Advertisement

அத்தியாயம் 5

நீயே எந்தன் உலகமென்று நான் வாழ

நானே உந்தன் உலகமென்று நீ வாழ

நாமே உலகமென்று கைகளில்

தவழ போகும் தங்கக் கட்டியை

ஏனடி விலகி செல்கிறாய்..

அனு அவள் அம்மா வீட்டிற்கு வந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது… அன்று அவள் குழந்தை வேண்டாம் என்று கூறியதும் என்ன செய்வதென்று தெரியாமல் ஐவரும் அமர்ந்திருக்க எல்லோரின் மனதிலும் அனுவை பற்றிய நினைப்புதான்… அங்கிருந்த அமைதியை மூர்த்தி தான் கலைத்தார்..

“உங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு நீ சொன்னா தான் அஜய் அவ ஏன் இப்படி இருக்கான்னு நம்மாள கண்டுப்பிடிக்க முடியும்…” என

அவரிடம் எப்படி கூறுவான் தங்கள் இருவருக்கும் நடந்த பிரச்சனையை… கணவன் மனைவிக்கு இடையேயான பிணக்கை வெளியே சொல்ல அவனிற்கு மனமில்லை.. அதைவிட அன்று அவள் கூறிய வார்த்தைகள் அதை எப்படி மாமனாரிடம் கூறுவான்… அவன் அமைதியே அவரிற்கு மேலும் கோபத்தைக் கொடுக்க

“இப்படி இருந்தா என்ன அர்த்தம் அஜய்?”

“என்னங்க…” கணவரை அமைதிப்படுத்திய ஜானகி மருமகனிடம்

“உன்னோட தயக்கம் எனக்கு புரியுது அஜய்.. புருஷன் பொண்டாட்டிக்குள்ள நாங்க நுழையுறது தப்பு தான்… நீயே அவளோட கொஞ்சம் பேசிப் பாரேன்…”

“கேட்டுட்டேன் அத்த.. அவ பதிலே பேசல…” என்றவன் அவர்கள் மும்பை சென்றதில் இருந்து நடந்த நிகழ்வுகளில் அந்த ஒரு விஷயத்தை மட்டும் மறைத்து விட்டு மீதியை கூறினான்..

“என்ன வேலைய விட்டுட்டுடாளா?” ஜானகி அதிர

“ஆமா மா…” ஷ்யாம் கூற

“ஏன்டா இத எங்ககிட்ட சொல்லல?”

“அஜய் மேல இருக்க கோபத்துல இப்படி செய்றான்னு நினைச்சேன்…”

“அத்த அனு கொஞ்ச நாள் இங்க இருக்கட்டும்.. என்னால அங்க தனியா பார்த்துக்க முடியல…”

இதை சொல்லும்போதே அவனின் மனதிற்கு அவ்வளவு வருத்தமாகவும் சங்கடமாகவும் இருந்தது.. தன்னை நம்பி அவர்கள் பெண்ணைக் கொடுத்தனர்.. அவளை என்னால் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று கூறியதற்கு  ஒரு ஆண் மகனாக வருத்தம் அடைந்தான்…

“நீயும் இங்கேயே இருந்துடு அஜய் கொஞ்ச நாளைக்கு…”

“இல்லத்த… என்ன பார்க்காம இருந்தாலாவது அனுவோட கோபம் குறையுதான்னு பார்ப்போம்…”

அவர்களுக்கும் அதுவே சரியென்று பட்டது…

அனுவின் அறையில் அவளின் துணைக்கு ஸ்வேதா ஜானகி இருவரும் தங்கிக் கொண்டனர்…

“அவள தனியா விட பயமா இருக்குங்க.. குழந்தைய வேற வேண்டாம்னு சொல்றா… நான் அவளோட படுத்துக்குறேன்…”  ஜானகி கணவனிடம் கூறிவிட்டு மகளின் அறைக்கு வர ஸ்வேதாவும் இதையே தான் ஷ்யாமிடம் கூறியிருந்தாள்.. ஜானகி அவளிடம் தான் பார்த்துக் கொள்வதாக கூறியும் அவள் மறுத்துவிட்டாள்…

அன்று காலை சமையலை ஜானகி செய்து கொண்டிருக்க ஸ்வேதா அவரிற்கு உதவ வந்தாள்

“நீ எதுக்கு ஸ்வேதா வந்த? அனுவோடவே இரு…”

“அவ குளிக்குறா அத்த…” என்றவள் சமையலை தொடர்ந்தாள்…

சமையலை முடித்து அனைவரும் சாப்பிட்ட சிறிது நேரத்திலே உண்ட அனைத்தையும் வாந்தி எடுத்தாள் அனு.. ஜூசை வற்புறுத்தி குடிக்க வைத்தனர்.. சோபாவில் அமர்ந்திருந்தவளின் முகமே சிறிது நேரத்தில் என்னவோ போல் ஆக அதை கவனித்த ஸ்வேதா

“என்ன அனு? வாமிட் வருதா?”

“இல்ல..”

“உன் முகமே சரியில்ல.. சொல்லு என்ன பண்ணுது?” என்று வற்புறுத்த

“எனக்கு ஒன்னுமில்லைன்னு சொல்லுறேன்ல எதுக்கு பேசிகிட்டே இருக்க?” ஸ்வேதாவிடம் அனு கத்த அந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்தனர்… ஸ்வேதா அழுது கொண்டிருக்க அதை பார்த்த ஷ்யாம் வேகமாக தங்கையிடம் சென்று

“உனக்கு என்ன அவ்வளவு திமிர்? எப்பப்பாரு அவள எதாவது சொல்லிகிட்டே இருக்க… உன் ப்ரெண்ட் தானே ஸ்வேதா.. நீ நல்லா இருக்கனும்ன்னு அவ நினைக்க மாட்டாளா? உன் மேல உள்ள அக்கறைல கேட்டா இப்படி கத்துற? பைத்தியமா நீ?”

“ஷ்யாம் விடு.. இவ நம்ம அனுவே இல்ல.. வெளியவே வராத ஒரு உயிர எப்படி வேண்டாம்ன்னு சொல்லுறா? நான் தான் உன்ன பெத்தேனாடி? உன்னால அஜய்க்கு எவ்வளவு கஷ்டம்ன்னு தெரியுமா? லூசு மாதிரி எல்லார் மனசையும் கஷ்டப்படுத்துற…” ஜானகி திட்ட

“ஆமா நான் பைத்தியம் தான் பைத்தியம் தான்.. என்னோட குழந்தை என்ன மாதிரி பைத்தியமா ஆகிட கூடாதுன்னு தான் வேண்டாம்ன்னு சொல்லுறேன்… என்ன மாதிரி அவளும் அஜய்க்கு பாரமா இருக்க வேண்டாம்ன்னு தான்.” என்று கத்தியவள் மடங்கி அமர்ந்து அழ ஜானகி வேகமாக மகள் அருகில் சென்றார்…  

“அனு.. என்னடா…” என்று அவர் பதற

“எனக்கு என் குழந்தை வேணும்மா…” என்று கூறியவாறே மயங்கினாள்..

“அனு… இங்க பாரு.” என்று மகளின் முகத்தை ஜானகி தட்ட

ஷ்யாம் தான் இருக்கு சூழல் உணர்ந்து மருத்துவமனைக்கு தங்கையை அழைத்துச் சென்றான்… போகும் வழியிலேயே ஸ்வேதா அண்ணனிற்கு தகவல் கொடுத்திருக்க இவர்களுக்கு முன்பே அஜய் அங்கே வந்திருந்தான்..

“என்னாச்சு டாக்டர் அனுக்கு வேற எதுவும் பிரச்சனையா?” என்றான் பதற்றத்துடன்

“ஆமா மிஸ்டர் அஜய்… முன்னமே சொன்னது தான் அவங்க மென்டலி ரொம்ப டிப்றேஸ்டா இருக்காங்க.. ஷி நீட் கவுன்சிலிங்.. இப்படியே போனா அது குழந்தைக்கும் நல்லதில்ல அவங்களுக்கும் நல்லதில்ல… சைக்காட்ரிஸ்ட்ட பாருங்க…”

“சைக்காட்ரிஸ்ட்டா? அனு ஒன்னும் பைத்தியம் இல்ல…” என்றான் கோபமாக

“பைத்தியக் காரங்க மட்டும் தான் மனநல மருத்துவரைப் பார்க்கனுமா? படிச்ச நீங்களே இப்படி யோசிச்சா என்ன அர்த்தம்?”

“ம்…”

வீட்டிற்கு அவளை அழைத்து வந்த பின்பும் மருத்துவர் கூறியதே அவன் மனதில் ஓடியது….. ‘இல்ல அனுக்கு ஒன்னும் இல்ல…’ என்று அவனிற்கு அவனே சொல்லிக் கொண்டான்… இருப்பினும் ஜானகி வேறு அனு தனக்கு குழந்தை வேண்டும் என்று அழுதாள் என்று கூறவும் டாக்டர் கூறியது போல் ஒரு முறை மனநல மருத்துவரைச் சென்று பார்ப்போமா என்று யோசித்தான்…

இதை எப்படி அத்தை மாமாவிடம் கூறி அனுமதி வாங்குவது.. முக்கியமாக அனுவிடம் எப்படி சொல்வது என்று குழம்பியவன் பின் ஒருவாறு அவர்களிடம் கூற மூர்த்தி தான் வழக்கம் போல் குதித்தார்…

“என் பொண்ண பார்த்தா உனக்கு பைத்தியம் மாதிரி இருக்கா?”

அஜய்க்கு ஐயோ என்றிருந்தது… அவனுக்குமே அங்கே செல்வதில் உடன்பாடில்லை.. மருத்துவர் அவ்வளவு தூரம் கூறி இருக்க அவள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்பதை அறிந்து கொள்ளவாது அங்கே செல்ல வேண்டும் என்று அவன் நினைத்தான்… இதை இவரிடம் சொன்னால் புரிந்து கொள்வாரா?

ஷ்யாம் தான் தாய் தந்தையிடம் மெதுவாக எடுத்துரைத்து சம்மதம் வாங்கினான்…

“அம்மா அஜய் மட்டும் அவளோட போகட்டும்… நம்ம போக வேண்டாம்…” ஷ்யாம் கூற

“ஏன்டா? தனியா அஜய் எப்படி பார்த்துப்பான்..”

“அவன் பார்த்துப்பான்…” என்றவன் “நீ அனுவ பார்த்த கைனிக்கு கால் பண்ணி யார்கிட்ட காட்டலாம்ன்னு கேளு”

“ம்.. அனு கிட்ட இதை எப்படி சொல்லுறது?” என

“நான் பாத்துக்குறேன் அஜய்.” என்று ஜானகி சொல்லிவிட்டார்..

அதன்பின் மறுநாள் ஹாஸ்பிடல் செல்வதற்காக அப்பாய்ட்மென்ட் வாங்குவது அனுவிடம் பேசுவது என்று நேரம் சென்றது…

ஜானகி இதை அனுவிடம் கூறும் போது அவள் பெரிதாக எதுவும் சொல்லவில்லை… முதலில் சற்று மனதிற்குள் பயந்தவள் பின் தனக்கு என்ன தான் ஆனது என்று தெரிந்து கொள்ளவாது அங்கே செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் தாயிடம் சம்மதம் தெரிவித்தாள்..

இதோ இப்பொழுது கணவன் மனைவி இருவரும் சென்னையில் புகழ் பெற்ற மனநல மருத்துவர் திருமதி மீனா ஆறுமுகம் அவர்களின் முன்பு அமர்ந்திருந்தனர்… ஐம்பது வயதை கடந்திருப்பார் என்பது அவரின் நறைத்த முடியிலே தெரிந்தது…

“மிஸ்ஸஸ் அனுக்ரஹா அஜய் ரைட்?” என்றார் தனது கண்ணாடியை சரி செய்து கொண்டே அவள் “ம்” என்று தலையை ஆட்டினாள்

“எங்க வொர்க் பண்றீங்க?” என்று கேட்க அவளிற்கு முன்பு அஜய்

“சாப்ட்வேர்ல.. ஆனா இப்போ கொஞ்ச நாலா லீவ்ல இருக்கா.” என்றான்…

“நீங்க தான் அனுக்ரஹாவா?” அவர் கேட்க

“சாரி மேம்.” என்றவன் மனைவியின் புறம் திரும்ப அவள் பயம் அப்பட்டமாய் அவளின் முகத்தில் தெரிந்தது…

“நீங்க கன்சீவா இருக்கதா உங்க கைனி சொன்னாங்க.. எத்தனை மாசம்?”

அவள் பதில் சொல்லாமல் அஜயை திரும்பிப் பார்க்க அவள் கையைப் பிடித்து சொல் என்பது போல் தலையசைத்தான்…

“ரெண்டு மாசம்.” என்றாள் மெதுவாக

அதன்பின் அவர் கேட்ட சின்ன சின்ன கேள்விக்கு கூட கணவனின் முகம் பார்த்துப் பார்த்து அவன் சொல் என்று சொன்னால் தான் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.. இதை கவனித்த மீனா அனுவை தனியாகப் பரிசோதனை செய்ய விரும்பவதாக கூறி உள்ளே அழைக்க இப்பொழுது இன்னும் பயந்து கணவனின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்…

“அனு… என்னதிது அவங்க உன்னை டெஸ்ட் பண்ண வேண்டாமா? போ.” என

“ஏஜே.. எனக்கு பயமா இருக்கு.. நான் போகல.” என்றவளின் கண்ணில் கண்ணீர் தேங்கி நின்றது… அதை பார்த்ததும் அஜய்க்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.. இந்த சூழ்நிலையிலும் தன் பெயரை செல்லமாக அழைக்கிறாளே அப்பொழுது அன்று ஏன் அவ்வாறு கூறினாள் என்றும் அவன் யோசித்தான்..

“இல்லடா ஒன்னும் இருக்காது… நீ ஏன் இவ்வளவு பயப்படுற? உனக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சா தானே அவங்க ட்ரீட்மெண்ட் செய்ய முடியும்.” என்று பேசிப் பேசி அவளை உள்ளே அனுப்பி வைத்தான்…

பயந்து கொண்டே உள்ளே சென்றவள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளியே வரவில்லை… மீனா ஆறுமுகம் மட்டும் வெளியே வர அவன் கண்கள் மனைவியைத் தேடியது… அதை உணர்ந்த மீனா

“அவங்க மயக்கத்துல இருக்காங்க.. கொஞ்ச நேரம் ஆகும் மயக்கம் தெளிய.” என்றார்

“என்னாச்சு மேம்?” அவன் பதட்டத்துடன் கேட்க அதைப் பார்த்து லேசாக சிரித்த டாக்டர் மீனா

“அவ்வளவு பாசமா உங்க மனைவி மேல?” என்றார் நக்கலாக அவர் கேள்வியில் அவரை அவன் புரியாதப் பார்வை பார்க்க அதை கண்டு கொள்ளாமல் அவனிடம் அடுத்த கேள்வியை கேட்டார்

“உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை மாசம் ஆச்சு?” மனைவி இருந்த அறையை பார்த்துக் கொண்டே அவன் பதில் கூற

“மிஸ்டர் அஜய் உங்க வைப் உள்ள நல்லா தான் இருக்காங்க.. ட்ரீட்மெண்ட் கொடுத்தனால மயக்கத்துல இருக்காங்க… கொஞ்ச நேரத்துல கான்சியஸ் வந்திடும்.” என்றவர்

“அரேன்ஜ்ட் மேரேஜா? லவ் மேரேஜா?” என்றார்

“அவ என் அத்தை பொண்ணு.. சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசி வச்சுட்டாங்க… எங்களுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சது.” என்றான்

“அப்போ சின்ன வயசுல இருந்தே உங்களுக்கு அனுவ தெரியும்?”

“ம் ஆமா.. அவ பிறந்ததுல இருந்தே எனக்கு தெரியும்.”

“ஓ அனுக்ரஹாவ பத்தி எல்லாமே தெரியுமா அப்போ?”

“இப்போ ரீசென்டா அவ நடந்துகுறதுக்கு தான் எனக்கு ரீசன் தெரியல… மத்தபடி ஐ நோ ஹர் வெரி வெல்.” என்றான் அவனின் காதலின் கொண்ட கர்வத்தில்

“இல்லைன்னு நான் சொல்லுறேன்.” மீனாவும் அதே கர்வத்தோடு கூற அஜய்க்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது….

“என்ன சொல்லுறீங்க?”

“உண்மைய சொல்லுறேன்…” என்றார் ரஜினி பாணியில்… அதில் கடுப்பான அஜய்

“மேடம் எதுவா இருந்தாலும் நேர பேசுங்க ப்ளீஸ்.” கோபமாகக் கூற

“சாருக்கு கோபம் கூட வருதா? அனுக்ரஹா இப்படி இருக்க நீங்களும் ஒரு காரணம்.” என்றார் அவனை போல் அதே கோபத்துடன்

“நானா?” என்றவனின் குரல் அவனிற்கே கேட்டிருக்காது…

“யஸ் நீங்க தான். உங்க மனைவியோட மனச புரிஞ்சு நடந்துக்காம அவங்கள இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டீங்க… பாதி பைத்தியம் ஆகிட்டாங்க.. இப்படியே இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தா முழுசா பைத்தியம் ஆகிருப்பாங்க.”

அவர் கூறிய வார்த்தைகளை கேட்டவனுக்கு கண்கள் லேசாக கலங்கி விட்டது.. தன்னால் தான் அனு இப்படி ஆகிவிட்டாளா? எந்த இடத்தில் தான் தவறு செய்தோம் என்று அவனிற்கே தெரியவில்லை… அவனின் முக மாறுதலை பார்த்த மீனா

“இப்போ சில விஷயத்தை தான் உங்க மனைவிக்கிட்ட இருந்து வாங்க முடிஞ்சது… அதுல முக்கியமானது உங்களோட செக்க்ஷுவல் ரிலேஷன்ஷிப்.. அவங்க அதுக்கு தயாரா இல்லை.. என்ன ரீசன்னு தெரியல.. மே பீ அவங்க பாஸ்ட்ல ஏதாவது நடந்துருக்கலாம்… நாளைக்கு திரும்ப கூடிட்டு வாங்க.. ஹிப்னாடைஸ் செஞ்சு தான் மீதி விஷயத்தையும் தெரிஞ்சுக்கணும்.”

அனுக்ரஹா கண் விழித்ததும் இருவரும் வீடு திரும்பினர்… அனுவிற்கு மீனாவிடம் கூறியது எதுவுமே நியாபகத்தில் இல்லை.. அஜய்க்கோ மீனா கூறியதே மனதில் ஓடிக் கொண்டே இருந்தது.. தன்னால் தான் அவள் இப்படி ஆகிவிட்டளா? நான் அவளிடம் சரியாக நடந்து கொள்ளவில்லையா? அனுவை பைத்தியம் என்று அவர் கூறியது அவன் மனதை மிகவும் காயப் படுத்தியது.. என்ன காரணம் என்று அவனும் யோசித்துக் கொண்டே இருந்தான்…வீட்டில் இருப்பவர்களிடம் அவன் எதுவும் கூறவில்லை.. நாளை மீண்டும் பரிசோதனைக்கு வர சொல்லி இருக்கிறார்..

எந்த பிரச்னையும் இல்லை என்று மட்டும் கூறினான்… இருவருக்கும் இரவு தூக்கம் வரவில்லை.. நாளை மருத்துவர் என்ன சொல்வார் என்ற நினைப்பு அஜய்க்கு தூக்கத்தை வர விடாமல் செய்தால் அனுவிற்கோ தனக்குள் நிகழும் மாற்றத்திலே தான் ஒரு பைத்தியம் என்று முன்பே அவள் அனுமானித்திருந்தாள்.. இப்போது மருத்துவர் வேறு என்ன கூறினார் என்று அஜய் கூறாமல் இருக்கவும் அவளிற்கு தான் நினைத்து தான் உண்மை என்று முடிவெடுத்திருந்தாள்… இருவரும் மறுநாள் மீனா என்ன கூறுவரோ என்று எண்ணிக் கொண்டே படுத்திருந்தனர்.. விடியல் இருவருக்கும்  அதிர்ச்சியை தருமா? ஆனந்தத்தை தருமா?

வார்த்தைக்கும் வர்ணனைக்கும்

அகப்படாத உறவாடி தாய்மை

அவ்வுறவை விலகிச் செல்வது ஏனோடி?

 

Advertisement