“சார் நீங்க இவ்ளோ வைலன்ட்டா பிகேவ் பண்ணா என்னால பேசவே முடியாது” அவர் சொல்ல, பரதனுக்கு நன்கு தெரிந்தது, நிம்மதி ஒருத்தி அன்றி வேறு யாராலும் இவனை நிறுத்த முடியாது என்று. அண்ணாவிடம் பேசுவதை விட, டாக்டரிடம் பேசிவிடலாம் என்று நினைத்து, “டாக்டர், நிம்மதிக்கு என்ன பண்ணனுமோ நீங்க பண்ணுங்க டாக்டர்” என்றான் பரதன்.
“புருஷனோ இல்லன்னா வேற ரத்த சொந்தமோ சைன் பண்ணனும் சார்! இவர பண்ண சொல்லுங்க” என்ற மருத்துவர், செவிலி தயாராய் வைத்திருந்த பேப்பரை நீட்ட, “எதுக்கு? எதுக்கு கையெழுத்து?” என்றான் அண்ணாமலை.
அயர்ந்துப்போன மருத்துவர், “அவங்களுக்கு உடனே ஆப்பரேஷன் செஞ்சாகனும் சார். ஒப்புதல் கையெழுத்து போடுங்க” என்று விளக்க, “கத்தி வைக்க போறீங்களா? ஏற்கனவே கிழிஞ்சி ரத்தம் கொட்டி கடக்குறா! திரும்ப கிழிக்குறேங்குறீங்க?” அண்ணா சத்தம் போட,
“சார், அவங்களை காப்பாத்தனுமா வேணாமா? சீரியஸ்னஸ் புரியாம கத்திக்கிட்டு இருக்கீங்க! டிலே பண்ற ஒவ்வொரு நிமிஷமும் அவங்களுக்கு தான் ரிஸ்க்!” டாக்டர் பொறுமையிழந்து சத்தம் போட,
“டாக்டரம்மா… நான் அவ அப்பன், நான் கையெழுத்து போடவா?” என்று வந்து நின்றார் தாஸ்.
“எஸ் ப்ளீஸ்!” அவர் பேனாவை நீட்ட, “என் மவளை மீட்டி குடுத்துடுங்கம்மா! உங்க குலமே நல்லா இருக்கும்!” என்றவர் நடுங்கும் விரல்களோடு கையெழுத்திட போக, அவரிடம் இருந்து வெடுக்கென பேனாவை பிடுங்கினான் அண்ணாமலை.
எல்லோரும் எரிச்சலும் கேள்வியுமாய் அவனை பார்க்க, முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அங்கே தன் கையெழுத்தை இட்டான்.
“சீக்கிரம் போங்க, அவ கூட நான் பேசணும்!” என்ற அண்ணாவை சற்று கடுப்போடு தான் பார்த்துக்கொண்டு சென்றார் மருத்துவர். முக்கியமாய் சொல்ல வேண்டியதை கூட நிதானமாய் அவனிடம் சொல்லியிருக்க முடியவில்லை அவரால்.
அதன்பிறகு அறுவை சிகிச்சைக்கான வேலைகள் துரிதமாய் நடைபெற அடுத்து வந்த மணித்துளிகள் எல்லாம் படபடப்புடன் கடந்தது.
என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. சிகிச்சை நடக்கிறது என்று மட்டும் தான் தெரியும். நிம்மதி தன் முகம் பார்த்து புன்னகைக்க போகும் அந்த நொடிக்காக ஒரு துளி நீர் கூட தொண்டையில் படாமல் தவம் இருந்தான் அண்ணாமலை.
படங்களில் வருவது போல டாக்டரும் நர்சும் அங்கும் இங்குமாய் போய்வரவில்லை. சாற்றிய கதவு அப்படியே தான் இருந்தது.
ஏதாவது மந்திரம் போட்டு அடுத்த நொடியே அவளை அவன் கண்முன்னே காயமின்றி நிறுத்திவிட முடியுமா என்றெல்லாம் தோன்றியது அவனுக்கு. அதையும் விட, அவளை சரியாய் கவனிக்காமல் விட்டுவிட்டேன் என்ற அவன் குற்றவுணர்வே அவனை கொன்றது.
முழுதாய் இரண்டு மணி நேரங்களை முழுங்கிய பின்னரும் அந்த கதவு திறக்கும் அறிகுறியே தெரியாமல் இருக்க, எழுந்து கதவின் அருகே சென்று நின்றுக்கொண்டான்.
கதவில் இருந்த வட்ட வடிவ கண்ணாடி திரை வழியே எட்டிப்பார்க்க முயன்றான். எதிரே சுவர் தான் தெரிந்தது. உள்ளே நுழைந்து இடப்பக்கம் திரும்பி இன்னும் உள்ளே போக வேண்டும் போல என்று எண்ணிக்கொண்டு அவன் டாக்டரை எதிர்ப்பார்த்து நிற்க, அடுத்த நொடியே கதவை திறந்தார் டாக்டர்.
“மிஸ்டர் அண்ணாமலை, பார்த்துக்கோங்க… இதுதான் நாங்க ரிமூவ் பண்ணிருக்க ஓவரி!” என்று தண்ணீரில் மிதந்துக்கொண்டிருந்த ஏதோ ஒரு சதை பிண்டத்தை அவர் காட்ட, பிடரி மயிர்கால்கள் கூட கூச்சொரிந்தது அவனுக்கு. தன்னையறியாமல் ஓரடி பின்னால் சாய்ந்தான்.
அவன் பார்க்காத ரத்தமா? சதையா? ஆனாலும், இந்த சிறு சதை பிண்டத்தை கண்க்கொண்டு பார்க்க முடியவில்லை அவனுக்கு.
“இதுல தான் காயம் இறங்கி இருந்துச்சு!” என்று சொன்னவர், அவன் பார்க்க முடியாது தவிப்பதை கண்டு, “காட்ட வேண்டியது ப்ரோசீஜர். வேற ஒன்னும் இல்ல…” என்றார்.
“மதி…?” அவன் கேட்க, “மயக்கத்துல இருக்காங்க. கொஞ்ச நேரம் ஆகும்! வெயிட் பண்ணுங்க! ஷி ஸ் பர்பெக்ட்லி ஓகே நவ்!” என்றவர் சென்றுவிட்டார்.
சூரியன் கிழக்கே தோன்றி இருளை விலக்கினார். அண்ணாவுக்கு மட்டும் அது ‘மதி’ இல்லா இருள் போல தான் இருந்தது. இன்னமும் அவசர சிகிச்சை பிரிவை விட்டு வெளியே வரவில்லை அவள். மயக்கம் தெளிந்ததும் தான் வேறு அறைக்கு மாற்ற முடியும் என்றனர்.
நேரில் ஒருமுறை பார்க்க வேண்டும் என்றதற்குக்கூட ‘டாக்டர் ரவுண்ட்ஸ் வருவாங்க இப்போ, அவங்க ஓகே சொன்னதும் தான் சார் அலோ பண்ண முடியும், புரிஞ்சுக்கோங்க’ என்றுவிட்டார் தாதி. சண்டையிடக்கூட தெம்பில்லை அவனுக்கு. அமைதியாய் கண்ணை மூடி அமர்ந்துவிட்டான் அங்கேயே.
காலை மணி ஆறை தாண்டியபோது அங்கே அரக்கபறக்க ஓடி வந்தான் வீரப்பன். தன் நண்பன் ஒருவனின் உதவியோடு அங்கிருந்து வெளியேறி விஷயம் அறிந்து தேடி வந்திருந்தான்.
வந்துவிட்டானே தவிர அண்ணாவை கண்டதும் பேச வரவில்லை. அவன் அருகிலும் யாரும் இருக்கவில்லை. தயங்கி நின்றவனை அண்ணா நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவன் எண்ணமெல்லாம் அவன் ‘மதி’யிடம் தான்.
சில நொடிகள் நின்ற வீரப்பன், பின் குரலை செருமி பேசலாம் என ஆரம்பிக்கும்போது, அறைக்கு உள்ளிருந்து ஒரு தாதி வெளியே வர, “நர்சம்மா, மதியை பாக்கலாமா?” என்றான் வேகமாய்.
ஒரு வேக மூச்சோடு கடுகடுவென அவனை முறைத்த அந்த நர்சோ, “சார், ஆப்பரேஷன் முடிஞ்சே ரெண்டு மணி நேரம் தான் ஆகிருக்கு. இன்னும் மயக்கம் கூட தெளியல, எத்தனை வாட்டி தான் சொல்றது, டாக்டர் வந்து சொன்னதும் தான் பாக்க விடுவோம்ன்னு!” என்று திட்டியவர், “சும்மா பத்து நிமிஷத்துக்கு ஒருக்கா வந்து ஒரே கேள்வியை ஆளாளுக்கு கேட்டுட்டு இருக்கீங்க!” என்று சொல்ல, “ஓ!” என்று ஒரே எழுத்தில் முடித்தவனோ, “சரி, டாக்டர் எப்போ வந்து பாப்பாங்க?” என்று மாற்றி கேட்டிட, அந்த நர்ஸின் முகம் அழுகைக்கே மாற ஆரம்பித்தது.
“என் டியூட்டி முடிஞ்சுது, அடுத்து வர ஆளுட்ட கேட்டுக்கோங்க” என்றவர், விறுவிறுவென ஓடிவிட்டார்.
இந்த பேச்சுக்கள் அண்ணாவுக்கு அருகே தான் நடந்தாலும் தலையை கூட நிமிர்த்தவில்லை அவன். இப்போது அங்கே அவனும் வீரப்பனும் மட்டும் இருக்க, சற்று தயக்கத்தோடு அண்ணாவுக்கு அருகே ஒரு நாற்காலி இடைவெளி விட்டு அமர்ந்தான் வீரப்பன்.
‘க்கும்…’ குரலை செருமினான். அண்ணாவிடம் அசைவில்லை என்றதும், எங்கோ பார்த்தபடி, “ஒன்னும் கவலைப்படாத, மதி தெம்பாகி வந்து நிக்கும்!” என்று சொல்ல, சொன்னவனை மெல்ல திரும்பிப்பார்த்தான் அவன்.
அண்ணா பார்வை தன் மீது பட்டதும், தானும் மெதுவாய் அவனிடம் தயக்கமாய் திரும்பி, “அந்த மேனேஜர் பரதேசியை சும்மா வுடக்கூடாது. என்னை அடிச்சு அடைச்சு போட்டுட்டான். வெளில வந்ததுமே அந்த நாய தான் தேடுனேன். எங்கோ ஒளிஞ்சுகிச்சு போல! போலீஸ்ல புகார் குடுத்தாச்சுன்னு சொன்னாங்க, சாட்சி சொல்ல நான் இருக்கேன். எங்க வந்துன்னாலும் சொல்லுவேன்” என்று சொல்ல, சேர் மீது இருந்து அவன் கரத்தின் மீது தன் கரம் கொண்டு அழுத்தினான் அண்ணா.
ஒரு வார்த்தை பேசவில்லை. ஸ்பரிசத்தில் நட்பழைப்புக்கு துவக்கம் வைத்தான்.
“உனக்காண்டிலாம் இல்ல… மதிக்காக!” ‘கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டல’ கதையாக வீரப்பன் சொல்ல, சிரிப்பு தான் வந்தது அண்ணாவுக்கு. அதன்பிறகு இருவரும் மருத்துவர் வரும் நேரத்துக்காக காத்திருந்தனர்.
போலிஸ் ஸ்டேஷன் வரை சென்றிருந்த பரதனும் நந்தாவும் வந்திருக்க, ‘இங்கிருந்து நகரவே மாட்டேன்’ என அழுது கரைந்த தாஸை சமன்படுத்தி ஆஸ்ரமத்தில் விட்டுவிட்டு ஐயப்பனும் வந்திருக்க, காலை வேளை உணவை தூக்கில் கட்டிக்கொண்டு சேகருடன் தேன்மொழியும் வந்திருக்க, ‘ரவுண்ட்ஸ்’ வருவார் என்று சொன்ன டாக்டர் மட்டும் இன்னும் வந்தபாடில்லை.
மணி எட்டரையை தொட்டிருந்தது.
அந்த நர்ஸும் எவ்வளவோ சொல்லிபார்த்தார், ‘ஒன்பது மணி போல கண்டிப்பாக வந்துவிடுவார்’ என்று! மற்றவர்களுக்கு தான் நேரம் ஓடியது. இவர்களுக்கு நேரம் ஊர்ந்துக்கூட சென்றபாடில்லை. ஆப்பரேஷன் முடிந்து ஐந்து மணி போல தான் வீட்டுக்கு சென்றிருந்தார் மருத்துவர். திரும்பி வர கூட குறைய அரைமணி நேரம் எடுக்கும் என்று எடுத்து சொன்னாலும் கேட்கவில்லை.
மற்றவர்களை தேன்மொழி வற்புறுத்தி உண்ணவைத்திருக்க, அண்ணா மட்டும் அசையவில்லை. பரதனின் தொடர் தொல்லையில் ஒரு டீ உள்ளே சென்றிருந்தது. ஆனால், அது உள்ளே போன தெம்பிற்க்கே தெளிந்தவன், குதிக்க ஆரம்பித்துவிட்டான்.
“வீடு இங்கன தானே இருக்கு, இருங்க நானே போய் கூப்புடுறேன். மதியை பாக்கலாம்ன்னு சொல்லிட்டு திரும்ப போய் தூங்கிக்கட்டும்” வேட்டியை மதிக்கட்டிக்கொண்டு அவன் கிளம்ப, தலையில் அடித்துக்கொண்ட நர்சோ, திட்டினாலும் பரவாயில்லை என்று டாக்டருக்கே அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டாள்.
அடுத்த பத்து நிமிடத்தில் அங்கே வந்த டாக்டர் முகம், அத்தனை கடுப்பை காட்டியது.
அதிலும் ஐ.சி.யு வெளியே நிற்கும் ஐந்தாறு வேட்டிகளை பார்க்கையில், ‘இதென்ன சந்தக்கடையா?’ என்று திட்ட தான் வந்தது. ஆனாலும், ஒன்றும் சொல்லாமல், அவர்கள் பேசும்முன்னே விடுவிடுவென அறைக்கு உள்ளே சென்றிருந்தார்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் நர்ஸ் ஒருவர் வந்து ‘யாரேனும் ஒருவர் உள்ளே சென்று பார்க்கலாம்’ என்று சொல்லியிருக்க, அத்தனை வேட்டியும் உள்ளே ஓடியது.