26

பில்டர் காபி போடுவதற்காக சர்க்கரை சேர்த்த டிகாஷனை பக்குவமாய் தயாரித்து தட்டு நிறைந்த செம்பு தம்ளர்களில் சுடும் பாலை அதிக கவனத்துடன் ஊற்றிக்கொண்டிருந்தாள் தேன்மொழி.  கடைசி டம்ளரை நிறைத்துவிட்டு நிமிர்ந்தபோது இரண்டு முரட்டு கரங்கள் அவள் இடையை இறுக்கிப்பிடிக்க, ‘ஹக்’ என்ற சத்தத்தோடு அரையடி எம்பி நின்றாள்.

அணைத்தவனோ அவள் புரடியில் முகத்தை புரட்டிக்கொண்டிருக்க, “வேர்வையா இருக்கு, விடுங்க” என்றபடி அவன் கரங்களுக்குள் நெளிய ஆரம்பித்தாள்.

“எனக்கு பிடிக்கும்ன்னு தெரியாதா!?” காதருகே அவன் குரல் கரகரக்க, அவள் தேகத்தின் பூனை முடிகள் கூட கூச்சொரிந்தது.

அவள் நெளியும் வேகம் குறைந்து குழைய ஆரம்பித்தது அவன் கரங்களுக்குள். அவன் அதற்கு மேல் ஒன்றுமே செய்யவில்லை. இறுக்கிப்பிடித்த பிடிக்குள் நின்றவளின் புரடியில் நத்தை போல் மெல்ல புரண்டிக்கொண்டிருந்தான் அவ்வளவே!  நேரமுற்கள் தான் வேகமாய் நகர, மூடிய கண்களுடன், “காபி ஆறுதுங்க” என்றாள் தேன்மொழி.

“நான் சூடா இருக்கேனே!” மெலிதாய் ஆடிக்கொண்டிருந்த ஜிமிக்கியின் குடையை அவன் பற்கள் பற்றிக்கொண்டது.

“போதும் விடுங்க!” அவள் பொய்யாய் விலக, “ஒண்ணுமே பண்ணலடி இன்னும்!” என்றபடி இல்லாத இடைவெளியை இல்லாததாய் ஆக்கினான் அவன்.

ஜிமிக்கியை விடுத்த அவன் உதடுகள் அடுத்து அவள் கழுத்தில் மின்னிய பொன்தாலியை கவ்விக்கொள்ள குறிவைக்க, “டேய்… பரதாஆஆஆ” என்று அலறல் சத்தம் அருகே கேட்டதில், சட்டென அவளை விட்டு ஓரடி தள்ளி வேறுபக்கம் திரும்பி நின்றுக்கொண்டான் பரதன்.

வேகமாய் அடுக்களைக்குள் வந்த ஐயப்பன், “ஏண்டா, காப்பியை வாங்கிட்டு வரேன்னு வந்தவன் இங்கேயே தங்கிட்டியா என்ன?” முதுகு காட்டி நின்றவனை திட்டிவிட்டு, “காப்பி போட்டியா தேனு?” என்று கேட்க, தினறிக்கொண்டு நின்றவள் பதில் சொல்லும் முன், “இதோ இருக்கே” என்று தட்டை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

‘உப்ப்’ என்று திரும்பிய பரதன் தேன்மொழியை நெருங்க, தட்டோடு திரும்பி வந்த ஐயப்பன், “டேய், அதான் காப்பியை எடுத்துட்டேன்ல, இன்னும் என்ன நிண்டிட்டு இருக்கவன், வாடா!” என்று அழைக்க, இஷ்டமில்லாமல் தேனுவை ரகசிய பார்வை பார்த்துக்கொண்டே நகர்ந்தான் பரதன்.

“நீயும் சீக்கிரம் வா தேனு!” என்ற ஐயப்பன் பரதனை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தான். தேன்மொழி முகத்தில் சில நாட்களாகவே நீங்காமல் இருக்கும் நாணம் இப்போதும் கன்னம் நிறைத்தது.

வெளியே வந்த ஐயப்பன் தட்டோடு முன்னே வேகமாய் நடந்தான். முன்பிருந்த அண்ணாமலையின் அதே வீடு தான். ஆனால், இப்போது வேறுவிதமாய். சரிபாதி இடத்தை அளவாய் பிரித்து கீழே மூன்று மேலே மூன்று என்றபடி ஆறு வீடுகள் கட்டி,  மிச்ச இடத்தில் கால்நடைகளுக்கு சுகாதாரமான கொட்டகை, சேமிப்பு கிடங்கு, அதோடு, முன்பக்கம் பத்துக்கு பதினைந்து என்ற அளவில் ஒரு கடை வைத்து இரவு நேர சிக்கன் கடையை நடத்திக்கொண்டிருந்தனர். இது அத்தனையும் முழுக்கமுழுக்க நிம்மதியின் யோசனை மட்டுமே!

அந்த கடையும் கூட வெண்ணிற டைல்ஸ் ஒட்டி நின்று சாப்பிட ஏதுவாய் சில்வரில் மூன்று நீண்ட வட்ட மேசைகள் எல்லாம் போட்டு அம்சமாய் இருந்தது.  அங்கிருந்த ஆட்களுக்கு தான் சுட சுட காப்பியை கொண்டு வந்து கொடுத்தான் ஐயப்பன்.

ஐந்தாறு ஆண்கள் இருக்க, அவர்கள் நடுவே திவ்யா அமர்ந்திருந்தாள்.

ஐயப்பன் கொடுத்த காபியை பருகிக்கொண்டே நிழலில் அமர்ந்திருந்தவர்கள், “கடை வியாபராம் எப்டி போகுது, ஊருக்குள்ள இருக்கே…அதான்!” என்று சந்தேகமாய் கேட்க, சிரித்தபடி, “ராத்திரி கொஞ்சம் நேரம் நின்னு பார்த்துட்டு போங்க!” என்றான் பரதன்.

தேன்மொழி வீட்டில் இருந்து வெளியே வர, எட்டிப்பார்த்த ஐயப்பன், “தேனு, மாமாவையும் வர சொல்லு!” என்றான். தலையசைத்தவள், முதல் வீட்டின் கதவை திறந்தபடி, “அப்பா?” என்று அழைத்துக்கொண்டு உள்ளே போக, ஹால் முழுக்க, தோலுரித்த வெங்காயம், வாழை இலைகள், பெரிய பாத்திரங்களில் மசாலா தடவிய சிக்கன் கறி என்று நிறைத்திருந்தது. அந்த வீட்டின் கிச்சனில் தான் சமையல் வேலை நடக்கும். மேல் வேலைகள் எல்லாம் ஹாலில்.  ஒரு பெரிய ரூம் மட்டும் தாஸுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அதுவே அவருக்கு அதிகமாய் தான் இருந்தது.

பர்னர் அடுப்பை சுத்தமாய் துடைத்துக்கொண்டு கிச்சனில் அமர்ந்திருந்த தாஸிடம், “அப்பா, போதும் வாங்க, கூப்புடுறாங்க” என்று சொல்ல, “இதோ அவ்ளோதான் முடிஞ்சுடும் இரு!” என்றார்.

“போதும்ப்பா! இதெல்லாம் பண்ணாதீங்கன்னா கேக்குறீங்களா?” என்று சலித்துக்கொண்டவள், உரிமையாய் அவர் கரம் பிடித்து வெளியே அழைத்து வந்தாள்.

பெரிய பெரிய வெண்ணிற குடைகள் இரண்டு இரு பக்கமும் இருக்க, நடுவே ஒரு கேமராவை கழுத்தில் மாட்டிக்கொண்டு ஒருவன் நிற்க, கையில் மைக்குடன் நின்றிருந்தாள் திவ்யா.

“எல்லாரும் இருக்கீங்களா? ஆரம்பிக்கலாமா?” என்று ஒருவன் கேட்டுவிட்டு, கேமரா மேனிற்கு சொல்ல, அவர், “ரோல்லிங்… ஆக்ஷன்!” என்றதும்,

“சுடரொளி மேகசின் யூடியூப் சேனலுக்கு உங்களை வரவேற்கும் நான் உங்கள் திவ்யா!  ஒவ்வொரு வாரமும் “வளர்ந்து வரும் தொழிலதிபர்” ப்ரோக்ராம் மூலமா உங்களுக்கு நம்ம ஊரோட தொழில் முனைவோரை நான் அறிமுகப்படுத்திட்டு இருக்கேன் இல்லையா?! அந்த வகைல இன்னைக்கு நம்ம மீட் பண்ணப்போற தொழிலதிபர்… நோ! நோ! தொழிலதிபர்கள்… இதோ!”  என்று கையை காட்ட… அங்கே சிரித்தமுகமாய் நின்றிருந்த பரதன், தேன்மொழி, தாஸ், ஐயப்பன் கேமராவில் பதிவாகினர்.

“அடுத்த ஷாட்க்கு உட்கார வச்சு பேசு!” கேமரா மேன் சொல்ல, அங்கிருந்த அவர்கள் ஆட்கள் உட்கார வழி செய்தனர்.  கேமராவுக்குள் எல்லாரும் தெளிவாக தெரியும்படி செட் ஆனதும், மீண்டும் தொடங்கியது.

“பிரெண்ட்ஸ் ஜோன்’ இந்த பேரே அவ்ளோ அழகா இருக்கு… எவ்ளோ நாளா நடத்திட்டு இருக்கீங்க?” திவ்யா கேட்க, “முதல்ல தள்ளுவண்டில தான் வச்சோம்! இப்போதான் நிம்மதி ஐடியால இப்படி கடையா மாத்தி செய்றோம்! பேருக்கூட அதுதான் வச்சுச்சு!” என்றான் பரதன்.

திவ்யா கேமராவை பார்த்து, “இவங்க சொல்ற நிம்மதி யாருன்னு உங்களுக்கு நியாபகம் இருக்கா? “நிம்மதி பிஸ்கட்ஸ்” ஓட ஓனர், மிசஸ் நிம்மதி அண்ணாமலைய தான் இவங்க சொல்றாங்க. இவங்க எல்லாருமே ஒரே பேமிலி” என்றவள், அடுத்தடுத்து வரிசையாய் கேள்விகள் கேட்க, சிரிப்பும் விளையாட்டுமாய் அங்கே பதில்கள் வந்தது.

அதோடு அவர்கள் வைத்திருக்கும் கால்நடைகள், அதன் பராமரிப்பு, சமைக்கும் இடம் என்று அத்தனையும் படம் பிடித்தனர்.

ஊரில் அநேகம் பேர் என்னவோ சினிமா படபிடிப்பை பார்ப்பது போல வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அதோடு அங்கிருந்து கிளம்பி அவர்கள் சென்றது, பக்கத்து தெருவில் இருக்கும் “நிம்மதி பிஸ்கட்ஸ்” பேக்டரிக்கு தான்.

மொத்த பில்டிங்கும் வெள்ளை அடித்து பார்க்கவே பளிச்சென இருந்த இடத்திற்குள் அவர்கள் நுழைய, ‘அப்பப்பா… ஊரின் பெண்கள் கூட்டமே அங்கு தான் லிவிங்ஸ்டன்’ போல என்று எண்ணும்படி அத்தனை பெண்கள் கூட்டம். கையில் க்ளவுஸ், தலையில் தொப்பி, ஏப்ரான் சகிதம் சுறுசுறுப்பாய் சுழன்றுக்கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு நடுவே அதே போன்ற கெட்டப்பில் நந்தா வலம் வர, “ஹாய்!” என்றாள் திவ்யா சத்தமாய்.

“வந்துட்டீங்களா? வாங்க வாங்க” என்ற நந்தா, கையில் இருந்ததை ஓரமாய் வைத்துவிட்டு, வாசல் வரை வந்து வரவேற்று சென்றான்.

“நிம்மதி எங்க?” திவ்யா கேட்டதும், “ஆஸ்ரமத்துல தான்! இங்க முடிச்சுட்டு அங்க போவோம்!” என்றான் நந்தா.

புதிதாக நேர்த்தியாக சுகாதாரமாக முன்பை விட பக்குவமாய் நடந்துக்கொண்டிருந்த வேலைகளை அழகாக படம்பிடித்தனர்.

“இங்க நீங்க தான் பாத்துக்குறீங்களா?” ஓரமாய் நின்று பார்த்துக்கொண்டிருந்த நந்தாவை திவ்யா கேட்க, அவள் புறம் திரும்பியவன், “ஆமாங்க… நிம்மதி தான் இப்போ ஆல் டைம் பிசியாசே! அப்பப்ப வரும். உள்வேலை நான் பாத்துக்குறேன். வெளி வேலை சேகர் பாத்துப்பான். இப்போ கூட லோடு இறக்க தான் கூட போயிருக்கான்!” என்றதும், “இப்போ வேலை அதிகம் ல?” என்று கேட்டாள் அவள்.

“இருக்காதா பின்ன? உள்ளூர்ல வித்துட்டு இருந்தோம். இப்ப தஞ்சாவூர் நாவபட்னம், காரைக்கால் வரை சேல்ஸ் ஆவுது. அதுமில்லாம, “சிறுதானிய க்ரீம் பிஸ்கட்”ன்னு ஒன்ன ஆரம்பிச்ச பிறகு, வேலையும் அதிகமாகிடுச்சு, வியாபாரமும் அதிகமாகிடுச்சு!” என்றான் சந்தோஷமாய்.

“க்ரீம் எதுல பண்றீங்க?”

“நிலக்கடலை, முந்திரி, பாதாம் இதை வச்சு தான்!” அவன் சொல்ல, “ஆனா, மத்த க்ரீம் பிஸ்கட் விட ரேட் கம்மியா விக்குறீங்களே? கட்டுபடி ஆகுதா?” என்றாள்.

“போதும்ங்க! போதும்ன்னு நினைச்சா போதும்ன்னு தோணிடும்! அளவுக்கு மீறி சம்பாரிச்சு என்ன செய்யப்போறோம் சொல்லுங்க?” என்றான் சிரித்த முகமாய்.

அவன் சிரிப்பு அவளையும் தொற்றிக்கொண்டது.

க்ரீம் தயாரிக்கும் செய்முறையை அவர்கள் படமாக்க ஆரம்பிக்க, அவர்களுக்கு குடிக்க ஏதேனும் கொண்டு வந்து குடுக்க செய்த நந்தா, திவ்யாவுக்கு ஓரிடத்தில் நாற்காலி கொடுத்து அமர செய்தான்.

“கொஞ்ச நேரம் புடிக்கும். எவ்ளோ நேரம் நிப்பீங்க?” என்று சிரிக்க, “அவசரமா எதுவும் வேலை இல்லன்னா நீங்களும் உக்காருங்களேன்… கொஞ்சம் பேசணும்” என்றவளை யோசனையாய் பார்த்தபடி சற்று தள்ளி அவன் அமர,

“அந்த மேனேஜர் எதுவும் மேற்க்கொண்டு தொல்லை செய்யல தானே!?” என்றாள்.

“அவன் எங்கங்க பண்றது? அவன தான் ஆயுசுக்கும் வெளில வர முடியாதபடி கேஸ் போட்டு உள்ள அனுப்பியாச்சே! இனி ஒன்னும் பிரச்சனை இல்ல… அப்டியே எதுன்னாலும் கௌசல்யா மேடம் பாத்துக்கும்” என்றான் திடமாய்.

“அவங்க கூட எப்படி இவ்ளோ பழக்கம்?” அவள் கேட்க, நந்தாவின் நினைவுகள் கௌசல்யாவை முதன்முதலில் சந்தித்த தினத்திற்கு தான் சென்றது.