Advertisement

அத்தியாயம் 4

கோவிலின் வெளியே வந்த மூவரும் விதுரன் ஜீவிதாவை காணாது சிறிது நேரம் காத்திருந்தனர்..

“எங்க போனான் இவன்.. எவ்வளவு நேரமா நின்னுண்டு இருக்கிறது?” வைதேகி பொரிய

“நமக்கு முன்னாடியே வந்துருப்பானா இருக்கும் ரூம்க்கு போகிருப்பான்.. அங்க போய்ப் பார்ப்போம்” சேதுராமன் கூற.. மூவரும் ஹோட்டலிற்கு வந்தனர்..

அறையின் வெளியே விதுரன் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவன் அருகில் சென்றனர்..

“ஏன்டா சொல்லாம கொல்லாம கிளம்பி வந்துட்ட.. உன்னைக் காணோம்ன்னு தேடீண்ட்டு இருந்தோம்.” வைதேகி மகனைக் கடிந்தார்..

ஜீவிதாவின் அலர்ஜி பற்றிக் கூறியவன்

“அவளுக்கு ரொம்ப முடியலை அதான் ரூம்க்கு வந்துட்டோம்..” எனவும்

“இப்போ எப்படி இருக்குடா?” சேதுராமன் கேட்க

“குளிச்சுட்டு இருக்காப்பா.. இப்போ பரவாயில்லைன்னு சொன்னா.”

“என்னது குளிக்கிறாளா? ஏன்டா உனக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லையா? கோவிலுக்குப் போய்ட்டுக் குளிக்கக் கூடாதுன்னு நோக்குத் தெரியாதா? அதுவும் கல்யாணம் ஆகி முதன் முதல்ல வந்துருக்கோம்.. அவளுக்குத் தான் தெரியாது நம்ம சாஸ்த்திரம் நோக்குமா தெரியாது?” என்று கத்த

“அம்மா உடம்பு புள்ளா தடிப்பு தடிப்பா இருக்கு.. அரிப்பு வேற.. தண்ணீல நின்னதுனால தான் இப்போ அவளுக்குப் பரவாயில்லை..”

“துக்க ஆத்துக்குப் போனா தான் வந்ததும் குளிக்கணும். எந்தச் சாஸ்திரமும் தெரியாத ஒரு பொண்ணை நம்மாத்துக்குக் கூட்டீண்டு வந்துட்ட.. எல்லாம் என் தலை எழுத்து..” என்று புலம்பி கொண்டே தங்கள் அறைக்குச் சென்றார்.

“நீ போ உள்ள.. அம்மாவ நாங்க பாத்துக்குறோம்” துருபதன் சொல்ல கதவை திறந்தவன் கண்ணீருடன் நின்ற ஜீவிதாவைப் பார்த்ததும் திகைத்தான்..

உடம்பில் தடிப்பாக இருந்த இடங்களில் விபூதியை தடவியவள் காட்டன்  நைட்டி ஒன்றை எடுத்து மாட்டிக் கொண்டாள்.. மாத்திரையை எடுத்துப் போட்டவள் கதவைத் திறக்கப்போக வைதேகி பேசியதை கேட்டாள்..

கணவனைக் கண்டதும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு புன்னகைத்துவிட்டு திரும்பி நடக்க விதுரன் அவள் கைப்பிடித்து நிறுத்த கட்டுப்படுத்திய கண்ணீர் அவளையும் அறியாமல் கன்னம் தொட்டது.. அவளை அணைத்துக் கொண்டான்..

“ஜீவி அம்மா சொன்னதப் பெருசா எடுத்துக்காதே..”

“ம்”

“ஜீவி..” என்றவன் அவள் முகத்தை நிமிர்த்திக் கண்ணீரைத் துடைத்துவிட்டவன்..

“ம்” என்றவள் அவனிடம் இருந்து விலகி படுக்கையில் படுத்துக் கொண்டாள்..

“பேஸ் வாஷ் செஞ்சுட்டு வா சாப்பிட போகலாம்..”

“எனக்குப் பசிக்கலை.. நீங்க போயிட்டு வாங்க..” என்றவள் கண்களை மூடிக் கொண்டாள்..

அங்கே சேதுராமன் மனைவியைத் திட்டிக் கொண்டிருந்தார்..

“நோக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லையா? முடியலைன்னு தானே குளிச்சுருக்கா.. அதுக்குப் போய் ஏன் இப்படிப் பேசுற? வேண்டாத மருமக கைபட்டா குத்தம் கால் பட்டா குத்தம்ன்னு சொல்லுற மாதிரி தான் நீ செய்ற..”

“ஆமாமா நீ கொஞ்சம் பொறுமையா பேசு.. நீ பேசுனது மன்னிக்கு தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவா.. இனி அவங்களும் நம்மாத்துல ஒருத்தர்.. சும்மா குறை சொல்லாதே.” துருபதனும் கூறிவிட்டு ரெஸ்டாரண்டில் உணவு வாங்க சென்றான்..

ஜீவிதா விதுரனிற்கு வாங்கிய உணவுகளை விதுரனிடம் கொடுத்தவன்

“மன்னி தூங்குறாங்களா?” என்று கேட்க

“ஆமாடா.. அம்மா பேசுனதை அவ கேட்டுட்டா..”

“அச்சோ.. எதுவும் சொன்னாங்களா?”

“இல்ல அழுதா.. அப்பறம் தூக்கம் வருதுன்னு சொல்லீட்டு படுத்துட்டா..”

“அம்மா ஏன் இப்படிப் பண்றாங்கன்னு புரியலை.. எல்லாம் சரியாகிடும்டா.. நீ எதுவும் பீல் பண்ணாதே..”

“ம்”

“சரி போய்ச் சாப்டுங்க.. மன்னிய எழுப்பிச் சாப்பிட வை..”

தூங்கி எழுந்த ஜீவிதா பழையதை மறந்து கணவனுடன் இயல்பாகப் பேசினாள்.. ஜீவிதா எப்பொழுதும் அப்படித் தான்.. எந்தச் சண்டையாக இருந்தாலும் தூங்கி எழுந்தவுடன் அதை மறந்துவிடுவாள்.. அதிக நேரம் அவளால் ஒரு விஷயத்தைப் பிடித்துத் தொங்க முடியாது.. இதே போல் அவளால் எப்பொழுதும் இருக்க முடியுமா?

அவர்கள் திருப்பதியில் இருந்து ஊருக்கு வந்தனர்.. ஸ்ரீரங்கத்தில் ஒரு வாரம் இருந்தவர்கள் சென்னைக்குப் புறப்பட்டனர்.. ஜீவிதாவின் அம்மா வீட்டிற்கு மறுவீடு சென்றுவிட்டு தங்களுக்கென்று வாங்கிய புது ப்ளாட்டிற்குக் குடி புகுந்தனர்..

படுக்கை அறையில் கணவனும் மனைவியும் பேசிக் கொண்டிருந்தனர்.. பேசிக் கொண்டே விதுரன் ஜீவிதாவின் மடியில் படுத்தான்..

“எப்போ ஆபிஸ் போகப் போறோம் விது?” தனது மடியில் படுத்திருக்கும் கணவனின் தலையைக் கோதிக் கொடுத்துக் கொண்டே ஜீவிதா கேட்க 

“முதல்ல லைப்ப ஸ்டார்ட் பண்ணுவோம்டி.. கல்யாணம் ஆகி பத்து நாளைக்கு மேல ஆகிடுச்சு.. டச் பண்ண கூட விட மாட்டிங்கிற.”

“போடா.”

“எது கேட்டாலும் போடா போடான்னு.. உன்கிட்ட பெர்மிஷன் கேட்டுகிட்டே இருந்தா இந்த ஜென்மத்துல நமக்குப் பர்ஸ்ட் நைட் நடக்காது..” என்றவன் அவளின் மடியில் இருந்து எழுந்து அவளை நெருங்க 

“விது வேண்டாம்…” என்றவள் கட்டிலின் பின்னே நகர

“ஏன்டி ஏதோ வில்லன் ரேப் செய்ய வர மாதிரியே பில்டப் கொடுக்குற..” கூறிக் கொண்டே அவள் கைகளைப் பிடித்திருந்தான்..

“டேய்… வேண்டாம்…” என்றாள் சிணுங்கலாக

“எனக்கு வேணும்..” என்றவன் அவள் இதழ்களை முற்றுகையிட்டான்..

இமைகளைத் துடிக்க அவன் தந்த முத்தத்தில் லயித்திருந்தாள் ஜீவிதா.. இதழின் முத்தம் நீண்டுகொண்டே போக அவளை மொத்தமாக  ஆக்கிரமித்தான்.. காதலர்களின் சங்கமம் இனிதே நடந்தது..

நான்கு நாட்களில் இருவரும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர்… செல்லச் சண்டைகள், சின்னச் சீண்டல்கள், குட்டிக்குட்டி சமாதானங்கள் என்று நாட்கள் அவர்களுக்கு ரம்யமாகச் சென்றது..

அது விதிக்கு பொருக்கவில்லை போல.. விதுரனை சென்னையில் இருந்த அவனது கம்பெனியின் இன்னொரு கிளைக்கு மாற்றினர்.. அவனிற்கு இரவு ஷிப்ட் வேறு ஒதுக்கப்பட, இருவருக்கும் அதை நினைத்துக் கவலையாக இருந்த போதும் வேற ஒன்றும் செய்ய முடியாத காரணத்தால் அதை ஏற்றுக் கொண்டனர்..

துருபதனும் தனது படிப்பை முடித்துவிட்டுக் கேம்பசில் செலக்ட் ஆகிருந்தான்… சேதுராமனின் வேலை காரணமாக ஸ்ரீரங்கத்தில் இருக்கலாம் என்று முடிவு செய்திருந்தவர்கள் விதுரனிற்கு நைட் ஷிப்ட் இரவில் ஜீவிதா தனியாக இருக்கிறாள் என்றதும் சேதுராமனின் வேலையைச் சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்தனர்..

ஜீவிதா விதுரன் இருவரும் வார இருது நாட்களில் தான் பேசிக் கொள்ளக் கூட முடிந்தது.. அவ்வபொழுது வைதேகியின் பேச்சுக்கள் வேறு ஜீவிதாவை மிகவும் மனதளவில் சோர்வடைய செய்தது.. நவராத்திரி ஆரம்பம் ஆனது.. கொலுவிற்குப் பெண்ணின் வீட்டில் இருந்து இரண்டு பொம்மைகள் வாங்கித் தர வேண்டும் என்று வைதேகி கூறியிருக்க ராம பட்டாபிஷேக சிலையும் குட்டிக் கண்ணன் சிலையும் வாங்கிக் கொடுத்தனர்..

கொலு வைக்கும் பொழுது கிருஷ்ணர் சிலையை மருமகளின் கையில் கொடுத்த வைதேகி

“அடுத்த வருஷம் நம்மாத்துக்குக் குட்டி கண்ணன் வரணும்ன்னு வேண்டீண்டே படில வைமா” என்று கூறினார்..

ஜீவிதா விதுரன் இருவரும் தற்சமயம் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தனர்.. அவர்கள் இருவருமே பார்த்துப் பேசிக் கொள்வது அரிதாக இருக்கும் பொழுது, ஜீவிதா கருவுற்றாள் அவளைச் சரியாகத் தன்னால் கவனிக்க முடியாது என்பதாலேயே விதுரன் இப்பொழுது குழந்தை வேண்டாம் என்று கூறியிருந்தான். ஜீவிதாவிற்கும் அதே எண்ணம் தான்.. விதுரனிற்குச் சில மாதங்களில் எப்படியும் பகல் ஷிப்டிற்க்கு மாற்றல் ஆகிவிடும் அப்பொழுது குழந்தையைப் பற்றி யோசிக்கலாம் என்று விட்டனர்..

இப்பொழுது வைதேகி அவ்வாறு கூறவும் மாமியாரிடம் எதுவும் கூறமுடியாமல் சிலையைக் கொலுபடியில் வைத்தாள்..

நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் வீட்டிற்கு வந்த சிலர் மருமகளின் பின் புலம் பற்றிக் கேட்பதும் அவர்கள் ஜாதி பெண்களைப் போல் ஜீவிதா நடந்து கொள்கிறாளா? என்று பல கேள்விகளை ஜீவிதா இருக்கும் பொழுதே கேட்டனர்.. அது அவளிற்கு உள்ளே கஷ்டமாக இருந்தாலும் வெளியே உதட்டில் சிரிப்புடன் கடந்து சென்றாள்.. இப்பொழுதெல்லாம் அது அவளிற்குப் பழகிப் போன ஒன்றாகிவிட்டது..

திருமணம் முடிந்த இந்த மூன்று மாதங்களில் ஜீவிதா நிறையவே மாறியிருந்தாள்.. பிறந்த வீட்டில் ஒரு வேலை செய்யாதவள் இங்கே மாமியாருடன் சேர்ந்து அணைத்து வேலைகளையும் செய்தாள்..

அசைவ சமையல் இல்லாமல் அவளிற்கு உணவு உள்ளே இறங்காது.. இந்த மூன்று மாதங்களில் அவள் அசைவம் சாப்பிட்டது நான்கைந்து முறை தான்.. இருவரும் தனியாகச் செல்லும் சமயங்களில் அவளை அசைவ உணவு சாப்பிட சொன்னாலும் அவள் வேண்டாம் என்று மறுத்துவிடுவாள்..

என்றாவது மதிய உணவு அலுவலகத்திற்கு எடுத்து வராமல் இருந்திருந்தால் ஆபிஸ் கேன்டீனில் சிக்கென் பிரியாணி சாப்பிடுவாள்.. அப்படி சாப்பிட்டால் வீட்டிற்கு வந்ததும் தலைக்குக் குளித்து விடுவாள்.. மாமியார் மாமானார் வந்ததில் இருந்து அதுவும் உண்பதில்லை..

தாய் வீட்டிற்குக் கணவனுடன் செல்வதால் ரமாவும் மாப்பிள்ளை உண்பது போலவே சமைத்துக் கொடுப்பார்.. ஆபிஸ் வேலை வீட்டு வேலை இதில் கணவனைப் பிரிந்து வேறு இருப்பதாலோ என்னவோ ஜீவிதா முன்பை விடச் சற்று இடை குறைந்திருந்தாள்..

அன்று வெள்ளி இரவு என்பதால் கணவன் மனைவி இருவரும் ஒரு வாரக் கதைகள் அனைத்தையும் பேசிக் கொண்டிருந்தனர்.. இது அவர்கள் வாடிக்கை ஆனது.. வெள்ளி இரவு அந்த வாரம் நடந்த நிகழ்வுகளை அனைத்தையும் பேசிக் கொண்டிருப்பார்கள்.. சனிக்கிழமை அவர்களிற்கான ப்ரத்யேக இரவு.. கொலுசொலிகள் மட்டுமே கேட்கும்.. ஞாயிறு இரவு விதுரன் வேலைக்குச் சென்று விடுவான்..

அன்றும் இருவரும் கதைகளைப் பேசிவிட்டு உறங்க வெகு நேரம் ஆகியது.. காலையில் தாமதமாகவே ஜீவிதா எழுந்தாள்.. விதுரன் உறங்கிக் கொண்டிருக்கக் காலைக் கடன்களை முடித்தவள் காபியை பருகிக் கொண்டிருந்தாள்..

முதல் நாள் ஆபிஸ் வேலை வேறு சற்று அதிகமாக இருந்தது.. இரவு வேறு வெகு நேரம் கழித்து உறங்கியது எல்லாம் சேர்த்து ஜீவிதாவிற்குத் தலைவலியை கொடுத்தது..

அவள் சோர்வாக இருப்பதைப் பார்த்த சேதுராமன்

“என்னாச்சுமா? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டார்..

“இல்ல மாமா.. நேத்து ஆபிஸ்ல கொஞ்சம் வேலை ஜாஸ்தி.. அதான்..”

காலை டிபனிற்குத் தயார் செய்து கொண்டிருந்த வைதேகி கணவனின் கேள்வியில் மருமகளைத் திரும்பிப் பார்க்க அவள் முகம் சோர்ந்து போய் தான் தெரிந்தது.. ஒருவேளை அப்படி இருக்குமோ என்ற ஆர்வத்துடன் மருமகளின் அருகில் சென்றவர்

“நாள் எதுவும் தள்ளிப் போயிருக்கா?” என்று கேட்க

அவள் குடித்துக் கொண்டிருந்த காப்பிப் புரையேறியது.. அதைத் துப்புவதற்காக வாஷ் பேசினை நோக்கி ஓடினாள் ஜீவிதா.. அதையும் தவறாகப் புரிந்து கொண்ட வைதேகி ஜீவிதா முகம் கழுவிக் கொண்டு வந்தவுடன் அவளைக் கட்டி அனைத்துக் கொண்டார்..

“எத்தனை நாள் ஆச்சு?” என்றார்

அவரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று ஜீவிதா குழம்பி நிற்க வைதேகியே மேலும் மேலும் பேசிக் கொண்டிருந்தார்..

“போன மாசம் நீ கொலு முடிஞ்சதும் தானே தூரம் ஆன..” என்று கேட்க

மாமனாரின் முன்னால் என்ன பதில் சொல்வாள்.. அவள் அமைதியைத் தொடர, அடுத்து வைதேகி என்ன கேட்டிருப்பாரோ விதுரன் தூக்கம் களைந்து அப்பொழுது தான் வந்தான்.. அவனைப் பார்த்தவர் மகனின் கைகளைப் பிடித்துக் கொண்டு

“நீ அப்பாவாகப் போறடா..” என்று கூற

ஜீவிதாவிற்குக் கண்ணீரே வந்துவிட்டது.. தலையைக் குனிந்துக் கொண்டே அறைக்குச் சென்றுவிட்டாள். மனைவியின் முகத்தைப் பார்த்த விதுரன் தாயிடம்

“அம்மா என்ன பேசுறீங்க? அவ உங்ககிட்ட சொன்னாளா ப்ரெக்னன்டா இருக்கேன்னு.. நீங்களா கற்பனைப் பண்ணிக்காதேள்.. நான் நைட் ஷிப்ட் அவ மார்னிங் ஷிப்ட் இதுல எங்க இருந்து குழந்தை வரும்..” என்று கத்தியவன் அறைக்குச் சென்றான்..

ஜீவிதாவை நினைத்து அவனே கவலையில் இருந்தான்.. பிறந்த வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் ராஜகுமாரி போல் இருந்தவளை காதல், கல்யாணம் என்கிற பெயரில் இப்படி ஆக்கிவிட்டோமே என்று.. யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று கூறியவள் கணவனின் வீட்டினற்காகத் தன்னையே மாற்றிக் கொண்டாள்..

அவளை மொத்தமாக மாற்றியிருந்தது இந்தத் திருமணம்.. ரமாவும் மகளைப் பார்க்கும் போது எல்லாம் கணவனிடம் புலம்புவார்..

“இளைச்ச மாதிரி இருக்கா.. ரொம்ப வேலையோ.. நம்ம வீட்ல எதவுமே செஞ்சு பழக்கம் இல்லை.. எப்படி அங்க செய்றாளோ..” என்று

ரூமிற்கு வந்த விதுரன் மனைவியின் அருகில் அமர

“நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் விது. ப்ளீஸ்..” என்றாள்

“எதைப்பத்தியும் யோசிக்காதே…” என்றதோடு அறையை விட்டு வெளியே சென்றான் விதுரன்..

Advertisement