிடித்து தடுக்க “ விடு ஜெனி நான் எக்கேடா கெட்டு போனால் உனக்கென்ன நீங்க நல்லா சந்தோஷமா இருங்க நான் போறேன்” என்று அவளது கைகளை உதறியவள் பாதிப்பொருட்களை அடுக்கியிருந்தாள்.

“ என்னடி இப்படி சம்மந்தம் இல்லாமல் உளறிட்டு இருக்க லூசு மாதிரி பண்ணாதே”

“ நான் லூசுதான் பிரண்டு பிரண்டுன்னு உங்களையெல்லாம் நம்பினேன் பாருங்க நான் லூசுதான் பைத்தியம் தான்” என்றவள் பேகை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேற அவளது கையை இறுக பற்றி கொண்டவள் “ இநத நேரத்தில் எங்கேடி போவ என்னாச்சு உனக்கு” என்று கேட்க “ சும்மா அக்கறை இருக்கற மாதிரி நடிக்காதே ஜெனி!! நான் எக்கேடா கெட்டு செத்தா உனக்கென்ன??” என்று அவளது கையை உதறி தள்ளினாள்.

“ ஸ்ரே அப்படி சொல்லாதே என்று எத்தனை தடவை சொல்லியிருக்கேன் அடிச்சேன்னா பாத்துக்க“ என்று கையை ஓங்க “ என் குழந்தையை கொன்னுட்ட இப்ப என்னையும் கொன்னுடு” என்று ஆங்காரமாக கத்தினாள்.

அவளது கை அப்படியே அந்தரத்தில் நின்றுவிட்டது.

அப்படியே மூச்சுபேச்சில்லாமல் ஸ்டர்ன் ஆகி நின்றுவிட்டாள்.

 கண்களில் இருந்து கரகரவென கண்ணீர் வழிய ஆரம்பித்துவிட்டது.

அந்த வார்த்தைகளை அவளால் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“ ஏன்டி நிறுத்திட்ட அடி!! அடிச்சு கொல்லு” என்று அவளது தோளை பிடித்து உலுக்க “ ஸ்ரே! எதுக்கு இப்படி ஹார்ஷா நடந்துக்கற??அவளுக்கு எதுவும் தெரியாது விடு” என்று ஜெனியை அவளிடம் இருந்து விலக்கினாள் ஸ்ரீ.

“ என் வாழ்க்கையையே அழிச்சிட்டியேடி நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட” என்று ஜெனி மீது பாய இருவருக்கும் நடுவில் வந்து  நின்றுகொண்ட ஸ்ரீ

“ வேண்டாம் ஸ்ரே  தேவையில்லாம வார்த்தையை விடாத” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.

“ நீ பேசாதடி துரோகி!! நம்பினேன்டி இப்படி மொத்தமா ஏமாத்திட்டியே??” என்று சொல்ல “ பாத்து பேசு ஸ்ரே நான் பேச ஆரம்பிச்சா தாங்கமாட்ட”

“ அப்படி என்னடி பேசுவ பேசு என் குழந்தை,வாழ்க்கை எல்லாத்தையும் மொத்தமா சிதைச்சுட்டீங்களேடி”  என்று சொல்ல அதற்கு மேல் ஸ்ரீக்கு பொறுமை போய்விட்டது.

 “ சும்மா குழந்தை குழந்தை என்று குதிக்கிறியே இது என்ன முதல் தடவையா?? சொல்லுடி ஹான்” என்று அவளை உறுத்து விழிக்க ஸ்ரேயாவால் வாயை திறக்கவே முடியவில்லை.

“ கொஞ்சம் கூட உங்களுக்கு மனசாட்சி உறுத்தலை ஸ்ரே? எனக்கு உறுத்துது  ஒருத்தி தேவையே இல்லாமல் உங்களால் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கா அவமுன்னாடியே இரண்டு பேரும் ஜோடியா சுத்திக்கிட்டு இருக்கீங்க?? ஏமாத்திட்ட ஏமாத்திட்ட என்று சொல்லிட்டே இருக்கியே அந்த பிரச்சினைக்கு பிறகு எத்தனை பேரு அவளை குத்திக்காட்டி பேசியிருப்பாங்க கேவளமாக பாத்துயிருப்பாங்க ஆனால் அவ ஒருவார்த்தை வாயை திறந்து இருப்பாளா?? வாயை திறந்து இருந்தா இப்படி அவளை நிக்க வச்சு கேள்வி கேட்டிட்டு இருந்து இருப்பியா நீ??”

“ ஒருத்தி ஊசியால்  குத்தும் போது வலிக்கலை என்று சொன்னா அவளுக்கு உணர்வே இல்லைனு அர்த்தம் இல்லை!! இதைவிட பெரிய வலியை தாங்கிட்டு இருக்கேன் இதெல்லாம் ஒரு வலியா அப்படின்னு அர்த்தம்!! அதையே காரணமாக வச்சி திரும்ப திரும்ப குத்தக்கூடாது ஸ்ரே!! அவளும மனுசி தானே கொஞ்சமாச்சம் அவ உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தீங்களா?? திரும்ப திரும்ப அதே தப்பை பண்ணிட்டு இருக்கீங்க??”

“ அவளுக்காக என் வாழ்க்கையை எதுக்குடி கெடுத்த??”என்று ஆதங்கமாக கேட்டாள்.

“ என்னடி கெடுத்துட்டேன் ஏன் இதுதான் நான் காதலிக்கற பொண்ணு அவளை தான் பார்க்கப்போனேன் என்று சொல்ல ஒரு நிமிடம் ஆகுமா ஒரே வீட்டில் தானே இருக்காங்க அவன் அப்பாதானே வாயை திறந்தா என்னவாம் ?” அப்படி என்ன பண்ணிடுவாங்க?தான் லவ்வுக்காக இதைக்கூட பண்ணமாட்டானாமா?? யாரோ ஒருத்தி வந்து தான் அந்த பழியையும் ஏத்துக்கனுமோ?”என்று திரும்பி கேட்க அவளிடம் பதில் இல்லை.

“ என்னடி பதிலையே காணோம் நான் சொல்லவா அப்படி ஓபனா ஒத்துக்கிட்டா அவன் கமிட்டட் என்று தெரிஞ்சிடும்ல அப்பறம் பணக்கார வீட்டு பொண்ணா பார்த்து அமெரிக்கால போய் செட்டில் ஆகுற அவங்க அம்மா கனவு எப்படி நிறைவேறும்” என்று இழுத்து கூறியவள் “ இவனெல்லாம் காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணுற கண்ணியமான ஆம்பள இல்லைடி டைம்பாஸ்க்கு லவ் பண்ணுறவன் அவனை நம்பி ஏமாறாதே ஸ்ரே”

“ நீ பாட்டுக்கு கண்டமேனிக்கு உளறாத ஸ்ரீ”

“ நான் உளறுறேனா உண்மையாக காதலிக்கற எந்த ஆம்பிளையும் தன் காதலுக்கு கற்பை விலையாக கேட்கமாட்டான் ஸ்ரே, அவனுக்கு உன் மேல இருக்கறது லவ் இல்லை வெறும் லஸ்ட் தான் புரிஞ்சுக்கோ, உண்மையாக காதலிக்கறவன் உரிமையில்லாம  உன் நிழலைக்கூட தொட நினைக்க மாட்டான்” என்று அவளுக்காக பேசினாள்.

“ உன் தப்பை மறைக்க அவன் மேல பழியை போடாதே ஸ்ரீ”

“ என்னடி தப்பு பண்ணிட்டேன் நான் பண்ணது கரெக்ட் தான்!! ஒன் பர்சன்ட் கூட ரிக்ரெட் பண்ண மாட்டேன்” என்று உறுதியாக கூறினாள்.

“அவங்க பேரன்ஸ்க்கு திருட்டுத்தனமா  வீடியோ எடுத்து அனுப்பினது தப்பில்லை!! என்னை ஏமாத்தினது தப்பில்லை??” என்று அவளை குற்றம் சாட்டினாள்.

“ ஓஓ அவன் பெருமையாக இப்படி எமாத்தினேன் அப்படி ஓடுனேன் என்று கதை சொல்லுவான் அதை கேட்டு நீ வேணுமின்னா சிலிர்த்து போ என்னால முடியாது”

“ திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து கடைப்பரப்பிட்டு பெருமை வேற பட்டுக்கறியா நீ”

“  ஆமாம்டி நான் தான் வீடியோ எடுத்தேன்!! நேரிலேயே போய்!! பாருங்க உங்க புள்ளையோட லட்சனத்தை என்று  ஸ்க்ரீன் போட்டு காட்டினேன் அதுமட்டுமில்லை நாளைக்கு காலேஜ் ஆடிட்டோரியம்ல ஃப்ரீ ஷோ போடப்போறேன் போதுமா” என்றாள்.

“ உங்களை நம்பி தானே சொன்னான் அதைப்போய் வீடியோ எடுத்து காட்டி இருக்கியே ஊன்னையெல்லாம் மனசாட்சியே இல்லாத உன்கிட்ட போய் பேச வந்தேன் பாரு என்ன சொல்லனும்  உங்க மூஞ்சியில முழிக்கறதே பாவம்டி ச்சே” என்றவள் அறையை விட்டு வெளியேற போக“ ஸ்ரே அவனை நம்பாத!! உனக்கு இன்னும் லைஃப் இருக்கு “ என்று கத்த அவள் காதிலேயே வாங்கவில்லை திரும்பி கூட பார்க்காமல் சென்று விட்டாள்.

“ உனக்கெல்லாம் பட்டாதான்டி புத்தி வரும்” என்றவள் ஜெனியை திரும்பி பார்க்க கற்சிலைப்போல் வெறித்த பார்வையுடன் கட்டிலில் அமர்ந்திருந்தாள். கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்துக்கொண்டே இருந்தது.

மெதுவாக சென்று அவளது தோளை தொட “ நான் கொலைகாரி இல்லை நான் கொல்லலை நான் குழந்தையை கொல்லை நான் இல்லை “ என்று பித்து பிடித்தவள் போல் பிதற்ற ஆரம்பித்து விட்டாள்.

“ ஜெனி இங்கே பாரு நீ ஒன்னும் பண்ணலை, நீ காரணம் இல்ல” என்று அவளை சமாதானப்படுத்த முயல “இல்லை நான் தான் கொன்னுட்டேன் இந்த கையாலேயே கொன்னுட்டேன் நான் பாவி எனக்கெல்லாம் வாழவே தகுதி இல்லை”என்று ஆக்ரோஷம் வந்து கத்த அவளது முகத்தை கைகளில் ஏந்தியவள் “ ஜெனி இங்கே பாரு  என்னை பாரு நீ எதுக்கும் காரணம் இல்லை நான் சொல்லுறேன்ல இதெல்லாம் சும்மா விளையாட்டுக்குத்தான்” என்றாள்.

“ இல்லை நீ பொய் சொல்லுற நான் வாழவே கூடாது நான் வாழவே கூடாது” என்று மாறி மாறி உணர்ச்சி வசப்பட்டு கத்த ஆரம்பித்துவிட ஜெனியின் கண்ணத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.

கண்ணத்தை பிடித்து கொண்டு தன்னையே கலங்கிய  விழிகளுடன்  பார்த்தவளை இறுக அணைத்துக்கொண்டவள் “ அவளுக்காக நீ ஏன்டி உன்னை கஷ்டப்படுத்திக்கற உனக்கு நான் இருக்கேன் ஒன்னும் இல்லை” என்றிட  குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விட்டாள். “ நான் இல்லைடி நான் எதுவும் பண்ணலை என்னை நம்பு ப்ளீஸ்” என்று மாறிமாறி பிதற்றியவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.