Advertisement

காதல் செய்வேன் கட்டளைப்படி

காதல் 12

நான்கு நாட்களாக இருவரும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.. இருவருக்குமே ஒருவருடன் ஒருவர் பேச வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும், பேசி மேலும் சண்டையை இழுத்து வைக்க வேண்டாம் என்று அமைதிக் காத்தனர்..

பேசினால் தீராதப் பிரச்சனைகளும் உண்டோ? இவர்கள் என்னவென்றால் பேசினால் தான் பிரச்சனை பெரிதாகும் என்று வாயை மூடிக் கொண்டிருந்தனர்..

சீதாவும் ராஜனும் ஊரில் இருந்து வந்த அன்று குகாவிற்கு ஆபிஸ் செல்ல வேண்டிய கட்டாயம்.. முன்பே தாயிடம் கூறியிருந்தாள்..

“நீங்க வர அன்னைக்கு, என்னால லீவ் போட முடியாது மா.. ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு.. ஈவ்னிங் சீக்கிரம் வந்துடுவேன்..” என்று..

கூறியது போலவே அன்று மாலை ஐந்து மணிக்கு வந்தவள் தாயுடனும் தந்தையுடனும் பேசிக் கொண்டிருந்தாள்..

“மாப்பிள்ளை எத்தனை மணிக்கு மா வருவார்?” ராஜனின் கேள்விக்கு

“தெரியலை ப்பா.. எப்பவும் எட்டு மணிக்குள்ள வந்திடுவார்.. வேலை இருந்தா லேட் ஆகும்..”

“ஓ அப்போ நான் கிளம்புரதுகுள்ள வந்துட்டா பரவாயில்லை..”

“ஏன் ப்பா, இன்னைக்கே கிளம்பணுமா? ரெண்டு நாள் இருக்க மாதிரி வந்திருக்கலாம்ல..”

“தம்பி மட்டும் அங்க தனியா இருக்கான் மா.. செமெஸ்டர் வேற நடக்குதுல அதான்.. அம்மாவ ஒரு வாரம் இருக்க சொல்லிருக்கேன் தம்பிக்கு எக்ஸாம் முடிஞ்சதும் அவனைக் கூட்டிட்டு வரேன்.. அப்போ ரெண்டு நாள் இருக்கேன்.”

மாறனும் அன்று மாமனார் மாமியார் வந்திருப்பதால், வீட்டிற்கு நேரமே வந்துவிட்டான்.. வந்தவனும் மனைவியைப் போலவே ராஜனை இரண்டு நாட்கள் தங்கி விட்டு செல்லச் சொல்ல, அடுத்த வாரம் வருவதாக கூறிச் சென்றார்..

மாறன் அவரை ஸ்டேஷனில் சென்று ரயில் ஏற்றிவிட்டு வந்தான்.. அவன் வருமுன்னே குகா, தாயுடன் பேசிக் கொண்டே உறங்கியிருந்தாள்.. மகளுடன் இருந்த சீதா, மருமகன் வந்ததும் அறையினிலிருந்து வெளியே செல்ல போக

“நீங்க இருங்கத்தை.. ட்ரெஸ் எடுக்க வந்தேன்.. நான் அந்த ரூம்ல படுத்துக்குறேன்..”

“இல்ல மாப்பிள்ளை நான் அங்க போறேன்..”

“இருக்கட்டும் அத்தை..” என்றவன் மாற்றுடையை எடுத்துக் கொண்டு சென்றான்..

காலையில் சீதாவே எழுந்து உணவை தயாரித்துக் கொண்டிருந்தார்..

“என்னத்தை நீங்க.. நான் வருவேன்ல.. அதுக்குள்ள சமைக்க ஆரம்பிச்சிட்டிங்க” அப்பொழுது தான் தூங்கி எழுந்து வந்த மாறன் கூற

“நேத்தே நீங்க தான் செஞ்சீங்க.. அவ நல்லா தூங்கிட்டு இருக்கா.. நான் இல்லாட்டி நீங்க தானே செஞ்சிருப்பிங்க.. ஒரு வாரம் நானே செய்யுறேன் மாப்பிள்ளை..”  

“சரி” என்றவன் அவர் என்ன மறுத்தும் கேளாமல் சின்ன சின்ன உதவிகளை செய்துக் கொண்டிருந்தான்.. திடீரென்று கேட்ட சிரிப்பொலியில் இருவரும் பின் திரும்பி பார்க்க, குகா சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தாள்.

“எதுக்குடி சிரிக்கிற?” சீதா புரியாமல் மகளிடம் கேட்க,

“ஹாஹா” என்று இப்பொழுது இன்னும் சத்தமாக சிரித்தாள்..

“ப்ச்.. குகா.. எதுக்கு சிரிக்கிறன்னு சொல்லிட்டு சிரி..” என்றதும் கணவனை ஒரு முறை பார்த்து நன்றாக சிரித்துவிட்டு  

“நீங்க ரெண்டு பேரும் சமைக்கிறதைப் பார்த்ததும்..” என்றவள் நிறுத்தி மீண்டும் சிரிக்க

“குகா..” என்று மாறன் சத்தமாக அழைக்க

“ப்ச் இருங்க.. சொல்லி முடிச்சிடுறேன்..” என்றவள் சிரிப்பை அடக்கிக் கொண்டு “vip படத்துல தனுஷும், அமலா பால் அம்மாவும் சேர்ந்து பாத்திரம் எல்லாம் கழுவுவாங்களே, அந்த நியாபகம் வந்துடுச்சி.. ரெண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து சீரியல் பார்க்காதது மட்டும் தான் பாக்கி..”

“குகா..” என்று சீதா மகளை முறைக்க

“முறைக்காதிங்க ம்மா.. நிஜமா நான் கிச்சன் உள்ள எண்ட்டர் ஆகும் போது எனக்கு அதான் நியாபகம் வந்தது..”

“எழுந்து சமைக்காம தூங்கிட்டு நக்கல் பண்றியா நீ? போ போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா..” என்று மகளை விரட்டியவர் மருமகனிடம்

“தப்பா எடுத்துக்காதிங்க மாப்பிள்ளை.. அவ ஏதோ விளையாட்டுத்தனமா பேசுறா..” என்றார்..

“அச்சோ அத்தை அவளைப் பத்தி எனக்கு தெரியாதா? இதை விட கேவலாமவே நாங்க ரெண்டு பேரும் கலாய்ச்சி பேசிருக்கோம்.. இதுக்கு போய் நீங்க இவ்வளவு விளக்கம் கொடுக்குறீங்க.. குகாக்கு என் மேல இல்லாத உரிமையா?”

மருமகனின் வார்த்தை சீதாவிற்கு சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருந்தது.. மாறன் தங்கள் அறைக்குள் நுழையும் பொழுது குகா குளியல் அறையில் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது..

“குகா..” என்று அவன் இருமுறை அழைக்க

“ப்ச்.. அந்த ரூம்ல போய் குளிக்க வேண்டியது தானே.. சும்மா கதவைத் தட்டிகிட்டு..” என்று முனங்கிக் கொண்டே கதவைத் திறந்தவள் கணவனை முறைத்தாள்..

“எத்தனை தடவை சொல்லுறேன்.. வாமிட் வந்தா டோர் க்ளோஸ் பண்ணாதே, மயங்கி விழுந்தா கூட எனக்கு தெரியாதுன்னு.. அறிவே இல்லையா உனக்கு?”

“..”

“என்ன முறைக்கிற? சொல்லுறதை எதையும் காதுல வாங்காதே.. உன் இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணு..” என்றவன் குளிக்க சென்றான்..

அவன் குளித்து முடித்து ஹாலிற்கு வந்த சமயம் குகாவிடம் சீதா சாப்பிடும்படி கெஞ்சிக் கொண்டிருந்தார்..

“அம்மா உமட்டுதுன்னு சொல்லுறேன்ல.. எதுவும் வேண்டாம்.. மதியம் சாப்பிட்டுக்குறேன்..”

“அப்படி தான் குகா இருக்கும். அதுக்காக சாப்பிடாம போவியா? காலைல எழுந்து பால், காபி கூட குடிக்கலை.. வெறும் வயித்தோட இருக்கக் கூடாது..”

“இப்போலாம் பால் காபின்னு சொன்னாலே எனக்கு உமட்டுது..”

“காலைல என்ன குடிக்கிற அப்போ?”

“அத்தை இருந்தப்ப ஏதோ ஒரு கஷாயம் செஞ்சு கொடுத்தாங்க.. அதை குடிச்சப் பின்னாடி வாமிடிங் இல்ல..”

“எப்படி செய்வாங்கன்னு சொல்லு? நான் போட்டுக் கொடுக்குறேன்..”

“தெரியாதே..” என்றாள் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு..

“அண்ணி ஊருக்கு போன பின்னாடி, அந்த கஷாயம் நீ குடிக்கலையா?”

“குடிச்சேன்.. ஆனா நான் செய்யலை.. அவர் தான் போட்டுக் கொடுப்பார்..” என்றதும், மகளை நன்றாக முறைத்தார் சீதா..

“நீ இந்த வீட்டுல என்ன வேலை தான்டி செய்வ? எல்லாமே மாப்பிள்ளை தான் செய்யுறார்? நீ குடும்பம் நடத்துற லச்சனத்தை பாரு.. இதைப் பார்க்கவா நான் மதுரைல இருந்து கிளம்பி வந்தேன்..”

“என்ன சும்மா நேத்துல இருந்து உங்க மருமகன் புராணம் பாடுறீங்க? சமையலுக்கு மட்டும் தான் அவர் ஹெல்ப் செய்றார்.. துணி துவைக்கிறது, அதை காயப் போடுறது, காஞ்ச துணிய அயர்ன் பண்ணுறது, வீடு பெருக்குறது, பாத்திரம் தேய்க்கிறது.. இவ்வளவு வேலை நான் தான் செய்யுறேன்.. ஒரு கஷாயம் அவர் போட்டுக் கொடுத்தா, எல்லா வேலையும் அவரே செய்றதா அர்த்தமா?” அவளும் தாயை முறைத்துக் கொண்டே கூறினாள்..

சீதா மகளிற்கு பதில் சொல்லுமுன், மாறன் கஷாயத்தைப் போட்டு மனைவியின் கையில் கொடுத்தான்..

“என்ன மாப்பிள்ளை, இப்படி அவளுக்கு ஒவ்வொன்னும் நீங்களே செஞ்சிட்டு இருந்தா, இவ ஒரு வேலையும் செய்ய மாட்டா.. நாலு அரை விட்டு வேலை செய்டின்னு சொல்லாம, கஷாயம் போட்டு ஆத்தி கொடுக்குறீங்க.. ஊட்டிவிடாதது மட்டும் தான் பாக்கி.”

‘நீங்க இருக்கீங்கன்னு தான் ஊட்டி விடலை..’ என்று மாறனும்

‘கரெக்டா அம்மா திட்டும்போது கைல டம்ளரை கொடுத்து அவங்க கோபத்தை ஏத்தியா விடுற’ என்று குகாவும் மனதினுள் நினைத்துக் கொண்டனர்..

“பராக்கு பாக்காம குடிச்சிட்டு ஆபிசுக்கு கிளம்பு..” சீதா மீண்டும் அதட்டல் போட, வேகமாக அதைக் குடித்தவள்

“நீங்க வராமலே இருந்திருக்கலாம்.. வந்ததுல இருந்து திட்டு..” என்று முனங்கிக் கொண்டே குகா புறப்பட்டாள்..

இரண்டு நாட்கள் இப்படியே சென்றது.. புது ப்ராஜக்ட் ஒன்றில் குகா பிசியாக இருந்தாள்.. எப்பொழுதும் மாறன் தான் வீட்டிற்கு லேட்டாக வருவான், குகாவின் நேரமோ என்னவோ அவளிற்கு அந்த வாரம் முழுவதும் வேலை ஜாஸ்தியாக இருந்தது.. இரவு அவள் தாமதமாக வந்து தினமும் சீதாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தாள்.. இன்று சீக்கிரமாக வருவதாக தாயிடம் கூறியிருந்தாள்..

அன்று மதிய இடைவேளையின் பொழுது, மாறனுடன் போட்ட சண்டையைப் பற்றியே குகா நினைத்துக் கொண்டிருந்தாள்..

‘தேவையில்லாம அவரோட சண்டைப் போட்டுடேனோ.. அதுவும் அவசரப்பட்டு ரொம்ப பேசிட்டேன்..’ அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே உணவினை அளந்துக் கொண்டிருந்தாள்..

“ஹோய்..” என்றவாறே அகல்யாவும் அவள் பின்னோடு கவினும் அவளருகில் அமர்ந்தனர்..

“ஹாய்” என்று இருவரையும் பார்த்து புன்னகைத்தாள் குகா..

“எருமை அத்தை ஊர்ல இருந்து வந்திருக்காங்களாம்.. அம்மா போன் பேசும் போது சொன்னாங்க.. நீ சொல்லவே இல்லை..” என்று முறைத்தாள் அகல்யா..

“நம்ம பேசியே ரொம்ப நாளாச்சே.. மறந்துட்டேன்டி சொல்ல..”

“மறந்ததுக்கு தண்டனையா உன் லஞ்ச் எனக்கு..” என்றவள் அவளின் டப்பாவை பிடிங்கிக் கொண்டவள் கவினின் புறம் திரும்பி

“உங்களுக்கு லஞ்ச் வாங்கும்போது அவளுக்கும் சேர்த்து வாங்கிடுங்க..” என்றவாறே உணவை வாயில் போட்டுக்கொண்டாள்..

“என்ன வேணும் குகா?” என்ற கவினின் கேள்விக்கு,

“எனக்கு சாப்பிடுற மூடே இல்லை கவின்.. ஜூஸ் போதும்..” என்றாள்..

மூவரும் பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர்..

“இப்பல்லாம் அகல் ரொம்ப நல்லப் பொண்ணா மாறிட்டு வரா குகா.. அதுக்கு காரணம் நீங்க தான்..”

“நானா?” குகா புரியாமல் முழித்தாள்..

“ஆமா.. முன்பெல்லாம் என்ன பேசுனாலும் அதைப் பிடிச்சிட்டு சண்டைப்போட்டுட்டு இருப்பா.. இப்போ எல்லாத்தையும் பொறுமையா ஹேண்டில் பண்ணுறா.. ஒரு விஷயம் சொன்னா அதுல உள்ள பாசிட்டிவ் நெகட்டிவ் எல்லாம் அலசி ஆராய்ஞ்சி தான் முடிவெடுக்குறா.. எப்படி இந்த திடீர் மாற்றம்ன்னு கேட்டப்ப தான் குகா இப்படி தான் எல்லாத்தையும் பொறுமையா ஹேண்டில் பண்ணுவான்னு சொன்னா.. எங்க லவ் மேட்டர் கூட அவ உங்ககிட்ட சொல்லலைன்னு கோபப்படாம புரிஞ்சிக்கிட்டீங்கன்னு சொன்னா..”

“குகா.. ஒருவேளை நீ மட்டும் என்னை மாதிரி லவ் பண்ணிட்டு என்கிட்ட சொல்லாம மறச்சிருந்தா நான் உன்னோட பேசிருக்கவே மாட்டேன்.. பட் நீ அந்த இடத்துல ரொம்ப பொறுமையா பேசுன.. இத்தனை வருஷமா இவளோட இருந்திருக்கோம் இந்த பொறுமையை இவகிட்ட இருந்து கத்துக்கலையேன்னு பீல் ஆகிடுச்சி..”

கவின் அகல்யா இருவரும் பேசப் பேச குகாவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.. நான்கு நாட்களுக்கு முன் பொறுமை என்றால் என்ன என்பது போல் கணவனுடன் வார்த்தைக்கு வார்த்தை சண்டைப் போட்டவளைப் பார்த்து பொறுமைசாலி என்று கூறுகிறார்களே என்றிருந்தது.. வெறும் சிரிப்பை மட்டுமே அவர்களிடம் உதிர்த்தவள் வேறு எதுவும் பேசவில்லை..

                            **************

தாயுடன் பேசிக் கொண்டிருந்த குகாவின் பார்வை முழுவதும் மாறன் இருந்த அறையினிலேயே இருந்தது.. முதலில் இதை கவனிக்காத சீதா, கவனித்தப் பின்

“தூக்கம் வருதுமா.. நான் போய் படுக்குறேன்..” என்று எழுந்து சென்றார்..

எப்பொழுதுடா அவர் எழுந்து செல்வார் என்று காத்திருந்தது போல், குகா வேகமாக கணவன் இருந்த அறைக்குச் சென்றாள்.. திடீரென்று தன் முன்னால் வேகமாக வந்து நின்ற மனைவியை மாறன் என்னவென்பது போல் பார்த்தான்..

நான்கு நாட்களாக பேசாதவள் திடீரென்று வந்து நின்றதும் அவனிற்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.. ஒரு சில நொடிகள் இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்..

“என்ன குகா?” மாறனே முதலில் பேச்சை தொடங்கினான்..

“நான்..” என்று ஆரம்பித்த குகாவிற்கு நா வரவில்லை.. எச்சிலை விழுங்கிக் கொண்டு மெதுவாக “சாரிங்க.. நான் அப்படி பேசிருக்க கூடாது..” என்றாள் குனிந்துக் கொண்டே..

அவன் பதிலேதும் சொல்லமால் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, கணவன் தான் கூறியதற்கு ஒன்றும் சொல்லவில்லையே என்று நிமிர்ந்து பார்த்த குகா மீண்டும் “சாரி.. எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு.. யாரோ ஒருத்தர் சொன்னாங்கன்னு உங்களை அப்படி பேசிருக்கக் கூடாது..” என்றவள் அன்று அவள் கல்லூரி நண்பனை சந்தித்ததை முழுவதும் கூறினாள்..

“என்னவோ ஒரு கோபம் வந்துடுச்சி.. என் புருஷனை யாரோ ஒருத்தன் வந்து அவரால தான் ஒரு குடும்பம் பிரிஞ்சிடுச்சின்னு சொன்னதும், எதைப் பத்தியும் யோசிக்காம உங்களோட சண்டைப் போட்டுட்டேன்.. பொறுமையா பேசணும்னு தான் நினைச்சேன்.. என்னை அறியாமலே ஏதேதோ பேசிட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க..” என்றவளின் கண்களில் கண்ணீர் வந்தது..

“ஹே லூசு.. எதுக்கு அழுகுற?” என்றவாறே மாறன் மனைவியின் அருகில் வந்து அவளை அனைத்துக் கொண்டான்..

“நீங்க பொய் சொன்னாலும், ஆமா நான் சொன்னேன்னு என்கிட்ட சொல்லிருக்கீங்க.. அதை யோசிக்காம லூசு மாதிரி பேசிட்டேன்.. அதுவும் டிவோர்ஸ் அது இதுன்னு எப்படி பேசுனேன்னு எனக்கே தெரியலை..” அவனது அணைப்பில் அழுது கொண்டே கூறினாள் குகா..

“சரி அழாதே..”

“உங்க பெர்சனல்ல தலையிட கூடாதுன்னு நான் முன்னமே நினைச்சிருந்தேன்.. அந்த வினோத் வந்து பேசுனதும், எல்லாம் மறந்துடுச்சி.. ஆயிரம் இருந்தாலும் நான் அப்படி சொல்லிருக்கக் கூடாது.. யாரோ ஒருத்தரை நீங்க அப்படி சொன்னதுக்கே உங்களோட சண்டைப்போட்ட நானே உங்களை அப்படி சொல்லிட்டேன்.. சாரி மாறன்..” என்றாள் அழுது கொண்டே..

“ஹே லூசு விடு.. எதுக்கு இப்போ இப்படி அழுகுற?”

“உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா?” அவனை நிமிர்ந்து பார்த்து அவள் கேட்க,

“அதெல்லாம் நிறையவே இருந்தது.. அப்புறம் உன் நிலைமையும் புரிஞ்சுது..

“என்ன நிலைமை?”

“எப்பவுமே நம்ம சண்டைப் போட்டா, தப்பு என்மேலேயே இருந்தாலும் நீ தான் முதல்ல வந்து சமாதானம் ஆவ.. இந்த டைம் நீ அப்படி பண்ணல.. திடீர்னு சிரிப்ப, திடீர்னு முறைப்ப.. இதெல்லாம் பிரெக்னன்சி டைம்ல வர மூட் ஸ்விங்ஸ் தான்.. நீ நார்மலா இருந்திருந்தா, பொறுமையா தான் சண்டைப் போட்டிருப்ப..”

“நிஜமா மூட் ஸ்விங்ஸ்னால தான் இப்படி நடந்துக்குறேனா?” பாவமாக அவள் கேட்க..

“ஒரு பேச்சுக்கு சொன்னேன்..”

“போடா..” என்றவள் “சாரி அந்த வார்த்தை..” என்று அவள் மறுபடியும் ஆரம்பிக்க

“அடியே விடு.. எனக்கும் புரியுது.. என்னை ஒருத்தன் உன்கிட்ட வந்து தப்பா சொன்னா, உனக்கும் கோபம் வர தானே செய்யும்.. அதுல ஏதோ பேசிட்ட.. எத்தனை தடவை சாரி கேட்ப?”

“ம்..”

“நீ ஒன்னை புரிஞ்சுக்கோ குகா.. இந்த உலகத்துல யாருமே உண்மை மட்டுமே சொல்லுறது இல்லை.. அதுவும் அவங்க அவங்க வேலைன்னு வரப்ப ஏகப்பட்ட பொய் சொல்லதான் செய்வாங்க.. வக்கீல், போலீஸ், பொலிடீசியன் பொய் சொல்லுவாங்கன்னு ஊருக்கே தெரியும்.. மத்த professionல இருக்கவங்களும் அப்படி தான்.. அது வெளியே தெரியறது இல்லை..

ஏன் உங்க சாப்ட்வேர்ல நீங்க பொய்யே சொல்ல மாட்டீங்களா? பத்து கேஸ் எடுத்தா அதுல எட்டு கேஸ்ல நான் தப்பானவங்களுக்காக தான் வாதாட வேண்டியதா இருக்கு.. ஆப்போசிட் சைடும் நல்லவங்க கிடையாது தான்..  அந்த மாதிரி நான் வாதாடி ஜெயிச்ச கேஸ்ல ஆப்போசிட் சைட் உள்ளவங்களுக்கு பெரிய பிரச்சனைன்னு இதுவரை வந்ததில்லை.. இனிமேலும் வராது..

அந்தப் பொண்ணு எந்த நிலைமைல புருஷன் வீட்டுல இருந்து தப்பிச்சு வந்தா தெரியுமா? அவ்வளவு அடி அடிச்சிருக்காங்க.. கண்ணு கால் கைன்னு நிறைய அடி.. உன் கிளாஸ்மேட் ரொம்ப அமைதின்னு சொன்னியே அவனும் கூட சேர்ந்து தான் அடிச்சிருக்கான்..

நமக்கு அரேன்ஜ்ட் மேரேஜ் நம்ம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிப்போம் அப்புறமா மத்ததெல்லாம்ன்னு சொல்லிருக்கான்.. அவளும் அதை எல்லாம் நம்பிருக்கா.. எல்லாரும் ஏதோ ஒரு functionக்கு ஊருக்கு போகலாம்னு முடிவு பண்ணிருக்காங்க.. இவன் மட்டும் வேலை இருக்கு வரலைன்னு சொல்லிருக்கான்..

மீதி மூணு பேரும் கிளம்புறதா தான் பிளான்.. கடைசி நேரத்துல அவங்க மாமியார் நீ அவனோடையே இருன்னு சொல்லிட்டு போயிட்டாங்க.. இவளும் சரின்னு சொல்லிருக்கா.. வேலை இருக்கனால அவன் லேட்டா தானே வருவான்னு வீட்டைப் பூட்டிட்டு இவ கோவிலுக்கு போயிருக்கா, வந்துப் பார்த்தா அவங்க ரூம்ல, அவனும் இன்னொரு பையனும்.. பாவம் அந்தப் பொண்ணு.. இதையெல்லாம் அவங்க மாமியார்கிட்ட முதல்ல சொன்னப்ப அவளை நம்பல.. அப்புறம் அவனே ஆமா நான் அப்படி தான்னு சொல்லிருக்கான்..

அப்புறம் அங்கிருந்து தப்பிச்சி அவங்க அம்மா வீட்டுக்கு வந்து, டிவோர்ஸ் வாங்கலாம்ன்னு முடிவு செஞ்சி என்கிட்ட வந்தாங்க.. அந்த வினோத்துக்கு இதைப் பத்தி எதுவும் தெரியலைப் போல.. அவங்க செஞ்சத் தப்பை மறைக்க இந்தப் பொண்ணு மேல பழியைப் போட்டுட்டாங்க.. வினோத் கிட்டையும் இதையே தான் சொல்லிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. அதான் அவனும் உன்கிட்ட வந்து அப்படி சொல்லிட்டான் போல..

இந்த கேஸ்ல நான் வின் பண்ணா மட்டும் பத்தாது.. அந்த பையன் பேமிலி எல்லாருக்கும் தண்டனை வாங்கிக் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.. இந்த மாதிரி வர கேசஸ்ல என்னோட பாய்ன்ட் ஆப் வியூ இப்படி தான் இருக்கும்..  எனக்கும் எதிக்ஸ் தெரியும்.. கண்மூடித்தனமா நான் எதுவம் பண்ணுறதில்லை.. மத்தவங்க சொல்லுறதை வெச்சு நீ பீல் பண்ணாதே..

நமக்குள்ள இதுவரை பெரிய பிரச்சனைன்னு எதுவும் வந்ததில்லை.. இனியும் வராம இருக்கணும்னா அது உன் கைல தான் குகா இருக்கு.. திரும்பவும் சொல்லுறேன் என்னால யாரோட வாழ்க்கையும் கெட்டுப் போகாது.. இதை நான் உறுதியா சொல்லுறேன்.. இந்த கேஸ்ல நான் நேர்மையா தான் வாதாடுறேன்..” அவன் நீண்ட விளக்கம் கொடுத்தான்..

“ம் ஓகே” அவளின் குற்ற உணர்ச்சி கூடிக் கொண்டே போனது.. அவளால் வேறு எதுவும் பேச முடியவில்லை.

“பக்கம் பக்கமா நான் பேசிருக்கேன்.. ஓகேன்னு ஒரே வார்த்தைல பதில் சொல்லுற?”

“எனக்கு தெரியலை, என்ன சொல்லுறதுனு..  எதுவும் முழுசா தெரியாம உங்களோட சண்டைப்போட்டுட்டேன்..”

“இனிமே இப்படி பண்ணாதே.. விடு..”

“நீங்க சொல்லுறது எல்லாம் மூளைக்கு புரியுது.. ஆனா மறுபடியும் வினோத் மாதிரி யாராச்சும் என்கிட்ட உங்களைப் பத்தி எதாச்சும் சொன்னா, நான் எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு பயமா இருக்கு.. உங்களோட மறுபடியும் சண்டைப் போட்டா, எனக்காக பொறுத்துக்கோங்க…”

“அடிப்பாவி விடிய விடிய கதைக் கேட்டு மண்டோதரிக்கு ராவணன் சித்தப்பான்னு சொல்லுற மாதிரில இருக்கு..”

“உங்களுக்கு பழமொழி கூட ஒழுங்கா சொல்லத் தெரியாதா? நீங்க எப்படி தான் கோர்ட்ல வாதாடுரீங்களோ..” என்றவள் பின் “நிஜமா என் மேல கோபம் இல்லைல?” என்றாள்

“கோபம் கான்.. லவ் இஸ் ஆன்..” கண்ணடித்துக் கொண்டே கூறியவன் அவள் உதட்டை நெருங்க,

“நீங்க கோபமாவே இருங்க.. நான் போறேன்..” அவன் பிடியில் இருந்து விலகி ஓடினாள் குகா..

 

Advertisement