அத்தியாயம் –21
வீட்டில் யாருமில்லாததில் வெகு குஷியாய் இருந்த பிரணவ் சமையலறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்த மனைவியின் பின்னால் சென்று அவளை அணைத்துக் கொண்டான்.
“ஹ்ம்ம் ஆரம்பிச்சுட்டீங்களா!! பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாடுன மாதிரி இருக்கு!!” என்று நொடித்தாள் அவன் மனைவி..
“அடியேய் யாரை பார்த்து கிழவன்னு சொல்லுற, என்னை பார்த்தா அப்படியா இருக்கு…”
“உங்க பிள்ளையை மாமா கூட அனுப்பிட்டு நீங்க இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்களாம். அதை தான் சொன்னேன்“
“அஜிகுட்டி அப்பா அம்மா டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு தெரிஞ்சிருக்கு அதான் தாத்தா பாட்டி கூட வெளிய கிளம்பிட்டான்…”
“ரதிம்மா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் கொஞ்சம் வாயேன்…”
“ஏங்க சமைக்க வேண்டாமா!! சமைச்சுட்டு வந்திடறேனே நம்ம ரெண்டு பேருக்கு தானே… மாமாவும் அக்காவும் லேட் ஆகும்ன்னு வர்ற வழியில சாப்பிட்டுக்கறேன்னு சொல்லிட்டாங்க“
“அம்மா செஞ்சுட்டு போறேன்னு சொன்னதை தடுத்து அவங்களை அனுப்பி வைச்சிருக்கேன்… நீங்க என்னை தொல்லை பண்ணிட்டு இருக்கீங்க“
“இப்போ என்ன உனக்கு சமையல் முடிக்கணும் அவ்வளோ தானே… இரு நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்” என்றவன் அவள் பின்னிருந்து இடையை வளைத்துக் கொண்டு கத்தியை வைத்து வேகமாய் காய்கறிகளை நறுக்கினான்.
அவளை சீண்டிக் கொண்டும் தானிருந்தான். “இந்தா எப்படி கட் பண்ணேன் பார்த்தியா” என்று காலரை தூக்கியவன் அவள் சமைத்து முடிக்க ஆவன செய்து அவளை கையோடு இழுத்துச் சென்றான்.
“ஹப்பா… இதுக்கு இப்படி பரபரக்குறீங்க… அப்படி என்ன முக்கியமான விஷயம் சொல்லப் போறீங்க“
“இந்தா…” என்று சொல்லி அவன் எதையோ நீட்ட அசுவாரசியமாய் அதை வாங்கிப் பார்த்தவளுக்கு சற்று திகைப்பு தான். அவன் அதிர்ச்சியாய் பார்த்து “என்னங்க இதெல்லாம்” என்றாள் அந்த ஐடி கார்டை திருப்பி பார்த்தவாறே.
“நீங்க சிபிஐல இருக்கீங்களா!! ஏன் என்கிட்ட சொல்லலை“
“உன்கிட்ட முன்னாடியே சொல்லலைன்னு நினைக்காத… இதுல நெறைய டிபிகல்டிஸ் இருக்கும்மா, என் வேலையால உங்களுக்கு எதுவும் தொல்லை வரக்கூடாது அதெல்லாம் தான் காரணம் நான் முதல்லயே உன்கிட்ட சொல்லாததுக்கு…”
“உன்கிட்ட சொல்லாம என்னால இருக்க முடியலை அதான் இப்போ சொல்லிட்டேன்டா… நான் ஊருக்கு போனதும் டிரைனிங் அது இதுன்னு கொஞ்சம் இருந்திட்டேன்… இப்போ தான் நார்மலா போய்ட்டு இருக்கு. அதான் உன்கிட்ட சொல்லிட்டேன்”
“இந்த விஷயம் வேற யாருக்குமே தெரியாது ரதிம்மா… அவங்க எல்லாரும் நான் ஐடில வேலை பார்க்கறேன்னு நினைச்சுட்டு இருக்காங்க… நீயும் அதையே மெயின்டெயின் பண்ணிக்கோ“
“நான் சொல்ல மாட்டேன், ஆனா நீங்க இதை என்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கலாம்“
“சொல்லியிருக்கலாம் தான் ரதிம்மா ஆனா என்னோட வேலை அப்படி நான் ரகசியமா தான் வேலை பார்க்கறேன். கிரைம்ல இருக்கேன்டா நானு, ப்ளீஸ்ம்மா புரிஞ்சுக்கோ“
“ஹம்ம் சரி விடுங்க…” என்று அப்போதைக்கு அந்த பேச்சை விட்டாலும் அவள் மனதில் ஒரு ஓரத்தில் ‘இவன் முன்னமே சொல்லியிருக்கலாம்‘ என்று பதிந்து போனது.
அவ்வப்போது மனதை திறந்து கொட்டிவிட்டால் அதிக அழுத்தம் இருக்காது. மனோ சில விஷயங்களை தனக்குள்ளாக தேக்கி தேக்கி அழுத்தம் அதிகம் கொடுத்த பலூனை போல வெடிக்க போகிறாள் என்பதை அவனும் அறியவில்லை அவளுமே அறியவில்லை.
“ரதிம்மா நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வந்திடறேன்… ஒரு முக்கியமான வேலை…” என்றுவிட்டு அவன் கிளம்பினான்.
“நான் மட்டும் தனியா இருக்கணுமா!! நானும் வர்றேன்!!”
“நான் முடிவெட்ட போறேன், நீயும் வர்றியா” என்று சிரித்தான்.
“சரி போயிட்டு வாங்க…”
“சீக்கிரமே வந்திடறேன்…” என்றுவிட்டு அவன் கிளம்பிச் சென்றுவிட்டான்.
பொழுது போகாமல் வீட்டை சுற்றி வந்தாள் மனோ. அவள் கண்ணில் கண்ணாடி கப்போர்ட்டில் இருந்த போட்டோ பிரேம்கள் பட அருகே சென்று அதையெல்லாம் சுவாரசியமாய் பார்த்தாள்.
எல்லா போட்டோவிலும் பிரணவ் இருந்தான். சிறு வயது பிரணவ் பார்க்கவே வித்தியாசமாய் இருந்தது அவளுக்கு. ஒல்லியாய் உயரமாய் கன்னம் ஒட்டிப்போய் ஆனால் வசீகரமாய் தானிருந்தான்.
அவள் பார்வை கீழே மூடியிருந்த கப்போர்ட்டை தள்ளிப்பார்க்க அங்கு திருமண ஆல்பம் போல் இருக்க பிரகாஷ் மோனாவின் திருமண புகைப்படமாய் இருக்கும் என்று எண்ணி எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
எல்லா புகைப்படத்திலும் அவள் பிரணவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். ‘அவர் வரட்டும் வீட்டுக்கு நல்லா கிண்டல் பண்ணணும்’ என்று மனதிற்குள்ளாக நினைத்துக் கொண்டாள்.
வேறு சில ஆல்பங்களும் இருக்க அதையும் புரட்டிக் கொண்டிருந்தாள். வீடு பால் காய்ச்சிய போது எடுத்த படம், டூருக்கு சென்ற போது எடுத்த புகைப்படம் என்று எல்லாவற்றிலும் அவள் கணவனின் பங்கு இருந்ததை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அடுத்து இருந்த சின்ன ஆல்பத்தை பிரித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் பிரணவ் குடும்பத்தினர் இருந்தனர். அது அவர்களின் குடும்ப புகைப்படம் போலும்.
ஒரு முறை பிரணவ் கூட அந்த புகைப்படத்தை தனக்கு காட்டியதாய் ஞாபகம் அவளுக்கு. இடையில் அவன் தமக்கையின் திருமண போட்டோவும் இருந்தது.
நிச்சயம் அது அவன் படித்துக் கொண்டிருக்கும் போது எடுத்தாய் இருக்க வேண்டும்… முடியை நீளமாய் வளர்த்திருந்தான் அதில். கண்கள் பக்கங்களை புரட்டிக்கொண்டிருக்க அடுத்த பக்கத்தை வேகமாய் புரட்டியவளுக்கு ஏதோ நெருட மீண்டும் முதல் பக்கத்திற்கு வந்தாள்.
அதை பார்த்தவளின் கண்கள் பார்த்தபடியே தான் இருந்தது. காரணம் அதில் பிரணவ் சரவணனின் அருகில் நின்றிருந்தான். அது அவனின் இரண்டாவது தமக்கை சசியின் திருமண வைபோகம் என்று புரிந்தது.
எல்லா புகைப்படத்திலும் பிரணவை பார்த்துக் கொண்டிருந்தவள் அதை வேகமாய் திருப்பிவிட்டிருந்தாள். நிறுத்தி நிதானமாய் பார்க்கும் போது தான் தெரிந்தது அவளுக்கு.
கண்கள் அந்த புகைப்படத்தின் மேலேயே நிலைக்கொண்டிருந்தது. கண்மணிகள் இப்படியும் அப்படியும் கூட அசையவில்லை. தான் என்ன உணர்கிறோம் அந்த நிமிடம் என்றும் அவளுக்கு புரியவில்லை.
சட்டென்று ஒரு வலி உடலெங்கும் பாய்வது மட்டும் அவளுக்கு புரிவதாய். தான் எங்கோ ஏமாந்துவிட்டோம் என்று எண்ணினாள். நடந்த ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரணம் தானாய் கை கால் வைத்து முளைத்துக் கொண்டிருந்தது அவள் மனதில்.
கடைசியாக அவள் தமக்கையின் திருமணத்தை காக்கும் பொருட்டே அவன் தன்னை மணந்திருக்கிறான் என்று மனது உறுதியாய் நம்பத் தொடங்கவும் கையில் இருந்த ஆல்பத்தை உதறினாள்.
கண்மண் தெரியாத கோபமொன்று எழுந்தது. அவளை தொட்டாலே பொசுங்கி விட்டிருப்பர் யாராகினும் அவ்வளவு கனல் அவள் கண்களில்.
பிரணவின் வருகைக்காய் காத்திருக்க ஆரம்பித்தாள். சிதறிக் கிடந்தவற்றை எடுத்து வைக்கக் கூட அவளுக்கு தோன்றவில்லை அப்படியே சிலையாய் அமர்ந்திருந்தாள்.
வெளியில் சென்றிருந்த பிரணவ் அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தான் வரவேற்பறையின் ஓரமாய் அமர்ந்திருந்தவளை அவன் கவனிக்கவில்லை.
‘எங்க போய்ட்டா ஆளைக்காணோம்‘ என்று எண்ணிக்கொண்டு படியேறியவன் குளித்து முடித்து தான் கீழிறங்கினான். தலையை துவட்டிக்கொண்டே வந்தவன் “ரதி… ரதிம்மா” என்று அழைத்தான்.
பதிலே இல்லாது போகவும் “ரதி…” என்று சத்தமாய் அழைத்தான். அங்குமிங்கும் பார்வையை சுழற்றிக் கொண்டு வந்தவன் மனைவி தரையில் அமர்ந்திருப்பதை பார்த்தான்.
அவளைச் சுற்றி இறைந்து கிடந்த ஆல்பத்தை ஒதுக்கி “என்னாச்சு ரதி… இங்க உட்கார்ந்து என்ன பண்ணிட்டு இருக்க, ஆல்பம் பார்த்திட்டு இருந்தியா” என்றவன் பேசிக்கொண்டே அவளருகில் அமர்ந்திருந்தான்.
மெதுவாய் அவனை நிமிர்த்து பார்த்தாள் அவள். கையில் எதையோ எடுத்தவள் “இது…” என்று அவனிடம் நீட்டினாள். அவள் கொடுத்ததை கையில் வாங்கியதுமே அவனுக்கு புரிந்து போனது அவளுக்கு விஷயம் தெரிந்துவிட்டது என்று.
“ஏன் மறைச்சீங்க??”
“ரதிம்மா நான் மறைக்கணும்ன்னு நினைக்கலைடா… தெரிஞ்சா நீ வருத்தப்படுவன்னு தான் நான் சொல்லலை”
“என்னை பார்த்தா அவ்வளவு ஏமாளியாவா இருக்கு உங்களுக்கு. யாரு வேணா என் வாழ்க்கையை கையில எடுத்துக்கலாம்ன்னு நினைச்சு ஆளாளுக்கு என்னை வைச்சு பந்தாடிட்டீங்கள்ள”
“உங்களுக்கும் எங்க அத்தை பையனுக்கும் ஏன் உங்க மாமா அந்த சரவணனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எல்லாரும் ஒட்டுமொத்தமா என்னை ஏமாத்த தான் பார்த்திருக்கீங்க“
“உங்க அக்கா வாழ்க்கையை காப்பாத்த என்னோட வாழ்க்கையை பலி கொடுத்திட்டீங்க“
“ரதி நீ என்ன பேசறன்னு புரிஞ்சு தான் பேசறியா… ஏன் இப்படி பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசற… நாம சந்தோசமா தானே இருக்கோம்…”
“சந்தோசமா இருக்கோமா…. அதெல்லாம் எதுக்கு உங்க அக்கா வாழ்க்கையை காப்பாத்துறதுக்கு அப்படி தானே“
“கொடைக்கானல்ல வைச்சு என் கையை பிடிச்சு இழுத்தான் அந்த பொறுக்கி. அப்போ கூட நீங்க உண்மையை சொல்லலை. அப்போ நான் போலீஸ்ல அவனை மாட்டிவிட்டேன்னு சொன்னதும் அவசரமா இறங்கி போனீங்களே அது உங்க மாமாவை காப்பாத்தா தானா” என்று அவனையே ஆராய்ச்சியாய் நோக்கிக் கொண்டு கேட்டாள்.
பிரணவ் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். அவள் சொன்னது உண்மை தான் கொடைக்கானலில் அவன் சரவணனை போலீஸிடம் இருந்து விடுவித்துவிட்டு தான் வந்திருந்தான்.
“அது வந்து ரதிம்ம்மா…”
“தயவுசெய்து அப்படி கூப்பிடாதீங்க… எனக்கு எரிச்சலா இருக்கு“
“அப்போ அன்னைக்கு நீங்க அதை தான் செஞ்சிருக்கீங்க…”
“இல்லைம்மா நான் சொல்றதை கேளேன்“
“என்ன கேட்கணும்!! இல்லை என்ன கேட்கணும்ன்னு சொல்றீங்க… ஆரம்பத்துல இருந்தே நீங்க திட்டம் போட்டு தான் எல்லாம் செஞ்சிருக்கீங்க”
“எல்லாமே என்கிட்ட இருந்து மறைச்சிருக்கீங்க… உங்க அக்கா வாழ்க்கை பத்தி என்கிட்ட நீங்க சொல்லியிருந்தா நான் என் வழியை பார்த்து போயிருப்பேன்ல”
“நான் என்ன யாரு கிடைப்பான்னு காத்திட்டு இருந்தேனா என்ன… கடைசில உங்க சுயநலத்துக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க… போனா போகுதுன்னு எனக்கு வாழ்க்கை கொடுத்தீங்களா இல்லை பிராயசித்தம் பண்ண நினைச்சீங்களா“
“இல்லை உங்க மாமா மாதிரி கார்த்திகேயன் மாதிரி என்னோட சொத்துக்காகவா…” என்று ஒவ்வொரு வார்த்தையும் ஊசியாய் குத்தி குத்தி இறக்கினாள்.
“ப்ளீஸ் ரதிம்மா… நீ ரொம்ப அதிகமா யோசிக்கற… நான் பேச வர்றதை கொஞ்சம் காது கொடுத்து கேளு“
“இப்போ என்ன பூ சுத்தலாம்ன்னு நினைக்கறீங்க… நான் ஏன் நீங்க சொல்றதை கேட்கணும்“
“கேட்க முடியாது… நீங்க சொன்னது கேட்டு தான் கொஞ்சம் கூட யோசிக்காம உங்களுக்கு கழுத்தை நீட்டினேன்…”
“ஆனா நீங்க… நீங்க என்னை ஏமாத்திட்டீங்க… எத்தனை முறை கேட்டிருப்பேன் உங்க வீட்டுக்கு போகலாம்ன்னு ஒரு முறை ஒரு முறை கூட்டிட்டு போனீங்களா“
“உங்க பெரியப்பா வீட்டுக்கு கூட்டிட்டு வர தெரிஞ்ச உங்களுக்கு என்னை உங்க வீட்டுக்கு மட்டும் கூட்டிட்டு போக தெரியாது. இதை நான் நம்பணும்”
“ஆனா நான் நீங்க சொன்னது எல்லாம் நம்பியிருக்கனே… எவ்வளவு முட்டாளா நான் இருந்திருக்கேன்ல என்னை எவ்வளவு முட்டாள்ன்னு நீங்க நினைச்சிருப்பீங்கள்ள”
“அவ்வளவு ஏன் உங்க கூட எங்களை கூட்டிட்டு போய் வைச்சுக்கணும்ன்னு கூட உங்களுக்கு தோணலைல. அப்படி என்னங்க நாங்க பண்ணிட்டோம்“
“ப்ராயசித்தம்ன்னே வைச்சுகிட்டா கூட நீங்க என்னை மனைவியா எப்போங்க நினைச்சீங்க… உங்களால என்னை கூடவே கூட்டிட்டு போய் வைச்சுக்க முடியாதுன்னு மட்டும் என்கிட்ட பொய் சொல்லாதீங்க நான் நம்ப மாட்டேன்“
“உங்க பிரண்டு ராகவ் உங்க கூட தானே இருக்கார்ன்னு சொன்னீங்க… அவரு அவரோட மனைவியோட தானே அங்க இருந்தாரு… ஆனா நீங்க மட்டும் என்னை ஏன்… ஏன் என்னை தனியா விட்டீங்க” என்று அடிக்குரலில் கத்தினாள்.
சாதாரணமான வார்த்தைகளை கூட அவள் அனர்த்தமாய் எடுத்துக்கொண்டு எல்லாவற்றையும் குத்தி குத்தி அவனை கிழித்துக் கொண்டிருந்தாள்.
அவள் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் தாரை தாரையாக வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்தும் வழி தெரியாது அவளை எப்படி சமாதானம் செய்யலாம் என்று யோசித்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவள் கணவன்.
“எத்தனை நாள் என்னை தனிமையில விட்டீங்க… அக்கம் பக்கம் ஏச்சு பேச்சென்ன… என் காதுபட அவமானமா பேசினது எல்லாம் கேட்டு நான் உயிரோட தான் இருந்தேன்… உங்களை நம்புனதுனால…”
“இதுக்கு நீங்க என்னை கல்யாணம் பண்ணாம விட்டிருந்தா அன்னைக்கே நான் செத்து போயிருப்பேன்ல… இப்படி உயிரோட என்னை கொல்லாம இருந்திருக்கலாம்ல“
“ஒருவேளை நாங்க உங்களை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டேன்னு என்னை பழிவாங்க இப்படி செஞ்சீங்களா…”
“இங்க பாரு ரதி இப்படி எல்லாம் பேசாதம்மா… நான் சொல்றதை கொஞ்சம் கேளும்மா… இப்படி வார்த்தையால என்னை கொல்லாத”
“என்னது நான் கொல்றனா நீங்க தாங்க என்னை கொன்னுட்டீங்க… கடைசில நீங்களும் ரொம்ப சாதாரணமாவர்ன்னு நிருபிச்சிட்டீங்க”
“உண்மை புரியாம பேசாத ரதி… உங்கப்பா…”
“எங்கப்பாவா அவரை பத்தி நீங்க ஏன் பேசுறீங்க… அவரை பத்தி பேச உங்களுக்கு தகுதியே இல்லை. அவர் கால் தூசுக்கு சமானம் நீங்க… அவரை பத்தி நீங்க எதுவும் பேசுனீங்க என்னை கொலைகாரியா பார்க்க வேண்டி இருக்கும்” என்று கத்தினாள்.
“சரி நீ நான் சொல்றதை கேட்க மாட்டே… அப்போ நான் என்ன தான் பண்ணணும்ன்னு சொல்லு” என்றான்
“இவ்வளவு பண்ண உங்களுக்கு அது தெரியாதா நான் தான் எல்லாமே சொல்லி தரணுமா… இல்லை நீங்க பண்ணது எல்லாம் நான் சொல்லிக் கொடுத்து பண்ணது தானா என்ன!!” என்று வார்த்தைக்கு வார்த்தை பேசினாள்.
“சத்தியமா எனக்கு புரியலை ரதி… உனக்கு எப்படி புரிய வைக்கன்னு எனக்கு தெரியலை. நீ என்னை பேசவே விட மாட்டேங்குற“
“எதுக்கு பேசணும்… நீங்க பேசி பேசி நான் அதை கேட்டு கேட்டு நாசமா போனது எல்லாம் போதும். எனக்கு இனிமே நீங்க வேண்டாம். வேண்டவே வேண்டாம்…”
“நான் உங்க முகத்துல கூட முழிக்க விரும்பலை.. எனக்கு இப்போவே ஊருக்கு போகணும்…” என்றுவிட்டு அவனை திரும்பியும் பாராமல் படியேறி சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
பிரணவிற்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. ஒன்றுமே ஓடவில்லை அவனுக்கு… கீழே சிதறிக் கிடந்த ஆல்பத்தை ஒன்று திரட்டி திறந்திருந்த கப்போர்ட்டில் வைத்தான்.
கொஞ்சம் தனிமையில் இருந்தால் அவள் சற்று சமாதானம் ஆவாள் என்று எண்ணி அவனும் பேசாமல் அங்கிருந்த சோபாவில் சாய்ந்தான்.
கடிகார மணி இரண்டு முறை அடித்து ஓயும் போது தான் அவனுக்கு உணர்வு வந்தது போலும். எழுந்து அமர்ந்தவன் சாப்பிடாமல் இருக்கிறாளே என்று எண்ணி படியேறி சென்றான்.
அறைக்கதவு லேசாய் திறந்திருந்தது. உள்ளே சென்றவன் கட்டிலில் சோர்வாய் படுத்திருந்தவளின் அருகே சென்று “ரதிம்மா” என்றழைத்தான்.
“மணி இரண்டாச்சு வாம்மா ரதி சாப்பிடலாம்” என்று கூப்பிட நிமிர்ந்து அவனை பார்த்தாள் சற்றும் சலனமில்லாமல்.
“எப்படி உங்களால மட்டும் முடியுது… இங்க இவ்வளவு பிரச்சனை ஓடுது ஒரு வாய் சோறு நிம்மதியா இறங்குமா உங்களுக்கு… உங்களை மாதிரி ஒருத்தரை நான் பார்த்ததே இல்லைங்க” என்று சொல்லவும் பிரணவ் மொத்தமாய் நொறுங்கி போனான்.
‘நீ எல்லாம் ஏன் சாப்பிட்டு இன்னும் உயிரோட இருக்கேன்னு’ கேட்குற மாதிரி இருந்தது அவனுக்கு.
அவள் பேச்சில் ஆத்திரம் அவனுக்கு தலைக்கு ஏறினாலும் அதை அவளிடத்தில் அவன் காட்டவில்லை. வேகமாய் திரும்பியவன் அவன் கோவத்தை கதவின் மீது காட்டி இழுத்து அறைந்து சென்றான்.
எவ்வளவு நேரம் போனதோ தெரியவில்லை. மரகதம் மாடிக்கு வந்து அவளை அழைக்கும் வரை அவள் அப்படியே தான் அமர்ந்திருந்தாள்.
“என்னாச்சும் உடம்பு எதுவும் சரியில்லையா!! சாப்பிடாமலே இருக்கியே. என்னடா” என்று அவர் பரிவாக கேட்டதில் அழுகை வெடித்து வந்தது அவளுக்கு.
“உங்க மடியில படுத்துக்கட்டும்மாம்மா” என்று கேட்க அவர் சட்டென்று அவளை மடி தாங்கினார்.
“என்னாச்சும்மா” என்றார்.
அதற்குள் சுதாரித்தவள் “ஒண்ணும்மில்லைம்மா அம்மா ஞாபகம் வந்திடுச்சு” என்றாள்.
“பிரணவ் எங்கம்மா போய்ட்டான்…”
அவளுக்கு அதற்கு பதில் தெரியாதே, அவன் எங்கே போனான் என்று சொல்லிவிட்டா சென்றான். ஆனால் எங்கே சென்றிருப்பான் என்று மனம் நினைக்காமலில்லை.
நாம் பேசியதால் ரோஷம் வந்துவிட்டதா!! வந்தால் வரட்டும் அப்படியாவது நான் பேசியது அவருக்கு புரியட்டும்!!’ என்று மனம் இருவேறாக நின்று பதில் சொல்லிக் கொண்டிருந்தது.
அவள் பதில் சொல்லுமுன்னே படியேறி மாடிக்கு வந்திருந்தான் அவன். “இங்க தான் இருக்கீங்களா” என்றவன் “ஊருக்கு நைட் கிளம்ப டிக்கெட் போட போயிருந்தேன் பெரிம்மா… கொஞ்ச நேரத்துல கிளம்பணும்”
“மதுரையில இருந்து நைட் பிளைட் எங்களுக்கு… இங்க இருந்து இப்போ கிளம்பினா தான் மதுரை போக சரியா இருக்கும்…” என்று பெரியம்மாவை பார்த்து சொன்னவன் “கிளம்பலாம்” என்று ஒற்றை சொல்லை அவளை நோக்கி வீசிவிட்டு திரும்பினான்.
“டேய் என்னடா நினைச்சுட்டு இருக்க உன் மனசுல வந்த நீ பாட்டுக்கு கிளம்புற… ஒரு வாரம் இருப்பேன்னு தானே சொல்லியிருந்த” என்று கேட்டார் மரகதம்.
“அது… அது வந்து ஒரு முக்கியமான ஆபீஸ் வேலை நான் போய் ஆகணும் ப்ளீஸ் பெரிம்மா நாங்க கிளம்பறோம். கண்டிப்பா இன்னொரு முறை வர்றோம் சரியா”
“என்னமோ போ எனக்கு நீ பண்றது பிடிக்கலை. அப்படி என்ன ஆபீஸ் வேலையோ, உங்க பெரியப்பாகிட்ட சொன்னியா… அவர் உன்னை எதுவும் திட்டலையா“
“ஹ்ம்ம் சொல்லிட்டேன்… திட்ட தான் செஞ்சார் அவரை சமாதானம் செஞ்சிட்டேன்“
“சரி நான் கீழ போறேன், நீங்க சீக்கிரம் கிளம்பி வாங்க” என்றுவிட்டு அவர் இறங்கிச் சென்றுவிட்டார்.
மனோபாரதி அசையாமல் கட்டிலில் அமர்ந்திருந்தாள். “நான் பெரியம்மாகிட்ட சொன்னது உனக்கு புரிஞ்சுது தானே“
“உங்க பெரியம்மாகிட்ட தானே சொன்னீங்க என்கிட்ட எதுவும் சொன்னீங்களா!!”
“உனக்கு தனியா வேற சொல்லணுமா… நீ தானே கேட்டே ஊருக்கு போகணும்ன்னு டிக்கெட் போட்டாச்சு. கிளம்புவோம், இங்க இருந்து எல்லார்க்கும் நம்மோட சண்டையை காமிச்சுட்டு இருக்க வேணாம்ன்னு நான் நினைக்கறேன்”
“ஓ அப்போ எனக்கு அது தான் வேலைன்னு சொல்றீங்களா!! நான் என்ன தண்டோரா போட்டு சொல்லிட்டு இருக்கேனா என்ன!!”
“வேணாம் ரதி தயவுசெய்து எதுவும் பேசாத… பேச்சுக்கு பேச்சு பேசினா வலிக்க போறது ரெண்டு பேருக்கும் தான்… விட்டிடு உனக்கென்ன என்னை குத்தி பேசணும் அவ்வளவு தானே“
“எனக்கு வலிக்கணும் அது தானே வேணும் உனக்கு. போதும் போதுங்கற அளவுக்கு உன் பேச்சு என்னை குத்தி கிழிச்சிருச்சு… இனிமே நீ பேசுறது எல்லாம் செத்த பாம்பை அடிக்கிற மாதிரி தான்“
“இல்லை நீ பேசியே தான் தீருவேன்னா நான் வேணும்ன்னா இங்கவே உட்கார்ந்துக்கறேன் நீ பேசு” என்று சொல்லிவிட்டு கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென்று கீழே அமர்ந்து கொண்டான்.
மனோவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை எதுவும் பேசாமல் கிளம்புவதற்கான ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்தாள். அபராஜித் இருவரையும் தேடிக் கொண்டு மெதுவாய் தத்தி தத்தி படியேறி வந்திருந்தான்.
“அப்ப…அப்பா… அப்ப்பா…” என்று மழலையில் அழைத்துக்கொண்டு வந்தவன் பிரணவிடம் செல்லப் போக அவனைத் தடுத்து கையில் தூக்கிக் கொண்டாள் மனோ.
“நான் ரெடி கிளம்பலாம்” என்று அவனிடம் சொல்லிவிட்டு பையை எடுத்துக்கொண்டு தன் போக்கில் கீழே இறங்கி சென்றும் விட்டாள். சற்று நேரத்தில் அவனும் இறங்கி வந்தான்.
“வந்து இப்படி ரெண்டு நாள்ல கிளம்புறியேடா… ஏன்டா மனோவும் அஜியும் இங்க விட்டு நீ மட்டும் போகலாம்ல” என்றார் அவன் பெரியப்பா.
“இல்லை பெரிப்பா அவங்களை கூட்டிட்டு போய் ஊர்ல விட்டுட்டு நான் அங்க இருந்து கிளம்பணும்… ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க” என்று அவர் முகத்தை பார்க்காமல் சொன்னான்.
என்ன நினைத்தாரோ அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. பிரகாஷும் மோனாவும் இன்னமும் மருத்துவமனையில் இருந்து வந்திருக்கவில்லை. ஸ்கேன் எடுக்க தாமதமாகி கொண்டிருப்பதாக போன் செய்திருந்தனர்.
பிரணவ் கிளம்புவதற்கு வண்டி சொல்லியிருக்க வாசலில் வண்டி வந்து நின்றது. “சரி கிளம்புறோம்” என்றுவிட்டு அவர்களிடம் ஒருவழியாய் விடைபெற்று வண்டியில் ஏறினர்.
மதுரை விமான நிலையம் வந்து இறங்கும் வரையிலும் கூட இருவருக்கும் இடையில் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. எவ்வளவு சந்தோசமாக கிளம்பினோம் இப்போது இப்படி இருக்கிறோமே என்று மனோவால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
மதியம் வேறு சாப்பிடவில்லை, அவளை மீண்டும் சாப்பிட சொல்லவும் அவனுக்கு பயமாக இருந்தது. மீண்டும் அதற்கு ஏதாவது குதர்க்கமாய் பேசிவிடுவாளோ என்று.
அஜியை வேறு அவனிடத்தில் கொடுக்காமல் போக்கு வேறு காட்டினாள். அவனால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. “அஜியை கொடு”
“முடியாது…”
“தேவையில்லாத பிடிவாதம் பிடிக்காத ரதி கொடு அவனை” என்றான். குழந்தையும் தந்தையிடம் செல்ல கையை நீட்டிக் கொண்டிருந்தான்.
“குழந்தையை ஏங்க வைக்காத ரதி கொடு அவனை…”
“இவன் என்னோட குழந்தை“
“அவன் எனக்கும் தான் குழந்தை, நானோ நீயோ இல்லாம அவன் வந்திடலை” என்றான்.
“சீய் எப்படி இப்படிலாம் உங்களால பேச முடியுது“
“ப்ளீஸ் ரதி என் பொறுமையை ரொம்ப சோதிக்காத, குழந்தையை என்கிட்ட கொடு. உன்கிட்ட வாங்க முடியாம எல்லாம் இல்லை. குழந்தை பயப்படுவான்னு தான் பேசாம இருக்கேன்“
“தேவையில்லாத சீன் எல்லாம் விட்டுட்டு அவனை கொடு“
“என்ன நான் சீன் போடுறனா உங்களுக்கு… அதெல்லாம் உங்களுக்கு தான் கைவந்த கலை. இப்போ கூட உங்க பெரியம்மா வீட்டுல நான் நிம்மதியா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலை“
“உங்களை ஆபீஸ்ல கூப்பிட்டாங்கன்னு உடனே என்னையும் கூட்டிட்டு கிளம்பிட்டீங்க… இதுல நான் சீன் போடுறேன்னு நீங்க பேசறீங்களா” என்று சொல்லவும் அவன் அதற்கு மேல் வாயை திறக்கவில்லை.
ஊருக்கு செல்ல வேண்டும் என்று சொல்லியது அவளே… இப்போது ஏன் அழைத்து செல்கிறாய் என்று குத்துவதும் அவளே… இதை சொன்னாலும் குத்துவாள் என்று பேசாமலே இருந்தான்.
அவள் தான் தொட்டதிற்கும் குத்தம் சொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டாளே… “என்ன உண்மையை சொன்னதும் பேச முடியலையா” என்று கிண்டலாக கேட்டாள்.
“ஆமா பேச முடியலை…” என்றவன் சட்டென்று அவளிடமிருந்து குழந்தையை தூக்கினான்.
“கொடுங்க அவனை!!” என்று சற்றே குரலுயர்த்திவிட்டாள் அவள். “ரதி போதும் நீ ரொம்ப அதிகமா பண்ணுற“
“இப்போ நீங்க அவனை கொடுக்கலைன்னா நான் இனி இந்த உலகத்திலேயே இருக்க மாட்டேன்… எங்க அம்மா அப்பா போன இடத்துக்கே போய்டுவேன்” என்றாள் ஆங்காரமாய்.
“ஏன்டி என்னை இப்படி சாவடிக்கற…” அதற்கு மேல் அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை குழந்தையை அவளிடத்தில் கொடுத்துவிட்டு தனித்து அமர்ந்து கொண்டான்.
விமானத்திற்காக அழைப்பு வந்தபின்னே எழுந்து வந்தான். அவன் பின்னேயே அவளும் எழுந்து சென்றாள். சென்னை விமான நிலையம் வந்து இறங்கும் வரை மீண்டும் அமைதியே அங்கு நிலவியது.
விமானநிலையத்தில் இருந்து வெளியில் வந்து வண்டியை பிடித்தான். “நீங்க எங்க வர்றீங்க” என்று சொன்னவளை சலனமில்லாமல் பார்த்தான்.
‘இன்னும் சொல்றதுக்கு என்ன இருக்கு‘ என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இவ்வளவு நாள் வராத நீங்க இன்னைக்கு திடிர்னு வந்தீங்கன்னா என்னமோ நீங்க என்னை வைச்சுட்டு இருக்கீங்கன்னு பேசுவாங்க” என்றாள்.
“சரி கிளம்புங்க…” என்றவன் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை. டிரைவரிடம் பணத்தை கொடுத்து “அவங்களை பார்த்து பத்திரமா இறக்கிவிட்டிருங்க அண்ணா” என்றுவிட்டு அவர் எண்ணை வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
வலி வலி பெரும் வலியாக இருந்தது அவனுக்கு. இவ்வளவு பேச்சுகள் கேட்டு தான் இன்னமும் நடமாடிக் கொண்டு தான் இருக்கிறோமா என்று அவனுக்கே ஆச்சரியம் தான்.
அத்தனை சொந்தங்கள் இருந்தும் தன்னந்தனியே யாருமில்லா காட்டுக்குள்ள இருந்தது போன்ற உணர்வு அவனுக்கு எழுந்தது.
யாருமே இல்லாமல் இருப்பது வேறு அனைவரும் இருந்தும் இல்லாதிருப்பது வேறு… அவனுக்கு டெல்லிக்கு மறுநாள் தான் பிளைட் எங்கு செல்வது என்று ஒன்றுமே புரியாமல் அப்படியே அமர்ந்துவிட்டான்.
அரைமணி நேரம் சென்றிருக்கும் நினைவு வந்தவனாய் அந்த டிரைவருக்கு போன் செய்தான். அவர்கள் வீட்டில் இறங்கி விட்டார்கள் என்ற தகவல் கேட்ட பின்னே தான் சற்று நிம்மதி வந்தது.
வழியில் சென்ற ஆட்டோவை பிடித்து கண்ணில் தென்பட்ட ஒரு ஹோட்டலில் இறங்கிக்கொண்டான். ஒரு நாளைக்கு அறையை புக் செய்தவன் கட்டிலில் வந்து விழுந்தான்.
பசி வயிற்றை கிள்ளியது, ஆனால் சாப்பிட தோன்றவில்லை அவனுக்கு.உடலின் ஒவ்வொரு செல்லும் ரணம் ரணமாய் வலிப்பது போல் இருந்தது அவனுக்கு. கண்கள் சோர்ந்து தன்னை மீறி உறக்கத்தை தழுவியது.
இதோ அவன் டெல்லிக்கு வந்து ஒரு வாரமும் ஓடிவிட்டது… யாரிடமும் பேசக் கூட பிடிக்கவில்லை, வலிய வந்து பேசிய இந்துமதியை எரித்துவிடும் பார்வை பார்த்தான்.
ராகவ் கரடியாய் கத்தியும் பிரணவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவனின் இப்போக்கால் வேலையில் முதல் அடி அவனுக்கு. அவன் அலுவலகத்தில் இருந்து முதல் வார்னிங் வந்தது அவனுக்கு….