மைதிலிக்கு மயக்கம் வந்தது, யாருக்கு நல்லதோ இல்லையோ? ஆனால் கண்ணனுக்கு ரொம்ப நல்லது. “கண்டிப்பா இனி கொஞ்ச நாளுக்கு எதுவும் கேக்க மாட்டா”, என்று எண்ணிக் கொண்டே தான் கீழே வந்தான்.
கீழே சாரு, அருண், வேலண்ணா மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் வருவதைப் பார்த்ததும் இவர்களுக்கும் ஸ்நாக்ஸ் எடுத்துக் கொடுத்தாள் சாரு.
கண்ணன் எதுவும் பேசாமல் இருந்தான். மைதிலி, சாரு,அருண் மூவரும் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். மைதிலியுடன் பேசிக் கொண்டிருந்தாலும் தங்களின் அண்ணன் முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள் சாருவும் அருணும்.
சிறிது நேரம் கழித்து “அண்ணி, நீங்க அண்ணா கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க. சாருவோட பிரண்ட் அனித்தாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சாம். ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துறோம்”, என்று சொல்லி எழுந்து கொண்டான் அருண்.
ஆக்ஸிடெண்ட் பற்றி விசாரித்த மைதிலி “பாத்து போயிட்டு வாங்க”, என்றாள்.
அவர்களுக்கும் ஆசை தான். ஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது? இன்னும் கொஞ்சம் நேரானாலும் மனிஷாவை சமாளிக்கணுமே?
“இன்னொரு நாள் கண்டிப்பா உங்க வீட்டுக்கு வரோம் அண்ணி. அத்தை, மாமாவை கேட்டேனு சொல்லுங்க”, என்று சாருவும் “ரேணுவையும், மலரையும் கேட்டேனு சொல்லுங்க”, என்று அருணும் சொல்லி கொண்டு விடை பெற்றார்கள்.
அவர்கள் சென்றதும் “உங்க அக்காக்களை எப்படி பேர் சொல்றான் பாத்தியா?”, என்று சொல்லி சிரித்தான் கண்ணன்.
“அப்படிப் பார்த்தா நீங்களும் தான் அவங்க கிட்ட உருகுறீங்க”, என்றாள் மைதிலி.
“ஏய் பொறாமையா? சூப்பர். ஆனா அநியாயத்துக்கு பொய் சொல்லக் கூடாது. நான் மலர் கிட்ட பேசினதே இல்லை. ரேணு என்னோட பிரண்ட். அதான் எப்பவாது பேசுவேன்”
“ஹூம் நம்பிட்டேன். நான் இங்க தும்முனா கூட அவ தான் உங்களுக்கு ரிப்போர்ட் கொடுக்குறா”
“இதுக்கு நீ கோப கூடாது மைத்தி மா. எந்த அக்கா இப்ப எல்லாம் இப்படி தங்கச்சி காதலுக்கு ஹெல்ப் பண்ணுவா?”
“ஆனா தங்கச்சிக்கு தான் எதுவுமே நினைவு இல்லையே”, என்று சொன்ன மைதிலியின் கண்கள் கலங்கி விட்டது.
“வா மேல போய் பேசுவோம்”, என்று சொல்லி அவள் கை பிடித்து அழைத்துச் சென்றான் கண்ணன்.
வெளியே காருக்கருகில் நின்ற சாரு, அருணை முறைத்துக் கொண்டிருந்தாள்.
“இப்ப எதுக்கு டி கார்ல ஏறாம நிக்குற? நேரம் ஆச்சு. அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான். வா போகலாம்”
“நீ முதல்ல ஹேமாவை தான சொன்ன? இப்ப அனித்தான்னு சொல்ற? என் போன்ல இருந்து தான் அவ நம்பரையும் சுட்டியா?”
“அவன் இப்படி இல்லாம இருக்குறதுனால தான் மெண்டலா அலையுறான்”
“ஒரு வேளை அருண் சொன்னது தான் உண்மையோ?”, என்று சிந்தனையில் ஆழ்ந்தாள் சாரு. அவள் சிந்தனையை பார்த்த அருண் காரை ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
மாடியில் உள்ள ஒரு அறைக்கு மைதிலியை அழைத்துச் சென்றான் கண்ணன்.
அந்த அறை முழுவதும் மைதிலியின் புகைப்படங்கள். ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டே வந்தவள், அவனை திரும்பிப் பார்த்தாள். அவனோ மொத்த காதலையும் கண்களில் தேக்கி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்குள் ஒரே ஒரு கேள்வி தான் எழுந்தது. “இவ்வளவு லவ் பண்ணுற அளவுக்கு நான் என்ன செஞ்சேன்?”, என்பது தான்.
“இப்படி உக்காரு”, என்று சொல்லி அவளை அமர வைத்தவன் அவளுக்கு சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான்.
எவ்வளவோ கேள்விகள் மனதுக்குள் இருந்தாலும் எதையுமே கேட்க தோன்றாமல் இருந்தாள் மைதிலி. எதையுமே அவள் கேட்டுவிடக் கூடாது என்ற மன நிலையில் இருந்தான் கண்ணன்.
மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. “வீட்டுக்கு போகலாமா மைத்தி?”, என்று கேட்டான் கண்ணன்.
“ஹும்ம் ஒண்ணே ஒண்ணு உங்க கிட்ட கேக்கணும்”
உள்ளுக்குள் பதறினாலும் “என்ன மா கேளு”, என்றான்.
“நீங்க லவ் பண்ண மாதிரி, நானும் உங்களை லவ் பண்ணினேனா?”
அவனுக்கே விடை தெரியா கேள்விக்கு என்ன பதில் சொல்வான்? ஆனால் அவளை சமாளிக்க வேண்டுமே. “உன்னை மாதிரி யாருமே லவ் பண்ணிருக்க மாட்டாங்க மைத்தி. அந்த காதலுக்காக தான் நான் இவ்வளவு தாங்குறேன் உன்னை”, என்று சொல்லி சமாளித்தான்.
“இதுக்கு மேல இங்க இருந்தா கண்டிப்பா இவ தோண்டி துருவுவா”, என்று நினைத்து “நேரம் ஆச்சு வா போகலாம்”, என்று சொல்லி விட்டு வேலுவிடமும் சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.
“எப்படி இவனை லவ் பண்ணிருப்பேன்? அப்படி லவ் பண்ணிருந்தா, அம்மா அப்பாக்கு எப்படி என் மேல கோபமே இல்லை. ஒரு வேளை அம்மா அப்பாக்கு முன்னாடியே கண்ணனை தெரியுமா?”, என்று யோசித்த படி வந்தாள்.
“இப்ப எதுக்கு இவ்வளவு யோசிக்கிற மைத்தி? பிரீயா விடு”
“ஒரே ஒரு சந்தேகம் மட்டும். வேற எதுவும் கேக்க மாட்டேன்”
“சரி கேளு”
“என்னோட அம்மா அப்பாவுக்கு உங்களை எப்படி தெரியும்? அதாவது முதல் தடவை எப்ப பாத்தாங்க?”
“ஹூம் அவங்களா? அவங்களுக்கு என்னை சின்ன வயசுல இருந்தே தெரியுமே?”
“நினைச்சேன். அப்ப முன்னாடியே தெரிஞ்சிருக்கு. அதான் எதுவும் சொல்லலை போல”, என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டு அமைதியாக வந்தாள்.
“இப்போதைக்கு அவள் அமைதியாக வருவதே தனக்கு நல்லது”, என்று நினைத்து காரை ஓட்டினான் கண்ணன்.
அவள் வீட்டுக்கு சென்று மதிய உணவை முடித்து விட்டு சிறிது நேரம் அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தான் கண்ணன். வேதவள்ளி தான் “மைதிலி மாப்பிள்ளையை உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போ. ரெஸ்ட் எடுங்க தம்பி”, என்றாள்.
அறைக்குள் என்றதும் இருவருக்கும் முத்த நிகழ்வு நினைவில் வந்து பதட்டத்தைக் கொடுத்தது. “எந்த சந்தேகத்தையும் மைதிலிக்கு கொடுக்க கூடாது”, என்று நினைத்து “இல்லை அத்தை, எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்புறேன். வரேன் மாமா”, என்று சொல்லி விடை பெற்றான் கண்ணன்.
அவனுடனே எழுந்து வாசல் வரை வந்தாள் மைதிலி. “நாளைக்கு வரேன்”, என்ற சொல்லொடு அவளிடமும் விடை பெற்றான்.
அவன் சென்றதும் கருணாகரன், அருகில் வந்து அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் மைதிலி.
“வேதவள்ளி உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்”, என்று பேச்சை ஆரம்பித்தார் கருணாகரன்,
“என்ன விசயங்க?”, என்று கேட்டாள் வேதவள்ளி.
“நம்ம மூத்தவளுக்கு ஒரு நல்ல வரன் வந்துருக்குறதா நம்ம அழகப்பன் மாமா சொன்னாரு”
“அப்படியா? பையன் நல்ல குணமா? எந்த ஊராம்? என்ன வேலை செய்றாராம்?”
“நான் கறி எடுத்துட்டு வர வழியில பாத்தேன். தெளிவா பேச முடியலை. சாயங்காலம் வீட்டுக்கு வரேன்னு சொன்னார்”
“அப்படியா? நல்ல விசயங்க. இந்த வரனே அமைஞ்சிட்டுன்னா ரொம்ப நல்லது”
“அதான் ஒரு மகளுக்கு நல்ல வரனா அமஞ்சிருச்சே?”, என்று புன்னகைத்தார் கருணாகரன்.
அவரைப் பார்த்து புன்னகைத்த மைதிலி “எப்படிப்பா எங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சீங்க? என் மேல கோபமே உங்களுக்கு வரலையா?”, என்று கேட்டாள்.
“முதல் தடவை ஒரு கம்பீரத்தோட என்கிட்ட மாப்பிள்ளை பேசினப்ப அப்படியே புல்லரிச்சிருச்சு. உங்க பொண்ணை நான் உயிருக்கும் மேல பாத்துக்குவேன். அவளுக்கு ஒண்ணுன்னா நானே இந்த உலகத்துல இருக்க மாட்டேன். என் மேல நம்பிக்கை இருந்தா என்கிட்ட அவளை விட்டுட்டு போங்கன்னு மாப்பிள்ளை சொன்னப்ப, அவரோட கண்ணுல இருந்த காதல் என்னை மறு வார்த்தை பேச விடலை. கண்ணுக்கு லட்சணமா இருந்தார். தப்பானவரா தெரியலை. மறுப்பு சொல்ல வேற என்ன காரணம் இருக்கு? நம்ம சைடுல இப்படி அழகா யாராவது இருக்காங்களா?”, என்று தன்னை மறந்து உளறிக் கொண்டிருந்தார் கருணாகரன்.
“நீங்க ரேணு அக்கா கூட அவரை முன்னாடி பாத்ததே இல்லையாப்பா?”, என்று குழப்பத்துடன் கேட்டாள் மைதிலி.
“இல்லையே மா, கொஞ்ச நாள் முன்னாடி ரேணு, என் கூட படிச்சவர்னு சொன்ன அப்புறம் தான் மா தெரியும்”, என்று சொல்லிக் கொண்டிருந்தவரிடம் வேதவள்ளி கண்களை காட்டினாள்.
அப்படியே வாயை மூடிக் கொண்டவர் “படுத்து கொஞ்ச நேரம் தூங்கு மா”,என்று சொல்லி விட்டு எழுந்து போய்விட்டார். வேதவள்ளியும் அங்கிருந்து அகன்றாள்.
குழப்பத்துடன் அறைக்கு சென்றவள் அவனை அழைத்தாள்.
அப்போது தான் மருத்துவமனைக்குள் நுழைந்து கொண்டிருந்த கண்ணன் அவள் அழைப்பைப் பார்த்ததும் புன்னகையுடன் அதை கட் செய்தான்.
கோபத்துடன் அவனை மறுபடியும் அழைத்தாள். மறுபடியும் கட் செய்து விட்டு தன்னுடைய அறைக்குள் வந்து அந்த வெள்ளைக் கோர்ட்டை மாட்டிய படி அவளை அழைத்தான்.
அவனுடைய அழைப்பை ஏற்றவள் அமைதியாக இருந்தாள். “சாரி மைத்தி, ஹாஸ்பிட்டல் உள்ள வந்துட்டேன். அதான் ரூமுக்கு வந்து கூப்பிடலாம்னு கட் பண்ணுனேன். போன்ல பேசிட்டே வந்தா என்னோட ஸ்டாப் வணக்கம் சொல்லுறப்ப அவங்களை மதிக்காத மாதிரி இருக்கும்”, என்றான் கண்ணன்.
“சரி சரி உங்க விளக்கம் போதும். நான் ஒரு விஷயம் கேக்க தான் போன் பண்ணேன்”
“மறுபடியும் எதையாவது யோசிச்சிட்டு இருக்கியா? தேவை இல்லாம எதையும் யோசிச்சு உடம்பை கெடுத்துக்காத மா”
“நீங்க உண்மையை சொல்லிட்டா நான் ஏன் யோசிக்க போறேன். ஆனா நீங்க பொய் சொல்லி சொல்லி இன்னும் அதிகமா தான் யோசிக்க வைக்கிறீங்க”
அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து விழித்தவன் “இவ என்ன இவ்வளவு வேகமா துப்பறிய தொடங்கிட்டா? மாட்டிக்கிட்டேனா”, என்று பதறினான்.
“கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. எங்க அம்மா அப்பாவை உங்களுக்கு எப்படி தெரியும்?”
“இல்லை மைத்தி அது வந்து….”, என்று இழுத்தான் கண்ணன்.
“இப்ப நீங்க ஒண்ணுமே சொல்ல வேண்டாம். நாளைக்கு எங்கயாவது வெளிய கூட்டிட்டு போறீங்க. நம்ம வாழ்க்கையில நடந்த எல்லாத்தையும் என்கிட்ட சொல்றீங்க. அப்படி இல்லைன்னா, எனக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு எல்லா விஷயமும் மறந்ததை இவருக்கு சாதகமா பயன் படுத்தி என்னை கல்யாணம் பண்ண பாக்குறார்ன்னு போலீஸ்ல போய் சொல்லுவேன்”, என்று சொல்லி அவன் தலையில் இடியை இறக்கி விட்டு போனை அணைத்தாள்.
திக் பிரம்மை பிடித்து நின்ற கண்ணன் “இவ மறந்துட்டாளா, இல்லை நடிக்கிறாளா? நடந்த விஷயத்தை அப்படியே சொல்றா”, என்று நினைத்தான்.