Advertisement

அத்தியாயம் 3

நாளை மும்பை செல்வதாக முடிவு செய்திருந்தனர்… ஆதலால் அனுவின் அம்மா வீட்டிற்கு சென்றனர்.. அங்கே ஷ்யாம் படத்திற்கு செல்லலாம் என்று கூற சிறியவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி பெரியவர்கள் இருவரும் செல்லவில்லை.. நால்வரும் படத்திற்கு சென்றனர்.. படம் பார்த்துக் கொண்டே இருந்த அனு திடீரென்று அஜயைஇறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.. அவன் அதை சாதரணமாக எடுத்துக் கொள்ள சிறிது நேரத்தில் இன்னும் இறுக்கமாக அணைத்தாள்.. அதில் அவளை திரும்பி பார்த்து

“இங்க வந்து இப்படி ஹக் பண்ற? இதே வீடாஇருந்தா சுப்பரா இருந்திருக்கும்..” என்று கூற

“அ..அஜய்.. வெளிய போ..போகலாம்.” என்றாள் திக்கித் திணறி

“ஹே என்னாச்சு அனு?”

“வெளிய போகலாம் அஜய்..” என்று மீண்டும் கூற அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.. அவர்கள் செல்வதை பார்த்து ஷ்யாம் ஸ்வேதாவும் வெளியே வந்தனர்…

“என்னடா ஏன் வெளிய வந்துட்டீங்க?”

“தெரியலடா அனு தான் போகணும்னு சொன்னா…” என்றவன் அனுவிடம் திரும்பி

“என்னாச்சுடா…” என்றான்

“அஜய்… என…எனக்கு தலைவலிக்குது…”

“டேய் ஒரு வாரம் தானே ஆகுது.. அதுக்குள்ள தலை சுத்துதுனு சொல்ற அளவுக்கு வந்துடுச்சா? செம பாஸ்டா…” என்று ஷ்யாம் கலாய்க்க

“லூசு அவ தலைவலிக்குதுன்னு தானே சொன்னா… சும்மா இருடா..”

“திடீர்னு என்ன அனு? தியேட்டர் சவுண்ட் தலைவலி வந்துடுச்சா?” என்று ஸ்வேதா கேட்க

“ம்…” என்றாள்

“சரி வீட்டுக்கு போகலாம்..”

வீட்டிற்கு வந்தவள் படுக்கையில் சென்று படுத்துக் கொண்டாள்… படுத்தவள் கண்ணில் மீண்டும் மீண்டும் அந்த காட்சியே வந்து அவளை பயமுறுத்தியது… அருகில் இருந்த தலையணையை இறுக்கி பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்…

அடுத்தநாள் அஜய் அனுவுடன் ஜானகி மூர்த்தியும் மும்பைக்கு புறப்பட்டனர்… ஏற்கனவே அஜய் இருந்தது ஒரு பெட் ரூம் இருந்த பிளாட்டில்.. ஒரு மாதம் தானே அங்கேயே இருந்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தால் அந்த வீட்டிற்கே சென்றனர்… இரண்டுநாட்கள் அவர்கள் அங்கே தங்கிவிட்டு மகளிற்கு தேவையான உதவிகளை செய்துவிட்டு திரும்பினர்…

நாட்கள் தெளிந்த நீரோடையாக செல்ல அஜய் அனுவிற்கு சண்டைகள் என்ற ஒன்று இப்பொழுது வருவதே இல்லை.. செல்ல சீண்டல்கள் மட்டுமே… அஜய் லீவ் முடிந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தான்… சமையல் என்ற பெயரில் அனு செய்யும் கொடுமையை சகித்துக் கொண்டு சாப்பிட்டான்.. இருவரும் அன்று வெளியே செல்லலாம் என்று முடிவு செய்திருந்தனர்….

“ஏஜே இருங்க தோசை மாவை எடுத்து வெளிய வச்சுட்டு வந்துடுறேன்…” கையில் பைக்கின் சாவியை சுற்றிக் கொண்டிருந்த கணவனிடம் கூறியவள் ப்ரிட்ஜை திறக்க சென்றாள்.. வேகமாக அவள் அருகில் வந்தவன்

“அடியே டெய்லி உன் கொடுமையை அனுபவிக்கிறது பத்தாதா இன்னைக்குமா? வெளியே டின்னர் சாப்பிடலாம்…”

“ஓ அய்யாவுக்கு இரண்டு வாரத்துல நான் அலுத்துப் போயிட்டேனா?” கோபமாக பேச

“நீ எப்படிடி செல்லம் அலுத்துப் போவ… உன் சமையல் தான்…” என்றவன் அவள் காதுமடலில் முத்தம் வைத்தான்… அவனைப் பிடித்து தள்ளி விட்டவள் “போடா..” என்றாள்

“சரி சீக்கிரம் கிளம்பு.”

இருவரும் ஷாப்பிங் டின்னர் முடித்துவிட்டு சந்தோசத்துடன் இரவு வீடு திரும்ப பதினொன்று ஆனது… இது தான் அவர்கள் சந்தோசமாக இருக்கும் கடைசி நாள் என்று அவர்கள் அப்பொழுது அறியவில்லை… அதன்பிறகு வந்த நாட்களில் அஜய் வேளையில் பிசியாக விட அவனால் வீட்டிற்கு நேரத்திற்கு வர முடியவில்லை… அனுவிற்கு வீட்டில் தனியாக இருக்க பிடிக்காமல் அருகில் இருக்கும் கோவில் ஷாப்பிங் மால் என்று எங்காவது சுற்றிக் கொண்டிருந்தாள்… அன்றும் அப்படி வெளியே சென்ற போது அவள் பார்த்த    காட்சி அவளை மொத்தமாக செயல் இழக்க வைத்தது…

இரவு நெடு நேரம் கழித்து திரும்பி வந்த அஜய் அறைக்கு சென்று பார்த்த போது அனு கண் மூடி படுத்துக் கிடந்தாள்… தூங்கிவிட்டாள் போல என்று எண்ணிக் கொண்டு குளித்து முடித்து உணவு உண்ண மேஜைக்கு சென்று பார்த்தபோது அங்கே உணவு இல்லை.. சமையல் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கே சமைத்ததற்கான அறிகுறியே இல்லை… அவன் இரவு தாமதமாக வரும் போது அனு சாப்பிட்டுவிட்டு அவனுக்கான உணவை டைனிங் டேபிளில் வைத்து விட்டு தான் படுப்பாள்…

“நைட் லேட்டா வரேன்னு பட்டினி போட்டுடாளா? அவளுக்கும் சமைச்சது மாதிரி தெரியலையே? ஹோட்டல்லஆர்டர் செஞ்சு சாப்பிட்டாளா?” என்று யோசித்தவன் பிறகு பசி வயிற்றை கிள்ள ப்ரெட்டையும் பாலையும் உண்டுவிட்டு மனைவியின் அருகில் படுத்துக் கொண்டான்… அவன் அசதியில் உறங்க அவன் புறம் திரும்பிய அனுவோ அவள் கண்ட காட்சியையே நினைத்துக் கொண்டு கணவனை பார்த்தவண்ணம் தூக்கத்தை தொலைத்தாள்…காலையில்அஜய் வேலைக்கு செல்லும் வரையிலும் அனு எழவில்லை.. இரவு தமாதமாக தூங்கியதால் நல்ல உறக்கத்தில் இருந்தாள்…காலை உணவை அவனே தாயரித்துவிட்டு அனுவை எழுப்பினான்..

“அனு…”  

“ம்…” என்று தூக்கத்தில் அவள் கூற

“எழுந்திரி டைம் ஆகிடுச்சு.. நான் ஆபிஸ் கிளம்புறேன்…” என்றதும் மெதுவாக கண்ணை திறந்தவள் மணியை பார்த்து திகைத்தாள்.

“சாரி.. ரொம்ப நேரமா தூங்கிட்டேன்… இருங்க பிரேக்பாஸ்ட் ரெடி பண்றேன்…” என்று எழ

“நானே செஞ்சுட்டேன் அனு… ஹாட் பாக்ஸ்ல இருக்கு… குளிச்சுட்டு சாப்பிடு.. நான் கிளம்புறேன்…” என்று கூறியவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு புறப்பட்டான்…

அவன் முத்தம் அவளை என்னவோ செய்தது… இத்தனை நாள் அவள் தாய் கூறிய அறிவுரையை மிகவும் சிரமப்பட்டு கடைப்பிடித்திருந்தவளால் இதற்கு மேல் முடியாது என்று தோன்றியது…. ஏதேதோ அவள் கண் முன்னே வர வேகமாக குளியல் அறைக்கு சென்றவள் ஷவரை திறந்து அதன் கீழே நின்றுவிட்டாள்…

அடுத்துவந்த நாட்களும் கணவனுடன் பேசுவதை அவள் முயன்று தவிர்த்தாள்… இரவு அவன் வரும் முன்பே உறங்கிவிடுவாள்… காலையிலும் அவனிற்கு தேவையானது செய்துவிட்டு அவன் அருகில் வந்தால் வேலை இருப்பது போல் ஏதாவது செய்து கொண்டிருப்பாள்… இன்னும் ஒரு வாரத்தில் இருவரும் சென்னை திரும்ப இருக்கின்றனர்… அவனுடன் பணிபுரிபவர்கள் சென்ட் ஆப் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தனர்… அஜய் இது பற்றி அனுவிடம் முன்னரே கூறி இருந்தான்.. வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தவன் அனு புறப்படாமல் இருப்பதை பார்த்துவிட்டு அவள் அருகில் சென்றான்..

“அனு இன்னும் கிளம்பாம என்ன பண்ற?” அவள் “எங்கே?” என்பது போல் அவனை பார்க்க

“என்ன பாக்குற? இன்னைக்கு பார்ட்டி இருக்குனு சொன்னேன்ல.”

“மறந்துட்டேன்.”

“சரி போய் ரெடி ஆகு..” என்றவன் உடைகளை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்கு சென்றான்… அவன் திரும்பி வரும் வரையிலும் அவள் கட்டிலிலேயே உட்கார்ந்து இருக்க அதை பார்த்து சற்று எரிச்சல் ஆனவன்

“ப்ச் என்ன அனு? உட்காந்துட்டே இருக்க.. ஒன் அவர்ல அங்க போகணும்…”

“எனக்கு டயர்டா இருக்கு.. நீங்க போயிட்டு வர்றீங்களா?” என்றாள் மெல்ல

“என்னாச்சுமா.. உடம்பு சரியில்லையா?” என்றவன் அவள் அருகில் வந்து கழுத்தில் தொட்டுப் பார்க்க அவன் கைகளை வேகமாக தட்டிவிட்டாள்

“இல்ல நல்லா தான் இருக்கேன்… பேக்கிங் செஞ்சுட்டு இருந்தேன்.. கொஞ்சம் டயர்டா இருந்தது..”

“கொஞ்ச நேரம் அங்க இருந்துட்டு வந்துடலாம்.. நமக்காக தான் பார்ட்டி ஏற்பாடு செஞ்சுருக்காங்க நீ வராம இருந்தா நல்லா இருக்காதுடா.”

அவளும்சிறிது நேரத்தில் புறப்பட்டு அவனுடன் சென்றாள்… நண்பர்களுக்கு அனுவை அறிமுகம் செய்து வைத்தவன் அவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்…

“என்ன அஜய் உங்க மிஸ்ஸஸ் ரொம்ப அமைதியா இருக்காங்க?” அஜயுடன் பணிபுரியும் ஒருவர் கேட்க

“அனுவா அமைதியா? ஏன் நீங்க வேற… தெரியாதவங்க கிட்ட தான் ரொம்ப பேசுவா… இன்னைக்கு கொஞ்சம் டயர்டா இருக்கா…” என்று கேலி செய்ய சிரிக்க வேண்டுமே என்று சிரித்தாள் அனு… அங்கே சிறிது நேரம் இருந்துவிட்டு உணவையும் முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்.. உடை கூட மாற்றாமல் அஜய் வரும் முன்பே படுத்துக் கொண்டாள்…

மறுநாள் விடுமுறை என்பதால் இருவருமே தாமதமாக எழுந்தனர்.. காலை உணவை தயார் செய்துவிட்டு அறைக்கு சென்றவள் புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தாள்..

“லட்டு சாப்பிட வா.. பசிக்குது…” ஹாலில் இருந்து அஜய் குரல் கொடுக்க வேண்டா வெறுப்பாக வந்து அமர்ந்தாள்… அமைதியாக அவள் உண்பதை பார்த்தவன்

“என்னடா இன்னும் டயர்டா இருக்கா? டல்லா இருக்க.” என

“இல்ல..”

“ஊருக்கு போக போற சந்தோஷம் உன்கிட்ட இல்லையே?”

“..”

“இங்க வந்ததுல இருந்து எப்போடா கிளம்பலாம்னு சொல்லிகிட்டே இருப்ப.. இப்போ என்னாச்சு? உடம்பு சரியில்லையா? மந்திலி ப்ராப்ளமா?” என்று அவன் ஏதேதோ கேட்க அதில் எரிச்சல் அடைந்தவள்

“ஐயோ அஜய் அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நான் நல்லா தான் இருக்கேன்.. சும்மா கேள்வியா கேட்காதிங்க..” என்றவள் சாப்பிடாமல் எழுந்து சென்றாள்..

அவள் சாப்பிடாமல் எழுந்துசெல்லவும் தட்டை எடுத்துக் கொண்டு அவள் அருகில் சென்றவன்

“இப்போ உனக்கு என்ன கோபம்? டெய்லி லேட்டா வரேன்னா? என் மேல இருக்க கோபத்தை எதுக்கு சாப்பாட்டுல காமிக்குற?”

“எனக்கு யாருமேலையும் கோபம் இல்ல.”

“சரி சாப்பிடு..” என்று பிளேட்டை கையில் கொடுத்து அவள் சாப்பிட்ட பின்பே அங்கிருந்து நகர்ந்தான்… கணவன் தன் மேல் வைத்திருக்கும் பாசம் அவளிற்கு கண் கலங்க வைத்தது… இருப்பினும் அன்று பார்த்த அந்த காட்சி அவளை அவனிடம் இருந்து விலக்க வைத்தது…

அஜயும் அவளின் கோபத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை… இருவருக்கும் அடிக்கடி நடக்கும் சண்டைகள் தானே… தினமும் இரவு தாமதமாக வருவதால் கோபமாக இருக்கிறாள்.. இங்கிருந்து சென்னை சென்றதும் பத்து நாட்கள் அவளுடன் வெளியே செல்ல வேண்டும்.. அப்பொழுது அவள் கோபம் போய்விடும் என்று மிதப்பாக இருந்துவிட்டான்.. இதனாலேயே அவன் மனைவியை மொத்தமாக இழக்க போகிறான் என்று அவன் அறியவில்லை..

சென்னை செல்லும் நாளும் வந்தது.. இருவரும் விமானத்தில் சென்னை வந்தடைய இவர்களை அழைத்து செல்வதற்காக ஷ்யாம் ஸ்வேதா வந்திருந்தனர்… ஸ்வேதா அனுவை பார்த்ததும் வந்து கட்டிக் கொள்ள அனு இயந்திரத்தனமாக அவளை அணைத்தாள்..

“டார்லிங் எப்படி இருக்க? நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்…”

“ம் நல்லா இருக்கேன்…”

“உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்லையா ஸ்வேதா? டெய்லி ரெண்டு பேரும் வாட்ஸ்அப், மெசன்ஜர், வீடியோ சேட்னு பேசிக்கிட்டு தானே இருக்கீங்க.” என்றுஅஜய் கிண்டல் செய்ய

“ஒன் வீக்கா மேடம் பிசியா இருந்தாங்க.. சரியாவே பேசலை.”

“அனு சரியவே பேசலைங்க பேசலைங்கனு என்கிட்ட புலம்பி தள்ளுனா. என்னாச்சு அனு ரொம்ப வேலையா?” என்று தங்கையிடம் ஷ்யாம் கேட்க

“ம்” என்று தலையை ஆட்டினாள்…

“டேய் என்னடா செஞ்ச என் தங்கையை இவ்வளவு சைலென்ட் ஆகிட்டா?”

“அவங்க என் மேல கோபமா இருக்காங்க.. அதான் சைலென்ட்.” என்றான் மனைவியை பார்த்துக் கொண்டே

“உங்க சண்டை ஓயவே ஓயாது…” என்றவன் பெட்டிகளை எடுத்துக் கொண்டு நடந்தான்… அவன் பின்னோடு மற்றவர்கள் சென்றனர்.. வீட்டிற்கு சென்றதும் நலன் விசாரிப்புகள் முடிந்து அனைவரும் உணவை உண்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தனர்…

“என்னடா அனு ஒரு மாசம் அம்மாவோட திட்டு இல்லாம சந்தோசமா இருந்தியா?” மூர்த்திமகளிடம் கேட்க ஜானகி அவரை முறைத்தார்

“உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் என்னை பார்த்தா வில்லி மாதிரி இருக்கா?”

“மாதிரி என்ன வில்லியே தான்.” என்று கூறி மனைவியிடம் இருந்து சில திட்டுகளை வாங்கிக் கொண்டார். தூங்கும் வரையிலும் பேசிக் கொண்டிருந்தனர்.. அனு மட்டும் அவ்வபோது ஏதாவது கேட்டாள் ஆம் இல்லை என்பது போன்ற பதிலை சொல்லிக் கொண்டிருந்தாள். ஜானகி மகளின் அமைதியை பார்த்து சற்று கவலை அடைந்தார். அவருக்கும் தான் மகளைப் பற்றி தெரியுமே அஜயுடன் ஏதோ வாக்குவாதம் செய்திருப்பாள் அதான் இந்த அமைதி என்று எண்ணிக் கொண்டார்.

“அனு எப்போ அகைன் ஆபிஸ் வர போற?” ஷ்யாம் கேட்க

“ஒரு பத்து நாள் ஆகட்டும் நாங்ககொஞ்சம் வெளிய போறோம்டா.” அனுவிற்கு முன்பு அஜய் பதில் கூறினான்.

“வெளியனா எங்கடா? ஹனிமூனா?” ஷ்யாம் நக்கல் செய்ய

“ஏன்டா.” பெரியவர்களின் முன்னால் மானத்தை வாங்குகிறானே என்று பல்லைக் கடித்துக் கொண்டு அஜய் அவனை முறைத்தான்…

கணவன் மற்றும் தமையனின் பேச்சில் அதிர்ந்தவள்  ‘இவரோட தனியா இனிமே என்னால இருக்க முடியுமா? இல்ல முடியாது.’

“மண்டே ஜாயின் பண்றேன் ஷ்யாம்.”

“மண்டேவா? அவன் தான் வெளிய போகணும்னு சொல்லுறான்ல.”

“அவருக்கு போகணும்னா போகட்டும்.. நான் ஆபிஸ்க்கு வருவேன்.” என்றதும் அஜய் அவளை பார்த்து முறைக்க அதை அவள் கண்டு கொள்ளவே இல்லை…

“டேய் மச்சான் தனியா ஹனிமூன் கொண்டாட போறியா?” என்று மீண்டும் ஷ்யாம் நக்கல் செய்ய. இம்முறை அவனின் முதுகில் ஒன்று வைத்தவன் மனைவியின் புறம் திரும்ப அவள் அவனை கண்டு கொள்ளவே இல்லை.

“சரி சரி போய் தூங்குங்க.. காலைல அந்த வீட்டுக்கு போகணும்.” ஜானகி கூற அவரவர் அறைக்கு சென்றனர்…

அறைக்கு வந்ததும் அனுவை பின்னால் இருந்து அணைத்த அஜய்

“உன் கோபம் நியாயம் தான் லட்டு.. அங்க இருந்து ரிலீவ் ஆகி வரதுக்குள்ள நான் பார்த்துட்டு இருந்த கேஸை முடிக்கணும்ல அதான் உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியல.. இப்போ ப்ரீ தான் நாம எங்கேயாவது போகலாம்.” என்றவன் அவள் காதில் இதழ் பதிக்க அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள்  

“நீங்க ப்ரீயா இருந்தா நான் உங்களோட வரணுமா? எனக்கு வேலை இருக்கு.. எனக்கும் என் கரியர் முக்கியம். உங்களுக்காக ஒரு மாசம் என்னோட வேலையை விட்டுட்டு வந்தேன். இதுக்கு மேல என்னால எதுவும் செய்ய முடியாது.” என்று முகத்தைத் திருப்ப

“அனு…..”

“எனக்கு தூக்கம் வருது.”

“பட் எனக்கு வரலையே” என்றவன் அவள் இதழ்களை சிறை செய்தான். அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்காத அனு அவனை பிடித்து தள்ளிவிட்டாள்… அவள் கையை பிடித்து மீண்டும் தன் புறம் இழுத்தவன்

“ஒரு கிஸ்சோட விட முடியாது…” என்றவன் அவளின் இடையில் கை வைக்க அனுவிற்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ அவன் கையை பிடித்து இழுத்தவள்

“ச்ச நீங்க இவ்வளவு கேவலமா நடந்துக்குவீங்களா? என்னோட அனுமதி இல்லாம என்னை நீங்க எப்படி டச் பண்ணலாம்? பொண்ணுங்கனா உங்கள மாதிரி ஆம்பளைங்களுக்கு இதுக்கு மட்டும் தான் தேவைப்படுறோம் இல்ல…” என்று கத்தியவள் கட்டிலில் உட்கார்ந்து கால்களில் முகம் புதைத்து அழுதாள்…

மனைவி தன்னை பற்றி இப்படி நினைப்பாள் என்று சிறிதும் எதிர்ப்பார்க்காத அஜய் திடுக்கிட்டான்… பின் அவள் கூறிய வார்த்தைகள் அவனிற்கு கோபத்தை கொடுக்க வேகமாக அவள் அருகில் சென்றவன் அவள் கைகளை பற்றி நிமிர்த்தி

“என்னை  பார்த்தா உனக்கு அவ்வளவு கேவலமா தெரியுதா? வெளிய என்னனா அவர் தனியா போகட்டும்ன்னு எல்லார் முன்னாடியும் சொல்லுற… இப்போ இப்படி பேசுற…  இது நாள் வரை உன்னோட அனுமதி இல்லாம உன்னை தொட்டிருப்பேனா? உன்னை ரேப் பண்ண வந்த மாதிரி பேசுற? நீ இப்படி பேசுவனு நானும் எதிர்பார்க்கலை அனு..” கையை அருகில் இருந்த டீபாயில் குத்தினான்…

“இனி எப்பவும் என் விரல் கூட உன் மேல படாது… பொண்டாட்டினு உரிமையில உன்னை தொட்டதுக்கு என்னை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ படுத்தீட்ட.” என்றவன் அறையை விட்டு வெளியே சென்றான்…

அஜய் திட்டிவிட்டு சென்றபின்பே தான் கூறிய வார்த்தையின் வீரியத்தை உணர்ந்தவளுக்கு நிற்காமல் கண்ணீர் வந்து கொண்டிருந்தது… ‘இத்தனை நாள் பொறுமையா தானே இருந்தேன்.. இன்னைக்கு ஏன் இப்படி பேசிட்டேன்.. என்னால அவரோட தொடுகையை ஏத்துக்க முடியலை… அதை அவருக்கு புரிய வைக்காம ஏதேதோ பேசி அவர் மனசை நோகடிச்சுட்டேன்.. அயம் சாரி அஜய்’ என்றவள் அழுதுகொண்டே தலையணையில் முகம் புதைத்தாள்…

இரவு சென்றவன் விடியலில் தான் வீடு திரும்பினான்.. அவன் வீட்டிற்கு வந்த நேரம் ஹாலில் யாரும் இல்லாததால் வேகமாக அறைக்கு சென்று குளித்துவிட்டு கீழே வந்தான்..

“வா அஜய் அதுக்குள்ள எழுந்துட்டியா? இரு காபி கொண்டு வரேன்.” ஜானகிஅடுக்களைக்குள்நுழைய

“இல்லத்தை… கொஞ்ச வேலை இருக்கு.. நான் வெளிய கிளம்புறேன்.. முடிச்சுட்டு நான் நேரா வீட்டுக்கு வந்துடுறேன்.. நீங்க எல்லாரும் அங்க வந்துடுங்க.” என்றவன் அவர் பதிலை எதிர்பார்க்காமல் புறப்பட்டான்…

மருமகனின் செய்கை வித்தியாசமாக இருந்தாலும் அவன் முக்கியமான வேலை என்று கூறியதால் அதை உண்மை என்று நம்பியவர் சமையல் வேலையை தொடர்ந்தார்..

தாமதமாக எழுந்த அணுக்ரஹா குளித்து கீழே வந்த போது எல்லோரும் அவளிற்காக டைனிங் டேபிளில் காத்திருந்தனர்…

“இப்படி தான் டெய்லி எழுந்திரிக்கிறியா அனு?” ஜானகி மகளை முறைத்துக் கொண்டே கேட்க

“ஜானு விடு எழுந்ததும் திட்டாதே.”

“நீவாடா அனு.” மகளை அருகில் உட்கார வைத்துக் கொண்டார்…

கைகள் உணவை அளந்து கொண்டிருக்க கண்கள் கணவனை தேடியது.. நேத்து நைட் போனவர் திரும்பி வரவே இல்லையா? என்று குழம்பிக் கொண்டிருந்தாள்..

“என்ன வேடிக்கை பார்த்துட்டே இருக்க? சீக்கிரம் சாப்பிடு.” ஜானகி அதட்ட

“அஜயை தேடுறியா?” மெதுவாக அவளிடம் கேட்டாள் ஸ்வேதா.. அவள் பதில் சொல்லாமல் இருந்த போதும்

“முக்கியமான வேலை வந்துடுச்சுனு காலையிலேயே கிளம்பிட்டான்.. நம்ம அந்த வீட்டுக்கு போறதுக்குள்ள வந்துடுவான்.”

அங்கே இவர்கள் சென்று வெகு நேரமாகியும் அவன் வரவில்லை.. மாலை ஆறு மணிக்கு மேல் வந்தவன் சிறிது நேரம் பேசிவிட்டு அறைக்கு சென்றான்… அவர்கள் புறப்படும் சமயம் தான் வெளியே வந்தான்… கணவனிடம் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அனு நினைத்தாலும் அதை அவளால் செயல்படுத்த முடியவில்லை…

இருவரும் வேலைக்கு செல்ல தொடங்கிய பின் ஒரு நாள் ஸ்வேதா ஷ்யாம் அனு மூவரும்கேண்டீனில் அமர்ந்திருந்தனர்…

“அண்ணா உன்னோடவெளியே போகலாம்னு நினைச்சான்.. பாவம்டி இப்படி பண்ற? உன் அண்ணாவும் தான் இருக்காரே கல்யாணம் ஆகி நாலு மாசம் ஆகப்போகுது இப்போவரை என்னை எங்கேயும் கூட்டீட்டு போகலை.” என்று ஷ்யாமை முறைத்துக் கொண்டே கூற

“உனக்கு போகணும்னா நேரா கேளு.. எதுக்கு சுத்தி வளைக்கிற?” ஷ்யாமும் அவளை முறைத்துக் கொண்டே கூற

“கேட்டுட்டா மட்டும்….” என்று முணுமுணுத்தவள் தோழியிடம்

“உன் கோபத்தை கொஞ்சம் குறையேன்… எத்தனை தடவை சொல்லுறேன். சும்மா எப்போ பாரு சண்டை போட்டுகிட்டே இருக்க” ஸ்வேதாஅனுவை குறை சொல்லிக் கொண்டே இருக்க அதில் கடுப்பானவள்

“ஆமா நான் சண்டைபோட்டுட்டே தான் இருக்கேன்… அது எனக்கும் என் புருஷனுக்கும் உள்ள பிரச்சனை.. நீ எதுக்கு எங்களுக்குள்ள வர? அவர் உனக்கு அண்ணனா இருக்கலாம் அதுக்காக எங்க ரெண்டுபேருக்கும் இடையில நீ வராதே… நான் கோபப்டுறேன் தேவை இல்லாம கத்துறேன்னு தெரியுதுல அப்பறம் எதுக்கு என்னை அவருக்கு கட்டி வெச்சீங்க? உன் லிமிட் எதுவோ அதுல இரு…” என்று கத்திவிட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தாள்…

தோழியிடம் இருந்து இத்தனை கோபத்தை கண்டிராத ஸ்வேதா அண்ணனை போலவே அதிர்ந்து கண்களில் நீர் வர அமர்ந்திருந்தாள்… ஷ்யாமிற்கும் அவள் இப்படி பேசியதை கேட்டு அதிர்ச்சி தான்… தன் தங்கையா இப்படி பேசியது என்று எண்ணியவன் பின் அழும் மனைவியை சமாதனப் படுத்தினான்..

“ஸ்வேதா அழாதேடா.. அவ டென்சன்ல என்னமோ பேசிட்டா… உனக்கு அவளைப் பத்தி தெரியாதா?” தோளோடு அவளை அணைத்துக் கொண்டான்…

“ஷ்யாம்.. நான் அவங்களுக்கு இடையில போகணும்னு நினைச்சது இல்ல.. அஜய்கூட அவ சண்டை போடும் போது எல்லாம் சொல்லுற மாதிரி தான் இப்பவும் சொன்னேன்.. அவ என்னை புரிஞ்சுக்கலை… அனு நல்லா இருக்கணும்னு நான் நினைக்க மாட்டேனா? நான் அவளோட ப்ரெண்ட் தானே.” என்று தேம்பியவளை சமாதனப் படுத்தும் வழி தெரியாது இருந்தான் ஷ்யாம்…

உன் பார்வைகள் சொன்ன மொழிகளில்

என்னை நீயாகவே மாற்றிக் கொண்டேன்

இன்று உன் மௌனத்தின் மொழிகளை

அறிந்தவுடனே காதல் அகராதியை நானும்

தேடி அலைகிறேன்…

Advertisement