எவ்வளவு நிதானமாகக் கிளம்ப முடியுமோ அவ்வளவு நிதானமாக, ஜெய் குளித்துக் கிளம்ப, அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பும் போதே மாலை ஏழு மணி ஆகிவிட்டது.
மணமக்கள் வருவதற்காக இனோவாவை இங்கே விட்டு விட்டே யுவராஜ் சென்றிருந்தான். புதுமணத் தம்பதிகளுடன் வெண்ணிலாவின் சின்ன அத்தை வசுமதி, அவரது கணவர் மற்றும் மகேஸ்வரியின் தங்கை விமலா மட்டும் உடன் வர…காரில் நிறையவே இடம் இருந்தது. நடு இருக்கையில் ஜெய்யும் வெண்ணிலாவும் மட்டுமே.
வெண்ணிலாவின் அத்தையும் மாமாவும் பின்னாடி சென்று உட்கார்ந்து கொண்டவர்கள் யாரோடும் பேசவும் இல்லை. விடியற்காலையில் எழுந்தது எல்லோருக்குமே களைப்பு. வண்டி கிளம்பிய சிறிது நேரத்திலேயே ஜெய்யை தவிர அனவைரும் உறங்க… வெண்ணிலா உறக்கத்திற்குச் செல்வதும் விழிப்பதுமாக இருந்தாள்.
ஜெய் நன்றாக ஓரத்தில் தள்ளி உட்கார்ந்து கொண்டு வெண்ணிலாவை சீட்டில் படுத்துக்கொள்ளச் சொல்ல, அவள் வேண்டாம் என மறுக்க….
மற்றவர்கள் உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்தவன், அவளை இழுத்துச் சீட்டில் படுக்க வைத்தான். வெண்ணிலா எழுந்துகொள்ள நினைத்தாலும், எழுந்து கொள்ள முடியவில்லை.
சிறிது நேரம் போராடி பார்த்தவள், முடியாமல் விட்டு விட்டாள். அவன் மடியில் லேசாகத் தலை வைத்து படுத்திருந்தவள், சிறிது நேரத்தில் உறங்கி விட… ஜெய் அவளை நன்றாகப் படுக்க வைத்துக் கொண்டவன், அவனும் நன்றாகச் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு வந்தான்.
தன் மனம் விரும்பியவளையே மணந்து கொண்டதில், மனம் மகிழ்ச்சியில் திளைக்க, நொடிக்கொரு தரம் அவளைப் பார்ப்பதும், வெளியே பார்பதுமாக இருந்தான்.
வெகு தூரம் வந்த பிறகு, குறுக்கே நாய் வந்ததால்.. டிரைவர் சட்டென்று பிரேக் போட… ஜெய் மட்டும் பிடிக்கவில்லை என்றால்… வெண்ணிலா சீட்டில் இருந்து விழுந்திருப்பாள்.
ஜெய்யின் கை அவளின் வயிற்றுப் பகுதியில் அழுத்தி பிடித்திருக்க, முதலில் திகிட்டு விழித்தவள், நல்லவேளை விழவில்லை என நினைக்கும் போதே… ஜெய்யின் கை அவள் வெற்று வயிற்றில் இருப்பதை உணர்ந்து, பட்டென்று அவன் கையைத் தட்டி விட்டவள், வேகமாக எழுந்தும் அமர்ந்தாள்.
அதே நேரம் மற்றவர்களும் உறக்கத்தில் இருந்து விழித்திருந்தனர். வெண்ணிலா அதன் பிறகு உறங்காமல் விழித்தே இருந்தாள்.
அவன் எதோ வேண்டுமென்றே செய்தது போல, வெண்ணிலா கணவனை முறைக்க, அவள் அருகில் நெருங்கி உட்கார்ந்தவன், “உன்னை உருண்டு விழுட்டும்னு விட்டிருக்கணும். அந்தப் பொடப்பா இருக்க மூக்கு, இந்நேரம் உடஞ்சிருக்கும்.” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும்படி.
நம்ம மூக்கு அவ்வளவு பெரிசாவா இருக்கு என்ற எண்ணத்தில், அவளையும் அறியாமல் வெண்ணிலா தன் மூக்கை தொட்டுப் பார்க்க, ஜெய்க்கு சிரிப்பாக இருந்தது.
அவர்கள் வீடு சென்று சேர இரவு பதினோரு மணி ஆகியிருக்க, அப்போதும் நெருங்கிய உறவினர்கள் சிலர் இருக்க, மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.
“பாட்டி ரூம்ல இருக்காங்க, ரெண்டு பேரும் போய் ஆசிர்வாதம் வாங்கிக்கங்க.” என அன்பரசி சொல்ல, இருவரும் கற்பகம் இருந்த அறைக்குள் செல்ல, படுத்திருந்தவர் இவர்களைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தார்.
இருவரும் அவரின் காலில் விழ, “நல்லாயிருங்க.” என்றவர், வெண்ணிலாவை அவர் அருகில் கட்டிலில் உட்கார வைத்துக் கொண்டு, “இன்னும் சின்னப் பிள்ளை இல்லை. கல்யாணம் ஆகிடுச்சு பொறுப்பா இருக்கணும். நம்ம வீடு போல அங்க எதிர்பார்க்க கூடாது. என்ன இருக்கோ அதை வச்சு இருக்கணும்.” என்றதும், ஜெய்க்கு கடுப்பாக இருந்தது.
பாட்டிக்குக் கொழுப்பை பார்த்தியா, நாங்க எதோ பச்சை தண்ணியைக் குடிச்சு உயிர் வாழற மாதிரி நக்கல் பண்ணுது என நினைத்தவன், அறைக்குள் இருந்து வெளியே சென்றுவிட… அதற்குள் மகேஸ்வரியும் அவர்களை உணவு உண்ண அழைத்தார்.
இருந்த உறவினர்களும் அன்பரசியோடு அவர் வீட்டுக்கு கிளம்ப, வீட்டினர் மற்றும் மகேஸ்வரியின் தங்கை விமலா மட்டுமே இருந்தனர்.
இருவரும் உண்டு முடிக்க, “நீ ரூமுக்கு போ…” என ஜெய்யை அறைக்குச் செல்லும்படி விமலா சொல்ல, ஜெய்யும் தனது பையை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டான்.
அறை பெரிதாக இருந்தது. இதுவரை வந்தால்… ஹாலோடு சென்று விடுவான். இன்றுதான் அறைக்குள் வந்திருக்கிறான். மெத்தையில் மல்லிகை பூவை போட்டு வைத்திருந்தனர். பக்கத்தில் மேஜையில் பால், பழங்கள், இனிப்புகள் என அணிவகுத்து இருக்க.. அவனுக்கே ஒருமாதிரி இருந்தது.
ஓய்வு அறைக்குள் சென்று முகம் கைகால் கழுவி வந்தவன், எடுத்து வந்திருந்த கைலியை மாற்றிவிட்டு, கட்டிலில் படுத்துக் கொண்டான்.
அங்கே வெண்ணிலாவை அறைக்குள் அனுப்புவதற்குள் மகேஸ்வரிக்கும், விமலாவுக்கும் மண்டை காய்ந்து விட்டது.
“எனக்குப் பயமா இருக்கு. நான் போகலை…” எனச் சொல்லிக் கொண்டு, உணவு மேஜையிலேயே உட்கார்ந்து விட்டாள்.
“இந்தக் காலத்தில இப்படியொரு பொண்ணு, இதை வச்சிட்டு என்ன செய்ய?” என மகேஸ்வரி தலையில் அடித்துக்கொள்ள… ஜெய்யே அறைக்குள் இருந்து வெளியே வந்து விட்டான்.
“ரூமுக்கு போ டி…” என விமலா சொல்லிக் கொண்டிருந்தவர், ஜெய்யை பார்த்ததும், “இதோ அவனே வந்திட்டான். இனி அவன் பார்த்துப்பான். வா அக்கா…” என அவர் மகேஸ்வரியை அழைத்துக் கொண்டு சமையல் அறைக்குள் சென்று விட… வெண்ணிலா தவிப்புடன் எழுந்து நின்றாள்.
ஜெய் அவளை ஒரு பார்வை பார்க்க, வேகமாக அறைக்குள் சென்று விட்டாள். அவள் பின்னே உள்ளே வந்து கதவை தாழிட்டவன், “இங்க வா.. உன்னோட பேசணும்.” எனக் கட்டிலில் சென்று உட்கார்ந்துகொள்ள, வெண்ணிலா எதிரில் இருந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள்.
“எதுக்கு இப்போ சீன் போட்டுட்டு இருக்க, சாதரணமா இருக்க மாட்டியா?” ஜெய் கேட்க, வெண்ணிலா பதில் சொல்லாமல் இருக்க,
“உன் இஷ்ட்டம் இல்லாம அப்படியெல்லாம் உன் மேல பாய்ந்திட மாட்டேன். பயப்படாம இரு. நீ இப்படிப் பண்ணா, மத்தவங்க நம்மைப் பற்றி என்ன நினைப்பாங்க? ஏற்கனவே உங்க வீட்டு ஆளுங்களுக்கு எங்களைக் கண்டா ஆகாது. அவங்களுக்கு நீயே எடுத்துக் கொடுக்காத.” என்றான்.
“நான் ஒன்னும் அப்படியில்லை. நீங்கதான் எனக்கும் இந்தக் கல்யாணத்துல இஷ்ட்டம்னு சொல்லி என்னை மாட்டி விட்டீங்க.”
“என் பாட்டி என்னென்ன சொன்னாங்க தெரியுமா… நாம ரெண்டு பேரும் லவ் பண்றோமாம். அது தெரிஞ்சு தான் கரண் அத்தான் கல்யாணம் வேண்டாம்னு போயிட்டாங்களாம். இன்னும் எவ்வளவு பேசினாங்க. எல்லாம் உங்களாலத்தான்.”
“எங்க அப்பாவும் அண்ணனும் கூட அதை நம்பிட்டாங்க. என்னைச் சந்தேகமாத்தான் பார்த்தாங்க. எனக்கு எப்படி இருந்திருக்கும்.”
“ஆளாளுக்கு என்னை வச்சு விளையாட, நான் என்ன பொம்மையா? முதல்ல அந்தக் கரண், அப்புறம் நீங்க. என்னை நினைச்சிட்டு இருக்கீங்க?”
வெண்ணிலா மனதில் இருந்ததெல்லாம் கொட்டும் வரை ஜெய் அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தவன், “நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுதான். ஆனா எனக்கு வேற வழி இல்லை. நீ உன் வீட்ல சொல்றது தான் கேட்ப.”
“நான் வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டமான்னு கேட்டா, நீ சரின்னு சொல்லியிருப்பியா என்ன?” என்றான்.
ஜெய் சொல்வதில் இருந்த உண்மை புரிந்து வெண்ணிலா அமைதியாக இருக்க,
“திட்டமிட்டு பேசி வச்சு எல்லாம் நம்ம கல்யாணம் நடக்கலை… உங்க வீட்டு சூழ்நிலை இப்படியாகிடுச்சு. அதனால இந்தக் கல்யாணம் நடந்தது.”
“உன்கிட்ட சம்மதம் கேட்கலைன்னு சொல்றியே… இதுக்கு முன்னாடி ஒரு தடவை, உன்கிட்ட நான் பேச வந்தேன். அப்ப நீ என்ன பண்ண வெண்ணிலா? உனக்கு நினைவு இருக்கா?” அவன் எதைச் சொல்லிக் காட்டுகிறான் என வெண்ணிலாவுக்குப் புரியாமல் இல்லை.
ஜெய் அவர்கள் வீட்டில் வெண்ணிலாவை பெண் கேட்க சொல்லி, அதற்கு அவர்கள் மறுத்து, வெண்ணிலாவிடமே அவளின் விருப்பம் கேட்போம் எனச் சென்றான். ஜெய் எப்போதுமே வீட்டிற்குத் தான் வருவான். அன்று பார்த்து கல்லூரிக்கு வந்து நின்றான். உடன் இருந்த தோழிக்கு அவனை நன்றாகத் தெரியும், அவள் வெண்ணிலாவின் எதிர் வீடுதான். அதுவும் அவள் அம்மாவும் கற்பகமும் நெருக்கம்.
அவன் கல்லூரிக்கு வந்ததைப் போய் அவள் அம்மாவிடம் சொன்னால்… கண்டிப்பாகக் கற்பகத்தின் காதுக்குப் போய் விடும் என்ற அச்சத்தில், வெண்ணிலா ஜெய்யை பார்த்ததும் பயந்தவள், அவன் பார்க்கும் போதே ஒலிந்து மறைந்து செல்ல… ஜெய் நொந்து போனான்.
அவளிடம் பேசினாலும், அவள் என்ன பதில் சொல்வாள் எனத் தெரிந்து விட… அவன் அவளிடம் பேசாமலே திரும்பி விட்டான்.
“நீ என்னைப் பிடிச்சுக் கல்யாணம் பண்ணலை… அது எனக்குத் தெரியும். இல்லைனா என்னைக் கண்டு இப்படிப் பயப்படுவியா?” ஜெய் சொன்னது, வெண்ணிலாவின் மனதை சுருக்கென்று தைக்க… அவளின் இயல்பான பயத்தை அவன் தவறாகப் புரிந்து கொண்டான். ஆனால் அப்படியெல்லாம் எதுவுமில்லை என்றால்… அது வேறு ஒரு அர்த்தம் கற்பிக்குமோ என்ற எண்ணத்தில் அமைதியாக நின்றாள்.
“உனக்குத் தெரியாது, எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும்னு. அதெல்லாம் நீ தெரிஞ்சிக்கவும் விரும்பினது இல்லை. ஆனா எனக்கு அப்படியில்லை.”
“என்னால வேற யார் கூடவும் கல்யாணத்தை நினைச்சு பார்க்க முடியலை… உன் கல்யாணம் நின்னதும், அதுவும் நீ அங்க நம்ம வீட்டுக்கு வந்ததும், என் மனசு என் கட்டுப்பாட்டுல இல்லை. நான் அப்பவும் சும்மா இருந்தா… உன்னை வேறு யாருக்காவது கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பாங்க.”
“உனக்குப் பிடிச்சாலும், பிடிக்கலைனாலும், என்னோட வாழ்வோ சாவோ, அது உன்னோடதான்னு நான் முடிவு பண்ணிட்டேன்.”
“கண்டிப்பா உங்க வீடல இன்னும் பெரிய இடமே பார்த்து இருப்பாங்க. எங்க வீட்ல அந்த வசதி எல்லாம் இருக்காது தான். நாங்க இன்னைக்கு வேணா இப்படியிருக்கலாம். ஆனா நாங்களும் உங்க அளவுக்கு வசதியில உயருவோம்.” என ஜெய் பேசிக்கொண்டிருக்கும் போதே… வெண்ணிலா எழுந்து கொண்டாள்.
ஆமாம் இவர் சாவுறதுக்கு எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணார். இவன் வசதியை யார் பெரிதாக நினைத்தார்கள் என்ற கோபத்தில், “நீங்க நைட் புல்லா பேசிட்டேன் இருக்கப் போறீங்களா… எனக்குத் தூக்கமா வருது.” என்றதும்,
அவளை முறைத்தபடி ஜெய் கட்டிலில் தள்ளி சென்று படுக்க, கட்டிலின் ஓரத்தில் வெண்ணிலா படுத்துக் கொண்டாள்.
“டிரஸ் மாத்திட்டு லைட் ஆப் பண்ணிட்டு படு.” என ஜெய் சொன்னதும், வெடுக்கென்று எழுந்தவள், அலமாரியில் இருந்த நைட்டியை எடுத்துக் கொண்டு குளியல் அறை சென்று மாற்றி விட்டு வந்தவள், விளக்கணைக்கும் போது தான் அங்கிருந்த பாலைக் கவனித்தாள். ஜெய் அதற்குள் உறங்கி இருந்தான்.
இதை இது வேறு குடிக்காமல் வைத்தால், வீட்டினரின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது என நினைத்தவள், பாலை முழுதாக அவளே குடித்து முடித்தாள்.
இன்றே எல்லாம் நடக்க வேண்டும் என ஜெய் நினைக்கவில்லை. அதோடு அதிகாலை எழுந்தது, பகலிலும் ஓய்வு எடுக்காதது எனக் களைப்பில் இருந்தவன், வெண்ணிலாவோடு பேசி விட்ட நிம்மதியில் உறங்கியும் போனான்.
விளக்கணைத்துப் படுத்த வெண்ணிலாவுக்குத்தான் உறக்கம் இல்லை.
அவன் காலையில் இருந்து இருந்ததற்கு… வேறு என்னென்னவோ எதிர்பார்த்து சற்று மிரண்டு போயே இருந்தாள். ஆனால் அவன் அவள் விருபத்திற்கு மதிப்பளித்து விலகி நின்றதும், இன்னும் அவள் மனதில் உயர்ந்து போனான்.
ஜெய் எப்போதுமே அவளை ஒரு இளவரசி போலத்தான் நடத்துவான். அப்படியிருக்க அவனைப் பிடிக்காமல் இருக்குமா என்ன? ஆனால் அவள் வீட்டில் சூழ்நிலை அவளை வேறு விதமாக நினைக்க விடவில்லை. ஆனால் இப்போது என்ன தடை? அவன் பக்கம் திரும்பிப் படுத்தவள், அவன் முகம் பார்த்தபடி உறங்கிப் போனாள்.
காலை அறைக் கதவு தட்டும் சத்தத்தில் தான் இருவரும் விழித்தனர்.
“வெண்ணிலா குளிச்சிட்டு வா மா…” என்ற விமலாவின் குரல் கேட்க,
“நீ குளிச்சிட்டு வந்து என்னை எழுப்பு.” எனச் சொல்லிவிட்டு ஜெய் மீண்டும் படுத்துக் கொண்டான்.
வெண்ணிலா குளித்து விட்டு வந்து அவனை எழுப்ப, ஜெய் எழுந்து துண்டை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குச் சென்றவன், குளித்து விட்டு வந்து, முதலில் அவன் கிளம்பி வெளியே சென்று விட… அதன் பிறகு வெண்ணிலா கிளம்ப ஆரம்பித்தாள்.
ஹாலில் யாரும் இல்லை. ஜெய் அங்கிருந்த பேப்பரை எடுத்துக் கொண்டு படிக்க உட்கார… அவன் தனியே இருப்பதைப் பார்த்து யுவராஜ் வர… அன்றைய விருந்துக்குப் போன்னில் ஏற்பாடு செய்து கொண்டிருந்த ராஜகோபாலும், பேசிவிட்டு இவர்களுடன் வந்து உட்கார்ந்து பேப்பர் படித்தார்.
ஆளுக்கொரு பேப்பர் வைத்துப் படித்துக் கொண்டிருந்தனர். கற்பகமும் வந்து ஹாலில் உட்கார… மகேஸ்வரி எல்லோருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தார்.
“எப்படி இருக்கு பாட்டி உங்க உடம்பு?” என ஜெய் பேச்சை ஆரம்பிக்க,
“எதோ இருக்கேன்.” என்றார் கற்பகம்.
“அப்புறம் கரண் எப்படி இருக்காரு எங்க இருக்காரு?”
இவன் எதற்கு இதைக் கேட்கிறான் என்பது போலத்தான் எல்லோரும் நினைக்க…
“கல்யாணம் தேதி நெருங்கும் போது போயிருக்காருன்னா… கண்டிப்பா வேலை மட்டும் காரணமா இருக்காது. எதுக்கும் நல்லா விசாரிங்க பாட்டி.” என்றதும், கற்பகத்திற்கு முகம் கருத்து சிறுத்து விட்டது.
பட்டுப் புடவை கட்டிக் கொண்டு வந்த வெண்ணிலாவும், இவன் எதற்கு இதைப் பேசுகிறான் எனப் பார்த்து நிற்க, ஆனால் அவன் அவளுக்காகத்தான் பேசினான்.
அவனே இப்படிப் பேசவும் ராஜகோபாலும் யுவராஜும் யோசிக்க ஆரம்பித்தனர். எதோ வெண்ணிலாவாலும் இவனாலும் தான் கரண் சென்றது போலத்தானே, கற்பகம் படம் காட்டிக் கொண்டிருந்தார். அவனே இப்படிச் சொன்னதும், கரண் மீதுதான் தவறு எனப் புரிந்தது.
“மகேஸ்வரி மாப்பிள்ளைக்குச் சாப்பாடு எடுத்து வை…” என்றபடி எழுந்து சென்ற ராஜகோபால்,
“என்ன டிபன் பண்ணியிருக்க?” எனக் கேட்க,
“பூரியும், வடையும் அதோட கறிக்குழம்பு.” என்றதும், சரி என்றவர், அங்கே வந்த மகளிடம், “நீயும் மாப்பிள்ளையும் சாப்பிடுங்க.” என்றதும், தந்தை தன்னிடம் சாதாரணமாக, அதுவும் ஜெய்யை மாப்பிள்ளை என்றது, வெண்ணிலாவுக்கு மகிழ்ச்சியாக இருக்க…
“வாங்க சாப்பிடலாம்.” எனச் சென்று அவள் ஜெய்யை அழைக்க,
“எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாமே…” என்றான்.
மகேஸ்வரியும், “ஆமாம் இனி விருந்தாளிங்க ஒவ்வொருத்தரா வருவாங்க. நீங்க சாப்பிட்டு மதியம் விருந்து வேலை பார்க்க மண்டபம் போகணும் இல்ல….” என, ராஜகோபாலும் யுவராஜும் சாப்பிட உட்கார்ந்தனர்.
மதியம் இருபக்க உறவினர்களுக்கும் அசைவ விருந்து இருக்கிறது. அவர்கள் எல்லோரும் ஒரே மேஜையில் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்த, கற்பகம் அதைப் பார்த்து முறைத்தபடி அறைக்குச் சென்றுவிட்டார்.
ஏற்கனவே அவருக்கு ஜெய் என்றால் ஆகாது. இப்போது அவர் பேரனைப் பற்றிப் பேசி, அவரை இன்னும் பகைத்துக் கொண்டான். கற்பகத்திற்குப் பேத்தி மீது பாசம்தான். ஆனால் முதலில் மகள்கள் வயிற்றுப் பிள்ளைகள் பிறகு பேரன் யுவராஜ் அதற்குப் பிறகுதான் அவருக்கு வெண்ணிலா. அதுவும் அவள் இப்போது அவருக்குப் பிடிக்காத வீட்டிற்கு அல்லவா மருமகளாகச் சென்றிருக்கிறாள்… அதனால் அவள் மீதும் கோபம்.
ஆண்கள் மூவரும் பேசிக்கொண்டு உணவருந்த, வெண்ணிலா நடுநடுவே அவர்களுக்கு வேண்டியது பார்த்து வைத்துக் கொண்டே உண்டாள்.
ராஜகோபாலும் யுவராஜும் உண்டு முடித்து எழுந்து செல்ல…. வெண்ணிலாவுக்காக ஜெய் உட்கார்ந்து இருந்தான்.
மருதாணி விரல்களில் பட்டும் படாமல் உணவை எடுத்து இள ரோஜா நிற உதடுகளுக்கு இடையில் வைத்து, வாய் அசைவது கூடத் தெரியாமல் அவள் உண்ண… ஜெய்யின் விழிகள் மனைவியை மேலும் ஆராய்ந்தது.
அடர் நீல நிறத்தில் பட்டுப் புடவையும், சிகப்பு நிறத்தில் பட்டு ரவிக்கையும் அணிந்து இருந்தாள். அதோடு பொருத்தமான அணிமணிகளும். அவள் நிறத்திற்குப் புடவை எடுப்பாக இருக்க… மனைவியை விழி எடுக்காமல் அவன் ரசிக்க… அதைக் கவனித்த வெண்ணிலா, என்ன என்பதாகப் பார்க்க…
அவள் பெரிய விழிகள் காட்டிய அபிநயத்தில் இன்னும் மயங்கியவன், “எப்ப டி உனக்கு என்னைப் பிடிக்கும்.” என கேட்க,
“ஆமாம் இதெல்லாம் கேட்பாங்க.” என நினைத்தவள், வெளியில் அவனை முறைத்து வைத்தாள்.