Advertisement

காதல் செய்வேன் கட்டளைப்படி…

காதல் 2

ரோகிணியின் திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.. அகல்யாவும் குகாவும் அவர்கள் வேலையில் பிசியாக இருந்தனர்.. இருவரும் வேறு வேறு டீம்.. மதிய இடைவேளையின் போது ஒரு சில நாட்கள் அகல்யாவும் குகாவும் சந்தித்துக் கொள்வார்கள்.. அன்றும் அப்படி இருவரும் சந்திக்கவே  ஒன்றாக அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர்..

“நீ இன்னும் எனக்கு லஞ்ச் ஸ்பான்சர் பண்ணலை.. அன்னைக்கு உன்னை எவ்வளவு அழகா போட்டோ எடுத்தேன்.. அதுக்கு பதில் நீ என்ன செஞ்ச?” குகா கேட்க

“தின்னி மாடு.. இப்போ நீ சாப்பிட்டதுக்கு நான் பே பண்றேன் போதுமா?”

“காசு கொடுத்து நான் வாங்கிட்டு வந்துட்டேன்.. சனிக்கிழமை மால் போகலாம்.. அங்க எனக்கு வாங்கிக் கொடு.”

“சனிக்கிழமை எங்க டீம் அவுட்டிங்..”

“உன் டி.யல் செம்மடி.. அடிக்கடி அவுட்டிங் வெச்சுடுறான். எனக்கும் இருக்கானே சொட்டத் தலையன். வேலைக்கு சேர்ந்த ஒரு வருசத்துல ஒரு தடவை தான் அவுட்டிங் போகிருக்கோம்.. அதுவும் காலேஜுக்கு லெக்சர் கொடுக்க..”

“வேணும்னா எங்களோட வா.. நான் கவின் கிட்ட சொல்லுறேன்.. அவர் ஒன்னும் சொல்ல மாட்டார்..”

“இல்ல நான் வரலை.. நீங்க என்ஜாய் பண்ணுங்க..”

“இரு..” என்றவள் போனை எடுத்து அவளின் டீம் லீடை அழைக்கப் போக, வேகமாக அவள் கையில் இருந்து போனைப் பிடிங்கினாள் குகா..

“லூசு.. நான் வரலைன்னு சொல்லுறேன்ல.. நீங்க டீமா போறீங்க.. நான் வந்தா சிலருக்கு பிடிக்கலாம் சிலருக்கு பிடிக்காம இருக்கலாம்.. நெக்ஸ்ட் வீக் நம்ம ரெண்டு பேரும் போகலாம்..”

“சரி ஓகே..” என்றவளும் அதற்கு மேல் குகாவை வற்புறுத்தவில்லை..

சனி மாலை தனது டீமுடன் சந்தோசமாக பொழுதைக் கழித்தாள் அகல்யா.. டின்னரை முடித்துக் கொண்டு அனைவரும் அமர்ந்து பாடல் பாடிக் கொண்டிருந்தனர்..

நோகாமல் என் தோளில் சாய்ந்தால் போதும்

உன் நுனி மூக்கைக் காதோடு நுழைத்தால் போதும்

கண்ணோடு கண் பார்க்கும் காதல் போதும்

இரு கண் கொண்ட தூரம் போல் தள்ளி இரு போதும்

என்று தன்னவளை விழிகளில் நிரப்பிக் கொண்டே பாடினான் கவின்..

“இந்த கவின் வர வர சரியில்லை.. லவ் சாங்கா கேக்குறார் பாடுறார்.. எதாச்சும் லவ்வா?” கவினின் டீமில் இருக்கும் ஒருவன் கேட்க

“லவ் சாங் பாடுனா லவ் பண்ணனுமா என்ன? இது என்னடா கொடுமையா இருக்கு..”

“சாங்க ரொம்ப பீல் செஞ்சு பாடுனீங்க.. எனக்கும் கொஞ்சம் உங்க மேல டவுட் தான்..” இன்னொருவர் கூற, அங்கிருந்த அவனின் டீம் மேட் அனைவருமே அதையே கூறி அவனை கலாய்த்து கொண்டிருந்தனர்..

கேபில் அவரவர் இருப்பிடத்தில் இறக்கிவிட்ட கவின், கடைசியாக அகல்யாவை  அவளது விடுதியில் இறக்கி விட்டான்.. இறங்கியவளின் கையை பிடித்துக் கொண்டவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க

“ப்ச்.. கவின் என்ன பண்றீங்க? யாராச்சும் பார்க்க போறாங்க.. கையை விடுங்க..” அவனிடம் இருந்து கையை உருவிக் கொண்டாள்.

“உனக்காக தானே பாட்டு எல்லாம் பாடுனேன்.. நல்லா இருக்கு, நல்லா இல்லைன்னு ஒரு வார்த்தை சொன்னியா நீ?”

“நீங்க எனக்காகப் பாட்டுப் பாடுறது என்ன புதுசா? சும்மா சும்மா பாடீட்டு தான் இருப்பீங்க.. ஒவ்வொரு தடவையும் சூப்பர் சூப்பர்ன்னு சொல்ல வாய் வலிக்குது.” என்றாள் சிரிப்புடன்.

“வாய் கூடிப் போச்சு.. பார்த்துக்குறேன்..” என்றவன் அவளை தன் புறம் இழுக்க

“அடி வாங்குவீங்க.. கிளம்புங்க முதல்ல..” அவன் கையில் அடித்தாள்.

“ஒரு கிஸ் கூட கொடுக்கமாட்டியா?” என்றான் பாவமாக

“ஒரு மண்ணும் கிடையாது.. கல்யாணத்துக்கு அப்பறம் தான்..”

“அப்போ சீக்கிரம் உங்க வீட்ல நம்ம காதலை சொல்லிடு..”

“சொல்லலாம் சொல்லலாம்.. இப்போ கிளம்புங்க..”

“விரட்டுறதுலையே இரு.. பாய்..” என்றவன் அவளிடம் விடைபெற்று கிளம்பினான்..

உதட்டில் ஒட்டிய சிரிப்புடன் அறைக்குள் நுழைந்த அகல்யாவைப் பார்த்த குகா,

“என்ன மேடம் சிரிச்சுகிட்டே வரீங்க? ஒரே என்ஜாய்மென்டா?” என்றாள்

“ஹான்..” என்று தடுமாறியவள் “ம் ஆமாடி..” என்றவள் இரவு உடையை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்கு சென்றாள்.. ரெப்ரெஷ் செய்துக் கொண்டு வந்தவள் குகாவிடம் “சாப்பிட்டியா?” என்றாள்

“ம்” என்றவளின் பார்வை அகல்யாவையே துளைத்தெடுத்தது.

“என்னடி.. ஒரு மாதிரி பார்க்கிற?”

“எப்பதான் வாயை திறப்பேன் பார்க்கிறேன்..”

“என்ன?” அவள் புரியாமல் கேட்க

“யாருக்கும் எதுவும் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்க.. ஒரு நாள் பூனை வெளிய வந்து தானே ஆகனும்.. அன்னைக்கு இருக்கு..” என்றவள் அகல்யாவின் பதிலை எதிர்பார்க்காமல் லைட்டை அணைத்துவிட்டு படுத்தாள்.

குகாவின் இந்த பதிலில் சற்று ஆடித்தான் போனாள் அகல்யா..

‘எல்லாம் தெரிஞ்சுடுச்சா? போச்சு.. நானே சொல்லிருக்கணுமோ.. இவளுக்கு எப்படி தெரிஞ்சது? நிஜமா தூங்குறாளா? இல்ல என்னை அவாய்ட் செய்ய படுத்துட்டாளா? எழுப்பி உண்மையா எல்லாம் சொல்லிடுவோமா?’ பலவாறு யோசித்தாளே தவிர தோழியிடம் தன் காதல் விவகாரத்தை சொல்ல தைரியம் தான் வரவில்லை..

                                              ********************

“வக்கீல் சார்,  கொஞ்சம் எங்களோட பேச நேரம் ஒதுக்க முடியுமா?” சித்ராவின் கேள்வியில் சிரித்தவன்

“சொல்லுங்க மிசஸ் சித்ரா சுதாகரன்.. உங்களுக்கு என்ன பிரச்சனை.. உங்க ஹஸ்பண்ட் எதுவும் டார்ச்சர் பண்றாரா? விவாகரத்து வாங்கணுமா?” என்றான்

“அடேய்.. உன் வாய்ல வசம்ப வெச்சு தேய்க்க.. நானும் என் வீட்டுக்காரரும் நல்லா இருக்குறது உனக்குப் பிடிக்கலையா? எப்போடா எங்களைப் பிரிக்கலாம்ன்னு நினைப்பியா?” நிறுத்தாமல் சித்ரா திட்ட

“நீங்க தானே வக்கீல் சார்ன்னு சொன்னீங்க.. என்கிட்ட வரவங்க பாதி பேர் விவாகரத்துக்கு தான் வராங்க.. அதான் கேட்டேன்.. அப்போ உங்களுக்கு வேற என்ன பிரச்சனை மேடம்.. சொல்லுங்க தீர்த்து வெச்சுடுறேன்..”

“தவமா தவமிருந்து பத்து மாசம் சுமந்து பையன்னு ஒருத்தனை பெத்தேன்.. ஒரு வாரமா அவனை பிடிக்க முடியலை.. கொஞ்சம் அவனை பிடிச்சு கொடுக்குறீங்களா?”

“சாரி மேடம்.. நான் வக்கீல்.. போலீஸ் இல்லை.. போலீஸ் கிட்ட தான் மிஸ்ஸிங் கேஸ் எல்லாம் கம்பிளைன்ட் கொடுக்கணும்.. பாவம் படிக்காதவங்களா இருக்கீங்க.. அதான் ஒன்னும் தெரியலை.. நான் வேணும்னா உங்க ஊர் போலீஸ் நம்பர் தரவா.. அவர்கிட்ட சொன்னீங்கனா உடனே கண்டுப் பிடிச்சுக் கொடுத்துடுவார்..” அவனும் விடாமல் சித்ராவுடன் வம்பிழுத்தான்.

“என் புருஷன் கிட்ட கம்பிளைன்ட் கொடுக்க எனக்கு தெரியும்டா.. இப்போ நீ என்னோட பேசுவியா மாட்டியா?”

“நான் எப்போ பேச மாட்டேன்னு சொன்னேன்.. வேலைல இருக்கும் போது கால் பண்ணாதிங்கன்னு தானே சொன்னேன்..”

“உனக்கு எப்போ தான் வேலை இல்லை. ரெண்டு குடும்பத்தைப் பிரிச்சு விடுறதை வேலைன்னு சொல்லிக்கிட்டு திரியிறான்..”

“ஹலோ சித்து.. நானே ஒன்னும் அவங்க குடும்பத்துக்குள்ள  போய் பிரிக்கலை.. என்கிட்ட வர கிளைன்ட்ஸ் கேக்குறதை நான் செஞ்சு கொடுக்குறேன்..”

“மேய்க்கிறது எருமை அதுல என்ன பெருமையோ..” என்றவர்  “ஒழுங்கா சாப்பிடுரியாடா?” என்றார்..

“அதெல்லாம் கரெக்டா செஞ்சுடுவேன்.. இதை கேட்க தான் கூப்பிடீங்களா? எதுவும் முக்கியமான விஷயமா? இல்லைனா நான் ஈவ்னிங் வீட்டுக்கு போனதும் கூப்பிடவா?”

“இருடா.. கால்ல சுடுதண்ணிய கொட்டுனவன் மாதிரி பறக்காதே.. மாறா பொண்ணு போட்டோ வாட்சப்ல அனுப்பிருக்கேன்.. பார்த்துட்டு பிடிச்சுருக்கான்னு சொல்லு..”

“அம்மா கொஞ்சம் வேலை இருக்கு.. வீட்டுக்கு போயிட்டு பார்த்துட்டு சொல்லுறேன்..”

“போட்டோ பார்த்துட்டு பிடிச்சுருக்கு பிடிக்கல்லைன்னு சொல்ல எவ்வளவு நேரம்டா ஆக போகுது..”

“அம்மா இப்போ எனக்கு இருக்க டென்ஷன்ல பொண்ணு போட்டோவ பார்த்தேன்னா பிடிக்கலைன்னு தான் சொல்லுவேன்.. ஆபிஸ் டைம்ல டிஸ்டர்ப் செய்யாதிங்க..” என்றான் கடுப்பாக.

“என்னமோ பண்ணு..  நைட்டுக்குள்ள எனக்கு முடிவு தெரிஞ்சாகணும்” என்றவர் அழைப்பைத் துண்டித்தார்..

“இந்த சித்ராக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சு.. அப்பா எப்படி தான் சமாளிக்கிறாரோ..” வாய்விட்டே புலம்பிக் கொண்டு கேஸ் பைலை ஆராய்ந்தான்..

பரிதிமாறன்  இருபத்தெட்டு வயது வாலிபன்.. சித்ரா சுதாகரனின்  ஒரே தவப்புதல்வன்.. சுதாகரன் மதுரையில் காவல்துறை அதிகாரியாக இருக்கிறார்.. சித்ரா இல்லத்தரசி.. இவனுக்கு ஒரு அக்கா சிந்து.. திருமணம் முடிந்து கணவனுடன் டெல்லியில் இருக்கிறாள்.. விஷ்வா கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்தவன், அங்கேயே வேலையிலும் சேர்ந்துவிட்டான்.. ஹை கோர்ட்டில் பிரபலமான வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியராக ஐந்து வருடமாக பணிபுரிந்துக் கொண்டிருந்தான்..  இப்பொழுது சென்னையிலேயே விரல் விட்டு எண்ணக் கூடிய பிரபலமான வக்கீலில் இவனும் ஒருவன்..

மாறனிடம் சென்றால் அந்த கேஸ் வெற்றியடையும் என்று கிளைன்ட்ஸ் மத்தியில் அவனிற்கு நல்ல பெயர் உண்டு.. தன்னிடம் வருபவர்களுக்கு அவன் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பான்..

சிறுவயதில் இருந்து வாய் கொஞ்சம் அதிகம்.. அதனாலேயே என்னவோ லா படிக்க வேண்டும் என்று அவன் பெற்றோரிடம் கேட்டதும் அவர்களும் அவன் வாய் மேல் இருந்த நம்பிக்கையில் சரி என்று ஒத்துக் கொண்டனர்.. இப்பொழுது எல்லாம் இவனை ஏன் தான் வக்கீலுக்கு படிக்க வைத்தோம் என்று தினமும் சித்ரா புலம்பும் அளவிற்கு அவர்களைப் படுத்தி வைக்கிறான்.. இவனைப் படுத்தவும் ஒருத்தி விரைவில் வருவாள் என்பதை அறியாமல் துரை கேஸ் பைலில் மூழ்கி இருந்தார்..

“ரெண்டு ஹியரிங் கண்டிப்பா வந்துடும் மாறா.. நிலம் ஆப்போனேன்ட் பார்ட்டி பேர்ல தான் இருக்கு.. நம்ம கிளைன்ட் தான் அவங்க இடத்தையும் சேர்த்து ஆக்கிரமிச்சு வீடு கட்டிருக்கார்.. எதிர்புற வக்கீலும் ரொம்ப தீவிரமா இருக்கார்.. கொஞ்சம் நம்ம கேர்புல்லா தான் இந்த விஷயத்தை டீல் பண்ணனும்..” மாறனுடன்  பணிபுரியும் ஹரி பேப்பர்களை படித்துவிட்டு கூற

“இதை விட பெரிய கேஸ் எல்லாம் நம்ம அசால்ட்டா சமாளிச்சிருக்கோம்.. இதுக்கு ஏன் நீ இவ்வளவு டென்ஷன் ஆகுற?”

“அந்த பக்கம் வாதாடுறது யார்ன்னு தெரியும்ல.. ஜான் சார்.. நம்ம வயசு அவர் அனுபவம்.. அதான் கொஞ்சம் பயமா இருக்கு..” என்றவனின் குரலில் பயம் அப்பட்டமாக தெரிந்தது..

“அனுபவம், வயசு இதை எல்லாம் வெச்சு ஒன்னும் பண்ண முடியாது.. திறமை இருந்தா போதும்.. எனக்கு நம்ம திறமை மேல நம்பிக்கை இருக்கு.. நீ நெகட்டிவா திங் பண்ணாம கேஸ பத்தின டீடைல்ஸ் கலெக்ட் பண்ற வழிய பாரு..”

“என்னவோ நீ சொல்லுற. ஜான் சாரை எதிர்த்து மட்டும் நம்ம ஜெயிச்சுட்டா போதும்.. நம்ம பேமஸ் ஆகிடுவோம்..”

“அதெல்லாம் ஆகிடுவோம்… அதுக்கு முதல்ல நீ வேலையப் பார்க்கணும்..”

மதிய உணவைக் கூட உண்ணாமல் இருவரும் தீவிரமாக டிஸ்கஷனில் ஈடுபட்டிருந்தனர்.. நான்கு மணி ஆன சமயம் தான் இருவருக்குமே பசி எடுக்க ஆரம்பித்தது..

“சரி நீ கிளம்பு.. நாளைக்கு நிலத்தை நேர்ல இன்னொரு தடவை பார்த்துட்டு அடுத்து என்ன பண்ணலாம்ன்னு பார்ப்போம்..” மாறன் ஹரியிடம்  கூற

“சரி மச்சான். நீயும் போய் சாப்டுட்டு மீதி வேலையை பாருடா..”

“ம் சரிடா.” என்றானே தவிர ஐந்தரை மணி ஆகியும் அங்கிருந்து அவன் நகர வில்லை.. சித்ரா மீண்டும் அவனை அழைக்க

“இந்த அம்மாக்கு ஒரு தடவை சொன்னப் புரியாது.. எரிச்சல் படுத்திகிட்டே இருப்பாங்க..” என்றவன் அவர் அழைப்பைத் துண்டித்துவிட்டு மணியை பார்த்துவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டான்.

வீட்டிற்கு வந்தவன் குளியலை போட்டுவிட்டு ப்ரெட் டோஸ்ட்  செய்து அதை உண்டுவிட்டு காபியோடு பால்கனியில் சென்று அமர்ந்தான்.. எதிர் பிளாட்டில் கல்லூரி மாணவிகள் நான்கு பேர் வாடகைக்கு இருக்கின்றனர்.. அவர்களின் கத்தல் அவன் செவியை எட்டியது.

“இந்த பொண்ணுங்களோட தினமும் இதே தொல்லை தான்.. படிக்கவே படிக்காதுங்க போல.. எப்பப்பாரு ஆட்டம் பாட்டம்ன்னு கத்திக்கிட்டே இருக்காங்க..” அவர்களை வசைப்பாடிக் கொண்டிருந்தவனுக்கு அப்பொழுது தான் தாய் கூறிய பெண்ணின் புகைப்படம் நியாபகத்திற்கு வர காபியை ருசித்தவாறே வாட்சப்பில் உள்ள புகைப்படத்தைப் பார்த்தான்.. பார்த்தவுடன் அவனிற்கு திருப்தியாக இருந்தது. பெண்ணைப் பற்றிய விபரத்தைக் கேட்டுக் கொண்டு முடிவெடுப்போம் என்று எண்ணியவன் தாய்க்கு அழைத்தான்..

“சொல்லுடா நல்லவனே..”

“பொண்ணு போட்டோ பார்த்தேன்மா.. ஓகே.. பேர் என்ன? என்ன படிச்சுருக்காங்க? இப்போ என்ன பண்றாங்க? எந்த ஊர்? எல்லா டீடயில்சும் சொல்லுங்க..”

“பொண்ணு பேர் குகப்ரியா.. mba முடிச்சுட்டு சென்னைல தான் வேலை பாக்குறாள்…  மதுரை சொந்த ஊர். அவங்க அப்பாக்கு அங்க சொந்தமா துணிக்கடை இருக்கு.. அம்மா ஹவுஸ் வைப்.. கூட பிறந்தது ஒரு தம்பி  செகண்ட் இயர் படிக்கிறான்.. என் ப்ரெண்ட் பொண்ணு கல்யாணத்துக்கு போனேன்ல, அங்க தான் இந்தப் பொண்ணைப் பார்த்தேன்.. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. என் தோழி மூலமாவே பொண்ணு வீட்லையும் பேசினோம்.. ஜாதகம் அனுப்புனாங்க.. காலைல தான் போய் பொருத்தம் பார்த்தோம்.. அமோகமா இருக்குன்னு ஜோசியர் சொல்லிருக்கார்.. அதான் மேற்கொண்டு உன்கிட்ட கேட்டுட்டு பேசுவோம்ன்னு இருக்கோம்..” விளக்கமாக கூறினார்..

“ஓகே மா.. பொண்ணு வீட்ல பிடிச்சுருக்கான்னு கேட்டுட்டு முடிவு பண்ணுங்க..”

“உனக்கு ஓகே தானேடா..”

“உனக்கு பிடிச்சுருக்குல அப்போ எனக்கு டபிள் ஓகே.. தாய் சொல்லைத் தட்டாதே.”

“நடிக்காதேடா டேய்..”

“என் அன்பை பார்த்து நடிக்கிறேன்னு சொல்லுறியே சித்து.. என் நெஞ்சு பொருக்குதில்லையே!!!”

“போதும் நிறுத்துடா.. நாங்க பொண்ணு வீட்ல பேசிட்டு சொல்லுறோம்..”

“இங்க சென்னைல தானே அந்த பொண்ணு இருக்கு.. நேர்ல பார்த்து பேச ஏற்பாடு பண்ணுங்க..”

“அவங்க வீட்ல ஒத்துப்பாங்களா என்னனு தெரியலை.. கேட்டு பாக்குறோம்..”

“சரிமா..” என்றவன் தந்தையுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்..

                                         

Advertisement