அத்தியாயம் –12
மனோவிடம் எதையும் கேட்காதவன் “என்னாச்சு ஷாலினி??” என்றான் பின்னால் வந்துக்கொண்டிருந்தவளிடம். “என்னாச்சு தெரியலை பிரணவ் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தோம்”
“அங்க இருந்து திரும்பி வந்ததில இருந்து இப்படி தான் அழுதிட்டே இருக்கா… உடனே வீட்டுக்கு போகணும் நீயும் வான்னு சொன்னா… நான் இன்னும் அரைமணி நேரத்தில பார்ட்டி முடிஞ்சிரும் போகலாம் சொன்னா கேட்க மாட்டேங்குறா”
“நானே தனியா போய்க்கறேன் சொல்லி அடம்பிடிக்குறா… அவளை தனியா அனுப்பவும் முடியலை. என்னால அவ கூடவும் போக முடியலை. உங்களுக்கே தெரியும்ல என்னோட கசின் பிரதர் என்னோட வந்திருக்கான்னு”
“சரி ஷாலினி நீ போ… நான் பார்த்துக்கறேன்…”
“தேங்க்ஸ் பிரணவ் அவளை பார்த்து பத்திரமா அனுப்பி வைங்க. பாரதி இவர் உன்னை பத்திரமா வழியனுப்பி வைப்பார்டி. வீட்டுக்கு போயிட்டு எனக்கு போன் பண்ணு” என்றுவிட்டு அப்பெண் ஷாலினி நகர்ந்து சென்றுவிட்டாள்.
“கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்களேன். எதுக்கு இப்போவே கிளம்பணும்ன்னு அடம் பிடிக்கறீங்க” என்றான்.
“எனக்கு இப்போவே வீட்டுக்கு போகணும். எங்கப்பாவை பார்க்கணும்… இந்த குடிக்காரங்க மத்தியில தனியா இருக்க எனக்கு பயமாயிருக்கு. வீட்டுக்கு போகணும்… அப்புறம்…”
“உங்க… உங்க பிரண்டு என்னெல்லாம் சொன்னார் தெரியுமா” என்றவளுக்கு அந்த விஷயம் பிரணவிற்கு தெரியும் என்பது ஞாபகம் வர கண்ணீரை துடைத்துவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்….
‘இப்போ எதுக்கு என்னை பார்த்து முறைக்கிறா!! ஆஹா இந்த கணேஷ் பய எனக்கு தெரியும்ன்னு சொன்னது ஞாபகம் வந்திருச்சு போலயே… என்ன சொல்ல இவகிட்ட’ என்று யோசித்தான் பிரணவ்.
“நீங்க ஏன் என்கிட்ட சொல்லலை. உங்க பிரண்டு என்னை லவ் பண்றாருன்னு உங்களுக்கு முதல்லேயே தெரிஞ்சுருக்கு தானே. ஏன் என்கிட்ட நீங்க சொல்லலை…”
பிரணவோ அவளை நீயென்ன லூசா என்பது போல் பார்த்தான்.
பார்த்தது மட்டுமில்லாமல் அதை கேட்டும் விட்டான். “என்னை பார்த்தா உங்களுக்கு லூசு மாதிரி தெரியுதா…” என்று அவனிடம் வரிந்து கட்டினாள்.
‘என்கிட்ட மட்டும் இந்த பாயு பாயுறா அவன்கிட்ட பாய வேண்டியது தானே’ என்று மனதிற்குள் மட்டும் தான் நினைத்துக் கொண்டான்.
“ஆமா நீ லூசே தான். அவன் உன்னை லவ் பண்றதை நான் எப்படி உன்கிட்ட சொல்ல முடியும். நான் என்ன மீடியேட்டர் வேலையா பார்க்கறேன்”
“லவ் பண்ணவன் தானே உன்கிட்ட சொல்ல முடியும். நானா வந்து உன்கிட்ட சொல்ல முடியும். அப்படியே உன்கிட்ட வந்து சொல்றதுக்கு நீயும் நானும் ரொம்பபப… க்ளோஸ் பிரண்ட்ஸ் பாரு” என்று அவன் ரொம்ப என்பதற்கு அழுத்தம் கொடுத்து சொல்லவும் தான் மனோவிற்கு உறைத்தது.
‘ஆமா இவர் எப்படி என்கிட்ட சொல்லியிருக்க முடியும். ச்சே என் மூளை சரியாவே வேலை செய்ய மாட்டேங்குது’ என்று நினைத்துக்கொண்டவள் அவனிடம் கெத்தை விடாமலே பேசினாள்.
“நான் வீட்டுக்கு போகணும், இனி ஒரு நிமிஷம் இங்க இருக்க மாட்டேன். எங்கப்பாவை பார்க்கணும்” என்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்தாள்.
அவளின் செயல் சந்தைக்கு போகணும் ஆத்தா வையும் காசு கொடு என்ற தொனியில் அவனுக்கு தோன்ற லேசாய் எட்டிப்பார்த்த சிரிப்பை அடைக்கி அவளை பார்த்தான்.
“நீ எப்படி ஸ்கூல் முடிச்சு நேரா இங்க வந்திட்டியா… இப்படி சின்ன குழந்தை மாதிரி ரியாக்ட் பண்ணுற” என்றான்.
மனோவிற்கு அவன் பேச்சு கோபம் வந்துவிடதிரும்பி வேகமாய் நடக்க ஆரம்பித்தாள். “நில்லு நானும் வரேன்…” என்றவன் அவளுடனே நடந்தான்.
வெளியில் வந்து வண்டியை எடுத்தவன் “ஏறு…” என்று அவளிடம் சொல்லவும் அவள் திருதிருவென விழித்தாள்.
“என்னது வண்டியிலையா!! அதெல்லாம் வேணாம் எனக்கு ஆட்டோ பிடிச்சு கொடுங்க. நான் வீட்டுக்கு போய்க்கறேன்” என்றாள்.
“வண்டியில உட்கார்ந்தா உன் கற்பு பறிபோயிடுமா என்ன??” என்று சிடுசிடுத்தான் அவன்.
அவனின் சிடுசிடுப்பு ஒரு நடுக்கத்தை கொடுக்க “ப்ளீஸ் நான் இப்படி வெளிய யார் கூடவும் வண்டியில போனதில்லை. எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை புரிஞ்சுக்கோங்க” என்றாள் கெஞ்சுதலாய்.
“இங்க பாரு இது ஈசிஆர் ரோடு இங்க இந்த நேரத்துல எல்லாம் உன்னை ஆட்டோல ஏத்தி அனுப்பறது சேப் இல்லை அதான் சொல்றேன்” என்று யோசித்தவன் “சரி உங்கப்பாக்கு போன் போடு” என்றான்.
“எதுக்கு” என்றாள் கலவரத்துடன்.
“போடு நான் அவர்கிட்ட பர்மிஷன் கேட்கறேன். அவர் சொன்னா நீ என் கூட வரலாமில்லை” என்றான்.
‘அப்பவும் இவன் கூட வண்டியில போகணுமா’ என்று யோசித்துக் கொண்டே அவள் தந்தைக்கு அழைத்து முதலில் அவள் பேசிவிட்டு பின் அவனிடம் கொடுத்தாள்.
“அங்கிள் நான் உங்க பொண்ணு பாரதி கூட வேலை பார்க்கறேன். உங்க பொண்ணு கொஞ்சம் பயந்த சுபாவமா இருக்காங்க. இங்க ஆபீஸ் பார்ட்டில தண்ணி அடிக்கறது பார்த்திட்டு கொஞ்சம் கலவரமாகிட்டாங்க”
“உடனே அப்பாகிட்ட போகணும்ன்னு அடம் பிடிக்கறாங்க. இங்க பார்ட்டி எல்லாம் முடிஞ்சு கிளம்ப நேரமாகும். என்னோட வண்டியில வரச்சொன்னேன், முடியாதுன்னு சொல்லிட்டாங்க. பாருங்க அங்கிள் அவங்களை ஆட்டோல ஏத்திவிட்டு நான் பின்னாடியே வரலாம்”
“ஆனா இங்க அவ்வளோ சேப் இல்லை. இது ஆபீஸா இருந்தா வண்டியை விட்டுவிட்டு நானும் அவங்களோட ஆட்டோல வந்திருவேன்”
“இங்க பிரண்ட்ஸ் எல்லாரும் பஸ்ல போய்டுவாங்க யாரையும் எடுத்தும் வர சொல்ல முடியாத நிலைமை. உங்களுக்கு ஓகேன்னா அவங்களை என்னோட வண்டியில வரச்சொல்லுங்க. நான் சேபா கொண்டு வந்து வீட்டில விட்டிறேன் அங்கிள்” என்று பவ்வியமாய் அவரிடம் உள்ள நிலைமையை சொன்னான்.
“வேண்டாம் தம்பி நீங்க வீட்டில கொண்டு வந்து விட வேணாம். உங்க ஆபீஸ்க்கு வந்திடுங்க நான் அங்க வந்து என் பொண்ணை அழைச்சுக்கறேன். தப்பா எடுத்துக்காதீங்க”
“அது நல்ல ஐடியா தான் அங்கிள் நீங்க சொல்றது எனக்கும் புரியுது. நானும் ரெண்டு அக்காவோட பிறந்தவன் தான் இதுல தப்பா நினைக்க ஒண்ணுமில்லை அங்கிள்”
“உங்களுக்கு சிரமமில்லையே தம்பி இல்லை நானே இப்போ நேரா கிளம்பி அங்க வந்திடட்டுமா ஆனா ரொம்ப நேரமாகிடுமே…”
“நீங்க வர நேரமாகும்ன்னு தானே நானே வர்றேன்னு சொன்னேன் அங்கிள். நான் உங்க பொண்ணை பத்திரமா கூட்டிட்டு வந்து உங்ககிட்ட ஒப்படைக்கிறேன் அங்கிள்”
“உங்களுக்கு பயமே வேணாம். என்னோட வண்டி நம்பர் வீட்டு அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் உங்களுக்கு இப்போ நான் அனுப்பி வைக்குறேன்”
“அச்சோ அதெல்லாம் வேணாம்ப்பா… எனக்கு நம்பிக்கை இருக்கு உங்க மேல நீங்க கூட்டிட்டு வாங்க…”
“உங்க பொண்ணுக்கிட்ட சொல்லிடுங்க இல்லைன்னா அவங்க என்னோட வர மாட்டாங்க” என்றுவிட்டு மனோவிடம் போனை கொடுத்தான்….
குமாரசாமியும் மகளிடம் ஆயிரம் பத்திரம் கூறி அவனுடன் வருமாறு அனுமதி கொடுத்த பின்னே தான் அவள் வண்டியில் ஏறி அமர்ந்தாள்…
அவள் தந்தை வேண்டாமென்றாலும் அவனை பற்றிய விபரங்களை அவள் தந்தைக்கு அனுப்பிவிட்டே வண்டியை எடுத்தான். அவளுடன் வண்டியில் செல்லும் இந்த அனுபவம் புதிது.
பின்னே அவனும் எத்தனையோ பெண்களை அவன் வண்டியில் அழைத்து சென்றிருக்கிறான் தான் இவளை போல யாரும் எந்த நேரமும் குதித்துவிடுவேன் என்பது போல் அமர்ந்திருக்கவில்லையே.
அவளை பார்த்து சிரிப்பு வந்தாலும் அடக்கிக்கொண்டு மெதுவாகவே வண்டியை செலுத்தினான். சட்டென்று எதுவோ தோன்ற வண்டியை ஜனசந்தடி நிறைந்த இடமான விஜிபி அருகே நிறுத்தினான்.
“கொஞ்சம் இறங்குங்க…” என்றான்.
“எதுக்கு??” என்றவளின் குரலில் அப்பட்டமான பயமிருந்தது.
“இறங்குங்க சொல்றேன்”
“என்னை என்ன செய்யப் போறீங்க??” என்றவளின் குரல் நடுங்கவே ஆரம்பித்ததை உணர்ந்தான்.
‘வாயெல்லாம் என்கிட்ட மட்டும் நல்லா பேசுறா!! இப்போ எதுக்கு இப்படி பயப்படுறா!! என்று எண்ணிக்கொண்டவன் “சத்தியமா உன்னை எதுவும் பண்ண மாட்டேன் நம்பி இறங்கு கொஞ்சம் பேசணும்” என்றான்.
அவளும் மெதுவாய் வண்டியை விட்டு கீழறங்கி நின்றாள்.
“நீங்க குடிச்சிருக்கீங்களா!!” என்றுவிட்டு அவனை கலவரமாய் பார்த்தாள்.
“ஏன் அப்படி கேட்குற??” என்றவன் ஒருமைக்கு தாவியிருந்ததை இருவருமே உணரவேயில்லை.
“அங்க ரிசார்ட்ல வைச்சு நீங்க… அது… என்கிட்ட…” என்று இழுத்தாள்.
“நான் சாப்பிடுறதில்லை இன்னைக்கு நான் சாப்பிடவும் இல்லை அது நான் சும்மா வைச்சுட்டு இருந்தேன்” என்றான்.
“சரி என்ன பேசணும் சொல்லுங்க??”
“என்ன முடிவு பண்ணியிருக்க??”
“எதைப்பத்தி கேட்கறீங்க??”
“கணேஷ் பேசினதை பத்தி உங்கப்பாகிட்ட சொல்லிடுவியா இல்லை…” என்று முடிக்காமல் நிறுத்தினான் அவன்.
“சொல்லாம என்ன பண்ணுவாங்க… நான் எதுவும் வீட்டுல மறைக்கறதில்லை”
“சரி அது உன்னிஷ்டம் நான் எதுவும் சொல்லலை. உங்கப்பாகிட்ட நான் என்ன பேசினேன்னு உனக்கு தெரியும் நான் ஆபீஸ் போனபிறகும் அதான் சொல்லுவேன்”
“கணேஷ் பத்தி நீ சொல்றதுன்னா சொல்லிக்கோ… எனக்கு தெரிஞ்சு நீ இந்த விஷயத்தை பெரிசுபடுத்த வேணாம்ன்னு தோணுது”
“என்ன உங்க பிரண்டை ப்ரொட்டக்ட் பண்ண பார்க்கறீங்களா!!”
“எனக்கு அதுக்கு எந்த அவசியமும் இல்லை. உங்கப்பா அவனை அடிச்சா கூட ஏன்னு கேட்க மாட்டேன், ஏன்னா அவன் தப்பு பண்ணியிருக்கான்”
“ஓ!! அப்போ உங்க பிரண்டு பண்ணது தப்புன்னு தெரிஞ்சும் நீங்க அவரை எதுவும் கேட்க மாட்டீங்களா!!”
“அதுக்கு பதில் அப்புறம் சொல்றேன் முதல்ல நீ இதுக்கு பதில் சொல்லு!!” என்றவன் “கணேஷ் பத்தி நீ என்ன முடிவெடுத்திருக்க!!” என்றான். பதில் தெரிந்தும் கேள்வியை கேட்டான்.
“என்ன முடிவெடுக்கணும்??”
“அவன் உன்கிட்ட சொன்ன விஷயம் பத்தி”
“ஒரு பொண்ணுகிட்ட இப்படி தான் வன்மையா விருப்பத்தை சொல்லுவாங்களா!! பார்க்க மென்மையானவரா இருந்துகிட்டு இப்படி அவர் பண்ணுவார்ன்னு நான் நினைக்கவே இல்லை”
“எனக்கு அவர் மேல எந்த அபிப்பிராயமும் இல்லை. அதுவும் இல்லாம கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாம நடந்துக்கிட்ட அவர் மேல எனக்கு கோபம் தான் வருது”
“இது எல்லாத்துக்கும் மேல தெளிவா சொல்லுங்க உங்க பிரண்டுகிட்ட நான் என்னோட பேரன்ட்ஸ் பார்த்து கையை காட்டுறவரை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்” என்றாள் அழுந்தந்திருத்தமாய்.
பிரணவின் மூளையும் மனதும் அவள் கூறியதை எல்லாம் ஏன் என்றே புரியாமல் அவன் நினைவடுக்கில் பதிவேற்றிக் கொண்டிருந்தது.
“சரி கணேஷ் பத்தி இதான் உன் முடிவுன்னா அவன் உன்னை இனி தொல்லை பண்ணாம நான் பார்த்துக்கறேன். இனி உன் வழிக்கு அவன் வரமாட்டான்”
“அப்போ உங்க பிரண்டை தட்டி கேட்குறது எல்லாம்” என்று ஞாபகமாய் கேட்டாள்.
“என் பிரண்டு நான் சொன்னா புரிஞ்சுக்குவான்னு எனக்கு தெரியும். தட்டி கேட்கற அளவுக்கு அவன் பெரிய தப்பெல்லாம் பண்ணலை. ஒத்துக்கறேன் உன் கையை அவன் பிடிச்சது தப்பு தான்”
“ஆனா அவன் கெட்டவனில்லை எனக்கு அது தெரியும். ப்ளீஸ் இந்த விஷயத்தை நீ பெரிசு பண்ண வேணாம். சரி நேரமாச்சு வண்டியில ஏறு கிளம்புவோம்” என்று சொல்லி பேச்சை முடித்துவிட்டான்.
“ஒரு நிமிஷம்…”
“என்ன??”
“உங்க தாடி எங்க போச்சு…” என்று அப்போது தான் அவன் மாறுதல் மனதில்பட அதை அவனிடம் கேட்டே விட்டாள்.
“டிஆர் கேட்டார்ன்னு ஒரு படத்துக்கு வாடகைக்கு விட்டிருக்கேன்” என்றான்.
“என்ன நக்கலா??”
“அப்படின்னு தான் வைச்சுக்கோ… கோவில்க்கு வேண்டிக்கிட்டு ஒரு மாசம் விரதமிருந்தேன். அப்போ வைச்ச தாடி அது… ப்ரார்த்தனை முடிஞ்சுது அதான் ஷேவிங் பண்ணியாச்சு போதுமா” என்றான்.
“இப்போ கொஞ்சம் பார்க்கற மாதிரி இருக்கு…” என்று முணுமுணுத்துக் கொண்டாள்.
“என்ன சொன்ன கொஞ்சம் சத்தமா சொல்லு” என்றான். அவள் சொன்னது அவன் காதில் விழுந்திருந்தது ஏனோ மனதில் ஒரு இதம் நுழைந்தது.
“இவள் சிறுபிள்ளையா!! அதிகபிரசங்கியா!! கிறுக்குத்தனமாய் யோசிப்பவளா!! என்று ஏதேதோ எண்ணக்கலவைகள் அவன் மனதில் தோன்ற ஆரம்பித்தது.அவளை பற்றிய ஆராய்ச்சியை விட்டுவிட்டு வண்டியை கிளம்பினான்.
அடுத்த அரைமணியில் அவர்கள் அலுவலகம் உள்ளே நுழையவும் எதிரில் நின்றிருந்தவரை எங்கோ பார்த்த ஞாபகத்தில் அவன் வண்டியை நிறுத்தப் போக “அப்பா” என்று மனோபாரதி அழைப்பதை பார்த்தும் நிறுத்தியேவிட்டான்.
வண்டியில் இருந்து குதித்தவள் ஓடிசென்று அவள் தந்தையின் கையை பிடித்துக்கொண்டு நின்றாள். “நான் இனிமே இந்த மாதிரி பார்ட்டி எல்லாம் போக மாட்டேன்ப்பா எனக்கு பிடிக்கலை” என்று சிறுகுழந்தையை போல் சொல்லவும் பிரணவ் சிரிக்காமல் இருக்க பெரும்பாடுட்டான்.
“இதுக்கு தான் பாப்பு நான் வேணாம் சொன்னேன். உன்னை பத்தி தெரிஞ்சு தான் சொன்னேன் உனக்கு போகணும்னு ஆசை உன் பிரண்டு வந்து கேட்கவும் என்னாலையும் மறுக்க முடியலை. இனி நீ போக வேணாம் சரியா!!” என்றார் அவரும்.
‘நல்ல அப்பா!! நல்ல பொண்ணு!! இதுல இவளுக்கு செல்ல பேரு வேற பாப்புன்னு… பாப்புவாம் பாப்பு அப்படியே ஓங்கி ரெண்டு அப்பு வைக்கணும்’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.
அங்கு இருப்பதா செல்வதா என்று அவன் யோசித்துக் கொண்டு தயங்கி நிற்கும் போதே குமாரசாமி அவனை நோக்கினார்.
அவனை எங்கோ பார்த்த நினைவு வர மகளிடம் குனிந்து எதையோ கேட்டறிந்தவர் அவனை நோக்கி வந்தார். “ரொம்ப நன்றி தம்பி!! ரொம்ப சாரிப்பா!!” என்றார்.
“எதுக்கு அங்கிள் இதெல்லாம் என்கிட்ட எதுக்கு சாரி சொல்றீங்க??” என்றான் புரியாமல்.
“நன்றி என் பொண்ணை பத்திரமா என்கிட்ட கொண்டு வந்து சேர்த்ததுக்கு… சாரி சொன்னது இவ உங்ககிட்ட நடந்துகிட்ட முறைக்கு… நான் அவளை கண்டிச்சிட்டேன் இனிமே இப்படி பேச மாட்டா”
“இவ்வளோ நல்லவரா இருக்கீங்க உங்களை போய் என் பொண்ணு அப்படி பேசினது தப்பு தானே அதான் சாரி சொன்னேன் தம்பி” என்றார்.
‘பொண்ணு தான் கிறுக்கு அப்பா நல்லவரா தான் இருக்கார்’ என்று எண்ணிக்கொண்டவன் “நீங்க சாரி சொல்ல வேண்டாம் அங்கிள். அவங்க இன்னும் சின்ன பொண்ணாவே இருக்காங்க அதான் இப்படி ரியாக்ட் பண்ணுறாங்க”
“என்னால புரிஞ்சுக்க முடியுது. இதுக்காக எல்லாம் நீங்க என்கிட்ட சாரி கேட்கணும்னு அவசியமில்லை” என்றான்.
சற்று தள்ளி அவள் தந்தையின் வண்டியின் அருகே நின்றிருந்த மனோ “அப்பா டைம் ஆகலையா வாங்க போவோம் எனக்கு தூக்கம் தூக்கமா வருதுப்பா” என்றாள்.
அவள் குரல் கேட்டு பிரணவ் புன்னகைக்க “ஒரே பொண்ணு தம்பி ரொம்ப செல்லம் கொடுத்திட்டோம். எங்க எப்படி நடந்துக்கணும்ன்னு இன்னும் சரியா தெரியலை. குழந்தையாவே இருக்கா” என்றார்.
“ஹ்ம்ம் சரி அங்கிள் நீங்க கிளம்புங்க நேரமாச்சு” என்றான்.
“தம்பி உங்க பேரு…”
“பிரணவ்… கிருத்திக் பிரணவ்”
“நீங்க அன்னைக்கு தாடி எல்லாம் வைச்சுட்டு…”
“ஆமா அங்கிள் பழனிக்கு பாதயாத்திரை வேண்டுதல் அதான் அன்னைக்கு தாடியோட, வேண்டுதல் எல்லாம் நேத்தே முடிச்சாச்சு” என்றான்.
“ஒரு நாள் கண்டிப்பா வீட்டுக்கு வாங்க…” என்று முகம் முழுதும் சிரிப்பாய் கூறியவர் அறிந்திருக்கவில்லை அவன் வரும்போது அவர் உயிரற்று இருப்பார் என்று.
பிரணவிற்கு ஏனோ அவரை மிகப்பிடித்து போனது சிரித்த முகமாய் மனதார பேசிய அந்த மனிதரை அடுத்த பத்து நாளில் சவமாய் பார்ப்போம் என்று அவனும் அறியவில்லை…
கிளம்பும் முன் அவனை பார்த்து சிறுதலையசைப்பை கொடுத்தவளுக்கு பதிலாய் தானும் தலையாட்டிவிட்டு வாயசைவில் தன்னையறியாமல் “பத்திரம் குட் நைட்” என்று கூற அவள் மீண்டும் தலையசைத்து சென்றாள்….