5

சுட்டு வைத்திருந்த ஆட்டின் மண்டை ஓட்டை லாவகமாய் வெட்டிக்கொண்டிருந்தான் அண்ணாமலை. கைகள் வேலை செய்தாலும், சிந்தனை மட்டும் வேறு பக்கம் தான் இருந்தது. அன்று வார நாள் தான் என்பதால் கூட்டம் ஒன்றும் பெரிதாக இல்லை. அதனால் அவனும் நந்தாவும் மட்டுமே இருக்க, தலைக்கறி கேட்டவருக்காக தான் வெட்டிக்கொண்டிருந்தான்.

வெட்டி முடித்ததும் அவன் கைகள் இயந்திரத்தனமாய் அதை கவரில் போட்டு எதிரே நின்றவரிடம் நீட்ட, அதற்கு அவர் என்னவோ சொல்கிறார் என தெரிந்தாலும் அதில் அவன் கவனம் போகவே இல்லை.

நந்தா அவன் தோளைத்தட்டி, “உன்கிட்ட தானே கேட்குறாரு… கேட்க கேட்க பராக்கு பார்த்துட்டு இருக்க?” என்று கடிய, சட்டென தெளிந்தவன், “என்னாண்ணே?” என்றான் வாடிக்கையாளரிடம்.

“பொண்ணு மாசமா இருக்கா, அவளுக்கு வேணுன்னு சுவரொட்டி எடுத்து வைக்க சொன்னேனே அண்ணா!” என்றார் அவர் தயவாய்.

“எடுத்து வச்சுட்டேன் ண்ணே, இருங்க!” என்றவன் தனியே எடுத்து வைத்திருந்த ஆட்டு சுவரொட்டியை தனி பையில் போட்டு நீட்ட, சந்தோசமாய் வாங்கிக்கொண்டவர், “எவ்ளோ ஆச்சு ப்பா!” என்றார்.

நந்தாவிடம், “கறிக்கு மட்டும் வாங்கிக்க, சுவரொட்டிக்கு வேணாம்!” என்ற அண்ணா, “நான் வெளில போயிட்டு வரேன்!” என்றதோடு கிளம்பிவிட்டான், சட்டை கூட மாற்றாது!

கால் போன போக்கில் நடந்தான்.  சிந்தனை மட்டும் குழப்பமாக தான் இருந்தது. தான் யோசிப்பது சரி வருமா? வராதா? செய்யலாமா? வேண்டாமா? அல்லது அகலக்கால் வைக்க தோன்றுகிறதா? என சிந்தித்துக்கொண்டே நடந்தான்.

யோசித்துக்கொண்டே நடந்தவன் கால்கள் தன்னைப்போல ஆற்றங்ககரைக்கு வந்திருந்தது. அதற்கு மேல் நடக்காமல் அப்படியே நிழலிடமாய் பார்த்து அமர்ந்தான்.

            அந்த பெரிய தனியார் பள்ளியின் பார்க்கிங்கில் தனது ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு வெளியே வந்தாள் நிம்மதி.  புதிதாக தயாரித்திருந்த சிறுதானிய பிஸ்கட்களின் சாம்பிள்களை பொறுப்பாளர்களிடம் ருசிப்பார்க்க கொடுத்து, அடுத்த வாரம் முதல் இதையும் அவர்கள் கேண்டீனுக்கு சப்ளை செய்வதற்கான ஒப்புதலை பெற்றுக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தாள்.

ஏற்கனவே வருவதை விட அதிக லாபம் இதில் உண்டு. அதைக்கொண்டு அவள் மகிழ்ச்சி தான் அடைய வேண்டும், மாறாக அவள் முகம் யோசனையோடு சுணக்கத்தையும் கொண்டிருந்தது. பழகிய சாலை என்பதால் கவனம் முழுக்க ஓரிடத்தில் இல்லை என்றாலும் வண்டி இடது ஓரத்தில் பொறுமையுடன் போய்க்கொண்டிருந்தது.

மனமோ அங்கே பள்ளியில் தன் செவி வந்து சேர்ந்த பேச்சில் வெதும்பிக்கொண்டிருந்தது.

தாளாளர் அவளது பிஸ்கட்களுக்கு பச்சைக்கொடி காட்டியதும், அதே சந்தோசத்துடன் மீதமிருந்தவற்றை சிறுசிறு பேப்பரில் வைத்து அங்கிருந்த ஆசிரியைகளுக்கு வழங்கிவிட்டு அவர்களுடன் சிறிது நேரம் சிரித்து பேசிவிட்டு வெளியே வந்தாள் மதி.

ஸ்டாப் ரூம் விட்டு திரும்புகையில் அவள் கையில் இருந்த பாத்திரம் நழுவிவிட, அதிலிருந்த சில ரொட்டிகள் மண்ணில் விழுந்துவிட, அதைக்கண்டவள் முகமும் விழுந்துவிட்டது. சுருங்கிய முகத்துடனே ஒவ்வொன்றாய் எடுத்து மண்ணில்லாமல் ஊதி டப்பாவிளுள் அடுக்க ஆரம்பித்தாள்.

‘நம்ம ஊர் நாய்ங்களுக்கு இன்னைக்கு சத்தான பிஸ்கட் சாப்பிடனும்ன்னு விதிச்சுருக்கு!’ என்று எண்ணிக்கொண்டே அவள் அடுக்க, சுவருக்கு மறுபக்கம் பேச்சுக்குரல் கேட்டது.

“அந்த பொண்ணுக்கு என்ன வயசு இருக்கும் டீச்சர்?” யாரோ யாரிடமோ யாரைப்பற்றியோ பேசுகிறார்கள் என இவள் அசட்டையாய் அடுக்கி முடித்துவிட்டு எழுந்துக்கொள்ள, “என்ன ஒரு இருபத்தி ஏழு இருக்கும் டீச்சர்!” என்றார் அவர்.

“பேரை பாருங்களேன் நிம்மதியாம்!” வயதை கேட்ட கணக்கு டீச்சர் இப்போது கேலிசிரிப்பு சிரிக்க, அந்த சிரிப்பில் எட்டு வைத்தவள் கால்கள் நின்றுப்போனது.

தன் பெயர் அடிப்படவும் கால்கள் தன்னைப்போல நின்றுக்கொண்டன.

“அழகான தமிழ் பேரு டீச்சர். பொண்ணும் பாக்க என்ன அம்சமா இருக்கா பாருங்க! இந்த வயசுல தொழில் எல்லாம் செய்யுறா!” தமிழ் டீச்சர் பெருமையாக சொல்ல,  நிம்மதியின் முகமும் பூரித்தது.

ஆனால், அடுத்து கணக்கு டீச்சர் பேசியதில் தான் நிம்மதியின் முகம் மொத்தமாய் விழுந்துப்போனது.

“அழகா இருந்தா போதுமா டீச்சர்? கேரக்டர் முக்கியம் இல்லையா?”

“ஏன் அந்த பொண்ணுக்கு என்ன?” தமிழ் டீச்சர் கேட்க, “கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம ஒரு பையன் பின்னாடி வருஷக்கணக்கா சுத்துராளாம்! இவக்கிட்ட ஏதோ குறை இருக்கப்போய் தானே அந்த பையன் பிடிக்குடுக்காம சுத்தல்ல விடுறான்? இல்லன்னா இவ்ளோ லட்சணமா கை நிறைய சம்பாதிக்குற பொண்ணை கட்டிக்க எந்த பையனுக்கு தான் கசக்கும் சொல்லுங்க!?” என்றார் கணக்கு டீச்சர்.

“நீங்க வேற யாரையோ நினைச்சு தப்பா சொல்றீங்க டீச்சர்” தமிழ் டீச்சர் நம்பாமல் சொல்ல, “நான் சும்மா சொல்வேனா டீச்சர்? இந்த பொண்ணு கதை ஊரு முழுக்க தெரியுது! இந்த பொண்ணு படிச்ச காலேஜு தான் என் நாத்தனாரும்! அவதான் சொன்னா! நீங்க வேற ஊருல்ல… அதான் உங்க காதுக்கு இன்னும் விஷயம் வரல போல” என்றார் அவர்.

“ச்ச! இந்த காலத்து பொண்ணுங்களை எல்லாம் முகத்தை பார்த்து நம்ப முடிய மாட்டேங்குது!” தமிழ் டீச்சர் சலிக்க, “ஆமா டீச்சர்! என்னதான் காலம் மாறிபோச்சுன்னாலும், ஆம்பளை மாறி பொம்பளைங்களும் காதல் கத்திரிக்கான்னு பின்னாடி துரத்திட்டு திரியுறதெல்லாம் அசிங்கம். எல்லாம் வளர்ப்பை சொல்லணும்!  அம்மா இருந்தா கண்டிச்சுருப்பாங்க!” என்றவரோ,

“என்னதான் மூஞ்சி முன்ன சிரிச்சு பேசுனாலும், முதுகுக்கு பின்னாடி அசிங்கமா தான் பேசுவாங்க… இது எங்க புரியுது அந்த பொண்ணுக்கு! ஒன்னு, காதலிச்சவனை கல்யாணம் பண்ணனும், இல்லையா வீட்ல பாக்குற பையனுக்கு கழுத்த நீட்டனும். அதை விட்டுட்டு தடிப்பய மாறி ஆம்பளை பின்னாடி சுத்திக்கிட்டு… ச்ச ச்ச!” என்ற முகசுளிப்பை குரலில் காட்ட,

‘நான் என்ன செஞ்சா உனக்கென்னடி வந்துச்சு?’ என முன்னே சென்று நறுக்கென்று கேட்க நிம்மதியின் வாய் நமநமத்தாலும், எத்தனை பேரிடம் இப்படி மல்லுக்கு நிற்க முடியும் என்பதால் பல்லைக்கடித்துக்கொண்டு அங்கிருந்து விலகினாள். இயந்திர கதியில் வண்டியை எடுத்துக்கொண்டு சாலையில் வந்தவளுக்கு என்ன முயன்றும் அவள் காதுக்குள் ஒலிக்கும் அவர்கள் சொற்களை கடக்க முடியவில்லை.

ஊரை நெருங்கியவளுக்கு வீட்டுக்கு போக மனம் வரவில்லை. அங்கே தானே அத்தனை பெண்களும் வேலை செய்துக்கொண்டிருப்பார்கள். இருக்கும் மனநிலையில் இயல்பாய் பேசக்கூட வருமா என்ற ஐயம் உண்டாக, சலிப்புடன் ஆற்றங்கரையில் வண்டியை நிறுத்தியவள், எப்போதும் அவளுக்கு பிரியமான தூங்குமூஞ்சி மரத்தை நாடி சென்றாள்.

அருகே சென்றவளை அதிரவைக்கவென அம்மரத்தில் சாய்ந்து கண்ணை மூடி அமர்ந்திருந்தான் அண்ணாமலை.  அவனை கண்டதும் திகைத்து நின்றவள், “ஓய்” என்ற சத்தத்தோடு அருகே விரைந்தாள்.

ஏகாந்தத்தில் அசந்திருந்தவனை அவள் குரல் அசைய வைக்க, கண்ணை திறந்தவன், அவளை கண்டதும் முறைக்க ஆரம்பித்தான். அவன் சிரித்திருந்தால் கூட தடுமாறி நின்றிருப்பாள், முறைப்புக்கு எல்லாம் அவள் பழகி பல வருடங்கள் ஆனதால், சாவதானமாய் அவன் முன்னே மண்டியிட்டு அமர்ந்தவள், “நீ என்ன கடைல இருக்காம இங்க உட்காந்திருக்க? என்ன ஆச்சு?” என்றாள்.

கடுப்பாய் முகம் திருப்பியவன் அமைதியாய் இருக்க, அவளுக்கு இப்போது சுர்ரென்று ஏறியது.

“உன்னால எவ எவ வாய்லையோ அறைப்பட்டு அசிங்கப்பட்டுட்டு இருக்கேன்! நீ என்னன்னா என்கிட்ட பேசக்கூட மூஞ்சத்திருப்புற!” என்று சொல்ல, “உன்னை எவன் என்கிட்ட பேச சொன்னது?” என்று திருப்பிக்கேட்டான் அண்ணாமலை.

“ம்ம்ம்… ஏன்டா பேச மாட்ட! உன்னையே செக்குமாடு மாறி சுத்தி சுத்தி வரேன்ல? அந்த மிதப்பு! உன்னை என்னை விட்டா எவளும் கட்டிக்க மாட்டா பார்த்துக்க… அப்புறம் காலம் முழுக்க காய்ஞ்ச மரமா தான் நிப்ப!” அவள் ஆரூடம் சொல்ல, உதட்டை சுளித்தவன், “நான் காஞ்சே கிடைந்துக்குறேன் தாயி… நீ எவனையாவது கட்டி செழிப்பா இருங்க!” என்று பேச்சில் நழுவ, அவள் விட்டால் தானே!?

“ம்கும்! உள்ளூர்ல இருந்து டவுன் வரை எல்லாருக்கும் நான் உன் பின்ன லோலோன்னு சுத்துறேன்னு தெரிஞ்சுருக்கு! எந்த கேனமவன் கட்டுவான் என்ன!” என்றாள் உர்ரென!

“இந்த கருமத்துக்கு தான் என் கிட்டவே சேர்க்கிறது இல்ல உன்ன! உன்னை கண்டாலே நான் தள்ளி ஓடுனது இந்த எழவுக்கு தான்… ஆனா, இந்த ஊரு பயலுவ தான் என்னவோ நான் உனக்கு பயந்துக்கிட்டு ஓடுறதா நினைச்சு உருட்டிட்டு இருக்கானுவ!” என்றான் கடுப்பாய்.

“நீ என்னத்துக்கு தள்ளி ஓடுற? கூடவே நின்னு! கட்டிக்கோ என்னை!” இதுவரை கத்திருக்கொண்டிருந்த வாய் இப்போது கனிந்த தொனிக்கு மாறிப்போனது.

“யம்மா தாயி ஆளை விடு!” என்றவனோ தலைக்கு மேல் கும்பிடை போட்டு, “எனக்கு எவளையுமே கட்டுற எண்ணம் இல்லை… வாழ்க்கை முழுக்க ஆடு மாடை கட்டிக்கிட்டே நான் காலம் தள்ளிடுவேன், நீ சித்த விலகு” என்றவன் தரையில் இருந்து எழுந்துக்கொண்டான்.

கூடவே எழுந்தவளோ அவனை மறைத்தபடி நின்று, “ஏன்? ஏன் நீ கல்யாணம் கட்ட மாட்ட?” என்றாள் வேகமாய்.

“ப்ச்… நானே ஒரு யோசனைல இங்க வந்து இருந்தேன்! என்னை நோண்டனே வருவியா நீ!?” என்று அவன் சலிக்க, சட்டென, “என்ன யோசனை அப்படி? தனியா வர அளவுக்கு?” என்று இந்த பேச்சிற்கு தாவினாள் மதி.

“ஸ்ஸ்…ஷப்பா… உனக்கு ஏதாவது கேட்டுட்டே இருக்கனும்ல என்கிட்ட?” என்றவன், அவளைத்தாண்டிக்கொண்டு நடந்தான். வேகமாய் ஓடி அவனை மறித்தவளோ, “சரி அதை விடு! நீ ஏன் கல்யாணம் பண்ண மாட்ட? அந்த கதையை சொல்லு எனக்கு!” என்றாள் தீவிரமாய்.

“உன்கிட்ட எதுக்கு நான் சொல்லணும்?”

“என்னைத்தவிர உன்னை கேள்வி கேட்குற உரிமை எவளுக்கு இருக்கு?”

“ஏய் உனக்கு முதல்ல யாரு உரிமையை குடுத்தது?” அவன் எகிற, “உரிமை எல்லாம் கேட்டு வாங்க மாட்டாங்க, தன்னால எடுத்துப்பாங்க” என்றாள் சளைக்காமல்.

“உன்கிட்ட மனுஷன் பேச முடியாது கருமம்! தள்ளு” என்றவன் போகப்பார்க்க, “இங்கப்பாரு… இத்தனை வருஷமும் நீ என்னை துரத்துறப்போ சும்மா மனசுல ஆசையை வச்சுக்கிட்டு வெளில விரைப்பா சீன காட்டுறன்னு நினைச்சேன்! எனக்கும் தொழிலு அது இதுன்னு ஓடிடுச்சு, கல்யாணம் ஆசையும் வரல! ஆனா, இப்போ அப்டியா? எனக்கே இருபத்தி ஆறு முடிஞ்சுது. இதுக்குமேலையும் கல்யாணம் பண்ணலன்னா, நம்ம இரண்டாவது புள்ளை பொறக்குறப்போ எனக்கு வெள்ளை முடி வர ஆரம்பிச்சுடும்!” என்றாள் வெகு தீவிரமாய்.

“வாங்காத எருமைமாட்டுக்கு வைக்கப்போரு போடுறதா, கடலைப்போரு போடுறதான்னு சண்டைப்போட்டானுங்களாம்… அந்த கதையா இருக்கு” என்றவன், அவள் மறிக்க இடம் கொடுக்காமல் வேகமாய் நடக்க ஆரம்பித்தான்.

“ப்ச், அவனுங்க என்னவோ போட்டுத்தொலையட்டும்! இப்போ எனக்கொரு பதிலை சொல்லிட்டு போ” என்றவள் அவன் பின்னே நடந்தாள்.

அவன் பதிலே சொல்லாது முன்னேப்போக, “நம்ம கொஞ்சம் வெளிப்படையா பேசிக்கலாமா?” என்றாள்.

அவனிடம் அதற்கும் பதில் இல்லை. நடை மட்டும் நிற்காமல் தொடர்ந்தது. இவளும் மூச்சு வாங்க பின்தொடர்ந்தாள்.

“உனக்கு எதாவது பிரச்சனையா?” என்றவள், “உடம்புல?” என்று நிறுத்த, அவன் திகைத்தாலும் நடையை விடவில்லை.

“ஆட்டை வெட்டுறேன்னு வேற எங்கயும்…” அவள் சந்தேகமாய் இழுக்க, நடையை நிறுத்தாமலே, “ஏய்…ஈஈ” என்று முகத்தை மட்டும் திருப்பி நாவை மடித்து சினந்தான் அண்ணாமலை.

உடனே, “ஓகே ஓகே” என்று தணிந்தவள், “ஒருவேளை பொண்ணுங்களை விட பசங்களை தான் பிடிக்குமோ?” என்று கேட்டுவிட, பல்லை கடித்துக்கொண்டு கோபத்தை அடக்கியவன், “ரொம்ப கடுப்பேத்துற… இதோட மூடிக்கோ” என்றான்.

அவன் கோபத்தில் சில நொடிகள் மட்டுமே அவள் வாய் மூடியது. நடந்துக்கொண்டே மதி வண்டி நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்திருந்தனர்.

“ஒருவேளை முட்டி செத்துப்போச்சா? முப்பது செகண்டுக்கு மேல முடியாதோ?” என இழுக்க, “என்ன? முப்பது செக்… ச்சை!” என்றவன் கால்கள் அங்கேயே தேங்கி நின்றுப்போயின. சட்டென அவன் நிற்கவும் வேகமாய் அவன் அடி பற்றி வந்தவள், அவன் முதுகில் மோதிக்கொண்டு, மூக்கை தேய்த்தபடி நின்றாள்.

அவன் கண்களில் அப்பட்டமான அதிர்வு!

அவள் அவன் முதுகில் இடித்ததில் வலித்த மூக்கை முகத்தை சுருக்கிக்கொண்டு தேய்த்துக்கொண்டே நிற்க, “என்ன பேச்சு டி பேசுற நீ?” என்றான் அதிர்வு நீங்காது.

“பின்ன? காரணமே இல்லாம கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னா என்னன்னு நினைக்க?” இப்போதும் அவள் வாய் அடங்கவில்லை.

“அதுக்குன்னு? இப்படி அசிங்க அசிங்கமா நினைப்பியா? பொம்பளை மாறியா பேசுற?” என்று கேட்டதற்கும், “உன்கிட்ட தானே பேசுறேன்” என்று அசராமல் திருப்பிக்கொடுத்தவளை ‘என்னடா செய்வது?’ என்பது போல பார்த்துக்கொண்டு நின்றான்.

அவளோ மெதுவாய் நகர்ந்து தன் ஸ்கூட்டியை இயக்கி ரிவர்ஸ் எடுத்துக்கொண்டே, “இங்கப்பாரு! நீ எனக்கு தான்! நான் உனக்கு தான்… நம்ம கல்யாணம் சீக்கிரமே நடக்க தான் போகுது” அவள் சொல்கையில், அவன் ஏதோ மறுத்து சொல்ல வர, வேகமாய் கை நீட்டி தடுத்தவள்,

“இரு இரு… முடியாது நடக்காதுன்னு தானே மூச்சுப்பிடிக்க பேசப்போற? அதெல்லாம் கேட்டு கேட்டு என் காதே புளிச்சு போச்சு” என்று அசட்டையாய் சொன்னவள், “உன்னை நான் கல்யாணம் செஞ்சு காட்டுறேன் பாருன்னு சவால் எல்லாம் விட மாட்டேன். எனக்கு தெரியும்… நம்ம கல்யாணம் நடக்கும்! இதே ஊருல குஜாலா வாழுவோம்! நீயே பாரு” என்றுவிட்டு,

“வரியா? லிப்ட் தரேன்!” என்றாள் கண்ணடித்து.

அவன் முறைத்துக்கொண்டே நிற்க, “எனக்கு ஒரு டவுட் கேட்கவா?” என்றாள். அவன் அப்போதும் முறைத்துக்கொண்டே நிற்க, “இந்த மூஞ்சி மூடு வரும்போது கூட இப்படி தான் முறைச்சுக்கிட்டே நிக்குமா?” என்று கேட்டதும், அவன் இன்னும் பயங்கரமாய் முறைக்க,

“’அதெ’ல்லாம் வருமா?” என்றாள் நக்கலை அடக்கிய சந்தேகக்குரலில். அவன் வேகமாய் கீழே குனிந்து சற்று பெரிய கல்லாய் ஒன்றை தூக்க, அதைக்கண்டவளோ, ‘சாமி, இவன் போட்டாலும் போட்டுடுவான்’ என்று எண்ணி, “வரேன் டா மலை” என்ற கத்தலோடு அங்கிருந்து சிட்டாய் பறந்தாள்.

அவள் சென்ற பின்னுமே சில நிமிடங்கள் அங்கேயே நின்ற அண்ணாமலையின் முகத்தில் முன்பிருந்த கடுகடுப்பு துளியளவு கூட இல்லை. லேசாக புன்னகை கூட எட்டிப்பார்த்ததோ?  யார் கண்டது!?