ஊட்டி அருகில் இருந்த, ஒரு எஸ்டேட் உள்ளே, முகில் வேந்தனின் கார் நுழைந்தது.
‘வேந்தன் எஸ்டேட்ஸ்‘, என்ற பெயர் பலகையை, அவன் அருகில் அமர்ந்திருந்த நேவா பார்த்தாள்.
“அதில் என்ன எழுதி இருக்குன்னு தெரியுமா?”, என்று அவளிடம்கேட்டான் முகில்.
“தெரியாது”, என்பதாய் உதட்டை பிதுக்கினாள் நேவா.
“வேந்தன் எஸ்டேட்ஸ்ன்னு எழுதி இருக்கு. அது எங்க தாத்தா பெயர். அவர் பெயரில் தான், இந்த எஸ்டேட் இருக்கு. அவர் கஷ்ட பட்டு, உழைச்சு நல்ல நிலைமைக்கு வந்தார். அதுக்கு பிறகு, எங்க அப்பா, அவருடைய பொறுப்புகளை ஏற்று கொண்டார். எங்க தாத்தா இறந்த பிறகு, இப்பவரைக்கும் எங்க அப்பா தான் எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கார். நான் ‘எம் பி ஏ‘ முடிச்ச உடனே, என்னை பாக்க சொன்னார். நான் ரெண்டு வருசமா டிமிக்கி கொடுத்துட்டு இருக்கேன்”, என்று அழகாக சிரித்தான் முகில்.
அப்போது காரில் அவர்கள் கண் முன்னே வீற்றிருந்த கேமராவை பார்த்து,
“இது என்ன?”, என்று கண்களால் கேள்வி கேட்டாள் நேவா.
அவள் கேள்வி புரிந்தவன், “எனக்கு, சினிமா படம் எடுக்குறதுல தான், ரொம்ப ஆசை. பணம் கேட்டால், அப்பா தர மாட்டார். முதலில் ஒரு பைசா தர மாட்டேன்னுசொன்னார். என்னுடைய பிடிவாதம் பார்த்து இப்ப பாதி தருவேன்னு, சொல்லிருக்கார். அதனால, போட்டோகிராபி வேலை செஞ்சு எனக்கான பணத்தை சம்பாதிக்கிறேன்”, என்று சிரித்தான் முகில்.
எப்போதும் போல் அவன் சிரிப்பை, ஆசையாக பார்த்தாள் நேவா.
அவள் பார்வையை கண்டவன் “இந்த பார்வை எல்லாம் பிறகு. முதலில் வீட்டில் உள்ளவங்களை சம்மதிக்க வைக்கணும். அம்மா, உன்னை ஏத்துப்பாங்களான்னு பயமா இருக்கு!”, என்றான் முகில்.
அவன் பயம் அவளுக்கும் தொற்றி கொண்டது. எந்த அம்மா அப்பாவுக்கு தான் பிடிக்கும்? தங்கள் பையன் படிப்பறிவில்லாத, ஒரு மலை வாழ் ஜாதி பெண்ணை, மணம் முடித்து, வீட்டுக்கு அழைத்து வந்தால்.
ஆம், முகில் எந்த அளவுக்கு, படித்திருக்கிறானோ, அந்த அளவுக்கு படிப்பறிவுஇல்லாத மலை வாழ் கூட்டத்தை சேர்ந்தவள் நேவா.
வீட்டு வாசல் முன்பு காரை நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கினான் முகில். பின் சுற்றி வந்து நேவாவுக்கு கதவை திறந்து விட்டான். பயந்து போய் இறங்கியவளின் கைகளை பரிவுடன் பிடித்து கொண்டான்.
“நண்பன் ராம் மூலம் கல்யாணம் முடிஞ்சிடுச்சுன்னு வீட்டுக்கு தகவல் சொல்லியாச்சு. ஆனாலும், வரவேற்க வாசலுக்கு யாரும் வரலை. இன்னும் கோபத்துல தான் இருக்காங்க போல?”, என்று நினைத்து கொண்டே, அவளை “வா”, என்று அழைத்தான்.
“உள்ள என்ன பேசினாலும், எனக்காக பொறுத்துக்கோ நேவா!”, என்றான் முகில்.
“ம்ம்”, என்றாள் நேவா.
உள்ளே சென்றவுடன் கண்களில் பட்டது, அதிர்ச்சியில் உறைந்து நின்ற முகிலின்அம்மா வசந்தி தான். பக்கத்தில் வானதி நின்றாள், அவன் தங்கை.
அவர்கள் அதிர்ச்சியை பார்த்து திரும்பி பார்த்தார், அவன் அப்பா மேகநாதன். பார்த்த அவருக்கும் அதிர்ச்சி தான்.
“அம்மா”, என்று அழைத்து கொண்டே வசந்தி அருகில் சென்றான் முகில்.
“ச்சி, என்னை அப்படி கூப்டாத டா. உன் மேல எத்தனை கனவு வச்சிருந்தேன்? ஆனா நீ இப்படி செய்வன்னு நான் யோசிக்கவே இல்லையே!”, என்றாள் வசந்தி.
“எனக்கு இவளை பிடிச்சிருக்கு மா. அதனால தான் கல்யாணம் செஞ்சிக்கிட்டேன்”, என்றான் முகில்.
“பிடிச்சிருந்தா எங்களுக்கு சொல்ல மாட்டியா? நாங்க என்ன செத்தா போய்ட்டோம், காதல்னு சொன்னா நாங்க சேத்து வைக்க மாட்டோமா? உன் தங்கச்சியும் தான் லவ் பண்ணா. இப்ப அந்த பையனையே பேசி முடிச்சு இவ படிப்பு முடிஞ்ச உடனே கல்யாணம்னு முடிவு பண்ணலையா?”, என்று கேட்டாள் வசந்தி.
“அந்த விமல், நம்மளை மாதிரியே பணக்காரன். அதனால தான, அவ கல்யாணத்தை ஒத்துகிட்டீங்க?, ஒன்னும் இல்லாத நேவாவை ஏத்துக்க மாட்டிங்கல்ல? அதனால தான், கல்யாணம் செஞ்சேன்”
“ஆமா டா! இப்ப அதுக்கு என்ன? நீயே சொல்ற, இவ ஒண்ணும்இல்லாதவன்னு. நான் கூட அந்த ராம் பையன், முகில் காதல் கல்யாணம் செஞ்சிக்கிட்டான்னுசொன்ன உடனே, ஏதோ அன்றாடம் காட்சியா இருப்பான்னு பாத்தா, இப்படி பஞ்ச பரதேசியா இருக்காளே. ஆளை பாரு பரட்டைதலையும், கழுத்துல, கைல பாசி பாசியா, காலில் தண்டை, அதுவும் ஒற்றை காலில் கருப்பு கயிறு. இப்ப எல்லாம் பிச்சை காரி கூட அழகா வாரா டா”, என்றாள் வசந்தி.
“அம்மா”, என்று அதட்டினான் முகில்.
“என்ன டா அம்மா? மருமகன்னாதழைய தழைய பட்டு புடவை உடுத்தி, உடல் முழுவதும் நகையால அலங்கரிச்சுவரணும். ஆனா, இங்க தூக்கி கட்டுன நூல் புடவையோட ஊசி பாசி விக்குறவ மாதிரி, இருக்கவளைகூட்டிட்டு வந்துருக்க. முதலில் அவளுக்கு ஏதாவது பணம் கொடுத்து அனுப்பு”, என்றாள் வசந்தி.
வசந்தி சொன்னதைக் கேட்டு கூனி குறுகி நின்றாள் நேவா. “அம்மா, இது என் பொண்டாட்டி மா”, என்றான் முகில்.
“பொண்டாட்டியாம் பொண்டாட்டி”, என்று கழுத்தை நொடித்தாள் வசந்தி.
“ச்சி ச்சி மருமகளா? இவ ஒரு நாளும் என் மருமகளா வர முடியாது. நம்ம வீட்டு வேலைக்காரியா கூட இவ ஆக முடியாது. அவளை இங்க இருந்து அனுப்பு”, என்றாள் வசந்தி.
“இல்லை, என் பொண்டாட்டி என் கூட தான் இருப்பா”, என்றான் முகில்.
“அதை பாக்க உன் அம்மா உயிரோட இருக்க மாட்டேன்”
“நான் வேணா காட்டுக்கே போறேங்க”, என்றாள் நேவா.
“எப்பா என்னா மாதிரி நடிக்கிறா? போ டி முதலில் இங்க இருந்து. ஏதோ, வீட்டுக்கு சனியன் வந்த மாதிரி இருக்கு”, என்றாள் வசந்தி.
“அம்மா”, என்று அலறியவன் “வா நேவா, நம்ம ரூம்க்கு போவோம்”, என்று அழைத்தான்.
“அவ வந்தால், நான் இப்பவே கொளுத்திகிட்டு செத்துருவேன்”, என்றாள் வசந்தி.
“அவங்க அப்படி தான் சொல்லுவாங்க, நீ வா”, என்றான் முகில்.
“என்ன செய்ய?”, என்று தெரியாமல் தடுமாறி நின்றாள் நேவா.
வசந்தியை பார்த்தால் சொன்னதை செய்பவள் போன்று இருந்தது. “நான் காட்டுக்கே போறேங்க”, என்று மறுபடியும் சொன்னாள் நேவா.
“அப்ப நீயும் என் பேச்சை கேக்க மாட்டல்ல? ரெண்டு பேரும் எக்கேடோ கெட்டு போங்க”, என்று சொல்லி விட்டு வெளியே வந்து, காரை எடுத்து கொண்டு வேகமாக சென்றான்.
அவனுடைய கோபத்தில் விக்கித்துநின்றாள் நேவா. அதுவும் இவர்கள் முன்பு தனியே விட்டு சென்றது மனதுக்கு பாரமாக இருந்தது.
“இப்ப உனக்கு சந்தோசமா? வந்த உடனே என் பிள்ளை இப்படி வெளியே போய்ட்டானே?”, என்று கத்தினாள் வசந்தி.
கண்களில் வழிந்த நீரோடு நின்றாள் நேவா. “போதும் வசந்தி சும்மா இரு, நீ பேசி தான் அவனை விரட்டி விட்டுட்ட”, என்று வசந்தியை திட்டியமேகநாதன், நேவாவை பார்த்து “மேல உள்ள முதல் ரூம் தான், அவன் ரூம் அங்க போய் இரு மா. அவன் வருவான்”, என்றார்.
“என் பையன் ரூம்க்கு, எல்லாம் அவ போக கூடாது. கீழ உள்ள கெஸ்ட் ரூம்ல வேணா, இருக்க சொல்லுங்க”, என்றாள் வசந்தி.
“சரி கத்தாதே”, என்று அவளை சொன்னவர், “அதோ அந்த ரூம்ல இரு மா. அவன் வந்ததும் பேசிக்கலாம்”, என்று சொன்னார்.
“ஏதோ அவராவது இப்படி சொன்னாரே”, என்று நினைத்து கொண்டு அறைக்குள் சென்றாள்.
பத்து நிமிடம் என்ன செய்ய, என்று தெரியாமல் அமர்ந்தவள், கையில் கொண்டு வந்திருந்த பெட்டியை திறந்து உடையை எடுத்தாள். அப்போது “ஐயையோ”, என்ற வசந்தியின் அலறலில் பயந்து போய் அங்கே ஓடினாள் நேவா.
“சொன்னேனே, சனியனை கூட்டிட்டு வந்துருக்கான்னு. வந்த கொஞ்ச நேரத்திலே என் பையனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சே!ஐயோ! கடவுளே”, என்று பெருங்குரலெடுத்து கத்தினாள் வசந்தி. எல்லாரும் அறைக்கு ஓடி வந்தார்கள்.
அவள் சொன்னதைகேட்டு அசையாமல் திக் பிரமை பிடித்து நின்றாள் நேவா. அவள் காதில் விழுந்ததை நம்ப கூட முடியவில்லை.
“என்ன ஆச்சு வசந்தி? எதுக்கு கத்துற”, என்ற படியேஅங்கு வந்தார் மேகநாதன். தலையில் அடித்து கொண்டு அழுது கொண்டு இருந்தாள்வசந்தி. பக்கத்தில் போன் வைக்க படாமல் இருந்தது.
“ஆக்ஸிடெண்ட்”, என்ற வார்த்தையிலே உறைந்து போய் நின்றாள் நேவா.
வானதி ஓடி வந்து “அம்மா”, என்று வசந்தியை அணைத்து கொண்டாள். வசந்தி புலம்பி கொண்டே இருந்தாள்.
மேகநாதன்விட பட்ட தொலைபேசியை எடுத்து காதில் வைத்தார்.
“ஹெலோ யாருங்க”, என்று கேட்டார் மேகநாதன்.
“அப்பா, நான் ராம் பேசுறேன். இப்ப தான் கே.கேஹாஸ்பிட்டலில் இருந்து போன் செஞ்சாங்க. நம்ம முகில் காரில் வேகமா போய், பாறையில் இடிச்சு கார் கவிழ்ந்திடுச்சாம். கடைசியா எனக்கு அவன் பேசிருந்ததினால, என் நம்பர்க்கு போன் பண்ணாங்க. எனக்கு கொஞ்சம் பதட்டமா இருக்கு, நான் அங்க தான் போய்ட்டு இருக்கேன். நீங்க கொஞ்சம் வாங்க”, என்றான்.
“ஐயோ!என் பிள்ளைக்கு என்ன ஆச்சு?”, என்று அவரும் அலறினார்.
“ஒண்ணும் ஆகாது பா அவனுக்கு. நான் வைக்கிறேன் நீங்க வாங்க!”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.
“என்ன வசந்தி, இப்படி சொல்றான்? ஆறு மாசம் கழிச்சு கண்ணில் பட்ட பையனுக்கு இப்படியா ஆகணும்”, என்று அழுதார் மேகநாதன்.
“எல்லாம் இந்த சனியனால வந்தது”, என்று நேவாவை பார்த்து கத்தினாள் வசந்தி.
“சும்மா இரு வசந்தி. அதெல்லாம் பிறகு பேசலாம். முதலில் கிளம்பு போகலாம், நான் பர்ஸ் எடுத்துட்டு வறேன்”, என்று அறைக்குள் ஓடினார்.
“இப்ப என்ன செய்யணும்?”, என்று தெரியாமல் கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்தாள் நேவா.
கிளம்பும் போது “நீயும் வா மா”, என்றார் மேகநாதன். நன்றியோடு அவரை பார்த்தாள்நேவா.
“எதுக்கு? அவன் உயிரை ஒரெடியா எடுக்கவா? என் பையனுக்கு ஏதாவது ஆச்சுனா, உன்னை கொன்னுருவேன் டி. வண்டியை எடுப்பா”, என்று டிரைவரிடம் சொன்னாள் வசந்தி.
அவள் சொல்லிய படியே கார் நேவாவை விட்டு விட்டு சென்றே விட்டது.
“இந்த ஜென்மத்துக்கும், என்னால் முகிலின் அம்மாவைமன்னிக்க முடியாது”, என்று மனதில் நினைத்து கொண்டு கழுத்தில் கிடந்த கருப்பு நிற பாசியை தொட்டு பார்த்தாள். அது தான் அவன் அவளுக்கு அணிவித்த தாலி.
கண்ணில் நீரோடு “அவனுக்கு எதுவும் ஆககூடாது”, என்ற வேண்டுதலோடு தரையிலே மடங்கி அமர்ந்தாள் நேவா.
ஹாஸ்பிட்டலுக்கு போனவர்களுக்கு அதிர்ச்சி தான். “தலையில் பலமான அடி, ரெண்டு நாள் கழிச்சு தான் எதுவும் சொல்ல முடியும்”, என்றார்கள். வீட்டிலோ செத்த பிணம் போல் கிடந்தாள் நேவா. அவனைக் காண எப்படி செல்ல என்று தெரிய வில்லை. கையில் துளி கூட பணம் இல்லை அவளிடம். யாருமில்லாத அந்த வீட்டில் பைத்தியக் காரி போல இருந்தாள். ஒரு முறை வீட்டுக்கு வந்த வசந்தி மேலும் அவளை திட்டி விட்டு தேவையான பொருள்களை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.
இரண்டு நாள் கழித்து கண் விழித்தான் முகில் வேந்தன். ஆனாலும், அவனால் அசைய கூட முடியவில்லை. உடல் முழுவதும் வலித்தது அவனுக்கு.
ஆனாலும் “அம்மா, அப்பா” என்று பேசினான். “ராம்”, என்று நண்பனை பார்த்து சிரித்தான். “காலேஜ் போகலையா”, என்று வானதியை கேட்டான். எல்லாரும், அப்போது தான் நிம்மதியாக மூச்சு விட்டார்கள்.
நேவா உருக்குலைந்து போனாள். அவனைப் பற்றி எந்த தகவலும் அவளுக்கு அளிக்கப் படவில்லை. “அறியாத இடம், வீட்டை விட்டு வெளியேபோனாலேபலகிலோமீட்டர்போகணும். என்னசெய்ய? என்ன ஆச்சோ? அப்படியே போனாலும், அவரை என்னை பார்க்க கூட விட மாட்டார்கள். கடவுளே உன்னை நான் கும்பிட்டு ரொம்ப வருஷம் ஆகுது. இன்னைக்கு, மறுபடியும் உன் முன்னாடி மண்டியிட்டு நிக்குறேன். அவர் உயிரை மீட்டுதா”, என்று அழுதாள்.
அவன் கண் விழித்த அடுத்த அஞ்சு நிமிசத்தில் ராம் முகிலின் வீட்டுக்கு அழைத்தான், “எப்படியும் நேவா அங்க தான் இருப்பா. முகில் அம்மா பேசுவதை பார்த்தால், முகில் பற்றி அவளுக்கு சொல்ல மாட்டார்கள் போல”, என்று அனுமானித்தவன் அவளை அழைத்தான்.