எந்தன் காதல் நீதானே 

அத்தியாயம் 15 

ஜெய் சனிக்கிழமை இரவு ஒன்பது மணிப் போலத்தான் வந்தான். வந்தவன் வேலை இருக்கிறது என அதிகாலையே வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சிக்கு கிளம்பிவிட்டான். மதியம் உண்டுவிட்டுக் கிளம்பலாம் என்றால் கேட்கவில்லை. 


அதிகாலையில் எழுந்தது, அதிலும் உடனே பேருந்து பயணம் என்பதால்… வெண்ணிலாவுக்கு உறக்கம் வர… இந்தமுறை அவளாகவே கணவனின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள். 

ஒன்பதரை மணிப்போலப் பொள்ளாச்சிக்கு வந்து விட்டனர். இறங்கியதும் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றவன், அவளுக்கு வேண்டியது கேட்டு உண்ண வைத்தான். 

இருவரும் உண்டு அங்குத் தெரிந்தவர் இடத்தில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் அவர்கள் ஊரை நோக்கி சென்றனர். செல்லும் வழியாவும் பசுமை தான். சுற்றிலும் இயற்கையை ரசித்தபடி கணவனோடு செல்லும் பயணத்தை வெண்ணிலா வெகுவாக ரசித்தபடி வந்தாள். 

“வீட்டுக்கு போகும் போது பதினொன்னு ஆகிடும். உன்னை வீட்ல விட்டுட்டு உடனே கிளம்பனும்.” என ஜெய் சொன்னதும், அதுவரை மனதில் இருந்த குளுமை மறைந்து, மனதில் வெப்பம் உண்டானது. 

“எங்கப் போகப் போறீங்க?” என அவள் கடுப்பாக, 

“வேலை இருக்குன்னு சொன்னேன் இல்ல…” என்றான். 

“ஞாயிற்றுக் கிழமை கூட என்ன வேலையோ?” என வெண்ணிலா முனங்க… ஜெய் வண்டியை நிறுத்தி இருந்தான். 

“என்ன சொன்ன?” என அவன் கேட்க, வண்டியில் இருந்து வெண்ணிலா இறங்கி நின்றவள், அவன் முகம் பார்க்காமல் வேறு எங்கோ பார்க்க, “இப்ப உனக்கு என்ன டி பிரச்சனை?” அவன் கேட்க, 

“இதுக்கு நான் எங்க வீட்லயே இருந்திருக்கலாம்.” என்றாள். 

“இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை தான இன்னைக்குக் கூட வீட்ல இருக்க மாட்டீங்களா?” 

“வீட்லதான் அத்தனை பேர் இருக்காங்க இல்ல… நானும் வீட்ல இருந்து என்ன பண்றது?” 

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒன்னு நீங்களும் வீட்ல இருக்கணும்… இல்லை என்னையும் உங்களோட கூடிட்டு போங்க.” 

ஜெய் அவளைப் பார்க்க, அவள் உடல் மொழியில் இருந்தே அவள் பிடிவாதத்தை அறிந்தவன், “சரி வா…” என, எங்கே என வெண்ணிலா சந்தேகமாகப் பார்க்க, 

“என்னோட தான் கூடிட்டு போறேன் வா…” என்றதும், வெண்ணிலா பைக்கில் ஏற, ஜெய் வண்டியை திருப்பினான். 

“பார்க்க ரொம்ப அமைதியா இருக்க… ஆனா செம பிடிவாதம். நினைத்ததைச் சாதிக்கிற.” என ஜெய் வண்டியின் கண்ணாடியில் அவளைப் பார்த்து முறைத்தபடி சொல்ல, அது தெரிந்தாலும், வெண்ணிலா வேடிக்கை பார்ப்பது போல நடித்தாள். 

திரும்பப் பொள்ளாச்சி வந்துதான் செல்லவேண்டும். பொள்ளாச்சியில் ஒரு உணவகம் முன்பு வண்டியை நிறுத்தியவன், “போற இடத்தில ஹோட்டல் எல்லாம் இல்லை. மதியத்துக்கு உனக்கு என்ன சாப்பிட வேணுமோ இப்பவே வாங்கிக்க. கூடவே ரெண்டு சாப்பாடு சேர்த்து வாங்கு. அங்க வேலை செய்றவங்களுக்குக் கொடுக்கலாம்.” என அவன் பர்சை எடுக்க… 

“என்கிட்டே இருக்கு நான் வாங்கிட்டு வரேன்.” என்றபடி வெண்ணிலா ஹோட்டல் உள்ளே சென்றவள், பதினைந்து நிமிடங்கள் சென்று பார்சலுடன் வெளியே வந்தாள். 

கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு பெரிய இரும்பு கேட்டின் முன்பு சென்று வண்டியை நிறுத்தினான். இவனைப் பார்த்ததும் வாயில் காவலாளி கேட்டை திறந்து விட… வண்டியை உள்ளே விட்டான். 

சிறிது தூரம் சென்ற பிறகுதான், வீடே கண்ணில் தட்டுப்பட்டது. வீடு இல்லை பெரிய மாளிகை. ஏக்கர் கணக்கில் இருக்கும். அதன் வெளிப்புறம் ஆட்கள் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

வீட்டின் முகப்பில் நாற்காலி இருக்க அதில் வெண்ணிலாவை உட்கார சொல்லிவிட்டு, ஜெய் வேலை ஆட்களிடம் சென்றான். 

ஏற்கனவே செடி கொடிகள் நடப்பட்டிருக்க, கார்பெட் போல இருந்த ரெடிமேட் புற்களை… செம்மணலில் பாய்ப் போல வைத்துக் கொண்டிருந்தனர். 

வசதியாக உட்கார்ந்து கொண்டு வெண்ணிலா தண்ணீரை எடுத்து குடித்தவள், சுற்றிப் பார்ப்போம் என எழுந்து சென்றாள். 

தோட்டம் பெரிதாக இருந்தது. வீட்டின் முன்புறம் அலங்கார செடிகள், பூ செடிகள் என இருக்கப் பின்புறம் மா பலா வாழை என வைத்திருந்தனர். அதுதவிர அங்கங்கே தென்னை மரங்கள் வேறு  இருந்தது. 

வீட்டின் பக்கவாட்டில் பெரிய நீச்சல் குளமும் இருக்க.. வெண்ணிலா அதைச் சுற்றி நடந்து கொண்டிருந்தாள். 

ஜெய் வேலை ஆட்களிடம் பேசிவிட்டு திரும்பி பார்க்க வெண்ணிலா அங்கே இல்லை. அதே நேரம் அவன் கைபேசி அழைக்க எடுத்து பார்த்தால் வெண்ணிலா தான் அழைத்தாள்.

ஒரு நொடி பயந்தே போனான். “ஹே எங்கப் போன?” 


“நான் நீச்சல் குளத்துக்கிட்ட இருக்கேன்.” 

“சரி இங்க வா…” 

“இல்லை நீங்க வாங்க. இங்க ஒரு நாய் நின்னுட்டு என்னையே முறைச்சிட்டு இருக்கு. நகர்ந்தா கடிச்சிடுமோன்னு பயமா இருக்கு.” வெண்ணிலா சொல்ல, அவள் இருக்கும் பக்கம் சென்று கொண்டே தான் ஜெய் பேசினான் என்பதால் அவளை நெருங்கி இருந்தான். 

உண்மையில் பெரிய நாய் ஒன்று அவள் முன்பு நின்று கொண்டுதான் இருந்தது. அது அங்கே காவலுக்காக வளர்க்கப்படுவது. ஜெய் சென்று வெண்ணிலாவின் தோளைத் தொட, உடனே வந்து நிற்பான் எனத் தெரியாததால் யாரோ எனத் திடுக்கிட்டு போனாள். 

“நான்தான் வா போகலாம்.” என்றவன், அவள் தோளில் கைப் போட்டு அவளை அழைத்துச் செல்ல, ஜெய்யை பார்த்த நாயும் ஓடிவிட்டது. 

“எதுக்குத் தனியா வந்த?” என்றவன், அவளோடு சென்று அந்த வீட்டையும் சுற்றிக் காட்டினான்.
பெரிய ஹால், சமையல் அறை, உணவு அறை,  மாடியில் பெரிய பெரிய அறைகள் எனப் பார்த்துக் கொண்டே வந்தனர். 

“வீடு தான் கட்டி முடிச்சாச்சே பிறகு ஏன் இங்க யாரும் இல்லை?” 

“இந்த வீடு கோயம்புத்தூர் மில் ஓனர் ஒருத்தரோடது. இது பண்ணை வீடு தான். மாசம் ஒருமுறை வந்தா அதிசயம்.” 

“அதுக்கா இவ்வளவு பெரிசா கட்டியிருக்காங்க.” 

“பணம் இருக்கு அதைச் செலவு பண்ண வேண்டாமா?” 

“எப்போவோ ஒருதடவை வர்றதுக்கு இவ்வளவு செலவு பண்ணுமா?” 

“நேர்மையா சம்பாதிச்ச பணத்தை அவங்க இஷ்டத்துக்கு அனுபவிக்கிறது என்னைப் பொறுத்தவரை தப்பு இல்லை.” 

ஜெய் பேசிக் கொண்டிருக்க வெண்ணிலா கால் வலிக்கிறது என அங்கிருந்த நாற்காலியில் உட்கார… 

“ஒழுங்கா வீட்ல விட்டிருப்பேன் இல்ல… எதுக்கு வந்த?” 

“எனக்கும் வீட்ல இருந்து போர் அடிக்காதா? இங்க நல்லாத்தான் இருக்கு. அப்படி அக்கறை இருக்கிறவர், எல்லோரையும் ஒரு பிக்னிக் கூடிட்டுப் போகலாம் இல்ல…” 

“போகலாமே…இப்ப மழை நேரம் தான் பால்ஸ் கூடத் தண்ணி இருக்கும். அடுத்த வாரம் வேணா போவோம்.” 

“நிஜமாத்தானே சொல்றீங்க. நான் அகல்யா ராதுகிட்ட எல்லாம் சொல்லிடுவேன்.” என்ற மனைவியைப் பார்த்து ஜெய்கு சிரிப்புதான் வந்தது. 

“வா டி பசிக்குது சாப்பிடலாம்.” என அழைத்துச் சென்றான். 

கொண்டு வந்த உணவில் சிலதை வேலை ஆட்களிடம் கொடுத்து விட்டு, இருவரும் வெளியே தோட்டத்தில் இருந்த கற் திண்டில் அமர்ந்து உண்டனர். 

மதியத்திற்கு மேல் வேலை முடிந்து ஆட்கள் கிளம்ப, ஜெய் அவர்களிடம் பணம் கொடுத்து அனுப்பினான். ஆனால் அவன் கிளம்பவில்லை. அப்போது பைக்கில் ஒருவன் வர… ஜெய் அவனோடு சென்றான். இருவரும் நடந்தபடி பேசிக் கொண்டே சென்றனர். 

அவர்கள் சென்றதும் வெண்ணிலா அந்தக் அங்கிருந்த திண்டில் கால் நீட்டில் அமர்ந்தாள். உண்மையில் சிறிது நேரம் படுத்தால் போதும் என்றிருந்தது. அந்த அளவு களைத்துப் போய் இருந்தாள். ஆனால் கணவனுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையில் தானே வந்தாள். அவனோடு இருப்பதே சந்தோஷமாக இருந்தது. 

ஜெய் வருவதைப் பார்த்தவள், ஒழுங்காக உட்கார… அவனுடன் வந்தவன், இரண்டாயிரம் தாள்களாக எண்ணி ஜெய்யிடம் கொடுக்க, ஜெய்யும் ஒருமுறை எண்ணி சரிபார்த்துவிட்டு, அவனிடம் விடைபெற்று வந்தான். 

ஹப்பா போகலாம் என வெண்ணிலா எழுந்துகொள்ள… மீண்டும் ஒரு நீண்ட பைக் பயணம். இரவும் வீடு வந்து சேர ஏழு மணி ஆகி இருக்க… வெண்ணிலா வேறு கலைத்து போய் இருக்க… வீட்டினரிடம் ஜெய்க்கு தான் பேச்சுக் கிடைத்தது. 

“நான்தான் வரேன்னு சொன்னேன்.” என வெண்ணிலா சொல்லியும், அவனைத் திட்டுவதை நிறுத்தவில்லை. 

ஜெய் எதையும் கண்டுகொள்ளவில்லை. இருவரும் சாப்பிட்டு அறைக்கு வந்தனர். உடை மாற்றி முகம் கழுவி வந்தவள், கட்டிலில் சென்று கை கால்களை நீட்டி படுத்துக்கொள்ள, அவர் வருவதற்காகவே காத்திருந்த ஜெய் அவள் மீது பட்டும் படாமல் படுத்து, “ரொம்பக் களைப்பா இருக்கா?” எனக் கேட்க, 

முதலில் ஆமாம் என்பது போலத் தலையசைத்தவள், பிறகு இல்லை என்பது போல இடம் வலமாகத் தலையை ஆட்ட… ஜெய் மனைவியின் கழுத்தில் முத்தமிட… வெண்ணிலாவின் உடல் சிலிர்த்தது. அவளும் அவனை அனைத்துக் கொண்டாள். அப்போது எந்தக் களைப்பும் தெரியவில்லை. 

மறுநாள் திங்கள் என்பதால் வழக்கமான வேலைகளில் நேரம் சென்றது. ஜெய் வேலைக்குச் சென்ற பிறகுதான் வெண்ணிலா அவர்கள் அறைக்கு வந்து துவைக்க வேண்டிய துணிகளைத் துவைத்து உலர்த்துவாள். அன்றும் அது போலத் துணிகளைத் துவைத்து உலர்த்திக் கொண்டிருக்க… கைப்பேசி அழைத்தது. 

அலுவலகத்திற்குச் சென்ற பிறகு முக்கியமான விஷயம் இருந்தாலே ஒழிய ஜெய் அழைக்க மாட்டான். ஒருவேளை அம்மாவோ என நினைத்து வெண்ணிலா வந்து பார்க்க, தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு. 

வெளிநாட்டு அழைப்பு எனப் புரிந்தது. தனக்கு யார் அழைக்கப் போகிறார்கள்? எடுப்போமா வேண்டாமா என யோசித்துக் கொண்டே எடுத்து பேசினாள். 

“ஹலோ…” 

“ஹாய் வெண்ணிலா, நான் கரண் பேசுறேன்.” என்றதும், முதலில் கரண் யார் என நியாபகத்திலேயே இல்லை. அவள் யோசிக்கும் போதே… “எப்படி இருக்க வெண்ணிலா?” என அவன் திரும்பக் கேட்டதும்தான் யாரென்று புரிந்தது.  

“ஹான் கரண் அத்தான் நீங்களா?” என்றாள். 

“நான் ரொம்ப நாளா போன் பண்ணனும் நினைச்சேன். பாட்டி சொன்னங்க நீ உங்க அம்மா வீட்ல இருக்கிறதா? அதுதான் போன் பண்ணேன்.” 

“ஓ… ஆனா நான் இப்போ இங்க வந்துட்டேன்.” என்றாள். 

“அப்படியா? சரி சொல்லு எப்படி இருக்க?” 

“நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?” 

“நான் நல்லா இருக்கேன். என்னை விடு… சாரி வெண்ணிலா, என்னால தான உனக்கு அவசரமா உன் மாமா மகனை கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.” 

“நான் வேற நல்ல இடம் பார்ப்பாங்க நினைச்சேன். இப்படி உன்னைக் கொண்டு போய் அங்க கொடுப்பாங்க நினைக்கலை.” எனக் கரண் பேசிக் கொண்டே செல்ல….அவன் பேச்சில் வெண்ணிலாவுக்குக் கோபமாக வர… அந்த நேரம் பார்த்து ஜெய் வந்துவிட்டான். 

கரண் பேச்சை கேட்டு ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்தவள், அந்த நேரம் கணவனும் வந்து நின்றதும், இன்னும் அதிர்ந்து போனாள். 

அவன் யார் எனக் கேட்பதற்குள் தானாகவே, “கரண் அத்தான்.” எனப் போன்னை ஜெய்யிடம் நீட்ட, 

“நீயே பேசு.” என்றவன், அலமாரியில் சென்று எதோ தேட… கணவனைப் பார்த்தபடி கைப்பேசியைக் காதுக்குக் கொடுத்தாள். 

கரனுக்கு இது எதுவும் தெரியவில்லை. “மாமா எப்படி உன்னை அங்க கொடுத்தார்.” என இன்னும் அவன் பேசிக் கொண்டே இருக்க… ஜெய்யை வைத்துக் கொண்டு பேச முடியாமல். 

“நான் ரொம்ப நல்லா இருக்கேன் அத்தான். நீங்க உங்களைப் பார்த்துக்கோங்க. அத்தைகிட்ட பேசுறீங்களா… அத்தை தான் பாவம் உங்களை விட்டு இருக்கக் கஷ்டப்படுறாங்க.” என்றவள், “சரி வேலை இருக்கு வச்சிடுறேன்.” என வைத்து விட்டாள். 

ஜெய் எதோ பத்திரம் போலத் தேடி எடுத்தவன், என்ன ஏது என அவளிடம் கேட்காமலே கிளம்பி சென்று விட… 

தான் அவனுக்குத் தெரியாமல் கரண்னோடு பேசுவதாக நினைத்து விடுவானோ என வெண்ணிலாவுக்கு அச்சமாக இருந்தது. 

மாலை ஏழு மணிப் போலத்தான் ஜெய் வீடு திரும்பினான். ஜெயராமனும், சந்திரனும் அதிகாலை எழுந்து தோட்டத்திற்குச் செல்வதால்… இரவு உணவு நேரமே உண்டுவிட்டுச் சீக்கிரம் படுத்துவிடுவார்கள். 

அன்றும் எட்டு மணிக்கெல்லாம் இரவு உணவு முடிந்துவிட… அன்று ஜெய்யும் டிவி பார்க்காமல் உண்டதும் அறைக்குச் சென்று விட, வெண்ணிலாவும் அடுக்களை ஒதுங்க வைத்து விட்டு நேரமே மாடிக்கு வந்துவிட்டாள். 

ஜெய் மாடி தோட்டத்தில் நின்றிருந்தான். வெண்ணிலாவும் சென்று அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டவள், “இன்னைக்குக் கரண் அத்தான் போன் பண்ணாங்க.” என்றாள். 

“ம்ம் என்னவாம் திடீர் அக்கறை?” 

“நீங்களே கேட்டிருக்க வேண்டியது தான. நான்தான் போன்னை கொடுத்தேனே நீங்கதானே பேசலை.” 

“நான் ஏன் அவனோட பேசணும்?” 

“சரி அதை விடுங்க. என் மேல கோபமா?” 

“உன் மேல கோபப்படக் காரணம் இருக்கா என்ன? கரண் உன்னோட அத்தை பையனும் கூட. அவனோட நீ பேசவே கூடாதுன்னு எல்லாம் நான் நினைக்கலை. அதோட இதுல உன்னோட தப்பு என்ன இருக்கு?” 

“நான் என்னோட விருப்பத்தின் பேரில் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உன்னோட விருப்பத்தைக் கூடக் கேட்கலை. பிறகு உன்னைத் தப்பா நினைக்க என்ன இருக்கு?” 

கணவன் தன்னைத் தவறாக நினைக்கவில்லை என்ற மகிழ்ச்சியில் வெண்ணிலா இருக்க, ஜெய் மேலும் தொடர்ந்தான். 

“தப்பு சொன்னா என்னைத் தான் சொல்லணும். உன் மனசுல என்ன இருக்கு? உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமா? எதுவும் கேட்காம கல்யாணம் பண்ணிகிட்டது நான்தான்.” 

“கோபப்பட்டா நீதான் கோபப்படனும். சொல்லு என் மேல எதுவும் வருத்தம் இருக்கா? நீ இங்க சந்தோஷமா இருக்கியா?” அவன் கேட்க, 

“என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது? நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்.” என்றாள். 

“உண்மையாவே சந்தோஷமா இருக்கியா? இல்லை வேற வழியில்லாம சந்தோஷமா காட்டிக்கிறியா?” 

“என்னைப் பார்த்தா உங்களோட கடனுக்கு வாழற மாதிரியா இருக்கு?” என வெண்ணிலா முறைக்க, 

“எனக்கு உண்மையாவே தெரியலை நிலா.” என்றான். 

“என் மனசுல நீங்கதான் இருக்கீங்கன்னு நான் எப்படிக் காட்டுறது. அனுமனை மாதிரி மனசை கிழிச்சா காட்ட முடியும். நீங்க என்னை நம்பனும். நேத்து உங்களோட இருக்கனும்னு ஆசையிலதான் வந்தேனே தவிர, ஊர் சுத்துற ஆசையில இல்லை. இதுக்கு மேல எல்லாம் எனக்குப் புரிய வைக்கத் தெரியாது.” 

“இப்படியெல்லாம் நம்பிக்கை இல்லாம பேசுறதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்காமலே இருந்திருக்கலாம்.” 

“ஏய் நம்பிக்கை இல்லாம இல்ல டி…” 

“நீங்க பேசாதீங்க, உங்க இஷ்டத்துக்குக் கல்யாணம் பண்ணுவீங்க. பிறகு இப்படி வேற பேசுவீங்களா? இதுதான் ஆம்பிளை புத்தி இல்லை.” 

“ஏய் நான் சொன்ன அர்த்தம் வேற, இப்ப நீ புரிஞ்சிக்கிற அர்த்தம் வேற…” 

“போதும் என்னை வச்சு ஆளாளுக்கு விளையாடாதீங்க சரியா. இப்ப என்ன நான் சந்தோஷமா இல்லைன்னு சொன்னா, எனக்கு வேற கல்யாணம் பண்ணி வைப்பீங்களா?” என வெண்ணிலா கேட்டே விட, ஜெய் அவளைப் பளாரென்று அறைந்து இருந்தான். 

“கேட்டதுக்கே கோபம் வருது இல்ல… எனக்கும் அப்படித்தான் இருக்கும். உங்களோட எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. இனியும் அப்படி இருந்தா, இப்படி இருந்தான்னு பேசாதீங்க சரியா?” 

“தெரியாம கேட்டுட்டேன் போடி. உன்னோட எல்லாம் மனுஷன் பேச முடியாது.” 

“கல்யாணம் பண்ணிகிட்டோமேன்னு வாழறது வேற, பிடிச்சு வாழறது வேற… நம்ம இஷ்டத்துக்குக் கல்யாணம் பண்ணிகிட்டோமேன்னு ஒரு தவிப்புல கேட்டா… உங்களைப் பிடிக்கும்னு சொன்னா குறைஞ்சு போயிடுவியா?” ஜெய் தன் தரப்பை சொல்ல,

“நானும் அதே தான் கேட்கிறேன். வாய்விட்டுச் சொன்னா தானா… இதுக்கூட உங்களுக்குப் புரியாதா?” என வெண்ணிலாவும் தன் தரப்பில் நிற்க, கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு நின்றனர்.