Advertisement

மாற்றம் 5

TO BE IN YOUR CHILDREN’S MEMORIES TOMORROW, YOU HAVE TO BE IN THEIR LIVES TODAY

                          -UNKNOWN

“ரேணு எப்படி இருக்கா யாதவா? மாத்திரை போட்டாளா?” போனில் மகனிடம் மருமகளைப் பற்றி விசாரித்தார் சாரதா..

“இப்போ பரவாயில்லை ம்மா.. டெம்பரேசர் குறைஞ்சிருக்கு..”

“சாப்டாளா?”

“இட்லி கொடுத்தேன்மா.. ஒன்னு தான் சாப்பிட்டா.. மாத்திரை போட்டுட்டு தூங்குறாள்.. மதியத்துக்கு கஞ்சி வைக்கலாம்ன்னு இருக்கேன்.. அதை எப்படி பண்ணுறதுன்னு உங்ககிட்டக் கேட்க தான்மா கூப்பிட்டேன்..”

சாரதாஅதன் செய்முறையைச் சொல்ல, அவர் கூறிய பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டான்..

“இப்பன்னு பார்த்து நான் வேற ஊர்ல இல்லை..” சாரதா வருத்தப்பட

“நான் பாத்துக்குறேன்மா.. நீங்க உங்க வேலையை முடிச்சுட்டு வாங்க..” என்றவன் போனை வைத்தான்..

சாரதா கூறியது போல கஞ்சியும் துவையலையும் செய்தவன், ரேணுகாவை எழுப்பவதற்குள் முழி பிதுங்கி நின்றான்..

“ரேணு.. எழுந்திரி.. கஞ்சி குடிச்சுட்டு படு.. டேப்லெட் போடணும்ல..” என

அவள்“ம்..ம்” என்று சொன்னாளே ஒழிய எழுந்துக்கொள்ளவே இல்லை..

“ரேணு” என்று புலம்பிக் கொண்டே அவளை நிமிர்த்தி உட்கார வைத்தவன் அவள் கழுத்தில் கை வைத்துப் பார்க்க, சூடு குறைந்திருந்தது..

“சூடு நல்லாவே குறைஞ்சிருக்கு ரேணு..  இப்போ சாப்டுட்டு டேபெல்ட் போடு.. ஈவ்னிங் குள்ள சரி ஆகிடும்..” என்றதும், ரெஸ்ட்ரூமிற்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள் கஞ்சியை உண்டுவிட்டு, மாத்திரையும் போட்டுக் கொண்டாள்.. கட்டிலில் சாய்வாக அவள் அமர்ந்திருக்க, பாத்திரங்களை சமையல் அறையில் வைத்துவிட்டு வந்த யாதவன் அவள் அருகில் அமர்ந்துக் கொண்டு

“ரொம்ப கஷ்டம் உன்னோட.. நார்மலா மெட்சூடா நடந்துக்குற.. உடம்பு சரியில்லாத இந்த ரெண்டு நாள் உன்னை சாப்பிட வைக்கிறதுக்குள்ள.. எனக்கு பத்து பாட்டில் குளுக்கோஸ் ஏத்தனும் போல..” என்றான்.. அவனை செல்லமாக முறைத்துதவள் “நீங்க லஞ்ச் சாப்டீங்களா?” என்றாள்

“குக்கர்ல ஒரே சாதமா வெச்சுட்டேன்.. பிசிபேலாபாத்..” என்றதும்“உவாக்” என்று கூறிச்சிரித்தாள் ரேணுகா..

“அடிங்க.. உனக்கு அது பிடிக்காதுன்னு அம்மா செய்யவே மாட்டுறாங்க.. அதான் இன்னைக்கு நானே செஞ்சுகிட்டேன்..”

“சாப்பிடுங்க சாப்பிடுங்க..” என்றவள் கணவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.. மனம் எங்கெங்கோ அலைபாய, அவளையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது.. அதை உணர்ந்த யாதவன்.

“அதையே நினைக்காதேன்னு எத்தன டைம் சொல்லுறேன் ரேணு.. ரிலாக்ஸ் ஆகு.. எல்லாம் சரி ஆகும்..” என்றான்.

இருவரின் மனமும் பழைய நிகழ்வுக்குச் சென்றது.

திருமணம் முடிந்து இருவரும்சென்னை வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.. இருவரையும் சாரதா கோவிலுக்கு சென்றுவரச் சொன்னார்.. கோவிலுக்குச் சென்றுவிட்டு கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“நம்ம வீட்டுப் பக்கத்துல இருக்குற ஸ்கூல்ல சைக்காடிஸ்ட் டீச்சர்ஸ் போஸ்ட் எதுவும் இல்லை.. டவுனுக்குள்ளஇருக்குற ஸ்கூல்ஸ்ல தான் பார்க்கணும்.. நம்ம வீட்டுல இருந்து கொஞ்ச தூரம் போகணும்.. நெட்ல பார்ப்போம்.. எந்த எந்த ஸ்கூல்ஸ்ல வேகென்சி இருக்குன்னு” யாதவன் மனைவியிடம் கூற,

“இப்போ வேண்டாம்ங்க.. கொஞ்ச நாள் ஆகட்டும்..”

“ஏன் ரேணு?”

“எனக்கு இப்போதைக்கு வேலைக்குப் போக இன்டிரெஸ்ட் இல்ல..”

“திடீர்னு என்னாச்சு? அத்தை உன்னை இந்த வேலைக்குப் போகாதேன்னு சொன்னப்ப சண்டைப் போட்டு, எனக்குப்பிடிச்சிருக்குப் போவேன்னு சொன்னியாம்.. தருண் சொன்னான்.. இப்போ மட்டும் ஏன் வேண்டாம்ன்னு சொல்லுற?”

“வீட்டுலயே இருந்தா அம்மா, எதிர்த்த வீட்டுப் பொண்ணு, பக்கத்து வீட்டுப் பையனும் எல்லார்கூடவும் கம்பேர் செஞ்சு சண்டைப் போட்டுகிட்டே இருந்தாங்க.. அதுனால போனேன்..”

“அப்போ எங்க அம்மாவையும் உன்னோட சண்டைப் போட வைக்கவா?” சிரித்துக்கொண்டே அவன் கேட்க, கணவனை முறைத்தவள்

“முடிஞ்சா பண்ணுங்க.. என் மாமியார் ரொம்ப நல்லவங்க..” என்றாள்

“அப்போ என் மாமியார் கெட்டவங்களா?”

“ப்ச்.. நான் எப்போ அப்படி சொன்னேன்.. விட்டா நீங்களே என் அம்மாட்ட இதைச் சொல்லி என்னை திட்டுவாங்க விடுவீங்க போல..”

“உண்மையான ரீசன் சொல்லு ஏன் வேலைக்குப் போகலைன்னு சொல்லுற?” என்றதும் அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

“என்ன ரேணு சொல்லு..”

“என்னமோ போகணும்னு தோணலை.. ஆட்டிசம் ஸ்டுடென்ட்சுக்குகிளாஸ் எடுக்கணும்னு தான் என்னோட ஆசை.. எங்க ஊர்ல ஸ்பெஷல் ஸ்கூல்ஸ் எதுவும் இல்லை.. மதுரைக்குள்ள போனா தான் இருக்கு.. அம்மாக்குஎன்னை அனுப்ப விருப்பமில்ல.. ஸ்பெஷல் சில்டிரண்ட்சுக்கு கைட் பண்ணுறது சேவை மாதிரி.. சேலரி எதுவும் இருக்காதுன்னு அம்மா போக கூடாதுன்னு சொல்லிட்டாங்க..”

“ஹேசூப்பர் ரேணு.. இங்க சென்னைல நிறையா ஸ்பெஷல் ஸ்கூல்ஸ் இருக்கு.. என் ப்ரெண்டுக்கு தெரிஞ்ச ஸ்கூல் இருக்கு.. அங்க ஜாயின் செஞ்சுக்கலாம்..”

“யாதவ்.. கொஞ்சநாள் போகட்டும்.. இப்போ தான் நம்ம மேரேஜ் முடிஞ்சுருக்கு.. சிக்ஸ் மந்த்ஸ் ஆகட்டும்..”

“அதுக்குள்ள நீ ஆறுமாசம் ஆகிடுவ செல்லம்..” என்றான் கண் அடித்து.. அவனை முறைத்தவள் “நினைப்பு தான்..”என்றாள்

“செயல்படுத்திடலாம்..”

“யாதவ்.. சும்மா இருங்க..” என்றவளின் குரலில் வெட்கம் அப்பட்டமாக தெரிந்தது..

“வெட்கம் எல்லாம் நம்ம ரூம்ல இருக்கும் போது படு.. இப்படி பப்ளிக் பிளேஸ் என்னை டெம்ப்ட் பண்றியே..”

“நீங்க இப்படியே பேசிக்கிட்டு இருங்க.. நான் போறேன்..” என்றவள் எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.. இரண்டே எட்டில் அவளை நெருங்கியவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்..

“என்னங்க.. கையை விடுங்க..” என்றாள் மெதுவாக..

“அதெல்லாம் முடியாது.. தாலி கட்டும்போது சத்தியம் பண்ணிருக்கேன்.. இன்னைக்குப் பிடிச்சக் கையை எப்பவும் விட மாட்டேன்னு..”

“ப்பா.. மொக்கை..”

“அடிப்பாவி.. நான் எவ்வளவு ரொமாண்டிக்கா பேசிக்கிட்டு இருக்கேன்.. இதைப் போய் மொக்கைன்னு சொல்லுறே..”

“அடராமா.. வாங்க பேசாம..”

வீட்டிற்குவந்து இரவு உணவை முடித்துக் கொண்டு சிறிது நேரம் சாரதாவுடன்பேசிவிட்டு தங்கள் அறைக்குச் சென்றனர்..

இரவின் தனிமையில் தன் கைவலைவில் இருந்தவளின் முகத்தினை நிமிர்த்தி

“நீ எதையோ நினைச்சுட்டு இருக்கன்னு நினைக்கிறேன்.. என்னன்னு சொல்ல மாட்டிற.. இட்ஸ் ஓகே.. உனக்கு எப்போ சொல்ல தோணுதோ சொல்லு..” என்றான்.

“அதெல்லாம் எதுவும் இல்லை யது..”

“சரி”

“என்ன சரி..” என்றவள் கணவனை நிமிர்ந்துப் பார்த்து முறைத்தாள்.

“நீ சொன்னதுக்கு சரின்னு சொன்னேன்..” என்றவனின் முகத்தைத் தன் அருகே இழுத்து

“யது.. பிளீஸ் இப்படி பண்ணாதிங்க.. இட்ஸ்ஹர்டிங்” என்றாள் தாழ்ந்த குரலில்.

“ஹே லூசு.. இப்ப ஏன் உன் வாய்ஸ் இப்படி போகுது.. நான் சும்மா தான் சீன் போட்டேன்..”

“ஓகே..”

“என்ன உன் டர்னா?”

“அதெல்லாம் இல்ல..” என்றவள் கணவனிடம் மேலும் ஒண்டினாள்.

“உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்..”

“கேளுங்க..”

“உன் அப்பா மாதிரி மாப்பிள்ளை வரக் கூடாதுன்னு ஏன் நினைச்ச?”

“உங்களுக்கு யார் சொன்னா? தருணா?” என்றாள் கேள்வியாக

“ம்.. நீ என்கிட்டப்பேசிட்டு தான் முடிவெடுக்கனும்னு சொன்னல. அப்போசொன்னான்.. மாமா மாதிரி நீ இருந்துடுவியோன்னு அவளுக்கு பயம்டான்னு.. அவன்கிட்ட கேட்க ஒரு மாதிரி இருந்தது.. உன்கிட்ட கேட்கனும்னு நினைச்சுட்டே இருந்தேன்.. இன்னைக்குத் தான் நியாபகம் வந்தது.. மாமா உங்களை அவ்வளவு கொடுமை படுத்தினாரா என்ன?”

“ப்ச்.. அதெல்லாம் இல்ல..” என்றவள்சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

“அப்பா கொஞ்சம் மேள் டாமினன்ட்.. அவர் முடிவை நாங்க ஏத்துக்கனும்னு நினைப்பார்.. அம்மாவோட வீட்டுல தாத்தாவும் கிட்டத்தட்ட அப்பா மாதிரியே தான்.. அம்மாவுக்கு, ஆம்பளைங்க தான் சரியான முடிவெடுப்பாங்க.. பொண்ணுங்க அப்படி இல்லைன்னு நினைப்பு.. அதுனாலையே அப்பா என்ன சொன்னாலும் ஆமா சாமி போடுவாங்க..

ஈவன் நானும் தம்பியும் ஒரு தப்பு பண்ணா.. அவன் பையன் என்னமோ பண்ணுறான்.. நீ ஏன் இப்படி பண்ணன்னு கேட்டு தான் சின்ன வயசுல இருந்து திட்டுவாங்க, அடிப்பாங்க.. எனக்கு இதெல்லாம் பிடிக்கலை.. மேள் டாமினன்டாதெரிஞ்சது.. அதான்அப்பா மாதிரி ஹஸ்பெண்ட், அம்மா மாதிரி மாமியார் வரக் கூடாதுன்னு சொன்னேன்..”

“பீல் பண்ணாதே.. சில பேரண்ட்ஸ் இப்படி இருக்காங்க..”

“பீல் எல்லாம் பண்ணலை. ஆயிரம் இருந்தாலும் அவங்களுக்கு என் மேல பாசம் இருக்குன்னு எனக்கு தெரியும். சில விஷயம் எனக்கு அவங்ககிட்டப் பிடிக்காது. என் பொண்ணுகிட்ட இப்படியெல்லாம் நடந்துக்கக்கூடாதுன்னு நினைப்பேன்..”

“ரொம்ப ஆர்வமா இருக்கப் போல..” என்றவன்அவளின் உதட்டை நெருங்க.. அவனைத் தள்ளிவிட்டவள்

“உதைவாங்குவீங்க..”

“நான் ஒரே பையன் அதுனால எனக்கு நாலஞ்சு பொண்ணுங்க வேணும்..”

“ஒரு வேளை உங்களுக்கு அக்காவோ தங்கச்சியோ இருந்திருந்தா, அத்தை உங்ககிட்டையும் அவங்ககிட்டையும் வேற வேற மாதிரி நடந்திருப்பாங்களா?”

“எத்தனைப் பேர் இருந்தாலும் எங்கம்மா எல்லாரையும் ஒரே மாதிரி தான் ட்ரீட் பண்ணுவாங்க.. ஆண் பெண் இந்த பாகுபாடு எல்லாம் அம்மாக்கு இல்லை.. இப்போ நமக்கே பிறக்கிற பிள்ளைங்க எல்லாம் பொண்ணா இருந்தாலும் அம்மா சந்தோஷம்தான் படுவாங்க..” என்றவன் அதற்கான வேலையில் ஈடுபட்டான்..

ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் வீட்டில் தனியாக இருப்பது ரேணுகாவிற்குப் பயங்கரமாக போர் அடித்தது.. அதை அவள் கணவனிடம் கூற, அவன்பள்ளிக்கு செல் என்று கூறினான்.. இவள்உடனே

“இப்பவேண்டாம் யாதவ்.. ரெண்டு மூணு வருஷம் ஆகட்டும்..” என

“ஹே என்ன? அன்னைக்கு ஆறு மாசம் போகட்டும்னு சொன்ன.. இப்போ ரெண்டு மூணு வருஷம்ன்னு சொல்லுற..”

“இப்பவே ஸ்டார்ட் பண்ணா, நம்ம பேபி கூட என்னால புல் டைம் இருக்க முடியாது.. நம்ம பேபிக்கு மூணு வயசு ஆகி அவ ஸ்கூலுக்கு போன அப்பறம், நான்வேலைக்குப் போறேன்.”

“மேரேஜ் ஆகி ஒரு மாசம் தான் ஆச்சு.. நீ அதுக்குள்ள நம்ம பொண்ணை lkgல சேர்க்குற அளவுக்குப் போயிட்ட..” என்று கூறி சிரித்தான்..

“இப்பப் போனாலும், ஒன் இயருக்கு அப்பறம் என்னால வேலைப் பார்க்க முடியாது..”

“ஏன்?” என்றான் புரியாமல்

“டெலிவெரிக்கு லீவ் போடுவேன்ல..”

“என்ன ரேணு? அதுக்குள்ள உனக்கு குழந்தை ஆசை வந்துடுச்சா? கடவுள் கொடுக்கும் போது கொடுக்கட்டும்.. இப்போ வீட்டுல இருக்க உனக்கு போர் அடிக்குதுன்னு சொல்லுற, ஸ்பெஷல் ஸ்கூல்ஸ்ல வேகென்சி இருக்கான்னு பார்ப்போம்.. நீ சொல்லுற மாதிரி நீ கன்சீவ் ஆனாலும், டெலிவரி டைம் தானே ரிசைன் பண்ணுவ.. ஒன் இயர் சாலிடா நீ வொர்க் பண்ணலாம்..”

“போர் அடிக்குதுன்னு சொன்னது குத்தமா? வேலைக்குப் போ வேலைக்குப் போன்னு சொல்லுறீங்க..”

இரண்டு மாதங்கள் ஆகின ரேணு வேலைக்கு செல்ல, சில பள்ளிகளில் மட்டுமே சைக்காலஜி டீச்சர் என்று ஒருவரை நியமிப்பர்.. பல பள்ளிகளில் அது கிடையாது.. ரேணுகாவின் ஊரிலுமே அப்படி தான்..

ஸ்பெஷல் ஸ்கூல் அவள் ஊரில் இல்லாத காரணத்தினால்,அவள் கல்லூரியில் படித்த தோழியின் அறிவுரையில் தான் அவள் அங்கே சேர்ந்தது.

சில மாதங்கள் பிரைமரியில் தான் அவள் வேலை செய்தாள்.. அதன்பின்னே, பிரைமரி பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதோடு சேர்த்து, ஒவ்வொருவகுப்பு மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கச் செய்தனர்.

இங்கே அவளிற்கு ஸ்பெஷல் ஸ்கூலில் வேலைக் கிடைத்தது. இந்தப் பள்ளியில் ஆட்டிசத்தால் பாதிக்கப் பட்ட குழந்தைகள், டவுன் சின்றோமல் பாதிக்கப் பட்டக் குழந்தைகள் என்று மொத்தம் எழுபது பேர் படித்துக் கொண்டிருக்கின்றனர்..

இங்கே தான் ரேணுகா இப்பொழுது சேர்ந்திருக்கிறாள்.. அவர்கள் வீட்டில் இருந்து சற்றுத் தள்ளி இருந்தது அந்தப் பள்ளி.. ஒன்றரை மணி நேரம் ஆகும் அவளிற்கு அங்கே செல்வதற்கு.. சென்னையில் உள்ளவர்கள் இதுபெரிய தூரமல்ல.. ரேணுகாவிற்கு இது அதிக தூரமே..

அவர்கள் ஊரில் இரண்டு தெரு தள்ளி இருந்த பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்தவளுக்கு ஒன்றரை மணி நேரம் என்பது அதிகமாக தான் தோன்றியது.. முதலில் தினமும் இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமே என்று யோசித்தவள் பின் வீட்டில் இருப்பதற்கு அங்கே செல்லலாம் என்று முடிவெடுத்தாள்..

அவள் அந்தப் பள்ளியில் சேர்ந்து இரண்டு நாள் ஆகியிருந்தது.. அன்று மதியம்  உணவை அப்பொழுது தான் உண்டுவிட்டு கைகழுவி விட்டு வந்த ரேணுவிற்கு எதிரில், மூன்றரை வயது பெண் குழந்தையுடன் ஒரு பெண் வந்துக் கொண்டிருந்தாள்.. ரேணுகாவின் அருகில் வந்ததும் அவர், அந்த பள்ளியின் மேலதிகாரியைப் பார்க்க வேண்டும் என்று கேட்க, அவரின் அறையைக் காட்டியவள், அந்தக் குழந்தையின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினாள்.. அதுவும் இவளைப் பார்த்து சிரித்தது..

அவர்கள் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் ரேணுகாவை, மேலதிகாரி பிரேமா அழைத்தார். ஐம்பது வயதைத் தொட்ட அவர். குழந்தைகள் மனநல மருத்துவராக இருக்கிறார்.. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்பெஷல் ஸ்கூலை நடத்தி வருகிறார்..

“ரேணுகா.. இந்த குட்டி நியூ ஜாய்னி.. கிளாசுக்குக் கூட்டிட்டு போங்க.. மத்த டீடைல்ஸ் நான் அப்பறம் சொல்லுறேன்..” என்றார்..

அங்கே புதுசாக வரும் குழந்தைகள் அனைவருமே தாய், தன்னை இங்கே விட்டுச் சென்றதும் அழுகையை ஆரம்பித்துவிடும்.. ஆனால் இந்த குட்டியோ ரேணுகாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வந்தாள்.. அவள் அந்தக் குழந்தையை மற்றக் குழந்தைகள் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றாள்..

அங்கே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தனர்.. இங்கே மூன்று பிரிவாக குழந்தைகளைப் பிரித்துள்ளனர்.. ஐந்து வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒரு வகுப்பும், ஆறு வயதில் இருந்து பத்து வயது வரை ஒரு வகுப்பும், பதினொன்றில் இருந்து பதினெட்டு வரை ஒரு வகுப்பு..

இங்கிருப்பவர்களுக்கு அவர்களின் பேரை சரியாகச் சொல்லவே பல நாட்கள் ஆகும்.. இப்பொழுது அவர்களுக்கு அந்த பயிற்சி தான் வழங்கிக் கொண்டிருந்தார் அந்த அறையில் இருந்த ஆசிரியர்..

இன்று அவர்கள் பெயரைச் சொல்லிக் கொடுக்கும் பொழுது சரியாக சொல்லுபவர்கள் மறுநாள் கேட்கும் பொழுது மறந்திருப்பர். அதை அவர்கள் மனதில் பதிய வைக்க ஒரு வருடம் கூட ஆகலாம்.. 

இதனால் பாதிக்கப் பட்ட குழந்தைகள் சிலரது உடல் மொழியை வைத்தே கண்டுப்பிடித்து விடலாம்.. சிலக் குழந்தைகள் நார்மல் குழந்தைகளைப் போலவே தான் இருக்கும்.. அவர்கள் செய்யும் வேலைகள் மிகவும் தாமதமாக இருக்கும்.. சிலருக்குப் பேச்சே நான்கு வயதில் தான் வரும்.. சிலர் இரண்டு வயது வரை உட்காரத் தெரியாமல் இருப்பர்..

இந்த பாதிப்புடன் உள்ள குழந்தைகளின் நிலையை விரைவிலேயே கண்டறிந்தால்  ட்ரீட்மெண்ட் மூலம் சரி செய்து விடலாம்.. இவர்களை மென்டலி ரிடார்டட் சில்றன் என்பர்.. மற்றவர்களை விட iq லெவல்இவர்களுக்கு சற்றுக் குறைவாக இருக்கும்..

நார்மல் குழந்தைளுக்கு தொண்ணூறில் இருந்து நூறு வரை iq இருக்கும்.. கொஞ்சம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஐம்பதில் இருந்து எழுபத்தி ஒன்பது வரை இருக்கும்.. இதற்கு அடுத்தபடியாக முப்பத்தி ஐந்தில் இருந்து ஐம்பதுக்கு உட்பட்ட குழந்தைகள்.. இவர்கள் மாட்ரெட் வகையை சேர்ந்தவர்கள்..

சிவியர் சில்றன் என்பவர்கள் இருபதுக்கு கீழே iq லெவல் உள்ளவர்கள்.. இவர்களை ஹேண்டில் செய்வது சிறிது சிரமமாக இருக்கும்.. மாட்ரேட்டிற்கும் சிவியருக்கும் இடைப்பட்டு இருக்கு பிரிவை கிப்டட் சைல்ட் என்பர்..

அந்தக் குழந்தையை அங்கிருந்த ஆசிரியரிடம் விட்டுவிட்டுரேணுகா வெளியே வர பிரேமாவும் அங்கே வந்தார்.. இருவரும் நடந்துக் கொண்டே பேசினர்..

“என்ன ப்ராப்ளம் மேம்? அவளைப் பார்த்தா நார்மல் சைல்ட் மாதிரி தான் தெரியுது..” என்று ரேணுகா கேட்க

“டவுன் சின்றோம்.. நார்மல் ஸ்கூல்ல தான் இரண்டு மாசமா படிச்சிருக்கா.. அம்மா அப்பா நேம் கேட்டா சொல்லவே மாட்டுறா.. டாக்டர் கிட்ட காட்டுங்கன்னு சொல்லிருக்காங்க… அப்பறம் தான் iq லெவல்கம்மியா இருக்குன்னு தெரிஞ்சிருக்கு.. லாஸ்ட் வீக் வந்துக் கேட்டுட்டுப் போனாங்க..” என்றவர்

“உங்களுக்கு எப்படி இருக்கு இந்த அட்மாஸ்பியர்.. எல்லாரையும் கவனிச்சுக்க முடியுதா?” என

“யஸ் மேம்..”

“ஒன் மந்த் மத்த டீச்சர்ஸ் கூட இருந்து பார்த்துக்கோங்க.. அதுக்குஅப்பறம் உங்களுக்கு தனியா கிளாஸ் அலாட் பண்றேன்..” 

“ஓகே மேம்..”

பின் அவரவர் வேலையை கவனிக்கச் சென்றனர்..

நாட்கள் அதன் போக்கில் செல்ல, அன்றுதிடீரென்று போலீஸ் ஜீப் ஒன்று  அவர்களின் பள்ளிக்கு வந்திருந்தது.. பிரேமாவின் அறையில் போலீஸ் ஆபிசர் அரைமணி நேரத்திற்கு மேலாக ஏதோ பேசிக் கொண்டிருந்து விட்டு சென்றார்.. என்னவென்று தெரியாமல் மற்ற ஆசிரியர்கள் யோசித்துக் கொண்டிருக்க, பிரேமா சோகமாக அவர்களை நோக்கி வந்தார்..

அவரின் முகத்தைப் பார்த்த ஆசிரியர்ஒருவர்“என்னாச்சு மேம்?” என்று கேட்க

“ப்ரியாக்கு  ஆக்சிடன்ட்..” என்றார்..

ப்ரியா ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பத்து வயது பெண்..

“என்ன மேம்? எப்படி?” என்று ரேணுகா கேட்க

“அவங்க பேரண்ட்சோட கேர்லெஸ்னால தான்.. எவ்வளவு சொல்லிருப்போம்.. இந்த மாதிரி இருக்க குழந்தைங்களைத் தனியா விடாதிங்கன்னு.. வெளியக் கூட்டிட்டுப் போயிருக்காங்க.. இவங்க ஏதோ கடைல எடுத்துட்டு இருந்திருக்காங்க..அவள் கடையை விட்டு வெளியப் போயிருக்காள்.. ஆட்டோ இடிச்சுடுச்சு. ”

“பெரிய ப்ராப்ளம் இல்லைல?”

“கால்ல அடிப்பட்டுருக்கு.. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை..அவளைப் பத்தி விசாரிச்சுட்டுப் போக தான் போலீஸ் வந்தாங்க..”

எப்பொழுதும் பள்ளி மூன்றரை மணிக்கு முடிந்துவிடும்.. பள்ளி முடிந்ததும் அனைவரும் ப்ரியாவை மருத்துவமனையில் சென்று பார்த்துவிட்டு வந்தனர்..  வீட்டிற்கு வந்தவள் குளித்துவிட்டுஈரத் தலையுடனே சோபாவில் அமர்ந்தவளின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்துக் கொண்டே இருந்தது..

சாரதா அவரின் அலுவல் காரணாமாக வெளியூர் சென்றிருந்தார்.. இரவு ஒன்பது மணி போல் வீட்டிற்கு வந்த யாதவன் மனைவிஹால் சோபாவிலேயே கண்களை மூடிஅமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு அவள் அருகில் சென்று அமர்ந்தான்..

அவள் அப்பொழுதும் அசையாமல் அதே போல் இருக்கவும், அவள் தோள் தொட்டு அவன் அழைக்க, தூக்கி வாரிப் போட்டு எழுந்தாள்..

“ஹே ரேணு.. என்னாச்சு? நான் தான்.. ஏன் இப்படி பயப்படுற?” என்றவன், அப்பொழுது தான் நன்றாக அவள் முகத்தைப் பார்க்க அதில் அழுததற்கான தடங்கள் அப்பட்டமாக தெரிந்தது..

“என்னாச்சுமா? அழுதியா?” என்று அவன் கேட்டதும், மேலும் அவளின் அழுகைக் கூடியது..

மனைவியை நெருங்கியவன் அவளை அணைத்துக் கொள்ள, அவளின் கண்ணீர் அதிகரித்ததே அன்றிக் குறையவில்லை.. விஷயம் என்னவென்று தெரியாமல் யாதவன் சற்றுப் பயந்தே போனான்..

“ரேணு.. என்னடா? எதுக்கு இப்படி அழற? ஸ்கூல்ல எதாச்சும் பிரச்சனையா?” என்று அவன் கேட்க, அவள் பதில் கூறவில்லை..

பத்து நிமிடத்திற்கு மேல் அவள் முதுகை தடவிக் கொடுத்து சமாதானம் செய்தவன், அதற்குப்பின் அவளை விழக்கி

“ப்ச்.. இப்படி பண்ணா நான் என்னன்னு நினைக்க ரேணு? வந்ததுல இருந்து அழுதுட்டே இருக்க.. என்னனு சொல்ல போறியா இல்லையா?” என்று அதட்டவும், தேம்பிக் கொண்டே அந்த குழந்தைகளைப் பற்றிக் கூறினாள்..

“நார்மல் குழந்தைகளேயே ரோட் க்ராஸ் பண்ணும் போது கவனமா பார்த்துக்கணும்.. ஸ்பெஷல் சில்றன் இவங்களை எவ்வளவு கேர் செஞ்சு பாத்துக்கணும்.. எவ்வளவு அசால்ட்டா இருந்திருக்காங்க.. என்ன அம்மா இவங்க..” என்றவளின் அழுகை மேலும் அதிகரித்தது..

“ரேணு.. எந்த அம்மா அவங்கப் பிள்ளைக்கு இப்படி ஆகணும்னு நினைப்பாங்க.. சைக்கலாஜி படிச்ச நீயே இப்படி பேசுனா என்ன அர்த்தம்? தெரியாம நடந்துருக்கும்.. அவங்களே கவலைல இருப்பாங்க.. நீ அவங்களைப் போய் பிளேம் பண்ற?”

“…”

“ரேணு.. அவங்க பேரெண்ட்சுக்கு நீங்க தான் ஆறுதல் சொல்லணும்.. நீயும் அவங்களோட சேர்ந்து அழுதா, எல்லாம் சரி ஆகிடுமா? எப்படியோஅந்தக் குழந்தையோட உயிருக்கு எந்த ஆபத்தும் ஆகலையே.. அதை நினைச்சு சந்தோசப்படு..”

அவன் எவ்வளவோ ஆறுதல் கூறியும், அவளின் அழுகை குறைந்த பாடில்லை.. அழுது அழுது கண்கள் எரிய கணவனின் தோளிலே தூங்கிவிட்டாள்.. அவளை ரூமிற்கு தூக்கிச் சென்றுப் படுக்க வைத்தவன், தனது உடைகளை மாற்றிவிட்டு மனைவியை அணைத்தவாறே தானும் உறங்கினான்..

மறுநாள் காலை யாதவன் முதலில் விழித்தான். அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியைப் பார்த்தவன், அவளின் மேல் கையைப் போட்டிருந்ததால் அவள் உடலின் சூட்டை அவனால் உணர முடிந்தது.. அவள் கழுத்திலும் கையை வைத்துப் பார்த்தவன்

“அழுது அழுது காய்ச்சலை வர வெச்சுக்கிட்டா..” என்று புலம்பியவன் அவளை எழுப்பப் போக “பின் கொஞ்ச நேரம் தூங்கட்டும்.. ப்ரெஷ் ஆகிட்டு சாப்பிட எதாச்சும் செஞ்சுட்டு எழுப்புவோம்..” என்று எண்ணியவன் அவனிற்கு காபி தயாரித்துக் குடித்துவிட்டு மனைவிக்கு இட்லியை ஊற்றிவிட்டு, அவளை எழுப்பினான்..

கண்கள் பயங்கரமாக எரிய, அதை திறக்கவே சிரமப்பட்டவள் ஒருவாராக எழுந்தாள். அவள் பல் துலக்க உதவிவிட்டு, இட்லியைஉண்ண வைத்துவிட்டு பேராசிட்டமல் ஒன்றைப்போட வைத்தான்..

பின் இருவருக்கும் அன்று விடுமுறையை அவரவர் மேல் அதிகாரிகளிடம் கூறியவன், தானும் உண்டுவிட்டு ரூமிலேயே சற்றுத் தள்ளிச் சேரில் லேப்டாப்புடன் அமர்ந்துக் கொண்டே வேலைகளைச் செய்தான்..

மதியவேளை சாதமும் ரசமும் வைத்தவன் ரேணுவை எழுப்ப, சூடு அதிகமானதே தவிர குறைவில்லை… அதன்பின் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஊசிப் போட்டுவிட்டு வீடு வந்தனர்..

“இதைப் பத்தியும் நினைக்காதே ரேணு.. மைன்ட்ல எதையும் ஏத்திக்காதே.. இதைப் பத்தி அப்பறம் பேசலாம்..” என்றான்..

Advertisement