Advertisement

காதல் செய்வேன் கட்டளைப்படி..

காதல் 13

“எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட நீ சொல்லல.. அகல்யா அம்மா கடைல என்னைப் பார்த்துட்டு விஷயம் சொல்றாங்க.. என்ன நினைச்சிட்டு இருக்க நீ.. உன் மாமியாருக்கு கூட சொல்லாம இருந்திருக்க.. அவங்களும் எனக்கு தெரியாதேன்னு சொல்றாங்க.. பெரியவங்கன்னு ஒரு மட்டு மரியாதை இல்லை உனக்கு. காலைல நான் பேசும்போது கூட நீ மூச்சு விடலைல.. அங்க வந்தேன் நல்லா நாளு சாத்து சாத்திடுவேன்..” விடாமல் மகளை சீதா பொரிந்து தள்ளிக் கொண்டிருக்க, என்னமோ திட்டிக் கொள் என்பது போல் காதில் போனை வைத்துக் கொண்டு தாய் திட்டுவதை ஒன்றுமே சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்..

“வாயை திறந்து இப்பவாச்சும் பேசுறியா நீ? அவ்வளவு திமிர் ஆகிடுச்சா குகா உனக்கு?” சீதா மீண்டும் கத்த, ராஜன் தான் மனைவியின் கத்தலில் மகளிற்கு ஆதரவாக வந்தார்..

“விடு சீதா.. முடியாம இருக்கப் பிள்ளைகிட்ட எதுக்கு இப்படி சத்தம் போடுற.. நமக்கு தெரிஞ்சா வருத்தப்படுவோம்னு சொல்லாம விட்டிருக்கா..”

“அதுக்காக மறைப்பாளா? வந்து இருக்கு உனக்கு..” என்று அவர் திட்டிக் கொண்டே இருக்க, பொறுமை இழந்த குகா,

“ட்ரிப்ஸ் போட்டதுக்கு ஏன் மா இப்படி அலம்பல் பண்றீங்க.. நான் நல்லா தான் இருக்கேன்..” என்றாள்

“ஓ நான் இங்க கவலைப் படுறது உனக்கு அலம்பலா தெரியுதா?” அதற்கும் அவர் திட்ட,

“அம்மா ப்ளீஸ். முடியலை உங்களோட.. விடுங்க. இனி இப்படி நடக்காம பார்த்துக்கறேன்..”

“போதும் வேலைக்கு போனது.. லீவ் போட்டுட்டு ரெஸ்ட் எடுன்னு சொல்றோம்ல கேட்கவே மாட்ற..”

“அடுத்த மாசத்துல இருந்து லீவ் எடுத்துக்குறேன் மா.. இன்னும் ஒரு மாசம் தானே..”

“என்னவோ போ. உடம்பை பார்த்துக்கோ.. இப்பவே கிளம்பணும்னு தான் எனக்கு மனசு கிடந்து தவிக்குது.. அப்பாக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு.. முடிஞ்சதும் ரெண்டு மூணு நாள்ல நாங்க வரோம்..”

“வீணா ஏன் அலையுறீங்க.. இருக்கட்டும் மா.. நான் தான் நல்லா இருக்கேன்னு சொல்றேன்ல..”

“சம்மந்தி நாளைக்கு வரேன்னு சொல்லிருக்காங்க..”

“ஐயோ அம்மா.. சின்ன விஷயத்தை ஏன் இப்படி பெருசு பண்றீங்க எல்லாரும்.. அத்தையை எதுக்கு இப்போ வர சொன்னீங்க.. உங்கள வெச்சிக்கிட்டு..”

“நான் ஒன்னும் சொல்லலை.. மருமகளுக்கு முடியலைன்னு சொன்னதும் அவங்க கிளம்பி வராங்க.. என்கிட்ட எதுக்கு நீ காயுற..”

“முதல்ல இந்த அகல்யாவை கொல்லனும்.. ஹாஸ்பிடலுக்கு தனியா போகணுமேன்னு அவளை துணைக்குக் கூட்டிட்டு போனா, சகுனி வேலை செஞ்சி வெச்சிருக்கா..” என்று முணுமுணுத்தவள்,

“சரி நான் அப்புறம் கூப்பிடுறேன்..” என்று போனை வைத்தவள் சற்று தள்ளி நின்று கொண்டு தன் தாயிடம் போனில் கெஞ்சிக் கொண்டிருந்த மாறனை பார்த்ததும் சிரிப்பும் விரக்தியும் ஒருசேர வந்தது..

“இல்லமா.. கொஞ்சம் வேலை அதான் என்னால கூட போக முடியலை.. ட்ரிப்ஸ் போடுற அளவுக்கு இருக்கும்னு நானும் நினைக்கலை.. நார்மல் செக் அப் தான்னு நினைச்சிட்டேன்..”

“..”

“ஆமா என்னோட தப்பு தான்.. நான் இல்லைன்னு சொல்லலையே.. இனி இப்படி நடக்காம பார்த்துக்குறேன்..” குகாவைப் போலவே இவனும் தாயிடம் சொல்லிக் கொண்டிருந்தான்..

“..”

“சரி வாங்க.. நேர்ல பேசிக்கலாம்..” போனை அணைத்துவிட்டு மனைவியின் அருகில் வந்து அமர்ந்த மாறன், குகாவை தயக்கமாக ஏறிட்டான்..

அவளிடம் என்ன பேசுவது என்று அவனிற்கு தெரியவில்லை.. நேற்றிலிருந்து மாறனும் அவளிடம் சமாதானக் கொடியை பறக்க விட்டுக் கொண்டு தான் இருக்கிறான்.. குகாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. முதல் நாள் அவனை திட்டியவள் அதன் பின் வாயை திறந்து அவனுடன் பேசவும் இல்லை..

இப்படியே பார்த்துக் கொண்டே இருந்தால் வேலைக்கு ஆகாது என்று எண்ணியவன்,

“அம்மா நாளைக்கு வரேன்னு சொல்லிருக்காங்க.. உன்னோட பேசணும்னு சொன்னாங்க.. நீ அத்தை கிட்ட பேசிட்டு இருக்கேன்னு சொன்னேன்.. சரி நேர்ல பேசிக்கிறேன்னு சொல்லிட்டாங்க..” என அவளிடம் இருந்து “ம்” மட்டுமே பதிலாக வந்தது..

“குகா..” அவன் இழுக்க, என்ன என்பது போல் அவனை பார்த்தவளின் கைகளை பிடித்துக் கொண்டவன்

“நேத்து நான்.” என்று ஆரம்பித்தவன் பின் “சாரி” என்றான்..

“இதோட எத்தனை தடவை சாரி கேட்பீங்க.. விடுங்க.. உங்களுக்கே தெரியும் என்னால சண்டை போட்டா பேசாம இருக்க முடியாது.. அதுவும் உங்களோட..” என்று நிறுத்தியவள் “நானே கொஞ்ச நேரத்துல சரி ஆகிடுவேன்.. அப்புறம் பேசலாம்..” என்றவள் படுத்துக் கொண்டாள்..

இருவருக்குமே தூக்கம் வருவேனா என்று சண்டித்தனம் செய்தது.. முதல் நாள் நடந்த நிகழ்வுகளே கண்முன்னே வந்தது..

“இன்னைக்கு செக் அப் போகணும்.. ஈவ்னிங் மறக்காம வந்துடுங்க.” ஐந்து மாதம் ஆகியிருந்ததால் லேசாக மேடிட்ட வயிற்றில் பார்வையை பதித்துக்  கொண்டே கூறினாள் குகா..

“வந்துடுறேன்..” பைலை பார்த்துக் கொண்டே பதில் கூறினான் மாறன்..

“சரி சாப்பிட வாங்க.. டைம் ஆகிடுச்சி..”

“இல்லமா லேட் ஆகிடுச்சி.. நான் வெளிய பாத்துக்குறேன்.. நீ சாப்டு ரெஸ்ட் எடு.. பாய்..” மனைவியின் கன்னத்தில் தட்டி விட்டு ஷூவை அணிந்து கொண்டு அவன் வேகமாக புறப்பட்டான்..

அன்று குகாவிற்கு விடுமுறை என்பதால், கணவன் சென்றதும் வீட்டு வேலைகளை மெதுவாக செய்து கொண்டிருந்தாள்..

பத்து மணிக்கே எல்லாவற்றையும் முடித்தவள், ரோஹிணியுடனும் அகல்யாவுடனும் கான்பரன்ஸ் காலில் பேசிக் கொண்டிருந்தாள்.

“அகல் ஹாஸ்டல்ல தானே இருக்க.. இங்க வாயேன்.. நான் மட்டும் தனியா இருக்க போர் அடிக்குது..” பேசிக் கொண்டே குகா கூற,

“சரி லஞ்ச் முடிச்சிட்டு வரேன்..”

“இங்க வா. நான் சமைச்சிட்டேன் சேர்ந்து சாப்பிட்டுக்கலாம்..”

“சரி அப்போ நான் போய் குளிச்சிட்டு கிளம்புறேன்.. நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க..” என்றவள் தயாராக சென்றாள்..

“நினைச்ச நேரத்துக்கு நினைச்ச இடத்துக்கு போறதுக்கு எல்லாம் கொடுத்து வெச்சிருக்கணும்.” ரோகிணி பெருமூச்சு விட,

“அவளும் உன்னை மாதிரி மாமியார் வீட்டுக்கு போயிட்டா வர முடியாது.. இப்பவே என்ஜாய் செய்யட்டும் விடு..” – குகா

“உனக்கென்ன மாமியார் மாமனார் ஊர்ல இருக்காங்க.. தொல்லை இல்லாம ஜாலியா இருக்க.. என்னை மாதிரியா?”

“என் மாமியார் இங்க இருந்தாலும் என்னை தொல்லை பண்ண மாட்டாங்க.. வெறி நைஸ் மதர் இன் லா. யூ நோ..”

“ப்ச் போடி வயித்தெரிச்சலைக் கிளப்பாம..”

“எல்லாம் காதல் படுத்தும் பாடு.. உன்னை யாரு லவ் மேரேஜ் செஞ்சுக்க சொன்னா?” தோழியை குகா கிண்டல் செய்ய

“என் நேரம் தான்.. எலி பொரில வாலண்டியரா சிக்கிட்டேன்.. என்ன செய்ய..”

“ஹாஹா..”

மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தனர்.. அகல்யா ஒரு மணி நேரத்தில் குகாவின் வீட்டிற்கு வந்துவிட, அடுத்து இவர்களின் அரட்டை கச்சேரி ஆரம்பமானது..

“வெயிட் குறைஞ்சிட்டே போற மாதிரி இருக்க குகா.. ஒழுங்கா சாப்பிடுறியா இல்லையா?”

“மாறன் இப்பல்லாம் அடிக்கடி குக் பண்றதில்லை.. என் சமையல் தானே.. அதான் இப்படி ஆகிட்டேன்..”

“நல்லா மூணு வேளையும் அவரே செஞ்சி போட்டு உன்னை கெடுத்து வெச்சிட்டார்டி..” என்று தோழியிடம் குறைப்பட்டாலும், மாறனை நினைத்துப் பெருமையாக தான் இருந்தது..

“நீங்க எல்லாரும் இப்படி கண்ணு வெச்சு வெச்சு தான், அவர் இப்போ கிட்சன் பக்கமே வரதில்லை.. உன் கொள்ளிக் கண்ணை கொளுத்தணும்..”

பேசிக் கொண்டே உணவை முடித்துவிட்டு, ஒரு குட்டி தூக்கத்தையும் போட்டனர்.. ஐந்து  மணிபோல் எழுந்த அகல்யா,

“நான் கிளம்பட்டா டி.. ஹாஸ்பிடல் போகணும்னு சொன்ன.. அண்ணா இப்போ வந்துடுவாங்க தானே..” என்க

“அச்சோ நல்லா தூங்கிட்டோம்.. ஆறரைக்கு அபாய்ன்மென்ட்.. அஞ்சரைக்கு கிளம்பினா தான் சரியா இருக்கும்..” என்றவள் கணவனின் எண்ணுக்கு அழைக்க, அவனிடம் இருந்து பதிலே இல்லை..

இரண்டு மூன்று முறை முயன்றவளிற்கு எரிச்சல் தான் வந்தது..

“ப்ச்..” என்று போனை சோபாவில் தூக்கிப் போட்டவளைப் பார்த்த அகல்யா,

“என்னாச்சு.. போன் எடுக்கலையா.. எதாச்சும் பிசியா இருப்பாங்க.. நீ ரெடி ஆகு.. அதுக்குள்ள திரும்ப கூப்பிடுவாங்க..” என்றதும், அவளும் உடையை மாற்றி முகம் கழுவி வந்தாள்..

“காபி போடவா?” அகல்யா கேட்க

“இல்ல வேண்டாம்.. குடிக்கிற மூட் இல்ல.. வாமிட் வேற அப்பப்ப வருது..” என்றவள் மீண்டும் மாறனிற்கு அழைத்துப் பார்த்து ஏமாற்றத்துடன் சோபாவில் அமர்ந்தாள்.

“ஹே.. ஏன் இப்படி உட்காந்திருக்க.. கேஸ் விஷயமா அலையுறாங்கன்னு நீயே சொன்ன தானே.. டென்ஷன் ஆகாத..” என்றாள்.. ஐந்து நிமிடம் அமைதியாக இருந்த குகா,

“என்னோட ஹாஸ்பிடலுக்கு வரியா? நேத்தே போக வேண்டிய செக் அப்.. அவரால நேத்து வர முடியலைன்னு தான் இன்னைக்கு மாத்துனேன்.. இப்போ திரும்ப மாத்துனா, டாக்டர் எதாச்சும் சொல்லுவாங்களோன்னு இருக்கு..”

“சரிடி.. போலாம்..” என்ற அகல்யாவும், குகாவுடன் மருத்துவமனைக்குச் சென்றாள்..

அவளை பரிசோதித்த மருத்துவர், ஸ்கேன் செய்துவிட்டு வருமாறு கூறினார்..  

“உமட்டல் இன்னும் இருக்கா?” என்று கேட்டவாறே, ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்துக் கொண்டிருந்தார்..  

“ஆமா டாக்டர்.. சில சமயம் இருக்கு.. எப்ப வருமோன்னு பயந்துட்டே எல்லாத்தையும் சாப்பிடுறேன்..”

“தண்ணி சத்து ரொம்ப கம்மியா இருக்கு.. வாமிடிங் உங்களுக்கு இன்னும் இருக்கறதுனால, தண்ணி உள்ள ரொம்ப கம்மியா இருக்கு.. நீங்க சாப்பிடுறது புல்லா வெளியே வந்துடுது..” மேலும் சிறிது நேரம் ரிபோர்ட்டைப் பார்த்தவர்

“ட்ரிப்ஸ் போட்டுடலாம் குகா.. இப்படியே போச்சுனா ரொம்ப கஷ்டம்..” என

குகாவிற்கு சற்று பயமாகவே இருந்தது.. அகல்யாவிற்கும் அதே தான்.. பெரியவர்கள் யாரும் இல்லாமல் இவர்கள் இருவர் மட்டும் இருக்கும் இந்த நேரத்தில் ட்ரிப்ஸ் என்றதும் இருவருக்கும் கொஞ்சம் பயமாக தான் இருந்தது.. இவர்களின் முகத்தைப் பார்த்த மருத்துவர்,

“பயப்படுற அளவுக்கு ஒண்ணுமே இல்லை.. இப்போ முக்கால்வாசி பொண்ணுங்களுக்கு இந்த பிரச்சனை இருக்க தான் செய்யுது.. ட்ரிப்ஸ் போட்டு கொஞ்ச நேரத்துல கிளம்பிடலாம்..” என்றவர் நர்சை அழைத்து சொல்ல..

குகாவும் அகல்யாவும் அவருடன் சென்று ட்ரிப்சை போட்டுவிட்டு, மருத்துவரை மீண்டும் சந்தித்துவிட்டு மாத்திரைகளை வாங்கினர்..

“ஒழுங்கா தான் திண்ணு தொலையேன்டி.. எனக்கு ரொம்ப பயம் ஆகிடுச்சி..” வீட்டிற்கு வரும் வழியில் எல்லாம் அகல்யா, குகாவை அட்வைஸ் என்கிற பெயரில் கொன்று கொண்டிருந்தாள்..

வீட்டிற்கு வந்தபின்பும் “நைட் டின்னர் செஞ்சுவெச்சிட்டு ஹாஸ்டல் போறேன்” என்று கூறியவள் இட்லியும் சட்டினியும் செய்து விட்டு, குகாவை வலுக்கட்டாயமாக உண்ணவைத்தப் பின்பே புறப்பட்டாள்.

அது வரையிலுமே மாறனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.. அவனின் மேல் உள்ள கோபம் குகாவிற்கு கூடிக் கொண்டே சென்றது..

மாத்திரையின் விளைவில் தூக்கம் கண்ணை சுழற்றினாலும், மாறன் வந்ததும் அவனுடன் சண்டைப் போட வேண்டும் என்கிற நோக்கத்துடன், சோபாவிலேயே அமர்ந்திருந்தாள்..

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த மாறன், மனைவியை பார்த்துவிட்டு

“போச்சு.. செம கோபமா இருக்காப் போல. செத்தடா மாறா..” என்று புலம்பிக் கொண்டே அவள் அருகில் சென்றான்..

“சாரி குகா.. உன் கால்ஸ் எல்லாத்தையும் இப்போ தான் லிப்ட்ல வரும் போது பார்த்தேன்.. ஜட்ஜ் போன் பண்ணி வர சொல்லிருந்தார்.. அங்க போனதும் சைலன்ட்ல போட்டுட்டேன்.. அதான்.. சாரி..” என்றவன், மனைவி தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்து, அவள் கையை பிடிக்க,

“ஸ்… ஆ” என்றவள் கணவனின் கையில் இருந்து தனது கையை உருவிக் கொண்டாள்.. முகத்தை பார்த்துக் கொண்டே கையை பிடித்தவன், அவளின் சத்தத்தில் கையைப் பார்க்க, வென்ப்ளான் இருந்த இடத்தை, தான் சற்று பலமாக பிடித்தது அவனிற்கு அப்பொழுது தான் உணர்ந்தது..

“ஹே.. குகா.. என்னாச்சி.. ட்ரிப்ஸ் போடுற அளவுக்கு?” என்று அவன் பதற, அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு ஒன்றும் கூறாமல் அமர்ந்துக் கொண்டாள் குகா..

“உன்னை தான் கேட்குறேன்.. இந்த அளவுக்கு வீக்கா இருந்திருக்கியா?”

“..”

“எதாச்சும் சொல்லுறியா நீ? என்ன நினைச்சிட்டு இருக்க? தனியாவா போன? ரொம்ப முடியலையா?”

“இன்னைக்கு செக் அப் இருக்குன்னு, உங்ககிட்ட நான் சொல்லவே இல்லைல..” நக்கலாக அவள் கேட்க

“குகா.. எனக்கு..” என்று அவன் பதில் சொல்ல வருவதற்குள்

“உங்க கேஸ் விஷயமா அலைஞ்சிட்டு இருந்தீங்க அதானே.. லாஸ்ட் டைமும் இதே தான் சொன்னீங்க.. நேத்து போக வேண்டிய செக் அப்பை நீங்க வர முடியாதுன்னு தானே இன்னைக்கு மாத்துனேன்.. இன்னைக்கும் வர முடியாதுன்னு, ஒரு வார்த்தை கூட சொல்லாம உங்க வேலையை பார்க்க போயிட்டிங்க.. நான் லூசு மாதிரி நீங்க வருவீங்க வருவீங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” என்றவளின் குரல் உள்ளே சென்றது..

“குகா.. இல்லமா நான் உன்னை ஸ்ட்ரைட்டா ஹாஸ்பிடலுக்கு வர சொல்லிடலாம்னு போன் பண்ணனும் நினைச்சிட்டே தான் இருந்தேன்.. அதுக்கு நடுவுல ஜட்ஜ் கூப்பிட்டதும் சொல்ல மறந்துட்டேன்.. சைலன்ட்ல இருந்ததுனால நீ கால் பண்ணதையும் நான் கவனிக்கலை..”

“ஹெல் வித் யூர் கேஸ்..” என்றவள் உள்ளே செல்ல போக

“நான் வேணும்னு பண்ணல குகா.. அந்த கேஸ் தான்.. உனக்கும் உண்மையை ப்ரூவ் பண்ணனும்ல..”

“நான் உங்ககிட்ட கேட்டேனா ப்ரூவ் பண்ணுங்கன்னு? அன்னைக்கு சண்டைப் போட்டேன்.. நீங்க விவரம் சொன்னப் பின்னாடி புரிஞ்சிகிட்டேன் தானே.. உங்க கேஸ் ஜெயிக்கணும்னு அலையுறேன்னு சொல்லுங்க ஒத்துக்குறேன்.. சும்மா நான் சொன்னதுனால தான் இப்படி ப்ரூவ் பண்றேன் சொல்லாதிங்க..

இப்போ ப்ரூவ் செஞ்சி என்ன என்கிட்ட காட்ட நினைக்கிறீங்க? அதை எல்லாம் நான் எப்பவோ மறந்துட்டேன்.. நீங்க தான் இப்போ தேவையில்லாம இதை வெச்சு நமக்குள்ள சண்டையை உருவாக்குறீங்க.. என்ன சண்டை போட்டாலும் கொஞ்ச நேரத்துல நான் வந்து பேசிடுவேன்.. அந்த தைரியம் தானே உங்களுக்கு..

பத்து நிமிஷம் கோபமா கத்துவா, போய் கட்டிபிடிச்சு சமாதானம் செஞ்சிடலாம்ன்னு தானே நினைச்சிருப்பீங்க.. போன தடவையும் செக் அப்க்கு நீங்க வரலை. அத்தை இருந்ததுனால அவங்களோட போயிட்டேன்.. இப்போ தனியா இருக்காளே, என்ன பண்ணுவான்னு உங்களுக்கு தோணவே இல்லைல..

அவ்வளவு போன் பண்றேன்.. எதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்ல.. கேட்டா ஜட்ஜோட மீடிங்க்ன்னு சொல்றீங்க.. ஒரு வேலை எனக்கு முடியாம, ஏன் சாகுற நிலைமைல நான் போன் செஞ்சிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க.. தொல்லை ஒழிஞ்சதுன்னு சந்தோசமா இருந்திருப்பீங்க அப்படி தானே..”

அவள் கூறியதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த மாறன், அவள் கடைசியாக கூறியதை கேட்டதும்

“அரை வாங்கப் போற குகா நீ..” என்று கத்தினான்..

“சும்மா கத்த மட்டும் செய்ங்க.. உங்க அருகாமை வேணும்னு நினைக்கிறப்ப எல்லாம் என்னோட இருக்காதிங்க.. என்னோட பலவீனத்தை நீங்க நல்லா யூஸ் பண்ணுறீங்க..”

“ஹே என்ன குகா.. என்னை புரிஞ்சிக்கோ..” மாறன் எதுவோ சொல்லவர

“நான் உங்களைப் புரிஞ்சிக்கலையா மாறன்.. மனசை தொட்டு சொல்லுங்க.. ஒவ்வொரு நாளும் நீங்க லேட்டா வரும் போதும், எனக்கு கஷ்டமா இருந்தாலும் உங்களோட சண்டை போட்டிருக்கேனா? இருக்குற நேரத்துல சந்தோசமா இருப்போம், சும்மா ஆர்கியூ செஞ்சா டைம் தான் வேஸ்ட் ஆகும்ன்னு நான் அமைதியா விட்டுருவேன்.. அப்படி விட்டு விட்டு தான்  என்னோட ஸ்பென்ட் பண்ற டைம் குறைஞ்சிடுச்சு.. கேஸ் கேஸ்ன்னு அதையே கட்டிக்கிட்டு அழுங்க..” என்றவள் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்..

குகா கூறியதில் இருந்தே, தன்னுடைய அருகாமையை அவள் அதிகம் தேடியிருக்கிறாள் என்று உணர்ந்த மாறன், இனி இவ்வாறு இருக்கக் கூடாது என்று முடிவு செய்து மனைவியை நாடிச் சென்றான்..

குகாவோ அதற்குள் மருந்தின் வீரியத்தில் தூங்கியிருந்தாள்.. அடுத்த நாள் அவனிற்கு வேலை இருந்த போதும், மனைவியை சமாதானம் செய்வது தான் முக்கிய கடமை என்று எண்ணியவன், அவனுடைய நண்பன் ஹரிஷை அழைத்து சில வேலைகளை செய்ய சொல்லிவிட்டு, வீட்டிலேயே இருந்தான்..

பல முறை குகாவுடன் அவன் பேச முயற்சிக்க, பலன் என்னவோ பூஜ்யம்  தான்.. இரு வீட்டுப் பெரியவர்களுக்கும் அகல்யாவின் மூலம் குகாவின் உடல் நிலை தெரிந்திருக்க, நாளை மருமகளை பார்த்துக்கொள்ள சித்ரா வருவதாக கூறியிருந்தார்.. அவரிடமும் மாறனிற்கு நன்றாக வசவு கிடைத்தது..

‘போன்லையே அந்த திட்டு திட்டுனாங்க.. நேர்ல என்ன சொல்லப் போறாங்களோ..’ என்று எண்ணியவாறே மாறன் நித்திரைக்குச் சென்றான்..

 

 

Advertisement