Advertisement

காதல் செய்வேன் கட்டளைப்படி…

காதல் 4

முதல் நாள் தோழியுடன் நடந்த சண்டையில் மாறனின் புகைப்படத்தை அவள் பார்க்கவில்லை.. தாய் கூறும்போது நெட்டை ஆன் செய்தவள், மாப்பிள்ளை என்று சொன்னதும் போட்டோவை டவுன்லோட் செய்யாமல் வைத்திருந்தாள்.. பேசி முடித்துவிட்டு அதைப் பார்ப்போம் என்று அவள் நினைக்க அதன் பின் அகல்யாவுடனான பேச்சு வார்த்தையில் மாறனை அவள் மறந்திருந்தாள்..

அடுத்த நாள் மாலை தான் அவளால் மாறனின் புகைப்படத்தைப் பார்க்க முடிந்தது.. பார்ப்பதற்கு அழகாக இருந்தான்.. அவளிற்குப் பிடித்திருந்தது.. நேரில் பார்த்து பேசிவிட்டு ஒரு முடிவெடுப்போம் என்று நினைத்தவள் தந்தைக்கு அழைத்து விபரத்தைக் கூறினாள்.. அவரும் மாறனின் வீட்டில் கேட்டுவிட்டு மறுநாள் இருவரையும் அருகே இருந்த மாலில் சந்திக்குமாறு கூறினார்..

“இந்த டிரஸ் போடு.. அது ரொம்பச் சிம்பிளா இருக்கு..” குகா கையில் வைத்திருந்த உடையை வாங்கிவிட்டு வேறு உடையை அவள் கையில் கொடுத்தாள் அகல்யா..

“அகல்.. இது கிராண்டா இருக்கு. functionக்கு வியர் பண்ற மாதிரி. ஜஸ்ட் அவரைப் பார்த்து பேசப் போறேன்.. அதுக்கு ஏன் பொண்ணு பார்க்க போற மாதிரி நீ என்னை ரெடி பண்ற..”

“கொஞ்சம் அழகா போனா தானே அவருக்கும் உன்னைப் பிடிக்கும்..”

“அப்போ மேக் அப் போட்டா தான் நான் அழகா இருப்பேன்னு சொல்லவரியா?” என்றவள் தோழியை முறைத்தாள்.

“உனக்கு எல்லாம் ட்ரெஸ் செலெக்ட் செஞ்சு கொடுத்தேன் பாரு.. என்னைச் சொல்லணும்.. என்னத்தையோ போட்டுக்கிட்டுப் போ” அவள் கழுத்தை நொடித்துக் கொண்டு போக, குகா சிரிப்புடனே டாப் லெகின் ஒன்றை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குச் சென்றாள்.

குளித்து விட்டு தலையைத் துவட்டியவள் முக அலங்காரத்தை முடித்துவிட்டு தலையை ப்ரீ ஹேர் விட்டுச் சென்டரில் கிளிப்பை போட்டாள்.

“குகா.. முதல் முறையா கல்யாணத்துக்குன்னு ஒருத்தரை பார்க்கப் போற.. இப்படித் தலைவிரி கோலமா போகாதடி..” ரோகிணி கூற

“ஓய் மாமி.. ஒரு காலத்துல நீயும் லூஸ் ஹேர் தான் அதிகமா விடுவ.. இன்னைக்கு ஐயர் வீட்டு மருமகள் ஆனதும் ஓவரா ஆச்சாரம் பேசுறியா?” அகல்யா, ரோகிணியைக் கிண்டல் செய்ய, குகா சிரித்துக் கொண்டே

“இந்த ட்ரேசுக்கு ப்ரீ ஹேர் தான் ரோகிணி சூட் ஆகும்.. உனக்கே தெரியும் நான் இந்த மாதிரி சென்டிமெண்ட் எதுவும் பார்க்க மாட்டேன்.. சாரி நீ சொல்றத என்னால செய்ய முடியாது..” என்றவள் கைப்பையை எடுத்துக் கொண்டு தோழிகளிடம்

“மூணு மணி ஷோக்கு டிக்கெட் வாங்கி வெச்சுடுறேன்.. ரெண்டரைக்கு அங்க இருக்க மாதிரி வந்துடுங்கடி.. லேட் ஆக்காதிங்க..” என

“முதல்ல போய் அந்தப் பையனைப் பார்க்குற வேலையைப் பார்.. அதைப் பத்தின டென்ஷனே இல்லை.. படத்துக்குப் போற நினைப்பு தான் அதிகமா இருக்கு..” அகல்யா திட்டினாள்.

“இன்டர்வியூக்கு போற மாதிரி பில்டப் கொடுக்குறாள்.” என்றவள் இருவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு மாலிற்குச் சென்றாள்.

புட்கோர்ட்டில் இவளிர்காக மாறன் காத்திருந்தான்.. இவள் உள்ளே நுழைந்ததும் தெரியும்படியான இடத்தில் தான் அவன் அமர்ந்திருந்தான்.. அவனைக் கண்டவள் அவன் அருகில் சென்று

“ஹாய்..” என்று புன்னகைத்தாள்.. அவனும் பதிலிற்கு “ஹலோ..” என்க

“சாரி.. ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா?” என்றாள்.

“இல்ல ஜஸ்ட் இப்போ தான் வந்தேன்.. நீங்க என்னை ஈசியா கண்டுபிடிக்கணும்னு தான் பிரன்ட்ல உட்கார்ந்தேன்.. வாங்க அந்த சைட் உட்காரலாம்..” என்று நடுவிருக்கை ஒன்றை அவன் காட்ட, அவன் பின்னோடு சென்று மாறனின் எதிரில் அமர்ந்தாள்.

குடிப்பதற்கு ஜூசை ஆர்டர் செய்துவிட்டு இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.. மாறனே அந்த அமைதியைக் கலைத்தான்.

“என்னைப் பத்தி உங்ககிட்ட என்ன சொன்னாங்கன்னு தெரியலை.. சோ நான் ஒரு இன்ட்ரோ கொடுத்துடுறேன்..” என்றவன் அவனைப் பற்றி மேலோட்டமாகச் சொன்னான்.. அதைக் கேட்டவளிற்குச் சிரிப்பை அடக்கச் சற்று சிரமமாகவே இருந்தது. அவள் சிரிப்பைப் பார்த்தவன்

“என்னடா இன்டர்வியூல பேசுற மாதிரி ஸெல்ப் இன்ட்ரோ கொடுக்குறானேன்னு தானே சிரிக்கிறீங்க..” என, இப்பொழுது இவள் வாய்விட்டே சிரித்தாள்..

“சாரி சாரி..” என்றவள் சிரிப்பை அடக்கிக் கொண்டு “நான் கிளம்பும் போது என் ப்ரெண்ட்ஸ் இந்த ட்ரெஸ் போடு, இப்படிப் பேசு, அப்படிப் பேசுன்னு இன்டர்வியூக்கு போற முன்ன சொல்லிக் கொடுக்கிற மாதிரியே பேசுனாங்க.. இங்க வந்தா நீங்களும் இன்டர்வியூல உட்காந்திருக்கப் பீல் கொடுத்தீங்களா அதான் சிரிச்சுட்டேன்.. சாரி..” என்றாள்.

“ஹாஹா.. இட்ஸ் ஓகே. உங்களைப் பத்தி அப்போ நீங்க சொல்ல மாட்டீங்க அப்படித் தானே..”

“என் போட்டோ காட்டி என்னைப் பத்தின டீடைல்ஸ் சொல்லிருப்பாங்க தானே..”

“சொன்னாங்க தான்..”

“தென்..”

“சென்னைல எத்தனை வருஷமா இருக்கீங்க.. காலேஜ் இங்க தான் படிச்சீங்களா?” என்றான்

“த்ரீ இயர்சா இருக்கேன்.. ug மதுரைல, pg சென்னைல பண்ணினேன்..”

வேற என்ன கேட்பது என்று அவன் யோசிக்க,

“லாயர் தானே நீங்க?” என்றாள் அவள் சந்தேகமாக

“ஏங்க உங்களுக்கு இப்படி ஒரு டவுட்? நான் லாயர் தான்.. வேணும்னா என் ஐடி கார்ட் காட்டட்டுமா?” என

“லாயர் எல்லாம் ரொம்பப் பேசுவாங்க. நீயும் ரொம்பப் பேசுவ உங்க ரெண்டு பேருக்கும் மேட்ச் ஆகும்ன்னு என் ப்ரெண்ட் சொன்னா.. நீங்க என்னடானா சைலென்ட் கேரக்டரா இருக்கீங்களே?”

“ஆப்போசீட் தான் அட்ராக்ட் பண்ணும்.. அண்ட் நான் வெளிய தான் லாயர்.. வீட்ல வெறும் மாறன் தான்..”

“உங்க நேம் நல்லா இருக்கு.. பரிதி மாறன்.. தமிழ் பேர் எனக்கு ரொம்பப் பிடிக்கும்..”

“தேங்க்ஸ்..” என்றான் சிரிப்புடன்..

அவர்கள் ஆர்டர் செய்திருந்த ஜூஸ் வரவே இருவரும் அதை அருந்திக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்..

“ஓகே.. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.. உங்க பதில் பாசிடிவா இருந்தாலும் சரி நெகடிவா இருந்தாலும் சரி என்கிட்டையே சொல்லுங்க..” மாறன் பட்டென்று கூறினான்..

அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்த குகாவிற்கு இப்பொழுது பதில் சொல்ல நா வரவில்லை..

“என்னாச்சு?”

“…”

“உங்க மவுனத்தை நான் சம்மதம்னு எடுத்துக்கணுமா? இல்லை?” என்று அவன் இழுக்க, அவள் சிரித்துக்கொண்டே தலை ஆட்ட அவனது உதட்டிலும் புன்னகை அரும்பியது..

இருவரும் சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் புட்கோர்ட்டில் இருந்து வெளியே வந்தனர்..

“எதுல வந்த? நான் உன்னை டிராப் பண்ணவா?” அவன்கேட்ட பின்பே தோழிகளிடம் படத்திற்குச் செல்வோம் என்று கூறியது அவளிற்கு நியாபகம் வந்தது.. அவனுடன் பேசிக் கொண்டிருந்ததில் அவள் டிக்கெட் எடுக்க மறந்திருந்தாள். ‘ஈவ்னிங் ஷோவுக்குப் போனா ஹாஸ்டல் போக லேட் ஆகிடுமே?’ மேலும் மாறனுடன் செல்லும் இந்த நேரத்தை இழக்கவும் அவள் விரும்பவில்லை..

“ஸ்கூட்டில வந்தா டிராபிக்ல லேட் ஆகும்ன்னு ட்ரைன்ல வந்தேன்..”

“சரி என்னோட வா..” என்றவன் அவளை அவனின் பைக்கில் ஹாஸ்டலில் விட்டான்.. அவன் பைக்கை பார்க்கிங்கிலிருந்து எடுத்து வர சென்ற சமயம் தோழிகளுக்குப் போன் செய்து டிக்கெட் எடுக்கவில்லை.. இருவரும் கிளம்பி வர வேண்டாம் என்று கூறினாள்.

முகம் கொள்ளா புன்னகையுடன் அறைக்குள் நுழைந்த குகாவைப் பார்த்த தோழிகள் இருவருக்கும் அவளின் மகிழ்ச்சியின் காரணம் புரிந்தது..

“என்ன மேடம் முகம் ஒரே பிரகாசமா இருக்கு..” அகல்யா கிண்டலாகக் கூற

“ப்ச் போடி..” என்றவள் வெட்கத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“பார்டா வெட்கத்தை.. என்ன எல்லாம் ஓகே ஆகிடுச்சா?”

“ம்” என்றவள் தோழிகளை நிமிர்ந்து பார்க்கவில்லை..

“ரோகிணி நீ கூட இவ்வளவு வெட்கப்படலையேடி. கத்துக்கோ என் செல்லத்துகிட்ட இருந்து..”

“சும்மா இருடி..” அகல்யாவிடம் கூறிய ரோகிணி “அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டியாடி?” என

“ஸ்.. அதை மறந்துட்டேன்..” என்றவள் வேகமாகப் போனை எடுத்தாள்..

“பாருடி.. முதல் தடவை அவரைப் பார்த்துட்டு வந்ததுக்கே அம்மா அப்பா ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் மறந்துட்டாங்க.. மேரேஜ் அப்பறம் நம்ம ரெண்டு பேரையும் யாருன்னு கேட்பா போலையே..” அகல்யா கூற

“உண்மைடி. இவ செஞ்சாலும் செய்வா..” ரோகிணியும் ஒத்து ஊதினாள்.

“போங்கடி..” என்றவள் போனை எடுத்துக் கொன்டு சற்றுத் தள்ளி நின்று தாயுடன் பேசினாள்.

இருவீட்டு பெரியவர்களுக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.. அந்த மாதத்திலே ஒரு நல்ல நாளில் பெண்ணை நேரில் பார்த்துவிட்டுத் திருமணத்திற்கான நாளை குறிப்போம் என்று முடிவு செய்தனர்..

மாறனின் வீட்டில் இருந்து அன்று குகாவைப் பார்க்க வந்திருந்தனர்.. இரண்டு நாட்கள் லீவில் குகாவும் மதுரைக்கு வந்திருந்தாள்..

“குகா இந்தப் புடவைல அழகா இருக்கடா” புடவையும் மல்லிகைப்பூவும் வைத்து பார்ப்பதற்கு அம்சமாக இருந்த மகளைப் புகழ்ந்த சீதா,

“நைட் சுத்திப் போடணும்..” என்று திருஷ்டி கழித்தார்..

மாறன் அன்று வரவில்லை.. சித்ரா சுதாகரன், மாறனின் அக்கா மாமா மற்றும் சுதாகரனின் சகோதரரின் குடும்பம் வந்திருந்தது.. வந்தவர்களுக்குக் காபி கொடுத்து பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்கினாள் குகா..

மாறனின் அக்கா சிந்து குகாவின் தலையில் மல்லிகையை வைத்துச் சம்மந்தத்தை உறுதி செய்துக் கொண்டனர்.. அவர்கள் வழக்கத்தில் பூ வைப்பது மட்டுமே, நிச்சயம் திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்புடன் சேர்த்துச் செய்வார்கள் என்பதால் பூவை மட்டும் வைத்தனர்.. சித்ரா குகாவுடன் நன்றாகப் பேசினார்..

குகாவும் அவருடன் நன்றாகப் பேச, அவருக்கு மிகுந்த சந்தோஷம்..

“சீக்கிரம் உன்னை நம்ப வீட்டுக்குக் கூட்டிட்டு போகணும்” என்று அவள் கன்னம் கிள்ளிக் கொஞ்சினார்..

திருமணத் தேதியை மாறனுடன் கலந்தாலோசித்துச் சொல்வதாகக் கூறிவிட்டு அவர்கள் புறப்பட்டனர்.. அவர்கள்சென்றவுடன் புடவை மாற்றிவிட்டுக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தாள்.. இந்த நிமிடம் அவளிற்கு மாறனுடன் பேச வேண்டும் போல் இருந்தது.

மாலில் சந்தித்தப் பின்பு இருவருமே போனில் பேசிக் கொள்ளவில்லை. இருவருமே நம்பரை முதலில் மாற்றிக் கொள்ளவில்லை. “அவரே கூப்பிடட்டும்” என்று குகாவும் வேலைகளை முடித்தப் பின் பேசிக் கொள்ளலாம் என்று மாறனும் நினைத்திருந்தனர்..

இப்பொழுது குகாவிற்கு நம்பர் இல்லாததால் போன் செய்ய முடியாமல் கவலையாக இருந்தது.

‘இப்போ அப்பா கிட்ட போய்க் கேட்டா என்ன நினைப்பார்.. ஒரு மாதிரி இருக்கே.. தம்பி கிட்டசொல்லி அப்பா மொபைல இருந்து நம்பர் எடுத்து தர சொல்லுவோமா? ஐயோ வினையே வேண்டாம்.. உடனே போட்டுக் கொடுத்துடுவான்.. வேற என்ன பண்ணலாம்? நான் தான் பொண்ணு வெட்கபட்டுகிட்டு போன் நம்பர் வாங்கமா வந்தேன். அவனுக்கு என்ன? பூ வைக்கிற function நல்ல படியா முடிஞ்சதான்னு அட்லீஸ்ட் கேட்கலாம் இல்ல.பெரிய வக்கீல்.. பொண்ணுகிட்டப் பேச கூடத் தெரியலை.. இவன் எப்படிக் கோர்ட்ல வாதாடுரானோ?’ என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்.

அவள் மதுரையில் இருந்த ரெண்டு நாட்களுமே நம்பரை எப்படிக் கேட்பது என்று யோசனையிலேயே கழிந்தது.. பின்பு‘அவனுக்கா தோணும் போது உன்னோட பேசட்டும்.. அவன் ஜாலியா வேலையைப் பார்த்துகிட்டு இருக்கான்.. உனக்கு மட்டும் என்ன அவனோட நினைப்பு.. சும்மா இரு’ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.

ஒரு வாரக் காத்திருப்புக்கு பின்பு அவளை அழைத்தான் பரிதிமாறன்..

புது எண்ணில் இருந்து வந்த நம்பரைப் பார்த்துவிட்டு அவன் தானே என்று எதிர்பார்ப்புடனே எடுத்த குகாவிற்கு அவன் தான் என்றதும் சந்தோசமாக இருந்தது. அவன் “ஹலோ” என்றதும்

“சொல்லுங்க சார். ஒரு வழியா சாருக்குத் தைரியம் வந்துடுச்சா?” என்றாள் நக்கலாக

“தைரியமா? என்னது புரியலை..”

“என்னோட பேசுறதுக்குத் தான்.. இருபது நாளா ஒரு போனைக் காணோம்.. இப்போ தானே கூப்டீங்க அதான் கேட்டேன்..”

“அப்போ மேடம் என்னைத் தேடிருக்கீங்க?” என்றவன் முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது..

“நான் ஒன்னும் உங்களைத் தேடலை.” அவள் வீம்புடன் கூற

“தேடலை?”

“ஆமா தேடலை.”

“அப்போ போனை வெச்சுடவா?”

“பார்டா என்ன மிரட்டுறீங்களா? எங்க போனை கட் பண்ணிப் பாருங்க.. அவ்வளவு தைரியமா?” இவள் மிரட்ட

“வக்கீலையே மிரட்டுரியா?”

“நீங்க தானே சொன்னீங்க.. நான் வெளியே தான் வக்கீல்.. வீட்ல வெறும் மாறன் தான்னு..” என்றது அவன் வாய்விட்டு சிரித்தவன்

“கேஸ் விஷயமா கொஞ்சம் பிசியா இருந்தேன்.. அதான் போன் பண்ண முடியலை.. உன் நம்பரும் அன்னைக்கு உன்கிட்ட வாங்காமா விட்டுட்டேன்.. இப்போ தான் அம்மாகிட்ட கேட்டு வாங்குனேன்..”

“அத்தை என்னோட ரெண்டு தடவை பேசிட்டாங்க.. அவங்க பையன் சுத்த வேஸ்ட்”

“ஹாஹா.”

“போதும் போதும் சிரிச்சது.. சொல்லுங்க என்ன விஷயம்?”

“மேரேஜ் டேட் ரெண்டு குறிச்சுட்டு வந்துருக்காங்க.. மாமாக்கு இந்நேரம் அப்பா சொல்லிருப்பார். உனக்கு எது வசதின்னு பார்த்துட்டு சொல்லு..”

“ம் சரி..” என்றவளுக்கு இதுக்குத் தான் போன் செஞ்சியாடா என்றிருந்தது..

“தென்?” அவன் கேட்க

“தென்? நீங்க தான் சொல்லணும்?”

“நிஜமா உனக்கு இருபத்தி மூணு வயசாகிடுச்சா?” அவன் குழப்பமாகக் கேட்டான்..

“ஏன் என்னைப் பார்த்தா அப்படித் தெரியலையா என்ன?”

“பார்த்தா தெரியாது.. பேசினால் தெரியும்..” என்றான்

“என்ன சொல்லுறீங்க?” அவளிற்குச் சுத்தமாக அவன் கூறவருவது புரியவில்லை..

“பியான்சி கிட்ட என்ன பேசுறதுன்னு தெரியாமா முழிக்கிறியே, அதைச் சொன்னேன்..”

“அய்யடா சார் மட்டும் அப்படியே வண்டி வண்டியா பேசிக் கிழிக்கிறீங்க.. எங்களைச் சொல்ல வந்துட்டாங்க..”

“கால் எடுத்ததுல இருந்து சண்டை தான் போடுற.. தெரியாம உன்கிட்ட மாட்டிகிட்டேனோ?” சிரிப்புடன் கூற, குகாவும் சிரித்துக் கொண்டே

“மாட்டுனது மாட்டுனது தான்.. தப்பிக்க முடியாது..”

“குகா.. என்னால தினமும் கால் பண்ண முடியாது.. நேரம் கிடைக்கும் போது நானே கூப்பிடுறேன்..”

இருவரும் பத்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர்.. அவன் கேஸ் விஷயமாகப் பிசியாக இருந்ததால் அடிக்கடி அவனால் குகாவுடன் பேச முடியவில்லை.. அவன் ப்ரீயாக இருக்கும் சமயங்களில் அவளிடம் சிறிது நேரம் உரையாடுவான்..

தோழிகளின் கிண்டலுடன் கல்யாண ஷாப்பிங், ட்ரீட் என்று நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது..

சீதா மகளை ஒரு மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார்..

“அம்மா ஒரு மாசம் எல்லாம் ஆபிஸ்ல லீவ் தர மாட்டாங்க.. மேரேஜூக்கு முன்னாடி ஒரு மாசம். பின்னாடி பத்து நாள் எல்லாம் கண்டிப்பா லீவ் கிடைக்காது.. பத்து நாள் முன்னாடி வரப் பாக்குறேன்..”

“பத்து நாள் முன்னாடி வரதுக்கு இது ஒன்னும் பக்கத்து வீட்டுக் கல்யாணம் இல்ல.. உன்னோட கல்யாணம்..”

“அம்மா.. படுத்தாதிங்க..”

“ஒரு மாசத்துக்கு முன்னாடி வந்தா தான், நல்லா சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்க முடியும்..”

“சரிமா.. நான் பார்க்கிறேன்..” என்று தாயை அப்பொழுது சமாதானம் செய்தவள் திருமணத்திற்குப் பத்து நாட்கள் முன்பே ஊருக்குச் சென்றாள்..

Advertisement