Advertisement

பகுதி – 8
“கயல் இன்றைக்கு நான் உன்னுடன் இந்த ரூமில் தங்கிக் கொள்கிறேன். நாளை முதல் நீ தனியாக படுக்க பழகிக்கொள். அனுவிற்கு திருமணமாகி விட்டது. இனி அவள் கணவனுடன் தான் இருக்க வேண்டும். பயமாக இருந்தால் …” என்ற சாரதாவை குறுக்கிட்ட கயல் “பயம் எல்லாம் இல்லை ஆன்டி. எனக்கு நீங்கள் சொல்வது புரிகிறது. நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று பிரகாசமாய் ஒத்துக்கொண்டாள் கயல்.
“பரவாயில்லையே நீயும் அனு போல் நல்ல குணமுள்ள பெண்ணாகத் தான் இருக்கிறாய்.” என வாஞ்சையாய் அவள் தலையை தடவிக் கொடுத்தார்.
புன்னகைத்துவிட்டு கயல் ஒரு புறம் படுக்க, சாரதா மறு புறத்தை தன் வசமாக்கினார். ஹாலில் முரளி தந்தை நித்திரையில் அயர, ஆதி அறையில் மட்டும் ஒரு சிறிய விளக்கு எரிந்தது.
திவானில் அமர்ந்திருந்த ஆதி, “சரி போதும் நிறுத்து. எவ்வளவு நேரம் தான் அழுவாய் நீ.” என்று சற்று கண்டிப்புடன் தன் மார்பில் முகம் புதைத்த அனுவின் முகத்தை கைகளில் ஏந்தினான்.
அமைதியாய் அவன் முகத்தை நோக்கியவள், “எனக்கு ஒரு வாக்கு கொடுப்பீர்களா?”
“என்னடா வேணும் கேளு…” கண்ணில் வழிந்த நீரை துடைத்துவிட்டு அவளுக்கு செவிகொடுத்தான்.
“இப்போது இருப்பது போல் என்றும் என் மேல் பாசத்துடன் இருப்பீர்களா? எனக்கு தெரியும் நான் உங்களுக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவள் அல்ல. ஆனால் நான் எதுவேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன், உங்களின் அன்பு எனக்கு வேண்டும். எனக்கு தெளிவாக இன்னதென்று சொல்லத் தெரியவில்லை ஆனால் எப்பொழுதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. உங்கள் கைகளை விடாமல் பிடித்திருக்க வேண்டும். உங்களுக்கு பிடித்தவாறு நடந்துகொள்ள வேண்டும். உங்கள் பெற்றோரை சமாதானம் செய்ய வேண்டும். அவர்கள் மேல் என்ன தவறு இருக்கிறது? எல்லா பெற்றோரும் விரும்புவது தானே அவர்களும் விரும்பினார்கள். அவர்களுக்கும் கனவு இருந்திருக்கும் உங்களுக்கு ஏற்ற ஒருவரை திருமணம் செய்து வைத்து அழகு பார்ப்பது, அதில் சற்றும் பொருந்தாதவள் நான். அதை சரி செய்ய வேண்டும், அதற்கு நீங்கள் தான் உதவ வேண்டும். செய்வீர்களா?” என்று எதிர்பார்ப்புடன் கேட்டாள் அனு.
இதை சற்றும் எதிர்பாராதவன் சற்று திகைத்து விட்டான். இருக்காதா பின்னே, அவள் தன் தந்தையை பற்றி பேசுவாள் என்று பார்த்தால் அவளோ தன் பெற்றோரைப் பற்றி பேசுகிறாள். அப்பொழுது எதற்கு இவ்வளவு நேரம் அழுதாள்? என்று ஒன்றும் புரியாமல் சிலையாய் அமர்ந்திருந்தான்.
“என்ன ஒன்றுமே பேசமாட்டீங்கிறீர்கள்? என் மேல் ஏதும் கோபமா? நான் ஏதாவது தவறாக பேசிவிட்டேனா?” என்றவளின் படபடப்பான பேச்சை கேட்டு தன் நிலை உணர்ந்தவன் அவளை மீண்டும் தன் வளைவுக்குள் கொண்டு வந்தான்.
“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைடா. நீ எதுவும் தவறாக கேட்கவில்லை. நீ கூறியதும் சரி தான், அப்பாவிற்கு ஏற்கனவே சற்று கோபம் தணிந்து விட்டது. அம்மாவை தான் சமாளிக்க வேண்டும். அதை விடு முதலில் இதற்கு பதில் சொல், நீ எதற்கு அழுதாய்? சாரதா ஆன்ட்டியிடம் உன் தந்தையை பற்றி தானே நினைத்து அழுதாய், ஆனால் இங்கு வேறு ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறாய்?” என்று தன் சந்தேகத்தை வினவினான்.
“அது… அது வந்து, நீங்கள் என்னை அணைத்த போதே என்னை விரும்பவும் ஒருவர் இருக்கிறார் என்று தோன்றியது, அதில் என் அப்பா நினைவெல்லாம் மறந்துவிட்டது.” என்று அசட்டையாய் பதிலளித்தாள். 
“ஓ… அப்பொழுது எதற்கு நம் அறைக்கு வந்தும் அழுதாய்?”
“அது என்னை நினைத்து, உங்களை நினைத்து. நீங்கள் இதுவரை என் மேல் எவ்வளவு பிரியமுடன் நடந்து கொள்கிறீர்கள், ஆனால் நானோ உங்களுக்கு சுமையாக இருக்கிறேன் போதாததிற்கு கயலையும் என்னுடன் கூட்டி வந்து விட்டேன்…” என்றவள் அவன் முறைப்பை பார்த்து கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டாள்.
“இன்னொரு தடவை நீ எனக்கு பாரமாய் இருக்கிறேன் என்று சொல்லிப் பார். அப்புறம் சொல்கிற வாயை எப்படி அடைக்கிறேன் என்று தெரிந்துக்கொள்…” என்றவன் எவ்வித தயக்கமும் இன்றி சடாரென்று தன் இதழை அவள் இதழில் பதித்தான்.
அவன் செயலில் திக்குமுக்காடியவள் அவன் சட்டையை தன் கரங்களில் இறுகப் பற்றி கண்களை மூடிக்கொண்டாள். சில நிமிடம் கழித்து அவள் மூச்சு விட சிரமப்படுவதை உணர்ந்தவனாய் அவளை விடுவித்தான் ஆதி.
“ஏய்… இங்க பாரு.” என்று அவள் காதில் கிசுகிசுக்க அவனுள் தஞ்சமானாள் அனு.
அவள் வெட்கத்தை கண்டு இரு நிமிடம் தன் அலைபாயும் மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவன், “நீ என்ன படிக்க விருப்புகிறாய்?”
“ஆங்…” அவன் ஏற்படுத்திய அழகிய உணர்வுகளில் சிக்கியவள் அவன் கேட்ட கேள்வியில் திடுக்கிட்டு விழித்தாள்.
“உன் பத்தாம் வகுப்பு மார்க் சீட் பார்த்தேன். நல்ல மதிப்பெண் வாங்கி இருக்கிறாய். ஏன் நீ பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதவில்லை?” என்று வினவ அவன் ஒரு கரம் அவள் தோளிலும் மற்றொன்று தன் போக்கில் அவள் கை விரல்களுடன் நர்த்தனமாடியது.
அவன் வருடலில் நெளிந்தாலும் சுதாரித்துக்கொண்டு பதிலளித்தாள் அனு, “அப்பாவிற்கு கிட்னியில் அறுவை சிகிச்சை நடந்தது, அதற்கு பணம் போதவில்லை அதனால் படிப்பை விட்டுவிட்டேன்.” என்றாள் துயருடன்.
“இப்போது படி. நான் உன்னை படிக்க வைக்கிறேன். முதலில் தனித்தேர்வாக பன்னிரெண்டாம் வகுப்பு எழுது. பின் காலேஜில் சேர்ந்து கொள்ளலாம்.” என்றவன் அவள் மறுப்பு தெரிவிக்க முற்படுவதை கண்டு, “பெண்களுக்கு கல்வி என்பது மிகவும் அவசியம். திருமணம் ஆனதால் நீ குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. நிறைய பெண்கள் இக்காலத்தில், வீட்டையும் நிர்வகித்து தன் படிப்பு அல்லது வேலையும் செய்கிறார்கள். உனக்கு கடினமாக இருந்தால் நான் உதவி செய்கிறேன் அல்லது வீட்டில் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்வோம். ஆனால் நீ படிக்க வேண்டும், எனக்காக அல்ல உனக்காக. உனக்கு விருப்பமுள்ளதை படி. நான் உனக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன்.” என்றவன் அமைதியாய் இருக்கும் அனுவை பார்த்து வெட்கி முறுவலித்தான்.
அதற்கு காரணம் அனு அவனை இமைக்காமல் அவன் முகத்தையே வெறித்து நோக்கினாள். அதிலே தெரிந்தது வெறும் காதல், காதல், காதல்..
இவன் இவ்வளவு உயர்ந்த எண்ணம் உள்ளவரா? தான் பார்த்து வளர்ந்த பாதி ஆண்கள் தன்னிடம் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்று தான் அது ஆதிக்கு மட்டும் சொந்தமானது. ஆனால் அவன் அதை தவிர்த்து தன்னை பற்றி இவ்வளவு சிந்திக்கிறான், தான் சொல்லாமலே தன் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணுகிறான். ஆம், அவளுக்கு நிறைய படிக்க வேண்டும் என்று கனவு இருந்தது, அது கனவாகவே இருக்கும் என நம்பும் தருணத்தில் தன் கணவன் இவ்வாறு கூறியது அவளுள் அவனுக்கிருந்த மதிப்பை கூட்டியது. இவன் தன்னவன், என்னவன் என்ற கர்வம் அவள் மனதுள் ஆழ் துளை போட்டு அமர்ந்தது.
அதே கர்வத்தோடு அவனை நெருங்கியவள் அவன் கன்னத்தை தன் கைகளில் ஏந்தி தன் முதல் முத்திரையைப் பதித்தாள். அதில் புன்னகைத்தவன் அவளை அணைத்துக்கொண்டு திவானில் தலை சாய்ந்து அவளையும் தன்னுடன் இழுத்து கண் அயர்ந்தான். அவளோ தன் கணவன் தனக்களித்த சுதந்திரத்தை எண்ணி பூரித்து அவன் மேல் உரிமையோடு தன் கரம் போட்டு அணைத்து அவளும் அவனோடு உறங்கினாள் .
“அனு… அனு…” யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு விழித்தாள் அனு. அவள் முதல் பார்வையே ஆதி மேல் விழ, நேற்று இரவு நடந்த அனைத்தும் நினைவு வந்தது வெட்கத்துடன் சேர்த்து. அவனிடமிருந்து பிரிந்து அவன் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்த பின் கதவை திறந்தாள்.
“தொந்தரவு பண்ணிட்டேனா அனு.” கதவை திறந்ததும் சாரதா புன்னகை கலந்த தயக்கத்துடன் நின்றார்.
“அதெல்லாம் இல்ல அம்மா.” என்று பதில் அளித்து தங்கள் அறைக் கதவை மூடி சாரதாவை பின் தொடர்ந்தாள் அனு.
சிற்றுண்டி முடித்து விட்டு அவர்கள் கிளம்ப கயலும் தன் பள்ளிக்கு கிளம்பினாள்.
“நீங்க ஆஃபீஸ் போகவில்லையா?” என்று ஹாலில் சும்மா உட்கார்ந்திருந்த ஆதியை வினவினாள்.
“இல்லை, நாம் இன்று வெளியில் ஒரு முக்கிய இடத்திற்கு போகிறோம், கிளம்பு.” என்று அவளை அறைக்குள் விரட்டினான் ஆதி.
***
“ஏய் நிலா… இன்றைக்கும் உன் ஆள் வரலடி. ஆனால்…” என்று இழுத்தாள் சந்தியா.
“என்னடி ஏதோ சொல்ல வர மாதிரி இருக்கு ஆனால் பாதியில் நிறுத்தி விட்டாய். முழுதாக சொல்ல வந்ததை கூறு.” என்றாள் அவளது தோழி நிலா.
“அது வந்து… ஆபீஸில் அரசல் புரசலாக உன் ஆளுக்கு கல்யாணம் ஆகி விட்டது என்று பேசிட்டு இருக்காங்கடி.” என்று அணுகுண்டை தூக்கி போட்டாள் சந்தியா.
அதைக் கேட்ட மறுநொடி நிலா தன் இருக்கையை தள்ளி விட்டு அதிர்ச்சியில் எழுந்தாள், “லூசு மாதிரி பேசாதடி. அவருக்கு கல்யாணமெல்லாம் ஆகி இருக்காது.” என்று சந்தியாவை கடிந்து கொண்டாள்.
“உன் நம்பிக்கை மெய்யாக இருந்தால் ரொம்ப சந்தோசம்.” என்று தன் தோழி வாழ்கைக்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாது என வேண்டிக்கொண்டாள் நிலாவின் ஆருயிர் தோழி.
“நம்பிக்கை பலித்து தான் ஆக வேண்டும். ஆதித்யா இல்லாமல் நிலாவிற்கு மதிப்பில்லை, நிலா இல்லாமல் ஆதித்தியாவிற்க்கு மதிப்பில்லை.” என்றாள் நிலா தீர்க்கமாக.
“என்னடி உலருக்கிறாய் நீ? உன் ஆள் பத்தி காசிப் வந்ததும் மூளை குழம்பிவிட்டதா? என்ன?” என்று நிலா நெற்றியை தடவிப் பார்த்தாள் சந்தியா.
“ம்ச்…” என்று அவள் கையை உதறி விட்டவள் “ஆதித்யா என்றால் சூரியன், நிலா சந்திரன். சூரியன், சந்திரன் இல்லாமல் இந்த பூலோகம் இயங்காது. சூரியன் மட்டுமே இருந்தால் அதற்கு மதிப்பிருக்காது, அதன் உக்கிரத்தை தணிக்க சந்திரன் தேவை. அதேபோல் தான் சந்திரன் மட்டுமே இருந்தால்; வெளிச்சத்திற்கும், நம் உடலுக்கும் தேவையான வெப்பத்திற்கும் சூரியன் தேவை. இது இரண்டும் சேர்ந்தால் தான் உயிரினங்கள் வாழ முடியும். ஆக ஆதித்தியாவும் நிலாவும் ஒன்று சேர்ந்தே ஆக வேண்டும்.” என்று கூறியவளின் கண்ணில் ஒரு விதமான வெறி தென்பட்டது.
ஆனால் பாவம் அவளுக்கு தெரியவில்லை சூரியனும் சந்திரனும் ஒரு சேர பூமியில் உதிக்க முடியாதென்று. சூரியன் பிரகாசம் விலகினால் தான் சந்திரனுக்கு வேலை, அதேபோல் சந்திரன் மறைந்தால் தான் சூரியன் தன் உக்கிரத்தை காட்ட முடியும். இவை இரண்டும் எப்போதும் ஒன்றாய் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. அப்படியே இருந்தாலும் ஒன்றன் பின் ஒன்று தன் சுயத்தை மறைத்துதான் ஆகவேண்டும். வேண்டுமென்றால் வருடத்திற்கு ஒரு முறை ஒரே கோட்டில் வரலாம் அவ்வளவு தான்.
&*&*&

Advertisement