எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 23
மதிய உணவை உண்டுவிட்டுக் கற்பகம் ஹாலில் இருந்த சோபாவில் படுத்துக்கொள்ள, மணமக்கள் எந்த நேரத்திலும் வருவார்கள் என்பதால் வெண்ணிலா வீட்டை ஒதுங்க வைத்து கூட்டி முடித்தவள், தானும் முகம் கழுவி வேறு புடவை மாற்றித் தயாரானாள்.
கற்பகம் இதெல்லாம் பார்த்தபடி தான் படுத்துக் கொண்டு இருந்தார்.
“இப்பத்தானே சாப்பிட்ட கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்காம உடனே ஏன் வேலை பண்ற?” என அவரும் சொல்லித்தான் பார்த்தார். ஆனால் வெண்ணிலா கேட்க வேண்டுமே.
முதலில் விமலா காமாக்ஷி அமுதா மகேஸ்வரி ராதிகா என வீடு வந்தனர்.
மாப்பிள்ளை வீட்டினர் வருவதற்குள் வீட்டை ஒதுங்க வைக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் தான் பெண்கள் முதலில் வந்தனர். ஆனால் வெண்ணிலா அவர்களுக்கு வேலையே இல்லாமல் எல்லாம் செய்து வைத்திருக்க,
“நீ இல்லைனா நாங்க ரொம்பச் சிரமபட்டிருப்போம்.” என்றார் அமுதா பெருமையாக.
“இன்னும் கொஞ்ச நேரத்தில பொண்ணு மாப்பிள்ளையை அழைச்சிட்டு மாப்பிள்ளை வீட்டுகாரங்க வந்திடுவாங்க. அதுதான் நாங்க முன்னாடி வந்துட்டோம்.”
“சரி நீங்க எல்லாம் பார்க்க களைப்பா இருக்கீங்க. அவங்க வர்றதுக்குள்ள முகம் கழுவி தலைவாரிட்டு வாங்க.” என வெண்ணிலா அவர்களை அனுப்பி வைத்தவள்,
மாப்பிள்ளை வீட்டினர் வந்ததும் கொடுப்பதற்கு வசதியாக, மண்டபத்தில் இருந்து வந்திருந்த இனிப்பையும் காரத்தையும் சின்னத் தட்டுகளில் எடுத்து வைத்தாள்.
தயராகி வந்த காமாட்சியும் அமுதாவும் டீக்குத் தண்ணீர் கொதிக்க வைத்து டீ போடும் போதே மாப்பிள்ளை வீட்டினர் வர, தயாராக இருந்த ஆரத்தியை ராதிகா எடுக்க, மணமக்களுடன் உறவினர்களும் வீட்டிற்குள் வந்தனர்.
அவர்களோடு வீட்டின் ஆண்களும் ஜெய்யைத் தவிர மற்றவர்கள் வந்திருந்தனர். ஆண்கள் ஹாலிலும் பெண்கள் அறையிலும் உட்கார்ந்து கொள்ள, வெண்ணிலா எல்லோருக்கும் சிற்றுண்டி கொண்டு வந்து கொடுத்தாள்.
சிறிது நேரம் இருந்துவிட்டு மணமக்களை விட்டு விட்டு மாப்பிள்ளை வீட்டினர் கிளம்பி விட்டனர். அவர்கள் கிளம்பியதும், ராஜகோபால் வெண்ணிலாவின் வளைகாப்புக் குறித்துப் பேசினார்.
“சின்ன மண்டபம் ஒன்னு பிடிச்சு வைப்போமா?” என அவர் சொல்,
“வேண்டாம் மச்சான். வீட்லயே வைப்போம். ரொம்பப் பேரை எல்லாம் அழைக்கலை… வீணா கண்ணு படும். மருமகள் நல்லபடியா குழந்தை பெத்து வரட்டும் அது போதும்.” என்றுவிட்டார் ஜெயராமன்.
மீண்டும் ஒருமுறை மண்டபத்தில் வைப்போமே என ராஜகோபால் வலியுறுத்த, “அப்பா, மாமா சொன்னா சரியாதான் இருக்கும். வீட்லயே வைக்கலாம்.” என்றாள் வெண்ணிலா.
அவளே சொல்லிவிட்ட பிறகு ராஜகோபாலும் சரி என்றுவிட்டார். வளைகாப்புப் பெண் வீட்டில் செய்வது. செலவிற்காக வீட்டில் வைக்கிறோம் என நினைத்து விடக் கூடாதே என்றுதான் அவரும் நினைத்தார். மகளே சொன்னதும் அவர்கள் விருபத்திற்கே விட்டுவிட்டார்.
இன்னும் பத்துநாட்களில் வெண்ணிலாவுக்கு ஒன்பது மாதம் தொடங்க இருப்பதால், ஒன்பதாம் மாதத்தில் இருந்த முதல் நல்ல நாளிலேயே வலைகாப்பிற்கு நாள் குறித்துவிட்டு, ராஜகோபால் கிளம்ப உடன் கற்பகமும் யுவராஜும் சென்றனர்.
ஜெய் வீட்டிற்கு வரும்போது, ஏழு மணி. மண்டபத்தில் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து விட்டு வந்திருந்தான்.
அவன் குளித்துவிட்டு வர, மாப்பிள்ளைக்கு இரவு உணவு தயார் செய்து கொண்டிருந்தனர். ஒரு பக்கம் மணமக்களுடன் இளைய பட்டாளாம் அரட்டையில் இருக்க, வெண்ணிலாவின் அருகில் இருந்த ராதிகாவை எழுப்பி விட்டு ஜெய் உட்கார்ந்து கொண்டான்.
“என்ன டா மாப்பிள்ளை எப்படி உன்னை நல்லா கவனிக்கிறாங்களா?” என ஜெய் நண்பனை விசாரிக்க, புகழ் பதிலுக்குச் சிரிக்க,
“கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்தான். பிறகு எல்லாம் நாமும் பத்துல ஒண்ணுதான்.”
“இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க. எங்க வீட்ல உங்களை இப்ப ஒழுங்கா கவனிக்கிறது இல்லைனா?” என வெண்ணிலா கணவனை மடக்க,
“நான் அப்படிச் சொன்னேனா, நான் சாதரணமா தான் சொன்னேன்.” என்றான்.
“ஆமாமா நீங்க அப்படியே எங்க வீட்டுக்கு வந்திடுறீங்க பாருங்க, உங்களைக் கவனிக்கலைன்னு சொல்ல.”
“அம்மா தாயே புல் பார்மல இருக்கப் போல… என்னை ஆளை விடு.” என்றான் ஜெய்.
“அண்ணனுக்குத் தான் ரொம்ப வேலை.” என அகல்யா ஜெய் களைத்திருப்பதைப் பார்த்து சொல்ல,
“இதெல்லாம் ஒரு வேலையா?” என்றான் ஜெய்.
“என்னோட கல்யாணத்துல அண்ணனுக்கு நான் இவ்வளவு வேலை எல்லாம் வைக்க மாட்டேன்.” என ராதிகா சொல்ல,
“வேலையே வைக்க மாட்டேனா புரியலையே?” எனப் புகழ் சொல்ல,