Advertisement

அத்தியாயம் 4

ஒரு வாரம் ஆகியது அனுக்ரஹா தோழி, அண்ணன், கணவனுடன் பேசி… அன்று அப்படி திட்டிவிட்டு போனப்பின் மூவருக்குமே அவளுடன் பேச ஒரு தயக்கம் வந்தது… அவளும் அவர்களை கண்டுக்கொள்ளவில்லை.. வேலையிலும் அவளால் முழுதாக ஈடுபட முடியவில்லை.. கோடிங் தப்பாக செய்து ஷ்யாமிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருந்தாள்… அவனும் தங்கையின் மேல் இருந்த கடுப்பை வேலையில் அவள் செய்த தவறில் பழிவாங்கிக் கொண்டிருந்தான்.. இதற்கு மேல் இதுவும் முடியாது என்று தோன்ற தனது ரெசிங்நேஷன் லெட்டரை டீம் லீட் ஆகிய ஷ்யாமிற்கு மெயில் செய்திருந்தாள்…

அதை பார்த்தவன் ‘இவளுக்கு என்னாச்சு? இப்போ எதுக்கு ரிசைன் பண்றா?’ என்று யோசித்தவன் அவள் எண்ணிற்கு அழைக்க அதை அவள் எடுக்கவில்லை… தனது கேபினில் இருந்து அனுவின் இடத்திற்கு வந்தவன்..

“எதுக்கு ரெசிங்நேஷன் லெட்டர் அனுப்பிருக்க?” அவள் பதில் பேசாமல் இருக்க அருகில் இருந்த ஸ்வேதா ‘என்ன’ என்பது போல் ஷ்யாமை பார்த்தாள்…

“உன்ன தான் கேக்குறேன் அனு?” அவன் அழுத்தமாக கூற

“எனக்கு பிடிக்கல…”

“பிடிக்கலைன்னா?”

“பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு அர்த்தம்.”

“அதான் ஏன்?” என்றான் விடாமல்

“இங்க நீங்க எனக்கு டீம் லீட் தான் மிஸ்டர் ஷ்யாம்… எம்ப்ளாயி எப்ப வேணா வேலைய விட்டு போகலாம்.. அதை கேள்வி கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. நான் ப்ராப்பரா செய்ய வேண்டியது செஞ்சுட்டேன். ஒரு டீம் லீட்டா நீங்க என்ன செய்யணுமோ அதை செய்யுங்க.. உங்க டீம்ல யார் வேலைய விட்டு போனாலும் இப்படி தான் அவங்க கிட்ட கேள்வி கேட்பீங்களா?” என்றவள் அங்கிருந்து சென்றாள்…

அவள் பேச்சு செய்கை எல்லாம் வித்தியாசமாக இருந்தது.. ஷ்யாம் ஸ்வேதா இருவரும் தங்கள் அனுவா இப்படி நடந்து கொள்கிறாள் என்று விக்கித்து நின்றனர்.. நாட்கள் செல்ல செல்ல அவளின் பேச்சு சுத்தமாக குறைந்தது… மௌன விரதம் இருப்பவள் போல் யாருடனும் உரையாடாமல் இருந்தாள்… ஒரு மாதத்தில் ரிலீவ் ஆவதால் இவள் பார்த்துக் கொண்டிருந்த வேலையை வேகமாக முடிக்க வேண்டும் என்று கூற அதை அவளால் சரிவர செய்ய முடியவில்லை.. முயன்று தன்னை நிலைப் படுத்திக் கொண்டு அதை செய்தாள்.. தவறுகள் பல இருந்தது அதை ஷ்யாமே சரி செய்தான்…

அன்று வேலையை முடித்து வீட்டிற்கு வந்தவளிற்கு களைப்பாக இருந்தது… இரவு உணவை தயார் செய்து உண்டவள் கணவனிற்கு எடுத்து வைக்க பாக்சை தேட அதில் அவனிற்காக அவள் காலை செய்த உணவு அப்படியே இருந்தது.. ஒரு வாரமாக அவன் இவள் சமைப்பதை சாப்பிடுவதில்லை அதை அவளும் அறிவாள் இருப்பினும் தினமும் அவளிற்கு செய்யும் போது அவனிற்கும் செய்து வைத்துவிடுவாள்..

“அவர் சாப்பிடலையா? இவருக்காக நான் கஷ்டப்பட்டு செஞ்சுட்டு இருக்கேன்.. அதை சாப்பிட கூட இவரால முடியாதா?” என்று கணவன் மேல் கோபம் கொண்டவள் இன்று அவனிடம் இதைப் பற்றி கேட்க வேண்டும் என்று தூங்காமல் காத்திருந்தாள்…

அவன் வந்ததும் குளித்து உடை மாற்றிவிட்டு ப்ரிட்ஜில் இருந்து பாலை எடுத்து காயவைத்துக் குடித்தான்… அவன் செய்வதை எல்லாம் ஒரு பார்வை பார்த்தவள் வேகமாக அருகில் இருந்த பூஜாடியை கீழே போட்டு உடைத்தாள்… அந்த சத்தத்தில் அவளை திரும்பி பார்த்து முறைத்தவன் எதுவும் கூறாமல் அறைக்கு செல்ல

“என்ன பார்த்த உங்களுக்கு எப்படி தெரியுது?” என்று கத்த அவன் பதில் சொல்லாமல் நடக்க

“உங்களோட தான் பேசிட்டு இருக்கேன்… என்ன நினைச்சுட்டு இருக்கீங்க?” அப்பொழுதும் அவனிடம் பதில் இல்லாமல் போக

“நான் லூசு மாதிரி தினமும் உங்களுக்கு சமைச்சு வச்சுட்டு வேலைக்கும் போய்ட்டு வரேன்.. உங்களால அதை சாப்பிட கூட முடியாதா?” என

அவள் அப்படி கூறியதும் அஜய்க்கு மும்பை சென்ற புதிதில் நடந்த சம்பவம் நியாபகத்திற்கு வந்தது

“எப்படி இருக்கு ஏஜே? இதுவரை நான்வெஜ் செஞ்சதே இல்லை.. இன்னைக்கு தான் அம்மாகிட்ட கொஞ்சம் கேட்டு யூ டியூப்ல கொஞ்சம் பார்த்துன்னு கஷ்டப்பட்டு செஞ்சேன்…” என்றவள் ஆர்வமாய் அவன் முகம் பார்க்க

“சூப்பர்டா லட்டு.. முதல் தடவை செய்யுற மாதிரி இல்லை.. நல்லா இருக்கு.”

“நிஜமாவா?” என்றவள் சந்தோஷத்துடன் அவனிற்கு பரிமாறினாள்

“எனக்கும் ஒரு வாய் ஊட்டுங்க…” அவள் வாயை காட்டினாள்

அவளிற்கு ஒரு வாய் ஊட்ட அதை வாயில் வாங்கியவளின் முகம் அஷ்டக் கோணல் ஆனது..

“அஜய் தண்ணி.” என்று கத்தியவள் வேகமாக கிளாசை எடுத்தவள் மேலே சிந்திக் கொண்டே குடித்தாள்…

“மெதுவாடி…” என்று சொன்னது அவள் காதில் விழவே இல்லை…

“ஏஜே இந்த சமையல் உங்களுக்கு சூப்பரா?” என்றாள் வாயைத் துடைத்துக் கொண்டே

“ஏன் இதுக்கு என்ன?”

“உப்பை அள்ளிக் கொட்டி வெச்சுருக்கேன்.. வாய்ல வைக்க முடியல.. அவ்வளவு கரிக்குது.. நீங்க எப்படி இதை சாப்டீங்க… காரமா இருந்தாகூட பரவாயில்ல.”

“என் பொண்டாட்டி எனக்காக கஷ்டப்பட்டு செஞ்சுருக்கா அது எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்…” என்றான் அவள் நெற்றியில் முட்டி

“அப்போ நான் எவ்வளவு கேவலமா செஞ்சாலும் ஒன்னும் சொல்லமாடீங்களா?”

“இத்தனை நாளா அதை தானே லட்டு செய்யுறேன்…” என்றான் குறும்பாக

“என்ன? அப்போ என்ன கிண்டல் செய்றீங்களா?” என்று அவனை செல்லமாக அடித்தாள்…

அதையே நினைத்துக் கொண்டிருந்தவனை அனுவின் கத்தல் நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது…

“பதில் சொல்லுங்க….”

“என்ன சொல்லணும்? உனக்கு தோணுனா செய்வ இல்ல பட்டினி போடுவ.. அன்னைக்கு அப்படி பேசிட்டு இப்போ எந்த உரிமைல எனக்கு இதெல்லாம் செஞ்சு வைக்குற?” என

அவளிற்கும் அப்பொழுது தான் அவன் கூறியது உரைத்தது.. ‘அப்படி பேசிட்டு இப்போ நான் ஏன் இப்படி நடந்துக்குறேன்.. அஜய் சொல்லுறது சரி தானே.. நான் என்ன செய்றேன்… அப்போ நான் பார்த்தது கேட்டது எல்லாம் உண்மை தானா?’ என்றவளுக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது..

அவளை பார்த்துக் கொண்டிருந்த அஜய்க்கு அவளின் முகபாவம் குழப்பத்தைக் கொடுக்க ஒன்றும் கூறாமல் அவனின் அறைக்கு சென்றான்… தலையை பிடித்துக் கொண்டே சிறிது நேரம் இருந்த அனுக்ரஹா ஸ்வேதாவின் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்… இருவரும் தனி தனி அறையில் தான் இருக்கின்றனர்… அன்று நடந்த சண்டைக்கு பிறகு அவளுடன் ஒரு அறையில் இருப்பதா என்று அஜய் யோசிக்க அனுவோ நேராக ஸ்வேதாவின் அறைக்கு சென்றுவிட்டாள்.. பின் அதுவே இருவருக்கும் வழக்கம் ஆகிவிட்டது…

கட்டிலில் படுத்த அஜய் அனுக்ரஹா இருவருக்குமே ஒன்றும் புரியவில்லை… அஜய்க்கோ அவள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்… வேலையை வேறு விடப்போகிறாள் என்று ஷ்யாமின் மூலம் அறிந்தவன் குழம்பி தான் போனான்… சிறுவயது முதலே அவளை பார்த்திருக்கிறான் இப்படி அவள் வித்தியாசமாக நடந்து கொண்டதில்லை.. எதையோ மனதில் வைத்துக் கொண்டு இப்படி செய்கிறாள் என்று அவனிற்கு புரிந்தது ஆனால் அது என்ன என்று தான் புரியவில்லை..

அனுவுமே அதையே நினைத்துக் கொண்டிருந்தவள் வேகமாக மடிக்கணினியை எடுத்து எதையோ தேடித் பார்த்தாள்… இதை ஏற்கனவே உறுதி செய்தது தான்… இப்பொழுது மறுபடியும் பார்க்கும் போது அவளால் தன் அழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை…

“நான் இப்போ என்ன செய்யனும்… ஏஜே… அஜய்… எனக்கு நீ வேணும்…. நீ இல்லாம நான் இருக்க மாட்டேன்.” என்று மடிக்கணி வால்பேப்பரில் இருந்த கணவனின் புகைப்படத்திடம் பேசிக் கொண்டிருந்தவளுக்கு நெஞ்சை அடைக்கும் போல் இருந்தது…

ஒருவாரமாக இதை தான் செய்து கொண்டிருக்கிறாள் தூக்கம் வராமல் இருக்கும் போது எல்லாம் இதை பார்ப்பதும் பின் கணவனின் புகைப்படத்தை பார்த்து இவ்வாறு புலம்புவதும் அவள் வழக்கம் ஆனது….

மறுநாள் விடுமுறை என்பதால் அஜய் எழுந்து தனக்கான வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தான்… அடுக்களையில் இருந்து வந்த சத்தத்தில் அரை தூக்கத்தில் இருந்து அனு எழுந்து ப்ரெஷ் ஆகிவிட்டு வெளியே வர தலை பாரமாக இருந்தது.. கண்கள் இருட்டிக் கொண்டு வர சுவரைப் பிடித்துக் கொண்டு மெல்ல நடந்து வந்தவளின் காலை அருகே இருந்த டேபிள் தடுக்க கீழே சரிந்தாள்.. அவள் கைப்பட்டு அவர்களின் திருமணப் புகைப்படம் கீழே விழுந்து உடைந்தது..

கண்ணாடி உடைந்த சத்தத்தில் சமையல் அறையில் இருந்து வெளியே வந்த அஜய் கீழே புகைப்படம் உடைந்திருப்பதை பார்த்து அனுவின் மேல் கொலை வெறியே வந்தது.. அவளை திட்ட வாய்த்திறந்தவன் கீழே மயக்கத்தில் இருந்தவளை பார்த்து வேகமாக அருகில் சென்று தலையை தன் மடியில் சாய்த்துக் கொண்டான்..

“அனு… ஹே அனு… இங்க பாரு.. என்னாச்சு?” என்று கன்னம் தட்ட அவளிடம் அசைவே இல்லை..

அவளை கீழே படுக்கவைத்து தண்ணீர் கொண்டு வந்து தெளிக்க அப்பொழுதும் அவளின் மயக்கம் தெளியவில்லை.. மருத்துவமனைக்கு கொண்டு சொல்வோம் என்று எண்ணியவன் அவளை தூக்க அவள் கைகளில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது.. கீழே விழுந்த கண்ணாடி சில் அவள் கைகளை நன்றாக பதம் பாத்திருக்க அவனின் பயம் அதிகமானது.. வேகமாக அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்…

டாக்டர் பரிசோதனை செய்துக் கொண்டிருக்க அஜய்க்கு உள்ளுக்குள் திக் திக் என்றிருந்தது.. அவன் இருந்த மனநிலையில் யாருக்கும் தகவல் கூட சொல்லவில்லை.. சொல்ல வேண்டும் என்றும் தோன்றவில்லை.. அனு நல்ல படியாக திரும்பி வரவேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான்…

சிறிது நேரத்தில் மருத்துவர் வெளியே வர அவர் அருகில் சென்றவன்

“டாக்டர் அனு?” என்று கூற அவர் அவனை முறைத்துக் கொண்டே

“நீங்க எல்லாம் ஒரு மனிஷனா? படிச்சா மட்டும் போதுமா? பொண்டாட்டிய நல்லா பார்த்துக்க வேண்டாம்… அந்த பொண்ணு எவ்வளவு வீக்கா இருக்கா தெரியுமா? கைல வேற அடிப்பட்டு ரத்தம் நிறையா போயிருக்கு… ப்ரெக்நென்டா இருக்க உங்க மனைவியை நீங்க பாத்துக்குற லட்சணம் இது தானா? அப்போ இருந்து இப்போ வரை ஆம்பளைங்க மாறவே இல்லை.. ச்ச..” என்று திட்ட

“டாக்டர் அவளுக்கு என்னாச்சு? எனக்கு சுத்தமா புரியல? அனு… அனு கன்சீவா இருக்காளா?” என்றான் அதிர்ச்சியாக

“சுத்தம் அதுவே தெரியாதா? நீங்க எல்லாம்…” என்று எதுவோ சொல்ல போனவர் அஜயின் முகத்தைப் பார்க்க சற்றுப் பாவமாக இருக்க  

“ட்ரிப்ஸ் போட்ருக்கேன்… கொஞ்ச நேரம் கழிச்சு போய் பாருங்க… ரொம்ப வீக்கா இருக்காங்க அண்ட் மென்டலி ரொம்பவே டிப்ரெஸ்ட்.. வொர்க் பண்றாங்களா?” என்று கேட்க

“ஆமா டாக்டர்… சாப்ட்வேர்ல.”

“அதுவே அவங்களுக்கு ரொம்ப பிரஷர் கொடுக்கும்.. கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கட்டும்… நல்லா பார்த்துக்கோங்க.. மெடிசின்ஸ் கரெட்டா பாலோ பண்ணச் சொல்லுங்க.” என்றவர் அங்கிருந்து செல்ல அஜய்க்கு இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது… அவள் மேல் இருந்த வருத்தம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போனது… அவளை காண வேண்டும் என்கிற எண்ணமே மேலோங்க  உள்ளே சென்று பார்க்க அனு சோர்வாக படுத்திருந்தாள்… தனது மகிழ்ச்சி மொத்தமும் வார்த்தையில் தேக்கி

“அனு” என்றவன் அவள் கையைப் பிடித்தான்..

“அஜய்…” என்றவளுக்கும் அத்தனை சந்தோஷம்

“என..எனக்கு… ரொம்ப ஹேப்பியா இருக்குடா லட்டு.” அவள் நெற்றியில் முத்தமிட்டான்..

அந்த முத்தம் எதையோ அவளிற்கு நியாபகப் படுத்த அவ்வளவு நேரம் இருந்த இதம் மறைந்தது.. ட்ரிப்ஸ் முடிந்ததும் இருவரும் காரில் புறப்பட்டனர்.. வீட்டிற்கு வந்தும் அனு பேசாமல் இருக்கவும்

“அத்தை மாமாக்கு விஷயம் சொல்லணும்.” என்றவன் மொபலை எடுக்க

“இல்ல வேணாம்…” என்றாள் வேகமாக

“ஏன்?”

“இல்..இல்ல…”

“என்ன அனு? உனக்கு என்ன ப்ராப்ளம்? என்கிட்ட சொல்ல மாட்டியா? திடீர்னு கோபப்படுற? திடீர்னு நார்மல் ஆகிடுற? நம்ம குழந்தை வரப்போற ஹேப்பிநேஸ் உன் முகத்துல சுத்தமா இல்ல.. உனக்குள்ள என்னவோ இருக்கு… அது என்னன்னு சொல்லு…” என்றான் பிடிவாதமாக.. நீ சொல்லாமல் உன்னை விடப்போவதில்லை என்பது போல் அவன் அவளை பார்க்க

“எனக்கு பசிக்குது…” என்றாள் அனுக்ராஹா

‘நான் என்ன கேக்குறேன் இவ என்ன சொல்லுற?’ என்று யோசித்தவன் பின் டாக்டர் சொன்னது நினைவிற்கு வர

“பத்து நிமிஷம் வெயிட் பண்ணு.. சட்னி அரைச்சுட்டேன்… தோசை மட்டும் ஊத்தணும்.” என்றவன் தோசை செய்து அவளிற்கு ஊட்டி விட்டான்..

“நானே சாப்பிட்டுக்குறேன்….” என்றவளை அவன் கண்டுகொள்ளவேயில்லை… மாத்திரைகளைக் கொடுத்து அதையும் விழுங்க வைத்தபின்பே அவளை விட்டான்…

மறுபடியும் தன்னிடம் அவன் கேள்வி கேட்பான் என்பதால்

“எனக்கு டயர்டா இருக்கு… ரூம்க்கு போறேன்.”

வழக்கம் போல் லேப்டாப்பில் எதையோ நோண்டியவள் கண்ணீருடனே வயிற்றை பிடித்துக் கொண்டு படுத்து விட்டாள்..

அனுவை பற்றி சிறிது நேரம் நினைத்துக் கொண்டிருந்தவன் மதிய உணவை தயார் செய்யத் தொடங்கினான்..

அவளை எழுப்பி உணவைக் கொடுக்க வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.. அவனும் கெஞ்சிக் கொண்டே இருந்தான்..

“அனு கொஞ்சமா சாப்பிடு… குழந்தைக்காக”

“எனக்கு இந்த குழந்தை வேண்டாம்…” என்று அடுத்த குண்டைப் போட்டாள்..

“எ..என்…என்ன?” என்றவனின் கையில் இருந்த தட்டு நழுவி கீழே விழுந்தது…

இருவரும் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களில் குழந்தையை பற்றி அவர்கள் பேசியதில்லை… அது கடவுளின் வரம்.. அவர் ஆசைப்பட்டு எப்பொழுது கொடுக்கிறாரோ கொடுக்கட்டும் என்று தான் அஜய் நினைத்தான்.. ஆனால் இப்பொழுது அதையே அவள் வேண்டாம் என்றதும் அவனிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..

“எனக்கு இந்த குழந்தை வேண்டாம்…” என்றாள் அழுத்தமாக

“ஹே என்னடி சொல்ற? நானும் பொறுமையா பேசீட்டு இருக்கேன்.. என் கோபத்த கிளறாதே?” அடக்கப்பட்ட கோபத்துடன் அவன் கூற

“என்னை போல இந்த குழந்தை ஆகிட கூடாது.. எனக்கு வேண்டாம்…”

“என்ன உன்னை போல? லூசா நீ?”

“ஆமா…”

“அனு… என்மேல இருக்க  கோபத்த வெளியவே வராத நம்ம குழந்தைக்கிட்ட காட்டாதே…”

“யார்மேலையும் எனக்கு எந்த கோபமும் இல்ல.. எனக்கு இந்த குழந்தை வேண்டாம்..”

“ஏன்டி இப்படி பிடிவாதம் பிடிக்கிற? என்னால முடியல.. ப்ளீஸ்” என

அப்பொழுதும் அவள் அதையே கூற

“ஹே உன்னால முடிஞ்சத செய்.. என் குழந்தைய எப்படி காப்பாதிக்கனும்ன்னு எனக்கு தெரியும்…” என்றவன் அவளை அடிக்க ஓங்கிய கையை இறக்கி காற்றில் குத்திவிட்டு சென்றான்…

அவளை தனியாக விட்டாள் ஏதாவது செய்வாளோ என்று பயந்து அவளை தன் கண் பார்வையிலேயே வைத்துக் கொண்டான்.. இரண்டு நாட்கள் சென்றும் எந்த மாற்றமும் அவளிடம் இல்லாமல் போனது.. வேலைக்கு செல்லாமல் அவளை பார்த்துக் கொண்டே இருக்கவும் முடியாதே என்று யோசித்தவன் அவளுடன் அத்தை வீட்டிற்கு சென்றான்… அங்கே செல்வதா என்று யோசித்தத அனுக்ரஹா பின் அஜயை விட்டு தள்ளி இருப்பதே சிறந்தது என்று எண்ணி தாய் வீட்டிற்கு புறப்பட்டாள்..

அங்கே மகள் தாய்மை அடைந்திருக்கிறாள் என்ற செய்தி கேட்டு ஜானகி மூர்த்தி இருவரும் மகிழ்ந்து போகினர்… ஷ்யாம் ஸ்வேதாவும் சண்டைகளை மறந்து அனுவைக் கட்டிக் கொண்டு தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்த அவளோ கணவனிடம் கூறியது போலேவே

“எனக்கு இந்த குழந்தை வேண்டாம்…” என்று கூற மொத்தக் குடும்பமும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தது…

“அனு என்ன பேசுற?” என்று மகளை ஜானகி அதட்ட

“எனக்கு குழந்தை வேண்டாம்…” என்றாள் மறுபடியும்…

அவள் கூறியதை கேட்டு அனைவரும் அவளை முறைக்க அஜய் மட்டும் அமைதியாகவே இருந்தான்… இரண்டு நாட்களாக அவன் கேட்டுக் கொண்டிருக்கும் வசனம் தானே.. அவனிற்கு அதை கேட்டுக் கேட்டு காது புளித்து விட்டது…. அவனின் அமைதியை பார்த்த ஷ்யாம் அவன் அருகில் சென்று

“டேய் அவ என்ன பேசீட்டு இருக்கா நீ அமைதியா இருக்க? எங்க எல்லாருக்கும் அவ்வளவு கோபம் வருது.. கோபம் வர வேண்டிய நீயோ எனக்கென்னன்னு நின்னுக்கிட்டு இருக்க…” என்று திட்ட அதற்கும் அவன் பதில் கூறவில்லை..

“அஜய் உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா? அந்த கோபத்துல இப்படி பேசுறாளா?” என்று அனுவின் தந்தை மூர்த்தி மாப்பிள்ளையிடம் கேட்க அவனால் பதில் கூற முடியவில்லை..

பிரச்சனை இருக்கிறதா என்று கேட்டால் அவன் என்ன கூறுவான்.. சில நாட்களாகவே அவள் அவனிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை.. அவன் தவறு என்று எதுவும் செய்யவில்லை… திருமணத்திற்கு முன் இருவருக்கும் வரும் சண்டை கூட திருமணத்திற்கு பிறகு இருவரிடமும் வரவில்லை… ஏஜே ஏஜே என்று அவன் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தவளிற்கு திடீரென்று என்னவானது? அவனும் இதை யோசிக்கிறான் விடை தான் கிடைக்கவில்லை…

மருமகனின் அமைதியை தவறாகப் புரிந்து கொண்டு மூர்த்தி

“என்ன அஜய் உனக்கு பிரச்சனை? எப்ப பார் என் பொண்ண கஷ்டப்படுத்திட்டே இருப்பியா? கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னால அவ பல தடவை அழுதிருக்கா.. இப்பவும் இப்படி செஞ்சா என்ன அர்த்தம்?” என்று கத்த

அவரின் கோபத்தை பார்த்த ஜானகி

“இப்ப எதுக்கு அவன திட்டுறீங்க? ஆயிரம் சண்டை வந்தாலும் குழந்தைய வேண்டாம்ன்னு உங்க பொண்ணு எப்படி சொல்லலாம்.. புருஷன் பொண்டாட்டிக்குள்ள  பிரச்சனை வரது சகஜம்.. அதுக்காக இப்படி ஒரு முடிவை எடுத்தவள கண்டிக்காம வீட்டு மாப்பிளைய திட்டுறீங்க…” என்றவர் மகள் புறம் திரும்பி

“இப்படி ஒரு முடிவை எடுக்க உனக்கு எப்படி மனசு வந்தது? குழந்தை இல்லாம எத்தனை பேர் தவம் இருக்காங்க தெரியுமா?” என

“எனக்கு குழந்தை வேண்டாம்…” மீண்டும் மீண்டும் இதையே கூறும் மகளை பார்த்து ஆத்திரம் வந்த ஜானகி மகளின் கன்னத்தில் அறைந்து

“பைத்தியமா நீ? சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ற?” என்று  மறுகன்னத்திலும் அறைய கை ஓங்க மூர்த்தி வந்து மனைவியைத் தடுத்தார்..

“ஸ்வேதா அவள ரூம்க்கு கூடிட்டு போமா…” என்று மருமகளிற்கு உத்தரவிட்டவர் மனைவியை முறைத்தார்..

கன்னத்தில் வழிந்த நீருடன் செல்லும் மனைவியைப் பார்த்த அஜயின் மனம் வேதனை அடைந்தது… மகள் உள்ளே சென்றதும் மூர்த்தி மருமகனின் முன்னே வந்து

“அஜய் என்ன செஞ்ச என் பொண்ண? அவ இப்படி குழந்தையே வேண்டாம்ன்னு சொல்லுற அளவுக்கு அவளை என்னடா செஞ்ச?” என்று அவன் சட்டையை பிடிக்க.. ஷ்யாம் ஜானகி இருவரும் அவரை தடுத்தனர்…

“அப்பா என்ன செய்றீங்க? அவன் என்ன செஞ்சான்… அவனுக்கும் இது ஷாக்கா தானே இருக்கும்…” என ஷ்யாமும்

“உங்களுக்கு சொன்னா புரியாதா? தப்ப உங்க பொண்ணு மேல வெச்சுகிட்டு என் அண்ணன் பையன எதுக்கு கேள்வி கேக்குறீங்க? முடிஞ்சா போய் உங்க பொண்ண கேளுங்க…” என்று ஜானகியும் சொல்ல

“உனக்கு நம்ம பொண்ண விட உன் அண்ணன் பையன் தான் முக்கியமா?” மனைவியிடம் மூர்த்தி பாய

“ஏங்க இப்படி பேசுறீங்க? எனக்கு ரெண்டு பேருமே சமம் தான்… அஜய்க்கு அனுவ எவ்வளவு பிடிக்கும்ன்னு உங்களுக்கு தெரியாதா? கொஞ்சம் பொறுமையா என்ன நடந்ததுன்னு பேசலாம்…” என்று கூற மூர்த்தியின் கோபம் குறையாமல் இருந்தாலும் அமைதியாக இருந்தார்… அதுவே பெரிது என்று எண்ணிய ஜானகி அஜயின் புறம் திரும்பி

“என்னடா அச்சு? அவ ஏன் இப்படி பேசுறா?” என

“தெரியலை அத்த.. மும்பைல இருந்து நாங்க வரதுக்கு முன்னமே அவ என்னோட பேசுறதில்லை.. நானும் வழக்கம் போல வர கோபம் தான்னு விட்டுட்டேன்.. அது இங்க வந்து நிக்கும்ன்னு நான் நினைக்கல…” என்றவனின் கண்களில் அப்பட்டமாய் வலி தெரிந்தது…

 

Advertisement