Advertisement

என் காதல் தாரகை நீ தானடிஹரிணி மதுரவல்லி…

அத்தியாயம் 1

பஜோ ராதே கோவிந்த கோபாலா

பஜோ ராதே கோவிந்த நந்தலாலா

மெல்லிய ஓசையில் பாடலை கேட்டுக் கொண்டிருந்தார் வைதேகி.. அவருக்கு இரவு பாடல்கள் கேட்காமல் உறக்கம் வராது.. அதுவும் குறிப்பாகப் பஜனை பாடல் ஒன்றாவது கேட்டுவிட்டு தான் படுப்பார்..  அப்பொழுது அவர் கணவர் சேதுராமன் கையில் மொபைலுடன் உள்ளே வந்தார்..

“இந்தா வைதேகி உன் பையன் பேசுறான்..” என்று அவரிடம் அலைபேசியை நீட்டினார்.. அதை வாங்கிய வைதேகி

“சொல்லுடா… ட்ரைன் கிளம்பிடுச்சா? சாப்டியா?” என

“ம் கிளம்பிடுச்சுமா.. ரூம்லையே சாப்டுட்டேன்.” என்றான் அவரின் மகன் விதுரன்

“அலாரம் வெச்சுக்கோ.. போன தடவை மாதிரி தூங்கிட்டு திருச்சில இறங்குறதுக்குப் பதிலா மதுரைல இறங்காதே..”

“அதெல்லாம் வெச்சுட்டேன் மா.. ஒரு தடவை தெரியாம தூங்கிட்டேன்.. சும்மா அதையே சொல்றேள்”

“சரி பார்த்து வா..” என்றவர் அலைபேசியைத் துண்டித்து கணவரிடம் கொடுத்துவிட்டு

“அலாரம் வெச்சுடுங்கோணா அவன் தூங்கிட்டான்னா என்ன பண்றது? மூணு மணிக்கு போன் செஞ்சுடுறேன் அவனுக்கு..”

“அவன் பார்த்துப்பான் வைதேகி.. அவன் என்ன சின்னக் குழந்தையா? அப்படியே தூங்குனாலும் வேற ஊர்ல இருந்து பஸ் புடிச்சு வர தெரியாதா அவனுக்கு. நீ நிம்மதியா தூங்கு.” என்றவர் படுக்கையில் படுத்தார்..

                                                                         ************

“இன்னும் ஒரு வாய்டா.” என்று மகள் ஜீவிதாவின் பின்னால் தட்டைத் தூக்கிக் கொண்டே கெஞ்சிக் கொண்டிருந்தார் முருகன்.

“போதும்பா..”

“மூணு தோசை கூட முழுசா சாப்பிடல.. இத மட்டும் வாங்கிக்கோ.” என்று மீண்டும் அவள் பின்னோடு செல்ல.. அவரது அலைபேசி அடித்தது.

“ரமா.. போன் அடிக்குது.. எடுத்து யாருன்னு பாரு.. ஸ்டேஷன்ல இருந்து பண்ணாங்கன்னா  குழந்தைக்கு ஊட்டிகிட்டு இருக்கார்.. பத்து நிமிஷத்துல கிளம்புடுவார்ன்னு சொல்லு..”

“ஆமா இடுப்புல தூக்கி வெச்சு கொஞ்சிக்கிட்ட ஊட்டி விடுங்க.. ரெண்டு வயசு குழந்தை பாருங்க உங்க பொண்ணு.. குழந்தையாம் குழந்தை” என்று கணவனிடம் கூறிய ரமா மகளின் புறம் திரும்பி

“சீக்கிரம் சாப்பிடு.. அப்பா டியூட்டிக்கு போக வேண்டாமா.. உன் பின்னாடியே தட்டைத் தூக்கிட்டு கெஞ்சிக்கிட்டு இருக்கார்..”

“உங்களுக்குப் பொறாமை.. உங்க அப்பா இப்படி எல்லாம் செஞ்சதில்லைன்னு..”

“ஆமா பொறாமை.. உனக்கே குழந்தைப் பிறக்குற வயசாகிடுச்சு.. இன்னும் அப்பா ஊட்டணும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்க.. அவரும் வேலைக்கு நேரம் ஆகுறது கூடக் கண்டுக்காம உனக்கு ஊட்டிகிட்டு இருக்கார்.”

“ரமா.. முதல்ல போய் போன்ன எடு.” என்றவர் மகளிற்கு உணவை ஊட்டும்வரை வேறு எந்த வேலையும் செய்யவில்லை.. உண்டு முடித்தவள் தந்தைக்கு விடைகொடுத்துவிட்டு தனதறைக்கு வரவும் வாட்சப்பில் மெசேஜ் டோன் கேட்கவும் சரியாக இருந்தது..

“போர்டெட் ட்ரைன்.” என்ற மெசெஜ் விதுரனிடம் இருந்து வந்தது..

“ஹேட் டின்னர்?” என்று ஜீவிதா அனுப்ப

“யஸ்..”

“ஓகே..குட் நைட்.”

“ஹே என்னடி அதுக்குள்ள தூங்க போறியா?”

“டயர்டா இருக்கு விது”

“ப்ச் உனக்கு என்னைக்குத் தான் டயர்டா இல்லாம இருந்தது? ஒரு வேலை வீட்ல செய்றதில்லை.. எல்லாமே என் மாமியாரும் மாமனாரும் செஞ்சுடுறாங்க.. அப்படி இருந்தும் டயர்டா இருக்குன்னு சொல்லுற.”

“நேத்து நைட் எவ்வளவு நேரம் பேசுனோம்.. இன்னைக்கு ஆபீஸ்லையும் வேலை அதிகம்..”

“உன்னை எல்லாம் கட்டிக்கிட்டு நான் என்ன பாடு படப் போறேனோ?” என்று அலுத்தவன் “சரி போய்த் தூங்கு.. நாளைக்குப் பேசலாம்.. பாய்..” என்றான்..

அதிகாலை மூன்று மணிக்கு திருச்சிக்கு வந்திறங்கிய விதுரன் அங்கிருந்து டாக்ஸி ஒன்றை பிடித்து ஸ்ரீரங்கத்தில் உள்ள தங்கள் வீட்டிற்குச் சென்றான்.. ஸ்ரீ ரங்கநாதர் கோவிலுக்கு மிக அருகில் இவர்களின் விடு இருந்தது.. அவன் வீட்டை அடையும் போது மணி மூன்றரை.. அவன் அழைப்பு மணியை அடிக்க சேதுராமன் வந்து திறந்துவிட்டார்..

“வாடா.. பிரயாணம் எல்லாம் சவுகரியமா இருந்ததா?” என்றவர் அவன் கையில் இருந்த பெட்டியை வாங்கினார்..

“ம் பா.”

“சரி தூங்குடா.. காலம்பர பேசலாம்..” என்று உள்ளே சென்றார்..

இவனும் தனதறைக்கு வந்து உறங்க ஆரம்பித்தான். காலையில் கேட்ட சுப்ரபாதத்தில் கண் திறந்தவன் வெளியே வந்தான்..

“ஏன்மா இப்படிக் காலங்காத்தாலா இவ்வளவு சவுண்டா சுப்ரபாதம் போட்டு என் தூக்கத்தைக் கெடுக்குரேள்”

“மணி என்னன்னு பார்த்தியா? இன்னும் நோக்கு என்னடா தூக்கம்?”

“நைட் ட்ரைன்ல சரியாவே தூங்கலமா..”

“மதியம் தூங்கிக்கோ.. இப்போ குளிச்சுட்டு சாப்பிடு..”

“காபி கொடுமா” என்றவன் அவரை நெருங்க

“டேய் தள்ளிப்போ.. நான் மடியா இருக்கேன்.. குளிக்காம பக்கத்துல வராதே..”

“படுத்துற மா..”

“உன்னை விடச் சின்னவன் அவனே சீக்கிரம் எழுந்து குளிச்சுட்டான்.. நோக்கு என்னடா?” அங்கிருந்த தனது இரண்டாவது மகன் துருபதனை காட்டிச் சொல்ல.. தம்பியின் தலையில் கொட்டு வைத்துவிட்டு அறைக்குச் சென்றான் விதுரன்..

குளித்து முடித்தவன் தனது டி ஷர்ட் ஒன்றை தேட அது கிடைக்காததால் தாயைத் தேடிச் சென்றான்.. அவன் அம்மா என்று அழைக்கும் முன்பே

“டேய் உன் பூணல் எங்க?” என்று கேட்க

அப்பொழுது தான் அவனும் அதைக் கவனித்தான். எப்பொழுதும் ஊருக்கு வரும் பொழுது மட்டுமே அதை அவன் அணிவான்.. சென்னைக்குச் சென்றதும் அதைக்கழட்டி வைத்துவிடுவான்.. இந்த முறை அதை அணிய மறந்துவிட்டான்.. ‘போச்சு இன்னைக்கு மட்டுனேன்..’ என்று அவன் மனதினில் நினைக்க

“உன்ன தான்டா கேக்குறேன் எங்க? சென்னைக்குப் போனதும் கழட்டி வெச்சுடுரியா” என்று வைதேகி சரியாகக் கேட்க

“இல்லமா.. அந்து போச்சு.. ஆத்துக்கு வந்ததும் புதுசு போட்டுக்கலாம்ன்னு இருந்தேன்..”

“என்னை நம்பச் சொல்றியா? உனக்குப் போய் விதுரன்னு பேர் வெச்சேன் பார்.. மஹாபாரதத்தில நேர்மையா இருந்த மனிஷன் அவர்.. ஆனா நீ வாயத் திறந்தா பொய் தான்டா பேசுற.” என்றவர் கணவனின் புறம் திரும்பி

“பாருங்கணா இவன? இதுக்கு தான் சென்னைக்கு அனுப்பாதேள்ன்னு சொன்னேன்… காலேஜ் வேலைன்னு அங்கையே இருந்துட்டு நம்ம ஆச்சாரம் அனுஷ்டானம் எல்லாத்தையும் மறந்துட்டான்…” என

“இல்லமா. நிஜமாவே அந்து போச்சு..”

“டெய்லி சந்தியா வந்தனம் பண்ண சொன்னா வேலைக்கு லேட் ஆறதுமான்னு சொன்ன.. இப்போ பூணலையேகழட்டீட்ட. அடுத்து என்ன வேற மதப் பொண்ண கல்யாணம் செஞ்சு வரப்போறியா?” என்று கேட்க

“அம்மா எல்லாமே சரியா சொல்றாங்களடா அண்ணா” துருபதன் அண்ணனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னான்..

“டேய் சும்மா இரு..” என்று தம்பியை முறைத்தவன்

“அம்மா சும்மா என்னைக் குறை சொல்லாதிங்கோ.. அப்பா நீங்க பூணல் எடுத்துட்டு வாங்கோ.. நான் காயத்ரி மந்திரம் சொல்லிட்டு போட்டுக்குறேன்..” என்றவன் பஞ்ச பாத்திரத்தை (ஒரு வகையான சொம்பு.. பூஜைக்குப் பயன் படுத்துவது) எடுத்துக் கொண்டு பூஜை செய்ய சென்றான்..

                                 ****************

“ஜீவி என்ன செஞ்சு வெச்சுருக்க ரூம்ம.. அழுக்குத் துணிய பேஸ்கட்(basket)ல போட வேண்டியது தானே.. எல்லாம் அங்க அங்க இருக்கு..” ரமா மகளைத் திட்ட 

“எடுத்து வைங்கமா.. சும்மா தானே இருக்கீங்க..” டிவியைப்பார்த்துக் கொண்டே பதில் சொன்னாள் ஜீவிதா.

“அப்படியே இழுத்து வெச்சு அறையப் போறேன்.. பொம்பளப்புள்ள மாதிரியா இருக்க.. முடிய வெட்டிகிட்டு முக்கா கால் ட்ரெஸ் போட்டுக்கிட்டு.. ஒரு வேலை செய்றதில்லை. இதுல நான் சும்மா இருக்கேன்னு சொல்றியா?” என்று கத்த

“விடு ரமா வீக் என்ட் மட்டும் தான் அவளே ப்ரீயா இருக்கா.. அவளப் போய் திட்டிகிட்டு..” இரவு டியூட்டி முடிந்து சிறிது நேரத்திற்கு முன்பு தான் வந்த முருகன் மகளிற்குப் பரிந்து பேச

“இவ்வளவு நேரம் நியூஸ் பேப்பர் தானே படிச்சுட்டு இருந்தீங்க.. இப்போ எதுக்குப் பஞ்சாயத்துச் செய்ய வரீங்க.. போய் அதையே படிங்க.” என்று கணவனை அதட்டியவர் மகளின் புறம் திரும்பி

“இருபத்தி மூணு வயசாகிடுச்சு.. உன் வயசு பிள்ளைங்க எல்லாம் கல்யாணம் ஆகி குடும்பத்த பார்த்துக்குதுங்க. நீ இன்னும் டீவில சின் சான் பார்த்துட்டு இருக்க.”

“அப்பா.. அம்மாவ சும்மா இருக்கச் சொல்லுங்க..”

“ரமா” என்று கணவர் மீண்டும் குரல் கொடுக்க

“எதாச்சும் பேசுனீங்க நான் மனிஷியா இருக்க மாட்டேன்..”

“இப்ப மட்டும் மனிஷியாவா இருக்கீங்க?” என்று ஜீவி முணுமுணுக்க

“ஜீவி சும்மா இரு..” என்று அவள் தந்தை மெதுவாக அவளிடம் கூறினார்..

“இப்போ நான் பேசுறது உங்களுக்கு லூசு மாதிரி தான் இருக்கும்.. நாளைக்கு உன் மாமியார் வந்து குமட்டுலையே குத்துவாங்க அப்போ தான் நீ திருந்தவ..”

“குத்துவாங்க குத்துவாங்க.. அது வரை என் கை என்ன புளியங்கா பரிச்சிட்டு இருக்குமா?”

“வாயக் குறைக்கவே மாட்டியா நீ? உலகம் தெரிஞ்சுக்கணும்னு உன்னைப் படிக்க வெச்சு வேலைக்குப் போகவிட்டா, அறிவ விட வாய் தான் அதிகமா வளர்ந்திருக்கு.. எங்க ரெண்டு பேருக்கும் நீ எப்படிடி வந்து பிறந்த.. உன் அப்பாவும் அமைதி நானும் அமைதி. ஆனா நீ மட்டும் எல்லாத்துக்கும் எதிர்த்து எதிர்த்து பேசுற..” 

“அப்பா அமைதின்னு சொன்னதுல ஒரு நியாயம் இருக்கு.. நீங்க அமைதின்னு வாய் கூசாம பொய் சொல்றீங்களே மா.. நியாயமா?” எனவும்

“வயசுக்கு வந்தப் பிள்ளைய அடிக்க வேண்டாம்ன்னு பார்க்குறேன்.. அடிக்க வெச்சுராதே..” என்றவர்

“வேலை செய்யச் சொன்னா நானே ஆபிஸ் போயிட்டு டயர்டா வரேன்னு டயலாக் விடுற. நீ வேலைக்குப் போனது போதும்.. ரிசைன் செஞ்சுட்டு வீட்டு வேலை கத்துக்கோ..”

“அம்மா..” என்று அவள் கத்த அவர் அதைக் காதில் வாங்கவே இல்லை.

                               *****************

மதியம் உணவு முடிந்து தனது காதலியுடன் மொபைலில் பேசிக் கொண்டிருந்தான் விதுரன்..

“லஞ்ச் முடிஞ்சதா?”

“யஸ் யஸ்.. சிக்கன் குளம்பு. fish fry”

“நாளைக்கு மேரேஜ் ஆனா இதெல்லாம் நீ நம்ம ஆத்ல சமைப்பியா?”

“ச்ச ச.. ஹோட்டல்ல ஆர்டர் செஞ்சுப்பேன் விது..”

“ம் ஓகே ஓகே..”

“விது அம்மா வேலைய விடச் சொல்றாங்க..”

“ஏன்?”

“கல்யாணம் செஞ்சு வைக்கப் போறாங்களாம்.. அதுனால வீட்டு வேலை கத்துக்கோன்னு சொல்றாங்க..”

“கத்துக்கோ கத்துக்கோ.. எல்லா வேலையும் என் தலைல கட்டலாம்ன்னு நினைக்காதே..”

“எனக்காகச் செய்ய மாட்டியா?” என்று சிணுங்கி கேட்க

“இப்படிப் பேசியே மயக்கீட்ட”

“சீக்கிரம் வீட்ல சொல்லணும் விது.. அம்மா இப்பவே மேரேஜ் பத்தி அப்பாகிட்ட பேச ஆரம்பிச்சுடாங்க.. எனக்கு கசின்ஸ் வேற அதிகம்.. அவங்கள்ள யாரையாது பார்க்கலாமா இல்ல வெளிய பார்ப்போமான்னு யோசிச்சுட்டு இருக்காங்க..”

“உங்க அப்பா கூடப் பிறந்தவங்க எத்தனை பேரு?”

“ஒன்பது.. எங்க அப்பாவை சேர்த்து பத்துப் பேர்..”

“உங்க தாத்தாக்குக் குடும்பக் கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்கிறதே தெரியாதா? வத வதன்னு பெத்து வெச்சுருக்கார்.. வேலைக்குப் போனாரா இல்ல குழந்தை பெத்துகிறதையே முழு நேர வேலையா பார்த்தாரா?”

“சும்மா இரு லூசு.. பெரியவங்கள கிண்டல் பண்ணாதே..”

“ஆமா ஆமா..” என்றவன் “உங்க அப்பா மட்டும் ஏன் ஒரு பொண்ணோட நிப்பாட்டிடாங்க. உங்க தாத்தாவ இன்ஸ்பிரேஷனா எடுத்து இன்னும் நாலு அஞ்சு பொண்ணுங்கள பெத்துருந்தார்னா எனக்கும் கொஞ்சம் வசதியா இருந்திருக்கும்.”

“கொன்னுடுவேன் உன்னை.. உனக்கு நான் கிடைச்சதே பெருசு.. இதுல இன்னும் நாலு அஞ்சு பொண்ணுங்க வேணுமா?”

“சரி சொல்லு ஏன் நீ ஒரே பொண்ணா போய்ட்ட?”

“நீ சொன்ன மாதிரி எங்க தாத்தாவ பார்த்து தான் தனக்கு ஒரு குழந்தை போதும்ன்னு டிசைட் செஞ்சுட்டார்.. தாத்தாக்கு நிறையப் பசங்க இருந்தனால சரியான சாப்பாட்டு, படிப்பு இதெல்லாம் இல்லாம எல்லாரும் கஷ்டப்பட்டாங்க.. அப்பா அதுனால சின்ன வயசுலையே முடிவு செஞ்சுட்டார். ஒரு குழந்தை தான் பெத்துக்கணும். அவ ஆசைப்பட்ட படி வளர்க்கனும்னு.”

“ஓஹோ…”

“ம்..

“அப்பறம்?”

“என்ன அப்பறம்.. இவ்வளவு நேரம் நான் தானே பேசுனேன்..”

“எப்பவுமே நீ தானே பேசுவ.. என்னை எப்போடி நீ பேச விட்டுருக்க.. இப்பவே ட்ரைனிங் கொடுத்துட்ட ஆப்டர் மேரேஜ் நீ சொல்றது எல்லாத்துக்கும்  ம் ம்ன்னு சொல்றதுக்கு..”

“ச்சீ பே..”

பின் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க

“விது என்ன பண்ற கொஞ்சம் இங்க வா?” என்று கீழிருந்து வைதேகி குரல் கொடுக்க

“அம்மா கூப்டுறாங்க ஜீவி. அப்பறம் பேசுறேன்.. பாய்..”

கீழே வந்தவன் தாயிடம் செல்ல

“ஏன்டா வரதே ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை. அப்பவும் எங்களோட பேசாம மொபைலை நோண்டிண்டு இருக்க.” என

“ப்ரெண்ட் கூப்டாமா அதான்..”

“கூப்டாளா? பொண்ணாடா?”

“கூப்டான்.. டங் ஸ்லிப் ஆகிடுச்சு.”

“சரி சரி சாயுங்காலம் கோவிலுக்குப் போயிட்டு வருவோம்.. எல்லாரும் சேர்ந்து போய் ரொம்ப நாள் ஆச்சு.”

“சரிமா..”

மாலை குடும்பமாக ரங்கநாதரை தரிசித்து விட்டுப் பிரகாரத்தில் அமர்ந்திருந்தனர்.. அவர்களுக்குத் தெரிந்த ஒரு பெண்மணி வைதேகியுடன் பேசிக் கொண்டிருந்தார்..

“விதுரன்கு வரன் பார்க்குறியா வைதேகி?”

“ம் பார்க்கணும்.. இருபத்தெட்டு வயசுல பண்ணுங்கோன்னு ஜோசியர் சொன்னார்.. அடுத்த மாசம் அவனுக்கு இருபத்தெட்டு ஆகப் போகுது..”

“ஓ.. எங்க அண்ணா பொண்ணுக்கு வரன் பார்க்குறா.. அடுத்த மாசம் ஜாதகம் கொடேன்.. பொருத்தம் பார்ப்போம்.. அமைஞ்சா சந்தோஷம்”

“பகவான் அனுக்ரஹம் என்னவோ அதுபடி நடக்கும்.. ஆத்துக்காரர்ட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு தரேன் மன்னி.” என்றவர் மேலும் சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருக்க, துருபதன் அண்ணனின் காதில்

“விது கலக்குற போ.. அப்போ ஜீவி மன்னி நிலைமை?”

“நீ சும்மாவே இருக்க மாட்டியடா.. இன்னும் எதுவும் பேசி முடிவாகல.. நான் பாத்துக்குறேன்..”

“ஆத்துக்குப் போனதும் முதல் வேலை.. மன்னிட்ட இந்த விஷயத்தைச் சொல்லுறது தான்டா.”

“டேய் லூசு.. சும்மா இரு..”

“நோ” என்றவன் வீட்டிற்குச் சென்றதும் முதன் வேலையாகத் தனது வருங்காள மன்னியிடம் விஷயத்தைப் போட்டுக் கொடுத்தான்..

என் காதல் தாரகை நீ தானடி

Advertisement