“அட, வெறும் மூணு லட்சத்துக்கா இத்தனை தயங்குற நீயி?” என்று கேட்டுவிட்டு அடக்கமாட்டாமல் சிரித்தான் அய்யாக்கண்ணு. ஆழியூரில் லோக்கல் பைனான்ஸ் நடத்தி வருபவன். அவனுக்கு அண்ணாமலையை ஓரளவு தெரியும் என்பதால் அவன் பணம் கேட்டதையே ஆச்சர்யமாய் பார்த்தவன், அவன் கேட்ட தொகையை அறிந்ததும் இன்னுமே சிரித்தான்.
எதிரே இருந்த அண்ணாமலைக்கும் பரத்துக்கும் அவன் சிரிப்பில் துளிக்கூட வரவில்லை. சற்று சங்கடத்துடன் அவனை பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க, தன் சிரிப்பிற்கு கம்பெனி கிடைக்காததால் அவனே தன்னை அடக்கிக்கொண்டு, “இதெல்லாம் ஜுஜுபி காசு அண்ணா! உன்னை தெரியாதா எனக்கு? அடமானம் எல்லாம் ஒன்னும் வேணாம்! பணத்தை வாங்கிக்க” என்றான்.
முகம் மலர, “அப்போ குடுங்க” என்ற பரத், இடுப்பில் சொருகி வைத்திருந்த மஞ்சள்ப்பையை உருவ, “அது… ரொம்ப சில்லறையா இருக்கு… நீங்க இன்னைக்கு போய் நாளைக்கு வாங்க… சில்லறை எல்லாம் நோட்டா மாத்தி வைக்குறேன்” என்றான் அவன்.
அண்ணாமலையும் பரத்தும் முறைப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“சில்லறையா இருந்தாலும் குடுங்க! நாங்க கடைல போட்டு எடுத்துக்குறோம்” பரத் வேண்டுமென்றே கேட்க, “அய்யய்ய, சரி வராது” என்று வேகமாய் சொன்னவன்,
“இங்கப்பாரு அண்ணா! இன்னும் ரெண்டே நாள்ல நீ கேட்ட பணம் உன் கைக்கு ரொக்கமா வரும், அதுக்கு நான் கேரண்டி” என்று அடித்து பேச, “நாளைக்கு வா’ன்னான்! இப்போ என்னனா இன்னும் ரெண்டு நாளுங்குறான்… இன்னும் கொஞ்சம் பேசுனோம்ன்னா, ஒரு வாரம்ன்னு சொல்லுவான் போல” என்று அருகே இருந்தவனின் காதைக்கடித்தான் பரத்.
“சும்மா இருடா” என்று அதட்டிய அண்ணா, “இன்னும் நாலு நாள் தான் இருக்கு ஏலத்துக்கு, கண்டிப்பா பணம் கிடைக்கும்ல?” என்று வினவ, “அந்த ஆண்டவன் கூட ஏமாத்துவான், இந்த அய்யாகண்ணு வார்த்தை தவற மாட்டான்” என்றதோடு இன்னும் ஏழெட்டு பிட்டு சேர்த்துப்போட அவன் கொடுத்த நம்பிக்கையோடு அங்கிருந்து கிளம்பினான் அண்ணாமலை. ஆனால், பரத்துக்கு என்னவோ நம்பிக்கையே வரவில்லை.
***
அன்று மாலை போல ‘ஆதரவற்றோர் இல்லத்தில்’ தோட்டவேலையில் உதவிக்கொண்டு நின்றிருந்த அண்ணாவிடம் வந்தார் அதன் பொறுப்பாளர் துரை.
“நீ ஏன்ப்பா செய்யுற இதெல்லாம்?” அவர் குரல் கேட்டு மண்வெட்டியோடு வியர்த்து கொட்ட திரும்பியவன், “ஏன் சித்தப்பு, இதுக்குன்னு வெளிநாட்டுல இருந்து வேலைக்கு ஆள் எடுத்துருக்கியா?” என்றான் நக்கலாய்.
அவன் முதுகிலேயே ஒன்று போட்டவர், “வாயை குறை டா” என்றார் சிரித்துக்கொண்டே. அவனும் சிரிக்க, “காசுக்கு அலையுறியாம்! கேள்விப்பட்டேன்” என்றார்.
“ஆமா சித்தப்பு! கொஞ்சம் கம்மியா இருக்கு, அதான்” அவன் மண்ணை கிளறிக்கொண்டே இயல்பாய் சொல்ல, “இதுக்கு தான் நீ எங்களுக்கு தூக்கி தூக்கி குடுத்தப்போ வேண்டாண்ணேன்… அதெல்லாம் சேத்து வச்சுருந்தா இன்னைக்கு அலையுற அவசியம் வந்துருக்குமா?” என்றார் மனம் கேட்காது.
கையில் இருந்ததை போட்டுவிட்டு, தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து முகம் துடைத்தவன், “இதுக்கு பதில் பலமுறை சொல்லிட்டேன்! நான் இங்க தான தர்மம் பண்ணல! என்னோட இருக்க நாலு பேருக்கும் இது அம்மா வீடு, எனக்கு அவனுங்க கூட பொறந்தவனுங்க மாறி! அப்போ என்னோட வீடும் தான் இது! என் வீட்டுக்கு நான் செய்யுறேன், இன்னும் கூட செய்வேன்” அமைதியாய் அழுத்தமாய் சொன்னவன் அங்கிருந்து சென்றான்.
கடையில் கறி வெட்டிக்கொண்டிருந்தான் அண்ணாமலை. சிந்தை எல்லாம் அந்த ஆழியூர் அய்யாக்கண்ணு’விடம் தான்! இன்று தான் அவன் பணம் கொடுப்பதாக சொன்னது. காலையில் இருந்து ஃபோன் போட்டு போட்டு அலுத்துவிட்டான். இன்னும் இரண்டு நாட்கள் தான் மீதமிருந்தன. நேரில் போய் பார்த்து வர சொல்லி சேகரை தான் அனுப்பி வைத்திருக்கிறான்.
வியாபாரம் பார்த்தாலும், சேகரின் வரவுக்காக ஒரு கண் வீதியிலேயே இருந்தது.
“என்ன அண்ணா… கொஞ்சம் எலும்பும் ஈரலும் சேர்த்து தான் போடேன்! என்னவோ கறியை பவுனு மாறி நிறுக்குற?” என்று கேட்டாள் ஒருத்தி. அவள் கேட்ட அரைகிலோவுக்கு மேலேயே அம்பது கிராம் இருந்தும், அவள் இன்னமும் கேட்க, “குடுக்குற காசுக்கு மேல கேட்டா எப்படி?” என்று அவளிடம் பையை நீட்டினான் அண்ணா.
“அதானே! எங்களுக்கு எல்லாம் குடுப்பியா? எவளாது பிஸ்கட் கடை வச்சுருப்பா, அவளுக்கு மட்டும் நிறுத்தே பாக்காம கறியும் கொழுப்புமா தூக்கி குடுப்ப” என்றவள், மோவாயை இடித்துக்கொண்டு அங்கிருந்துப்போக, “ஸ்ஸ்…ஸோ…!” என்ற அயர்வாய் கண்ணை மூடி அமர்ந்தான்.
கண்ணை மூடினாலே அவள் உரு தான் வந்து முன்னே நின்றது. இதுவரை அவளை வேறு மாதிரியாக எல்லாம் அவன் யோசித்ததே இல்லை. இந்த மூன்று நாட்களாய் அவன் அவனாகவே இல்லை. கெடுத்து வைத்துவிட்டாள்! ஏதேதோ தோன்றி தொலைத்தது. அவள் வேறு ‘கல்யாணம், கல்யாணம்’ என கிளப்பிவிட்டதில் என்னவோ அவன் மனது தன்னை ஒரு புது மாப்பிள்ளையாக உணர ஆரம்பித்து விட்டது போலும்!
அவள் இருக்கும் பக்கம் கூட திரும்பாது ஓடுபவனுக்கு அவளை பார்க்க வேண்டும், பேச வேண்டும், இன்னும் என்ன என்னவோ வேண்டும் என்றெல்லாம் தோன்ற தான் செய்தது. ஆனாலும், அவன் ‘வெட்டி வீம்பு’ அவனை விட்டு அத்தனை சுலுவில் போய்விடுமா என்ன?
‘அவள் விரட்டுவதற்கு அடிபணிந்து போவதா? நானா? நெவர்!’ என்ற அவன் வீம்பு இப்போதும் அவனிடமே தான் இருந்தது. அதிலும் அவள் அத்தனை உறுதியாய் உன்னை தான் கட்டுவேன்’ என்று சொல்கையில் ‘நடக்காது’ என்று அவள் மூக்குடைக்க வேண்டும் என்று தோன்றியது.
அவன் அப்படியே அமர்ந்திருக்க, “கடைல யாராச்சும் இருக்கீங்களா?” என்ற குரல்.
அவள் தான்… அவளே தான்!
முகத்தை மூடியிருந்த கைகள் கொண்டே அழுத்தி துடைத்தவன், ஒன்றும் சொல்லாமல் எழுந்து, கறியை எடுத்துப்போட்டு வெட்டினான்.
“காது கேக்காதவனை எல்லாம் எவன் ப்பா கடைல வச்சது?” என்றாள் அவனும் அவளும் தவிர யாருமற்ற அந்த இடத்தில், யாரிடமோ பேசுவது போல!
அவள் எப்போதும் வாங்கும் அளவு வெட்டி பையில் போட்டவன் எங்கோ பார்த்துக்கொண்டே அவள்பக்கம் நீட்டினான். அவனையும் பையையும் பார்த்தவள், சொடுக்கிட்டாள்.
அவன் திரும்பாது நிற்க, “அலோ சார்… நான் கறி வேணுன்னு கேட்டேனா? முதல்ல கஸ்டமர்ட்ட என்ன வேணுன்னு கேட்டு குடுக்க படிங்க சார்” என்றாள் ஜவடாளாய்.
நீட்டிய பையை அப்படியே மரக்கட்டை மீது போட்டவன், “என்ன வேணும்?” என்றான், எங்கோ வெறித்து.
“மூஞ்சி இங்க இருக்கு” என்றாள் தன்னை சுட்டிக்காட்டி.
ஆழ்ந்த மூச்செடுத்தவன், தயங்காமல் அவள் புறம் திரும்பி, “என்ன வேணும்?” என்றான் அழுத்தமாய். அவன் முகத்தை ஒருவித குறுகுறுப்போடு பார்த்தவள், “முட்டை…” என்றாள்.
அவன் அவளுக்கு பக்கமாய் இருந்த முட்டை அட்டைகளில் இருந்து நல்லதாய் எடுக்க, “நாட்டுக்கோழி முட்டை இல்ல… கா…..ட… முட்டை!” என்றாள் ராகமாய்.
ஒரு நொடி முறைத்தவன், பின்னே அவள் கைக்கு வெகு நெருக்கத்தில் இருந்த காடை முட்டை அட்டைகளில் இருந்து, “எத்தனை?” என்று கேட்டுக்கொண்டே எடுக்க ஆரம்பித்தான்.
“நீங்க எத்தனை குடுத்தாலும் ஓகே” அவள் ஒரு மார்க்கமாய் சொல்ல, முட்டை எடுப்பதை நிறுத்தியவன், அவனுக்கு நெருக்கத்தில் இருந்த அவள் முகத்தை பார்த்தான். அவளை ஆராய்ந்து பழக்கம் இல்லாத கண்கள் இப்போது அவள் காதோரத்தில் பரு வந்து தடம் பதித்து போயிருந்த வடுவை கூட விடாமல் தொட்டது.
சிரிக்கிறதா? இல்லையா? என்றே தெரியாமல் குழப்பத்தில் ஆளை சுழல விடும் அவள் இதழ்களின் வறட்சி அவனுக்கு வருத்தம் கொடுக்க, அதன் பஞ்சத்தை போக்கலாமா என்ற அவன் கனிந்த மனம் நினைக்கும்போதே, “யோவ்… பாட்டு கேட்டுட்ட போலருக்கு?” என்று வியப்பாய் கேட்டு அவனை தடுமாற வைத்தாள் நிம்மதி.
‘ச்சை… என்னடா பண்ணிட்டு இருக்கே!’ அவனே திட்டிக்கொண்டு வேகமாய் நகர, “ம்ம்ம்… நல்ல முன்னேற்றம் தான்” என்றவள், “அப்ப ஒத்துக்கோ, என்னை பிடிச்சுருக்கு, கட்டிக்குறேன்னு!” என்றாள் தெனாவட்டுடன்.
அவள் பேச்சில் அவன் தடுமாற்றம் எல்லாம் எங்கோ ஓடியது.
“நீயெல்லாம் ஒரு முகரையான்னு சந்தேகமா தான் பார்த்துட்டு இருந்தேன்” என்றான், அவளை விட தெனாவட்டாய்.
“அது சந்தேகப்பார்வை மாறி தெரியலையே… காமப்பார்வை’யால தெரிஞ்சுது” கொஞ்சமும் கூச்சப்படாமல் அவள் சொல்ல, “ஏய் போடி!” என விரட்டினான்.
“ஒழுங்கா கட்டிக்கோ… அப்புறம் வடை போச்சேன்னு வருத்தப்படுவ” அவள் சொல்ல, “ஏய்… ப்…போ…ட்…டி…” என்றான் அசட்டை திமிருடன். அவனை புசுபுசுவென முறைத்தவள், தானே, வேண்டுமளவு முட்டைகளை கூடையில் எடுத்துக்கொண்டு, பத்தாததற்கு அவன் கட்டி வைத்திருந்த கறி பையை வேறு எடுத்துக்கொண்டு போக,
“அடியே காசு குடுத்துட்டு போடி” என்று கத்தினான் அண்ணாமலை.
“ஹான், என் சீதனத்துல சேர்த்து தரேன், வச்சுக்கோ” என்றவள் நிற்கவே இல்லை. எப்போதும் போல இப்போதும் அவன் இதழ்கள் வசீகரமாய் வளைந்தது.