அத்தியாயம் 2
“விது என்னை ஏமாத்தப் பார்க்காதே.. அப்பறம் எங்க அப்பாட்ட சொல்லி உன்னை ஜெயில்ல போட்டுடுவேன்.. காதலிச்சுட்டு கழட்டி விடலாம்ன்னு பார்க்குறியா?” ஜீவிதா விதுரனை பேச விடாமல் பொரிந்து கொண்டிருக்க
“ஹே லூசு.. இன்னும் வீட்ல எதுவுமே பேசி முடிவாகல.. டைம் இருக்கு.. அந்த எருமை (துருபதன்) சொல்லுச்சுன்னு சண்டைக்கு வரியே நியாயமா?”
“ஒழுங்கா உங்க அம்மாட்ட நம்ம லவ் மாட்டரா சீக்கிரம் சொல்லு.. இல்ல என்னையாச்சும் எங்க வீட்ல சொல்லவிடு..”
“உங்க வீட்ல தான் பிரச்சனையே இல்லையே.. நான் முதல்ல எங்க ஆத்ல பேசுறேன்..”
“ஆத்ல பேசுவியோ குளத்தில பேசுவியோ.. சீக்கிரம் ஒரு முடிவ சொல்லு.. இல்ல கொன்னுடுவேன்..”
“ஏற்கனவே ப்ளேன் பண்ண மாதிரி நீ உன் ப்ரெண்ட் மேரேஜூக்கு திருச்சிக்கு வந்துட்டு இங்க வா. அப்பறம் எல்லாம் தன்னால நடக்கும்..”
“உங்க வீட்ல எதுவும் நினைச்சுக்க மாட்டாங்க தானே?”
“என்ன நினைக்கப் போறாங்க?” என்றான் புரியாமல்
“இல்ல ஒரு பொண்ண ப்ரெண்ட்ன்னு சொல்லி வீட்டுக்கு கூட்டீட்டு போற.. நாலஞ்சு பேரா வந்தா கூட ஒன்னும் தெரியாது.. ஒரு பொண்ணு மட்டும்ன்னா தப்பா நினைக்க மாட்டாங்களா?” என்று கேட்க
“உன்னை என்னோட வேலை செய்ற பொண்ணு திருச்சிக்கு மேரேஜ்க்கு வந்துருக்கா வீட்டுக்கு வான்னு சொல்லிருக்கேன்னு தான் அம்மா கிட்ட சொல்லிருக்கேன்.. அம்மா பொண்ணு பையன் அப்படி எல்லாம் பார்க்க மாட்டாங்க.. ப்ரெண்ட்ஸ் யார் வந்தாலும் நல்லா தான் கவனிச்சுப்பாங்க.. ஸ்கூல் காலேஜ் ப்ரெண்ட்ஸ்ன்னு நான் நிறையப் பொண்ணுங்கள வீட்டுக்கு கூட்டீட்டு வந்துருக்கேன்.. அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க..” என
“ம் சரி..” என்றாள் மெதுவாக
“நாளைக்கு வைகைல தானே கிளம்புற?”
“ம் ஆமா.”
“ஓகே நான் ஸ்டேஷன் வரேன்..”
“வேண்டாம்.. என் ப்ரிண்ட்ஸ் எல்லாரும் வராங்க.. நான் அவங்களோட மண்டபத்துக்குப் போய்டுவேன்.. கல்யாணம் முடிஞ்சதும் உனக்குக் கால் பண்றேன்.. வந்து உங்க வீட்டுக்கு கூட்டீட்டு போ.”
“சரி.. கொஞ்சம் பொண்ணு மாதிரி வாடி..”
“டேய்…” என்று அவள் பல்லைக் கடிக்க
“ஜீன் டாப் போடாதேன்னு சொல்ல வந்தேன்.. அம்மாக்கு அதெல்லாம் பிடிக்காது..”
“அதுக்காகப் புடவை கட்டிகிட்டா வர முடியும்?”
“அட்லீஸ்ட் சுடிதார் ஆச்சும் போட்டுட்டு வாயேன்..”
“ம் சரி..”
“அப்பறம்…” என்று அவன் இழுக்க
“என்ன சொல்லு?”
“ப்ரீ ஹேர் விடாதே.. சென்டர்ல கிளிப் குத்தீட்டு வராதே.. போனி போடு..”
“ஐயோ விது.. ஆப்டர் மேரேஜ் இவ்வளவு ரெஸ்ட்ரிக்ஷன் எல்லாம் என்னால தாங்க முடியாது.. ஹேர் ஸ்டைல் செய்யப் பிடிக்காம தான் நானே கட் செஞ்சுட்டு இருக்கேன்.. இதுல நீ என்னை ரொம்பப் படுத்துற.”
“ஒன்டே மட்டும் ஜீவி.. ப்ளீஸ்.. அம்மாக்கு உன் மேல ஒரு நல்ல ஒபினியன் வரணும்ல…”
“இப்போ நான் நல்லவ மாதிரி நடிச்சுட்டு, ஆப்டர் மேரேஜ் என் இஷ்டத்துக்கு இருந்தா அவங்க அப்போ என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க.. நான் நானா இருக்கிறது தான் நல்லது.. நடிச்சு, பொய் சொல்லி அத்தைய ஏமாத்த நான் விரும்பல.”
“ஜீவி.. புரிஞ்சுக்கோ.. ஆயரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம்.. நம்ம சொல்றது எல்லாம் பொய்யே இல்ல.. ஜஸ்ட் ஆக்டிங்..”
“ஆக்டிங் வேற பொய் வேறையா?”
“என்னைக் கோவப்படுத்தாதே ஜீவி.. நம்ம சேரணும்னு நீ நினைச்ச நான் சொல்ற படி செய்.. இல்ல உன் இஷ்டத்துக்கு என்னவோ பண்ணு..” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்..
‘போன கட் செஞ்சுட்ட இல்ல. இதுக்காகவே ஜீன் போட்டுட்டு தான்டா உங்க வீட்டுக்கு வருவேன்’ என்று மனதினில் சொல்லிக் கொண்டாள் ஜீவிதா.
ஜீவிதாவிடம் கத்திவிட்டுக் கோபமாக அறைக்கு வந்த அண்ணனைப் பார்த்த துருபதன்
“என்னாச்சுடா? மன்னி கோச்சுக்கிட்டாங்களா? நான் சும்மா ஜாலிக்கு தான் போட்டுக் கொடுத்தேன்.. அயம் சாரி.” என
“சச்ச அதுனால சண்டை இல்லடா.. இது வேற…”
“ஓ..” என்றவன் அதற்கு மேல் கேட்கவில்லை..
அங்கே ஜீவிதாவின் வீட்டில் ரமா மகளிற்குப் பேக் செய்து கொண்டிருந்தார்..
“ஜீவி பிளவுஸ் கரெக்டா இருக்கான்னு செக் பண்ண சொன்னேன்ல.. போட்டுப் பார்த்தியா?”
“கரெக்ட்டா தான்மா இருக்கும்.. அந்த ரெட் கலர் பிளவுச தானே அளவுக்குக் கொடுத்தீங்க?”
“அதான் கொடுத்தேன்.. எதுக்கும் ஒரு தடவை போட்டுப் பாரேன்.”
“போங்கமா.. இருக்கட்டும்.. நீங்க எடுத்து வைங்க.” என்றவள் ஹெட்போனுடன் பால்கனிக்கு சென்று ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள்.
“ஒருவேலை செய்றதில்லை.. ஸ்டிச் கரெக்ட்டா இருக்கான்னு பார்க்க சொன்னா அதையும் செய்றதில்லை.. போனை தூக்கிப் போட்டு உடைக்கப் போறேன்..” என்று திட்டிக் கொண்டே துணிகளை அடிக்கி வைத்தார்..
பாடல் கேட்டுக் கொண்டிருந்த ஜீவிதா நியாபகம் வந்தவளாக
“அம்மா ஒரு சுடிதார் எடுத்து வைங்க..” என
“என்ன கலர்?”
“எதையாச்சும் எடுத்து வைங்களேன்.. சும்மா கேள்வி கேட்டுகிட்டே இருக்கீங்க..”
“எதுக்கெடுத்தாலும் கத்து..” என்றவர் ஒரு சுடிதாரை எடுத்து வைத்தார்..
‘இந்த லூசு மேல இருக்க கோபத்தை அம்மா மேல காட்ட வேண்டியதா போச்சு.. நேர்ல இருக்கு அவனுக்கு..’ மனதினுள் நினைத்துக் கொண்டாள்.
அடுத்த நாள் தோழிகளுடன் திருச்சிக்கு பயணம் செய்து கொண்டிருந்தாள் ஜீவிதா…
புறப்பட்டுவிட்டேன் என்று அவனிற்கு மெசேஜ் செய்ய அவனிடம் இருந்து ஒரு தம்ப்ஸ் அப் மட்டுமே பதிலாக வந்தது..
‘பார்த்து வான்னு கூடச் சொல்ல முடியாதா உன்னால.. உனக்கு அவ்வளவு இருந்தா… எனக்கு எவ்வளவு இருக்கும். பார்த்துக்குறேன் உன்னை..’ என்று நினைத்தவள் அதற்குப் பிறகு அவனிற்குக் குறுந்தகவல் எதுவும் அனுப்பவில்லை..
தோழியின் திருமணம் முடிந்தவுடன் அவனிற்கு கால் செய்தவள்
‘திருமணம் முடிந்துவிட்டது’ என்று மட்டும் கூறினாள்.. அவனும் தான் சிறிது நேரத்தில் வந்து அவளை அழைத்துக் கொண்டு போவதாகக் கூற தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றவள் புடவையை மாற்றப் போக, பிறகு என்ன நினைத்தாளோ அதிலேயே தன்னவனின் வீட்டிற்குப் போகலாம் என்று முடிவு செய்தாள்..
விதுரன் மண்டபத்திற்கு வெளியே நின்றவன் அவளிற்கு அழைத்துத் தான் வந்துவிட்டதாகக் கூற, தோழிகளிடம் கூறிவிட்டு வெளியே வந்தாள்.. ஜீவிதா வருவதைப் பார்த்த விதுரனிற்கு அதிரிச்சியாக இருந்தது.. புடவைக் கட்டி அவன் கூறியது போல் ஹேர் ஸ்டைல் செய்து பூ வைத்து அழகாக வந்திருந்தாள்.
அவளைப் பார்த்தவன் பார்த்தப்படி நிற்க அவன் அருகில் சென்றவள், தனது பேக்கை அவன் பைக்கின் மேலே நங்கென்று வைக்க, அதில் சுயவுணர்வு அடைந்தவன் ஒன்றும் கூறாமல் பைக்கில் ஏற அவன் பின்னால் அவள் ஏறியதும் தனது வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.. இருவரும் எதுவும் பேசவில்லை..
நேற்று முடியாது என்றவள் இன்று தனக்காகத் தான் இவ்வாறு வந்திருக்கிறாள் என்று விதுரனிற்குச் சந்தோஷமாக இருந்தாலும் அவளிடம் அவன் பேசவில்லை.. ‘அவனுக்காகத் தானே அவன் சொன்னப்படி கிளம்பி வந்துருக்கேன்.. அப்படி இருந்தும் ஒரு வார்த்தை பேசுறானா பாரு.. போடா நீயா வந்து பேசுற வரை நானும் பேச மாட்டேன்..’ என்று ஜீவிதாவும் மவுனமாக வந்தாள்.
தங்கள் தெருவை நெருங்கியதும் வண்டியை நிறுத்தியவன் அவளைத் திரும்பி ஒரு பார்வைப்பார்க்க அவளும் என்ன என்பது போல் பார்க்க, கீழே இறங்குமாறு சைகை செய்தான்..
“வாயைத்திறந்து சொல்ல முடியாதோ? வாய்ல என்ன கொழுக்கட்டையா இருக்கு.” என்று முனங்கியவாரே இறங்க
“ஆமா பாதிச் சாப்டுட்டேன்.. மீதி இருக்கு வேணுமா?” என்றான்
“ச்சீ பே..” என்றவள் அவனுடன் நடக்க.. வீட்டின் வாசலில் பைக்கை நிறுத்தியவன் அவளிடம்
“சொன்னத எல்லாம் மறந்துடாதே.. கொஞ்சம் நல்லப் பிள்ளை மாதிரி நடந்துக்கோ..” என
“அப்போ நான் என்ன கெட்டவளா?” என்று முறைக்க
“அம்மா தாயே ஆரம்பிக்காதே..” என்றவன் வீட்டிற்குள் நுழைய.. அவனை மனதினுள் திட்டிக் கொண்டே அவனின் பின்னால் சென்றாள். உள்ளே நுழைந்தவளைப் பார்த்த வைதேகி
“வாமா..” என்று புன்னகைக்க இவளும் கரம் குவித்து “வணக்கம் ஆண்ட்டி” என்றாள்.. அவளை உட்கார சொன்னவர் குடிக்கத் தண்ணீர் எடுத்து வந்தார்..
“கல்யாணம் நல்ல படியா முடிஞ்சதாமா?” என்று சம்பிரதாயமாகப் பேசிக் கொண்டிருந்தார்.. துருபதனும் சிறிது நேரம் பேசிவிட்டு அறைக்குச் சென்றான்..
“அப்பா பூஜை முடிச்சுடாலா மா..” விதுரன் கேட்க
“நெய்வேத்தியம் செஞ்சுண்டு இருந்தா.. இரு போய்ப் பார்க்குறேன்..” என்றவர் பூஜை அறைக்குச் செல்ல.. ஜீவிதா விதுரனிடம்
“ஆயில் மசாஜ் கேள்வி பட்டிருக்கேன்.. அது என்ன விது நெய் வைத்தியம்? ஆயிலுக்கு பதில்ல நெய்ல மசாஜ் செய்வாங்களா? அதுவும் பூஜை ரூம்ல..” என்று சந்தேகம் கேட்க.. விதுரன் தன் தலையில் அடித்துக் கொண்டான்..
“அது ஆயில் மசாஜும் இல்ல.. நெய் மசாஜும் இல்ல.. நெய்வேத்தியம் அப்படினா சாமிக்கு ப்ரசாதம் படைப்போம்ல அதான்” என்றான்.
“ஓ..தெரியாம தானே கேட்டேன்.. அதுக்கு ஏன் தலையில அடிச்சுக்கிற..” என்று அவனை முறைத்தவள், பூஜை அறையில் இருந்து வந்த வைதேகியிடம் தன் பார்வையைச் செலுத்தினாள்..
சேதுராமனும் வர சிறுது நேரம் பேசிவிட்டு உணவருந்த சென்றனர்..
“வைதேகி சாத்தமிர்து” என்று சேதுராமன் கேட்க
அத்தையின் சமையலை அமிர்தம் என்று மாமா புகழ்கிறார் போல என்று ஜீவிதா நினைத்தாள்.. வைதேகி ரசத்தைக் கணவனிற்கு ஊற்றி விட்டு மகனிடம்
“விது உனக்கு சாத்தமிர்து?” என
“இல்லமா.. தயிர் போதும்..”
“திருக்கணம் வாங்கிக்கோடா..”
“கப்ல குடிச்சுக்குறேன்.” என்றதும் தயிரை ஊற்றினார்..
என்ன பேசுறாங்க என்று ஜீவிதா விதுரனைப் பார்க்க
“சாத்தமிர்து அப்படினா ரசம்.. திருக்கணம்னா பாயசம்” என்றான்
“ஓ” என்றவள் அமைதியாக உண்ண ஆரம்பித்தாள்.
“ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிக்கிறியாமா?” என்று வைதேகி கேட்க. அவளிற்கும் புடவை கட்டியிருப்பது அசவுகரியமாக இருக்க அவர் காட்டிய அறையில் சென்று சுடிதாருக்கு மாறினாள்..
“ஈவ்னிங் எத்தனை மணிக்குமா ட்ரைன்?”
“எட்டு மணிக்கு ஆண்ட்டி..”
“விது போற ட்ரைன் தானா?”
“ஆமா ஆண்ட்டி..”
“நைட் டின்னர் இங்கையே சாப்புடுறீங்களா? இல்ல பேக் செஞ்சு தரவா?” என்று கேட்க.. அவளிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நிற்க விதுரன் தான் பதில் சொன்னான்..
அவர்கள் புறப்படும் வரை விதுரனின் குடும்பத்துடன் நன்றாகப் பேசினாள் ஜீவிதா.. வைதேகி ஜீவிதாவிற்கு தாம்பாளத்தில் வெற்றிலைப் பார்க்கு பூவுடன் புடவை ஒன்றை கொடுக்க
“எதுக்கு ஆண்ட்டி இதெல்லாம்?” அவள் தயங்க
“இதுல என்னமா இருக்கு.. ஆத்துக்கு வந்தவால வெறும் கைய்யோட அனுப்பக் கூடாது.. வாங்கிக்கோ..” என்றதும், தனது வருங்கால மாமியார் மாமனாரின் காலில் விழுந்து அவர்கள் கொடுத்தப் புடவையை வாங்கிக் கொண்டாள்.
“கிளம்புறேன் ஆண்ட்டி.. நீங்க விதுவப் பார்க்க சென்னை வரப்ப கண்டிப்பா நம்ம வீட்டுக்கு வரணும்.. அங்கிள் நீங்களும்”
“கண்டிப்பா மா.. வரோம்..” என்றனர் இருவரும்.. அப்பொழுது துருபதன்
“அப்போ நான் வரவேண்டாமா மன்..” மன்னி என்று சொல்ல வந்தவன் சட்டென்று சுதாரித்து ஜீவிதா என்றான். ஜீவிதா விதுரன் காதல் விஷயம் தெரிந்ததில் இருந்தே துருபதன் அவளை மன்னி என்று தான் அழைப்பான்.
விதுரன் தம்பியிடம் நட்பாகப் பழகுவான்.. அதனால் தனது காதல் விஷயத்தை அவனிடம் கூறியிருந்தான்.. அதோடு ஜீவிதாவை அவனுடன் போனிலும் அறிமுகம் செய்துவைத்திருந்தான்.
துருபதன் மன் என்று ஆரம்பித்ததில் சற்று பயந்த ஜீவிதா பின்
“நீங்களும் கண்டிப்பா வாங்க துருபதன்..” என்றாள்.
*******************
ரயிலில் தன்னவனின் தோளில் சாய்ந்திருந்த ஜீவிதா
“விது ஆண்ட்டிக்கு என்னைப் பிடிச்சுருக்கும் தானே?”
“அப்படித் தான் நினைக்குறேன்..” என்றான் அவளை அணைத்தவாறே
“உங்க வீட்டு ஸ்லாங்கே எனக்குப் புரியலை விது.. சாத்தமிர்து, திருக்கணம்.. நீ இந்த வார்ட்ஸ் எல்லாம் என்கூட பேசும் போது யூஸ் பண்ணாதே இல்லை..”
“ஆத்ல அப்படிப் பேசுவேன்.. ப்ரெண்ட்ஸ் கூட பேசும் போது எங்க ஸ்லாங் வராது.. அப்படியே பழகிடுச்சு.. உனக்கும் போகப் போகப் பழகிடும்.”
“இனிமே என்னோட நீ பேசும் போது உங்க அம்மா அப்பா கிட்ட பேசுற மாதிரியே பேசு.. அப்போ தான் நானும் உங்க ஸ்லாங்க கத்துக்க முடியும்..”
“ம் பேசிடலாம்..”
“சீக்கிரம் உங்க அம்மா அப்பாகிட்ட பெர்மிஷன் வாங்கிடு விது..”
“ம் வாங்கிடலாம்…” என்றதும் அவன் தோளில் இருந்து தனது தலையை எடுத்தவள் அவனின் கையில் அடித்தாள்..
“எப்போ எதுக்குடி அடிக்கிற?”
“ஆமா என்ன சொன்னாலும் பேசிடலாம் வாங்கிடலாம்ன்னு சொல்லீட்டு இருக்க… சீரியஸ்ஸ இரு விது..”
“நானும் சீரியஸா தான்டி சொன்னேன்.. கொஞ்ச நாள் பொறுத்துக்கோ கண்டிப்பா ஆத்ல பேசிடுறேன்..”
“ம்” என்றவள் திடீரென்று
“பெரிய இவனாட்டம் ரெண்டு நாளா பேசாம இருந்த.. இப்ப மட்டும் எதுக்குடா பேசுற?”
“நீ மட்டும் பேசுனியா?”
“நீ சொன்ன மாதிரி தானே வந்தேன்.. அப்போ கூட ஒரு வார்த்தை நீ பேசலை தானே..”
“அதுவா…” என்று இழுத்தவன் அவள் காதருகில் குனிந்து
“சேரீ மல்லிகைப்பூ எல்லாம் வெச்சு சும்மா கும்முன்னு இருந்தியா… என்னால கண்ட்ரோல் செய்ய முடியலை.. ஐ பீல் லைக் கிஸ்ஸிங் யூ..” என
“போடா..” என்றவள் மேலும் இரண்டு அடிகளைக் கொடுத்தாள்..