Advertisement

மாற்றம் 2

BEING A MOTHER IS AN ATTITUDE, NOT A BIOLOGICAL RELATION

  • ROBERT A.HEINLEIN…

“யாதவா எவ்வளவு நேரம் கிளம்புவ.. நம்ம போறதுக்குள்ள function முடிஞ்சுடும் போல.. சீக்கிரம் வாடா..” ஹாலில்நின்றுக் கொண்டு மகனின் அறையை நோக்கிக் குரல் கொடுத்தார் சாரதா..

“சாரு five மினிட்ஸ் ப்ளீஸ்..” என்று உள்ளிருந்து கத்தியவன் யாதவ கிருஷ்ணன்..

சாரதா, மாதவன் தம்பதியரின் ஒரே தவப்புதல்வன்.. பெரும்பாலானவர்களைப் போல் இவனும் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறான்.. மாதவன் இவன் பிறந்த ஒரு வருடத்திலே இறந்து விட்டார்.. அவர் ரயில்வேயில் வேலை செய்து வந்தார்.. அவரின் இறப்புக்குப் பின் சாரதாவிற்கு அந்த வேலைக் கிடைத்தது.. இரண்டு வயது மகனை பால்வாடியில் விட்டுவிட்டு தனது வேலைக்குச் சென்று வந்தார்..

சொந்தங்கள் அனைவரும் பெரிதாக உதவவில்லை என்றாலும், அவ்வபோது வந்து சாரதாவையும் யாதவனையும் பார்த்துவிட்டுச் செல்வர்.. அதுவே அவர்களுக்கும் போதுமானதாக இருந்தது.. யாருமற்று தனித்து இருப்பதற்கு சொந்தம் என்ற பெயரில் அவர்கள் வந்து போவது சற்று மகிழ்ச்சியாகத் தான் இருந்தது.. மதுரையில்தான் சாரதாவின் வேலை.. பள்ளிக் கல்லூரி இரண்டையும் மதுரையில் முடித்த யாதவனுக்கு சென்னையில் வேலைக் கிடைக்க, தாயை உடன் அழைத்துச் சென்றுவிட்டான்.. அவர் எவ்வளவு மறுத்தும் அவன் கேட்கவில்லை.

சாரதாவை vrs வாங்கச் சொல்ல, அவர் இன்னும் சிறிது காலம் வேலை செய்ய ஆசைப்பட்டார்.. வீட்டில் தனித்து இருப்பதற்குஅலுவலகம் செல்வோம் என்ற எண்ணம் அவருக்கு. சென்னைக்குப் பணி மாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்தார்… ட்ரான்ஸ்பர் கிடைக்கசில மாதங்கள் ஆகும் என்பதால், அது வரை சென்னையில் யாதவன் தனியாக ஒரு வீட்டை எடுத்து தங்கியிருந்தான்..

சாரதாவிற்கு மாற்றல் கிடைத்ததும் தாயும் மகனும் அதே வீட்டிலேயே தங்கிக் கொண்டனர்.. அவர்கள் அப்பொழுது இருந்தது, ஒரு படுக்கை அறை, ஹால், கிட்சன், பாத்ரூம்என்று இருந்த சிறு வீடு.. மதுரையில் இருக்கும் அவர்களின் சொந்த வீட்டை விற்க சாரதாவிற்கு மனமில்லை.. கணவனுடன் இரண்டு வருடம் வாழ்ந்த வீடு.. அவர் நினைவாக இருப்பது அது ஒன்றே என்பதால் அதை விற்க வேண்டும் என்ற எண்ணம் தாய் மகன் இருவருக்குமே வரவில்லை..

யாதவன்அவன் பணியில் சற்று உயர்வுப் பெற்றதும், சொந்தமாக ஒரு ப்ளாட்டை வாங்கினான்.. இப்பொழுது அவர்கள் இருவரும் அங்கே தான் இருக்கின்றனர்.. அது இரண்டு பெட் ரூம், பெரிய ஹால், மாடுலர் கிட்சன் என்று சகல வசதிகளுடன் இருந்தது..

இருபத்தெட்டு வயதைத் தொட்டுவிட்டத் தன் மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பது சாரதாவின் எண்ணம்.. சொந்தகளில் சில பெண்கள் இருந்தனர்.. அவர்களைப் பார்ப்போமா என்று மகனிடம் கேட்க, ‘உங்க விருப்பம் ம்மா’ என்று கூறிவிட்டான்..

சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பிடித்துப் போய், தனது நாத்தனார் மூலம் சாரதா பெண் கேட்டுவிட, அவர்கள் ஜாதகம் பார்த்துவிட்டு சொல்வதாக கூறினர்..

ஜோசியத்தின் மீது சாரதாவிற்கு நம்பிக்கை இல்லை.. ஜாதகம் பார்த்து ஊர் கூடி ஆசிர்வதித்து நடந்த அவரின் திருமணம், இரண்டு வருடத்திலேயே அறுந்து போனதாலோ என்னவோ அவருக்கு ஜாதகம், ஜோசியம் இரண்டிலும் நம்பிக்கை இல்லை.

பெண் வீட்டில் இருப்பவர்கள் கேட்கும் போது என்ன செய்வது, தனக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், அவர்களுக்கு அது பெரிய விஷயமாக இருக்கும் என்று எண்ணி ஜாதகத்தைக் கொடுத்துவிட்டார்.. சிறிது நாட்களில் பொருத்தம் இல்லை என்று போனின் மூலம் அவர்கள் சொல்லிவிட்டனர்.. இப்படியே இரண்டு இடங்கள் போய் விட, சாரதாவிற்குவருத்தமாகிப் போனது..

மகன் காதலித்தால் கூட அவர் மறுப்பு சொல்ல மாட்டார்.. ஆனால் யாதவனுக்கு யார் மீதும் இது வரை காதல் வந்ததில்லை.. அவரும்அவனிடம் இதைச் சொல்ல

“அம்மா மாதிரியா பேசுறீங்க? பையன் கிட்டையே வந்து யாரையாச்சும் லவ் பண்ணுடான்னு சொல்லுறீங்க..”

“பின்ன என்னடா.. ஒன்னும் சரியா அமைய மாட்டுது.. உனக்கு கல்யாணம் செஞ்சுட்டா நானும் vrs வாங்கிட்டு வீட்டுல உட்கார்ந்து உன் குழந்தையைக் கொஞ்சிக்கிட்டு இருப்பேன்ல..” ஆவலாக அவர் கூற

“வேலையை விடணும்னா விடுங்கமா.. நானும் இதைத் தானே சொல்லுறேன்.. உங்களுக்கு என்ன வயசு திரும்புதா? இப்போ என் கல்யாணத்தை சாக்கா சொல்லுறீங்க vrs வாங்க..” அவன் முறைக்க

“நான் மட்டும் தனியா இந்தா நாலு சுவத்தையே பார்த்துகிட்டு இருக்கிறதுக்கு ஆபிசுக்கே போயிடலாம்டா.. உன் பொண்டாட்டி வந்துட்டா, நானும் அவளும் சேர்ந்து இருப்போம். துணை இருக்கும்ல..”

“என் பொண்டாட்டி உங்களோட உட்கார்ந்து சீரியல் பார்த்துகிட்டே கதை அடிப்பாலாக்கும்.. வேலைக்குப் போடின்னு அவளை அடிச்சு விரட்டிடுவேன்.”

“அடப்பாவி.. அவளுக்குப் பிடிச்சாப் போகட்டும் யாதவா.. நீ உன் ஆசையை அவ மேல திணிக்கக் கூடாது.. இதையா நான் உனக்கு இத்தனை வருஷம் சொல்லிக் கொடுத்தேன்..” மகனுக்கு அறிவுரை கூற, அவன் தாயின் கையைப் பற்றிக் கொண்டு

“அம்மா.. நான் அப்படி பண்ணுவேன்னு நினைக்கிறீங்களா? உனக்குப் பிடிச்சது செய்ன்னு சொல்லி தான் என்னை நீங்க வளர்த்திருக்கிங்க.. நான் டாக்டருக்குப் படிக்கணும்னு உங்களுக்கு ஒரு மூளைல ஆசை இருந்ததுன்னு எனக்குத் தெரியும்.. இருந்தும் உங்க ஆசையை என் மேல நீங்க எப்பவுமே திணிச்சது இல்ல.. உங்களை மாதிரி நானும் என் பிள்ளைங்ககிட்ட இருக்கணும்னு அடிக்கடி நினைச்சுப்பேன்.. சும்மா அப்படி சொன்னேன்மா..

எல்லாருக்குமே ஒரு பெர்சனல் ஸ்பேஸ் இருக்கும்.. அதுக்குள்ள நம்ம எப்பவுமே நுழையக் கூடாது.. நீங்க எனக்கு கொடுத்த ஸ்பேசை நான் என் மனைவி, குழந்தைகளுக்கு நிச்சயமா கொடுப்பேன்..” என்ற மகனின் வார்த்தையில் சாராதவிற்குப் பெருமையாக இருந்தது..

இப்பொழுது இருவரும் யாதவனின் நண்பன் தருணின் திருமணத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.. இவர்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். தருண் யாதவனின் நண்பன் மட்டும் அல்ல தூரத்து சொந்தம்.. சொந்தம் என்கிற முறையில் சாரதாவும் மகனுடன் திருமணத்திற்கு செல்கிறார்..

“யாதவா அஞ்சு நிமிஷம் ஆகிடுச்சுடா என்ன பண்ற நீ?” மீண்டும் அவர் கூப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அறையில் இருந்து வெளியே வந்தான்.

“வந்துட்டேன் வந்துட்டேன்..”

“பொண்ணுங்க தோத்துடுவாங்கடா… எவ்வளவு நேரம்..” அவர் அலுத்துக் கொள்ள

“போன் பேசிக்கிட்டு இருந்தேன் மா.. என்னைப் பார்த்தா மேக் அப் போட்ட மாதிரியா இருக்கு..”

“உனக்கு என்னடா நீ அழகன்..” மகனிற்கு திருஷ்டி எடுத்தார்..

“போதும் போதும்.. வாங்க..” என்றவன்மண்டபத்திற்கு சென்றான்..

                                 ******************

“சிட்டப்ஸ்.. எப்படி இருக்கீங்க?” என்று கத்திக் கொண்டே சித்தாப்பவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் ரேணுகா..

“நான் சுப்பரா இருக்கேன் டீச்சரம்மா.. நீங்க எப்படி இருக்கீங்க?” அவரும் ரேணுகாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு  கூற

“நானும் சூப்பரா இருக்கேன்..எங்க சித்தி?”

“அவ பக்கத்துல இருந்தா நான் இம்புட்டு சந்தோசமா பேசுவேனாடா ரேணு..”

“ஹாஹா.. கொஞ்சம் பின்னாடி திரும்பிப் பாருங்க சிட்டப்ஸ்..” அவள் கூற, அவரும் கலவரமான முகத்துடன் திரும்ப, பின்னே அவரின் மனைவி கொலைவெறியுடன் அவரை முறைத்துக் கொண்டிருந்தார்..

“ரேணுமா இது நியாயமா.. வந்ததும் என்னை இப்படி மாட்டி விட்டுடியே..” அழுவது போல் கூறினார்..

“உங்களுக்கா சிட்டப்ஸ் சமாளிக்கத் தெரியாது… சும்மா நடிக்கக்கூடாது” என்றவள் சித்தியிடம் சிறிது நேரம் பேசினாள்.

“தருண் உன் மேல கொலைவெறில இருக்கான்.. அவனோட பேசுனியா?” சித்திக் கேட்க

“இப்போ தான் சித்தி உள்ளே நுழையுறேன்.. வந்ததும் உங்க ரெண்டு பேர் கூடத் தான் பேசிக்கிட்டு இருக்கேன்.. தருணை சமாளிக்கிறது ரொம்ப ஈசி டாஸ்க்.. அதை நான் பாத்துக்குறேன்.. குட்டி எங்க கண்ணுலயே காணோம்..”

“அவ விளையாடிக்கிட்டு இருக்கா.. நீ போய் அவனைப் பார்த்துட்டு வா.. எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம்..” என்றதும்தருணைத் தேடிச் சென்றாள்..

“புதுமாப்பிள்ளை.. எப்படி இருக்க..” அவன் இவளைப் பார்த்ததும் திட்டுவதற்கு வாய் திறக்குமுன் இவள் பேச்சை ஆரம்பித்துவிட்டாள்.

“யார் நீங்க உங்களுக்கு என்ன வேணும்?” யாரென்று தெரியாதது போல் அவன் பேச

“என் மாமன் பெத்த மகராசன் தான் வேணும்.. ஆனா இனிமே அது எனக்குக் கிடைக்காதில்ல.. டூ லேட்..” வருத்தத்துடன் அவள் கூற, அவளை முறைத்தவன்

“உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும் மேடம்.. இங்க எதுக்கு வந்தீங்க.. அதை சொல்லுங்க..”

“தரு.. அடி வாங்குவ.. நான் உன்கிட்ட முன்னமே சொன்னேன் தானே.. எனக்கு வொர்க் இருக்குன்னு.. function ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே வந்துட்டேன் தானே..”

“உன் மேரேஜுக்கும் நான் இப்படி தான் பண்ணுவேன்.. தாலி கட்டுறதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி தான் வருவேன்.”

“கொன்றுவேன்.. நான்முதல் நாளே வந்துட்டேன்.. நீ முஹூர்த்தம் அப்ப தான் வருவியோ..” முகத்தை ரேணு தூக்கிக்கொள்ள

“நாங்க கோப்படனும்.. எங்களுக்கு முந்தி நீங்க கோபப்பட்ட நாங்க அமைதியா போகிடுவோம்ன்னு நினைப்போ..” அவன் சரியாகக் கேட்க..

அவனை சமாதானப் படுத்தி அனைவரும் சேர்ந்து உணவினை உண்டுவிட்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்..

“அடுத்து நம்ம ரேணுக்கு தான்..” சித்தப்பா கூற

“ஏன் சிட்டப்ஸ் நான் நல்லா இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையா?” என்றாள் ரேணுகா..

“அப்போகல்யாணம் செஞ்சுகிட்டு நாங்க எல்லாம் நல்லா இல்லையாடி..” சித்தி கேட்க

“என்னை ஆளை விடுங்க..” என்று கை எடுத்துக் கும்பிட்டாள் ரேணுகா..

“உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும்னு சொல்லு.. அதே மாதிரி பார்த்துடுவோம்..” சித்தப்பா கேட்க

“நம்ம வீட்டு ஆம்பளைங்க மாதிரி இருக்கக் கூடாது.. பொண்ணுன்னு இளக்காரமா பார்க்காம என்னோட உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்கணும். முக்கியமா மாமியார் என் அம்மா மாதிரி இருக்கக் கூடாது..” என்றாள்

“அடியே எங்க அக்காவைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது.. இரு போட்டுக் கொடுக்குறேன்..”

“சொல்லிக்கோங்க.. முதல் ரூலே இதான். பையன் எங்க அப்பா மாதிரி இருக்கக் கூடாது.. மாமியார் என் அம்மா மாதிரி இருக்கக் கூடாது.. இப்படிஒரு மாப்பிள்ளையை கொண்டு வாங்க நாளைக்கே கூடக் கல்யாணம் செஞ்சுக்கிறேன்..”

“நீ சொல்லுற quality எல்லாம் எனக்கு இருக்கு.. அத்தை மக ஆசைப்பட்டுடா நானே உன்னை கட்டிக்கிறேன்டி செல்லம்..” தருண் கூற

“உன்னை மாதிரி லூசாவும் இருக்கக் கூடாது.. போடா..”

இப்படியே எல்லாரும் பேசிக் கொண்டிருந்தனர். மாலையில் ரிஷப்ஷன் நல்ல படியாக நடக்க மறுநாள் திருமணமும் நல்ல முறையில் முடிந்தது..

யாதவனும் சாரதாவும் பரிசினைக் கொடுத்துவிட்டு கிளம்புவதாக தருணிடம் கூற,

“சாப்டீங்களாமா?” என்றான்..

“சாப்டுட்டோம் தருண்.. நீ அமேரிக்கா போறதுக்குள்ள ரெண்டு பேரும் நம்ம வீட்டுக்கு ஒரு தடவை விருந்துக்கு வாங்க..”

“கண்டிப்பா மா..” என்றவன், சற்றுத் தள்ளி நின்றுக் கொண்டிருந்த ரேணுகாவை அழைத்து

“என் ப்ரெண்ட்டும் அவன் அம்மாவும் கிளம்புறேன்னு சொல்லுறாங்க.. தாம்பூலப் பை அம்மாகிட்ட இருந்து வாங்கிக் கொடு..” எனஅவளும்“சரி” என்று இருவரையும் அழைத்துக் கொண்டு தருணின் தாயிடம் சென்றாள்..

“இந்தாங்க ஆண்ட்டி.” என்று சிரித்த முகமாகக் கொடுத்த ரேணுகாவை, முதல் பார்வையிலேயே சாரதாவிற்குப் பிடித்துப் போனது..

“நீ தருணுக்கு என்ன வேணுமா?” அவர் கேட்க

“அத்தை பொண்ணு ஆண்ட்டி..”

“ஓ சரிமா..”

“சரி ஆண்ட்டி.. நான் வரேன்.” என்றவள் அங்கிருந்து செல்ல சாரதாவின் பார்வையோ அவளைத் தொடர்ந்துக் கொண்டிருந்தது.. அதை கவனித்த யாதவன்

“அம்மா.. என்ன அந்தப் பொண்ணையே பார்த்துகிட்டு இருக்கீங்க.. வாங்க கிளம்புவோம்..” என்று கூப்பிடப் பின்னே, சுயவுணர்வு வந்தவர் மகனுடன் சென்றார்..

வீட்டிற்கு வந்தும் ரேணுகாவின் முகமே அவர் மனக்கண்ணில் இருந்தது.. மகனின் மனதில் நிற்காமல் தாயின் மனதில் நின்றுவிட்டாள் ரேணுகா..

மதியம் சிறு தூக்கத்திற்குப் பின் தாயும், மகனும் தேநீரை அருந்தியவாறே பேசிக் கொண்டிருந்தனர்..

“உனக்கு எப்படிப்பட்டப் பொண்ணுடா யாதவா வேணும்?”

“நான்தான் ஏற்கனவே சொன்னேன்லமா.. உங்களுக்குப் பிடிச்சப் பொண்ணைப் பாருங்கன்னு..”

“உனக்குன்னு ஒரு ஆசை இருக்கும்லடா..”

“அதெல்லாம் ஒன்னும் இல்லைமா..”

“நீ நிஜமாவே இந்தக் காலத்துப் பையன் தானான்னு எனக்கு டவுட்டாவே இருக்குடா.. உன் வயசு பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க நீ ஏன்டா இப்படி இருக்க..”

“என்னமா நான் ஏதோ தறுதலையா சுத்துற மாதிரி பேசுறீங்க..”

“ஆமா.. அப்படி சுத்திருந்தா கூட பரவாயில்லை போல.. வாழ்க்கை முழுக்க வரப்போற பொண்டாட்டி எப்படி இருக்கணும்னு கேட்டா, உங்க இஷடம்மான்னு சொல்லுற.. உன்னை வெச்சுகிட்டு என் மருமக என்ன கஷ்டப்படப் போறாளோ..” என்றதும்

“உங்களுக்கு என் ஆசை என்னன்னு தானே தெரியனும்.. இருங்க சொல்லுறேன்..” என்றவன் யோசிப்பது போல் பாவனை செய்து

“கண்டிஷன் நம்பர் ஒன்.. சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா மாதிரி லூசா இருக்கணும்..

நம்பர் டூ.. ரோட்ல போற ப்ளைண்டுக்கு உதவி பண்ணனும்..

நம்பர் த்ரீ.. மலைலநனைஜுகிட்டே ஐஸ்கிரீம் சாப்பிடனும்..” என்று அவன் பார்த்தத் தமிழ்படங்களில் வரும் ஹீரோயின்களின் செய்கையைக் கூறினான்..

“லூசு மாதிரி பொண்ணு வேணுமா உனக்கு? கீழ்ப்பாக்கம் போவோம் நாளைக்கு.. அங்க ஒருத்தியை கட்டிக்கோடா.” என்று முறைத்தார் சாரதா..

“மேரேஜ் ஆகி கொஞ்ச நாளுல எப்படியும் நானும் அங்க தானே சேரனும்..” என்றதும் மகனைச் செல்லமாக அடித்தார்..

என் அன்னையின் கண்ணில் நான் கற்றது அன்பு

என் தந்தையின் கண்ணில் நான் கற்றது வீரம்

என் கண்ணில் எனது பெற்றோர் கண்டது மரியாதை..

                 (unknown..)

Advertisement