குளத்திற்கான ஏலம் இன்னும் பத்து நாட்களில் என முடிவு செய்யப்பட்டிருந்தது.
அன்று காலை தன் கடையில் நின்று வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்த அண்ணா’வின் அலைபேசி ஒலிக்க, ஐயப்பன் தான் எடுத்தான். பேசிவிட்டு வைத்தவன், கறியை வெட்டிக்கொண்டிருந்தவனிடம், “தலைவர் உன்னை வீடு வரைக்கும் வர சொல்றாரு அண்ணா!” என்றான்.
‘ஏன்?’ என்ற பார்வையோடு அண்ணா திரும்ப, “ஏதோ பேசணுமாம், நீ போ, நான் பாத்துக்குறேன்” என்று கத்தியை வாங்கிக்கொண்டான் ஐயப்பன். அவனும் யோசனையோடு கையை கழுவிக்கொண்டு, சட்டையை மாற்றிவிட்டு தலைவர் வீட்டை நோக்கி சென்றான்.
வாசலில் வந்து நின்றவனை, உள்ளே அழைத்து அமர வைத்தார் முருகேசன்.
“சொல்லுங்க ஐயா… என்ன விஷயமா கூப்பிட்டீங்க?” என்று நேராக விஷயத்திற்கு வந்தான்.
“அது வந்து அண்ணா… அன்னைக்கு குளம் ஏலம் எடுக்குற விஷயமா பேசுனியே?” என்று ஆரம்பிக்க, “ஆமா… நீங்க கூட எனக்கு குடுக்குறதா சொன்னீங்களே?” என்று புருவம் சுருக்க, “அதான் அண்ணா… பாண்டியன் போட்டிக்கு வர மாட்டான்னு நினைச்சு சொல்லிட்டேன், இப்போ என்னன்னா அவனே குத்தகையை நீட்டிச்சுக்குறேன்னு வந்து நிக்குறான்” என்றார் தயக்கமாய்.
சிந்தனை முடிச்சுகள் புருவத்தை சுருக்க, “அவன் தான் வெளிநாடு போறான்ல?” என்றான் கேள்வியாய்.
“அப்படி தான் சொன்னான்… இப்போ என்னவோ குளத்தை குடுங்க, ஆள் விட்டு பாத்துக்குறேன்னு நிக்குறான்” என்று அவருமே புரியாமல் சொல்ல, அவர் சொன்னதை அமைதியாய் கிரகித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அண்ணாமலை.
“அவன் கேட்குறப்போ வேறாளுக்கு தரது எப்படின்னு தான் யோசனையா இருக்கு, அதான் உன்னை கூப்பிட்டேன்” என்று அவர் சொல்ல, “எனக்கு குளம் வேணுங்கையா… அதுக்கு என்ன வழி’ன்னு சொல்லுங்க” என்றான் அவன்.
சில நொடிகள் அமைதி காத்தவரோ, “குளத்தை இரண்டரை லட்சத்துக்கு இப்போ குடுத்துருக்கு, மேற்கொண்டு மூணு வரைக்கும் போகும்! நீ ஒரு ஐஞ்சு லட்சம் ரெடி பண்ணு! என்ன ஆனாலும் எடுத்துறலாம்!” என்றார் உறுதியாய்.
“அஞ்சா? அஞ்சு லட்சம்…” அவன் திகைத்துப்போய் கேட்க, “வேற வழி இல்லையே அண்ணா! எப்டியும் அவன் இவ்ளோ காசுக்கு ஏலம் எடுக்க மாட்டான்! உனக்கு குளம் கண்டிப்பா வேணும்ன்னா நீ காசு இறைக்க தயாரா தான் இருக்கணும்” என்றவரோ, “தயங்காத! போட்டதை விட அள்ளிக்குடுக்கும் குளம்!” என்றார் நம்பிக்கையாய்.
அவரிடம் மறுத்து சொல்லாமல் கிளம்பிவிட்டாலும் மனமெல்லாம் ‘அஞ்சு லட்சத்தை எப்படி புரட்டுவது’ என்று தான் ஓடியது. கையிருப்பு இரண்டு இருக்க, மீதம் முழுசாய் மூன்று தேவைப்படும்! சிந்தனையோடு வீட்டை அடைந்தான்.
வியாபார நேரத்தில் வீட்டிற்கு வருபவனை வியப்பாய் பார்த்தபடி காடை கூண்டை சுத்தம் செய்துக்கொண்டிருந்த நந்தா, “என்ன அண்ணா? எதுனா எடுக்க வந்தியா?” என்றான் இருந்த இடத்தில் இருந்தே.
“இல்லடா” என்றவன் சோர்வாய் திண்ணையில் சாய, மாட்டுக்கு புல் அறுத்து சைக்கிளில் கட்டிக்கொண்டு அப்போது அங்கே வந்த சேகரும் திண்ணையில் இருந்தவனை பார்த்துவிட்டு கேள்வியாய் நந்தாவிடம் திரும்ப, அவன் ‘தெரியாது’ என்பதை போல உதட்டை பிதுக்கினான்.
சைக்கிளை நிறுத்திவிட்டு புல்லை கொண்டு வந்து கொட்டகை ஓரம் கொட்டியவன், அண்ணாவின் மறுபுறம் அமர்ந்தான். நந்தாவும் கையை கழுவிவிட்டு அவனுக்கு மறுபுறம் அமர, அண்ணா எங்கோ பார்த்தபடி யோசனையிலேயே இருக்க, “என்னன்னு சொல்லு” என்றான் சேகர்.
மெல்ல திரும்பி அவனை பார்த்தவன், பின் மீண்டும் எங்கோ பார்த்து, “அஞ்சு லட்சம் வேணுமாம் குளம் குத்தகைக்கு… மீதி பணத்துக்கு தான் என்ன செய்யன்னு யோசிக்குறேன்” என்றான்.
சேகரும் நந்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர், ‘இவனுக்கு இது தேவையா?’ என்பதை போல.
“இன்னும் மூணு லட்சம் வேணும்! எப்படி புரட்டுறது? பத்து நாளு தான் இருக்கு” அவன் கவலையாய் சொல்ல, “அப்படி எதுக்கு டா அந்த குளத்தை எடுத்தே ஆவனும்ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு நிக்குறவன்?” என்றான் சேகர் அலுத்துப்போய்.
அதுவரை காட்டிய கவலை முகத்தை நொடியில் மறைத்து, நிமிர்ந்தவன், “யோசனை இருந்தா சொல்லு, இல்லனா மூடு” என்றான் கடுப்போடு!
“நீ கேட்டதும் லட்சத்தை தூக்கி குடுக்கனும்ன்னா நம்ம அப்பன் தான் பேங்க் கட்டி வச்சுருக்கணும்” நந்தாவும் அவனை போல கடுப்பாக தான் சொன்னான். ஆனால், அதைக்கேட்ட அண்ணா முகம் பளிச்சென்று மின்னியது.
***
“நீங்க சொல்றதெல்லாம் எனக்கு புரியுது அண்ணாமலை. ஆனா… உங்களுக்கு லோன் குடுக்குறது கொஞ்சம் கஷ்டம். வங்கிக்கணக்கு தொடங்கியே ஒரு மாசம் தான் ஆகுது, கணக்குல பத்தாயிரம் மட்டும் தான் வச்சுருக்கீங்க! இப்படி திடுதிப்புன்னு வந்து லட்சக்கணக்குல பணம் கேட்டா குடுக்க சிரமம்!” என்று இழுத்து இழுத்து சொன்னார் அந்த பேன்க் மேனேஜர்.
மேற்கொண்டு தேவைப்படும் பணத்துக்கு யாரிடமும் கேட்க முடியாது நேரே வங்கியில் லோன் கேட்டு வந்திருந்தான் அண்ணாமலை. குறைந்த தொகை என்றால் கூட ஊரில் அங்கும் இங்குமாய் புரட்டலாம். இத்தனை பெரிய தொகை எல்லாம் அங்கே யாரிடமும் இருக்க வாய்ப்பில்லை என்று அவனே நினைத்துக்கொண்டான்.
“சார், மூணு லட்சம் மட்டும் குடுங்க! வட்டியும் முதலுமா திருப்பி குடுத்துடுவேன்!” என்று அழுத்திக்கேட்டான் அண்ணாமலை.
“குடுக்கலாம் அண்ணாமலை. ஆனா, எங்க வங்கிக்குன்னு சில விதிமுறைகள் இருக்கு இல்லையா? அதுப்படி ஒருத்தருக்கு பணம் குடுக்கனும்ன்னா ஷூரிட்டி, கேரண்டி எல்லாம் வேணும்” என்று அவர் விவரமாய் பேச ஆரம்பிக்க,
“அட, நீங்க எங்க ஊருக்கு வந்து விசாரிச்சு பாருங்க, அத்தனைப்பயலும் சொல்லுவான் நான் எத்தினி நியாயவான்னு” என்றவனோ, “ஆனா, வீரப்பன்னு ஒரு கம்முனாட்டி இருப்பான், அவன்கிட்ட மட்டும் கேட்டுடாதீங்க, வேணுன்னே பொய் பொரட்டா பேசுவான்” என்றான் ரகசிய குரலில்.
மேனேஜருக்கோ ‘காலங்காத்தால வந்து நமக்குன்னே சிக்குறானுங்க பார்’ என்று கடியானது.
“இல்ல அண்ணாமலை. உங்களுக்கு நான் சொல்றது புரியல போல! இப்போ வெளில காசு கடன் கேட்டா அவங்க அடமானத்துக்கு ஏதாவது வச்சுக்கிட்டு தானே உங்களுக்கு பணம் குடுப்பாங்க! அந்த மாறி எங்கக்கிட்டையும் நீங்க எதையாவது அடமானம் வைக்கணும்” என்று சொல்ல, ‘ஓ’ என சில நொடிகள் யோசனைக்கு போனவன்,
“சரிதான்! நீங்க என்ன பண்ணுங்க, என்கிட்ட இருக்க அம்பது ஆடுல ஒரு முப்பது எடுத்துக்கங்க, கோழி ஒரு அம்பது தாரேன்! அதுப்போவ காடை…” என்று அவன் சொல்ல ஆரம்பித்ததும், மேனேஜருக்கு பொறுமை போனது.
“சார்… இதெல்லாம் அடமானம் வைக்க முடியாது! பெருமதியான பொருட்கள் தான் வைக்கணும்” என்றார் எட்டிப்பார்த்த எரிச்சலுடன்.
“ஹான், வீடு இருக்கே!” என்று சொல்ல, “அப்போ அதோட பத்திரத்தை கொண்டு வாங்க… இடத்தோட மதிப்பு, கட்டடத்தோட மதிப்பு எல்லாம் பார்த்துட்டு எவ்ளோ குடுக்கலாம்ன்னு சொல்றேன்” என்றார் அவனை அனுப்பும் த்வனியில்.
“வீட்டுல தான் இருக்கு, உடனே போய் கொண்டு வரேன்!” என்றவனோ, “நீ காசை எண்ணி ரெடியா வைங்க, நான் போனவிசைல வந்துடுவேன்!” என்று சொல்லியவாறு எழுந்துக்கொள்ள, “நீங்க நினைக்குற மாதிரி இது ஒன்னும் அடகு கடை இல்ல அண்ணாமலை. பத்திரத்தை நீட்டுனதும் காசை குடுக்க… இட் டேக்ஸ் டைம்!” என்றார்.
“புரில… நேரமாகும்ன்னு சொல்றீங்களா?” அவன் கேட்க, “நாளாகும்ன்னு சொல்றேன். சொல்ல முடியாது, ஒரு மாசம் கூட ஆகலாம்” என்றார்.
“அய்யயோ, எனக்கு ஒரு வாரத்துல காசு வேணுமே” அவன் சொல்ல, “அப்போ நீங்க வெளில தான் பாத்துக்கணும், லோக்கல் பைனான்ஸ்’ல ட்ரை பண்ணுங்க” என்றார் அவர்.
இங்கே வருவதற்கு முன்பே இரண்டு இடத்தில் கேட்டு வைத்திருந்தான். சொல்லி வைத்தார் போல வட்டியை நான்கு மடங்காய் உயர்த்தி சொல்லியிருந்தனர். எல்லாம் வீரப்பனின் கைங்கர்யம் என்று உணர்ந்து இவனும் நேர் வழியில் முயல்வோம் என இங்கே வந்திருக்க, அவன் நம்பிக்கையை உடைத்திருந்தார் மேனேஜர்.
சோர்வோடு அவரிடம் விடைபெற்று வெளியே வந்தவனை, “என்னடா? குடுத்தானுவளா? இந்த பை’ல போடு” என்று ஒரு மஞ்சப்பையை விரித்தபடி எதிர்க்கொண்டான் பரத்.
சலித்த அண்ணாவோ, உள்ளே நடந்த பேச்சுவார்த்தையை சொல்ல, “இதென்னடா அநியாயம்? எவ்ளோ காசு வச்சுருக்கானுவ? அதுல கொஞ்சம் எண்ணி குடுக்க ஒரு மாசம் புடிக்குமா இவனுவளுக்கு? சரியான சோம்பேறிங்களா இருப்பானுவ போல” என்றான் பரத், அங்கே ஆமை போல வேலை செய்துக்கொண்டிருந்த ஊழியர்களை பார்த்தபடி.
“விடுடா, நம்ம வெளில பாப்போம்” என்று அண்ணா சொல்ல, “ஆமா, நமக்கென்ன பேங்குக்கா பஞ்சம்? டிவி’ல கூட அந்த பாகுபலி பொண்டாட்டி வந்து காசு வேணுமா காசு வேணுமான்னு கேட்குமே! அவக்கிட்ட பேரம் பேசி வாங்கிக்கலாம்… நீ வா” என்றான் அவன் கையை பிடித்து வங்கியை விட்டு வெளியே இழுத்துக்கொண்டே.
இருவரும் பேசிக்கொண்டே வெளியே வந்து மரநிழலில் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளை எடுக்க, அங்கே புழுதியை கிளப்பிக்கொண்டு சர்ரென வேகமாய் அவர்கள் அருகே தன் ஸ்கூட்டியை நிறுத்தினாள் நிம்மதி.
யாரோ எவரோ என நின்றிருந்த இருவரும் நிம்மதியை அங்கே கண்டதும் வழி விட்டு தள்ளி நிற்க, பரத்தோ, ‘ஐயோ இவளா?’ என்று வேகமாய் அண்ணாவின் பின்னே போய் நின்றுக்கொண்டான். பரத்தை ஒரு பார்வை முறைத்துக்கொண்டே அண்ணாவிடம், “என்ன பீரோ லாக்கரு, பேன்க்கு வரைக்கும் வந்துருக்கு? எப்படி இப்படி திடீர் முன்னேற்றம்?” என்றாள் நக்கலாய்.
இவள் நக்கலில் சீண்டப்பட்டு தான் போன மாதம் அவன் வங்கிக்கணக்கே தொடங்கியது. இப்போதும் அவள் சீண்ட, அவளை பார்க்காது எங்கோ பார்த்தபடி, “பேன்க் எல்லாம் பிஸ்கட் கடைக்கு மட்டும் தான்னு எழுதி வச்சுருக்கான்னு கேளுடா பரதா” என்றான் அண்ணாமலை.
அவனோ, “ஐயையோ, நீயே கேளு அண்ணா… நான் சிக்குனேன், ஆஞ்சுப்புடுவா” என்று பம்மியவனை முறைத்தான் அண்ணா.
அவளோ, “பணம் போட வந்தீங்களா?” என்று வினவ, “ம்கும்! பணம் குடுத்தா தானே போட” என்று முனகினான் பரத்.