அத்தியாயம் பதினெட்டு:

அவன் மன நிறைவோடு விமானம் ஏற………… அவனை சிரிக்க வைத்துவிட்ட ஒரே த்ருப்த்யில் உஷா உறங்கினாள். மறுநாள் அருணும் நந்தினியும் கிளம்ப. அவர்களோடு சற்று பிஸியாக இருந்தாள். ஆனாலும் அவளுக்கு வருத்தமாக இருந்தது. தன்னால் அனைவரிடமும் அருண் பிரச்சினை செய்து கொண்டதை நினைத்து. சாம்பவியிடம் அதற்கு பிறகு அவன் பேசவேயில்லை.

“வீட்டு மாப்பிள்ளையை இப்படி தான் நடத்துவதா”, என விஸ்வநாதன் சாம்பவியை கடிந்து கொண்ட பிறகு சாம்பவி அருணுடன் சுமுகமாக நடக்க முற்பட. அதற்கான வாய்பை அருண் ஏற்படுத்தி கொடுக்கவேயில்லை. தான் நந்தினியின் தாத்தாவிடம் மரியாதையில்லாமல் பேசியதற்கு நந்தினியை விட்டு அவரிடம் அவள் மன்னிப்பை வேண்டி சமாதானம் செய்யுமாறு பார்த்துகொண்டான். ஆனால் அவன் பேசவில்லை. யாரும் அவனிடம் பேச இடமும் அளிக்கவில்லை.

உஷா அவனிடம் இதை பற்றி பேசிய போது கூட அருண் அவளிடம், “இதை அப்படியே விட்டு விடு அன்னு”, என்றான். தான் அவர்களிடம் சுமுகமாக பேசினால் இப்பொழுது இருக்கும் பயம் இருக்காது எனவும் அதனால் இதன் பிறகு அவளுக்கு தொல்லை கொடுக்க முற்படலாம் என்றான்.

நந்தினியும் அதையே அமோத்திதாள். பெரிய அளவில் இனி பிரச்சனை செய்ய முடியாது என்றாலும் ஒரு பயம் தன்னுடைய அம்மாவிற்கும் பாட்டிக்கும் இருக்கட்டும் என்றாள். “நீ எதற்கும் எப்போவும் இனிமே கலங்ககூடாது. நாங்க இருக்கிறோம் உனக்கு”, என்றபடியே உஷாவை நெகிழ வைத்துவிட்டு அவர்களும் கிளம்பினர்.

அவர்கள் கிளம்பியவுடனே சித்தியும் கணேஷும் கலைவாணியும் கூட கிளம்பினர். சித்தி அறிவுரையாக கூறி தள்ளுவார் என நினைக்க, “நீ எப்போ வருவ. கூடவே இருந்து பழகிட்டோமா. விட்டுட்டு இருக்க என்னவோ போல் இருக்கு.”, என்றார் கண்கள் கலங்கியபடியே. கடைசியில் உஷா தான் அவர்கள் மூவருக்கு அறிவுரை கூறி தேற்றி அனுப்பும்படியாய் ஆயிற்று. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் கட்டாயம் ஆஃபீஸில் இருந்து வரும் பொழுது அப்படியே வீட்டுக்கு வருவதாக கூறி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினாள். யாரும் யாருடைய கையையும் எதிர் பார்க்காதவாறு பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்து அவர்களுக்கு மாதாமாதம் பணம் கிடைக்குமாறு கிரி பார்த்து கொண்டான். அவருடைய சித்தி வெகுவாக தயங்கி ஒத்துகொள்ளாத போதும் இது அன்னலட்சுமி பிரத்யுஷா என்கிற அவருடைய பெண்ணின் பணம் தான். தாங்கள் இதில் எதுவும் செய்யவில்லை என கூறி. பிறகு உஷாவை விட்டு சிறிது மிரட்டி ஒருவாறு ஒத்துக்கொள்ளுமாறு செய்தான்.  

வந்த உறவுகள் அனைவரும் ஒவ்வொருவராக கிளம்ப, வீட்டில் விஸ்வநாதன், சாம்பவி, உஷா, அவளுடைய குழந்தைகளான நிரஞ்சன் கார்த்திக், மற்றும் ஸ்வாதி ரஞ்சனி மட்டுமே இருந்தனர். வேலையாட்கள் வேண்டிய மட்டும் இருந்தனர். அதனால் உஷாவிற்க்கு சாம்பவியிடம் பேச வேண்டிய வாய்ப்பு அதிகமாக இல்லை. கிரி அங்கே ரீச் ஆனவுடனே விஸ்வநாதனிடமும் உஷாவிடமும் பேசினான். சாம்பவியை கேட்க அவர் வேலையாய் இருப்பதாய் பிறகு பேசுவதாய் விஸ்வநாதன் கூற. அவர் பேச விருப்பப்படாதது அவனுக்கு புரிந்தது. ஆனால் சாம்பவிக்கு புரியவில்லை தான் செய்யும் இந்த செயல் அவனை எந்த அளவிற்கு அவனிடம் இருந்து அவரை விலக்கி நிறுத்த போகிறது என்று.

நிறைய பெரியவர்கள் அறியாமையில் செய்யும் தவறு இது. ஆரம்பத்தில் தங்கள் கோபத்தை அலட்சியபடுத்தி காட்ட பின்னாளில் அதை மற்றவர்கள் செய்யும் போது தாங்கள் ஒதுக்கப்படுவதாக நினைத்து இன்னுமே வாழ்க்கையில் சிக்கலை அதிகப்படடுத்தி கொள்வார்கள். சாம்பவியும் அதே தவறை செய்தார்.

அவன் லன்டன் சென்று சேர்ந்து விட்டதை உஷாவிடம் கூறி இரண்டொரு வார்த்தை மட்டும் பேசிவிட்டு பிறகு கூப்பிடுவதாக கூறிவிட்டான். எல்லாரும் சென்ற பிறகு தாங்கள் மட்டுமே இருக்க உஷா மனதளவில் மிகவும் தனியாய் உணர்ந்தாள். நீராஜாவின் அம்மா அவளிடம் போன் நம்பரை குடுத்து விட்டு சென்றிருந்தார். அவளுக்கு எந்த சந்தேகமோ. உதவியோ. தேவை என்றாள் கேட்பதற்காக. அவருக்கு தெரியும் தாங்களே குழந்தை வளர்ப்பில் தடுமாறும் போது உஷா தனியாக சமாளிப்பது சிரமம் என்று. அவள் சாம்பவியை கேட்பாளா.? கேட்டாலும் சாம்பவி சொன்னாலும். ஒரு கோ-ஆர்டிநேஷன் இருக்காது என்று தெரியும். அவர் அங்கே இருந்த அந்த இரண்டு நாட்களிலேயே உஷாவிற்கு ஆயிரம் சந்தேகம் உதித்தது. யாராவது ஏதாவது இப்படி செய் அப்படி செய் என்று கூறினால் கூட. மகபேறு மருத்துவர் என்பதால் அவரை கேட்டே செய்தாள். எந்த வித்தியாசமும் அவளும் பாராட்டவில்லை. அவரும் பாராட்டவில்லை.

அதனால் குழந்தைகள் விஷயமாக சிறு சந்தேகம் உதித்தாலும் அவருக்கு போன் செய்துவிடுவாள். நாட்கள் இப்படியே கழிய ஒருவாறாக இந்த புது வாழ்கைக்கு தன்னை பழக்கப்படுத்திகொள்ள ஆரம்பித்தாள். சாம்பவியும் இவளை கண்டு கொள்வதில்லை. இவளும் சாம்பவியை கண்டுகொள்வதில்லை. இவள் அலுவலகம் சென்ற பிறகு அவர் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவார். இவள் வந்தவுடன் விட்டு சென்று விடுவார். யாரும் யாரோடு பேசாமல் இயந்தரகதியில் நடக்கும். விஸ்வநாதன் இந்த பாகுபாடு எல்லாம் பார்க்க மாட்டார். அவர் உஷாவிடம் சுமுகமாகவே நடந்து கொள்ள முயற்சித்தார். அலுவலக பணியின் காரணமாக உஷா அவரிடம் பேசினாலும் மற்றபடி ஒரு ஒதுக்கமே காட்டினாள். சுபாவும் மாதவி மேடமும் அவளுக்கு ஓவர் பர்டன் இல்லாத படி விஷயங்களை மிகவும் சிம்பிள் ஆக கத்து கொடுத்தனர். ஆரம்பத்தில் ரொம்பவே திணறினாள். இப்பொழுது தான் சிறிது சிறிதாக பிக் அப் செய்ய ஆரம்பித்தாள்.     

காலை சரியாக பன்னிரெண்டு மணிக்கு கிரி போன் செய்வான். அநேகமாக அது லண்டனில் காலை ஆறரை மணியாக அவன் விழித்து எழும் நேரமாக இருக்கும். அப்போது சிறிது நேரம் பேசுவான். பின்பு இரவில் இவள் உறங்கும் நேரத்திற்கு சற்று முன்பாக கூப்பிடுவான். இது இரண்டும் ஒரு நாள் கூட தவற விட்டதில்லை. ஆனால் என்ன பேசுவது என்று இருவருக்குமே தெரியாது. அவன் அவளுடைய வேலைகள் எப்படி இருக்கிறது என கேட்க இவள் குழந்தைகளை பற்றி கூறுவாள். மற்றபடி வேறு என்ன பேசுவது என்று இருவருமே தயங்கி. போனை வைத்துவிடட்டுமா. வேறேதும் இல்லையா.  என்று இவள் ஒரு ஐந்து தரம் கேட்க, அவன் ஒரு பத்து தரம் அதையே திரும்ப கேட்பான். சொல்லப்போனால் அவனுடைய நாளில் ஆரம்பித்து அவர்களுடைய சாம்பஷனையை அவளுடைய நாளில் முடித்தான்.

உஷா அவன் கூப்பிடும் போது இது சொல்லவேண்டும், அது சொல்லவேண்டும், நிறைய கேட்க வேண்டும். என்று நினைப்பாள். ஆனால் மறந்து விடுவாள். இதனால் ஒரு நாள் கேட்க வேண்டியதை எழுதி கூட வைத்தாள், ஆனால் அதை படித்தால் அவளுக்கே “லூசாப்பா நீ” என்று தோன்றியது. அதனால் அந்த ஐடியாவை விட்டு விட்டாள். அவளுடைய கேள்விகளில் சில சாம்பிள்கள் காலையில என்ன பண்ணுனீங்க. மதியம் சாப்டீங்களா. நைட் தூங்கினிங்களா. என்ற ரீதியில் இருந்தது. கேட்டிருந்தால் கிரியாவது சற்று நாட்களுக்கே அதை நினைத்து நினைத்து சிரித்திருப்பான். அவனுடைய மிசஸ் அதனை மிஸ் செய்ய வைத்து விட்டாள்.

இதற்கு இடையில் லண்டனில் அவர்களுடைய நிறுவனம் ஸ்டீல் இண்டஸ்ட்ரியில் கால் பதிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக அரங்கேறியது. விஸ்வநாதன் அதன் டேக் ஓவர் செரிமனிக்கு அங்கே வருவதை கிரி விரும்பியபோது, அவர் அவனையே பார்த்துகொள்ளுமாறு சொல்லிவிட்டார். அருணும் நந்தினியும் மட்டும் அதற்கு வந்து உடனடியாக திரும்பியும் சென்றிருந்தனர்.

வேலை நடக்கும் வரை அதிலேயே பிஸியாக இருந்ததினால் கிரிக்கு ஒன்றும் தெரியவில்லை. இப்போது டேக் ஓவர் செய்து அவர்களுடைய அட்மினிஸ்ட்ரேஷனுக்கு கீழே இண்டஸ்ட்ரீஸ் இயங்க ஆரம்பித்தவுடனே அவனுமே தனிமையை உணரத் துவங்கினான். அவன் உடனே இதை விட்டு அங்கே செல்ல முடியாது. உஷா குழந்தைகளை தூக்கிக்கொண்டு வர முடியாது. விட்டு விட்டு வரமாட்டாள். சாம்பவியிடம் ஏதாவது சொல்லலாம் என்றால் அவர் அவனோடு பேசுவதில்லை. அப்படி எதையும் மற்றவர்களோடு ஷேர் செய்து பழக்கமில்லை. 

ஏனோ அவனுக்கு தோன்றியது. ஒருவள் வயிற்றில் குழந்தையோடு வரமுடியாமல் போக, மற்றவள் கையில் குழந்தையோடு வரமுடியாமல் நிற்கிறாள். அந்த பிள்ளை செல்வங்களையும் தன்னால் கொஞ்சி மகிழ முடியவில்லை. என்னவோ என் வாழ்க்கை என்று தோன்றியது.ஒரு மாதிரி அவனையும் அறியாமல் சஞ்சலத்தில் இருந்தான்.

அதே நினைவோடே இருந்தவன் உஷா தூங்கும் நேரம் அவளுக்கு போன் செய்ய மறந்தான். வந்த இந்த இரு மாதங்களில் ஒரு நாள் கூட தவறியதில்லை. அவன் ஒரு நாள் கூட தவறியதில்லையாதலால் உஷாவிற்கு கிரிக்கு போன் செய்ய அவசியம் ஏற்பட்டதில்லை. இன்று நேரம் கடக்கவும் முதலில் ஏதாவது வேலை இருக்கும் என்று நினைத்தவள் பிறகு பயப்பட துவங்கினாள். மணி பன்னிரெண்டை கடந்தும் போன் வரவில்லை. கிரிக்கு அப்பொழுது தான் ஞாபகம் வர அவள் தூங்கியிருப்பாள் என நினைத்து விட. இனம் புரியாத பயம் உஷாவிற்கு  அதிகரிக்க துவங்கியது. பொறுக்க முடியாமல் அவள் கூப்பிட. அங்கே அவளுடைய போனை பார்த்த கிரி. அவள் இதுவரை அவனை கூப்பிட்டதில்லை. இரவு அங்கே பன்னிரெண்டுக்கு மேலே இருக்குமே என நினைத்து என்னவோ ஏதோ என்று பதட்டமாக எடுத்து.

“என்ன ப்ரத்யு” என பதட்டமாக வினவ,

“என்ன” என்ற வார்த்தை அவளுக்கு சரியாக கேட்காமல். “ப்ரத்யு”, என்ற அவனது பதட்டமான குரல் கேட்க. “என்ன, என்ன ஆச்சு”, என்று இவள் பதட்டமாக வினவினாள்.

“இங்கே ஒண்ணுமில்லை. அங்கே ஏதாவது ப்ராப்ளமா இந்த நேரத்திற்கு கூப்பிட்டு இருக்க”, என கேட்க.

“இல்லை நீங்க கூப்பிடலைன்னு கூப்பிட்டேன்.”, என்றாள் சிறிது பதட்டம் தனிந்தவளாக.

அங்கே கிரியினுடைய பதட்டம் கோபமாக மாறியது. அதுக்காக “காலையில கூப்பிடகூடாதா.”, என்று எரிந்து விழுந்தான். இவ்வளவு நேரமாக இருந்த பயம் சிறிது நீங்க பெற்றவள் அவனுடைய இந்த செயலால் அவளுடைய அழுத்தம் அழுகையாக மாறியது. தேம்பி தேம்பி அழத் துவங்கினாள். அவளுடைய சத்தத்தில் நிரஞ்சன் கார்த்திக் விழித்துக் கொண்டு அழ. அழுகையினுடே, “கார்த்திக் அழறான் நான் அவனை பார்க்கணும்.”, என்று போனை அப்படியே படுக்கையின் மீது வைத்து விட்டு அவனை அவசரமாக கவனிக்கபோனாள். சிறிது தாமதித்தாலும் ஸ்வாதி ரஞ்சனி முழித்துக்கொள்வாள் என்ற பயம். என்ன முயன்றும் அவளால் அழுகையை அடக்க முடியவில்லை.

அந்த போன் கட் ஆகவில்லை, இரவின் நிசப்தம் கார்த்திக்கின் அழுகையை கிரிக்கு அங்கே கேட்க வைத்தது. அவளது சமாதான வார்த்தைகள் கார்த்திக்கிடம் பேசும்போது தெளிவாக வராததால் அவள் இன்னும் அழுது கொண்டிருப்பது புரிய கிரி எப்படி உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.

அவனுக்கு உடனே அவர்களை பார்க்க வேண்டும் என்பது போல் தோன்ற. உடனே செல்லும் தூரத்திலோ, நிலையிலோ, தான் இல்லை என உணர்ந்து, ஆண்பிள்ளைகள் அழக்கூடாது என தனக்கு தன் தாய் தந்தை சிறு வயதில் சொல்லி பழக்கபடுத்தியதை இன்று உடைத்து விடுவோமோ என்று தோன்றியது.

கார்த்திக்கின் அழுகை நிற்க. அவன் பால் குடித்து கொண்டிருப்பான் என தெரிந்தது. வேலையாட்கள் யார் சத்தமும் கேட்கவில்லை. இவளே பால் கலந்து கொடுத்து கொண்டிருக்கிறாள் என புரிந்தது. சத்தம் எதுவும் கேட்காததால், “ப்ரத்யு.”, என்று போனில் சத்தமாக கூப்பிட அமைதியான இரவில் ஏதோ சத்தத்தை உணர்ந்து உஷா பயந்து திரும்பி. போன் இன்னும் ஆனில் இருப்பதை உணர சிறிது நேரம் பிடித்தது.

போனை எடுத்து, “சத்தம் வேண்டாம், கார்த்திக் தூங்க மாட்டான், மறுபடியும் அழுவான், அப்புறமா பேசலாம், என்று கடகடவென கூறி உஷா போனை வைத்து விட்டாள். அதன் பிறகு கிரியால் எந்த வேலையிலும் ஈடுபட முடியவில்லை. லண்டனில் நள்ளிரவு ஆன போதும் இந்தியாவில் எப்போது ஆறுமணிக்கு மேல் ஆகும் என்று பார்த்து கொண்டே இருந்து மறுபடியும் அவளை அழைத்தான். எப்படியும் வேலையாட்கள் இருப்பார்கள் கார்திக்கோ, ஸ்வாதியோ அழுதாலும் அவர்கள் பார்த்து கொள்வார்கள் என தைரியமாக போனை கத்த விட்டான்.

அவசரமாக முழித்த உஷா அதைவிட அவசரமாக போனை ஆன் செய்தாள். பேசுவதற்காக அல்ல குழந்தைகள் முழிக்க கூடாதே என்பதற்காக. அவர்களை ஒரு பார்வை பார்த்த பிறகே அவனிடம் பேசலானாள்.

“ஹலோ” என்று அவள் குரல் கேட்டவுடனே, “சாரி” என்றான். ஆனால் அவனை திட்டுவதை விடுத்து, “ரொம்ப டென்ஷன் பண்ணிட்டேனா” என்றாள் உஷா. இதற்கு என்ன சொல்ல முடியும். டென்ஷனில் தான் இன்னும் உறங்கவில்லை என்றா கூற முடியும்.

“இல்லை, நீ டென்ஷன் பண்ணலை, நான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். உன்னையும் ஆக்கிட்டேன்னு நினைக்கிறேன் சாரி”, என்றான் மறுபடியும். “காலையிலேயே போன், அங்க மிட் நைட் தானே தூங்காம, என்ன பண்ணிட்டு இருக்கீங்க.”, என்றாள்.

“எனக்கு தூக்கம் வரலை”, என்றான் சலிப்புடன். அந்த குரல். அந்த த்வனி. அவளை என்னவோ செய்தது. 

“தூங்கலைன்னா காலையில எப்படி வேலை பார்க்கிறது, ஹெல்த் என்னாகிறது.”. என்றவள் மெதுவாக, “வேற ஏதாவது செய்து கிட்டு இருக்கீங்களா.”, என்றாள். அவள் ஒரு வேலை அவன் குடித்துக்கொண்டிருக்கிறானோ என்பதற்காக. ஆனால் தற்பொழுது அதிகமாக அந்த பழக்கம் அவனிடத்தில் இல்லை. தினமும் அளவில்லாமல் குடித்தது. சிறிது சிறிதாக குறைத்து இப்பொழுது ஒரு நாளைக்கு ஒரே ஒரு பெக் என்ற அளவிற்கு வந்திருந்தான்.அன்று அதுவும் அவன் ஞாபகத்தில் இல்லை. அவள் கேள்வி புரிந்து “இல்லை”, என்றான்.

“அப்புறம் ஏன் தூங்கலை.”, என இவள் வினவ, “நீ இப்படி அழுதா நான் எப்படி தூங்குவேன். நான் என்ன ஓடி வர்ற தூரத்திலையா இருக்கேன்.”, என குரலில் வருத்தத்தோடு கேட்க

இப்பொழுது சாரி சொல்வது இவள் முறையாயிற்று. “டெய்லி வர டைம் போன் வரலைன்னதும் பயந்துட்டேன்.”, என்றாள்.

“தெரியலை. ஏதோ யோசனையில் இருந்து மறந்துட்டேன்”, என்றான். நான்கைந்து வருடங்களாக இப்போது லண்டனில் தனியாக இருக்கிறான். ஆனால் படிப்பை வேலையை தவிர வேறு எதையும் அவன் தன்னுள் வர விட்டதில்லை. நீரஜா இருந்த போது அவள் அருகில் இல்லாது போனாலும் இப்படி தனிமையை உணர்ந்ததில்லை. ஆனால் இன்று தனிமை அவனை மிகவும் தாக்கியது. பிரிண்ட்ஸ் இருந்தாலுமே தன்னுடைய தனிமையை அவன் யாரோடும் ஷேர் செய்ததில்லை. வீட்டிற்கு போகவேண்டும் என்று அதிகமாக தோன்றியது.     

உஷாவிற்கு அவனும் அங்கே தனியாக இருப்பதால் எதையாவது தன்னை போல் நினைத்து குழப்பி கொள்கிறானோ என்று தோன்றியது. ஏனென்றால் அவன் வேளையில் மறந்து விட்டேன் என்று சொல்லவில்லை என அவளுக்கு புரிந்தது. யோசனை என்கிறான். “என்ன யோசனை”, என்றாள்.

“சொல்றமாதிரி பெருசா எதுவுமில்லை”, என்றான்.

“ஏன் இப்படி அப்செட்டா பேசறீங்க.”, என்றாள் கவலையோடு. அவன் பேச்சை மாற்றினான். “நைட் நீ மட்டும் தான் ரெண்டு பேரையும் பார்த்துக்கரியா”, என. அவன் பேச்சை மாற்றுவது புரிந்தாலும், பதில் சொன்னாள். “ஆமாம். எனக்கு யாராவது கூட இருந்தா கம்பர்டப்லா இருக்காது. பக்கத்துல ரூம்ல ஆள் இருக்காங்க, தேவைன்னா கூப்டுக்குவேன்.”, என்றாள்.

“எப்படி டெய்லி நைட் பார்த்துக்க முடியும். டெய்லி கண்விழிக்க முடியாதே,  யாரையாவது கூட வெச்சுக்கோ.”, என்றான்.

“இல்லை. அது சரிவராது”, என்றாள். “நான் தனியாவே இருந்து பழகிட்டேன். பாட்டி இருந்தப்போவும் தனியா தான் தூங்குவேன். அங்க சித்தி வீட்லயும் எனக்கு ரூம் குடுத்துட்டு அவங்க ஹால்ல தான் தூங்குவாங்க. அதனால கூட யாராவது இருந்தா எனக்கு பிடிக்காது”. 

“அப்போ நான் வந்தா என்ன பண்ணுவ.”, என்றான் அவனையும் அறியாமல். அவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தாலும் கூட. அவர்களுக்குள் ஒரு நெருக்கம் குறைதான். அது உஷா சிறிது நாளாகவே உணர்ந்து கொண்டிருந்தாள். முதன் முறையாக கணவன் என்ற உரிமையோடு கிரி பேச.

“அது.”, என இழுத்த உஷா பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள். கிரிக்குமே அவனுடைய மனநிலமை சற்று மாறியது. இன்னும் சற்று உரிமை எடுத்து, “என்னை உள்ளேயாவது விடுவியா மாட்டியா”, என.

அவன் குரலில் சிறிது உற்சாகம் எட்டி பார்ப்பதை உஷா உணர்ந்தவளாக. தான் இதற்கு சொல்லபோகும் பதில் அவன் தனிமையை போக்க வேண்டும் என்பதற்காக. அவளுமே சற்று மனைவி என்ற உரிமையோடு சிறிது நெருக்கத்தை காட்டி  வார்த்தையாட தொடங்கினாள். “கார்த்திக்கும் ஸ்வாதியும் திறமையானவங்க தெரியுமா. இவ்வளவு நாளா தனியா தூங்கின என் பெட்ல ஈசியா இடம் பிடிச்சிட்டாங்க. பார்போம், அவங்க அப்பாவுக்கு அந்த திறமை இருக்கான்னு”, என்றாள்.

“அப்போ எனக்கு திறமையில்லையா, போன்ல எதுவும் செய்ய முடியாது அப்படிங்கற தைரியமா.”, என இப்போது உற்சாகமாகவே கேட்க. “இருக்கா இல்லையான்னு தெரியாது, ஆனா கொஞ்சம் கம்மி தான்”, என்றாள்.

“கம்மியா, ம். இதெல்லாம் செல்லாது. சான்சே குடுக்காம, இப்படி எல்லாம் பேச கூடாது”, என. “சான்ஸா, இதுக்கெல்லாம் சான்ஸ் குடுப்பாங்களா என்ன.?”, என்றாள் சிரிப்போடு.

“பின்னே” என. “அட மக்கு மாமா”, என்றாள் செல்லமாக. “இது போல் எல்லாம் சான்ஸ் கேட்பாங்களா என்ன.? அதெல்லாம் எடுத்துக்கணும். இதுக்கு தான் சொன்னேன், என் பசங்களோட அப்பாவுக்கு திறமை கம்மின்னு.”, என்றாள்.

“பசங்கள பார்த்துக்குற அம்மா, என்னை பார்க்கமாட்டாளா.”, என. அவனுடைய உற்சாகமான மன நிலையை பயன்படுத்தி, “அது என்ன யோசனை, எனக்கு போன் செய்யறது மறந்து போற அளவுக்கு. என்னை உங்களுக்கு  ஞாபகமேயில்லையா.”, என்றாள் கனிவாகவே.

“ஞாபகமில்லாமையா நைட் புல்லா தூங்காம இருக்கேன்”. அது உஷாவிற்கு  அதிகமான சந்தோஷத்தை கொடுக்க. “சரி இப்போ தூங்குங்க காலையில நானே எழுப்பறேன். காலையில பேசலாம்”, என்றாள்.

“அதுக்குள்ள போன் வைக்க போறியா.”, என இவன் கேட்க. “ப்ளீஸ் ரொம்ப டைம் ஆயிடுச்சு. கார்த்திக்கையும் ஸ்வாதியையும் பார்க்கணும்.”, என்றாள் கெஞ்சல் குரலில்.

மனமில்லாமல் கைபேசியை அனைத்து. வேறு வழியில்லாமல் தலையணையை அணைத்து. கிரி உறங்கினான்,இல்லை. உறங்க முற்பட்டான். ஆனால் உறக்கம்.?

உஷா ஆபீசில் இருக்கும்பொழுது பன்னிரெண்டு மணிக்குமேல் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அவளுடைய கையின் வாட்ச்சை திருப்பி திருப்பி  பார்த்துகொண்டிருந்தாள். அதை பார்த்த சுபா, “என்னங்க மேம், வாச் பார்த்துட்டே இருக்கீங்க. போன் வரலையா”, என்றார்.

அவருக்கு தெரியும் தினமும் இந்த நேரத்திற்கு கிரியுனுடைய போன் வரும் என்று “இல்லை, அதுக்கு பார்க்கலை. அவங்களை நான் எழுப்பிவிடறேன்னு சொன்னேன். நான் ஒரு போன் பேசிட்டு வரட்டுமா.”, என்றாள்.

உஷாவினுடைய இந்த குணம் சுபாவிற்கு மிகவும் பிடிக்கும். அவள் தான் அங்கே உரிமையாளர் என்றாலும், தனக்கு வேலை கற்றுக்கொடுப்பவர் என்று சுபாவிடம்  மிகவும் மரியாதையாக இருப்பாள். எந்த வேலை செய்தாலும் பெர்மிஷன் கேட்டே செய்வாள். போன் வந்தாலுமே நான் பேசிக்கட்டுமா என்று கேட்டே செய்வாள்.

சுபாவிற்கு சிரிப்பு வந்தது. “இங்கே இருந்து லண்டன்ல இருக்கறவங்கள எழுப்பறீங்களா. நடத்துங்க! நடத்துங்க!”, என்றார்.

உஷா வெட்கச் சிரிப்புடன் எழுந்துசெல்ல. அவள் முகம் அழகாக தோன்றியது. ஒரு நிமிஷம் உஷா என்றவர். “இன்னைக்கு நீங்க  ரொம்ப அழகா இருக்கிங்க,  இதையும் நான் சொன்னேன்னு கிரி சார் கிட்ட சொல்லுங்க.”, என்றார்.

“நீங்க போங்க மேம், என்னை கிண்டல் பண்றீங்க.”, என்று சொல்லிக்கொண்டே போனாள்.

போன் செய்ய பார்க்கும் பொழுது தான் அதில் மெசேஜ் இருப்பதை பார்த்து அதை படிக்க. “ ஒரு அவசர வேலை. நான் ரொம்ப பிஸி. ஒரு ரெண்டு நாளைக்கு டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். நானே கூப்பிடுறேன். கிரி”. என்று இருந்தது.

பார்த்தவுடனே காலையில் இருந்து இருந்த சந்தோஷ மனப்பான்மை நிமிடத்தில் மறைந்தது. மறுபடியும் சுபாவின் எதிரில் வந்து அமர. பார்த்தவுடனேயே அவருக்கு அவளுடைய உற்சாகமின்மை தெரிந்தது. “என்னங்க மேம் ஆச்சு பேசலையா”, என்றார். “வொர்க் இருக்குன்னு அவரே எழுந்துட்டார் போல. கொஞ்சம் பிஸி போல பேச முடியல்லை.”, என்றார்.

“அதுக்கா இப்படி! சியர் அப் மேம்! நீங்க ரெண்டு பேருமே ஆர்டினரி பெர்சனாளிடீஸ் கிடையாது. நீங்க இந்த மாதிரி நிறைய சிச்சுவேஷன்ஸ் டிஸ்அப்பாயிண்ட்மெண்ட்ஸ் பார்க்க வேண்டி வரும். இதுக்கெல்லாம் வருத்தபடக்கூடாது. ஏன்னா உங்க முகம் கண்ணாடி மாதிரி. சந்தோஷத்தையோ துக்கத்தையோ அப்படியே காட்டுது.”, என்றார்.

“ட்ரை பண்ணறேன் மேம்”, என்று மறுபடியும் வேலை பார்க்க ஆரம்பித்தாலும் அவளுடைய மூட் அவுட் நன்றாகவே தெரிந்தது.

காலையில் நன்றாக தானே பேசினான். என்னவாயிற்று என்று அவளுக்கு மனதை ஏதோ பாரமாக அழுத்த ஆரம்பித்தது. வேலை என்றால் ஒரு வார்த்தை பேசக்கூடவா முடியாது. ஒரு வேளை தன்னை தவிர்க்கிறானோ. என்ன முயன்றும் அலைபாய்ந்த மனதை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. மற்ற நாட்களில் எப்படியோ இன்று தான் சிறிது நெருக்கத்தை காட்டி பேச. ஒரு வேளை அவனுக்கு பிடிக்கவில்லையா. இல்லை, நீரஜாவின் நினைவா.? தவித்து போனாள்.

லஞ்ச் ஹவர் வரை தாக்கு பிடித்தவள், அதற்கு மேல் தாள முடியாதவளாக. கிரிக்கு போன் செய்தாள். அது “ஸ்விட்ச் ஆப்” என்று வந்தது. சாப்பாடு இறங்கவேயில்லை. எத்தனை தினங்களுக்கு தனக்குள் இந்த போராட்டம். இவன் ஏன் நம்மை இவ்வளவு பாதிக்கிறான். என்று எண்ணியவளாக வேளையில் ஈடுபட முடியாமல். “எனக்கு தலை வலிக்குது மேம். நான் மதியம் லீவ் எடுத்துக்கட்டுமா.”, என்று சுபாவிடம் போய் நின்றாள். பன்னிரெண்டு மணியில் இருந்தே அவள் ரெஸ்ட் லெஸ்ஸாக இருப்பதை உணர்ந்த சுபாவும், “நீங்க போங்க மேம், நான் பார்த்துக்கறேன்”, என்றார்.

வெளியே வந்து முத்துவை கார் எடுக்க சொல்லும் போது விஸ்வநாதன் வெளியே சென்று விட்டு உள்ளே வர. இவளை பார்த்தவுடனே நின்றார். மாலை ஐந்து மணிக்கு தானே செல்வாள். இப்போது ஏன் செல்கிறாள் என்று எண்ணியவராக  அவளை பார்க்க. அவள் மிகவும் சோர்வாக இருப்பது போல் இருந்தது. “என்னம்மா உடம்பு சரியில்லையா கிளம்பிட்ட.”, என கேட்க, தலையை மட்டும் “இல்லை” என்பது போல் ஆட்டி விட்டு காரில் ஏறி அமர்ந்து முத்துவை “போங்கள்” என்பது போல் கை அசைத்தாள். விஸ்வநாதன் அவளையே யோசனையாக பார்த்தார். என்னவாயிற்று இந்த பெண்ணிற்கு முகமே சரியில்லையே.  அவளால் பேசமுடியவில்லை. அழுகை தொண்டையை அடைத்தது. கண்கள் மூட கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.