Advertisement

காதல் செய்வேன் கட்டளைப்படி

காதல் 7

ஒரு நாள் ப்ரேக் டைமின் போது கவின் குகாவை  தேடி அவளின் கேபினுக்கு வந்தான்..

“குகா..” என்று அவன் அழைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள்

“ஹாய் கவின்..” என்றாள்

“ஹாய் குகா..” என்றவன் சற்று தயங்க

“சொல்லுங்க கவின்.. என்ன அதிசயம் என்னைத் தேடி வந்துருக்கீங்க?”

“அகல்.. அகல்யா இன்னைக்கு ஆபிசுக்கு வரலை..” என்றதும், குகா

“வரலையா?” என்றாள்

“ தெரியலை போன் போட்டாலும் எடுக்க மாட்றா.. உங்களுக்கு எதாச்சும் தெரியுமான்னு கேட்க தான் வந்தேன்..”

“இல்ல நாங்க பேசியே ரெண்டு நாள் ஆகிடுச்சு..” என்றவள் “இருங்க நானும் கால் பண்ணி பாக்குறேன்.” என்றவள் அகல்யாவின் எண்ணுக்கு அழைக்க, அவள் அதை எடுக்கவே இல்லை..

“எடுக்க மாட்றா.. என்னன்னு தெரியலையே..”

“நானும் மார்னிங்ல இருந்து ட்ரை பண்றேன்.. எடுக்கவே இல்ல.. சரி ஓகே.. உங்ககிட்ட பேசுனா சொல்லுங்க..” என்றவன் அங்கிருந்து சென்றான்.

மதிய இடைவேளையின் போதும் குகா அவளிற்கு இரண்டு முறை அழைத்துப் பார்த்தாள்.. மூன்றாவது முறை அழைக்கும் போது அவளது அழைப்பை அகல்யா எடுத்தாள்..

“ஹே என்ன பண்ற? என்னாச்சு ஏன் ஆபிஸ் வரலை.. எவ்வளவு கால் பண்றேன். எடுக்கவே மாட்ற..” அகல்யாவை பேசவே விடாமல் குகா இங்கே பொரிய, எதிர்முனையில் இருமும் சத்தம் கேட்டதும் தான் குகா

“அகல் உடம்பு சரியில்லையா?” என்றாள்

“ம் ஆமா.. லைட்டா பீவர்..” என்றவளின் குரலே ஒரு மாதிரி இருந்தது.

“ஹாஸ்பிடல் போனியா?”

“இல்ல டேப்லட் போட்டுருக்கேன்.. சரி ஆகாட்டி ஹாஸ்பிடல் போகணும்..”

“திடீர்னு எப்படி பீவர்.. என்னத்த தின்ன எருமை?”

“ப்ச்.. ஒன்னும் சாப்பிடல.. தெரியல என்னன்னு..” என்றாள் அலுப்பாக

“ரொம்ப அலுத்துக்குற.. என்னவாம்?” குகா கேட்க

“ஒண்ணுமில்லடி.. தூங்க விடேன்..”

“உனக்கு போய் போன் செஞ்சேன் பாரேன்..” என்றவள் பேசிக் கொண்டே திரும்ப கவின் சற்றுத் தள்ளி அமர்ந்திருப்பது தெரிந்தது..

“ஹே இரு கவின் அப்பவே என்கிட்ட உன்னைப் பத்தி கேட்டார்.. பக்கத்துல தான் இருக்கார் கொடுக்குறேன்.. பேசு..” என்று கூறிக் கொண்டே கவினின் அருகில் சென்றாள்..

“குகா.. நான் அப்பறம் அவரோட பேசிக்கிறேன்..” என்று அகல்யா கூறியதை அவள் காதிலே வாங்கவில்லை..

“கவின்.. இந்தாங்க அகல்யா தான் பேசுறா..” என்று கவினின் கையில் போனைக் கொடுத்தவள் “பேசிட்டு தாங்க.. நான் அங்க இருக்கேன்” என்றவள் முதலில் அவள் அமர்ந்திருந்த டேபிளிற்கு சென்று உணவை உண்டாள்.

“ஹலோ..” என்று கவின் கூற, அகல்யா பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்..

“அகல்யா..”

“ம்..” என்று மட்டும் அவள் சொல்ல

“ஏன் இன்னைக்கு வரல?”

“சும்மா தான்..”

“வாய்ஸ் ஏன் ஒரு மாதிரி இருக்கு..”

“ஒன்னுமில்ல..”

“அகல்..”

“அப்புறம் பேசுறேன்..” என்றவள் அழைப்பை துண்டித்தாள்..

போனை குகாவிடம் கொடுக்க வந்தான் கவின்.. அவனின் முகம் ஒரு மாதிரி இருக்க, அதை பார்த்த குகா

“உங்க ஆளுக்கு சாதாரண பீவர் தான்.. அதுக்கு ஏன் நீங்க மூஞ்சியை இப்படி தூக்கி வெச்சுருக்கீங்க.. ரெண்டு நாள்ல சரி ஆகிடும்..” என்றாள் சிரித்துக் கொண்டே..

அவள் சொன்னப் பிறகே கவினிற்கு அகல்யாவின் உடல் நிலையைப் பற்றி தெரிந்தது.. குகாவிடம் ஒன்றும் கூறாமல் லேசாக சிரித்துவிட்டு போனை கொடுத்துவிட்டு சென்றான்..

அவனால் உணவை உண்ணவே முடியவில்லை.. முதல் நாள் அவன்  அகல்யாவுடன் செய்த வாக்குவாதம் தான் அவன் நினைவில் வந்தது..

வழக்கமாக இருவரும் இரவு போனில் உரையாடுவது போல் நேற்றும் பேசிக் கொண்டிருந்தனர்..

“கவின்.. அம்மா இன்னைக்கும் ஒரு வரன் வந்துருக்குன்னு சொன்னாங்க.. நானும் ஒவ்வொரு தடவையும் எதையாச்சும் சொல்லி சமாளிச்சுட்டு இருக்கேன்.. நீங்க உங்க வீட்டுல பேசுங்களேன்..” என்றாள் தயங்கி தயங்கி..

“…”

“கவின்..”

“ம்.. கேட்டுட்டு தான் இருக்கேன்..”

“எதாச்சும் சொல்லுங்க.. கேட்டுட்டு தான் இருக்கேன்னா என்ன அர்த்தம்..”

“நானும் உனக்கு எத்தனை தடவை சொல்றது அகல்.. கொஞ்ச நாள் வெயிட் பண்ண மாட்டியா?”

“நான் எவ்வளவு நாளானாலும் வெயிட் பண்ண ரெடி தான்.. எங்க வீட்லையும் இப்படி எனக்காக காத்துட்டு இருப்பாங்களா? அதை புரிஞ்சுக்கோங்க.. நான் என்ன நாளைக்கே நம்ம கல்யாணம் நடக்கனும்னு சொல்றேனா..

நம்ம காதலை உங்க அம்மா கிட்ட சொல்லுங்க.. ரெண்டு பேர் வீட்டுலையும் சொல்லிட்டா பிரச்சனை இல்ல.. உங்க தங்கச்சி கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம கல்யாணத்தை வெச்சுக்கலாம்.. நீங்களும் சொல்லாம என்னையும் சொல்ல விட மாட்றீங்க.. அம்மா கேட்டு நான் ஒழுங்கா பதில் சொல்லலை.. அடுத்து அப்பா என்கிட்ட கேட்டார்னா என்னால அவர்கிட்ட உண்மையை மறைக்க முடியாது கவின்.. ப்ளீஸ்.. புரிஞ்சுக்கோங்க..”

“என் தங்கச்சிக்கு இப்போ பார்த்துட்டு தான் இருக்காங்க.. அது கொஞ்சம் செட் ஆகிக்கட்டும்.. இந்த நேரத்துல நம்ம விஷயத்தை சொன்னா, என் தங்கச்சி வாழ்க்கை பாதிக்கப்படும்.. அதை நீயும் கொஞ்சம் புரிஞ்சுக்கோ..”

“உங்க அம்மா, உங்க தங்கச்சின்னு தான் பாக்குறீங்க.. என்னைப் பத்தி நினைக்கவே மாட்டீங்களா கவின்?” என்றவளின் குரல் கரகரத்தது..

“உன்னை என்ன நினைக்காம இருக்கேன்.. தினமும் ஆபிஸ்ல வீட்லன்னு உன்னோட தானே பேசிக்கிட்டு இருக்கேன்.. இதுக்கு மேல வேற என்ன எதிர்ப்பார்க்குற? ஏதோ உன்னை கழட்டிவிட பிளான் பண்ண மாதிரி பேசுற..” என்றான் கோபமாக.

“..”

“இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்க.. ஒரு வேலை அதான் உண்மையா? இல்ல இப்படி கேட்டு கேட்டு என்னை கடுப்பேத்தி என் வாயாலையே ப்ரேக் அப் செஞ்சுக்கலாம்ன்னு சொல்ல வைக்க பிளான் பண்றியா அகல்யா?” என்றதும் அகல்யாவிற்கும் கோபம் வந்தது..

“கழட்டி விடணும்னு நினைச்சிருந்தா, எங்க அம்மா சொன்ன ஏதோ ஒரு பையனுக்கு ஓகே சொல்லிட்டு போயிருப்பேன்.. இப்படி தினமும் உங்ககிட்ட கெஞ்சிட்டு இருக்க மாட்டேன்.. அவ்வளவு தான் உங்களுக்கு என் மேல இருக்க நம்பிக்கை இல்ல..”

“நான் சொல்லணும் இதை.. நீ தான் என் மேல நம்பிக்கை இல்லாம பேசிட்டு இருக்க.. அப்பா இல்லாத வீட்ல நான் தானே எல்லாம் செஞ்சாகணும்.. இப்போ போய் நான் உன்னை காதலிக்கிறேன்னு சொன்னா, எங்க அம்மாவும் தங்கச்சியும் என்ன நினைப்பாங்க.. வீட்டை பார்த்துப்பன்னு நினைச்சா இப்படி செஞ்சுட்டனு என்னைப் பார்த்து கேட்க மாட்டாங்களா?

என்னோட கடமையை எல்லாம் முடிச்சுட்டு, நம்ம விஷயத்தை சொன்னா, பொறுப்பா தங்கச்சிக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செஞ்சுட்டான்.. அவன் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழட்டும்ன்னு ஓகே சொல்லிடுவாங்க.. அதுக்கு தான் சொல்றேன் கொஞ்ச நாள் பொறுன்னு..”

“உங்க கடமை தான் முக்கியம்ன்னா, என்னை எதுக்கு லவ் பண்றேன்னு சொன்னீங்க.. அப்போ உங்க அம்மா தங்கச்சி எல்லாம் உங்க நியாபகத்துல வரலையா? குடும்பம் தான் முக்கியம்ன்னு நினைச்சவர் காதலிச்சுருக்கவே கூடாது..”

“ஆமா உன்னை மாதிரி ஒரு செல்பிஷை காதலிச்சிருக்கவே கூடாது.. எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்காம இருக்க உன்னை லவ் பண்ணேன் பாரு.. என் தப்பு தான் எல்லாம்..”

“ஓ.. ஆமா நான் செல்பிஷ் தான்.. அறிவுகெட்டவ தான்.. உங்களுக்கு ஏத்த அறிவாளி பொண்ணைப் பார்த்து கல்யாணம் செஞ்சுக்கோங்க..” என்றவள் அழைப்பை துண்டித்தாள்.. கட்டிலில் படுத்துக் கொண்டு அழுதாள்..

இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்ததில் அவளிற்கு காலை காய்ச்சல் வந்திருந்தது.. அலுவலகத்திற்கு விடுமுறை சொல்ல வேண்டும் என்று மூளையில் உரைத்தாலும், அவளால் அதை செய்ய முடியவில்லை.. அவளின் tl கவின் தானே.. அவனிற்கு தான் அவள் மெயில் செய்ய வேண்டும்.. அவன் மேல் இருந்த கோபத்தில் அவள் எதுவுமே செய்யாமல் படுத்து கண்ணீர் விட்டுக் கொண்டே இருந்தாள்.

கவினுக்கும் அகல்யாவிடம் இப்படி பேசியது மனதிற்கு கஷ்டமாக இருந்தது.. அலுவலகத்தில் நேரில் பார்த்து பேசிக் கொள்வோம் என்று அவன் நினைத்திருக்க, அவள் வரவில்லை என்றதும் பல முறை அவன் அவளுக்கு அழைத்தான்.. அவள் அவனின் அழைப்பை எதையும் ஏற்கவில்லை..

குகா அழைத்தப் போது, எப்படியும் கவின் அவளிடம் நான் லீவ் என்று கூறி அழைக்க சொல்லியிருப்பான் என்று நினைத்தே அவளின் அழைப்பையும் அவள் ஏற்கவில்லை.. மதியமும் அவள் திரும்ப திரும்ப கூப்பிடவும் தான் அவளுடன் பேசினாள். குகா, திடீரென்று கவினிடம் போனைக் கொடுத்ததும், அவன் மேல் இருந்த கோபத்தில் பேசாமல் போனை வைத்துவிட்டாள்..

இங்கே கவினிற்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக இருந்தது.. தன்னிடம் போனில் அவள் எப்படியும் பேச மாட்டாள் என்பதை அறிந்தவன், மதியம் விடுமுறை சொல்லிவிட்டு, அகல்யாவின் ஹாஸ்டலை நோக்கிச் சென்றான்..

விசிட்டர் வந்திருப்பதாக ஹாஸ்டலில் வேலை செய்யும் ஒருவர் வந்து கூற, யாராக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே வெளியே வந்தாள் அகல்யா..

கவினை அங்கே அவள் சுத்தமாக எதிர் பார்க்கவில்லை.. அமைதியாக அவன் முன்னால் சென்று நின்றாள்.. அழுது வீங்கிய கண்களுடன், காய்ச்சலும் சேர்த்து அவளை மிகவும் பொலிவிழந்து காட்டியது.. அவளின் முகத்தை பார்த்த கவினிற்கு என்னவோ போல் இருந்தது..

அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்தவன் அவளை அமருமாறு கூற, சற்று தள்ளி அமர்ந்துக் கொண்டாள்.

“இப்போ எப்படி இருக்கு? டெம்பரேச்சர் குரைஞ்சிடுச்சா?” என, அவளிடமிருந்து வெறும் “ம்” மட்டுமே பதிலாக வந்தது..

“அயம் சாரி அகல்.. நான் நேத்து ஏதோ ஒரு கோபத்துல அப்படி பேசிட்டேன்..”

“…”

“அகல்யா..” என்றவன் அவளின் கை மீது தனது கையை வைக்க, அதில் சூடு அப்பட்டமாக தெரிந்தது..

“ஹே என்ன இவ்வளவு சுடுது..” என்றவன் அவள் கழுத்தில் கை வைக்கப் போக, அவள் வேகமாக முகத்தைப் பின்னால் இழுத்துக் கொண்டாள்..

அவள் செய்கையில் அதிர்ந்தவன், அதிர்ச்சி விலகாமலே “அகல்” என

“எதுக்கு வந்தீங்க? அதை சொல்லிட்டு கிளம்புங்க..” என்றாள்

“சாரிமா.. நிஜமா நான் மனசுல இருந்து அப்படி சொல்லல.. நான் சொல்றதை நீ புரிஞ்சுக்கமாட்றன்னு கோபத்துல பேசிட்டேன்..”

“ம் சரி.. அவ்வளவு தானே.. நான் போறேன்..” என்றவள் எழுந்துக் கொள்ள, அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்..

“ப்ளீஸ்.. டோன்ட் பிஹேவ் லைக் திஸ்.. இட்ஸ் ஹர்ட்டிங் ..” என்றான்..

“ரொம்ப சந்தோஷம்.. ஹர்ட் ஆகட்டும்..” என்றவள் அவன் கையை எடுத்துவிட்டு “இனிமே ஹாஸ்டலுக்கு வராதிங்க.. போனும் பண்ணாதிங்க.. “ என்றுவிட்டு, அவன் பதிலை எதிர்பார்க்காமல் அறைக்குச் சென்றாள்..

செல்லும் தன்னவளையே வேதனை சுமந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் கவின்..

                                 ****************

மாலை வேலை முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த குகா, ஹாஸ்டல் சென்று அகல்யாவைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போவோம் என்று எண்ணினாள்.. மாறனுக்கு அகல்யாவைப் பார்த்துவிட்டு வருவதாக மெசேஜை அனுப்பியவள் ஹாஸ்டலை நோக்கிச் சென்றாள்..

குகா இதற்கு முன் அதே ஹாஸ்டலில் இருந்ததால் அவளை அகல்யாவின் ரூமிற்குள் அனுமதித்தனர்.. இவள் செல்லும் போதும் அகல்யா படுக்கையில் படுத்திருந்தாள்..

“என்ன மேடம் எப்படி இருக்கீங்க?” என்று கேட்டவாறே அவள் அருகில் சென்று அமர்ந்தாள் குகா.. தோழியின் குரலில் கண்ணைத் திறந்தவள், “வாடி..” என்றவாறே எழுந்து அமர்ந்தாள்..

“உடம்பு நல்லா சுடுது.. ஹாஸ்பிடல் போகாம டேப்லட் மட்டும் போட்டுட்டு படுத்துட்டு இருக்கியா?” அகல்யாவின் கழுத்தில் கையை வைத்துப் பார்த்துவிட்டு குகா கூற,

“ப்ச்.. பீவர் தானே.. தானா சரி ஆகிடும்..”

“என்ன ரொம்ப தான் அலுத்துக்குற.. காதல் வந்ததும், என்னைப் பார்த்தா உனக்கு அலுப்பா இருக்கா?” என்று முறைக்க

“நீயும் ஏன் குகா, இப்படி பேசுற.. எல்லாருக்கும் என்னைப் பார்த்தா எப்படி தெரியுது..” என்றவளின் கண்களில் கண்ணீர் நிறைந்தது..

“ஹே அகல்.. நான் சும்மா தான் கிண்டல் பண்ணேன்.. சாரி..”

“…”

“என்னாச்சு.. ஏன் இப்படி அழுகுற? யார் என்ன சொன்னா? கவினோட சண்டையா?”

“…”

“சொல்லு அகல்..” என்று அவள் அழுத்திக் கேட்கவும், முதல் நாள் கவினுடன் நடந்த வாக்குவாதத்தை முழுவதையும் அழுகையுடனே சொன்னாள் அகல்யா..

“அவனை கழட்டி விட பிளான் பண்ணுறேன்னு சொல்லுறான்.. அப்படி நினைச்சிருந்தா அம்மா சொன்னா எதாச்சும் ஒரு பையனுக்கு ஓகே சொல்லிருப்பேன்ல.. தினமும் இவன்கிட்ட எதுக்கு கெஞ்சிட்டு இருக்கேன்.. அவ்வளவு தான் நம்பிக்கையா அவனுக்கு என் மேல?

அம்மாவும் ஏன் இப்போ கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றன்னு கேட்டு டார்ச்சர் பண்ணுறாங்க.. என்ன தான் பண்ணுறதுன்னு எனக்கு தெரியலை.. செத்துரலாம் போல இருக்கு..”

“ஹே என்ன லூசு.. இதெல்லாம் ஒரு விஷயம்ன்னு செத்துருவேன் கித்துருவேன்னு பேசுற.. அடி வாங்கப் போற.. அத்தை கிட்ட சொல்லுவோம்..”

“என்ன சொல்லுறது.. சென்னைக்கே என்னை விட மாட்டேன்னு சொன்னாங்க.. நீயும் ரோஹிணியும் பேசுனதுனால தான் விட்டாங்க.. எல்லாரும் ஒரே ஹாஸ்டல்ல இருக்கோம்ன்னு தான் ஓகே சொன்னாங்க.. இப்போ நான் தனியா இருக்கேன்னு அவங்க ரொம்ப பயப்படுறாங்க.. எனக்கே கில்டியா இருக்கு..

ஒவ்வொரு தடவையும் அவங்க மாப்பிள்ளைப் பத்தி சொல்றப்ப எதாச்சும் ஒரு பொய் சொல்லி வேண்டாம்ன்னு சொல்றதுக்கு.. கவினுக்கு அதெல்லாம் பெருசாவே தெரியலை.. அவன் அம்மா, தங்கச்சி மட்டும் தான் கண்ணுக்கு தெரியுறாங்க.. என்னைப் பத்தி நினைக்கவே மாட்றான்..

இப்போ வந்து நான் தெரியாம சொல்லிட்டேன் சாரின்னு சொல்றான்.. என்ன தெரியாம சொல்லிட்டான்.. என் லவ்வ அசிங்கப் படுத்திட்டு சாரின்னு சொன்னா சரி ஆகிடுமா?” என்றவள் குகாவின் மடியில் படுத்துக் கொண்டு அழுதாள்..

வெகு நேரம் அவளை சமாதனம் செய்து, உணவையும் மாத்திரையும் கொடுத்துவிட்டு “எதையும் நினைச்சு பீல் பண்ணாதே.. கவின் ஏதோ கோபத்துல அப்படி சொல்லிருப்பார்.. அவரே வந்து சாரி கேட்டார் தானே.. கொஞ்சம் பொறுமையா இரு.. எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்.. ஒழுங்கா ரெஸ்ட் எடு.. இதையே நினைச்சு உடம்பை கெடுத்து வைக்காதே..” என்று கூறிவிட்டு அவளிடம் விடைபெற்றாள்..    

குகா வீட்டிற்கு வரும் போது, மாறன் இரவு உணவை செய்து டைனிங் டேபிளில் வைத்துக் கொண்டிருந்தான்..

“சாரி.. ரொம்ப லேட் ஆகிடுச்சு.. நீங்களே செஞ்சுட்டீங்களா?” என்றவள் வேகமாக அறைக்குச் சென்று ரெப்ரெஷ் ஆகி வந்தாள்..

“மேடம்.. ப்ரெண்டை பார்க்க போனதும், புருஷனை மறந்துட்டீங்க..” என்று கேலி செய்து கொண்டே இருவருக்கும் இரவு உணவை தட்டில் வைத்தான்.

“இப்படி பொண்டாட்டிக்காக சமைச்சது மட்டுமில்லாம ஊட்டியே விடுற புருஷனை எப்படி நான் மறப்பேன்..” என்றவள் தன்னுடைய ப்ளேட்டை அவன் கையில் கொடுத்து வாயை திறந்து காட்டினாள்..

“கேடி தான்டி நீ..” என்றவனும் அவளிற்கு ஊட்டி விட்டான்..

“சூப்பர் சட்னி.. நல்லா காரமா, எனக்குப் பிடிச்ச மாதிரியே இருக்கு..” என்றவள் சப்புக் கொட்டிக் கொண்டு உண்டாள்..

“நீங்க சாப்பிடலை?” என

“நீங்க மிச்சம் வெச்சா தாங்க நான் சாப்பிட முடியும்.” என்றான் பாவம் போல்..

“ச்சீ.. கண்ணு வைக்காதே.. அதான் எனக்கு உடம்பு தேறவே மாட்டுது..”

“இதுக்கு மேல தேறனுமா? போதும் என்னால இந்த பாரத்தையே தாங்க முடியலை..” என்று கண் அடித்தான்..

“எப்பப்பாரு இதே பேச்சு தான் உங்களுக்கு..”

“சரி அகல்யா எப்படி இருக்காங்க?”

“பரவால்ல.. டெம்பரேச்சர் இருக்கு.. நாளைக்கு சரி ஆகாட்டி ஹாஸ்பிடல் போகணும்..”

“திடீர்ன்னு என்னாச்சு.. கிளைமேட் சேன்ஞ்னாலையோ?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல.. எல்லாம் காதல் படுத்தும் பாடு..”

“காதலா? அகல்யாவா?” என்றான் ஆச்சரியமாக

“என்ன காந்தி செத்துட்டாரா? ரேன்ஞ்ல கேக்குறீங்க.. நம்ம மேரேஜுக்கு முன்ன இருந்தே அவ லவ் பண்றா.”

“நீ என்கிட்ட சொல்லவே இல்ல.. அப்போ ஷாக் ஆகாம எப்படி?”

“வக்கீல் சார், நீங்க என்னோட பேசவே பல நாள் ஆச்சு.. இதுல அகலைப் பத்தி உங்ககிட்ட நான் எப்படி சொல்லுறது..” என்றாள் நக்கலாக..

“பாரேன்.. உன் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேருமே லவ் செஞ்சுருக்காங்க.. அவங்களோடவே இருந்த நீ மட்டும் ஏன் இப்படி அரேன்ஜ் மேரேஜ் செஞ்ச?”

“எதுக்கு அதுங்க ரெண்டு பேர் அழறது பத்தாதா? நானும் கூட சேர்ந்து அழனுமா?”

“ஏன்?”

“ஒருத்தி லவ் மேரேஜ் செஞ்சுட்டு தினமும் புலம்பிட்டு இருக்கா. இன்னொருத்தி ஏன்டா லவ் பண்ணோம்ன்னு புலம்பிட்டு இருக்கா..” என்றவள் அகல்யா கவினின் பிரச்சனையை மேலோட்டமாக சொன்னாள்.

“பாவம் அகல்..  அழுதுட்டே இருக்கா..” என்று தோழிக்காக வருத்தப்பட்டாள்.

“எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்..” என்று மனைவிக்கு ஆறுதல் கூறியவன், வேறு பேச்சை மாற்றும் விதமாக

“ரோஹிணிக்கு என்ன பிரச்சனை? என்ன பண்றார் அவ புருஷன்.. எங்க ஊர் பொண்ணை அழுக வைக்கிறாரா? ரோகிணியை ஒரு கேஸ் கொடுக்க சொல்லு.. பார்த்துக்கலாம்..”

“யோவ் வக்கீலு.. உனக்கு கேஸ் எதுவும் கிடைக்கலையா? என் ப்ரெண்ட் வாழ்கையில விளையாடலாம்ன்னு பாக்குறியா? கொன்னுடுவேன்..” மிரட்டலாக கூறினாள்..

“ஜஸ்ட் கவுன்சிலிங் தான்மா கொடுக்க போறோம். டைவர்ஸ் எல்லாம் இல்ல..”  மாறான் கூறியதும்,

“நீங்க ஒரு ஆணியும் … வேண்டாம்.. அவங்களே பேசி கூட சரி ஆகிடுவாங்க.. உங்ககிட்ட கவுன்சிலிங் வந்து எக்ஸ்ட்ரா நாலு பிட்டைப் போட்டு பிரிச்சு விட பாக்குறீங்களா?” என்றாள் குகா..

“இதான்டா மாறா.. நல்லதுக்கே காலமில்ல.. என் பொண்டாட்டியோட தோழி.. எங்க அம்மாவோட தோழியோட பொண்ணு.. எங்க ஊர் வேற.. அது கண் கலங்குதுன்னு பரிதாபப்பட்டு சொன்னா, என்னை தப்பா நினைக்கிறாங்க..” என்று புலம்பினான்.

“உங்க பரிதாபம் ஒன்னும் எங்களுக்கு வேண்டாம்.. பேசாம சாப்பிடுங்க..” என்றவள் அவளின் ப்ளேட்டை கழுவ சென்றாள்..

“ஆமா என்னை லவ் பண்ணலையான்னு கேள்வி கேட்டீங்க? நீங்க ஏன் சார் லவ் பண்ணல?” கிட்சனில் இருந்துக் கொண்டே அவள் கேட்க

“நான் லவ் பண்ணலைன்னு உன்கிட்ட எப்போ சொன்னேன்.. மூணு பொண்ணுங்கள லவ் பண்ணிருக்கேன்..” மாறனும் சத்தமாக பதில் சொன்னான்.

“அடப்பாவி.. இப்போ நான் கொடுக்குறேன் கேஸ்.. என் புருஷன் ஏற்கனவே மூணு பேரை காதலிச்சு ஏமாத்திட்டு, இப்போ என்னை கல்யாணம் செஞ்சுருக்கார்னு.. டிவோர்ஸ் வாங்கிக் கொடுங்க..”

“நான் ரெடி..” என்றான் சிரித்துக் கொண்டே.. அவன் பதிலில் கிட்சனில் இருந்து வேகமாக வெளியே வந்த குகா, அவன் தலையில் நங்கென்று கொட்டினாள்..

“ஸ்.. இருடி.. இதையும் பாய்ன்ட்டா சேத்துக்குறேன்.. புருஷனை அடிச்சு கொடுமை படுத்துறாங்க.. சீக்கிரம் விவாகரத்து கொடுங்கன்னு ஜட்ஜ் அய்யா கிட்ட சொல்லுறேன்.”

“போடா..” என்றவள் “உங்க ஸ்டோரிய சொல்லுங்க.. யார் அந்த மூணு பொண்ணுங்க.” என்றாள்.

“நான் ப்ர்ஸ்ட் இயர் படிக்கிறப்ப பைனல் இயர் படிச்ச அக்காவை தான் முதல்ல லவ் பண்ணேன்.. நான் ப்ரொபோஸ் பண்ணுறதுக்குள்ள அவங்க காலேஜ் விட்டுப் போயிட்டாங்க.. அப்புறம் நான் தேர்ட் இயர் படிக்கிறப்ப, கெஸ்ட் லெக்சரர் ஒருத்தங்க வந்தாங்க.. ஒரு நாள் தான் வந்தாங்க.. அவங்க  அழகுல அப்படியே மயங்கிட்டேன்.. அப்புறம் அவங்கள தேடாத இடம் இல்லை. எங்கயும் கிடைக்கலை.. மனச தேத்திகிட்டு சூப் சாங் பாடிட்டு போயிட்டேன்..” என்றான் சோகமாக

“அட ஆன்ட்டி ஹீரோவா நீங்க? உங்கள விட பெரிய பொண்ணுங்களையா சைட் அடிச்சிருக்கீங்க.. சின்னப் பொண்ணுங்க யாரும் உங்க கண்ணுக்குத் தெரியவே இல்லையா?” கிண்டலாக குகா கேட்க

“தெரிஞ்சாளே.. நான் பைனல் இயர் படிக்கிறப்ப, ப்ர்ஸ்ட் இயர்ல ஜாயின்ட் பண்ணா.. கிரீட்டிங் கார்ட் கொடுத்துப் ப்ரொபோஸ் பண்ணலாம்ன்னு நினைச்சு கடைக்குப் போனேன்.. ஒரு கார்ட் நூறு  ரூபாய் சொன்னான்.. ரொம்ப காஸ்ட்லியா இருந்துச்சு.. வேண்டாம் ரோஸ் வாங்கிக் கொடுத்தே ப்ரொபோஸ் பண்ணுவோம்ன்னு பூக்கடைக்குப் போனேன்.

ஒரு ரோஸ் கொடுக்குறதுக்கு பதில், ரோஸ் பொக்கே கொடுத்தா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சு.. அதோட விலை இருநூறு ரூபாய்ன்னு சொல்லிட்டாங்க. இதுக்கு கார்டே பரவாலைன்னு அதை வாங்கிட்டு லவ் சொல்லலாம்ன்னு போறேன்.. எனக்கு முன்ன ஒருத்தன் கார்ட் ரோஸ் ரெண்டையும் கொடுத்து அவகிட்ட ப்ரொபோஸ் செஞ்சுட்டு இருக்கான்..

ரொம்ப கவலையா போச்சு.. சரி இனி நமக்கு லவ் செட்டாகாது.. வீட்டுலையே ஒரு லூச நமக்கு கட்டி வைப்பாங்கன்னு லவ் பண்ணுற ஐடியாவை டிராப் பண்ணிட்டேன்..” என்றதும் குகா

“அட சீதா…” என்றாள்.

“பொதுவா எல்லாரும்.. அட ராமான்னு தானே சொல்லுவாங்க.. நீ என்ன சீதான்னு சொல்லுற..”

“நான் கடவுளை கூப்பிடலை.. உங்களை என் தலையில கட்டி வெச்ச என் தாய் சீதாவை தான் கூப்பிட்டேன்..” மாறனிடம் கூறியவள் “போயும் போயும் இருநூறு ரூபாய்க்கு கணக்கு பார்த்த இவன் தானாமா உனக்கு மாப்பிள்ளையா கிடைச்சான்.. கொடுமை..” என்றாள் போனில் இருந்த தாயின் புகைப்படத்தை பார்த்து..

“உனக்கு ஆயிரம் ரூபாய்க்கு பொக்கே வாங்கித் தரேன் செல்லம்..”

“நீங்க தானே வாங்குவீங்க வாங்குவீங்க..”

“ஒரு கிஸ் கொடு.. லட்ச ரூபாய்க்கு கூட வாங்கித் தரேன்..”

“உங்க பொக்கேவே எனக்கு வேண்டாம்.. ஆளை விடுங்க..” என்றவள் தங்களது அறை நோக்கிச் சென்றாள்.

“ஹே.. இருடி..” என்றவனும் வேகமாக அறைக்குச் சென்று கதவை அடைத்தான்..

 

Advertisement