Advertisement

காதல் செய்வேன் கட்டளைப்படி..

காதல் 10

அகல்யாவுடன் காபிடேரியாவில் அமர்ந்து கொண்டு ரோகிணியை போனில் அழைத்து ஸ்பீக்கரில் போட்டாள் குகப்ரியா.

“அகல், ரோகிணி” என்றாள் வெட்கத்துடன்

“என்னடி.. வெட்கம் எல்லாம் படுற?” ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே அகல்யா கேட்க

“வெட்கப்படுறாளா? நல்ல வேலை அந்த கன்றாவியைப் பார்க்க நான் அங்க இல்லை.” என்று ரோகிணி கூறிக் கொண்டிருக்கும் போதே

“நான் செக் செஞ்சிட்டேன்.. பாசிடிவ்” என்றவளின் குரலில் அவ்வளவு வெட்கம் இருந்தது..

“ஹே” இருவரும் ஒருசேர கத்தினர்..

“எருமை ஹார்ட்டி கங்கிராட்ஸ்டி.. சொல்லவே இல்லை நீ..” தோழியின் கையில் மெதுவாக அடித்தாள் அகல்யா..

“நேத்து தான் செக் பண்ணேன்.. நீ கவினோட வெளிய போறதா சொன்னியா.. அதான் கால் பண்ணலை.. உங்க ரெண்டுபேருக்கும் ஒரே டைம்ல சொல்லனும்னு தான் அவளுக்கும் கால் பண்ணலை..”

“கங்கிராட்ஸ்டி குகா.. எனக்கு இப்பவே உன்னைப் பார்க்கணும் போல இருக்கு..” ரோகிணியும் சந்தோசமாக வாழ்த்திவிட்டு கூற

“வீகென்ட மீட் பண்ணலாம்.. வீட்டுக்கு வாங்க..”

“உன் வீட்டுக்காரர் இருப்பார்.. வேற ப்ளேஸ் சொல்லு..” ரோகிணி வேகமாக மறுத்தாள்.

“அவர் உங்களை என்னடி செஞ்சார்.. இப்படி பயப்படுறீங்க? அவர் கேஸ் விஷயமா பயங்கர பிசி.. சண்டே கூட வீட்ல இருக்கிறது இல்ல.. நீங்க வாங்க..”

“சரி..” என்றவள் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

மதியம் கணவன் செய்த உணவினை நன்றாக உண்டாள் குகா..

“பாரேன் உனக்கு அவரே குக் செஞ்சிக் கொடுக்கிறார்.. கவினுக்கு காபி கூட போட தெரியாது.” அகல்யா கூற

“கவின் பாமிலியோட இருக்கார்.. இவர் பாச்சிலர் லைப் புள்ளா தனியா இருந்திருக்கார்.. செல்ப் குக்கிங் தான்.. என் மாமியார் இவரோட இருந்திருந்தா இவருக்கும் சுடு தண்ணி கூட வைக்கத் தெரிஞ்சிருக்காது..”

“புளிக்குழம்பு சூப்பர்.. நான் சொன்னேன்னு சொல்லிடு..”

“சும்மாவே மனுஷனை கையில பிடிக்க முடியாது.. இதுல இதை நான் சொன்னேன்.. என் சமையலை ரொம்ப ஓட்டுவார்..”

“நீ வைக்கிற சாம்பார், புளிக்குழம்பு, வத்தக்குழம்பு எல்லாமே ஒரே மாதிரி தான் இருக்கும்.” அகல்யா சிரிப்புடன் கூற

“போடி.. அது ஆரம்பத்துல.. இப்போ எல்லாம் நல்லா தான் இருக்கு.. ரோகிணியோட ட்ரிக்க பாலோ செஞ்சதுல இருந்து டேஸ்டா தான் இருக்கு..”

திருமணம் ஆனப் புதிதில் குகா வைக்கும் சாம்பார், குழம்பு எல்லாம் ஒரே போல் இருக்கும்.. பார்க்க கலர்புல்லாக இருந்தாலும் வாயில் வைத்தால் உடனே துப்பிவிடலாம் அந்த அளவிற்கு கொடூரம் தான்.. தோழிகளிடம் அவள் சொல்லி வருத்தப்பட, ரோகிணி

“என் மாமியார் சொல்லுவாங்க, சாமி பாட்டு இல்ல ஸ்லோகம் சொல்லிகிட்டோ இல்லை காதுல கேட்டுகிட்டோ சமையல் செஞ்சா, சாப்பாடு டேஸ்ட்டா இருக்குமாம்.. காலைல சுப்ரபாதத்தைப் போட்டுகிட்டு தான் நான் குக் பண்றேன்.. நீயும் இதை ட்ரை பண்ணேன்..” என்றாள்

ஆரம்பத்தில் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தவள், கணவன் அடிக்கடி அவள் சமையலை உண்டுவிட்டு கிண்டல் செய்யும் போது ரோகிணி கூறியதை முயற்சி செய்துப் பார்ப்போம் என்று ஒரு நாள் கந்த சஷ்டியைப் போட்டுக்கொண்டே சாம்பார் செய்தாள்.. அது நன்றாக வரவே தினமும் இதையே தொடர ஆரம்பித்தாள்.. அதை தான் ரோகிணியின் ட்ரிக் என்று இப்பொழுது அகல்யாவிடம் கூறினாள்.

“அவரை மீட் பண்ணப் போகும் போது ரோகிணி உன்னை லூஸ் ஹேர்ல போகாதேன்னு சொன்னா.. அதை எல்லாம் கேட்டியா? அப்போ என்ன சொன்ன இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லைன்னு. இப்போ மட்டும் என்னவாம்?”

“அப்போ நம்பிக்கை இல்லை. இப்போ வந்துடுச்சி.. நிஜமா கந்த சஷ்டியை சொல்லிகிட்டே கிட்சன்ல வேலை செய்யும் போது அலுப்பாவே இல்லை தெரியுமா? மனசுக்கும் இதமா இருக்கு.. கடவுள் நம்பிக்கை இப்போ எல்லாம் கொஞ்சம் வந்துடுச்சி..”

“குடும்ப இஸ்திரி ஆனாலே இப்படி தான் போல.. நாத்தீகம் பேசுனவ எல்லாம் ஆத்திகவாதி ஆகிட்டாள்.”

இருவரும் மாலை வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்..

“கேப் புக் பண்ணனும்.. மார்னிங் அவர் தான் கூடிட்டு வந்தார்.. நீயும் வா ஒரே கேப்ல போகிடலாம்..” குகா அகல்யாவிடம் கூற

“த்ரெட்டிங் பண்ணணும்டி. ரொம்ப நாள் ஆச்சு..”

“நானும் பண்ணனும்..”

“லூசு.. கன்சீவா இருக்கும் போது த்ரெட்டிங் பண்ணக் கூடாது..” முறைப்புடன் கூறினாள் அகல்யா..

“அப்படியா? ஏன்?”

“ஐ ப்ரோஸ் கிட்ட இருக்க நரம்பு ஒன்னு யூடிரசோட கனெக்ட் ஆகுது.. அண்ட் இந்த மாதிரி டைம்ல ஸ்கின் ரொம்ப சாப்டா இருக்குமாம்.. த்ரெட்டிங் செய்யும் போது ஈசியா தோல் கிழிய வாய்ப்பு இருக்கு.. புது ட்ரெஸ் போடக் கூடாது.. இப்படி நிறைய இருக்கு.. நார்மலாவே கேர்ள்ஸ் த்ரெட் பண்ணக் கூடாது. அது கர்ப்பபையை affect செய்யும்னு fbல படிச்சேன்..”

“ஹே பயமுறுத்தாதேடி..” என்றவளின் குரலில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.

“உனக்கு பயம் காட்டணும்னு சொல்லலை லூசு.. தெரிஞ்சிக்கோ..”

“நான் வீட்டுக்கு போறேன்.. நீ பியூட்டி பார்லர் போ..” என்றவள் கேபில் வீட்டிற்கு சென்றாள்.

அன்றும் வெகு நேரம் ஆன பின்பே வீட்டிற்கு வந்த மாறன் தன்னிடம் இருந்த சாவிக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே நுழைய, சோபாவில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்துவிட்டு

“இன்னும் தூங்கலையா நீ? மணி ஆச்சு..”

“முதல்ல சாப்பிடுங்க.. அப்புறம் பேசலாம்..” என்றவள் அவனை உண்ண வைத்த பின்பே விட்டாள்.

“சரி சொல்லு ஏன் தூங்கலை?”

“சும்மா உங்களோட பேசணும்னு தான்..”

“அதுக்காக இவ்வளவு நேரம் முழிச்சிருப்பியா?”

“இன்னைக்கு இப்படி பண்ணா தான், இனிமே பொண்டாட்டி தூங்காம நமக்காக வெயிட் பண்ணுவான்னு சீக்கிரம் வருவ.”

“சான்சே இல்ல.. வெளியே இருக்கும் போது எனக்கு என் கேஸ், லா பாய்ண்ட்ஸ் மட்டும் தான் நியாபகம் இருக்கும்.. வேற எதுவும் என் மைண்ட்ல ஓடாது..”

“நான் கூடாவா?” பாவமாக அவள் கேட்க

“ஆமா நீ பெரிய லங்கோடு.. போடி..”

“ச்சீ பே..”

                                          ***************

“ஐயோ.. உன்னை வெச்சிக்கிட்டு என்ன தான்டி செய்யுறது.. வர கோபத்துக்கு..” அருகில் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்த குகாவை முறைத்தவண்ணம் மாறன் திட்டிக் கொண்டிருந்தான்..

“நீங்க சொன்ன டப்பால இருந்து தான் அரிசியை ஊறப் போட்டேன்.. சும்மா என்னை திட்டுறீங்க. ஒரே கலர்ல ரெண்டு பாக்ஸ் இருந்தா, அதுக்கு நான் என்ன பண்ணுவேன்..”

“இந்த வீட்டுல நாலு மாசமா குப்பை கொட்டுற, எந்த டப்பால என்ன இருக்குன்னு உனக்கு தெரியாதா?”

“தப்பை உங்க மேல வெச்சிட்டு என்னை திட்டாதிங்க.. நானும் கிளம்புற அவசரத்துல கவனிக்கல..”

“பாஸ்மதி அரிசிக்கும் இட்லி அரிசிக்கும் வித்தியாசம் தெரியல.. இதுல வாய் மட்டும் கிழியுது.. உன்னை என் தலையில கட்டி வெச்ச சித்ராவை சொல்லணும்.. நாளைக்கு வரட்டும் இருக்கு அவங்களுக்கு..” என்று புலம்பிக் கொண்டே மனைவி இட்லி அரிசிக்கு பதிலாக ஊற வைத்திருந்த பாஸ்மதி அரிசியில் இருவருக்கும் தக்காளி சாதத்தை செய்துக் கொண்டிருந்தான்.

காலையில் மாறன் வெளியே செல்லும்முன் மனைவியிடம் இட்லிக்கு அரிசியை ஊறப் போடும்படி கூறியிருந்தான்.. குகாவிற்கு எப்பொழுதுமே இட்லி அரிசியை கண்டுபிடிப்பது சிரமமான விஷயம்.. அடிக்கடி ஒவ்வொரு டப்பாவாக எடுத்து வந்து கணவனிடம் கேட்டுக் கொண்டே இருப்பாள்..

இந்த முறையும் அவள், அவன் வெளியே கிளம்பும் அவசரத்தில்

“இருங்க எந்த அரிசின்னு சொல்லிட்டு போங்க” என்று அடுப்படியை நோக்கி நகர

“பச்சை டப்பால இருக்க அரிசி தான் குகா.. எத்தனை தடவை இதையே கேட்பியோ.. எனக்கு நேரம் ஆச்சு, கிளம்புறேன்..” என்றவன் வேகமாக வீட்டில் இருந்து புறப்பட்டான்..

அங்கே பச்சை கலரில் இரண்டு டப்பாக்கள் இருந்ததை கவனிக்காமல், அவள் கண்ணுக்கு முதலில் தெரிந்த டப்பாவில் இருந்த பாஸ்மதி அரிசியை வெளியே கிளம்பும் அவசரத்தில் ஊற வைத்துவிட்டாள்..

மாலை வேலை முடித்து வந்தவன், க்ரைண்டரை போடும் போது தான் இதைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தான்..  

“வேடிக்கை பார்க்காம, இட்லி அரிசியை இப்பயாச்சும் கரெக்ட்டா எடுத்து ஊற போடு..”

“சரி” என்றவள் கணவனை திட்டிக் கொண்டே அவன் சொன்னதை செய்தாள்.

“ஐயோ என்னங்க சாதம் என்னவோ போல இருக்கு..” ஒரு வாய் உணவை வாயில் வைத்த குகா, கணவனிடம் கூற

“பின்ன, எட்டு மணி நேரம் தண்ணில இருந்த பாஸ்மதி அரிசில செஞ்சா உனக்கு வேற எப்படி இருக்கும்.. அதை அப்படியே தூக்கியா போட முடியும்.. பேசாம சாப்பிடு இல்லை கொன்னுடுவேன்..” என்று மிரட்டியவன் அவள் முழுவதையும் உண்ட பின்பே விட்டான்..

“நாளைக்கு காலைல தான் இனி மாவாட்டணும்.. அம்மா வரதுக்குள்ள செய்யணும்.. சீக்கிரம் எழுந்துக்கணும். அலாரம் வெச்சிடு..” டின்னரை முடித்துவிட்டு மனைவியிடம் கூறினான் மாறன்.

காலையில் அவன் கிரைண்டரில் வேலையாக இருக்க, குகா ப்ரேக் பாஸ்ட் செய்துக் கொண்டிருந்தாள்..

“ஸ்டேஷன் போய் ரெண்டு பேரையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல..”

“அவங்களுக்கு என்ன சென்னை புதுசா? அதுவும் இல்லாம, எங்கப்பா ஒரு போலிஸ் ஆபிசர்.. அவருக்கு தனியா வர தெரியாதா?”

“நான் என்ன சொன்னாலும் அதுக்கு மறுத்து எதாச்சும் உங்களுக்கு சொல்லணும்..”

இருவரும் வார்த்தைக்கு வார்த்தை பேசிக் கொண்டே வேலையை முடிக்கவும், சித்ராவும் சுதாகரனும் வீட்டிற்குள் வரவும் சரியாக இருந்தது..

“வாங்க அத்தை.. வாங்க மாமா..” முகம் மலர இருவரையும் குகா வரவேற்றாள்..

“எப்படிமா இருக்க?”

“நல்லா இருக்கேன் அத்தை.. காபி போடுறேன் இருங்க..” என்று அவள் கிச்சனிற்குள் செல்லப் போக,

“ட்ரைன்லயே குடிச்சிட்டோம்.. நீ உட்கார்..” என்று அவர் மருமகளை அமர சொல்ல

“அம்மா குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு நிதானமா உட்கார்ந்து பேசுங்க..”  மாறன் பெற்றோரை விரட்டி, காலை உணவை உண்ட பின்பே பேச விட்டான்.. பின்பு மாமியாரும் மருமகளும் கிச்சனை கிளீன் செய்து கொண்டிருந்தனர்..

சிங்கில் மாறன் போட்டிருந்த கிரைண்டர் கல்லை குகா கழுவிக் கொண்டிருக்க, இதை பார்த்த சித்ரா

“என்னமா இதையெல்லாம் நீ ஏன் செய்யுற? இந்த மாதிரி நேரத்தில்  வெயிட் தூக்கக் கூடாதுன்னு உனக்கு தெரியாதா? என்ன பண்றான் அவன்.. மாறா..” மருமகளிடம் ஆரம்பித்தவர் மகனை அழைத்துக் கொண்டே ஹாலிற்கு வந்தார்..

“என்னமா?” தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த மாறன் தாயின் அழைப்பில் அவரை நிமிர்ந்து பார்த்துக் கேட்க

“புள்ளத்தாச்சி பொண்ண, கிரைண்டர் கல்லை கழுவ விட்டுட்டு இருக்க.. உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? எருமை மாதிரி வளர்ந்திருக்க அவளுக்கு இதுல எல்லாம் உதவி செய்யலாம்ல.. வெட்டியா தானே இருக்க..” அவர் மகனை கடிய

“இல்லமா நீங்க கிச்சன் உள்ள போனீங்கன்னு தான் நான் இங்க இருந்தேன்..”

“இப்போ நான் இருக்கேன் செய்யுறேன். இதுக்கு முன்னாடி குகா தானே இதெல்லாம் செஞ்சிருப்பா..”

“இல்லத்தை.. அவர் ஹெல்ப்” என்று குகா கூறுவதை காதிலே வாங்காமல்

“நீ சும்மா உன் புருஷனுக்கு சப்போர்ட் பண்ணாதே..” மருமகளை கடிந்தவர், மகனிடம்  

“இனி அவளை மாவாட்டவோ கிரைண்டர் கல்லை கழுவவோ சொன்ன, கொன்னுடுவேன் ராஸ்கல்.. கல்யாணத்துக்கு முன்ன நீ தான இதெல்லாம் செஞ்ச, இனிமேலும் நீயே செய்.. பொண்ணுங்க கல்யாணம் ஆகி வந்ததும் உங்களுக்கு வீட்டு வேலை செய்யணுமா?” என்றார்..

மாமியார் கூறியதைக் கேட்ட குகா, சிரிப்பை அடக்கப் பெரும்பாடு பட்டாள். இதைப் பார்த்த மாறன் மனைவியை முறைக்க

“என்னடா முறைக்கிற? ஆம்பளை திமிரா உனக்கு.. வீட்டு வேலை செஞ்சா குறைஞ்சிடுவியா?”

“ஐயோ அத்தை.. அவர் அப்படி எல்லாம் இல்லை.. எனக்கு ஹெல்ப் பண்ணுவார் தினமும்..”

“உன்னை அவனுக்கு சப்போர்ட்டுக்கு வராதேன்னு சொன்னேன்.. போ போய் ரெஸ்ட் எடு..”

“இல்ல..”

“போ ரூமுக்கு..” என்று மருமகளை அறைக்கு அனுப்பியவர், மறுபடியும் மகனிற்கு அறிவுரை வழங்கிய பின்னரே விட்டார்..

அவன் அறைக்குள் நுழைந்ததும், குகா அவனைப் பார்த்து சிரிக்க

“சிரிக்காதடி..” என்று அவன் பல்லை கடித்துக் கொண்டு கூறினான்..

“என்னால முடியலை மாறன்.. ஹாஹா” என்று சத்தமாக சிரிக்க, அவள் அருகில் வந்தவன், அவள் கையைக் கிள்ளி விட்டான்..

“ஆ.. எருமை வலிக்குது..”

“வலிக்கட்டும்.. அங்கே அம்மா என்னை அவ்வளவு திட்டுறாங்க. நீ இங்க சிரிச்சிட்டு உக்காந்திருக்க.. உனக்கு நான் ஹெல்பே பண்றதில்லையாம்.. இதெல்லாம் எவ்வளவு அநியாயம்.. நீ தான்டி எனக்கு ஹெல்ப் பண்றதில்லை.. மூணு வேலையும் நானே உனக்கு சமைச்சி கொடுக்குறேன்.. ஆனா எனக்கு வந்த அவப் பெயரை பாரேன்.. ஆம்பளை திமிர்.. மேல் சாவனிஸ்ட்..” அவன் கூற கூற குகா மேலும் சிரித்துக் கொண்டே இருந்தாள்..

“அடியே..”

“நான் என்ன பண்ண. சிரிப்பு வருதே.. நானும் அத்தைகிட்ட சொல்ல தான் பார்த்தேன்.. அவங்க தான் நம்பவே மாட்டுறாங்க.. அவ்வளவு நம்பிக்கை பிள்ளை மேல..”

“எல்லாம் என் நேரம்.. எல்லாம் செஞ்சும் இந்த பேர்.. கொடுமை..”

அவன் அருகில் சென்று அமர்ந்து அவன் தோளில் சாய்ந்த குகா,

“நேத்து நீங்க செஞ்ச லஞ்சை சாப்டுட்டு அகல் எப்படி பாராட்டுனா தெரியுமா? எனக்கு சந்தோசமா இருந்தது..”

“உனக்கு ஏன்மா சந்தோசமா இருக்காது.. எல்லாம் இருக்கும்..”

“போடாங்க.. உன்கிட்ட போய் சொன்னேன் பாரு..”

இப்படியே ஒரு வாரம் மாமியாரின் சமையலிலும், மாமியார் கணவனைத் திட்டுவதைப் பார்த்து சிரிப்பதுமாய் குகாவிற்கு நன்றாகவே பொழுது போனது.. சித்ரா ஊருக்கு சென்றப் பின்பு மறுமடியும் மாறனின் சமையலை நன்றாக மூக்குப் பிடிக்க சாப்பிட்டு கொண்டிருந்தாள்..

சீதாவிற்கும் மகளை சென்று பார்க்க வேண்டும் என்கிற ஆவல் இருக்க, பண்டிகை காலம் என்பதால் ராஜனால் கடையை விட்டு வர முடியாமல் போனது.. பதினைந்து நாட்கள் கழித்து மகளை பார்க்க வருவதாக கூறியிருந்தார்.. சித்ரா மகளை நன்றாகப் பார்த்துக் கொண்டதாக குகா கூறியதும் சீதாவிற்கு சற்று ஆறுதலாக இருந்தது..

நன்றாக சென்ற அவர்களின் வாழ்க்கையில் புயல் வீசுவதை போல் அந்த சம்பவம் நடந்தது..

அன்று தோழிகளுடன் வெளியே சென்றிருந்தாள் குகா. முதல் வாரம் மாமியார் ஊரில் இருந்து வந்ததால் தோழிகள் இருவரும் குகாவின் வீட்டிற்கு வரவில்லை.. இந்த வாரம் ட்ரீட் தரும்படி கேட்டுக் கொண்டே இருந்தனர்.. மாறனும் வீட்டில் அதிக நேரம் இல்லாததால் வீட்டில் இருக்க போர் அடிக்க தோழிகளுடன் வெளியே வந்திருந்தாள்.. சிறு ஷாப்பிங் முடித்துவிட்டு ஹோட்டலிற்கு சென்றனர்.. அங்கே அவர்களது கல்லூரியில் உடன் பயின்ற ஒருவனை சந்தித்தனர்.. மூவரும் அவனை பார்த்ததும் ஒரு சில வார்த்தைகள் அவனுடன் பேசிக் கொண்டிருந்தனர்..

“குகா நானே உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன்.. fbல மெசேஜ் செய்வோம்னு இருந்தேன்.. நேர்ல பார்த்துட்டேன்..”

“சொல்லு என்ன விஷயம்?”

“வினோத் தெரியும்ல நம்மளோட படிச்சானே?” அவர்களுடன் படித்த ஒருவனின் பெயரைச் சொல்லி கேட்க

“ம் தெரியும்..” குகாவும் பதில் கூறினாள்

“அவங்க அண்ணாவோட கேசை உன் ஹஸ்பண்ட் தான் ஹேன்டில் பண்றார்..”

“என்ன?” அவள் புரியாமல் விழித்தாள்.

“கொஞ்சம் தனியா பேசுவோமா குகா?” அகல்யா ரோகிணி இருவரையும் பார்த்துக் கொண்டே தயக்கத்துடன் அவன் கூற, குகாவும் சரி என்று வேறு ஒரு மேஜையில் அவனுடன் அமர்ந்துக் கொண்டாள்.

“நம்ம காலேஜ் படிக்கும் போது வினோத்தோட அண்ணா கதிருக்கு மேரேஜ் ஆச்சு நியாபகம் இருக்கா? அவன் கூட நம்ம எல்லாரையும் இன்வைட் பண்ணானே?”

“ம் நியாபகம் இருக்கு.. இப்போ என்ன ப்ராப்ளம்?”

“கதிர் அண்ணாவோட வைப் டிவோர்ஸ் கேட்டு உன் ஹஸ்பண்ட் மூலமா நோட்டிஸ் அனுப்பிருக்காங்க..”

“என்னாச்சி? அவங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை?”

“அஸ்யூசுவல் எல்லா பொண்ணுங்க மாதிரியும் அவங்களும், உங்க அம்மா தம்பியை விட்டுட்டு தனிக் குடித்தனம் போகலாம்னு சொல்லிருக்காங்க.. முதல்ல அதுல ஆரம்பிச்ச பிரச்சனை.. அப்புறம் பேசி பேசி பெருசாகிடுச்சி. . கோவத்துல அவர் மனைவியை  அடிச்சிட்டார்.. அவங்களும் கோச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க.. அவங்க அம்மா வீட்லையாச்சும் பொண்ணுக்கு புத்திமதி சொல்லி அனுப்பிருக்கலாம்.. அவங்க இன்னும் கொஞ்சம் பேசி வினோத் அண்ணியோட கோபத்தை ஏத்தி விட்டுட்டாங்க. இப்போ டிவோர்ஸ் வரைக்கும் வந்துடுச்சி.”

“இதுல நான் என்ன பண்ண முடியும்?”

“உன் ஹஸ்பண்ட் டிவோர்ஸ் வாங்கிக் கொடுத்தா கூட பரவாயில்லை.. அந்த அண்ணாவை gayனும், இதை மறச்சு கல்யாணம் செஞ்சுட்டார்ன்னும் சொல்லி கேஸ் பைல் செஞ்சிருக்காங்க.. அவன் என்கிட்ட சொல்லி பீல் பண்ணான்.. அப்போ தான் யார் லாயர்ன்னு பேசும்போது உன் ஹஸ்பண்ட் நேம் சொன்னான்.. உன் கல்யாண போட்டோஸ் fbல பார்த்திருக்கேன். அதான் அவன் சொன்னதும் உன் வீட்டுகாரர் தான் அதுன்னு எனக்கு புரிஞ்சிது..

வக்கீல் எல்லாரும் இப்படி பொய் சொன்னா எப்படி குகா? கொடுமை செய்றார், அடிச்சார் இப்படி சொல்லி விவாகரத்து கேட்டிருந்தா கூட ஒத்துக்கலாம்.. இப்படி சொன்னதுல வெளிய அவங்க பேமிலியால தலைக் காட்ட முடியலை.. வினோத்தோட அம்மாக்கு பையனோட வாழ்க்கை போச்சேன்னு கவலைல்ல ஸ்ட்ரோக் வந்துடுச்சி.. இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் உன் புருஷன் தான்..”

குகாவிற்கு இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.. பலமுறை கணவனிடம் சொல்லியிருக்கிறாள்.. அவன் நியாயமாக வாதாட வேண்டும் என்று.. அப்பொழுது எல்லாம் அவன் கேட்டதே இல்லை.. அவனால் தான் பாதிக்க பட்டதாக இதுவரை அவளிடம் யாரும் கூறியதில்லை.. இப்பொழுது கணவன் கூறிய பொய்யினால் ஒருவருக்கு பக்கவாதம் வந்துவிட்டதாக அறிந்ததும், அவளிற்கு உள்ளே என்னவோ செய்தது..

இதுபோல் எத்தனை குடும்பம் அவமானப் பட்டிருக்குமோ. அனைத்துக்கும் தன் கணவன் தானே காரணம்.. எத்தனை பேர் இவன் நன்றாக இருக்கக் கூடாது என்று சாபம் விட்டிருப்பார்களோ.. என்று நினைக்க நினைக்க அவளிற்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.. மேஜையில் இருந்த தண்ணீரைக் குடித்து தன்னை சமன் செய்தாள்.

“வினோத் சைட் லாயர் இன்னொரு ஹியரிங் கேட்டிருக்கார்.. நீ கொஞ்சம் உன் ஹஸ்பண்ட் கிட்ட பேசி வேற எதாச்சும் ரீசன் சொல்லி விவாகரத்து வாங்கிக் கொடுக்க சொல்லேன்.”

“ம் நான் பேசுறேன்..” என்றவள் அங்கிருந்து தோழிகள் இருக்குமிடத்திற்கு சென்றாள்.

அவள் முகம் சரியில்லாமல் இருப்பதைக் கண்ட அகல்யா

“என்ன குகா? பேஸ் என்னவோ போல இருக்கு?” என்று கேட்க

“கொஞ்சம் டயர்டா இருக்கு.. வீட்டுக்கு போகலாமா?” என்றாள்

அவர்களும் சரி என்று கூறி அவளை வீட்டில் விட்டார்கள்..

வீட்டிற்கு வந்தவளுக்கு கணவனிடம் இதைப் பற்றி பேசி புரிய வைக்க முடியுமா? என்ற கேள்வியே பூதாகரமாக இருந்தது..

பல முறை சொல்லியும் அவன் கேட்டதில்லை.. இந்த முறை மட்டும் அவன் கேட்பானா?

‘எந்த வக்கீல் பொய் சொல்லாம இருக்கான்?’ என்பான்..

ஒரு குடும்பத்தைக் குலைத்துவிட்டு அதில் வரும் காசில் தன்னுடைய குடும்பத்தை நடத்துகிறோமே என்கிற குற்றவுணர்வு சிறிதும் இன்றி அவன் இருக்கிறான்..

இந்த முறை அவனை அவள் விடுவதாக இல்லை.. வேறு ஒரு காரணம் சொல்லி விவாகரத்து வாங்கிக் கொடுத்திருக்கலாமே.. வினோத்தின் அண்ணனின் பேரையே அசிங்கப் படுத்திவிட்டானே.. ஓர் இன சேர்க்கையாளன் என்று கூறியப்பின், அவனை வேலை செய்யும் இடத்தில் எவ்வளவு கேவலமாக பார்த்திருப்பார்கள்.

அந்த பெண் எவ்வளவு கொடூரமானவளாக இருந்தால் தாலி கட்டி குடும்பம் நடத்திய கணவனை அனைவர் முன்பும் இப்படி அசிங்கப்படுத்தியிருப்பாள்.

அந்த பெண்ணிற்காக வக்காலத்து வாங்கும் கணவனை என்ன செய்வது?

பேசி புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவள் இருக்க, அதன் விளைவு என்ன ஆகப் போகிறதோ?

Advertisement