மணி காலை 6:35, பதினொராம் வகுப்பு ஆரம்பித்திருகிகிறாள், இப்போது கிளம்பினால் தான், ஸ்கூல் பஸ்… வருமிடத்திற்கு செல்ல சரியாக இருக்கும் 7:10 மெயின் ரோட்டில் பஸ் வந்துவிடும்…
கோதை “என் ரெண்டாவது பொண்ணுப்பா… பேரு ஐஸ்வர்யா..” என்றார் வீராவிடம் அறிமுக படுத்தும் எண்ணத்துடன்.. தன் மகளிடம் திரும்பி, வீரா பற்றி சொன்னார்..
ஐஸ் “ஹாய் ண்ணா… ஈவ்னிங் பார்க்கலாம்” என பரபரப்பு பாதி, புன்னகை பாதியாக சிரித்தவள், அத்தோடு தன் வேலையை கவனிக்க சென்றுவிட்டாள்..
அதன்பிறகு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்.. கோதை தன் இளைய மகளை பஸ் ஸ்டாப்பில் விட சென்றார்.. வீராவும் எழுந்து விடைபெற்று கிளம்பினான்…
அதன்பிறகு வீரா, அந்த பெரியவர் கண்ணில் படவில்லை.. ஒரு பத்துநாள்.. ஏது, கூப்பிட்டு போய் காபி கொடுத்து.. விசாரணையை தொடங்கி விடுவார் என எண்ணி தன் நேரத்தை மாற்றிக் கொண்டான்.
தானுண்டு தன் வேலையுண்டு என இருக்க தொடங்கினான்… பத்துநாள் சுந்தரம், கண்ணிலே படவில்லையே அவன்… இன்று விடுமுறை… ஏதோ… பொழுது போகவில்லை.. தன் போனை பார்க்கவே முடியவில்லை… இங்கே கூட்டம்.. இங்கே அழைப்பு…. என அவனின் தோழர்படை… க்ரூப்பில் ஒரே அழைப்பு படலம்தான்.
கையிலிருந்த காசும் முடிந்து விட்டது… சாப்பாட்டுக்கே இனி என்ன செய்வது என தெரியவில்லை… வந்தான்.. சுந்தரம் வீட்டுக்கு, முகமே வாடிபோய்..
அன்றும் பைரவி, தாத்தாவிடம் செய்யுள் ஒப்புவித்துக் கொண்டிருந்தாள் தனது போட்டிக்காக… அப்போதுதான் முதலில் பார்க்கிறான் அவளை..
ரவி தன் வெண்கல குரலில் “ இவ்வுரை எந்தை கூறான்..
அறம் கெட…
வழக்கு நீங்க…
அரசர்தம் மரபிற்கான திறம்கெட…
மேன்மைதேய.. வசை வர…
வேதங்கள் ஓதும்.. திறம் கெட…
ஒழுக்கம் குன்ற..
தேவரும் பேணதக்க நிறம் கெட..
இன்னது சொன்னாய்… “ என ஒரே மூச்சில் சொல்லி “தாத்தா… சரியா” என்றாள்…
அவர் தலையசக்க.. மீண்டும் சீதையின் தந்தை பற்றி… கம்பர் சொல்லிய இந்த செய்யுளின் விளக்கத்தை சொன்னாள்.. “அரசன் என்பவன் இப்படி…” என ஏதோ சொல்லிக் கொண்டிருக்க…
சுந்தரம் தன் பேத்திக்கு பின்னால் பார்த்துவிட்டு “வா வா வீரா, ரொம்ப நாளாட்சி….
ஏன் அங்கேயே நிற்கற… உள்ள வா…
என் முதல் பேத்தி… பேரு பைரவி “ என்றார்…
லாங் ஸ்க்கட் ஷர்ட் டாப் அணிந்திருந்தாள்… சுடர்தரும் நிறம்… பொன்மேனிதான்… ஏனோ அந்த திடமான குரல் அவனை மிகவும் ஈர்த்தது… மூக்குத்தியும் அவளின் கண்ணின் ஒளியும் சரிக்கு சரி மின்ன… சின்னதாக சிரித்தாள்…
வீரா வந்து அமர்ந்து கொண்டான் எதிர் சோபாவில், அவனே “நீங்க பாருங்க தாத்தா… நான் பேப்பர் பார்க்கிறேன்” என்றான்..
அவரும் “இரு ப்பா… வரேன் கொஞ்ச நேரம்…” என்றவர்…
“கோதை வீரா, வந்திருக்கார் பார்” என்றார்..
கோதை “வரேன் மாமா” என்றார்…
பைரவிக்கு ஏதும் தயக்கமில்லை போலிருக்கு… “இப்படியாக கம்பன் ஜனகனின் மேன்மையை சீதை சொல் வழி கூறி… அப்படிபட்டவர் என் தந்தை என்கிறாள்…” இப்படியாக அவளின் உரை அடுத்த ஐந்து நிமிடமும் செல்ல…
வீரா, அவளை கவனித்தான்… இப்போதுதானே கல்லூரி முடித்திருக்கிறான்… இதெல்லாம் அவன் தவிர்த்த இடங்கள்… பெண்… அவர்களின் சேர்க்கை.. விழா.. இதெல்லாம் அவனுக்கு தெரியாத பக்கங்கள்…
இப்போது சுந்தர தமிழ் காதில் வந்து விழவும்… கோதை கொடுத்த காபியுடன்.. சூடாக அந்த கன்னி தமிழும் உள்ளே இறங்கினாள்..
மௌனமாக அமர்ந்திருந்தான்… அவளின் பொருள் விளக்கத்தில்… அதன் செறிவு நிறைந்த தமிழில்… அவளின் குரல் ஆளுமையில்… அவளின் பாவனையில்… அப்போது சிறு பெண்ணாக அவன் கண்களுக்கு தெரியவில்லை அவள்… தன்னைவிட உயர்ந்தவளாக தெரிந்தாள்..
அவள் முடித்துவிட்டாள்..
சுந்தரம் “சரிம்மா… எப்போ போட்டி…” என ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார்.. ஆனால், இன்னும் அந்த தமிழ் அவன் காதில் உச்சரித்துக் கொண்டே இருந்தது…
சுந்தரம் “வீரா… வீரா” என இரண்டு முறை சத்தமாக அழைத்தபின்தான் நிமிர்ந்தான்..
வீரா, பைரவியை பார்த்து “சூப்பர் ங்க…. குரல் நல்லா இருக்கு” என்றான்..
“தேங்க்ஸ் “ என்றவள் ஏதும் சொல்லாமல் உள்ளே தன் அன்னையிடம் சென்றாள்… அங்குதான் விசாரணை “யாரும்மா இது… ஏதோ பூசாண்டி மாதிரி இருக்கான்…” என்றாள் வெண்கல குரல் ரகசியமாக…
கோதை “ஏன் டி…. சும்மா இருக்கமாட்டியா” என சொல்லி வீராவை பற்றி சொன்னார் எப்போது வந்தான், எங்கு வேலை செய்கிறான் என பொதுவாக சொன்னார்…
இவள் உள்ளே டைனிங் டேபிள் மேல் அமர்ந்து பூஸ்ட் குடித்துக் கொண்டே அவனை அளவிட்டுக் கொண்டிருந்தாள்…
அவனை அவளுக்கு தெரிந்த, கம்பன் பாத்திரங்களாக பார்த்தால்… முதலில் வாலி… சுக்ரீவன்… இந்தரஜித்.. ராவணன்.. என எல்லா எதிரிகளுடனும் பொருத்திவிட்டால்… ஆனால் ஒப்ப முடியவில்லை…
அத்தோடு அவர்கள் இருவரின் பேச்சும் காதில் விழுந்தது சுந்தரம் “என்ன ப்பா.. வீட்டிலிருந்து யாராவது வருவாங்களா…
எப்படி சாப்பிடுற…” என எப்போதும் போல அன்றும் கொடைய தொடங்க… வீரா மெல்ல அவன் கதையை சொன்னான்… சின்ன குரலில், தான் கோபித்து வந்ததை சொன்னான்… யாரும் வரமாட்டாகள் என்றான்… இந்த வேளையிலும் இருக்க மாட்டேன்… கட்சியில் சேர்வேன் சென்றான் இன்னும் நிறைய….
ஆக பைரவிக்கு அவனின் விஷயம் அவன் முலமாக தெரிய.. மனதில் வீராவின் நிலை ஆழ பதிந்தது… அதுவும் கருப்பு சட்டையுடன்.
இவன் சரியில்லை என்றே பதிந்தது… அந்த எண்ணம் அடுத்தடுத்த நாட்களில் அவனை பார்க்கும் போது உறுதிப்பட்டது…
ஆனால், சுந்தரத்துக்கு வேறு பட்டது…. அவன் பேச்சு என்னமோ ஒன்றுதான்… அதனை கேட்கும் காதுகள் மாறுபட்டது போல… இளையவள் தன்பாணியில் உள்வாங்க… ஆசான் வேறுபாணியில் புரிந்து கொண்டார்… அது அவனுக்குதான் உதவியது.
@#@#@#@#@#
வீராவுக்கு எட்டுமணி நேர வேலை… அலுவலகத்தில் ஏதும் புரியவில்லை… பூமியின் வேறுபக்கம் வந்தது போல் விழித்தான்… பார்க்க, திடமாக… மீசையும்… கண்ணில் தீட்சணியமும்மாக இருப்பவனுக்கு யார் உதவுவர்… இந்த மென்பொருள் நிறுவனத்தில்…
வேலை ஓடவில்லை… அவர்கள் ஒரு கோட் கேட்டால்.. இவன் வேறு செய்தான்… இப்போத்தானே முடித்திருக்கிறான் என டீம் லீட் பொறுமையாக சொல்லி கொடுக்க… இவன் பணிந்து கேட்டுகொள்ளாமல் எடுத்தெறிந்து பேசினான்… ஒன்று கிடைப்பதை விட அதை, தக்கவைத்துக் கொள்ள அதிக சாமார்த்தியம் வேண்டும்…
போதுமே அதுவே.. அவனின் நண்பனுக்கு தகவல் பறந்தது…. வீராக்கு நாட்டுக்காக போராடுவதை விட தனக்கான போராடவே நேரம் சரியாக இருந்தது…
எப்படியோ திக்கி தெணறி அடுத்த ஒருமாதத்தில்… இவன் பரவாயில்லை ரகமாக காட்டிக் கொண்டான் அந்த IT நிர்வாகத்திடம்… அவர்களும் போனால் போகிறது இருந்துவிட்டு போகட்டும் என அவனை சற்று தள்ளி வைத்தனர்..
ஏதோ வடிவேல் சொல்லுவது மாதிரி.. உனக்கெல்லாம் மென்பொருள் நிறுவனத்தில் வேலை, இதில் மதியம் ஒருமணி நேரம் உணவு இடைவெளி வேறு… என்பார்களே அதே போல் சென்றது வீராவின் காலம்…
ம்… இவன்… கீழடி புதையல் போல… இன்னும் யாருக்கும் தெரியவில்லை இவனை. இடம் தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டான் யாரும் இருக்குமிடத்தில் இருந்தால்தானே மதிப்பு…
முதல் மாதம் சம்பளமும் வந்தது அக்கௌன்ட்டில்… வீரா உண்மையாகவே, தன்னை இன்றுதான் நம்பினான்… எனக்கு கூட இவ்வளவு சம்பாத்தியம் வருமா என அப்போதுதான் உணர்ந்தான்…
எல்லாம் இருந்து.. எதுவுமே இல்லாமல் இருப்பது என்பது கொடுமைதானே… இந்த ஒருமாத காலமாக எப்படி பணத்திற்காக தவித்தான் என்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியம்…
எத்தனை நாள்… நண்பர்கள் செய்வார்கள்… மேலும் இவனுக்கு செலவு செய்துதான் பழக்கம்… கேட்டு பழக்கமில்லையே..
வரும்போது வீட்டில் யாரிடமும் சொல்லாமல்தான் வந்தான்… குருட்டு நம்பிக்கை மூட்டை தூக்கியாவது பிழைத்துக் கொள்வேன் என்ற குருட்டு நம்பிக்கை…
ஹா…. ஹா……. அதற்கு தெம்பு… மூட்டை தூக்கியே நாட்டை ஆண்ட காலமெல்லாம் போயிந்தி… தான் ஒருவனுக்கே.. அந்த வருமானம் பத்தாதே…
ஏதோ தாத்தாவிற்கு தெரிந்தவர்தான் இந்த தண்டபாணி தாத்தாவும்.. அவர்களின் பேரன்தான் இப்போது வீராவிற்கு எல்லா உதவியும் செய்வது…
வீராவை விட சீனியர்… இப்போது நல்ல நிலையில் வெளிநாட்டில் உள்ளான்… எனவே தாத்தா வீடு காலியாக இருக்கவும்… வேலை ஏற்பாடு செய்து.. தங்கவும் ஏற்பாடு செய்து கொடுத்தான்.. சிறு உதவி… ஆனால் காலத்தால் செய்த உதவி… இப்போது வீராக்கு… பெரிது…
இப்படி கையில் காசிதில்லா நேரத்தில் தான், சுந்தரம் தாத்தா.. அவனுக்கு முடிந்த மட்டும் அன்னம்மிட்டார்… அன்று அவரின் பார்வையில், இந்த இளம் காளையின் நிலையை புரிந்தது.
எப்படியோ, இன்று என் மனைவி திவசம் உண்ண வா என்பார்…
அவன் வேலை முடித்து வரும், இரவு எட்டு மணிக்கு.. வீட்டு வாசலில் நின்று அவனை பிடித்துக் கொள்வார் பேசுவதற்கு…
அவனும் ஒன்றும் சொல்லாமல் பேசுவான்… ‘டீ குடி’ என்பார்… பின் ‘டிபன் சாப்பிடு’ என்பார்…
ஆம், காலையில் ஒரு டீ… அதுவும் அங்கு அலுவலகம் சென்றுதான்.. மதியம் ‘பசிக்கலை… ‘ என்பான்… யாராவது அழைத்தால். புது பையன் காரணம் கேட்கமுடியாது அவர்களும் விட்டு விடுவர்…
கோதையின் கைமணம்… வாசல் வரை.. வர கொஞ்ச நாட்களில் ‘என்ன சமையல் ஆன்ட்டி’ என தானே உள்ளே வந்தான்…
முன்னெல்லாம் சுந்தரமும் பைரவியும்தான் பெட்… அவளுக்கு தமிழை ஊட்டியவர் இப்போது புதிதாக வந்த வீராவுடன் அரசியல் பேசினார்… செஸ்… சீட்டு… அரசியல்… என சகலமும் அந்த புதியவனுடன் பேசி சிரித்தார்…
அந்த இளமையான அரசியல் தொண்டனை அவருக்கு மிகவும் பிடித்தது… நீண்டநாள் சென்று… தனது காலத்தில் கூட பார்க்காத…. காப்பியங்களில் மட்டும் பார்த்து போன்ற பழைய யுவன்…
இந்த அவசர உலகில் தனது குணம் மாறாமல்… நேர்மையை காக்கும் இளையவன்… எனவே வீராவை மிகவும் பிடித்தது… சுந்தரத்துக்கு. எனவே இறுக்கிக் கொண்டார் கைகளில்…
இதில் பைரவிக்குதான் பிரச்சனை… ஏனெனில் இவளும் தன் தாத்தாவுடன் அமர்ந்து ஏதேனும் குறிப்பு எடுக்கும் நாட்களில்… செய்யுள் மணனம் செய்யும் நாட்களில் அவன் வந்து அமர்வான்…
பின் தாத்தாவின் சிந்தனை முழுவதும் மாறும்…
வீராவும் வாய் வலிக்க வலிக்க அரசியல் பேசுவான்… தட்டு நிறைய உண்பான்… அந்த வீட்டுக்கு புது கலையை சேர்த்தான்… அதுவும் ஐஸ் இப்போதெல்லாம் அவனின் கூட்டணியில்தான்… போனை எடுப்பதேயில்லை அந்த பதின்மவயது பெண்…
வீரா, தன் வீட்டில் கொண்டாடாத உரிமையை இங்கு நிலைநாட்டினான்… கோதை ரசம் வைத்தாலும் “ஆன்ட்டி என்ன சீராக ரசமா… என் வீடு வரை வாசம் தூக்குது “ என்பான்…
அதுவும் பிரியாணி என்றால் கேட்கவா வேண்டும் “ய்யோ…. எப்படிதான் அங்கிள், உங்கள் சமையலை விட்டுட்டு இருக்காரோ…” என அங்கலாய்ப்பான்… ஆக இந்த ஒருமாதமும் வீரா சாப்பாட்டிற்கு அவர்களைத்தான் எதிர்பார்த்தான்… மனிதம் இன்னும் இருக்கிறதுதானே…
இன்று சம்பளத்துடன் வீடு வந்தான்.. வாசலில் எப்போதும் போலவே பிடித்துக் கொண்டார் அவனை, சுந்தரம் “வாப்பா… இன்னிக்கு என்ன சீக்கிரம்” என்றார்…
“இல்ல தாத்தா… பஸ்ட் சேலரி” என்றான்…
சுந்தரத்துக்குதான் அவனின் கொள்கை இந்த நாட்களில் பழக்கமே எனவே உரிமையா “பாத்தியா… பசி வேற… கொள்கை வேற” என்றார் அர்த்தமாக சிரித்து..
சுருங்கி போனான் அந்த காளை… ஏற்கனவே பிடிக்காத வேலை, கிட்ட தட்ட தன்மானத்தை அடகு வைத்து வேலை பார்க்கிறான்… உணவுக்கு எதிர் வீடு… இன்றுதான் கையில் தன் உழைப்பில் பணம் என எண்ணும் போது தாத்தாவின் பேச்சு….
உயிர் வரை சுட்டது… காலகாலமாய் காய்ந்த கிடக்கும் மூங்கில் காடு… அந்த முதியவரின் ஒரே வார்த்தையில்.. பொறி பற்றி எரிய தொடங்கியது… ‘நான் யார்…இங்கே என்ன செய்கிறேன்…’ என மீண்டும் பற்றியது தீ…
அப்போது அப்படியே வீட்டிற்கு வந்தான்… “என்ன தாத்தா… ஏதாவது செய்னும்… இப்படியே இருந்திடுவேன்னு நினைக்காதீங்க…
எல்லாம் மாறும்…. எங்க தலைவர் வருவார்…. நாங்கள் இருக்கிறோம் அவருடன்… எல்லாவற்றையும் தலை கீழ மாற்றுவோம்…” என அங்கேயே போர்ட்டிகோவிலேயே சின்ன சண்டை, வாக்குவாதம் இப்படி சுந்தரத்துடன்….
அப்போதுதான் பூங்கோதையும்… பைரவியும் ஏதோ போட்டி முடித்து வந்தனர்… வீரா நின்றிருந்த தோரணையும்… அவனின் ஆவேச பேச்சும் என்ன சொல்லியதோ பைரவிக்கு என்றுமில்லாமல் இன்று “என்ன வீரா சர்… என்ன… பிரச்சனை பண்றீங்க” என்றாள் மிகவும் பரபரப்பான குரலில்…
ஏனோ அவளின் குரல் அவனுக்கு மயக்கம் தரும்… அவள் பேசினால் சிங்கமென முழங்கும் அவள் குரல், அவனுக்கும் மட்டும் தேன் சிந்தும்… இன்றும் அப்படியே வீராவுக்கு, அந்த குரல் தேன்தடவி வந்ததாக… உணர… அப்படியே நின்றான் தலையை கோதியபடியே… உதடுகளுக்கு மட்டும் “ஆமாம் பிரச்சன பண்றாங்க…” என்றவன் தாத்தாவை பார்த்து சிரித்தான்… ஒன்னுமில்லையே என்பதாக…
உள்ளே வந்த பைரவி, தாத்தாவிடம் என்ன என்பதாக புருவம் உயர்த்த… “ஒண்ணுமில்லமா… இது சும்மா… அரசியல் பேச்சு” என்றார்
பைரவி “வேண்டாமே தாத்தா…” என்றாள்.. கட்டளையாக.
வீராக்கு கோவம் “என்ன வேண்டாம்… இப்படி பேசாம… விட்டு விட்டுதான் யாருக்கும் எதுவும் தெரியமாட்டேங்குது… நம்ம பெருமை யாருக்கும் தெரியல… எல்லாம் போச்சு” என இவன் பேச… இந்த ஒருமாத பழக்கத்தில் பேச…
பைரவியும் “போதும்… போதும், அரசியல் வேண்டாம்…” என்றவள் உள்ளே போய்விட்டாள்..
பின்னாடியே வந்தான் வீரா “என்ன தாத்தா… வெறும் தமிழ் மட்டும் போதுமா… ஓட்டு போட வேண்டாம்.. யார் என்ன செய்றாங்க தெரியவே வேண்டாமா” என்றான் அவளிடம் வம்பிழுக்கும் எண்ணத்துடன்…
பைரவி “எனக்கு தேவையான அளவுக்கு தெரியும்…. உங்களமாதிரி அரகுறையா தெரிஞ்சவங்கதான் இப்படி குதிப்பாங்க” என்றாள்… அவனை ஏளன பார்வை பார்த்து..
வீரா எழுந்தே விட்டான் “யார் அரைகுறை… “ என தொடங்க
சுந்தரம் “ப்பா… வீரா… இது ஏதோ சின்ன பொண்ணு… நீ போய் அவகிட்ட சரிக்கு சரி பேசிக்கிட்டு… கோதை டீ போடு” என்றவர்.. மீண்டும் வீராவை பார்த்து “நீ உட்கார் வீரா” என்றார் அவனை சமாதனபடுத்த…
பைரவி, தன் தாத்தாவின் எதிரிலேயே சற்றுமுன் தேன் தடவியதாக தோன்றிய குரல் இப்போது தீ சுட்டது போல “இங்க வந்து அரசியல் பேசாதீங்க” என்றவள், அவனை முடிந்த மட்டும் முறைத்து, எழுந்து சென்றாள்..
வீரா, அப்படியே நின்றபடியே சத்தமான குரலில் “நான் பேசுவேன்… இனி நீங்க இருக்கும் போதுதான் பேசுவேன்” என்றான் அழுத்தி அழுத்தி…
இப்படியாகத்தான் வீராவின் நேரம் சென்றது.. எப்போதும் தாத்தாவுடன் அரசியல் பேசினான்.. இப்போதுதான் பணம் பிரச்சனையில்லையே… அதிகாலை வாக்கிங்… வேலை.. அத்தோடு… மாலையில் பைரவி வீட்டில் மாநாடு…
பைரவி இருக்கும் வரை தாத்தா இவனின் கொள்கைகளை கேட்கமாட்டார்… ஆனால் வீரா விடமாட்டான் “தாத்தா பாத்தீங்களா.. இந்த தேர்தலல்ல.. எங்க ஆளுங்க எவ்வளோ ஓட்டு வித்தியாசத்துல இருக்காங்கன்னு” என வேண்டுமென்றே பேசுவான்…
சுந்தரம் “இருப்பா வரேன்… இரு” என்பார் சிரித்தபடியே… பைரவி முறைப்பாள் “நீங்க அந்த யுத்த காண்டம் பத்தி சொல்லியே தரல” என அவளும் வந்து நிற்பாள்.. அவனுடன் பேசவிடாமல்.. தன் தாத்தாவிடம்.
இப்போதெல்லாம் தன் அக்காவை கேலி பேச ஐஸும் சேர்ந்துகொள்வதால்… வீராக்கு அங்கு செல்வாக்கு அதிகமானது… ஓடியது ஆறுமாதம்…
இதோ.. இப்போது… இந்த போராட்டம்… இவன் வேலைக்கு செல்வதேயில்லை… யாரும் கேள்விகேட்க இல்லை… சுந்தரம் தாத்தாவும்.. தன் பேத்தியிடம் உணவை கொடுத்துதானே விட்டார் அதுதான் பைரவிக்கு கோவம்…
‘எங்கள் வீட்டிலேயே உண்பது… இதில் என்னை வெறுப்பேற்றுவது… இப்போது அடுத்தவர்களுக்கும் உணவு வேறு…’ எனதான் கோவம்… அதன் தாக்கமே அன்று… முழுதாக, அவனுக்கு உணவு கொடுக்காமல் திரும்பினாள் பைரவி… அதில் ஏதோ சின்ன சந்தோஷம் அவளுக்கு…
ஆனால் இதெல்லாம் வீராக்கு ஏதோ விளையாட்டு… ‘என்ன இப்போ சாப்பாடு இல்ல அவ்வளோதானே’ என மீசையை முறுக்கிக் கொண்டவனுக்கு.. மீண்டும் ஒரு தோல்வி காத்திருந்தது….