Advertisement

காதல் செய்வேன் கட்டளைப்படி

காதல் 11

நெடுநேரம் தனியாக வீட்டில் இருந்தவளிற்கு மனது என்னவோ போல் இருக்க அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்றாள்.. அவள் வரும்பொழுது  ஹாலில் மாறன் காபி குடித்துக் கொண்டே டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.. மனைவி இப்பொழுது தான் தோழிகளுடன் வெளியே சென்று விட்டு வருகிறாள் என்று நினைத்தான்..

“வாங்க மேடம்.. காபி வேணுமா?” என்றான் கையில் வைத்திருந்த கப்பை முன்னால் நீட்டி.. அவனை ஒரு பார்வை பார்த்தவள் ஒன்றும் கூறாமல் அறைக்குள் செல்ல,

“நான் சிப் கூட பண்ணல.. இப்பயும் வேண்டாமா? சரி போ.. நீயே ரெப்ரஷ் ஆகிட்டு வந்து காபி போட்டுக்கோ..” என்றவன் டிவியில் கவனம் செலுத்தினான்..

கால் மணி நேரம் ஆகியும் அவள் வெளியே வராமல் இருக்கவும்,

“என்ன பண்ற குகா?” என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் சென்றான்..

உடையை மாற்றாமல் கண்களை மூடி கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவளைப் பார்த்தவன்

“என்னமா டயர்டா இருக்கா? எதாச்சும் சாப்பிடுறியா? ஜூஸ் குடிக்கிறியா?” என கேட்க , கண்ணை திறந்து அவனை பார்த்தவள்

“ரொம்ப ஹேப்பி மூட்ல இருக்கீங்க போல..” என்றாள்

“அடிப்பாவி, என் பொண்டாட்டி டயர்டா உக்காந்திருக்காளேன்னு கவலைல இருக்கேன்.. என்னை பார்த்தா உனக்கு ஹேப்பி மூட்ல இருக்க மாதிரி தெரியுதா?”

“நான் வரும் போது, ஜாலியா தான் டிவி பார்த்துட்டு இருந்தீங்க..”

“ஓ அதுவா.. இன்னையோடு அந்த லேண்ட் கேசுக்கு ஒரு கும்பிடு போட்டாச்சு.. பேமென்டும் செட்டில் பண்டாங்க.. டாகுமெண்ட்ஸ் ப்ரோசீஜர் எல்லாமே ஓவர்.. அதான்..”

“ம்..”

“ஆனாலும் இன்னொரு கேஸ் அதுல கொஞ்சம் பிசியா இருக்கேன்.. அதுவும் சீக்கிரம் முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்.. அப்புறம் கொஞ்ச நாள் உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்.. நம்ம ரெண்டு பேரும் நல்லா பேசி ரொம்ப நாள் ஆச்சு..” என்றவன் அவள் அருகில் அமரவர, குகா வேகமாக கட்டிலில் இருந்து எழுந்தாள்..

“ஓய் என்ன எழுந்துட்ட.. உட்காரு..” என்றவன் அவள் கையைப் பிடிக்க, வேகமாக அதை தட்டி விட்டாள்..

“என்னடி வந்ததுல இருந்து ஒரு மாதிரியாவே இருக்க.. என்னாச்சு?”

“உங்களால இவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்க முடியுமா மாறன்?” என்றவளின் குரல் அவ்வளவு அமைதியாக ஒலித்தது.. கோபாமாக அவள் கேட்கவில்லை.. அமைதியாக அதே நேரம் அழுத்தமாக கேட்டாள்..

“என்ன சொல்ற நீ?” அவளின் வார்த்தைகளில் குழம்பியவாறே அவன் கேட்க,

“ஹான்.. என்ன சொல்லணும்? உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுல்ல..”

“ஹேய் தெளிவா தான் பேசேன்.. நான் என்ன கீழ்த்தரமா நடந்துக்கிட்டேன்” அவன் குரல் இப்பொழுது சற்று உயர்ந்து இருந்தது..

“எதுக்கு இப்போ கத்துறீங்க? தப்பை உங்க மேல வெச்சிக்கிட்டு..”

“குகா.. எதுவா இருந்தாலும் நேரடியா பேசு.. எதுக்கு சுத்தி வளைக்கிற?”

“சரி நேரடியாவே கேக்குறேன்.. இப்போ நீங்க ஒரு டிவோர்ஸ் கேஸ் எடுத்திருக்கீங்களே? அதுல உங்க கிளைன்டை ஜெயிக்க வைக்கிறதுக்காக, அவங்க ஹஸ்பண்டுக்கு நல்ல பட்டம் வாங்கிக் கொடுத்திருக்கீங்களே.. ஒரு பையனா இருந்துட்டு, இன்னொரு பையனை இப்படி எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தி வெச்சிருக்கீங்க.. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?” என்றாள் கோபமாக..

“என்ன?” என்று ஒரு நிமிடம் அதிர்ந்தவன் பின் “இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?” என்றான்..

“எப்படியோ தெரிஞ்சது? எதுக்கு இப்படி செஞ்சீங்க? அதை சொல்லுங்க..”

“குகா.. உனக்கு எத்தனை தடவை சொல்லுவேன்.. அது என் profession..’

“ஓ.. பொய் சொல்லுறது ஒரு profession இல்ல.. நீங்க சொன்ன அந்த பொய்யால ஒரு குடும்பமே அங்க செதஞ்சு போச்சு.. ஆனா உங்களுக்கு அதை பத்தின கவலையே இல்லை.. கேட்டா அது என் தொழில்னு சொல்றீங்க?”

“நான் என்ன பண்ணேன்? முதல்ல நீ தெளிவா பேசு..”

“இதுக்கு மேல என்ன தெளிவா பேச? உங்க கிளைன்ட ஜெயிக்க வைக்க அந்த பையனை gayன்னு சொல்லிருக்கீங்க.. உங்களுக்கு வேற பொய்யே கிடைக்கலையா?”

“இங்கப்பாரு நான் இதை சொல்லலை.. அந்தப் பொண்ணு கொடுத்த ஸ்டேட்மெண்ட் தான் அது.. உண்மையாவே அவன் அந்த மாதிரி தான்.. இதை மறைச்சு தான் அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சிருக்கான்.. இந்த விஷயம் அவங்க வீட்டுக்கு தெரிஞ்சப்ப, மாமியார் இது வெளியே தெரிஞ்சா எங்க குடும்ப மானம் போகிடும்.. சொல்லாதைன்னு மிரட்டிருக்காங்க.. குடும்பமே சேர்ந்து அவ்வளவு டார்ச்சர் செஞ்சிருக்காங்க.. அந்தப் பொண்ணு அவங்க வீட்டுல இருந்து தப்பிச்சு வெளிய வந்திருக்கு..”

“ஓ இது அடுத்த பொய்.. அப்படி தானே..” என்றாள் நக்கலாக

“குகா… லூசு மாதிரி பேசாதே.. இதான் உண்மை.. நீ நம்புனா நம்பு இல்லாட்டி போ..” என்றவன் ஹாலிற்கு செல்ல, அவன் பின்னாலே வேகமாக வந்தவள்

“இந்த கேசை விட்டுடுங்க..” என்றாள்

“ஹே உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? அந்த வீட்டுல இருந்து அந்த பொண்ணு கஷ்டப்படணுமா?”

“அவ ஒரு பொண்ணா? ச்ச.. மாமியார் கூட இருக்க முடியாம இப்படி பொய் பொய்யா சொல்லிட்டு இருக்கா.. இதெல்லாம் ஒரு காரணமா டிவோர்ஸ் வாங்க..  அவளுக்கு வக்காலத்து வாங்குறீங்க நீங்க..”

“உன்கிட்ட யார் அப்படி சொன்னா?” அவன் புரியாமல் கேட்க

“என்ன அப்பயிருந்து யார் சொன்னா யார் சொன்னான்னு கேக்குறீங்க? நீங்க பண்ணுற தப்பு தான் ஊருக்கே தெரியுதே..” அவள் எகத்தாலாமாக கூற

“குகா, என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற.. நான் என்னமோ ஒரு தேர்ட் ரேட் பொறுக்கி மாதிரி நீ பேசுற?”

“இப்படி பொய் சொல்றது கூட தப்பு தான் மாறன்.. இதுல வர காசுல நம்ம சந்தோசமா வாழ்ந்திட முடியுமா? நீங்க டிவோர்ஸ் வாங்கி கொடுத்த எத்தனை பேர் உங்களை நல்லா இருக்கக் கூடாதுன்னு சபிச்சிருப்பாங்க.. நம்மக் குழந்தை இந்த பணத்துல தான் வளரணுமா?”

“உனக்கு எப்படி புரிய வைக்கன்னு எனக்கு தெரியலை குகா.. அன்னைக்கு சொன்னதை தான் இப்பவும் சொல்றேன்.. நான் கிரிமினல் கேஸ் எதுவும் எடுக்குறதில்லை.. நீ சொல்ற மாதிரி தான் எனக்கும் மனசாட்சி இருக்கு.. கொலைகாரன், ரேப் பண்றவன் இவனுக்காக நான் வாதாடுனா நீ இவ்வளவு சொல்றது சரி.. பாதிக்கப்பட்ட ஒரு பொண்ணுக்கு நான் விடுதலை தான் வாங்கிக் கொடுக்கிறேன். உன்கிட்ட யாரோ தப்பா சொல்லிருக்காங்க.. வேணும்னா அந்த பொண்ணுகிட்டையே உன்னை பேச வைக்கிறேன்.. நம்பு.. இதுல தப்பு அந்த பையன் பேமிலில தான்..” பொறுமையாக அவன் கூற, குகா

“யாரும் என்கிட்ட தப்பா சொல்லலை.. அந்த பொண்ணு, என்னோட படிச்ச பையனோட அண்ணி தான்.. காலேஜ்ல அவன் எவ்வளவு சைலண்ட்டா இருப்பான் தெரியுமா? நீங்க என்னடான்னா அவன் பேமிலியே சேர்ந்து டார்ச்சர் பன்றாங்கண்ணு சொல்றீங்க..” என்றாள்

“போடி.. உனக்கெல்லாம் என்னால புரிய வைக்க முடியாது.. நானும் பொறுமையா சொல்லிட்டு இருக்கேன்.. காதுலையே வாங்காம பேசிட்டு இருக்க..”

“நீங்க செய்யுற தப்பை ஒத்துக்காம என்கிட்ட ஏன் கத்துறீங்க?”

“இதுக்கு முந்தின கேஸ்ல நான் பொய் சொன்னேன்னு உன்கிட்ட நானா தானே சொன்னேன்.. அப்படி இருக்கப்போ, இப்ப மட்டும் ஏன் ஒத்துக்காம இருக்கப் போறேன்.. நான் எதுவும் பொய் சொல்லல..” என்றவன் பின் மெதுவாக “மேரேஜ் ஆகி ஒன்றரை வருஷம் ஆகிடுச்சி.. அவங்க ரெண்டு பேருக்குள்ள இதுவரை எதுவுமே நடக்கலை.. ஜட்ஜே அவங்களுக்கு மெடிகல் டெஸ்ட் எடுக்க சொல்லிருக்கார்.. அந்த ரிப்போர்ட்ஸ் வந்த பின்னாடியாச்சும் நம்புவியா?”

“பணம் கொடுத்தா அந்த டாக்டர் பொய் சொல்லவே மாட்டானா?”

“என்னடி உன் பிரச்சனை? சும்மா பொய் பொய்ன்னு சொல்லிட்டு இருக்க? நீ என்ன ஹரிச்சந்திரன் பேமிலியா? பொய்யே உன் வாழ்க்கைல்ல நீ சொன்னதில்ல?” கோபத்துடன் அவன் கேட்க

“வாழ்க்கைல் பொய் சொல்லலாம்.. அடுத்தவங்க வாழ்க்கையை கெடுக்க பொய் சொல்லக் கூடாது..” தத்துவமாக பதில் அளித்தாள் குகா..

“உப்ப்.. இதுக்கு மேல உன்கிட்ட பேசுறதே வேஸ்ட்..” என்றவன் நகரப் போக

“நீங்க, இப்படி பணத்துக்காக எவ்வளவு பொய் வேணாலும் சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியாம போகிடுச்சி.. தெரிஞ்சிருந்தா கல்யாணமே செஞ்சிருக்க மாட்டேன்..” அமைதியாக போனவனை கடுப்பேற்றுவது போல் இவள் பேச, அதில் கடுப்பானவன்

“உங்கப்பா உனக்கு லாயர் மாப்பிள்ளை பார்த்திருக்கேன்னு சொன்னாரே, அப்பவே லாயர் எல்லாம் பொய் சொல்வாங்க.. எனக்கு இந்த பையன் வேண்டாம்னு சொல்லிருக்க வேண்டியது தானே? ஏன் உனக்கு அப்ப தெரியாதா? வக்கீல் பொய் சொல்வாங்கன்னு?” அவனும் கடுப்புடன் பதில் சொன்னான்..

“தெரியாம கல்யாணம் பண்ணிட்டேன்.. பேசாம, உங்களுக்கு தெரிஞ்ச, உங்களை மாதிரியே பொய் சொல்லுற வக்கீல் கிட்ட சொல்லி நம்ம ரெண்டு பேருக்கும் விவாகரத்து வாங்கி கொடுத்திடுங்க.. ரீசன் நீங்க இப்போ அந்த பையனுக்கு என்ன காரணம் சொல்லி டிவோர்ஸ் வாங்கிக் கொடுக்கிறீங்களோ, அதே ரீசனை நமக்கும் சொல்லிடுங்க..” அவள் விவாகரத்து என்று சொன்னதுமே, மாறனின் கோபம் எல்லையை கடக்க ஆரம்பித்தது, இறுதியில் அவள் இவ்வாறு கூறவும், குகாவை அடிக்கவே கையை ஓங்கி விட்டான் மாறன்.

“அடிங்க சார்.. எதுக்கு நிறுத்திட்டீங்க? உங்களுக்கு வந்தா இரத்தம்.. அடுத்தவனுக்குன்னா தக்காளி சட்டினியா? அந்த வார்த்தையைக் கூட, உங்களைப் பார்த்து நான் சொல்லலை.. அதுக்கே உங்களுக்கு அடிக்கிற அளவுக்கு கோபம் வருது.. அவங்களுக்கும் அவங்க பேமிலிக்கும், எல்லார் முன்னாடியும் எவ்வளவு அவமானமா இருந்திருக்கும்.. வாய் கூசாம இப்படி ஒரு பொய்யை சொல்லிருக்கீங்க..” அவள் பேசிக் கொண்டே போக,

“ஹே.. நிறுத்துடி.. இனி ஒரு வார்த்தை பேசாதே.. என்ன இப்போ நான் பொய் சொல்றேன்.. பிராடு.. குடும்பத்தை குலைக்கிறேன்.. அதானே. ஆமாடி.. நான் இப்படி தான்.. பிடிச்சா என்னோட இரு… இல்லை நீ சொன்ன மாதிரி எனக்கு தெரிஞ்ச பொய்யே (?) சொல்ல தெரியாத வக்கீல்கிட்ட சொல்லி டிவோர்ஸ் வாங்கித் தரேன்..” என்றவன் அலுவலக அறைக்குச் சென்று கதவை அறைந்து சாற்றினான்..

அவனை கேசை வாபஸ் வாங்க வைப்பதற்காக குகா வார்த்தையை விட, அது மாறனின் கோபத்தை ரொம்பவே கிளறி விட்டிருந்தது.. என்ன ஆனாலும் இந்த கேசை இனி ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியை அவனிடம் கொண்டு வந்திருந்தது…

குகாவிற்குமே சிறிது நேரம் சென்றதும், தான் பேசியது அதிகப்படியோ என்று புரிய ஆரம்பித்தது..

‘அவர்கிட்ட சண்டை போடாம பொறுமையா எடுத்து சொல்லணும்னு தானே நினைச்சேன்.. ச்ச.. தேவை இல்லாம வார்த்தையை விட்டுட்டேனே.. டிவோர்ஸ் அது இதுன்னு.. எப்பவும் விளையாட்டுக்கு ரெண்டு பேரும் சொல்றது தான்.. அதே மாதிரி இந்த டைமும் சொல்லி அவர் மனசை மாத்தலாம்னு நினைச்சேன்.. நடுவுல தேவையில்லாம அந்த ரீசனே உங்களுக்கும் சொல்லுங்கன்னு சொல்லிட்டேன்.. எவ்வளவு கஷ்டம்மா இருந்திருக்கும்..’ என்று முதலில் நினைத்தவள் பின் ‘கஷ்டப்படட்டும், இதே மாதிரி தானே மத்தவங்களும் கஷ்டப்பட்டிருப்பாங்க.. எல்லாரோட சாபத்தோட, எங்க வாழ்க்கை நல்லாவா இருக்கும்.. நீயா போய் பேசாதே குகா.. அவனுக்கு புரியட்டும்.. அவன் செய்யுறது தப்புன்னு.’ என்று தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டாள்.

இதற்கு முன் இருவருக்கும் பல சண்டைகள் வந்திருக்கிறது.. முதலில் சமாதானம் ஆவது குகாவாக தான் இருக்கும்.. அவளால் எப்பொழுதுமே சிறிது நேரத்திற்கு மேல் சண்டையை இழுத்துப் பிடித்து வைக்க முடியாது.. மாறனும் அவ்வாறு தான்..

இருவருக்கும் தனிப்பட்ட முறையில் இதுவரை எந்த பிரச்சனையும் வரவில்லை.. அவன் வேலையின் காரணமாகவே கருத்து வேறுபாடுகள் இருவருக்கும் ஏற்படும்.. பின் குகாவே, அது அவன் வேலை அவன் பெர்சனல், இதில் தேவையில்லாமல் தலையிட்டு தங்களுக்குள் பிரச்சனையை உண்டு பண்ணக் கூடாது என்று சமாதனம் ஆகிவிடுவாள்..

ஆனால் இந்த கேசில் அவன் கூறிய பொய்யை அவளால் ஏனோ ஜீரணிக்கவே முடியவில்லை.. இதற்கு முன்பு அவன் பொய் சொன்னாலும், “ஆமாம் சொன்னேன்” என்று ஒத்துக் கொண்டிருக்கிறான்.. இந்த முறை அதைக் கூட செய்யவில்லை.. என்று குகா நினைக்க,

மாறனோ ‘எவனோ ஒருத்தன் சொன்னான்னு, என்னை சந்தேகப்படுறா? நான் எப்படிப்பட்டவன்னு அவளுக்கு தெரியாதா? இத்தனை மாசம் என்னோட அவ குடும்பம் நடத்துனதுக்கு என்ன அர்த்தம்.. நான் சொல்றதை நம்பவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறா.. கடைசில டிவோர்ஸ் வரைக்கும் போயிட்டா.. எவ்வளவு நம்பிக்கை என்மேல..’ விரக்தியாக சிரிக்க மட்டுமே அவனால் முடிந்தது..

இருவருமே இந்த முறை ‘நீயா அவன் (ள்) கிட்ட சண்டையை மறந்து பேசாதே.. அவன்(ள்) செஞ்ச தப்பை உணரட்டும்.. அதுவரை பேசவே கூடாது..’ என்று முடிவெடுத்தனர்..

அவர்கள் இருவராலும் அதை செயல் படுத்த முடியுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..

அடுத்த நாள் சீதாவும், ராஜனும் மகளைப் பார்க்க வந்திருந்தனர்.. அவர்கள் வருவது முன்பே இருவருக்கும் தெரிந்தும், முதல் நாள் ஏற்பட்ட சண்டையின் காரணமாக அதை இருவருமே மறந்திருந்தனர்..

காலையில் வேகமாக அலுவலுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த இருவரும் வாசலில் காலிங் பெல்லின் சத்தத்தில் அறையில் இருந்து வெளியே வந்தனர்..

மாறன் அலுவலக அறையில் இருந்து வெளியே வர, குகா அவர்களது அறையில் இருந்து வந்தாள்.. ஒருவரை ஒருவர் சில நொடிகள் பார்த்தவர்கள் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டனர்..

‘அவன் இருக்கான்ல. அவனே கதவைத் திறக்கட்டும்’ என்று குகாவும்..

‘ஒரு வேலையும் செய்யுறதில்ல, இதையாச்சும் செய்யட்டும்.’ என்று மாறனும் மீண்டும் தங்கள் அறைகளுக்குள் சென்றனர்..

வெளியே காலிங் பெல்லை அழுத்திக் கொண்டிருந்த ராஜனிடம், சீதா

“எவ்வளவு நேரமா கதவைத் தட்டுறோம்.. என்ன பண்றா இவ.. போன் பண்ணுங்க..” என்றார்..

ராஜனும் மகளின் எண்ணிற்கு அழைக்க,

“ப்ச்.. யார் இது?” என்று எரிச்சலுடன் போனைப் பார்த்தவளிற்கு தந்தையின் எண்ணிலிருந்து அழைப்பு என்றதும்

“இந்த நேரத்தில எதுக்கு கூப்பிடுறார்?” என்று வேகமாக போனை எடுத்தாள்..

“என்னப்பா.. இந்த நேரத்தில கூப்பிட்டிருக்கீங்க.. எல்லாரும் நல்லா இருக்கீங்க தானே?” பதட்டத்துடன் அவள் கேட்க

“என்னமா சொல்ற.. நாங்க உன் வீட்டு வாசல்ல நிக்கிறோம்.. பெல் அடிச்சோம்.. கதவை திறக்கவே இல்லை.. அதான் போன் பண்ணேன்.” என்று அவர் சொல்ல

“அச்சோ. இதோ வந்துட்டேன் ப்பா..” என்றவள் வேகமாக சென்று கதவைத் திறந்தாள்.

“வாங்க ப்பா.. வாங்க ம்மா..” என்றவள் சீதாவின் கையைப் பிடித்துக் கொண்டாள்..

“என்ன பண்ண இவ்வளவு நேரமா?”

“அ… அது..” என்று அவள் திணறிக் கொண்டிருந்த நேரம், மாறன் ஹாலில் பேசும் சத்தம் கேட்டு வெளியே வந்தான்..

“வாங்க மாமா.. வாங்க அத்தை..” என்றவனிற்கும், அப்பொழுது தான் அவர்கள் இன்று வருவார்கள் என்ற நியாபகம் வந்தது..

“எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை?”

“நல்லா இருக்கேன் மாமா.. நீங்க எப்படி இருக்கீங்க. சாரி மாமா.. உங்களைக் கூப்பிட ஸ்டேஷன் வரணும்னு இருந்தேன்..  நேத்து லேட் நைட் தான் வந்தேன்.. சுத்தமா மறந்துட்டேன்.. உங்க பொண்ணும் காலைல எழுப்பாம விட்டுட்டா..” என்று மனைவியையும் கோர்த்து விட்டான்.. அதில் கணவனை திரும்பி முறைத்தாள் குகா..

“அச்சோ.. இதுல என்ன இருக்கு மாப்பிள்ளை.. பரவால்ல..”

“உக்காருங்க மாமா.. காபி கொண்டு வரேன்..” என்றவன் அடுக்களைக்குள் நுழையப் போக

“என்ன மாப்பிள்ளை நீங்க போய்..” என்று மருமகனைத் தடுத்த சீதா, மகளிடம் “குகா.. என்ன இது.. அவர் போறார்.. நீ வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க..” என்று கடிந்தார்..

“இல்லத்தை.. அவளுக்கு பால் ஸ்மெல் உமட்டுது.. அதான்..” என்றவன் கிச்சனுக்குள் சென்றான்..

“ஐயோ மாப்பிள்ளை இருங்க நான் போடுறேன்..” சீதா அவன் பின்னோடு செல்ல

“இருங்க.. இன்னைக்கு நான் போடுறதை டேஸ்ட் செஞ்சி பாருங்க.. நாளைக்கு நீங்க போடுங்க..” என்றவன் அவரை ஹாலில் உட்காருமாறு கூறிவிட்டு காபியை போட சென்றான்..

“இதோ வரேன் மா..” என்ற குகாவும், கிச்சனுக்குள் சென்று

“எதுக்கு இப்படி சீன் போடுறீங்க? மாப்பிள்ளை ரொம்ப நல்லவர் வல்லவர்ன்னு இப்போ எங்க அம்மா உங்களை புகழனுமா?” என்றாள் பல்லை கடித்துக் கொண்டு.. அவளை கூர்ந்து பார்த்தவன்

“நான் நல்லவன் தான்.. அது உனக்கும் தெரியும்..” என்றவன் பாலைக் காய்ச்சி கப்புகளில் ஊற்றினான்..

“நானும் அப்படி தான் நினைச்சிட்டு இருந்தேன்.. இப்போ தானே தெரியுது..” என்றவளின் முகத்தில் நேற்று விட்ட சண்டையின் தாக்கம் இருந்தது..

“உனக்கு சொன்னாலும் புரியாது.. நம்பவும் மாட்ட.. என்னவோ பண்ணு குகா.. அத்தை மாமா முன்னாடியாச்சும், கொஞ்சம் இந்த சண்டையை மூட்டை கட்டி வைக்கப் பாரு..”

“எனக்கு தெரியும்.. நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்..”

“ஸ்.. சப்பா… விடுமா.. தெரியாம உன்னோட பேசிட்டேன்..” என்றவன் அங்கிருந்து சென்றான்.

 

Advertisement