Advertisement

காதல் 8

வழக்கம் போல் இரவு உணவை மாறன் குகா, இருவரும் சேர்ந்து தயாரித்து உண்டுவிட்டு, பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..

“நம்ம மேரேஜுக்கு முன்னாடி எடுத்த கேஸ்.. இன்னும் இழுக்குது..” மாறன் கூற,

“என்ன கேஸ்? அடிக்கடி லேண்ட் பார்க்க போறேன்னு சொல்வீங்களே அதுவா?” என்றாள் குகா..

“யஸ் அதே தான்.. நார்மல் கேஸ் தான்.. ஆப்போசிட் சைட் ரொம்ப இழுத்தடிக்கிறாங்க..”

“நேர்மை இருக்க இடம் கண்டிப்பா ஜெயிக்கும்.. நீங்க கவலைப் படாதிங்க.. சீக்கிரம் எல்லாம் சரி ஆகிடும்..” அவள் ஆறுதலாக கூற  

“ஹே ஹே.. நீ என்ன ஆபோசிட் சைட் ஜெயிப்பாங்கன்னு சொல்ற?” என்று முறைத்தான் மாறன்.. குகா புரியாமல் அவனை பார்த்தாள்.

“என்ன முழிக்கிற?”

“நீங்க கேஸ்ல வின் பண்ணுவீங்கன்னு தானே நான் சொன்னேன்.. நீங்க ஏன் வேற மாதிரி சொல்றீங்க?”

“உண்மை இருக்கப் பக்கம் தான் ஜெயிக்கும்ன்னு சொன்ன தானே..”

“ஆமா..”

“ஆபோசிட் சைட் தான் அப்போ வின் பண்ணுவாங்க..”

“என்ன சொல்றீங்க? அப்போ நீங்க தப்பானவங்களுக்காக வாதாடுறீங்களா?” என்றாள் அதிர்ச்சியாக

“தப்பானவங்க இல்ல.. ஆப்போசிட் பார்ட்டியோட நிலத்துல கொஞ்சத்தை  என் கிளைன்ட் அபகரிச்சிருக்கார்.” என்றான் சாதாரணமாக.

“என்ன சாதாரணமா சொல்றீங்க.. தப்பு உங்க கிளைன்ட் மேல தானே.. அப்போ அவருக்காக நீங்க ஏன் வாதாடுறீங்க?” அதிர்ச்சி விலகாமலே அவள் கேட்க, இப்பொழுது மாறன் அவளை புரியாத பார்வை பார்த்தான்..

“அந்த பார்ட்டி ஆல்ரெடி என் பார்ட்டி கிட்ட இருந்து நிறைய பணம், நகைன்னு அடிச்சிருக்கான்.”

“அதுக்கும் இதுக்கும் காம்பன்சேட் ஆகுதுன்னு சொல்ல வரீங்களா?”

“என்ன குகா பேசுற? அவன் மேலையும் தப்பு இருக்கு.. இவன் மேலையும் தப்பு இருக்கு.. என்கிட்ட வந்திருக்க கிளைன்ட்டுக்கு ஆதரவா தானே நான் பேச முடியும்..”

“தப்பு செய்யுரவனுக்காக ஏன் சப்போர்ட் பண்றீங்க?” சற்று கோபமாக அவள் கேட்க

“என்னை நம்பி வந்திருக்காங்க.. அவனுக்கு சப்போர்ட் பண்ணாம வேற என்ன பண்ண சொல்ற?”

“எதுக்கு இந்த மாதிரி கேஸ் எடுக்குறீங்க? உண்மையா அவங்க மேல தப்பில்லாம வர கிளைன்ட்சுக்கு மட்டும் வாதாடலாம்ல..”

“அப்படி பார்த்தா நான் கோர்ட் பக்கமே இனி போக முடியாது.. இங்க எவன் தப்பே பண்ணாம இருக்கான்? எல்லாரும் ஏதோ ஒரு விதத்துல தப்பு செஞ்சவங்க தான்.. என் மேல நம்பிக்கை வெச்சு என்கிட்ட வரவங்களுக்கு நான் நேர்மையா இருக்கணும்னு நினைக்கிறேன்..”

“அப்போ பொய் சொல்லி தான் எல்லா கேசுலையும் வின் பண்றீங்க? சென்னைல பேமஸ் லாயர்னு பேரை இப்படி பொய் பித்தலாட்டம் செஞ்சு தான் வாங்கிருக்கீங்க.. அப்படி தானே..” என்றாள் கோபமாக

“குகா..” என்று கத்தியவன் பின் நிதானமாக “எந்த லாயருமே பொய் சொல்லாம கேசை ஜெயிக்க மாட்டாங்க புரிஞ்சிக்கோ.. பொய்மையும் வாய்மை இடத்தில்-ன்னு வள்ளுவரே சொல்லிருக்கார்..” என்றான்

“உண்மை ஜெயிக்க பொய் சொல்லலாம்.. நீங்க தப்பானவங்களை ஜெயிக்க வைக்க பொய் சொல்லிட்டு வள்ளுவர் சொன்னார் வாஞ்சிநாதன் சொன்னார்ன்னு வசனம் பேசாதிங்க..”

“சரி விடு.. நமக்குள்ள எதுக்கு ஆர்க்யூமேண்ட்.. இந்த பேச்சை விட்டுட்டு வேற பேசலாம்..” என்று அவன் பேச்சை மாற்ற

“மாறன் நீங்க இப்படின்னு என்னால நம்ப முடியலை..”

“ஹே என்ன நான் ஏதோ கொலை செஞ்சவனுக்கு விடுதலை வாங்கி கொடுக்குற மாதிரியே பேசுற.. நான் பாக்குறது புல்லா நார்மல் கேசஸ் தான்.. கிரிமினல் கேசுல பொய் சொல்லி குற்றவாளியை தப்பிக்க விட்ட ரேன்ஜூல நீ பேசுற..”

“எதுவா இருந்தாலும் தப்பு தப்பு தான்.. என் புருஷன் நேர்மையா வாதாடுறவர்ன்னு என்னால நாலு பேர்கிட்ட உங்களை பெருமையா பேச முடியுமா சொல்லுங்க?”

“குகா என்னை ரொம்ப கோபப்படுத்துற.. திரும்ப திரும்ப சொல்றேன்.. என்னை நம்பி வரவங்களுக்கு தான் நான் உண்மையா இருக்கணும்.. நம்ம நாட்டுக்கு விரோதமா நான் எந்த தப்பும் செய்யல.. இது ஜஸ்ட் அ லேன்ட் ராபரி கேஸ்.. இதுக்கு நீ இவ்வளவு சீரியஸ் ஆக தேவையே இல்லை..”

“ஜஸ்ட் அ லேன்ட் ராபரி..” என்று எகத்தாளமாக சொன்னவள்

“எனக்கு இது சுத்தமா பிடிக்கலை.. அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம்..” என்றவள் எழுந்து அறைக்குச் சென்று விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டாள்.

“ப்ச்..” என்று அலுத்துக் கொண்டவன் சிறிது நேரம் பால்கனியிலேயே அமர்ந்திருந்தான்.. நடுநிசி வேளையில் தான் உறங்கச் சென்றான்..

காலையில் முதலில் எழுந்த குகா, கிச்சனில் வேலையை செய்து கொண்டிருந்தாள்.. தினமும் அவள் எழும்போதே  மாறனும் எழுந்து அவளிற்கு சமையலில் உதவி செய்வான்.. இரவு தாமதமாக தூங்கியதால் அவன் எழுந்து கொள்ளாமல் இருக்க, இவளோ

“நைட் சண்டை போட்டேன்னு பழி வாங்குறானா? தனியா எப்படி பிரேக் பாஸ்ட், லஞ்ச் ரெண்டையும் செய்யுறது..” என்று புலம்பியவாரே சாதத்தை வைத்தவள் காய்கறியை நறுக்கிக் கொண்டிருந்தாள்..

நேற்றே மாறன், அவனே  இன்று சாம்பார் வைப்பதாக கூறியிருந்தான்.. இவள் வைக்கும் சாம்பார் தான் ரசமா(?) என்று சந்தேகப்படும் வகையில் இருக்குமே..

“வாய்கிழிய சாம்பார் செய்றேன்னு சொல்லிட்டு நல்லா குறைட்டை விட்டுட்டு தூங்குறதை பாரு..” என்று கருவிக் கொண்டே அவனை எழுப்ப அறைக்குச் சென்றாள்.

“என்னங்க..” என்று இருமுறை அழைத்தவள் அவன் அசையாமல் இருக்கவும், போர்வையை விலக்கி, “மாறன் எழுந்திருங்க.. டைம் ஆகிடுச்சு..” என

புரண்டு படுத்தவன், மெல்ல கண்ணை திறந்தான்.

“குட் மார்னிங்.. எழுந்திரிங்க..” என்றவள் ஜன்னல்களை திறந்து கொண்டிருந்தாள். பதிலுக்கு காலை வணக்கத்தை சொன்னவன் எழுந்து ரெப்ரெஷ் ஆக செல்ல, குகாவும் சமையல் அறைக்குச் சென்றாள்..

அவனுக்கு காபியை அவள் கலக்கிக் கொண்டிருக்கும் பொழுது சமையல் அறையின் உள்ளே மாறன் வர, அவன் கையில் கோப்பையை கொடுத்தவள், காயை வதக்கிக் கொண்டிருந்தாள்.

காபியை ஒரு மிடறு விழுங்கியவாறே, “சாம்பார் இன்னும் செய்யல போல..” குறும்பாக அவன் கேட்க

“நீங்க எதுக்கு இருக்கீங்க.. செய்ங்க..” என்றாள்

“நைட் போட்ட சண்டையை மறந்துட்டு மாறன் எழுந்திரிங்கன்னு நீ பாசமா என்னை எழுப்பும் போதே நான் உஷார் ஆகிருக்கணும்.. சாம்பார் செய்ய தான் எழுப்புனியாடி?” என்றவன் அவள் தலையில் வைத்திருந்த கிளிப்பை எடுக்க,

“அது எதுக்கு எடுக்குறீங்க.. கையை வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டீங்களா?”

“நீ சொல்லு குக்கிங் செய்ய தானே என்னை எழுப்புன?” அவன் விடாது அதையே கேட்க

“ஆமாடா.. அதுக்கு தான் எழுப்புனேன்.. என்னன்ற? போ, காய் எல்லாம் வெட்டி வெச்சுட்டேன்.. ஒழுங்க சாம்பாரும், இட்லியும் செஞ்சு வெச்சுடு.. நான் குளிக்கப் போறேன்..” என்று நகர்ந்தவளை, ஒரு கையால் பிடித்து இழுத்தான்.

“விடுடா லூசு பயலே..” அவன் கைகளில் இருந்து அவள் திமிர,

“முடியாதுடி செல்லக்குட்டி.. நைட் என்னை விட்டுட்டு தனியா நீ மட்டும் நல்லா தூங்குன, எனக்கு நீ இல்லாம தூக்கமே வரலடி.” என்றவன் விரிந்திருந்த அவள் கூந்தலில் ஒரு கையையும், அவள் இடையில் ஒரு கையையும் வைத்து அழுத்தினான்..

“இந்த ரெண்டு மாசமா தானே நம்ம ஒரே ரூம்ல இருக்கோம்.. இதுக்கு முன்ன எப்படி தூங்குனீங்கலாம்?” பேசிக் கொண்டே அவன் கையை இடையில் இருந்து எடுக்க அவள் முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.

“இல்லாமலே வாழ்வது இன்பம்..

இருந்தும் இல்லை என்பது துன்பம்..

அஹிம்சை முறையில் நீயே கொல்லாதே..” அவள் காதில் இவன் பாட

“மாறன் உதை வாங்கப் போறீங்க.. ஆபீஸ்க்கு லேட் ஆகிடுச்சு.. காலங்காத்தால பாட்டு கச்சேரி நடத்திட்டு இருக்கீங்க.. விடுங்க..” என்றவள் அவனிடம் இருந்து விலகி குளிக்க சென்றாள்..

“இப்போன்னா டிமிலியோட போயிடும்.. நைட் வந்தேன் பிட்டு படம் தான்டி உனக்கு..” அவன் சத்தமாக கத்த

“போடாங்க.” என்ற அவளின் குரல் குளியல் அறையில் இருந்து வந்தது.

குகா தன்னுடன் எப்பொழுதும் போல் பேசுவதால் இனி தன்னுடைய வேலை சம்மந்தப்பட்ட விஷயங்களில் தலையிட மாட்டாள் என்று மாறன் நினைத்தான்.. அது அப்படி அல்ல என்று அவள் கூடிய விரைவில் அவனிடம் காட்டப் போகிறாள்.

                             ***************

மாலை மாறன் வேலையை விட்டு வரும் பொழுது மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.. மதியம் உண்டவன், அதற்கு பிறகு தேநீர் கூட அருந்தவில்லை.. கேஸ் விஷயமாக சுத்திக் கொண்டே இருந்தான்.. வீட்டிற்கு வந்தவன் அவனுடைய சாவியை தேட அது பையில் இல்லை.

‘எங்க வெச்சேன்.. எடுத்துட்டு போனேனா இல்லையா?’ என்று ஒரு நொடி யோசித்தவன், பின் காலிங் பெல்லை அழுத்தினான்..

இரண்டு நிமிடங்கள் ஆகியும் கதவு திறக்கப் படவே இல்லை.. அவனுக்கு இருந்த அலைச்சலில் குகா கதவைத் திறக்காதது கோபத்தை வர வைத்தது..

அவனும் விடாது ஒரு கையால் பெல்லை அழுத்திக் கொண்டே, மற்றொரு கையால் போனில் குகாவின் நம்பருக்கு கால் செய்து கொண்டிருந்தான்.. ஐந்து நிமிட காத்திருப்புக்கு பிறகு, குகா கதவை திறக்க

“எவ்வளவு நேரமா கதவை தட்டுறது.. அப்படி என்ன செஞ்சிட்டு இருக்க? ஆபிஸ்ல இருந்து வந்ததும் எரிச்சல் படுத்திகிட்டு.. ச்ச..” என்று கத்தியவன், குகா பதில் சொல்லுமுன் அவனின் அலுவலக அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டான்..

அவன் கத்தியதில் சற்று பயந்த குகா, ‘ரொம்ப நேரமா பெல் அடிச்சிட்டு இருந்திருப்பார் போல.. அதான் இவ்வளவு கோபம்.’ என்று நினைத்துக் கொண்டாள்.

நேரம் ஆகியிருந்ததால், இரவு உணவை உண்கிறானா அல்லது டீ குடிக்கிறானா? என்று கணவனிடம் கேட்டுவிட்டு அதை தயாரிக்கலாம் என்று சோபாவில் அமர்ந்து அவன் வரவிற்காக காத்திருந்தாள்..

பத்து நிமிடங்கள் ஆகியும் அவன் வரவில்லை என்றதும், கதவை அவள் தட்ட,  

“எதுக்கு இப்போ நொய் நொய்ன்னு கதவை தட்டிகிட்டு இருக்க?” என்றான் அதே எரிச்சலுடன்.

“இல்ல, டீ வேணுமா?” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்

“எரிச்சல் பண்ணாம போ குகா.. அலைஞ்சு திரிஞ்சு வந்திருக்கேன்.. டீ வேணுமான்னு கேள்வி கேட்குற? ஏன் நான் என்ன சாப்பிடுவேன்னு உனக்கு தெரியாதா?”

“இல்லங்க.. லேட் ஆகிடுச்சு.. அதான் டின்னர் சாப்பிடுறீங்களா இல்ல டீ வேணுமான்னு கேட்க வந்தேன்..”

“எதாச்சும் சொல்லிட போறேன்.. போயிடு..” என்றதும், குகாவிற்கும் கோபம் வந்தது..

“இப்போ எதுக்கு கத்துறீங்க? ரெஸ்ட் ரூம்ல இருந்தேன்.. பெல் அடிச்சது கேட்கலை.. அஞ்சு நிமிஷம் தானே வெளியே நின்னீங்க.. ஏதோ மணிக்கணக்கா காக்க வெச்ச மாதிரி கத்துறீங்க.. உங்களோட கீ என்னாச்சு? அதை வெச்சு திறக்க வேண்டியது தானே?”

“கீயை மறந்து வீட்டுலையே வெச்சுட்டேன்..”

“மறந்து வெச்சுட்டு போனது உங்க மிஸ்டேக்.. உங்க ஆபிஸ் கோபத்தை எல்லாம் என் மேல காட்டாதிங்க.. எனக்கும் தான் ஆயிரம் டென்ஷன் இருக்கு.. நீங்க வீட்டுக்கு வரப்போ உங்களுக்கு காபி போட்டுக் கொடுக்க நானாச்சும் இருக்கேன்.. எனக்கு யார் இருக்கா? நானும் டயர்டா வந்து எல்லா வேலையும் செஞ்சிட்டு தானே இருக்கேன்.. வீட்டுல வெட்டியா இருக்க மாதிரியே பேசுறீங்க?”

“வார்த்தைக்கு வார்த்தை பதில் பேசு.. சாப்பாடும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்.. உன் மூஞ்சியைப் பார்க்கவே எரிச்சலா வருது.. நிம்மதியாவே வீட்டுல இருக்க விடுறது இல்லை..” மீண்டும் கத்திவிட்டு அவன் செல்ல,

குகாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.. கண்ணைத் துடைத்துக் கொண்டே தங்கள் படுக்கை அறைக்குச் சென்றவள் அழுதுக் கொண்டே படுத்திருந்தாள்..

வயிற்று வலி வேறு அவளைப் படுத்தி எடுத்தது.. மாதவிலக்கின் போது எப்பொழுதுமே குகாவிற்கு வயிற்று வலியும் அதோடு சேர்ந்து வாமிட்டிங், டயேரியாவும் இருக்கும்.. முதல் நாளோ இரண்டாவது நாளோ, ஏதோவொரு நாள் பாத்ரூமிற்கும் வாஷ்பேஷினிற்கும் நடந்துக் கொண்டே இருப்பாள்.. ஒரு நாள் மட்டும் இந்த தொல்லை அவளிற்கு..

மாறன் பெல் அடித்த சமையம், அவள் ரெஸ்ட் ரூமில் இருந்ததால் தான் உடனே வர முடியவில்லை.. இவளின் இந்த பிரச்சனை மாறனிற்கும் நன்றாகவே தெரியும்..

போன முறை அவள் இவ்வாறு வாந்தி எடுத்துக் கொண்டே இருக்கவும் அவனே சற்று பயந்து தான் போனான்..  

“என்ன ஆச்சு? ஏன் இப்படி ரெஸ்ட்ரூம் போயிட்டே இருக்க.. சாப்பிட்டது எதுவும் ஒத்துக்கலையா?” என

“இல்ல.. எனக்கு பீரியட்ஸ் டைம்ல இப்படி டயேரியா, வாமிட் எல்லாம் இருக்கும்..” என்றாள் சோர்வாக..

“என்ன சொல்ற? இப்படி எல்லாமா இருக்கும்..” அவன் அதிரிச்சியாக வினவினான்..

அவனின் வீட்டிலும் இரண்டு பெண்கள் இருந்தனரே.. அவனுக்கும் இந்த நேரத்தில் வரும் வலிகளைப் பற்றி நன்றாக தெரியும்.. வயிற்று வலி என்று சிந்து அம்மாவிடம் கூறும் போது கேட்டிருக்கிறான்.. குகா வேறு மாதிரி சொல்லவும் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது..

“சிலருக்கு இப்படி ஆகும்..”

“டாக்டர் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்தியா?”

“இதுகெல்லாமா ட்ரீட்மெண்ட் எடுப்பாங்க.. இது எல்லா பொண்ணுங்களுக்கும் நடக்குற நார்மலான விஷயம்..” குகா கூறவும்,

“எது இப்படி வாந்தி எடுக்குறதா?” என்று முறைத்தான் மாறன்..

“நான் தான் சொல்லுறேன்ல.. சில பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி இருக்கும்.. எனக்கு ஒரு நாள் தான் இப்படி இருக்கும்.. நாளைக்கு சரி ஆகிடும்.. கேள்வியா கேட்காம என்னை ரெஸ்ட் எடுக்க விடுங்க..” என்றவள் படுத்துக் கொண்டாள்.

இந்த முறை உடல் வலியுடன், கணவனுடன் போட்ட சண்டை மனவலியையும் கொடுக்க, சோர்வுடனே உறங்கினாள்.

மறுநாள் சனிக்கிழமை அவளுக்கு விடுமுறை.. அவள் நல்ல உறக்கத்தில் இருக்க, கிச்சனில் ஏதோ உருட்டும் சத்தத்தில் கண் திறந்தவள் மணியைப் பார்க்க எட்டு என்று காட்டியது.. அவள் ரெப்ரெஷ் ஆகி வருவதற்குள் மாறன் வீட்டில் இருந்து கிளம்பியிருந்தான்..

“சொல்லிட்டு போகணும்னு கூட தோணலை.. நைட் வரட்டும் இருக்கு..” என்று வாய்விட்டு அவனை திட்டிக் கொண்டே சமையல் வேலைகளை செய்தாள்.

மாலை அவன் வரும்பொழுது, குகா முகத்தை துப்பட்டாவால் மூடிக் கொண்டு கண்கள் மட்டும் தெரிவது போல் கட்டியிருந்தாள்.. வெயிலில் செல்லும் பெண்கள் பொல்யூஷனுக்காக முகத்தை மறைப்பது போல் செய்திருந்தாள்..

வீட்டிற்கு வந்த மாறன், மனைவியைப் பார்த்து, ‘இந்த நேரத்துல எங்க கிளம்புறா?’ என்று யோசித்தவாறே, ரெப்ரெஷ் செய்துவிட்டு வர, டீபாயில் காபியை வைத்திருந்தாள் குகா.

“ஏன் கைல கொடுக்க மாட்டீங்களோ?” என்று அவளை முறைத்துக் கொண்டே அவன் அதை எடுத்துப் பருகினான்..

“வெளியே எங்கேயாச்சும் போறியா? லேட் ஆகிடுச்சு.. ரொம்ப அவசரமா?” என்றான் கடிகாரத்தில் மணியைப் பார்த்துக் கொண்டே..

“…”

“உன்னை தான் கேட்குறேன்.. எங்க கிளம்புற? எதாச்சும் வாங்கணும்னா இருட்டுறதுக்கு முன்ன போயிருக்க வேண்டியது தானே.. இல்லை எனக்காச்சும் போன் செஞ்சு சொல்லியிருக்கலாம்ல..” அவன் குரலை உயர்த்த,

“சும்மா உங்களுக்கு மட்டும் தான் கத்த தெரியும்-ன்னு  கத்தாதிங்க.. அப்புறம் நானும் கத்துவேன்..” கையை நீட்டி அவள் மிரட்டினாள்.   

“கேட்ட கேள்விக்கு பதில் சொன்னா, நான் ஏன் கத்தப் போறேன்..”

“எங்கேயும் போகல..” என்றாள் சுவற்றை பார்த்துக் கொண்டே

“அப்புறம் எதுக்கு இப்படி முகமூடி கொள்ளைக்காரி மாதிரி மூஞ்சியை மறைச்சிட்டு இருக்க..”

“நீங்க தானே என் மூஞ்சியைப் பார்க்க எரிச்சலா வருதுன்னு சொன்னிங்க.. உங்க மூடுக்கேத்த மாதிரி எல்லாம் என்னால மூஞ்சியை வெச்சுக்க முடியாது.. அதுதான் இப்படி மூடி இருக்கேன்.. இனி உங்களுக்கு அந்த எரிச்சல் வராது.. என் மூஞ்சியை இனிமே இப்படி மறைச்சுக்குறேன்.. கஷ்டப்பட்டு என்னை ஒன்னும் நீங்கப் பார்க்க வேண்டாம்..” என்றாள் கோபமாக..

முதலில் அவள் சொன்னதை புரியாமல் பார்த்தவன், பின்பு புரிந்ததும் விழுந்து விழுந்து சிரித்தான்..

“இங்க என்ன காமெடி ஷோவா நடக்குது.. இப்போ எதுக்கு இப்படி சிரிக்கிறீங்க?” மாறனை அவள் முறைத்துக் கொண்டே கேட்க, சிரிப்புடனே மனைவியை இழுத்து தன் மடி மீது அமர வைத்துக் கொண்டான்.

“ப்ச்.. விடுங்க என்னை.. என் மூஞ்சியைப் பார்க்க எரிச்சலா இருக்கும்.. ஆனா மடியில உட்கார வெச்சுக்க மட்டும் இனிக்குதோ..”

அவள் கூறுவதை கண்டுக் கொள்ளாமல் அவள் துப்பட்டாவை எடுத்துவிட்டு, அவள் உதடுகளை அவன் நெருங்க

“டேய் ப்ராடு.. விடுடா என்னை.. கோபம் வந்தா நல்லா திட்ட வேண்டியது இப்போ வந்து என்ன பண்ற? விடு”

“நேத்தே என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிட்ட.. நேத்து கொடுக்க வேண்டிய டிமிலியை இப்போ கொடுடி..”

“முடியாது டா..”

“சரி நான் கொடுக்குறேன்..” என்றவன் அவள் இதழ்களை நெருங்க, அவன் வாயிலேயே தன் கையால் அடித்தாள் குகா..

“ஸ்.. எப்பப்பாரு என் வாயிலேயே அடிக்கிறடி..” உதட்டை தேய்த்து விட்டுக் கொண்டே கூறினான்.

“இன்னும் நாளு போடுறேன்.. நேத்து என்ன கத்து கத்துன.. காலைல சொல்லாம கூட வேலைக்கு கிளம்பி போயிட்ட.. உன்னை எல்லாம் உரிச்சு உப்புக்கண்டம் போட்டாக் கூட தப்பில்லை..”

“ஹிஹி.. நேத்து செம பசி, கேஸ் டென்ஷன் வேற.. நீயும் லேட்டா கதவைத் திறந்தியா அதான் எல்லாம் சேர்ந்து உன்னை திட்டிட்டேன்.. சாரி..”

“ஏன் லேட்டா திறந்தேன்னு நான் சொல்லுறதுக்குள்ள கத்திட்டு உங்க ரூமுக்கு போயிட்டீங்க.. என்னை பேசவே விடலை.. பாவமே பசிக்கும்னு என்ன சாப்பிடுறீங்கன்னு கேட்டா அதுக்கும் கத்துறீங்க.. ரெண்டு மாசம் தான் ஆகுது நமக்கு கல்யாணம் ஆகி.. அதுக்குள்ள என் மூஞ்சியைப் பார்க்க பிடிக்கலை  உங்களுக்கு..” என்றவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள,

“சாரிடா.. வெளியே இருக்க டென்ஷனை உன் மேல காட்டிட்டேன்.. இனி இப்படி நடக்காது.. ப்ளீஸ் மன்னிச்சுடு..” என்றான் பாவமாக..

“ஓகே.. இனிமே இப்படி பண்ணாதிங்க..” என்று உடனே அவனை மன்னித்தாள்.

“சரி எங்கேயாச்சும் வெளியே போகலாமா? நைட் ஷோ..” அவன் ஆர்வமாக வினவ

“ஐயோ என்னால முடியாது.. பீரியட்சோட நைட் ஷோக்கா.. சான்சே இல்ல..” என்றாள் வேகமாக.. அவனுக்கு அப்பொழுது தான் முதல் நாள் அவள் ரெஸ்ட் ரூமில் இருந்தேன் என்று கூறியதன் காரணம் புரிந்தது..

“நேத்து அதான் ரெஸ்ட் ரூம்ல இருந்தியா?”

“ம் ஆமா..” என்றவள் கணவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்..

“சாரிடா.. ஆல்ரெடி நீயே பெயின்ல இருந்திருப்ப, நானும் உன்னைக் கஷ்டப்படுத்திட்டேன்..” தோளில் சாய்ந்திருந்தவளை அணைத்துக் கொண்டே கூறினான்..

“விடுங்க.. நீங்க தெரிஞ்சேவா செஞ்சீங்க..” என்றவளும் அவன் அணைப்பில் நன்றாக ஒண்டிக் கொண்டாள்.

Advertisement