Advertisement

முன்பனியா!! முதல் மழையா!!

அத்தியாயம் 1

“அம்மா இந்த இடத்துல பின் குத்துங்க.” தனக்கு சேலைக் கட்டிக் கொண்டிருந்த அன்னையிடம் கூறினாள் அனுக்ரஹா…

“ம்”

“ஹான் இங்கேயும்.”

“…”

“அப்படியே இங்கேயும் குத்துங்க இடுப்பு தெரியுது… அம்மா உங்ககிட்ட தான் சொல்லுறேன்.. குத்துங்க.”

“அப்படியே கொமட்டுலயே குத்தப் போறேன் பார்… எத்தனை பின் குத்த சொல்லுவ?”

“கம்பர்டபுளா இருக்க வேண்டாமா? அதுக்கு தான்.”

“அப்போ நீயா புடவை கட்டிப் பழகனும்.. சும்மா என்னை வேலை செய்ய விடாம காலங்காத்தாலா அக்கப்போர் கூட்டீட்டு இருக்க.”

“ப்ச்.. நீங்க கட்டியே விட வேண்டாம்… போங்க.. நான் யூ டுயூப்ல பார்த்துக்குறேன்.”

“ஆமா எல்லாம் முடிஞ்சதும்… பேச்சைப் பார்… திரும்பு அங்க ஒரு பின் குத்திவிட்டுறேன். ஈவ்னிங் ஆபிஸ் முடிஞ்சு வந்ததும் பார்த்து கழட்டு புடவையை கிழிச்சுடாத.”

“சரிமா”

“இரு பூ எடுத்துட்டு வரேன்… தலைவாரி அதை வெச்சுக்கோ.”

“நோ ம்மா… புடவை கட்டுறதே கொடுமை.. இதுல பூ வேறையா? ஏதோ டிரெடிஷினல் ட்ரெஸ் பொங்கல் செலிபிரெஷன்னு போட்டு வர சொன்னாங்க…. பூ வெச்சுட்டு ஐ.டி கம்பெனிக்கு போனேன் என்னை பட்டிக்காடுன்னு நினைப்பாங்க.”

“புடவை கட்டி பூ வெச்சா தான் அனு அழகு.”

“அப்ப நீங்க வெச்சுக்கோங்க…” என்றவள் கண்ணாடி முன்னால் நின்று தனது ஒப்பனையை செய்தாள்…

“என்னமோ போ.. எங்க காலத்துல பூ வெச்சுக்க நாங்க அவ்வளவு ஆசைப்படுவோம்.. உங்களுக்கு எல்லாம் அது பட்டிக்காடு மாதிரி இருக்கு.. கொடுமை…” என்று புலம்பிக் கொண்டே சமையல் அறைக்கு சென்றார் அனுக்ரஹாவின் அன்னை ஜானகி…

“அம்மா எவ்வளவு நேரம்.. நான் வேலைக்கு போக வேண்டாமா? உங்க பொண்ணுக்கு மேக் அப் செஞ்சு விட்டுட்டு வரீங்க… அவளை என்ன பொண்ணா பார்க்கவா வராங்க…லேட் ஆகிடுச்சு.” டைனிங் டேபிளில் சாப்பாட்டிற்காக காத்துக் கொண்டிருந்த அனுவின் அண்ணன் ஷ்யாம் கத்த

“இருடா அஞ்சு நிமிஷம்… தோசை ஊத்துறேன்.” மகனிற்க்கு பதில் கூறிக் கொண்டே தோசை கல்லை அடுப்பில் வைத்தார் ஜானகி…

“அதை உங்க மகள் தலையில ஊத்துங்க… லஞ்ச் பாக்ஸ கொடுங்க நான் கிளம்புறேன்.”

“இரேன்டா.. எனக்கு என்ன பத்து கையா இருக்கு.. அண்ணனும் தங்கச்சியும் படுத்தி எடுக்குறீங்க.”

“நான் என்ன செஞ்சேன்? உங்க சாப்பாடே வேண்டாம்.. போங்க..” என்று எழ போனவனை தோளை பிடித்து அமரவைத்தாள் அனு.

“அதான் அம்மா சொல்லுறாங்கல்ல அஞ்சு நிமிஷத்துல கொண்டு வரேன்னு.. இந்த அஞ்சு நிமிஷ கேப்ல நீ ஆபிஸ்ல ஒன்னும் கிழிக்க மாட்ட… உன் ஆளை  வெயிட் பண்ண சொல்றேன்.. மூடிட்டு உட்கார்…” என்ற தங்கையின் தலையில் கொட்டியவன்

“வாய மூடவே மாட்டியா? மகாராணிக்கு புடவை கட்டிவிட ஒரு ஆள் வரணுமோ.. நீயே கட்டிக்க வேண்டியது தானேடி… உன்னால தான் எனக்கு லேட்.”

“அப்பா இவன் என் தலையில கொட்டுறான்…” என்று கத்த

“ஷ்யாம் சும்மா இரு.” என்று ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த ராமமூர்த்தி கூற

“இங்க என்ன நடக்குதுனே தெரியாம சும்மா இருன்னு சொல்லுறார்..”

“அப்பா உங்களையே இவன் திட்டுறான்…”

“ஐயோ.. வாயை மூடுங்க ரெண்டு பேரும்.. இந்த சீக்கிரம் சாப்டுட்டு கிளம்பு.” ஜானகி மகனிற்கு தோசையை கொடுக்க

“அப்போ எனக்கு.. எனக்கும் தான் ஆபிஸ்க்கு லேட் ஆகுது.”

“இரு ஊத்துறேன்.”

“உங்க பையனுக்கு மட்டும் வேகமா செஞ்சு கொடுங்க.. எனக்கு மட்டும் லேட்.. போங்க ஐ ஹேட் யூ.”

“ரொம்ப சந்தோஷம்…” என்ற ஜானகி சமையல் அறைக்கு சென்று மகளிற்கு ஊற்றிக் கொடுத்தார்..

ஜானகி ராமமூர்த்தி தம்பதியினரின் மூத்த புதல்வன் தான் ஷ்யாம்.. பி.ஈ முடித்துவிட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றில் டீம் லீடாக இருக்கிறான்.. இளையவள் அனுக்ரஹா அவளும் இன்ஜினியரிங் முடித்துவிட்டு அண்ணன் பணிபுரியும்  அலுவலகத்திலேயே ஒன்றரை வருடங்களாக வேலை செய்து கொண்டிருக்கிறாள்…

அலுவலத்திற்கு வந்து தனது இருக்கைக்கு சென்றவள் தோழியும் மாமன் மகளுமாகிய ஸ்வேதாவிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள்..

“ஹே ஸ்வே டார்லிங் இந்த புடவைல செமையா இருக்க…. உன் ஆள் பார்த்தான் அவ்வளவு தான்..”

“அடி வாங்க போற அனு.” என்று அவள் வெட்கப்பட்டாள்

“அஜய் போன் பண்ணாரா? நேத்து நான் ட்ரை பண்ணேன்.. லைன் கிடைக்கல.. ஆன்லைனும் வரல.”

“இல்ல அனு.. என்கிட்டயும் பேசல.. இன்னும் ரெண்டு நாள்ல இங்க வந்துடுவான்ல.. சோ பீல் பண்ணாதே.”

“அப்போ ரெண்டு பேரும் பொங்கல்க்கு நம்ம வீட்டுக்கு வந்துருங்க.”

“அண்ணா என்ன சொல்லுறான்னு தெரியல… வந்ததும் கேட்குறேன்.. எப்படியும் முடியாதுன்னு தான் சொல்லுவான்… பொங்கல் வெச்சுட்டு நாங்க அங்க வர்றோம்.”

“உன் அண்ணன் ரொம்ப தான் பண்ணுறான்.. அத்தை வீட்டுக்கு கூட வர முடியாதோ.” என்று அனு கோபிக்க

“அவன் சில விஷயத்துல ரொம்ப  கௌரவம் பார்ப்பான்..”

“வீட்டுக்கு வரதுல என்ன  கௌரவம்.. எங்க பாட்டி ஏதோ சொன்னாங்கன்னு எங்க வீட்டுக்கே வர மாட்டேன்கிறான்.”

“நீ தானே அனு அவனை புரிஞ்சுக்கணும்.”

“சரி அப்போ… நாளைக்கு எங்களுக்கு கல்யாணம் ஆனாலும் இப்படி தான் செய்வானா?”

“அடடா… அது நடக்கும் போது பார்த்துக்கலாம்.. விடு.”

“அப்போ எங்க கல்யாணம் நடக்காதுன்னு சொல்ல வரியா?” அனு எகிற

“அனு.. நீ இருக்கியே…”

“ஆமா இருக்கேன்… அதுகென்ன?” என்றாள் விடாமல்

“போடி.. வேலைய பாரு… அப்பறம் உங்க அண்ணா வந்து திட்ட போறார்.”

“நம்ம ரெண்டு பேரையும் அவன் டீம்ல வேணும்னே போட்டுருக்கான்… உன்னை சைட் அடிக்கனும்னா உன்னை மட்டும் அவன் டீம்ல போட்ருக்கலாம்ல.. என்னையும் வேற போட்டு சாவடிக்கிறான்.” என்று அனு கூறியதற்கு ஸ்வேதாவிடம் இருந்து சிரிப்பு மட்டுமே வந்தது…

“அதானே அவனை ஏதாவது சொன்னா நீ பதிலே பேசமாட்டியே சிரிச்சே மழுப்பு.. இந்த சிரிப்புல தான் அந்த லூசு மயங்கீடுச்சு போல.”

“நீ என் அண்ணாகிட்ட எதை பார்த்து மயங்குன அனு.” என்று ஸ்வேதா கேலியாக கேட்க

“அவன்கிட்ட என்னடி இல்ல.. என் ஆள் சூப்பர் ஸ்மார்ட்… ஐ.டி ல வேலை பார்க்குறதுனா சும்மாவா…. எத்தனை பேர் கண்ணுல விரலை விட்டு ஆட்டிருப்பார்.” அவளின் நாயகனின் நினைவில் அவள் சுகமாக நனைய

“ரொம்ப வழியுது.. தொடச்சுக்க.” என்று கூறியவளை முறைத்தவள் பின் தனது  வேலையை செய்து கொண்டிருந்தாள்.

பொங்கல் செலிபிரேஷன் முடிந்து மதிய உணவு உண்டு கொண்டிருந்தனர் ஸ்வேதா அனு இருவரும்…

“அனு எங்கடி உங்க அண்ணா? இன்னும் சாப்பிட வரலை…” சுற்றி ஷ்யாம் வருகிறானா என்று பார்த்துக் கொண்டே கேட்டாள் ஸ்வேதா…

“நானும் உன்னோட தானே இருக்கேன்.. எனக்கு எப்படி தெரியும்?”

“போன் போட்டு கேளேன்…”

“உங்க போதைக்கு நான் ஊறுகாயா? வேணும்னா நீயே கேட்டுக்கோ…”

“இதுக்கு எல்லாம் சேர்த்து நீ அனுபவிப்படி” என்று ஸ்வேதா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஸ்வேதாவின் போன் அடித்தது..

“அனு உனக்கு ரொம்ப நல்ல நேரம்டி.. உன் ஆள் தான் கூப்பிடுறான்…” என்று சொல்லிக் கொண்டே போனை ஆன் செய்து பேசினாள்

“சொல்லு அஜய்… என்ன இந்த நேரத்துல கூப்பிட்டிருக்க?”

“இன்னைக்கு நைட் டிரைன்ல நான் வரேன் ஸ்வேதா.. திடீர்னு முடிவு பண்ணேன்.”

“அப்போ நாளைக்கு வந்துடுவியா?  வீட்டை கிளீன் பண்ணவே இல்லையே… நீ பொங்கல்க்கு முதல் நாள் தான் வருவேன்னு நினைச்சு நாளைக்கு வந்து கிளீன் பண்ணலாம்ன்னு இருந்தேன்.”

“அதுனால என்ன ஸ்வேதா.. நான் பார்த்துக்குறேன்.”

“இல்லை.. நான் இன்னைக்கு போய் கிளீன் பண்ணிடுறேன்.”

“நாளைக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்சுக்கலாம்.. நீ தனியா செய்ய வேண்டாம்.”

“இல்லடா.. அனு இருக்கா… அவ ஹெல்ப் பண்ணுவா… நாங்க பார்த்துக்குறோம்.. நீ ஜாக்கிரதையா வா.”

“சரி ஸ்வேதா.. பாய்… நாளைக்கு ஹாஸ்டல்ல இருந்து நம்ம வீட்டுக்கு வந்துடு.”

“ம் சரி அஜய்.. பாய்.” என்று அழைப்பை துண்டித்தவளை முறைத்துக் கொண்டிருந்தாள் அனு

“எதுக்குடி முறைக்குற?”

“உங்கவீட்டுக்கு வேலைக்காரி வேலை பார்க்க மட்டும் என்னை இழுத்துட்டு போ.”

“ஹாஹா கூடிய சீக்கிரம் வீட்டுக்காரி ஆகிடுவடி அண்ணி.”

மாலை வேலையை முடித்துக் கொண்டு ஸ்வேதாவின் வீட்டிற்கு இருவரும் சென்று வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர்…

“புடவையை வேற கட்டிக்கிட்டு என்னால வீட்டை சுத்தம் செய்யவே முடியலடி ஸ்வேதா.”

“என் சுடி உள்ள இருக்கு.. போய் மாத்திக்கோ..”

“வேண்டாம்… இருக்கட்டும்.” என்று ஒவ்வொரு இடமாக சுத்தப் படுத்திக் கொண்டே அஜயின் அறைக்கு சென்றவள் அங்கே டேபிளில் இருந்த அவனின் புகைப்படத்தை கையில் எடுத்து அதைப்  பார்த்துக் கொண்டிருந்தாள்…

சிறுவயதிலே தாய் தந்தையை இழந்த அஜய் ஸ்வேதாவை அவர்களின் தந்தைவழி பாட்டி தான் வளர்த்து வந்தார்… அஜய் ஷ்யாம் இருவரும் நண்பர்கள்… அதே போல் அவர்களின் சகோதரிகளும் சிறு வயது முதலே தோழிகள்…அஜய் படிப்பை முடித்து வருமான வரித்துறையில்    வேலைக்குச் சேர்ந்த புதிதில் அவனின் பாட்டி இறந்து விட்டார்.. அவன் மும்பையில் வேலை செய்து கொண்டிருக்க ஸ்வேதாவை தனியாக அந்த வீட்டில் இருக்க வேண்டாம் என்று ஹாஸ்டலில் இருக்க சொன்னான்…

அவன் ஊரிற்கு வரும் போது மட்டும் ஸ்வேதா ஹாஸ்டலில் இருந்து வீட்டிற்கு வந்துவிடுவாள்.. அவ்வபோது அனுவின் வீட்டிற்கு விடுமுறைக்கு செல்வாள்… தங்கையின் மேல் அஜய் காட்டும் அக்கறையில் அனுவிற்கு அவன் மேல் ஈர்ப்பு இருந்தது… காலப்போக்கில் அந்த ஈர்ப்பு காதலாக மாறியது… அஜய்க்கும் சிறுவயது முதலே அனுவை பிடிக்கும்.. ஜானகிக்கும் தனது அண்ணன் மகன் மகளை தனது மருமகன் மருமகள் ஆக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கவே அவர்களின் காதல் நல்லபடியாக எந்த தடையும் இன்றி வளர்ந்தது…

“என்னடி அனு போட்டோலேயே குடும்பம் நடத்துற போல…” என்ற ஸ்வேதாவின் கேலியில் புகைப்படத்தை ஸ்டாண்டில் வைத்தவள் அவளை திரும்பி முறைத்து விட்டு விட்ட வேலையை தொடர்ந்தாள்..

அஜய் மும்பையில் இருந்து வந்ததும் ஸ்வேதா அண்ணனுடன் சந்தோசமாக பொழுதை களித்தாள்… இரவு உணவை உண்டுக் கொண்டிருக்கும் போது ஸ்வேதா அஜயிடம்

“அனு பொங்கல்க்கு அங்க வர சொன்னா… அத்தையும் கூப்பிட்டாங்க…”

“ம்.. நேத்து அத்தை பேசுனாங்க.. வீட்டுக்கு வான்னு கூப்பிட்டாங்க…”

“போகலாமா?” என்றாள் தயக்கமாக

“இல்ல ஸ்வேதா.. நம்ம வீட்ல பொங்கல் வெச்சுட்டு அத்தை மாமா கிட்ட ஆசீர்வாதம் வாங்க போகலாம்…”

“அனு ரொம்ப வருத்தப்பட்டா..”

“எனக்கும் அவளுக்கும் இதைவெச்சு நிறைய சண்டையே வந்துருக்கு…”

“அப்பறம் ஏன்? அவளுக்காக அங்க போகலாம்ல.”

“இந்த ஒரு வருஷம் தானேடா ஸ்வேதா நீ நம்ப வீட்ல இருப்ப… மாமா இந்த வருஷமே உங்க கல்யாணத்தை முடிக்கணும்ன்னு சொன்னார்…”

“என்ன எங்க கல்யாணமா! அப்போ உனக்கும் அனுக்கும்?”

“உனக்கு முடிஞ்சதும்…”

“அஜய்.. ரெண்டு பேருக்கும் ஒரே மேடைல கல்யாணம் செய்யனும்ன்னு அத்தை மாமா நினைக்குறாங்க.”

“அது சரிப்பட்டு வராது ஸ்வேதா…” என்றவனை புரியாமல் பார்த்தாள் ஸ்வேதா

“எனக்குனு இருக்க ஒரே சொந்தம் நீ தான்.. உன்னோட கல்யாணத்துல நான் எல்லா வேலையும் செய்ய வேண்டாமா? அப்பா ஸ்தானத்துல இருந்து நான் தானே எல்லாம் செய்யணும்…” என்று அஜய் கூறவும் அண்ணனை அணைத்துக் கொண்ட ஸ்வேதாவின் கண்களில் நீர் வழிந்தது… அஜயும் தங்கையை பாசமாக அணைத்துக் கொண்டான்…

பொங்கல் அன்று வீட்டில் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்துவிட்டு காலை உணவை முடித்துக் கொண்டு அண்ணன் தங்கை இருவரும் அத்தையின் வீட்டிற்கு சென்றனர்.. ஜானகி இருவரையும் சந்தோசத்துடன் வரவேற்று குடிக்க கொடுத்தார்… அனைவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க ஜானகி மருமகனிடம்

“ஏன்டா அஜய் நல்ல நாள் அதுவுமா ரெண்டு பெரும் தனியா பண்டிகையை கொண்டாடுறீங்க.. இங்க வாங்கனு சொன்னாலும் கேட்கவே மாட்டேங்கிறீங்க?”

“இல்ல அத்த.. இந்த ஒரு வருஷம் தானே ஸ்வேதா என்னோட இருப்பா.. அடுத்த வருஷம் உங்களோட தானே எல்லா பண்டிகையும் கொண்டாடப் போறா.. அதான் அங்க நம்ம வீட்லயே இருந்துட்டோம்…”

“சும்மா பொய் சொல்லாதேடா.. என் மாமியார் சொன்னதை நீ இன்னும் மறக்கலையா? அவங்களே போயிட்டாங்க நீ அதையே நினைச்சுகிட்டு வீட்டுக்கு வராம இருக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…” என்றவரின் கண்களில் லேசாக கண்ணீர் எட்டிப் பார்த்தது…

“ப்ச் அத்த.. அப்படி எல்லாம் எதுவும் இல்லை… நீங்க பீல் பண்ணாதிங்க” என்றவன் மாமாவின் புறம் திரும்பி

“ஷ்யாம் ஸ்வேதா கல்யாணத்தை பத்தி உங்களோட பேசணும் மாமா..” என்றான்

“அதுக்கு என்ன அஜய்… உங்க நாலு பேருக்கும் ஒரே மேடைல கல்யாணம் பண்ணனும்னு முன்னாடியே முடிவு பண்ணது தானே.. நல்ல நாள் பார்த்து கல்யாணத்தை வெச்சுக்கலாம்…” என்று கூற

“இல்ல மாமா…” என்றவன் தங்கையிடம் கூறிய காரணத்தை கூறினான்.. அதை கேட்ட அனுவிற்கு கஷ்டமாக இருந்தது… அவன் அவளை திரும்பி பார்க்க அவள் கண்கள் கலங்குவது தெரிந்தது.. இருந்து எதுவும் கூறாமல் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான்…

“ஏன்டா நாங்க எல்லாம் ஸ்வேதாக்கு சொந்தம் இல்லையா? நீ மட்டும் தான் சொந்தம்னு சொல்லுற.. அத்த அத்தனு வாய் வார்த்தைக்கு தான் கூப்பிடுறியா?” ஜானகி மருமகனிடம் மீண்டும் வருத்தத்துடன் பேச

“நான் உங்களை எப்பவும் என் அப்பாவோட தங்கையா தான் நினைக்கிறேன்.. இருந்தாலும் நீங்க அந்த சமயம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களா இருப்பீங்க.. என் தங்கச்சிக்கு அந்த நிமிஷம் யாரும் இல்லைங்கிற பீல் வரக் கூடாது.. அதுனால தான் இப்படி முடிவெடுத்தேன்.”

முடிவெடுத்துவிட்டான் இனி என்ன சொன்னாலும் கேட்க மாட்டான் என்பதை அறிந்தவர்கள் எதுவும் கூறாமல் இருந்தனர்…

“இன்னும் மூணு மாசத்துல எனக்கு டிரான்ஸ்பர் கிடைச்சுடும்.. அதுக்குள்ள இவங்களுக்கு மேரேஜ் முடிச்சுட்டு அப்பறம் எங்க கல்யாணத்த நான் சென்னை வந்ததும் நடத்துங்க…”

பெரியவர்களும் சரி என் கூறிவிட்டு அன்று மாலையே ஜோசியரிடம் இது பற்றி கேட்க இரண்டு மாதத்திற்கு பிறகு வரும் முஹுர்த்தத்தில் ஸ்வேதா ஷ்யாம் திருமணம் என்றும் அடுத்த ஒன்றரை மாதத்தில் அனு அஜயின் திருமணம் என்றும் முடிவு செய்தனர்….

                                   **************

கடற்கரையையே வெறித்துக் கொண்டிருந்த அனுவை பார்த்த அஜய்க்கு கஷ்டமாக இருந்தது… அவள் கையை பற்றியவனை திரும்பியும் பார்க்காது இருக்கவும் அவள் தோள்களை தொட்டு திருப்பினான்..

“கோபமா இருக்கியா அனு?” என்று கேட்க அவள் “இல்லை” என்னும் விதமாக தலையை ஆட்டிவிட்டு மீண்டும் கடலை பார்க்க ஆரம்பித்தாள்..

“சாரிடா.. என் நிலைமை அப்படி..” என்று அவன் கூற

“எனக்கு கோபம் இல்லை அஜய்.. வருத்தம் தான்.. நீங்க எங்களை எப்போதுமே உங்க சொந்தமா பார்க்க மாட்டேங்குறீங்க.” என்றவளின் குரலில் வருத்தம் அப்பட்டமாக தெரிய

“அனு… நீயும் இப்படி பேசுனா எப்படி? எல்லாம் உனக்கு தெரியும் தானே.”

“பாட்டி சொன்னாங்க தாத்தா சொன்னாங்கனு வீட்டுக்கு நீங்க வராம இருக்கீங்க.. அதுனால அம்மா எவ்வளவு வருத்தப்படுறாங்கனு தெரியுமா? ஒரு வேலை உங்க சொந்த அத்தையா இருந்திருந்தா இப்படி அவங்க வருத்தப்படட்டும்னு விட்டுடுவீங்களா அஜய்?” என்று கோபமாகக் கேட்க

“என்ன பேசுற? சொந்த அத்தை அது இதுனு.. எனக்கு அத்தைனா அது ஜானு அத்தை மட்டும் தான்.. என் அப்பாவோட கூட பிறக்கலைனாலும் ரெண்டு பேரும் அண்ணன் தங்கையா தான் இருந்தாங்க…” அவனும் கோபமாகக் கூற  

“தன்னோட அண்ணன் பசங்க இப்படி தனியா நான் இருந்தும் அனாதை மாதிரி இருக்காங்களே அதுக்கு நானே காரணம் ஆகிட்டேன்னு எத்தனை நாள் அழுதுருப்பாங்க தெரியுமா? அதை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க…”

“இன்னும் கொஞ்சம் நாள் அதுக்கப்புறம் எல்லா பண்டிகையும் அங்க தானே கொண்டாட போறோம்.. இந்த ஒரு தடவை விட்டுட்டு அனு ப்ளீஸ்..”

“…”

“அனு… இன்னும்ரெண்டு நாள்ல நான் கிளம்பிடுவேன்.. அப்பறம் ரெண்டு மாசம் ஆகும் பார்க்க.. இப்படி முகத்தை தூக்கி வெச்சுகிட்டு இருந்தா என்ன அர்த்தம்?”

“…”

அவள் அமைதியாக இருக்க அவனிற்கு கோபம் வந்தது..

“உங்க பாட்டி பேசுன பேச்சுக்கு நானும் என் தங்கச்சியும் உங்க குடும்பத்துல சம்மந்தம் வெச்சுக்கக் கூடாது… அத்தை மேல இருக்க பாசத்துல எல்லாத்தையும் மறந்துட்டு இருக்கோம்…”

“ஓ… அவ்வளவு கஷ்டப்பட்டு நீங்க என்னை கல்யாணம் செஞ்சுக்க வேண்டாம்..” என்றவள் அங்கிருந்து எழ அவளின் கைப் பிடித்து உட்கார வைத்தான்..

“விடுங்க ….” தனது கையை அவனிடம் இருந்து அவள் உருவ முயல அவன் அதை விடாமல்

“இப்ப எதுக்கு நீ இப்படி பண்ற?”

“நான் என்ன பண்ணேன்..  பேசுனது நீங்க…”

“ப்ச் அனு என்னை கோபப்படுத்தாத… சொல்லுறதை புரிஞ்சுக்க மாட்டியா?”

“எல்லாம் நான் தான் புரிஞ்சுக்கணும்… நீங்க புரிஞ்சுக்க மாட்டீங்க?” என்றாள் கோபமாக.

“என் நிலைமையில நீ இருந்திருந்தா என்ன செய்வ.. உங்க பாட்டி சொன்ன வார்த்தையை எங்க வீட்ல யாரது சொல்லிருந்தா  இப்படி தான் நீ ரியாக்ட் செஞ்சுருப்ப.”

“அந்த கோபத்தைக் கண்டிப்பா உங்க மேல நான் காட்டிருக்க மாட்டேன்.”

“நானும் உன் மேல கோபத்தை காமிக்கல… நீ பேசுறது தான் எனக்கு கோபத்த தூண்டுது.”

“ஆமா நான் பேசுனா கோபம் வரும்.. இனி என்னோட பேசாதீங்க.”

“அனு… இந்த பேச்சை விடு.. எனக்கு பிடிக்காட்டியும் உனக்காகதானே உங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லுறேன்.”

“கஷ்டப்பட்டு உங்களுக்கு பிடிக்காத என்னை கல்யாணம் பண்ணவும் வேண்டாம் எங்க வீட்டுக்கு வரவும் வேண்டாம்.”

“ஹே நான் என்ன சொல்லுறேன்… நீ என்ன பேசுற?”

“என் கையை விடுங்க.” என்று கையை உருவிக் கொண்டு எழுந்து நடந்தாள்…

“அனு… நில்லு..”

“..”

“சரிவா நான் ட்ரோப் பண்றேன். என்னோட வந்துட்டு தனியா போகாதே”

“தேவையில்லை. எனக்கு போக தெரியும்.” என்றவள் அங்கே வந்த ஆட்டோ ஒன்றில் ஏறி வீட்டிற்கு சென்றாள்…

செல்லும் அவளை சமாதனம் செய்யாமல் கோபத்தில் இருந்தான் அஜய்… எத்தனை முறை சொல்வது…. அவள் வீட்டிற்கு நான் என்ன செல்லாமலா இருக்கிறேன்… ஏன் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறாள்… என்னுடைய கௌரவம் அவளிற்கு முக்கியம் இல்லையா?  போனால் போகட்டும் என்று எண்ணிக் கொண்டு சிறிது நேரம் கடலை வெறித்துக் கொண்டிருந்துவிட்டு அவனும் வீட்டிற்கு புறப்பட்டான்…

இரவு உணவை உண்ணும் நேரம் மூர்த்தி மனைவியிடம் மகள் எங்கே என்று கேட்க

“அஜய பார்க்க போனா.. ரெண்டு பேருக்கும் ஏதோ சண்டை போல… வரும் போது அவ முகமே சரியில்லை.. வந்ததும் ரூம்க்கு போனவ தான் இன்னும் வரல.”

“வரலைனா போய் கூப்பிடணும்.. அதை விட்டுட்டு வரல வரலனு புலம்புனா சரி ஆகிடுமா?” என்று மனைவியை திட்டிய மூர்த்தி மகளின் அறைக்கு சென்றார்.. அங்கே கட்டிலில் படுத்திருந்த மகளின் தலையை அவர் தொடவும் கண் திறந்த அனு தந்தையை பார்த்ததும் கண்ணீரை மறைத்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்…

“சாப்பிட வாடா அனு.”

“இல்லப்பா சாப்பிட்டு தான் வந்தேன்.”

“சரி அப்பாக்காக கொஞ்சம் சாப்பிடு வா.” என்று மகளை அழைத்து இரவு உணவை உண்ண வைத்தே அனுப்பினார்…

தங்கள் அறைக்கு வந்த ஜானகி கணவனை முறைத்துக் கொண்டே கட்டிலில் அமர

“இப்போ எதுக்கு முறைக்குற?”

“உங்க பொண்ணு கோபமா இருந்தா என்கிட்ட எதுக்கு கத்துறீங்க? எல்லாருக்கும் என்னை பார்த்த மட்டும் இளக்காரமா தெரியுதா?”

“யாருக்கும் அப்படி தெரியல… அனு ஒரு மாதிரி இருக்கானு தெரிஞ்சும் நீ போய் அவளை சமாதனம் படுத்தலையேனு கோபத்துல திட்டிடேன்…சாரி.”

“அஜய் அனுக்கு பிரச்சனை வரது புதுசா?  உங்க அம்மா எப்போ அஜயை இந்த வீட்டுக்கு வர உனக்கு என்ன உரிமை இருக்குனு சொன்னாங்களோ அப்ப ஆரம்பிச்சது இந்த பிரச்சனை.. எல்லாத்தையும் ஆரம்பிச்சுட்டு நிம்மதியா போய் சேர்ந்துட்டாங்க… இப்போ என் பொண்ணு தான் கஷ்டப்படுறா.”

“சரி சொல்லீட்டாங்க.. அது முடிஞ்சுடுச்சு.. அதுக்காக நாம எத்தனை தடவை மன்னிப்பு கேட்டுருப்போம்… இன்னும் அதையே நினைச்சுட்டு இருந்தா அவங்க வாழ்க்கை பாதிக்காதா? அதை ஏன் உன் அண்ணன் பையன் புரிஞ்சுக்க மாட்டுறான்.”

“உங்க அம்மாவ விட்டு கொடுத்துராதிங்க.” என்று கணவனை திட்டியவர் பின் “எல்லாம் கொஞ்ச நாள்ல சரி ஆகிடும்.” என்று தன்னை தானே தேற்றிக் கொண்டார்…

அடுத்த நாள் ஸ்வேதா அனுவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது

“அண்ணாக்கும் உனக்கும் சண்டையா?” என்று கேட்டாள்

“இல்ல.” அவள் மழுப்பினாள்

“பொய் சொல்லாத.  ஷ்யாம் சொன்னார்… அவனை பார்க்க போய்ட்டு வந்ததுல இருந்து நீ சரியில்லைனு… என்னாச்சு?”

“எப்பவும் போல தான்.”

“உங்க ரெண்டு பேரையும் வெச்சுட்டு என்ன தான் பண்றதோ?”

“அவரும் கொஞ்சம் எங்களை புரிஞ்சுக்கலாம்ல?”

“சும்மா இருந்தவனை கிளப்பி விட்டது உங்க பாட்டி.”

“ஐயோ நீயும் அதையே சொல்லாத. கடுப்பாகுது. பாட்டி……. அது மட்டும் இப்ப உயிரோட இருந்திருந்தா நானே கொன்னுருப்பேன்…”

“ஹாஹா விடுடி. எல்லாம் சரி ஆகிடும்.”

வீட்டிற்கு வந்த அஜய்க்கு மனதிற்கு கஷ்டமாக இருந்தது… அனுவின் மேல் கோபம் ஒரு புறம் இருந்தாலும் தான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது… அவளின் காதல் கொண்ட மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்று நினைத்தவன் அவளின் செல்லிற்கு அழைத்தாள்…

அவனின் அழைப்பை அவள் ஏற்கவில்லை.. அவன் இதை எதிர்பார்த்தான் தான்.. மேலும் இரண்டு முறை முயற்சிக்க அப்பொழுதும் அவள் எடுக்காமல் இருக்க “சாரிடா அனு” என்று மேசேஜ் அனுப்பி விட்டு படுக்கையில் படுத்தான்… அவனின் மெசேஜை பார்த்தவள்

“பேசுறது எல்லாம் பேசிட்டு இப்ப வந்து சாரி சொல்லுறதை பாரு.. அனு அவனோட பேசாதே..” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டாள்…

என்னில் வைக்கும் அன்பை மிஞ்ச

எவரும் இல்லை–உன்னைவிட…..

அதனாலேயே உன்னை கெஞ்சி நிற்கிறேன்!!!!!

 

Advertisement