அத்தியாயம் –34
கணேஷ் கிளம்பிச் சென்ற பின்னும் கூட அவர் யோசனையிலேயே இருந்தார். மகளுக்கு வரன் பார்க்க அவர் ஆரம்பித்திருந்தார் தான், ஆனால் இப்படி வந்து கேட்கவும் ஏனோ அதை துரிதப்படுத்த வேண்டும் என்று தோன்றியது அவருக்கு.
அவருக்கு பொதுவாய் ஜாதகம் ஜோசியத்தில் நம்பிக்கை உண்டு. மனோபாரதி பிறந்தவுடன் வள்ளுவன் எழுதிய ஜாதகக் குறிப்பில் அவளின் இருபது வயதிற்கு மேல் பெற்றோருக்கு அவளுடன் இருக்க கொடுத்து வைத்திருக்காது என்பதை எழுதியிருந்தார்.
எல்லாம் ஒரே நேரத்தில் அவர் எண்ணத்திற்கு வந்து போக மகளின் திருமணத்திற்கான வேலையில் அவர் உடனே இறங்க எண்ணினார்.
குமாரசாமியிடம் பேசிவிட்டு வந்த கணேஷிற்கு அவ்வளவு சந்தோசம். அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை குமாரசாமி ஒத்துக்கொள்வார் என்று.
அவன் அவரிடம் உண்மை பாதி பொய் மீதியாக தன்னை பற்றிய விஷயங்களை அவரிடம் பகிர்ந்து வந்திருக்கிறானே!!
எப்படி பேசினால் அவர் ஒத்துக்கொள்ளுவார் என்று அவன் எண்ணிக்கொண்டிருந்தானோ அப்படியே அவன் பேசி வந்திருந்ததில் வெகு மகிழ்ச்சி அவனுக்கு.
வேறு யாராய் இருந்தாலும் அவனின் இப்பேச்சை கேட்டு மெய் சிலிர்த்து தன் மகளை கட்டிக்கொடுக்க நிச்சயம் யோசித்திருப்பர்.
ஆனால்குமாரசாமி அப்படியான மனிதர் அல்லவே… கணேஷ் அதை உணரவில்லை. நிச்சயம் அவர் மீண்டும் அவனை அழைத்து பேசுவார் என்ற நம்பிக்கையில் அவன் எண்ணை அவரிடம் பகிர்ந்திருந்தான்.
இப்படியே இரண்டு நாட்கள் கழிந்திருக்க குமாரசாமி தற்செயலாக திருமழிசைக்கு சென்றிருந்தார்.
இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே மகளுக்காய் வாங்கிய மனையையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு வருவோம் என்று தோன்ற அங்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனென்றால் அவர் மகளுக்காய் வாங்கியிருந்த இடத்தில் எஸ்ஜி கன்ஸ்ட்ரக்ஷன் பெயர் பலகை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அது மட்டுமல்லாமல் அந்த இடத்தில் வரப்போகும் கட்டிடத்தின் வரைப்படத்தின் மாதிரியை தாங்கியிருந்த பலகையும் வீற்றிருந்தது கண்டு அவருக்கு கண்மண் தெரியாத கோபம் எழுந்தது.
எந்த தைரியத்தில் அவர்கள் இதை செய்திருப்பார்கள் என்ற கோபமே அது. கணேஷ் பேசிய போது ஏதோ ஒரு வகையில் தான் அவனை தப்பாக கணிக்கிறோமோ என்று அவருக்கு எழுந்திருந்த எண்ணம் மொத்தமாய் அடிபட்டு போயிற்று.
அவர் மனம் உறுதியாய் இது கணேஷின் செயல் என்று நம்பத் தொடங்கியது. அதே கோபத்தில் அங்கிருந்து கிளம்பியவர் அடுத்து சென்ற இடம் எஸ்ஜி கன்ஸ்ட்ரக்ஷன்.
கோபமாய் உள்ளே நுழைந்தவரை கண்ட வரவேற்பு பெண் அவரை தடுத்து நிறுத்தி யாரை பார்க்க வேண்டும் என்று கேட்டாள்.
“ஸ்ரீதர் இருக்காரா, இல்லை அவர் புள்ளை இருந்தாலும் சரி தான் நான் பார்க்கணும்” என்று கத்தாத குறையாகவே கேட்டார்.
அவரை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்த அப்பெண் “உங்க பேரு??” என்று கேட்க அவர் சொன்னதும் யாருக்கோ அழைத்து பேசியவள் “உள்ள போங்க” என்றாள்.
குமாரசாமி முன்பே அங்கு சென்றிருந்ததால் நேராகவே ஸ்ரீதரனின் அறையை நன்கு அறிந்திருந்தார். கதவை தட்டக் கூட இல்லாமல் அவர் உள்ளே நுழைந்து விட ஸ்ரீதரன் முகத்தை சுளித்தாலும் சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்றார்.
“வாங்க வாங்க சம்மந்தி” என்றவாறே.
“யாருக்கு யாரு சம்மந்தி??” என்று கோபத்தை அப்பட்டமாய் முகத்தில் காட்டினார் குமாரசாமி.
“உங்க பொண்ணுக்கு எங்க பையனை கட்டினா நீங்க எனக்கு சம்மந்தி தானே!!”
“அதுக்கு நான் இன்னும் சம்மதிக்கவேயில்லையே!!”
“சம்மதம் சொல்லாம இருக்க எந்ததடையுமில்லையே!! என் பையனுக்கு எந்த குறையும் இல்லை!! கை நெறைய சம்பாதிக்கறான், பணக்காரன்”
“எனக்கு பிறகு இந்த சொத்து முழுக்க அவன் தான் ஆளப்போறான்” என்று பெருமையாக மகனை பற்றி அவர் பேசிக்கொண்டேயிருக்க “கொஞ்சம் நிறுத்தறீங்களா!!” என்று கையமர்த்தினார் குமாரசாமி.
“சொத்து வைச்சிருந்தா அது உங்களோட!! எங்களுக்கு அது முக்கியமில்லை!! இந்த சொத்து பார்த்து பொண்ணு கொடுக்கறது நல்ல வேலையில இருந்தா பொண்ணு கொடுக்கறது அப்படி ஆளு இல்லை நானு”
“உங்க மகனுக்கு என் பொண்ணை கட்டித்தர எனக்கு சம்மதமேயில்லை!!” என்றார் முகத்திலடித்தது போல்.
“என்ன?? என்ன சொன்னே?? ஓ!! உனக்கெல்லாம் அவ்வளவு திமிராடா!! என் பையனை கட்டிக்க பொண்ணுங்க வரிசையில நிப்பாங்க!! உன் பொண்ணு என்ன உலக அழகியா!!” என்று ஆவேசமாய் கேட்டார் ஸ்ரீதரன்.
“நான் ஒண்ணும் அந்த வரிசையில வந்து நிற்கலையே!! உங்க பையன் தான் வந்து கேட்டார்…”
“பொண்ணு கேட்டுட்டு மட்டும் தான் போயிருக்கார், ஆனா அதுக்குள்ள என் பொண்ணுக்கு நான் வாங்கின இடத்துல உங்க போர்ட் நிக்குதுன்னா என்ன அர்த்தம்”
“உங்களுக்கு அவ்வளவு நிச்சயமா நான் என் பொண்ணை உங்க பையனுக்கு தருவேன்னு. அப்போ அந்த இடத்தை வாங்குறதுக்காக பெத்த பையனை வைச்சு மாமா வேலை பார்க்கறியா!!” என்று பெரிய வார்த்தையை விட்டார் குமாரசாமி.
அந்த வார்த்தை ஸ்ரீதரனை அதிக கோபப்படுத்தியது. “வெளிய போடா நாயே!! என் பையனை பத்தி பேச உனக்கு எந்த தகுதியும் இல்லை… இவ்வளவு பேசிட்டல்ல இதையும் கேட்டுட்டு போ”
“உன் பொண்ணும் என் பையனுக்கு தான், அந்த இடமும் என் பையனுக்கு தான்…” என்று சொல்ல குமாரசாமியோ“அது நான் செத்தாலும் நடக்காது” என்றார்.
“நடத்திக்காட்டுவேன், நீ செத்து தான் கல்யாணம் நடக்கணும்ன்னா அதையும் செய்வேன்” என்று சவால்விட்டார் அவர்.
குமாரசாமிக்கு அவர் பேச்சை கேட்டு பயம் எதுவும் வரவில்லை. ஆனாலும் இது மகள் வாழ்க்கை என்பதால் அவசரமாய் ஒரு முடிவெடுக்க நினைத்தார்.
அங்கிருந்து கிளம்பியதில் இருந்தே அவர் எண்ணத்தில் அடுத்து என்ன என்ற யோசனை தான் இருந்தது.
சட்டென்று பிரணவை பற்றிய எண்ணம் தோன்ற அவனை நேராய் பார்த்து பேசினால் என்ன என்று மனம் எண்ணியதுமே அவன் கொடுத்திருந்த அவன் வீட்டு முகவரியை எடுத்துக்கொண்டு அங்கு சென்றார்.
அலுவலகத்திற்கு சென்றால் மகள் இருப்பாளே என்ற எண்ணத்தில் தான் வீட்டிற்கு சென்றார். இவ்வளவு யோசித்தவர் அவனும் இந்த நேரம் அலுவலகத்தில் தான் இருப்பான் என்பதை மறந்துவிட்டார்.
அவன் வீட்டு அழைப்புமணியை அழுத்த பிரணவின்அக்கா ஹேமா தான் கதவை திறந்தாள். குமாரசாமியோ “பிரணவ்…” என்று இழுக்க “என் தம்பி தான் நீங்க??” என்று கேட்டாள் ஹேமா.
“என் பேரு குமாரசாமி, நான் அவரை பார்க்கலாமா!! அவருக்கு என்னை தெரியும். பாரதியோட அப்பான்னு சொல்லுங்க” என்றதும் ஹேமா அவரை ஏற இறங்க பார்த்தாள்.
‘இதென்ன வழக்கத்திற்கு மாறாய் ஒரு பெண்ணின் தந்தை நம் வீட்டு கதவை தட்டி தம்பியை பற்றி விசாரிக்கிறாரே’
‘எதுவும் தப்பு தண்டா செய்து விட்டானா’ என்று ஒரு புறம் மனதில் திகில் எழுந்தாலும் அவள் தம்பியின் மீது இருந்த நம்பிக்கை அப்படி இருக்காது என்று அடித்து சொன்னதில் அந்த எண்ணத்தை விட்டு அவரை பார்த்தாள்.
“பிரணவ் இன்னும் ஆபீஸ்ல இருந்து வரலையே!! எட்டு மணிக்கு மேல தான் வருவான்!!” என்றாள் அவள்.
“அச்சோ இதை எப்படி நான் மறந்தேன்…” என்று தலையில் தட்டிக்கொண்டவர் “ரொம்ப நன்றிம்மா நான் அவர்கிட்ட போன்ல பேசிக்கறேன்” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
நேரம் அப்போது மாலையாகிவிட்டிருந்தது. ஸ்ரீதரன் மிரட்டியதற்காக பயம் வராவிட்டாலும் மகளின் சாதகம் அறிந்திருந்தவர் இது தனக்கு ஒரு அபாய மணி அறிவிப்பு என்பதாய் அதை எடுத்துக் கொண்டிருந்தார்.
உடலும்மனமும் ஓய்ந்து தான் போயிருந்தது அவருக்கு. எப்படி வீடு வந்தோம் என்பதை அவரே உணரவில்லை. மனைவி மகளிடமும் சாதாரணமாய் இருப்பது போலவே காட்டிக்கொண்டார்.
மனோ தான் கேட்டாள் “என்னப்பா ஒரு மாதிரியா இருக்கீங்க என்னாச்சு??” என்று கேட்கவும் “அப்படியாம்மா தெரியுது”
“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லைடா!! உன் கல்யாணத்தை பத்தி யோசிச்சுட்டு இருந்தேன். அதான் உனக்கு அப்படி தெரிஞ்சிருக்கும்” என்று சமாளித்தார் அவர்.
“கல்யாணம் எனக்கு!! அட என்னப்பா நீங்க!! உங்களுக்கு வேற வேலையே இல்லையா!! இப்போ தான் வேலைக்கே போக ஆரம்பிச்சிருக்கேன்”
“அதுக்குள்ள எனக்கு கல்யாணமா!! அந்த பேச்சை கொஞ்ச நாளைக்கு தள்ளி வைங்க!! அம்மா பாருங்கம்மா அப்பாவை” என்று அவள் அன்னையை துணைக்கழைத்தாள்.
“செல்லம் இந்த விஷயத்துல நான் உங்கப்பா கட்சி தான் எப்பவும். அப்பா உனக்கு எது செஞ்சாலும் சரியா தான் செய்வார். அவருக்கு தெரியும் எப்போ எது செய்யணும்ன்னு சரியா!!” என்று தாயாய் மகளுக்கு அறிவுரை செய்தார்.
“அம்மா ஊர்ல தான் அந்த நளினி அத்தை என் கல்யாணத்தை பத்தி பேசி தொல்லை பண்ணாங்கன்னு இங்க வந்தோம், இங்கயும் நீங்க அதையே தானே பண்றீங்க” என்று அங்கலாய்த்தாள் அவள்.
“உங்க அத்தையோட பையன் சரியானவனா இருந்திருந்தா நாங்க எதையும் யோசிச்சிருக்க மாட்டோமே!!”
“அதுவுமில்லாம அந்த கார்த்திக் அவன் நீ போகும் போது வரும் போதெல்லாம் பின்னாடியே வந்து எவ்வளவு தொல்லை கொடுத்தான், அதனால தானே நாம ஊரையே மாத்திட்டு இங்க வந்திருக்கோம்”
“அதான் அவன் பேருல போலீஸ் கம்பிளைன்ட் கொடுத்தாச்சே!! அப்புறம் அவன் என்ன பண்ணியிருக்க போறான்… நீங்க தான் நான் சொல்ல சொல்ல கேட்காம இங்க கூட்டிட்டு வந்திட்டீங்க”
“உனக்கு அவங்களை தெரியாதும்மா!! நீ அந்த பேச்சை இதோட விடு!!” என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அவர்.
மகள் அப்புறம் சென்றதும் கணவரை நோக்கினார் அவர். “என்னாச்சுங்க இவ்வளவு யோசனை பண்ண மாட்டீங்களே நீங்க??” என்ற மனைவியிடம் திறந்த புத்தகமாய் அனைத்தும் ஒப்பித்தார் குமாரசாமி.
“இப்போ என்னங்க முடிவு பண்ணியிருக்கீங்க??” என்று நேரடியாய் கேட்ட மனைவியிடம் தன் எண்ணத்தை சொல்ல அவரோ “இதெல்லாம் சரியா வருமாங்க”
“என்னைக்கோ ஒரு நாள் தான் அவரை நேர்ல பார்த்திருக்கீங்க!! அதுக்குள்ள எப்படி முடிவு பண்ணுவீங்க” என்று கேட்ட ஜானகியை பார்த்து லேசாய் புன்னகைத்தார்.
“நாமளா ஒரு மாப்பிள்ளை தேடி பிடிச்சாலும் நமக்கு அவரை பத்தி என்ன தெரிஞ்சிருக்கும்… யாரோ சொல்ல தானே கேள்வி பட்டிருப்போம்”
“ஆனா அவரோட நாம பழகி பார்த்து தெரிஞ்சிருக்க முடியாது தானே. இவர் அப்படி இல்லையே நான் நேர்ளா பார்த்திருக்கேன், அவ்வளவு ஒரு மரியாதையா பேசினாரு”
“நான் அவருக்கு பொண்ணு கொடுக்க போறேன்னு நினைச்சா அவர் என்கிட்ட பணிவும் மரியாதையும் காமிச்சார் இல்லையே”
“ஆனா அந்த கணேஷ்கிட்ட எனக்கு தெரிஞ்சது போலி பணிவும், மரியாதையும் தான். அதுவும் நம்ம பொண்ணுக்காக தான் அவன் அதை செஞ்சான்”
“பிரணவ்கிட்ட எனக்கு எந்த குறையும் தெரியலை. நம்ம பொண்ணும் பசங்ககிட்ட அதிகம் பழகாதவ, சண்டை போட்டாலும் இவர்கிட்ட மட்டும் தான் ஒரு உரிமையோட பழகுறா!! அது உனக்கு புரியுதா ஜானகி!!”
“அப்போ நம்ம பொண்ணு அவரை லவ் பண்ணறான்னு சொல்றீங்களா!!” என்றார் அவர் மனைவி ஜானகி.
“இல்லை நான் அப்படி சொல்லலை!! நமக்கு எல்லார்கிட்டயும் உரிமையா பேச வராது, சண்டை போட வராது!!”
“ஆனா நமக்கே தெரியாம நம்ம மனசுக்கு நெருக்காம இருக்கவங்ககிட்ட தான் இப்படி எல்லாம் செய்வோம்”
“எனக்கு நீங்க சொல்ல வர்றது புரியவேயில்லைங்க” என்றார் ஜானகி குழப்பமாய்.
“அவளுக்கு ஏதோவொரு விதத்துல பிரணவை பிடிச்சிருக்குன்னே வைச்சுக்குவோமே!!” என்று முடித்தார் குமாரசாமி.
“நம்ம பொண்ணுக்கு பிடிக்குதுன்னே வைச்சுக்கோங்க, ஆனா அவருக்கும் நம்ம பொண்ணை பிடிக்க வேணாமா!! எப்படி அவர்கிட்ட பொசுக்குன்னு கேட்பீங்க நம்மை தப்பா நினைக்க மாட்டாரா!!” என்றார் ஜானகி.
“என்னமோ என் உள்மனசு சொல்லுது நம்ம பொண்ணை அவருக்கு பிடிக்கும்ன்னு…”
“உள்மனசு சொல்றதை எல்லாம் வைச்சு அவர்கிட்ட போய் கேட்டு வைக்காதீங்க” என்றார் அவர் மனைவி.
“இல்லை ஜானகி அவருக்கு நிஜமா நம்ம பொண்ணை பிடிச்சிருக்கும்” என்று சொன்னதையே திருப்பிச் சொன்னார் அவர்.
“அதுக்காக நேரா அவர்கிட்ட போய் கேட்டிருவீங்களா!! அவங்க வீட்டில என்ன நினைப்பாங்க நம்மை பத்தி!!” என்றார் ஜானகி.
“நமக்கு இப்போ அவங்க வீட்டு ஆளுங்களை தெரியாதே!! அவரை தானே தெரியும் அப்போ முதல்ல அவரை கேட்குறது தானே சரி!!” என்று தன் தரப்பை சொன்னார் குமாரசாமி.
அவர் பேச்சில் இப்போது ஒரு தெளிவு வந்திருந்தது. பிரணவை உறுதியாய் அவர் மனம் நம்பத்தொடங்கியது.
“நீ… நீ போய் அவளுக்கு சாப்பாடு வை… எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு நான் இப்போ வந்திடறேன்” என்று உள்ளே செல்லப் போக “வெளியப் போகப் போறீங்களா” என்றார் ஜானகி.
“வேலை வெளியில இல்லை உள்ள தான்” என்றுவிட்டு அவர் அறைக்குள் சென்றார். வெகு நேரம் கழித்து வெளியில் வந்தவரின் முகத்தில் அப்படி ஒரு தெளிவிருந்தது.
மகள் படுக்கச் சென்றதும் கணவரிடம் கேட்டேவிட்டார் ஜானகி. “நீங்க மாப்பிள்ளைகிட்ட பேசிட்டீங்களா!!” என்று.
மனைவியை ஆச்சரியமாய் நோக்கிய குமாரசாமி “மாப்பிள்ளைன்னே முடிவு பண்ணிட்டியா!!” என்றார்.
“உங்க முகமே சொல்லுதே நீங்க பேசிட்டீங்கன்னு!! அவர் தான் நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளைன்னு” என்று கணவரை கண்டுகொண்ட மனைவியாய் அவர் கூற மெச்சுதலாய் அவரை பார்த்தார் குமாரசாமி.
“நாம நாளைக்கு பழனிக்கு போயிட்டு வருவோமா!! மனசுக்கு ரொம்ப நிறைவாய் இருக்கு எனக்கு!!” என்ற கணவரிடம்“சரிங்க” என்றார் மனைவி.
“நம்ம பொண்ணுகிட்டையும் ஒரு வார்த்தை கேளு. ஆனா அவ ஏதோ ப்ராஜெக்ட் மாத்திட்டாங்க லீவு எல்லாம் போட முடியாதுன்னு அன்னைக்கு சொல்லிட்டு இருந்தா!!”
“அவ வந்தாலும் வரலைன்னாலும் நாம கோவிலுக்கு போயிட்டு வந்திடுவோம்” என்றார் குமாரசாமி.
____________________
மாலை வீட்டிற்கு வந்த கணேஷ் அவன் மடிகணினியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான். நேரம் ஏழு, எட்டு என்று ஆகி பின் பதினோரு மணி என்று காட்டியது.
எப்போதும் எட்டுமணிக்கே வீட்டுக்கு வந்துவிடும் தந்தை அன்று வராதது அவனுக்கு என்னவோ போல் இருக்க அதற்கு மேல் தாமதம் செய்யாது அவர் கைபேசிக்கு அழைத்தான்.
அது அடித்து ஓய்ந்தது, மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள அழைப்பு ஏற்கப்படாமலே இருக்கவும் லேசாய் ஒரு கலவரம் எட்டிப் பார்த்தது அவனுக்குள்.
வேலையாளும் இரவு உணவை தயாரித்து வைத்துவிட்டு எப்போது சென்றிருந்தார். வீட்டில் அவன் மட்டுமே தனித்திருந்தான். அப்போது வாசலில் கார் சத்தம் கேட்க வேகமாய் வந்து எட்டிப் பார்த்தவனுக்கு தந்தையின் காரை கண்டதும் நிம்மதி பெருமூச்சு.
காரில் இருந்து இறங்கியவர் அதிகமான தள்ளாட்டத்தில் இருந்தார். வேகமாய் முன் சென்று அவரை தாங்கியவன் “என்னாச்சு எதாச்சும் பிசினஸ் மீட்டா”
“எதுக்கு இவ்வளவு ட்ரிங்க் பண்ணீங்க” என்றான்.
மகனை நிமிர்ந்து பார்த்தவர் லேசாய் புன்னகைக்க முயன்றார். குழறலாய் அவர் ஏதோ சொல்ல முயற்சி செய்ய “உள்ள போய் பேசிக்கலாம்” என்றுவிட்டு அவரை உள்ளே அழைத்து வந்தான்.
“முதல்ல போய் குளிச்சுட்டு வாங்க அப்புறம் பேசலாம்” என்று சொல்ல அவரோ அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார்.
“எனக்கு பேசணும்” என்றார் குழறலாய்.
“எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம், இப்போ நீங்க நிதானத்துல இல்லை” என்றான் அவன் மறுத்து.
“அந்த… அந்த குமாரசாமி இன்னைக்கு ஆபீஸ் வந்திருந்தான்” என்று அவர் சொல்லி முடிக்கவில்லை கணேஷ் அவரருகே சென்றிருந்தான்.
“என்னப்பா சொல்றீங்க?? அவர் வந்தாரா என்ன சொன்னார்?? கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாரா!!” என்றான் ஆர்வமாய்.
“அவர் பொண்ணுக்கு உன்னை கட்டித்தர முடியாதுன்னு சொல்றான்டா அவன். எவ்வளோ திமிர் இருக்கும் அவனுக்கு. என்… என் பையனுக்கு தர முடியாதுன்னு சொல்லிட்டான்”
“என்… என்னை பார்த்து… என்ன கேட்டான் தெரியுமா அவன்… அவனை கொல்லாம விடமாட்டேன் நானு” என்று குழறிக் கொண்டிருந்தார் அவர்.
கணேஷிற்கு அவர் சொல்ல ஆரம்பித்ததுமே முகம் பலவித கலவர உணர்வுகளை பிரதிபலித்தது.
“அப்பா அவர் என்ன தான் சொன்னார் முழுசா சொல்லுங்க… இப்படி முழுங்கி முழுங்கி சொல்லாதீங்க” என்று கூற ஸ்ரீதரனுக்கு தான் தெளியவேயில்லையே இன்னமும் அப்படியே பேசிக் கொண்டிருக்க அவரை தரதரவென்று அவர் அறைக்குள் தள்ளிச் சென்றான்.
அவரை குளியலறைக்கு கூட்டிச் சென்று ஷவரை திறந்து நிற்க விட்டவன், அவர் சற்று தெளிந்தார் போன்று தோன்றவும் துண்டை எடுத்து அவரிடம்கொடுத்துவிட்டு“டிரஸ் மாத்திட்டு சீக்கிரம் வாங்க” என்றுவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.
அவர் வருவதற்குள் சூடான வென்னீரில் எலுமிச்சை சாறு பிழிந்து வைத்திருக்க அவர் வந்ததும் அதை கொடுத்து குடிக்கச் சொன்னான்.
அவர் குடித்து முடித்ததும் தான் தாமதம் “சொல்லுங்க அவர் என்ன சொன்னார்” என்று சொன்னதும் கொஞ்சம் கொஞ்சமாய் தெளிய ஆரம்பித்திருந்த ஸ்ரீதரனும் நடந்ததை ஒன்றுவிடாமல் கூறி முடித்திருந்தார்.
கணேஷிற்கு அளவில்லா ஆத்திரம் வந்தது குமாரசாமியின் மேல். ஸ்ரீதரன் ஒன்றும் லேசுபட்ட மனிதர் அல்ல சட்டென்று எதற்கும் உணர்ச்சி வசப்படுவர் அல்ல.
ஆனால் அவரையே இந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறார் என்றால் குமாரசாமி எவ்வளவு பேசியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தான் அவன்.
அவன் தந்தை சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுக்கும் ஆளில்லை தான் அவன்.
ஆனால் மகன் விஷயத்தில் பொய் சொல்லும் தந்தை அவர் அல்ல என்பது அவனுக்கு தெரிந்ததால் குமாரசாமியை சும்மாவிட அவனும் நினைக்கவில்லை.
எதுவாவது செய்ய வேண்டும் என்று அவன் அறிவு அவனை போட்டு பாடாய் படுத்திக் கொண்டிருக்க ஸ்ரீதரனோ “ஷ்யாம் நீ விடு, எதுவும் யோசிக்காத… அந்த பொண்ணை நீ தான் கட்டிக்க போறே”
“கண்டிப்பாப்பா எனக்கு அவ வேணும். அந்த இடமும் தான்… எப்படி அந்தாளு அந்த வார்த்தையை பேசுவாரு… இதுக்காக அவர் வருத்தப்படணும்ப்பா…” என்று கணேஷ் சொல்ல ஸ்ரீதரன் “நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லி மகனை உறங்கச் சொன்னார்.
ஆனால் உறக்கம் தான் அவர்களுக்கு வந்தபாடாய் இல்லை. கணேஷ் என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வரும் முன்னே விஷயம் அவன் கையை மீறி சென்றிருந்தது.
ஆம் ஸ்ரீதரன் எல்லாமும் செய்து முடித்திருந்தார். குமாரசாமியை இல்லாமல் செய்துவிட்டால் அவர் மகளை சுலபமாய் தன் மகனுக்கு கட்டி வைத்துவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்.
மறுநாளேகுமாரசாமி போகுமிடம் வருமிடம் எல்லாம் விசாரிக்க அவர்மனைவியுடன் பழனிக்கு சென்றிருக்கும் தகவல் கிடைக்க அதுவே சரியான சந்தர்ப்பம் என்று யூகித்தார் அவர்.
மனோபாரதி அவர்களுடன் செல்லாதது அவருக்கு பெரும் வசதியாகிப் போனது. கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிட அவருக்கு மனமில்லை.
மகனிடம் கூட எதையும் பகிராதவர் வேலையை திறம்பட முடித்திருந்தார் தகுந்த ஆட்களை வைத்து.
கணேஷ் அப்போது அலுவலகத்தில் இருந்தான். பிரணவிடம் மறுநாளைக்கான பிரசன்டேஷன் பற்றி கேட்க வந்தவன் மனோவும் அவனும் கட்டிக்கொண்டு நிற்பது பார்த்து கொலைவெறி வந்தது அவனுக்கு.
சட்டென்று உள்ளே நுழைந்து பிரணவை ஓங்கி ஒரு அறை விடலாம் என்று தோன்றியது அவனுக்கு. ‘இவனுக்கு நான் என்ன குறை வைத்தேன்’
‘யாரிடமும் மனம்விட்டு பழகாத நான் இவனைத் தானே நண்பன் என்று எண்ணி பழகினேன். எனக்கே துரோகம் செய்கிறானே’ என்ற கோபம் கணேஷிற்கு எழுந்தது.
இப்போது உள்ளே சென்றால் நாகரீகமாய் இருக்காது என்றுணர்ந்தவன் வந்த வழியே அவன் அறைக்கு செல்ல பிரணவே அவனுக்கு போன் செய்தான்.
பிரணவ் பேச ஆரம்பித்த போதே அவனுக்கு அவ்வளவு வெறுப்பு அதை வெறுப்பை அப்பட்டமாய் அவன் பேச்சில் காட்டினான்.
ஆனால் அதன் பின்னர் பிரணவ் சொன்ன சேதியை கேட்டவனுக்கு லேசான அதிர்ச்சி அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் போனை வைத்தவன் உடனே தந்தைக்கு அழைத்தான்.
“அப்பா எங்க இருக்கீங்க??” என்றான்.
“ஆபீஸ்ல தான் இருக்கேன்”
“என்ன பண்ணி வைச்சிருக்கீங்க நீங்க!! எதுக்கு இப்படி எல்லாம் பண்றீங்க!! நான் தான் நிதானமா யோசிச்சு பண்ணலாம்ன்னு இருந்தேன்ல!!”
“அதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு… என்ன வேலை பண்ணியிருக்கீங்க!!” என்று அடிக்குரலில் கத்தினான்.
“ஓ!! உனக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சா!! அவன் போய் சேர வேண்டியவன் தான்… உன்னை பத்தி தப்பா பேசினான்ல அதுக்கு மேல அவன் இருக்க கூடாது”
“அதுக்காக தான் இதெல்லாம் செஞ்சேன்… இனிமே எல்லாமே நமக்கு சரியா தான் நடக்கும் நீ வேணா பாரு!!”
“அப்புறம் இதான் நல்ல சந்தர்ப்பம் அந்த பொண்ணுக்கு உதவி பண்ணி அது மனசுல இடம் புடிக்கற வழியை பாரு” என்று ஏதேதோ சொல்லிவிட்டு அவர் போனை வைத்தார்.
‘என்ன அவளுக்கு உதவி பண்ணி அவ மனசுல இடம் பிடிக்கணுமா!! நல்ல ஐடியாவா இருக்கே!!’ என்றுஎண்ணியவன்எழுந்து பிரணவின் அறைக்கு செல்ல அங்கு பிரணவ் அவள் மனதில் இடம் பிடிப்பதற்கான ஆயத்தங்கள் தான் தெரிந்தது அவனுக்கு.
‘அய்யோ இவனே எல்லாம் பண்றான்… அப்புறம் நான் ஒருத்தன் இங்க எதுக்கு இருக்கேன்…’ என்று மனதிற்குள்ளாக குமைந்தான் கணேஷ்.
கணேஷின் அலுவலகத்தை பொறுத்தவரை கணேஷ் மிக அமைதியானவன். எதையும் நிதானமாய் யோசித்து செய்பவன் என்று தான் அனைவரும் நினைத்திருந்தனர்.
அவனுமே அலுவலகத்தில் தன்னை அப்படித்தான் காட்டிக்கொண்டான். சொற்பமாய் வெகு சிலருக்கு தான் அவன் குணம் தெரியும்.
அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கும் சென்று அவர்களை ஒன்றுமில்லாமல் செய்வான் என்று.
பிரணவ் தன்னையுமறியாமல் கணேஷிற்கு அப்படி ஒரு சந்தர்ப்பத்தை தான் வழங்கியிருந்தான்.
மனோவின் உடன் சென்றதில் இருந்து அவளுக்கு அவள் தந்தையின் இறுதி காரியம் வரை அவளுடன் நின்றதில் கணேஷ் அதிகமாய் காய்ந்து போயிருந்தான்.
அந்த கோபமும் வன்மமும் மனதில் தேக்கி வைத்திருந்தவன் பிரணவ் விடுமுறை முடிந்து திரும்பி வருவதற்குள் அவனுக்கு ஆப்பை தயார் செய்து வைத்திருந்தான்.
பிரணவ் வேலை விஷயத்தில் எப்போதும் சரியாக இருப்பவன்.
எந்த வேலைக்கும் டார்கெட் தேதி என்று ஒன்றை கொடுத்திருந்தால் அவன் குழுவினர் இரண்டு நாட்கள் முன்னதாகவேஅந்த தேதியை டார்கெட்டாக வைத்து தான் வேலையை முடிப்பர்.
கணேஷின் மெயிலை பார்த்த பிரணவ் அதற்காக பெரிதாய் ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக அவன் வேலையை குறித்த தேதியில் முடித்தது கணேஷிற்கு ஏமாற்றமே!!
பிரணவ் தன்னிடம் பேச வேண்டும் என்று வந்த போது மனதில் இருந்ததை அப்படியே கேட்டும் விட்டான்.
அப்போது கூட மனதில் ஓர் எண்ணம் மனோவின் தந்தை தான் இப்போது இல்லையே!! அவளை எப்படி தன் வயப்படுத்தலாம் என்று அவன் யோசனை சென்றது.
அப்போது தான் மனோபாரதி அவள் அத்தை நளினி மற்றும் அவரின் மகன் கார்த்திக்கின் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிந்தது அவனுக்கு.
கார்த்திக்கை ஒரு நாள் நேரில் பார்த்து அவனுக்கு பணம் கொடுத்து தன் வழிக்கு கொண்டு வந்திருந்தான்.
கார்த்திக்கும் கணேஷிடம் பணம் வாங்கிக் கொண்டு அவனை ஏமாற்றவே எண்ணியிருந்தான். இந்த உலகத்தில் எத்தன் ஒருவன் இருந்தால் எத்தனுக்கு எத்தன் என்று ஒருவன் இருப்பான் தானே!!கார்த்திக் அப்படி ரகம் தான்.
அவனுக்கு பணம் வேண்டும் தான் பெரிய அளவில் எல்லாம் அவன் ஆசை எப்போதும் கிடையாது.
மனோவை திருமணம் செய்தால் அவள் சொத்து தனக்கு வந்து சேரும் அதை கட்டி ஆளவேண்டும் என்ற ஆசை தான் அவனுக்கு எப்போதும்.
பணமிருந்தால்அவன் ஊரில் அவனுக்கு இருக்கும் கெட்ட பெயர் எல்லாம் மறைந்துவிடும் என்ற எண்ணமும் உண்டு அவனுக்கு.
அந்த ஊரில் இருக்கும் மனோவின் வீடு இனி தன் வீடாகும் அவள் சொத்துக்கள் அவன் சொத்தாகும் என்ற அதீத கற்பனை அவனுக்கு.
இந்த காரணங்களுக்காகவே அவன் கணேஷை பகைத்துக் கொள்ளவில்லை. தான் அவனுக்கு உதவி செய்யவில்லை என்றால் அவன் வேறு வழியில் முயற்சி செய்வான் என்பது அவன் எண்ணம்.
அதனாலேயே அவனிடத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு அவனுக்கு உதவுவது போல நடித்தவன் மனோவை அடைந்துவிட முயற்சிகள் எடுத்தான். நளினியிடம்சொல்லி ரகசியமாய் திருமண முயற்சிகள் எடுத்தான்.
இதையறியாத கணேஷோ தந்தையை இனி தன் விஷயத்தில் தலையிடக் கூடாதென்று சொல்லியிருக்க ஸ்ரீதரனும் மனோ விஷயத்தில் மேற்கொண்டு எந்த முயற்சியும் செய்யவில்லை.
மனோவிடம் தானும் தன் தாயும் பேசி கரைத்துக் கொண்டிருப்பதாகவும் அவளை மாற்றி விரைவில் கணேஷிற்கும் அவளுக்கும் திருமண ஏற்பாடு செய்யப் போவதாக வேறு சொல்லி கார்த்திக் கணேஷை நம்ப வைத்திருந்தான்.
போதாததிற்கு மனோவின் கைபேசி வேறு அவன் வசம் தானே. மனோவே அனுப்புவது போல் சில பல மெசேஜ்களை கணேஷிற்கு அனுப்ப அவன் கார்த்திக்கை முற்றிலும் நம்பத் தொடங்கினான்.
அதன் பின் ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்த மனோ கணேஷை விடுத்து பிரணவின் அறையை நோக்கி சென்ற போது அவனுக்குஅவ்வளவு கோபம் வந்தது.
உடனே கார்த்திக்கிற்கு அழைத்தவன் கண்டபடி திட்ட கார்த்திக்கோவேலையை விடுவதற்காக எழுதிக் கொடுக்க வந்திருக்கிறோம் என்றவன் தானும் உடன் வந்திருப்பதாகவும் வெளியில் அமர்ந்திருப்பதாகவும் கூறியிருக்க கணேஷ் அதை உறுதிப்படுத்திக்கொள்ள வெளியில் வந்து பார்த்தும் சென்றான்.
அப்போதும் அவன் கார்த்திக் சொன்னதை நம்பினான்.கணேஷ் முற்றிலும் எதிர்பாராதது பிரணவ் மனோவை திருமணம் செய்திருப்பான் என்பதை.
கணேஷிற்கு ஓரளவிற்கு தெரியும் கார்த்திக்கிற்கு மனோவை கட்டிக்கொள்ள விருப்பமென்று. அந்த விருப்பம் கூட பணத்திற்காக என்பதை அறிந்திருந்தவன் தான் அவன்.
அதனாலேயே பணத்தை காட்டித் தான் கார்த்திக்கை தன் வசம் இழுத்திருந்தான். பிரணவை பற்றி கார்த்திக்கிடம் அரைகுறையாய் தெரிவித்திருந்தவன் அவன் அழைப்பை ஏற்காமல் செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தான்.
கார்த்திக்கும் அதனாலேயே மனோவின் கைபேசியை பிடுங்கி தன்னிடம் வைத்துக் கொண்டிருந்தான்.
சில நாட்கள் கழித்து ஓர் நாள் பிரணவும் மனோவும் ஒன்றாய் அவன் அறைக்குள் நுழைவதை பார்த்ததுமே எழுந்துசென்று பிரணவின் சட்டையை பிடிக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.
அவன் கோபத்தை தனக்குள் புதைத்துக் கொண்ட போதும் அகம் காட்டும் பளிங்கான முகம் அவன் முகத்தில் அதை காட்டிக் கொடுத்தது.
அதை பிரணவ் மட்டுமே அறிவான். மனோவிற்கு தனக்கு பின்னால் நடந்து கொண்டிருக்கும் விஷயம் தெரியாததால் அவள் இயல்பால் இருந்தாள்.
இருவரும் அருகே நெருங்கி வரவும் தான் அவள் கழுத்தில் இருந்த புதுத்தாலி அவன் கண்ணை உறுத்திற்று.
‘இது எப்படி சாத்தியம்!! நடந்திருக்க முடியாதே!! நடந்திருக்க கூடாதே!! கார்த்திக் விட்டிருக்க மாட்டானே!!’ என்று பல கேள்வியும் பதிலுமாய் மனம் உள்ளுக்குள் பேசிக் கொண்டிருக்க பிரணவ் எதையோ சொன்னது காதில் அறைகுறையாய் விழுந்தது.
உள்ளுக்குள் இருந்த கோபத்தில் அவனும் விடாமல்“ஏன் அதை அவங்க சொல்லமாட்டாங்களா” என்று கேட்டிருக்க கடைசியில் மனோ அதற்கு சொன்ன பதிலை கேட்டு இடிந்து தான் போனான்.
“சாரி சார் உங்களுக்கு சரியா காது கேட்காதுன்னு எனக்கு தெரியாது. அதான் எனக்கு பதில் என்னோட ஹஸ்பண்ட் பதில் சொல்லிட்டார்” என்று அவள் போட்ட போடில் கணேஷ் மௌனமாகிப் போனான்.
‘தோற்றுவிட்டோமா!! கடைசியில் தான் இவனிடம் தோற்றுவிட்டோமா!!’ என்று எண்ணியவனின் பார்வை பிரணவை அப்பட்டமாய் குற்றம் சாட்டி கூறுபோட்டது.
பிரணவ் அவன் பார்வைக்கு பெரிதாய் ரியாக்ட்செய்யாமல் செல்ல கணேஷிற்கு கோபம் தலை வரை ஏறியது.
பார்த்து பார்த்து திட்டம் போட்டு செய்தது எல்லாம் வீணாகி போனதில் அவன் எண்ணங்கள் குரூரமாக யோசிக்கத் தொடங்கியது என்று… அடுத்தவன் கட்டிய பெண்ணை நினைக்கும் ரகமல்ல அவன்…
மனோவின் மேல் அவனுக்கிருந்த எண்ணமெல்லாம் அந்த நொடியில் தவிடு பொடியானது. பொண்ணை தான் விட்டாயிற்று தந்தைக்காகவாவது அந்த மண்ணை விடக்கூடாது என்று உத்வேகம் பிறந்து அவனுக்குள்…
உண்மையிலேயே கணேஷ் மனோபாரதியை கண்டதுமே காதல் கொண்டிருந்தான். அவன் காதலில் உண்மையாகத்தான்இருந்தான்.
அன்று மட்டும் அவன் ஒரு வேளை குடிக்காதிருந்து தன் காதலை அவளிடத்தில் வெளிப்படுத்தியிருந்தால் அவள் சரியென்றிருப்பாளோ என்றொரு எண்ணம் அவனுக்கு எப்போதுமே உண்டு.
பிரணவ் தான் இருவரையும் பிரித்துவிட்டதாக இன்றுவரையிலும் அவன் எண்ணிக் கொண்டிருக்கிறான்.
அதன்பின் அலுவலத்தில் அவர்கள் இருவரையும் ஒன்றாய்காணும் போதெல்லாம் அவன் கோபம் நீருபூத்த நெருப்பாய் மாறி அவன் உள்ளம் கொலைக்கலமாகிக் கொண்டிருந்தது….