Advertisement

அத்தியாயம் 3

“நான் ஜீவிதாவ லவ் பண்றேன்மா..” போனில் விதுரன் கூற

வைதேகி அதிர்ச்சியோடு தனது கணவனைப் பார்த்தார்.. அவர் என்ன என்று கேட்க மகன் கூறியதை கணவனிடம் சொன்னார் வைதேகி.

விதுரனின் பிறந்தநாள் போன வாரம் முடிந்திருந்தது.. அன்று கோவிலில் சந்தித்த மாமி தனது அண்ணன் மகளின் ஜாதகத்தை விதுரனின் வீட்டிற்கு வாங்கிக் கொடுத்திருந்தார்.. இன்று பொருத்தம் பார்க்கப் போகிறோம் என்று விதுரனிடம் போனில் அவர்கள் தகவல் கூற அவன் பட்டென்று தன்னுடைய காதல் விஷயத்தைக் கூறிவிட்டான்..

“என்னடா சொல்ற? எத்தனை நாளா நடக்குது இது?”

“இப்போ ஆறு மாசமா தான்..” என்றவன் கூடவே “அவ ரொம்ப நல்ல பொண்ணுமா.. அன்னைக்கு ஆத்துக்கு வந்தப்பவே பார்த்திருப்பேல்ல” என

“ஓ அப்போ ப்ளான் செஞ்சு தான் ஆத்துக்குக் கூட்டீண்டு வந்துருக்க?” வைதேகி கோபப்பட

“அப்படி இல்லாம.. நெஜமாவே அவ ப்ரெண்ட் மேரேஜ்க்கு தான் வந்தா.. உங்களை எல்லாம் பார்க்கனும்னு சொன்னா.. அதான் கூட்டீண்டு வந்தேன்..”

“பார்த்தேலாணா. இவனை நம்பி சென்னைக்கு அனுப்பினா இருக்க எல்லாக் கெட்டப் பழக்கத்தையும் பழகிருக்கான்.”

“காதலிக்கிறது ஒன்னும் கெட்டப் பழக்கம் இல்லைமா..”

“எதிரித்து எதிர்த்து பேசாதே விது..” என்று அதட்ட.. அம்மா மகன் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது..

பலவாறாகக் கெஞ்சியும் அவர் வேறு ஜாதியில் பெண் எடுக்க ஒத்துக்கொள்ளவில்லை.. சேதுராமன் மகனிடம் “நான் அம்மாக்கிட்ட பேசுறேன்.. நீ கவலைப் படாதே..” என

எப்படியும் தந்தைப் பார்த்துக் கொள்வார் என்ற தைரியத்தில் ஜீவிதாவிடமும் அவள் வீட்டில் தங்கள் காதல் விவகாரத்தைத் தெரிவிக்கச் சொன்னான்..

ஜீவிதாவின் பெற்றோர் காதலிற்கு எதிரி இல்லை.. அதவும் அவளின் தந்தை முருகன் ஒரு போலீஸ் ஆபிசர். அவரே ஸ்டேஷனிற்கு வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்ய வரும் ஜோடிகள் பலரை சேர்த்து வைத்துள்ளார். ரமாவிற்கு மகளின் சந்தோஷம் தான்.. அதனால் அவரும் பெரிதாக எந்த மறுப்பும் சொல்லவில்லை.. முருகன் விதுரனைப் பற்றி விசாரித்துவிட்டு முடிவை சொல்வதாகக் கூற ஜீவிதாவும் அவரிடம் சரி என்று கூறிவிட்டாள்..

இங்கே சேதுராமன் ஒரு வாரமாக மனைவியைப் பேசிப் பேசி ஒருவாறு சமாதனப் படுத்தியிருந்தார்..

“எந்த ஜாதியா இருந்தா என்ன வைதேகி.. நம்ம பையனுக்குப் பிடிச்சுருக்கு.. பொண்ணும் நல்லப் பொண்ணா இருக்கு. அவ அப்பா அம்மாவும் நல்லவாலா இருக்கா.. விதுவோட சந்தோஷம் முக்கியமா, இல்ல உன் ஜாதி முக்கியமான்னு யோசிச்சுக்கோ?” என

அவருக்கும் ஜீவிதாவைப் பிடித்துத் தான் இருந்தது.. ஆனால் சிறுவயதில் இருந்தே பழகிய ஆச்சாரம் அனுஷ்டானம் எல்லாம் வேறு ஜாதிப் பெண்ணைத் தனது மகனிற்குத் திருமணம் செய்து வைத்தாள், சொந்தத்தின் மத்தியில் இவர்களின் குடும்பத்தைப் பற்றி தவராக பேசுவார்களோ என்கிற கவலை ஒரு புறம்.. எங்கே ஜீவிதா தன் மகனை தன்னிடம் இருந்து பிரித்து விடுவாளோ என்கிற பயம் இன்னொரு புறம்..

பெற்றவர்கள் பார்த்து முடிக்கும் பெண்களே திருமணம் முடிந்த சில மாதத்தில் கணவனை அவன் பெற்றோரிடம் இருந்து பிரித்துக் கூட்டி செல்கிறார்கள்.. இதில் இந்தப் பெண் அப்படிச் செய்ய மாட்டாள் என்று என்ன நிச்சயம்? ஜீவிதா வேறு சென்னையில் பிறந்து வளர்ந்தவள்.. நவநாகரீக யுவதி.. தங்கள் குடும்பத்திற்கு நிச்சயம் பொருந்த மாட்டாள் என்பது வைதேகியின் எண்ணம்..

சேதுராமன் துருபதன் இருவரும் பேசி பேசியே அவரை அரை மனதாய் பெண் பார்க்க சம்மதிக்க வைத்தனர்.. ஜீவிதாவின் தந்தை முருகன் விதுரனின் குடும்பத்தைப் பற்றி விசாரித்ததில் அவருக்குத் திருப்த்தியாக இருக்கப் பெண் பார்க்கும் படலத்திற்கு மாப்பிள்ளை வீட்டினரை வர சொன்னார்.

ஜீவிதா தயாராகிக் கொண்டிருக்க, ரமா வருபவர்களுக்குக் கொடுக்க ஸ்வீட் காரம் செய்து கொண்டிருந்தார்..  மாப்பிள்ளை வீட்டினர் வந்தவுடன் பொதுவாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு ஜீவிதாவை அழைத்து வர சொன்னனர்..

காபியை கொடுத்தவள் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு தந்தையின் அருகில் நின்று கொண்டாள்..

“நாங்க ஜாதகம் பார்க்காம கல்யாணம் செய்ய மாட்டோம்.. ஆனா ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் பிடிச்சுருக்கப்ப மனப்பொருத்தம் போதும்ன்னு முடிவு செஞ்சுட்டோம்.. உங்களுக்கு ஜாதகம் எதுவும் பார்க்கனுமா?” சேதுராமன் முருகனிடம் கேட்க

“இல்லங்க.. நீங்க சொன்ன மாதிரி தான். மனசு ரெண்டு ஒத்துப் போனப்பிறகு ஜாதகம் எல்லாம் எதுக்கு.. எங்களுக்கும் அதுல விருப்பம் இல்லை..” என

பின் திருமணம் யார் முறைப்படி செய்வது என்ற பேச்சு வந்தது.. வைதேகி வேகமாக 

“நீங்க உங்க பொண்ணுக்கு வரதட்சணை எதுவும் தர வேண்டாம்.. எங்க முறைப்படி கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டாலே போதும்..” என்று கூற

முருகனும் ரமாவும் அதற்குச் சம்மதம் என்றனர்.. பின் இரண்டு மாதத்தில் ஒரு முஹுர்த்ததில் சென்னையிலேயே திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.. வைதேகி என்னதான் சகஜமாகப் பேசுவது போல் நடித்தாலும் அவருக்கு இத்திருமணத்தில் சிறிது வருத்தம் இருக்கிறது என்பதை அவர் முகமே ஜீவிதாவின் வீட்டினற்கு காட்டிக் கொடுத்தது.. 

எல்லாம் பேசிமுடித்து அவர்கள் புறப்படவும் ரமா கணவனிடம் தான் நினைத்ததைக் கூற முருகனுக்கும் அதே எண்ணம் தான் என்பதால் ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தார்..

“ஜீவி அந்த வீட்ல சந்தோசமா இருப்பாளா? எனக்குச் சந்தேகமா இருக்குங்க..”

“அவங்க சைட் காதல் திருமணம் ரொம்ப ரேர்ன்னு பேசும்போதே சொன்னாங்க தானே ரமா.. முதல்ல கொஞ்சம் அப்படித் தான் இருக்கும். எல்லாம் காலப்போக்கிலச் சரியாகிடும்.. என்கிட்ட சொன்ன மாதிரி ஜீவிட்ட சொல்லி அவளைப் பயப்பட வைக்காதே… கல்யாண வேலை எக்கச்சக்கமா இருக்கு. அவங்க முறைப்படி கல்யாணம் மூணு நாள் வைப்பாங்க.. அதுக்கேத்த மாதிரி மண்டபம் பார்க்கணும்.. துணி நகைன்னு எவ்வளவு வேலை இருக்கு.. அதைப்பார்ப்போம்.. வீணா கவலைப்படாதே..” என்றார்..

நாட்கள் அதன்போக்கில் செல்ல திருமணப் புடவையைத் திருச்சியிலேயே எடுத்து வருவதாக வைதேகி கூறியிருந்தார்.. பெண் வீட்டினரின் சார்பாக எடுக்க வேண்டியதை மட்டும் அவர்களைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.. அதானால் ஜீவிதாவை அழைத்துக் கொண்டு ராமாவும் முருகனும் துணிக்கடைக்குச் சென்றனர்.. 

“என்னமா இவ்வளவு புடவை எடுக்குறீங்க.. அதுவும் எல்லாமே பட்டு… எனக்குப் பட்டு அலர்ஜின்னு தெரியும் தானே.. காட்டன் இல்ல டிசைனர் சாரீஸ் எடுங்களேன்..” ஜீவிதா தாயிடம் கூற 

“மூணு நாள் function இருக்கு ஜீவி.. மாப்பிள்ளை அழைப்பு, கல்யாணம், விருந்துன்னு.. நிச்சயதார்த்தமும் முதல் நாள் தான் செய்யப் போறோம். அன்னைக்கே நீ மூணு புடவை மாத்த வேண்டி இருக்கும். அடுத்தநாள் அவங்க நெறையா சடங்கு சொல்றாங்க.. விளையாட வைக்கிறது, நலுங்கு  அது இதுன்னு.. மூணு நாள் நீ அட்ஜஸ்ட் செஞ்சு தான் ஆகனும் ஜீவி.. டாக்டர் கிட்ட கேட்டு டேப்லட் வாங்கிப்போம்..” என

“சரிமா..” என்று சொல்வதைத் தவிற அவளிற்கு வேறு வழியில்லை.. மகளை நினைத்து ரமாவிற்குக் கவலையாக இருந்தது.. சில்க் ஜீவிதாவிற்குச் சிறு வயதில் இருந்தே சேராது… அதை உடுத்தினாலே உடம்பில் தடிப்பு தடிப்பாக வரும்.. திருமணத்தின் போது அவ்வாறு வந்துவிட்டால் என்ன செய்வது, மாப்பிள்ளை வீட்டில் இதைச் சொன்னால் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று ஜீவிதாவின் அலர்ஜியைப் பற்றி அவர்களிடம் கூறவில்லை.. வீட்டிற்கு வந்ததும் ரமா மகளிடம்

“எல்லாத்தையும் அட்ஜஸ்ட் செஞ்சுட்டு இருந்துடுவியா ஜீவி? அவங்க வேற ரொம்ப ஆச்சாரமா இருக்காங்க. எனக்குப் பயமா இருக்கு..” என

‘கழுதைக்கு வாக்கப்பட்டா உதைச்சு தானே ஆகணும்..’ என்று மனதினில் நினைத்தவள், வெளியே தாயை சமாதானம் செய்தாள்..

திருமண நாளும் வந்தது.. முதல் நாள் நிச்சயதார்த்தமும், மாப்பிள்ளை அழைப்பும் நல்ல படியாக முடிய, மறுநாள் விடியகாலையிலேயே சடங்குகள் தொடங்க ஆரம்பித்தது.. மாலை மாற்றுதல், விளையாட வைத்தல் என்று ஒவ்வொன்றாக முடிந்து கூறப்புடவையைக் கட்டி தந்தையின் மடியில் அமர்ந்து தன்னவனின் துணைவியாக மாறினாள் ஜீவிதா..

அதன்பிறகும் பல சடங்குகள் இரவு வரையிலும் தொடர்ந்தது.. மண்டப்பதிலே முதல் இரவிற்கு ஏற்பாடு செய்திருக்க ஜீவிதாவை அலங்கரித்து விதுரனுடன்   அறைக்கு அனுப்பினர்.. பால் பழம் எல்லாம் ரூமிலே வைத்திருக்க இருவரும் உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டனர்.. ஜீவிதாவிற்கு மண்டபத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க விருப்பம் இல்லை..

விதுரனிடம் இதை எப்படிக் கூறுவது என்று அவள் தயங்கிக் கொண்டிருக்க விதுரனே

“ரெண்டு நாளா செம டயர்ட்ல.. தூங்குவோம் ஜீவி..” என்று கூற

‘அப்பாட..’ என்றிருந்தது..

“டேப்லெட் போட்டியா ஜீவி?”

“ஈவின்ங் போட்டேன்”

“எதுவும் அலர்ஜி ஆகிருக்கா?”

“இல்ல.. புடவை மாத்தும் போது விபூதி தடவ சொன்னாங்க. டேப்லட் வேற போட்டத்துல எதுவும் ஆகலை.”

“சரி தூங்கு.. குட் நைட்” என்றவன் அவள் நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு படுத்துவிட அவளும் அவனுக்கு அருகில் படுத்துக் கண்களை மூடிக் கொண்டாள்..

மறுநாள் மண்டபத்திலேயே விருந்து முடிந்து ஜீவிதா விதுரன் இருவரும் ஸ்ரீரங்கம் நோக்கிப் பயணப்பட்டனர்.. ஜீவிதாவின் பெரியப்பா மகள் மற்றும் கணவன் அவர்களுடன் திருச்சிக்கு வந்தனர்.. மகள் புகுந்த வீட்டிற்குச் செல்லப் போவதை நினைத்து ரமா கண்கலங்க.. அங்கிருந்த ஜீவிதாவின் அத்தையுள் ஒருவர்

“எதுக்கு அண்ணி கண் கலங்குரீங்கா? இன்னும் பத்து நாள்ல திரும்பச் சென்னைக்குத் தானே வரப்போறாங்க.. நம்மகூடத் தானே இருக்கப் போறாங்க..”  ஜீவிதா விதுரனின் வேலையின் காராணமாக இருவரும் சென்னையில் தானே இருக்கப் போகிறார்கள் நாம் அடிக்கடி சென்று பார்த்துக் கொள்வோம் என்கிற அர்த்தத்தில் அவர் ஆறுதல் சொல்வதற்காகக் கூற அதைக் கேட்டிருந்த வைதேகிக்கோ தன் மகனை தன்னிடம் இருந்துப் பிரித்து அவர்கள் வீட்டோடு மாப்பிள்ளை ஆகிக் கொள்ளப் போகிறார்களோ என்கிற பயம் வந்தது..

பத்திரிக்கைக் கொடுக்கச் சென்ற இடத்தில் ஒருபெண்மணி வேறு

“பொண்ணு வீட்டுக்கு ஒரே பொண்ணா? இப்படி நீங்க ஒத்துக்கிட்டீங்க.. ஒரே பிள்ளையா இருக்கவங்க எல்லாம் கல்யாணம் ஆனதும் புருஷன தன்னோட பிறந்த வீட்டுக்காரங்களோட இழுக்கதான் பார்ப்பாங்க.. நம்ம விதுரன் வேற ரொம்ப சாப்ட் கேரெக்டர் ஈசியா ஏமாத்திடுவாங்க.. பாத்து இருங்க..” என்று கூறியிருக்க இன்று இவர்கள் பேசியது வேறு அவருக்குப் பயத்தையும் ஜீவிதாவின் மீது கோபத்தையும் ஏற்படுத்தியது..

சோர்ந்த மனநிலையிலேயே ஸ்ரீரங்கம் வந்தடைந்தனர்.. அவர்கள் வர இரவு ஆகியதால் ஜீவிதாவின் அக்காவும் மாமாவும் காலை ஊருக்குச் செல்லலாம் என்று கூறி ஒரு அறையில் தங்கிக்கொள்ளச் சொன்னனர்.. அன்று இரவும் ரயிலில் வந்ததினால் அசதியில் ஜீவிதா விதுரன் இருவரும் உறங்கி விட்டனர்..

மறுநாள் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று வணங்கினர்.. விதுரனின் குலதெய்வம் திருப்பதி வெங்கடாச்சலபதி.. திருமணம் முடிந்ததும் குலதெய்வம் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர்.. அடுத்தநாள் இரவு குடும்பமாகத் திருப்பதிக்கு செல்லவிருப்பதால் அதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அறைக்கு வர பதினொன்று மணி ஆகியது..

விதுரன் அன்று தங்கள் வாழ்க்கையைத் துவங்கலாம் என்று நினைத்திருக்க அவனின் பார்வையிலேயே அதை உணர்ந்த ஜீவிதா

“விது நாளைக்குக் கோவிலுக்குப் போறோம்.. வந்து இதை வெச்சுக்கலாமே..” என அவனும் சரி என்றுவிட்டான்..

திருப்பதி சென்றதும் ஹோட்டலில் இரு அறைகள் எடுத்தனர்.. புதுமணத்தம்பதியினர் ஒரு அறையிலும் மற்ற மூவரும் ஒரு அறையிலும் குளித்துக் கோவிலுக்குச் செல்ல தாயாராகினர்.

“நீ குளிச்சுட்டு வந்து என்னை எழுப்பு ஜீவி.. கொஞ்ச நேரம் தூங்கிக்குறேன்..” என்ற விதுரன் பெட்டில் படுத்துக் கொள்ள  ஜீவிதாவும் குளிக்கச் சென்றாள்

புடவையைக் கட்டி முடித்துவிட்டு அவனை எழுப்பியவள் தலையைத் துவட்டிக் கொண்டிருக்க

“ஜீவி எதுக்குப் பட்டுப் புடவை கட்டின? காட்டன் சாரீ மாத்து..”

“இல்ல விது.. அத்தை கோவிலுக்குக் கல்யாணப் புடவையைக் கட்டீட்டு வரணும்ன்னு நேத்தே சொல்லீட்டாங்க. டேப்லெட் போட்டுக்குறேன்.. ஒன்னும் பிரச்சனை இல்ல..” என

“அம்மாகிட்ட நான் சொல்லிகிறேன் நீ ட்ரெஸ் மாத்து..” என்றவன் அறையை விட்டு வெளியே செல்லப் போக

“விது ப்ளீஸ்.. வேண்டாம்.. இன்னைக்கு ஒரு நாள் தானே.. நான் அட்ஜஸ்ட் செஞ்சுக்குறேன்.. நீ கிளம்பு..” என்று அவனைக் குளியல் அறையை நோக்கி நகர்த்தினாள்..

“சரி.. காப்பி ஆர்டர் செஞ்சுடு.. அம்மா அப்பாக்குப் பாலா காப்பியான்னு கேட்டுட்டு ஆர்டர் செய் ஜீவி..” என்றவன் குளிக்கச் சென்றான்.

அடுத்த அறைக்குச் சென்று மாமனார் மாமியாரிடம் என்ன வேண்டும் என்று கேட்க

“எல்லாருக்குமே பாலே சொல்லிடு.. கல்யாணம் ஆகி முதல் முதல்ல குலதெய்வம் கோவிலுக்குப் போறோம் விரதம் இருக்கணும்.. பாலுக்குத் தோஷம் இல்ல.. அதுனால அதையே ஆர்டர் பண்ணு..” வைதேகி கூற

“சரி அத்தை..” என்றவள் தங்கள் அறைக்கு வந்து இன்டர்காம் வழியாக ஆர்டர் செய்தாள்..

விதுரன் குளித்திவிட்டு வந்தவன் அங்கே இரண்டு கப் பால் இருப்பதைப் பார்த்துவிட்டு

“பால் எதுக்கு ஆர்டர் பண்ண? காபி தானே சொல்லீட்டு போனேன்..”

“இல்ல அத்தை எல்லாருக்கும் பாலே சொல்லிடுன்னு சொன்னாங்க.. அதான்..”

“உனக்குப் பால் சுத்தமா பிடிக்காது தானே.. அம்மாகிட்ட சொல்ல வேண்டியது தானே..”

“பரவாயில்லை விது.. இத குடிச்சுக்குறேன்” என்றவள் மெதுவாகப் பாலைப் பருக ஆரம்பித்தாள்.. அந்த வாடை அவளிற்குப் பிடிக்கவில்லை என்றாலும் பசி எடுத்ததால் அதைக் கஷ்டப்பட்டுக் குடித்து முடித்தாள்..

மாத்திரையைப் பால் குடித்தவுடன் போடவேண்டும் என்று எடுத்து வைத்தவள்.. பாலை குடிக்க வெகு நேரம் ஆகியதில் அதை மறந்திருந்தாள்..

அனைவரும் கோவிலுக்குச் சென்று வரிசையில் நின்று ஸ்ரீநிவாசனை தரிசித்தனர்.. கூட்டத்தில் ஜீவி விதுரன் இருவரும் முன்னே இருக்க மற்ற மூவர்களும் பின்னே மாட்டிக் கொண்டனர்.. கோவிலின் வெளியே அவர்களுக்காக இருவரும் காத்திருக்க அப்பொழுது தான் கவனித்தான்.

ஜீவிதா முகம் எல்லாம் வியர்க்க கண்ணில் கண்ணீருடன் நின்றுக் கொண்டிருப்பதை..

“ஜீவி என்னாச்சு?” பதறி அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்

“உடம்பு எல்லாம் அரிக்குது விது.. முடியலை..” என்றாள் கண்ணீருடன்

“டேப்லட் போடலையா?”

“மறந்துட்டேன்..” என்றவளால் அரிப்பை தாங்க முடியவில்லை…

“என்ன ஜீவி..” என்று அதட்டியவன் பின் “சரிவா.. ரூமுக்கு போவோம்..” என

“அத்தை மாமா இன்னும் வரலை..”

“நம்மல காணோம்ன்னா ரூம்க்கு போயிருப்போம்ன்னு கெஸ் செஞ்சு அங்க வந்துடுவாங்க.. நீ முதல்ல வா..” என்றவன் ஹோட்டலிற்கு அழைத்துச் சென்றான்.

அறைக்கு வந்ததும் வேகமாகப் புடவையில் இருந்த பின்னைக் கலட்டியவள் குளியல் அறையை நோக்கி ஓட அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது விதுரனிற்கு..

அரைமணி நேரத்திற்கு மேலாக ஷவரை திறந்து விட்டு அதன் அடியில் நின்றாள்.. பின் மாற்றுடை எடுத்து வராதது கருத்தில் பதிய

“விது ட்ரெஸ் சேன்ஜ் பண்ணனும் கொஞ்சம் வெளிய இரேன்..” என

“இப்போ பரவாயில்லையா?”

“ம்”

“சரி நான் வெளியே போறேன்.. நீ வா..” என்றவனிற்கு அப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது..

அந்த நிம்மதி இன்னும் சற்று நேரத்தில் குறையப் போவதை அவனும் அறியவில்லை அவனின் மனையாளும் அறியவில்லை.

 

Advertisement